இலை - சினிமா விமர்சனம்

22-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை லீஃப்  புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் பினிஷ் ராஜ் இயக்கியுள்ளார்.
இதில் ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங் மோகன். மலையாள நடிகை ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம்.  காவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல்,  இசை – விஷ்ணு வி.திவாகரன்,  வசனம் – ஆர்.வேலுமணி, கலை – ஜைபின்  ஜெஸ்மஸ், படத் தொகுப்பு – டிஜோ ஜோசப்,  நிர்வாகத் தயாரிப்பு – ஷோபன் குமார், தயாரிப்பு மேற்பார்வை – உன்னி கிருஷ்ணன். தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ்  இண்டர் நேஷனல். 

நம் நாட்டில் எல்லாப் போட்டிகளிலும் ஆண்கள் சாதாரண ஓட்டமே  ஓடுகிறார்கள். ஆனால் பெண்கள் பல தடைகளைத் தாண்டித்தான் ஒட வேண்டியிருக்கிறது. ஒரு துறை என்றில்லை… பல துறைகளிலும் பெண்கள் பல்வேறு  தடைகளை, இடையூறுகளை, இடர்ப்பாடுகளைத் தாண்டித்தான் மேலே வர வேண்டியிருக்கிறது.
அதேசமயம் சமீப காலங்களில்  பள்ளித் தேர்வுகளில் பெண்களே எப்போதும் அதிக மதிப்பெண்களை பெறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அதைச் சாதிக்க அவர்கள் படும்பாடு, சந்திக்கும் வலிகள் யாருக்கும் தெரிவதில்லை.
அப்படி ஒரு பெண் கல்வியில் சாதிக்கத் துடித்து அதற்காக தனக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தாண்டி, எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து ஜெயிக்கிறாள் என்பதைச் சொல்லும் படம்தான்  இந்த ‘இலை’ திரைப்படம்.
தமிழக – கேரள எல்லையில் இருக்கும் திருநெல்லி என்னும் கிராமம்தான் படத்தின் கதைக் களம். ஊர் முழுவதும் விவசாயம்தான். பெண்கள் அதிகமாக படித்ததில்லை. படிக்க வைக்கப்பட்டதுமில்லை.
ஹீரோயினான ‘இலை’ என்னும் ஸ்வாதி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது அப்பாவான ‘கிங்’ மோகன், தனது மகள் ‘இலை’ படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ‘இலை’யின் அம்மா இதை எதிர்க்கிறார். சீக்கிரமாக ‘இலை’யை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
‘இலை’க்கு பின்பு எட்டு வயதில் ஒரு பையனும், கைக்குழந்தையும் இருப்பதால் வீட்டு வேலைகளைக் கவனிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார் ‘இலை’யின் தாய். இந்தச் சூழலில் அக்கம் பக்கத்தினர், சொந்த அம்மா, மாமா என்று பலரது எதிர்ப்புகளையும் மீறி படித்து வருகிறார் ‘இலை’.
இந்த நிலையில் ஊர்ப் பண்ணையாரின் மகளும், ‘இலை’யும் ஒரே வகுப்பில்தான் படித்து வருகிறார்கள். பண்ணையாரின் மகளுக்கு படிப்பு ஏறவில்லை. இதனால் ‘இலை’ மீது வன்முத்துடன் இருக்கிறாள் பண்ணையாரின் மகள். தனது மகளின் கோபத்தை அறிந்த பண்ணையார், ‘இலை’யை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிடாமல் தடுக்க ஒரு திட்டம் தீட்டுகிறார்.
இதன்படி ஒரு விடியற்காலை பொழுதில் வயல்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் ‘இலை’யின் அப்பாவை மனநோயாளியான தனது தம்பியை வைத்து கடுமையாகத் தாக்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார் பண்ணையார். இதனால் கடைசி பரீட்சையான சமூக அறிவியல் தேர்வுக்கு எழுத செல்ல முடியாத நிலைமை ‘இலை’க்கு ஏற்படுகிறது.
ஒரு பக்கம் பால் கறந்து கடைக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். கைக்குழந்தையை கவனிக்க வேண்டும். தம்பிக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்க வேண்டும்.. கோழிகளுக்கு தீவனம் கொடுக்க வேண்டும். அவைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.. இப்படி ஒரு கிராமத்து வீட்டில் என்னென்ன வேலைகள் இருக்குமோ அது அத்தனையையும் இப்போது ‘இலை’ செய்தாக வேண்டிய கட்டாயம்..!
படிப்பா..? வீடா..? என்கிற பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறாள் ‘இலை’. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படம்.
‘இலை’யாக நடித்திருக்கும் ஸ்வாதிதான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். நிஜத்தில் கல்லூரி படிப்பை முடித்து ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறார். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவிக்கான கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரளத்தின் அழகு முகத்திலும், நடிப்பு அனைத்து அவயங்களிலும் தென்படுகிறது.
கடைசி பரீட்சை நாளன்று அவர் படும்பாடுதான் மொத்தப் படமே..! அந்த நாளில் அடுத்தடுத்து வரும் சோதனைகளைத் தாண்டிக் கொண்டு அவர் ஓடும் ஓட்டமும், நடிப்பும் ‘பாவம்டா சாமி’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
‘இப்படியொரு பொண்ணுக்கு ஏண்டா இப்படியொரு சோதனை’ என்று கடவுளை நிந்திக்க வைத்திருக்கிறது இடைவேளைக்கு பின்னான காட்சிகள் அனைத்தும்..! அப்படியொரு நடிப்பை காட்டியிருக்கிறார் ஸ்வாதி. குச்சுப்புடி டான்ஸரும்கூட என்பதால் நடிப்பு சொல்லித் தர தேவையில்லை. 
வெற்று காலுடன் வயக்காடு, மேடு, பள்ளம், காடு, பாறை என்று அனைத்து இடங்களையும் ரவுண்ட்டித்தது போல அவர் ஓடும் ஓட்டமும், படும்பாடும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்திருக்கிறது.
இவருக்கு பின்பு ஸ்கோர் செய்திருப்பவர் இவருடைய அம்மாவாக நடித்திருப்பவர்தான். வீட்டில் தனக்கிருக்கும் வேலைகளுக்காகவே மகளின் படிப்பை பாதியில் நிறுத்த எண்ணும் அவரது நோக்கத்தை இன்னொரு பக்கம் பார்த்தால் சரியென்றுதான் சொல்லத் தோன்றும். பெரிய மகள் பத்தாம் வகுப்பு படிக்க.. கைக்குழந்தையுடன் அவர் படும் அவஸ்தைக்கு ஸ்வாதியின் அப்பாவும் ஒரு காரணம்தானே..? இந்த வகையில் பார்த்தால் படம் இரு தரப்பு வாதங்களையுமே எடுத்துரைக்கிறது.
ஸ்வாதி அன்றைய நாளின் பரபரப்பு அலைச்சல்களுக்கிடையே “ஐயோ.. இத்தனை வேலையா..? இத்தனை நாளா அம்மா எப்படி ஒத்தை ஆளா இதைச் செஞ்சாங்க…?” என்று அவரே தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் அந்த ஒரு வசனமும் படத்தில் மிக, மிக முக்கியமானது.
ஸ்வாதியின் தம்பியாக நடித்த பையன், அப்பாவாக நடித்தவர்.. தாய் மாமனாக நடித்த சுஜீத், பழங்காலத்து பண்ணையாரை ஞாபகப்படுத்திய நடிகர்.. இவர்களுடன் நடிப்பில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த மலையாள நடிகையான கனகதாராவும் தனது சிறப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் இருக்கும் நாயகியான ‘இலை’ என்னும் ஸ்வாதிக்கு அந்த வயதுக்கேற்ற அறிவும், பக்குவம் மட்டுமே இருப்பதால், அவர் செய்ததெல்லாம் சரியே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!
ஸ்வாதியின் வீட்டில் நடக்கும் அந்த அமங்கலம் எதிர்பாராதது.. நாம் ஒன்றை எதிர்பார்க்க அங்கே வேறொன்றை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். ஆனால் நாட்டு குண்டு சின்னப் பெண்ணின் கையில் கிடைப்பதும்.. பட்டப் பகலில் சிம்னி விளக்கு எரிவது என்பதெல்லாம் நம்மை ஏமாற்றும் திரைக்கதை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மலையும், மலை சார்ந்த பகுதியும்தான் கதைக் களன் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு வேலை மிக எளிதாகிவிட்டது. ஷாட் பை ஷாட் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளையே படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகள் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு பாராட்டுக்கள்..!
பாடல்கள் கேட்கும் ரகம். அதே சமயம் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகப்படியானதைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர்.  ஒலியைக் குறைத்திருக்கலாம்.
இடைவேளைக்கு பின்பு கைக்குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஸ்வாதி ஊருக்குள் ஓடி, ஓடி வரும் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். இந்தக் காட்சிகளில் நிறையவே எடிட் செய்து அதற்குப் பதிலாக கூடுதல் காட்சிகளை கிரியேட் செய்து வைத்திருந்தால் படத்தின் கதைக்கு இன்னமும் கூடுதல் வலு சேர்த்திருக்கும். அந்தக் காட்சிகள் ஓரளவுக்கு மேல் திகட்டிவிட்டன..!
கணவரையும் இழந்துவிட்ட நிலையில் தனது மகளையாவது படிக்க வைத்து கணவரின் விருப்பதை நிறைவேற்ற அந்தத் தாய் எடுக்கும் முடிவுதான் படத்தின் ஹைலைட்.  இதுதான் படம் சொல்லும் நீதி..!
எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய… இன்றைய இந்தியச் சமூகத்திற்கு அத்தியாவசியமான கதையாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால், சினிமா ரசிகர்கள், விரும்பிகள் அனைவரும் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்..!

கடம்பன் - சினிமா விமர்சனம்

18-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இது இவரது 89-வது தயாரிப்பாகும். நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது.
படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும் கேத்தரின் தெரஸா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி, எத்திராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார், இசை – யுவன்சங்கர் ராஜா, படத் தொகுப்பு – தேவ், கலை – A.R.மோகன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – யுகபாரதி, நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி, இணைத் தயாரிப்பு – B.சுரேஷ், B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா, தயாரிப்பு  – ஆர்.பி.சௌத்ரி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ராகவா.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கடம்பவனம் என்னும் மலைக் கிராம்ம்தான் படத்தின் கதைக் களம். அங்கே வாழும் மண்ணின் மைந்தனான ஆர்யா எதற்கும் பயப்படாத ஆனால் மண் மணம் மாறாத, பாசம் கொண்ட மனிதன்.
அதே ஊரில் வசிக்கும் ராஜசிம்மனின் தங்கையான கேத்தரின், ஆர்யாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். முதலில் இதனை ஏற்காக ஆர்யா பின்பு தனக்கும் ஒரு துணை வேண்டுமே என்பதற்காக கேத்தரினின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் பிரபலமான கார்ப்பரேட் நிறுவனமான ஒரு சிமெண்ட் நிறுவனம், தனது சிமெண்ட் தயாரிப்புக்கான தாதுப் பொருள்கள் இயற்கையாக எங்கே கிடைக்கிறது என்பதை தேடுகிறது. அவர்களது பார்வையில் இந்தக் கடம்ப வனம் கிராமம் சிக்குகிறது.
அங்கேயுள்ள மக்கள் மொத்த பேரையும் மலையில் இருந்து கீழே இறக்கிவிட்டால் அந்த இடத்தில் இருக்கும் இயற்கை வளங்களை அள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார் சிமெண்ட் நிறுவனத்தின் அதிபரான ராணா.
அந்தப் பகுதி வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்.. அரசு அதிகாரிகள் என்று அனைவருமே அந்த கார்ப்பரேட் நிறுவனம் அள்ளி வீசும் காசுக்காக அடிபணிந்து போக.. மலைவாழ் மக்கள் கிராமத்தைவிட்டு வெளியேற மறுக்கிறார்கள். அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். பலிக்கவில்லை. வேறு வழியில்லாமல் சூழ்ச்சியால் மக்களை வெல்ல நினைக்கிறார் தீப்ராஜ் ராணா.
ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி இருவரையும் சமூக சேவகர்கள் என்ற போர்வையில் கடம்பவனத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் வந்து கிராம மக்களை மூளை சலவை செய்கிறார்கள். மலையடிவார ஊருக்கு மக்களை அழைத்து வந்து அங்கேயிருக்கும் சொகுசு வாழ்க்கையை அவர்களுக்குக் காட்டி “இதேபோன்ற வாழ்க்கையை நீங்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது…” என்று தூபம் போடுகிறார்கள்.
ஆனால் கடைசி நேரத்தில் முழித்துக் கொள்ளும் ஆர்யா, இது பற்றி தனது மக்களுக்கு எடுத்துரைக்க.. ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தியின் சூழ்ச்சி தோல்வியடைகிறது. இதையடுத்து காவல்துறையை வைத்து அடக்குமுறையை ஏவுகிறார்கள். இதனால் அந்தக் கிராமத்து மக்கள் பெரிதும் பாதிப்படைய.. சிலர் இறந்தும் போகிறார்கள்.
அந்த ஒரே இரவில் அந்த ஊர் மக்கள் துரத்தப்பட்டு.. அவர்களது இருப்பிடங்கள் இடிக்கப்பட்டு, குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டு.. ஊரே துடைத்து எடுக்கப்படுகிறது. மறுநாளே கனிம வளங்களை தோண்டியெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது.
தாக்குதலினால் மக்களை பிரிந்து அல்லாடும் ஆர்யா.. சில நாட்களுக்கு பிறகு தனது குடும்பத்தையும், மக்களையும் சந்திக்கிறார். திரும்பவும் தனது ஊரான கடம்பவனத்தை எப்பாடுபட்டாவது தான் கைப்பற்றுவேன் என்கிறார். இதனை எப்படி அவர் சாதிக்கிறார் என்பதுதான் படத்தின் பிற்பாதியின் திரைக்கதை.
இதற்கு முன்பு திரைக்கு வந்த காடு சார்ந்த படங்களின் பாதிப்பு, இந்தப் படத்திலும் இருப்பதால் கதை எந்தவிதத்திலும் பார்வையாளனை கவரவில்லை என்பது இந்தப் படத்திற்கு நேர்ந்த சோகம்.
ஆர்யா மிகக் கடினமாக உழைத்திருக்கிறார். தனது முறுக்கேறிய உடல் வாகுக்காக அவர் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. படத்திலும் அதனை காட்டியிருக்கிறார். தேனெடுக்க அத்தனை உச்சியில் இருந்து கீழே குதித்து, அபாயகரமான ஷாட்டுகளிலும் நடித்திருக்கிறார்.
சண்டை காட்சிகள் அனைத்துமே ரியலிஸமாக இருப்பதை போலவே படமாக்கியிருப்பதால் ஆர்யாவின் பங்களிப்பு இதில் அதிகம்தான். இத்தனை செய்தும் எல்லாம் விழலுக்கு இழைத்த நீராகிவிட்டதுதான் கொடுமையான விஷயம்.
கேத்தரின் தெரசா இந்தப் படத்தில் தான் எப்படி நடிக்க ஒப்புக் கொண்டோம் என்பதே தெரியாமல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து யோசித்துக் கொண்டிருந்ததாக ஆர்யா பேசியிருந்தார். ஆனால் கேத்தரினுக்கு இதுவொரு நல்ல அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.
படம் முழுக்க செருப்புகூட அணியாமல் அந்தக் காட்டுப் பகுதியில் ஓடியாடி நடித்திருக்கிறார். இவருடைய முதல் அறிமுக ஷாட்டே அழகு. ஒளிப்பதிவாளரின் திறமையினால் கேத்தரினை எத்தனை அழகாக காட்ட முடியுமோ அப்படி காட்டியிருக்கிறார்கள். ஆனால் நேட்டிவிட்டி என்ற ஒரு விஷயம் இருப்பதை மறந்துவிட்டதால், அந்தக் காட்டுவாசி பெண்ணாக அவரை நினைக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை.
சாதாரணமான தரையில் இருக்கும் மனிதர்கள் பற்றிய படங்களில் இருக்கும் அதே கேரக்டர் ஸ்கெட்ச்சை மூட நாகரிகம் இன்னமும் தொடாத இந்த மக்களிடத்திலும் இருக்கிறது என்பது காட்டியிருப்பதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. ஆர்யாவை காதலிப்பதாகச் சொல்லி விரட்டும் கேத்தரினின் திரைக்கதை இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
முருகதாஸ், ஜானகி குடும்பக் கதை ஏற்கெனவே ‘புலி முருகன்’ என்ற மலையாளப் படத்தில் வந்த கதை. அதில் லால் அனாசயம் செய்திருப்பார். இதிலும் அந்தக் கதையை அப்படியே வைத்திருக்கிறார்கள். சிந்தனை திறன் கோ இன்சிடென்ட்ஸ் போலிருக்கிறது.
மற்றபடி மூப்பனாக நடித்த சூப்பர் சுப்பராயன், கேத்தரினின் அண்ணனாக நடித்த ராஜசிம்மன், அம்மாவாக நடித்த எலிசபெத், ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி அருண் என்று பலரும் தங்களது கேரக்டர்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். ராஜசிம்மனின் கடைசி கட்ட பல்டி எதிர்பாராதது.
இத்தனை மெகா பட்ஜெட் படத்திற்கேற்றபடியான தொழில் நுட்பக் கலைஞர்களும் படத்தில் இணைந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் அழகான ஒளிப்பதிவுதான் ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும் ஆறுதலான விஷயம்.
முதல் காட்சியிலேயே ஆர்யா தேனெடுக்க அந்த மலையுச்சியில் இருந்து கீழே குதிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்த காட்சிகளுமே படத்தின் பிரம்மாண்டத்தை சொல்லாமல் சொல்லிவிட்டன. அழகான கிராமத்து குடியிருப்புகள்.. நீர் வீழ்ச்சியின் பிரம்மாண்டம், கேத்தரினின் அழகு.. பாடல் காட்சிகளை படமாக்கியவிதம்.. இறுதியான சண்டை காட்சிகளை படமாக்கிய கஷ்டம்.. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒளிப்பதிவாளர் சதீஷ்குமாருக்கு மிகப் பெரிய ரோஜா பூ மாலையை காணிக்கையாக்க வேண்டியிருக்கிறது. வாழ்த்துகள் ஸார்..
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஒத்த பார்வையில்’ கேட்கவும், பார்க்கவும் சிறப்பு. ‘உச்சிமலை அழகு’ காடுகளின் அழகையும், கிராம மக்களின் வாழ்க்கையையும் காட்டியது. ‘சாமக் கோடங்கி’ தூங்கி வழிந்து கொண்டிருந்த ரசிகர்களைத் தட்டியெழுப்பி பார்க்க வைத்தது. ‘ஆகாத காலம்’ சோகத்தைப் பிழிந்தெடுத்த்து. ‘இளரத்தம் சூடேற’ அடுத்தது என்ன என்பதற்கான ‘ஹிப்’பை ஏற்றிவிட்டது.. ஆனால் பின்னணி இசையில்தான் காதைக் கிழித்துவிட்டார் யுவன்.
படத் தொகுப்பாளர் கொஞ்சம் கருணை வைத்து கிளைமாக்ஸில் கை வைத்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இத்தனை நீண்ட பரபரப்பான சண்டை காட்சியில் யதார்த்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு இருந்ததால், அதனை குறைவுபடுத்தியிருந்தால் கொஞ்சம் நிறைவாகவே இருந்திருக்கும்..!
இத்தனை நடிகர், நடிகைகளையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கஷ்டப்படுத்தி எடுத்திருக்கும் இந்தப் படம், அதற்கான முழு தகுதியுடைய கதையுடன் வெளிவரவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.
முந்தைய ஷாட்வரையிலும் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்த ஆர்யா, ஒரேயொரு விஷயத்தைக் கேட்டவுடன் பட்டென்று பொங்கியெழுந்து “எங்க ஊரை நாங்களே காப்பாத்திக்கிறோம்…” என்று போர்க்குரல் கொடுப்பதெல்லாம் திரைக்கதையின் ஓட்டையைத்தான் காண்பிக்கிறது.
இந்த மண்ணைவிட்டு அகல மாட்டோம் என்று கிராம மக்கள் சொல்வதையும், இதற்காக வில்லன் அனுப்பி வைக்கும் ஆட்கள் செய்யும் ரவுடித்தனத்தையும் சரியாக படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டிய இயக்குநர் கோட்டைவிட்டிருப்பது வருத்தப்படக் கூடிய விஷயம்.
அந்தக் காட்டுக்குள் வில்லன்கள் கையில் மெஷின் கன்னோடு வந்து நிற்பதை பார்த்த மாத்திரத்திலேயே தியேட்டரில் சிரிப்பலைகள் எழும்புகின்றன, இயக்குநர் எத்தனை வெள்ளந்தியாக இருந்திருக்கிறார் என்று..!? ஹீரோ ஆர்யா எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறாரே.. அவராவது அட்வைஸ் செய்திருக்கக் கூடாதா..? கிளைமாக்ஸே சொதப்பலாகியிருப்பதால் படம் எந்தவொரு பாதிப்பையும் ரசிகனுக்குள் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.
“நிரம்பப் கஷ்டப்பட்டு தாய்லாந்துவரையிலும் சென்று கிளைமாக்ஸில் 100 யானைகளை வைத்து படமாக்கினோம்…” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார்கள். ஆனால் அந்த அளவுக்கான காட்சிகள் படத்தில் இல்லை என்பது அதிர்ச்சியான விஷயம். 100 யானைகள் கொண்ட பிரம்மாண்டத்தை படத்தில் எதிர்பார்த்து காத்திருந்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. இதை சி.ஜி.யிலேயே செய்திருக்கலாமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
படத்திற்கு அதிக செலவு செய்வது முக்கியமல்ல. எந்தக் கதைக்காக செய்கிறோம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இனிமேல் ஆர்யா இதனைக் கவனித்தில் கொண்டு படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்..!
கடம்பன் – பெருத்த ஏமாற்றம்..!

ப.பாண்டி - சினிமா விமர்சனம்

18-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் தனுஷ் தானே தயாரித்து, இயக்குநராகவும், நடிகராகவும் களமிறங்கும் இந்த  ‘ப.பாண்டி’ படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார்.
இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா(அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டியனும், நட்புக்காக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாலாஜி மோகன், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – தனுஷ், ஒளிப்பதிவு – ரா.வேல்ராஜ், இசை – ஷான் ரோல்டான், பாடல்கள் – தனுஷ், செல்வராகவன் மற்றும் ராஜூ முருகன், நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார், படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா, நடனம் – பாபா பாஸ்கர், சண்டைப்பயிற்சி – சில்வா, ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மது. 

சினிமாவில் சண்டை பயிற்சியாளராகப் பணியாற்றி தற்போது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றிருக்கும் ராஜ்கிரண் தனது மகன் பிரசன்னா, மருமகள் சாயாசிங் மற்றும் பேரன், பேத்தியுடன் இருக்கிறார்.
தினப்பொழுதுக்கு ஓய்வில் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கிறார். அந்த ஏரியாவில் மிகப் பிரபலமானவராகவும் இருக்கிறார். ஏதாவது தவறுகள் நடந்தால் உடனேயே தட்டிக் கேட்கும் தைரியம் மிக்கவராகவும் இருக்கிறார்.
ஆனால் இவரது மகன் பிரசன்னா தான் உண்டு தன் வேலையுண்டு என்றே இருக்க நினைக்கிறார். தலைமுறை இடைவெளியும் இதனுடன் சேர்ந்து கொள்ள.. அப்பனுக்கும், மகனுக்கும் இடையில் எப்போதும் ஒரு பனிப்போர்.
ஏரியாவில் கஞ்சா விற்பவர்களை பற்றி போலீஸில் புகார் கொடுக்கிறார் ராஜ்கிரண். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த கான்ஸ்டபிள்கள் பிரசன்னாவை மிரட்ட.. ராஜ்கிரணை கடிந்து கொள்கிறார் பிரசன்னா. மகனின் பேச்சுக்காக ஸ்டேஷனுக்குச் சென்று தனது புகார் மனுவை வாபஸ் வாங்கிக் கொண்டு திரும்புகிறார்.
இதற்கிடையில் ராஜ்கிரணுக்கு ஒரு திரைப்படத்தில் சண்டை காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் சக்ஸ்ஸ்புல்லாக நடித்துக் காட்டுகிறார். வெகு நாட்களுக்கு பிறகு ஸ்டூடியோவில் தனக்குக் கிடைத்த மரியாதையை நினைத்து பூரிப்போடு வீடு திரும்புவரின் கண்ணில் மறுபடியும் அந்த கஞ்சா பார்ட்டிகள் சிக்கிவிட.. அவர்களை தூக்கிப் போட்டு மிதித்துவிடுகிறார்.
இந்தக் கேஸ் போலீஸுக்கு போக.. பிரசன்னா அப்பாவை எதிர்த்து கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறார். இதனால் வேதனைப்படும் ராஜ்கிரண், சட்டென எழுந்த கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கண் போன போக்கில் போனவர் ஒரு இடத்தில் தன் வயதையொத்த நபர்களின் கூட்டத்தை பார்த்து அவர்களிடம் பேசுகிறார். அவர்கள் அவரது வாழ்க்கைக் கதையை கேட்கிறார்கள். தன்னுடைய முதல் காதலை பற்றி அவர்களிடத்தில் சொல்கிறார் ராஜ்கிரண்.
“இப்போ அவளை பார்க்கத்தான் போறியா..?” என்று ஒருவர் கேட்க.. “இதுவரைக்கும் அந்த எண்ணம் இல்லை. இப்போ வந்திருச்சு..” என்கிறார் ராஜ்கிரண். முகநூல் மூலமாக அவரது காதலியைத் தேடிக் கண்டுபிடிக்கும் அந்தக் கூட்டம், அவருடைய காதலி ஹைதராபாத்தில் இருப்பதாகச்  சொல்கிறார். உடனேயே அவரைத் தேடி ஹைதராபாத்திற்கு தனது பைக்கிலேயே பறக்கிறார் ராஜ்கிரண்.
இன்னொரு பக்கம் அப்பாவை காணாமல் பிரசன்னா பதறுகிறார். போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். நாலாபுறமும் தேடி வருகிறார். இந்த இக்கட்டில் ராஜ்கிரண் ஹைதராபாத்தில் தனது காதலியை கண்டுபிடித்தாரா இல்லையா..? என்ன ஆனது..? திரும்பவும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தாரா என்பதுதான் இந்தச் சுவையான திரைப்படத்தின் கதை.
இப்படியொரு குடும்பக் கதையை பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது..? தனுஷ் தனது முதல் கதையை இப்படி தேர்வு செய்வார் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதோடு இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
முதலில் கதாபாத்திரங்களின் தேர்வுக்காகவே தனுஷை வெகுவாகப் பாராட்ட வேண்டும். ஆளுமை தன்மையுடனும், பாசத்துடனும், நேசத்துடனும், கண்டிப்புடனும் இருக்க வேண்டிய ஒரு தகப்பனாக ராஜ்கிரணின் நடிப்பு அற்புதம்.. தனது பேரன், பேத்திகளின் பாசத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய சூழல்.. பையனிடம் திட்டுவாங்கிவிட்டு பேரப் பிள்ளைகளிடம் அதற்காக பல்பு வாங்குவது.. பக்கத்து வீட்டு பையனுக்கு முதல் நாள் அட்வைஸ் செய்து, மறுநாள் அவனுடனேயே அமர்ந்து தண்ணியடிக்கும் காட்சியில் கொஞ்சம் காமெடியையும் சேர்த்தே தந்திருக்கிறார்.
தன்னை நோக்கிப் பாய்ந்த வார்த்தைத் தோட்டாக்களை தேக்கி வைத்திருந்து, ஒரு நாள் பிரசன்னாவிடம் திருப்பித் தரும் காட்சியில் ராஜ்கிரண் கைதட்டல்களை அள்ளியிருக்கிறார். தனுஷிடம் இப்படியொரு இயக்கத் திறமையை எதிர்பார்க்கவில்லை என்பதற்கு முதல் அச்சாரத்தை இந்த ஒரு காட்சியே விதைத்தது என்றால் அது மிகையில்லை.
ரேவதியை முதன்முதலில் பார்த்தவுடன் அவர் காட்டும் பரவசம்.. ரேவதியின் தொடுதலில் ஏற்படும் கிளர்ச்சி.. பேச்சில் காட்டும் நெருக்கத்தால் ஏற்படும் மன நிம்மதி.. விசாரிப்பில் விளையும் அன்பும், பாசமும்.. இப்படி அனைத்தையும் அந்த ஒரு பாடல் காட்சியிலேயே காட்டியிருக்கிறார் ராஜ்கிரண்.
தனது மனைவியின் இழப்பை நினைக்காதவரையும் நினைக்க வைக்கும் அளவுக்கான சம்பவங்கள் வீட்டில் நடந்துவிட அதை நினைத்து வருந்துகிறவரை சமாதானப்படுத்தும் பேரன், பேத்திகளிடம் அவர் பேசும்விதமும், நடந்து கொள்ளும்விதமும் ஒரு சாதாரண தாத்தாவைத்தான் காட்டுகிறது.
இறுதியில் ரேவதியிடம் பிரியாவிடை பெற்றுவிட்டு திரும்பிப் பார்க்காமலேயே ஒரு குறியீடாக டாட்டா காட்டிவிட்டு செல்கின்ற உடல் மொழியிலும்கூட ஒரு சபாஷ் போட வைத்திருக்கிறார் ராஜ்கிரண்.
ரேவதியை பார்த்து மிக நீண்ட நாட்களாகிவிட்டது. அந்த வயதுக்கேற்ற பக்குவமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். ராஜ்கிரணை பார்த்தவுடன் அவருக்குள் ஏற்படும் ஒரு ஜெர்க்கை முகத்தில் காட்டும் அந்த நொடியில் ரேவதியை அனைவருக்குமே பிடித்துவிடுகிறது.
இறுதியில் தன்னிடமிருந்த ராஜ்கிரணின் புகைப்படத்தை அவரிடம் கொடுத்துவிட்டு,  தான் எழுதிய கடைசியான காதல் கடித்த்தை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டு கண்ணீர் மல்க விடை கொடுக்கும் காட்சி ஒரு காதல் கவிதை. அந்தக் கவிதையிலேயே ஒரு கவிதையாய் நிற்கிறார் ரேவதி.
சின்ன வயது ராஜ்கிரண் கேரக்டர்களில் வரும் தனுஷும், மடோனா செபாஸ்டியனும் சரியான தேர்வு. மடோனாவுக்கு நம்ம ஊர் பொண்ணு கேரக்டர் சற்றே ஒத்து வரவில்லை என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தனுஷுக்காகவே சண்டை காட்சியை வைத்திருந்தாலும் அது திணிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.
அந்தக் கிராமத்து போர்ஷனை வழவழவென இழுக்காமல் ரத்தினச் சுருக்கமாக அதே சமயம் அழகாக சுருக்கியிருக்கிறார்கள். கடைசியில் தன்னிடம் வரும் மடோனாவின் தம்பியைத் தூக்கிக் கொள்ளும் தனுஷின் செயலிலேயே அவருடைய பரிதவிப்பு தெரிகிறது. ஏ கிளாஸ் நடிப்புய்யா..!
பிரசன்னாவுக்கு இது மிக முக்கியமான படமாக இருக்கும். தந்தையைப் பற்றியே தான் எண்ணவில்லை என்பதை புரிந்து கொண்டு கடைசியாக குமுறி அழும் அந்த அப்பாவியின் நிலைமையில்தான் இன்றைக்கு பாதி இளைஞர்கள் நாட்டில் உள்ளனர். இந்தக் கேரக்டர் இல்லாத தெருக்களும், ஊர்களும் இந்தியாவிலேயே இருக்க முடியாது. மிகச் சிறப்பான கேரக்டர் ஸ்கெட்ச் இது.
மற்றும் மடோனாவின் அப்பாவாக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’ நரேன், லொட லொட வாயுடன் தனுஷின் முறைப்பெண்ணாக நடித்திருக்கும் வித்யுத்லேகா, திவ்யதர்ஷிணி என்று இந்தக் கோஷ்டியும் சிறப்பாகவே தங்களது கேரக்டரை செய்திருக்கிறார்கள்.
இதேபோல் இவரது மனைவியாக நடித்திருக்கும் சாயா சிங், பேரன் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தைகளுடன் பக்கத்து வீட்டுப் பையனாக நடித்திருப்பவன்கூட தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
இடையில் ஒரேயொரு காட்சியென்றாலும் கெளதம் வாசுதேவ் மேனனும், ரோபோ சங்கரும் கலக்கியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
வேல்ராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இயக்குநருக்கான பாதி சுமைகளை ஒளிப்பதிவாளரே தூக்கி சுமந்திருப்பது தெரிகிறது. எப்போதும்போல இந்தப் படத்திலும் ஒரேயொரு காட்சியில் தலையைக் காட்டி படம் ஹிட்டாக தானும் ஒரு காரணமாகியிருக்கிறார் வேல்ராஜ்.
ஷான் ரோல்டனின் இசையில் ‘வெண் பனி மலரே’ பாடல் ஓகே.. அதேபோல் தனுஷ்-மடோனாவின் ‘பார்த்தேன்’ மெலடியான காதல் பாடலும் கேட்க இனிமை. இதைவிட பின்னணி இசையில் அடக்கி வாசித்து, சில இடங்களில் மெளனித்து படத்தை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
தனுஷின் இயக்கத் திறமையுடன், திரைக்கதை அமைத்திருக்கும் பாங்கும் சேர்ந்து அவரை இன்னொரு சகலகலாவல்லவராக காட்டுகிறது.
ராஜ்கிரண் ஒரு படத்தின் சண்டை காட்சியில் நடித்துவிட்டு மிகப் பெருமையாக பலரது பாராட்டுக்களையும் பெற்றுவிட்டு வீடு திரும்பும்போதுதான் அந்த கஞ்சா பார்ட்டிகளுடன் சண்டைக்கு போகிறார். அது அப்போதைய அவரது மனநிலையைக் காட்டுகிறது. இவ்வளவு யதார்த்தமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் தனுஷ்.
அப்பாவித்தனத்தோடு “என்ன இத்தனை வயசாகியும்.. ஒரு முடி கூட நரைக்கலை..?” என்று கேட்க. “அங்க மட்டும் என்ன வாழுதாம்..?” என்ற ரேவதியின் கேள்விக்கு.. “சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்காக…” என்று பதில் சொல்ல.. “சால்ட் இருக்கு.. பெப்பர் எங்க..?” என்று ரேவதியின் அடுத்தக் கேள்விக்கு அசடு வழிவதுமாக வசனத்தாலேயே காட்சிகளை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
அந்த ஒரே நாளிலேயே ராஜ்கிரணுடன் ஊர் சுற்றும் ரேவதி மிக எளிதாக அவருடன் நெருங்கிப் பழகுவதும், தன்னுடைய மகள், பேத்தி வீட்டில் காத்திருப்பதை எளிதாகச் சொல்லிவிட்டு போக.. சட்டென்று அதை ஏற்காத ஆண் மனம் பேதலித்துப் போய் இருப்பதை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
“நாளைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கள்ல.. போ.. போய் சீக்கிரமா தூங்கு…” என்று மகள் திவ்யதர்ஷினி சொல்லிவிட்டுப் போனவுடன் ரேவதி தான் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்து ஸ்டைலாக இரண்டு ஸ்டெப்புகள் வைத்துவிட்டு மீண்டும் நடக்கிறார் பாருங்கள். அங்கேயிருக்கிறது இயக்குநரின் இயக்கத் திறமை.. வெல்டன் தனுஷ்..!
“என் மனசுல நீ இப்பவும் இருக்கியா?” என்ற ஒற்றைக் கேள்வியைப் பிடித்துக் கொண்டு நள்ளிரவிலும் ரேவதியின் வீட்டுக்கு வந்து கேட்பதும்.. அதைத் தொடர்ந்து நடக்கும் வார்த்தை விளையாட்டுக்களில் படத்தை மிக, மிக ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ்.
இறுதியில் இருவருமே தங்களிடமிருக்கும் அந்த ரகசிய ஆயுதத்தை பரிமாறிக் கொண்டு நட்புக்கு அச்சாரம் போட்டு, உறவுக்கு ‘தடா’ போடுவதை போல வைக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிதான் படத்தின் மிகப் பெரிய ஹைலைட்.
படம் பார்த்த அனைவருக்குமே பிடித்தமான காட்சியாகவும், படத்தின் கதைக்கும், இக்காலத்திய சமூகச் சூழலுக்கும் இது மிகப் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
கொஞ்சம் தப்பினாலும் அது மறுமணம் விஷயத்தில் தவறாகிவிடும் என்பதுபோல் இருந்தாலும், “அது தேவையில்லை.. இப்போது போலவே இருப்போம்.. தவறுக்கு வருந்தி வந்து நிற்கும் மகனை புறந்தள்ள அப்பனுக்கு மனமில்லை. ஒரு குடும்பம் மறுபடியும் சேர்ந்திருக்கும் நேரத்தில் அதைப் பிரிக்க தனக்கும் விருப்பமில்லை என்று ரேவதியின் ஒதுங்கலுமான திரைக்கதை அமைப்புகள்தான் படத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள்..!
படத்தின் ஒரேயொரு மைனஸ்.. ஹைதராபாத் மாலில் நடக்கும் சண்டை காட்சிதான். அது மட்டும்தான் வலிந்து திணிக்கப்பட்டது போன்ற உணர்வை கொடுத்ததோடு இல்லாமல், இதற்கு ரேவதி கொடுக்கும் முன்னோட்டமும் தேவையற்றது என்றும் சொல்லத் தோன்றுகிறது.
வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு. அதிலும் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் நடை பிணங்களாகத்தான் வாழ்வார்கள். இந்தியா போன்ற குடும்ப உறவு முறையை அதிகம் பேணும் சமூகத்தில் வயதானவர்கள் ஒதுக்கப்படுதலும், அடக்கப்படுதலும்தான் அவர்களால் அதிகம் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது.
வீட்டில் அவர்களுக்கென்று இருக்கும் உரிமைகள் கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய் கடைசியில் அவர்களே வீட்டுக்கு தேவையில்லாத ஒரு பண்டமாக கருதப்படும்போதுதான் தாங்கள் இத்தனை நாட்கள் பிள்ளைகளை வளர்த்தது எதற்கு என்று யோசிக்கிறார்கள். யோசித்த பின் எடுக்கும் விளைவுகள் இப்படி ராஜ்கிரண் செய்யும் செயலில் போய்தான் முடியும்..!
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தங்களது வீட்டில் இருக்கும் பெரியவர்களின் குறைகளை கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாக தோன்றியிருக்கும். இதுதான் இந்தப் படம் சொல்லும் நீதி..!
இயக்குநர் தனுஷுக்கும், அவரது குழுவினருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
ப.பாண்டி – அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!

சிவலிங்கா - சினிமா விமர்சனம்

17-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாச்சலம் வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, ஊர்வசி, பானுப்பிரியா, சந்தான பாரதி, சக்திவாசு, பிரதீப் ராவத், ஜெயப்பிரகாஷ், வி.டி.வி.கணேஷ், மதுவந்தி அருண், மதுமிதா, பரத் கல்யாண் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஊர்வசி லாரன்சின் அம்மாவாகவும், கதாநாயகி ரித்திகா சிங்கின் அம்மாவாக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர்.
இயக்கம் – பி.வாசு, தயாரிப்பு – ஆர்.ரவீந்திரன், ஒளிப்பதிவு – சர்வேஷ் முராரி, இசை – எஸ்.எஸ்.தமன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – ஜி.துரைராஜ், பாடல்கள் – விவேகா, நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – அனல் அரசு, தளபதி தினேஷ், மாஸ் மாதா, சிகை அலங்காரம் – ஏ.சப்தகிரிவாசன், புகைப்படம் – பி.ஜெயராமன், விஷுவல் எபெக்ட்ஸ் – இளங்கோ, சுபீஷ், சிறப்பு சப்தம் – சி.சேது, டிடிஎஸ் வல்லுநர் – கிருஷ்ணமூர்த்தி, டிஸைனர் – பவன் குமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – கோடா கிரிஷ், தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.என்.அஷ்ரப், டி.எஸ்.செல்வராஜ், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.எஸ்.பழனியப்பன், ஆர்.விக்ரமன், இணை தயாரிப்பு – ஜெ.அப்துல் லத்தீப்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றும் சிவலிங்கேஸ்வரன் என்னும் ராகவா லாரன்ஸ் மிக நேர்மையானவர். ஆம்புலன்ஸில் கோடி, கோடியாய் பணத்தைத் திருட்டுத்தனமாக கடத்துவதை கண்டுபிடிப்பவர், அவர்கள் கொடுக்க முன் வரும் ‘பிப்டி பிப்டி ஷேர்’ என்கிற விஷயத்தைக்கூட ஏற்றுக் கொள்ளாமல் திருட்டுக் கும்பலை ஒட்டு மொத்தமாய் உள்ளே தூக்கி போடுகிறார்.
இவரிடத்தில் ஒரு வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. ரஹீம் என்னும் சக்தி வாசு ஒரு நாள் இரவில் ரயிலில் பயணம் செய்யும்போது திடீரென்று ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்கு ஒரே சாட்சி ரஹீம் வளர்த்து வந்த சாரா என்னும் புறாதான். ஆனால் இந்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடிய அளவுக்கான ஆதாரம் எதுவும் இல்லாததால் தற்கொலை என்று வழக்கை மூடுகிறது காவல்துறை.
ரஹீமை காதலித்து கல்யாணத்திற்காக காத்திருந்த அவருடைய காதலி, போலீஸ் கமிஷனரிடம் இது பற்றி புகார் செய்ய.. கேஸ் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுகிறது. இப்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. பிரிவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்துதான் இந்த வழக்கு சிவலிங்காவின் கைக்கு வருகிறது.
இப்போது சிவலிங்கா பெண் பார்க்கப் போய் பெண்ணை மிகவும் பிடித்துப் போய் அவசரமாக கல்யாணமும் செய்துவிடுகிறார். அவருடைய மனைவியான ரித்திகா சிங் பேய்ப் படங்களை பார்த்து அலறுவதையே ஒரு திரில்லிங்காக செய்யக் கூடியவர்.
ரஹீம் கொலை விசாரணைக்காக வேலூர் வரும் ராகவா லாரன்ஸ், ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் தனது புதிய மனைவியுடன் குடியேறுகிறார். வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். முதல் சந்தேகம் ரஹீமின் காதலியின் அப்பா மீது பாய்கிறது. ஆனால் அவரோ “தான் எதுவும் செய்யவில்லை என்றும், மகளிடம் சொல்லி காதலை கத்தரிக்க நினைத்தேன். ஆனால் கடைசியில் ரஹீமின் நல்ல குணத்தைப் பார்த்து கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன்…” என்கிறார்.
விசாரணை மேலும் தீவிரமாகும்போது ரஹீமின் ஆவி ரித்திகாவின் உடலில் புகுந்து கொண்டு அவரை ஆட்டிப் படைக்கிறது. ரித்திகா திடீர், திடீரென்று வேறு வேறு மாதிரியாய் நடந்து கொள்வதை பார்த்து பயந்து போன ராகவா லாரன்ஸ் மனைவியை மருத்துவரிடம் அழைத்து வருகிறார். அப்படியும் சிக்கல் தீராமல் போக தர்ஹாவுக்கு மந்திரிக்க அழைத்து வருகிறார்.
அங்கேதான் அவளது உடம்பில் ஏறியிருப்பது ரஹீம் என்பது தெரிய வருகிறது. ரஹீமின் ஆவியோ ‘என்னைக் கொலை செய்தவன் யார்..? அவன் எதற்காக என்னைக் கொலை செய்தான் என்பது எனக்குத் தெரிய வேண்டும். சீக்கிரம் கண்டு பிடி. காரணம் தெரியாமல் நான் ரித்திகாவின் உடம்பில் இருந்து வெளியேற மாட்டேன்..’ என்கிறது.
இப்போது ராகவா லாரன்ஸுக்கு உடனடியாக இந்த வழக்கில் துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. துப்பு துலக்கினாரா..? யார் குற்றவாளி.. எதற்காக ரஹீமை கொலை செய்தார் என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் அண்ட்  திரில்லர் படத்தின் திரைக்கதை.
‘சந்திரமுகி’, ‘காஞ்சனா’ டைப்பில் இந்த இரண்டு படங்களையும் இணைத்தது போன்ற கதையில் அதே பாணியில் இயக்கி வெற்றிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பி.வாசு.
சிவா என்னும் சிவலிங்கேஸ்வரனாக நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் வழக்கம்போலவே அற்புதமாக நடனடமாடியிருக்கிறார். தனக்குத் தெரிந்தவரையிலும் நடித்திருக்கிறார். பேயைக் கண்டால் பயப்படும் தனது டிரேட் மார்க் நடிப்பையும் காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.
இடையிடையே உடல் ஊனமுற்றவர்களுக்கு தானே ஆபத்பாந்தவன் என்றும், ரஜினிக்கு பின்பு தான்தான் என்பதை மறைமுகமாகச் சொல்லும்விதமாகவும் ‘சின்ன கபாலி’ என்றும் படத்திற்கு விளம்பரம் செய்வதை போலவும் காட்சிகளை வைத்து அதையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
தாய்ப் பாசத்தை காட்டும்விதத்தில் “பெத்த அம்மாவ விட்டுட்டு எவனெல்லாம் தனியா போறேனோ, அவனெல்லாம் என் பார்வையில் ஒரு பொணம்டா…” என்கிறார். இன்னொரு இடத்தில் “தப்பு பண்ற ஒவ்வொருத்தனுக்கும் ஆண்டவன் ஏதோ ஒரு இடத்துல ஆப்பு வைப்பான்…” என்று பன்ச் வசனம் பேசி அடிக்கிறார். அதேபோல் பேயை பார்த்து பயப்படும் காட்சியில் “என் தலைவனுக்கு பாம்புன்னா பயம்; எனக்கு பேய்னா பயம்…” என்கிறார்.
இவருக்கு நடிப்புக்கான ஸ்கோப்பே கிளைமாக்ஸ் காட்சியில்தான் கிடைக்கிறது. அதிலும் ரஹீமின் ஆவியை தன் உடம்பில் இறக்கிக் கொண்டு அவர் ஆடும் ஆட்டமும், அதற்கேற்ற பின்னணி இசையும், காட்சியமைப்பும் ஒத்துழைப்பு தர.. ராகவா லாரன்ஸை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.
‘இறுதிச் சுற்று’ ரித்திகா சிங்கா இது என்று கேட்க வைத்திருக்கிறார். நிஜத்தில் இவர் ஒரு குத்துச் சண்டை வீராங்கனை. நடனமே தெரியாது என்றுதான் திரையுலகப் பயணத்தின் துவக்கத்தில் சொன்னார். ஆனால் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் இவர் ஆடியிருக்கும் ஆட்டம்.. அசத்தல்.. அதிலும் ‘ரங்கு ரக்கர’ பாடலில் ஆடியிருக்கும் ஆட்டத்தை லட்சுமி ராய் பார்த்தால் நிச்சயமாக கோபப்படுவார். அந்த அளவுக்கு லாரன்ஸுடன் ரொமான்ஸில் பின்னிப் பிணைந்திருக்கிறார்.
லாரன்ஸ் பெண் பார்க்க வந்த இடத்தில் பட்டென்று அவரே பேசத் துவங்கி.. “என்னை உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்….” என்று இயல்பை மாற்றிப் போட்டு நடிப்பைத் துவக்கி.. ரஹீமின் பேய் அவருடைய உடம்பில் புகுந்தவுடன் அவர் காட்டும் ஆக்சன்கள் அத்தனையும் அசத்தல் ரகம். ‘சந்திரமுகி’ ஜோதிகாவை இந்த இடத்தில் நிஜமாகவே நினைவுபடுத்த வைத்திருக்கிறார் ரித்திகா சிங். அந்த பேயின் கொடூர முகத்துக்கான மேக்கப்புடன், நடிப்பையும் விட்டுவிடாமல் அழகாக நடித்திருக்கிறார். வாழ்த்துகள் ரித்திகா.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பட்டுக் குஞ்சமாக’ அவதாரமெடுத்திருக்கும் நடிகர் வடிவேலு பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். டென்ஷனை குறைக்க வைத்திருக்கிறார். இவரும், ஊர்வசியும் இருக்கும் காட்சிகளில் நடிப்பும், வசனமும் பின்னிப் பிடலெடுக்கிறது. ‘வடிவேலு இஸ் பேக் டூ தி பார்ம்’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.
“பொண்ணு முகத்தை பார்க்காம கல்யாணம் பண்றவங்க அவங்க; நெருப்புக்கு முன்னாடி கல்யாணம் பண்றவங்க நாம…” என்று அடக்கமாக மகளின் மனதை மாற்ற முயலும் ராதாரவியும் நடிப்பில் கவர்கிறார். “ஒரு பேய்க்கும், பேக்குக்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்….” என்று புலம்பும் ‘அறுசுவை அன்னலட்சுமி’ ஊர்வசியும் கலகலப்பையும் ஊட்டி, ரசிக்கவும் வைத்திருக்கிறார்.
வெகு நாட்களுக்குப் பிறகு பானுப்பிரியா. அலட்டல் இல்லாமல் அமைதியாக ரித்திகாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். மேலும் ரஹீமாக நடித்திருக்கும் சக்திவாசுவுக்கு நிஜமாகவே இந்தப் படம் ஒரு முக்கியமான படம்தான். பேய் வடிவத்தில் இவர் காட்டியிருக்கும் நடிப்புக்காக மிகப் பெரிய பாராட்டை இவருக்கு வழங்கலாம்.
சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த பலம்தான். இடையிடையே சி.ஜி., கிராபிக்ஸ் உதவியுடன் ஒளி கூட்டல்கள் இருக்கின்ற என்றாலும் அதுவும் படத்தை கலர்புல்லாகவே காட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ரம்மியம் என்று சொல்லலாம். லொகேஷன்களை பார்த்து, பார்த்து செலக்ஷன் செய்திருப்பதால் இதுவும் ஒளிப்பதிவுக்கு ஏற்றதாகவே அமைந்திருக்கிறது.
படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் தன் வேலையை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். படத்தின் பிற்பாதியில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் கிரிப்பாக இருந்திருக்கும்..!
பேய் பங்களா.. பங்களாவுக்கு பின்பக்கம் சுடுகாடு.. வீட்டின் உள் அமைப்பு.. என்று பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கிறார் கலை இயக்குநர் ஜி.துரைராஜ். பாராட்டுக்குரியவர்.
இப்போது பழைய இயக்குநர்களெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டார்கள் என்றெல்லாம் யார், யாரோ பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் இயக்கத்தை பார்த்துவிட்டு யாரும் அப்படி சொல்லிவிட முடியாது. பி.வாசுவின் இயக்கத் திறமைக்கு இந்தப் படம் ஒரு பெரிய சான்று.
ரித்திகாவுக்கும், ரஹீமுக்குமான தொடர்பு.. அந்தக் கதையின் முடிச்சு அவிழ்க்கப்படும் இடம், தொடரும் இடம்.. அது முடிவுக்கு வரும் இடம்.. என்று அனைத்தையும் பார்த்து, பார்த்து எழுதியிருக்கிறார் இயக்குநர் வாசு. படத்திலேயே எதிர்பாராத கதை இதுதான். வெல்டன் ஸார்..!
அதேபோல் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் அதிகாரி என்றுதான் அனைவரும் சொல்கிறார்களே தவிர.. ராகவா லாரன்ஸ் அங்கே என்ன பதவியில் இருக்கிறார் என்பதை உயரதிகாரியான மதுவந்தி அருண்கூட சொல்லவில்லை என்பதுதான் சோகம்.
அதேபோல் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தற்கொலை என்று தீர்ப்பாகிவிட்ட நிலையில் மீண்டும் இதனை திறப்பதற்கு நீதிமன்றத்தில் அனுமதி வாங்க வேண்டும் என்கிற விதிகளெல்லாம் இருக்கே..!? அதையெல்லாம் கேட்காமல், எந்தவிதமான காரணமும் இல்லாமல் பட்டென்று ஒரு போலீஸ் கமிஷனர் தன்னிடம் வந்த புகாரையடுத்து வழக்கை ரீ-ஓப்பன் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்றே சொல்லலாம்.
அதேபோல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் ஒரே இடத்தில் குவித்து வைத்து அவர்கள் முன்பாக விசாரித்து உண்மையை வரவழைக்க வேண்டிய தேவை என்ன இருக்கறது என்று தெரியவில்லை.
ஆனால் புதுமையான கிளைமாக்ஸுக்காக இயக்குநர் வாசு செய்திருக்கும் இந்த திரைக்கதையும் சுவையாகத்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதால் இதனையும் ஏற்றுக் கொள்வோம்.
ஒரு கிரைம் – மர்டர் – சஸ்பென்ஸ் – திரில்லர் – கதையில் பேயையும் இணைத்து பேய்க் கதையாகவும் மாற்றி, அதையும் தனது சிறப்பான இயக்கத்தால் வெற்றிகரமாக இயக்கிக் காட்டியிருக்கும் இயக்குநர் பி.வாசுவுக்கு நமது பாராட்டுக்கள்..!
சிவலிங்கா – பார்க்க வேண்டிய படம்தான்.. இதில் சந்தேகமேயில்லை..!