சாலையோரம் - சினிமா விமர்சனம்

01-05-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்திற்குக் ‘குப்பைக் கிடங்கு’ என்று பெயர் வைத்திருந்தால்கூட பொருத்தமாகத்தான் இருந்திருக்கும். சாலையோரத் தெருக்களில் குடியிருக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக் கதையைக் கொஞ்சம் தொட்டுப் பார்த்திருப்பதால் ‘சாலையோரம்’ என்று வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது..!

ஹீரோ ராஜ் மாநகராட்சியில் குப்பையள்ளும் வேலையைச் செய்து வருகிறார். இவருக்கு வளர்ப்பு அப்பா மட்டுமே இருக்கிறார். இவரது குப்பத்து வீட்டருகே இருக்கும் தீக்ஷனா, இவரை ஒரு தலையாகக் காதலித்து வருகிறார்.
முதல் ஹீரோயினான ஷெரீனா கல்லூரி மாணவி. சொந்த ஊர் சிங்கப்பூர். இவரது அப்பா அங்கே பெரிய டாக்டராக இருக்க.. இங்கே சென்னையில் அறக்கட்டளை நடத்தி பணம் சம்பாதித்து வரும் அரசியல்வாதியான பாண்டியராஜனின் பாதுகாப்பில் வளர்ந்திருக்கிறார்.
தன்னுடைய கல்லூரி படிப்புக்காக குப்பைகளும் அவைகள் பொதுமக்களுக்குத் தரும் தொல்லைகளும் என்கிற ஆராய்ச்சியை மேற்கொள்கிறார் ஷெரினா. இதற்காக குப்பையள்ளும் ஹீரோவிடம் உதவி தேடி வருகிறார். ஏற்கெனவே இவர்கள் இருவருக்கும் ஒரு விஷயத்தில் லடாய் நடந்திருக்க.. பணத்துக்காக இந்த வேலைக்கு ஒத்துக் கொள்கிறார் ஹீரோ.
ஹீரோவின் அப்பாவித்தனத்தைப் பார்த்து ‘பாவமாச்சே’ என்று எடை போடும் ஹீரோயின் ஹீரோவுக்கு நல்ல புத்திமதி சொல்லி ‘அழகாக இருக்கணும்.. நல்லா புத்திசாலித்தனமா பேசணும்’ என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார். அவருடைய அக்கறையான பேச்சை, காதலாக எடுத்துக் கொண்டு பசலை நோயால் தவிக்கிறார் ஹீரோ.
இடையில் அந்த குப்பைக் கிடங்கிற்கு சோதனை செய்ய சென்றபோது, திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ஹீரோயின் சிக்கிக் கொள்கிறார். ஹீரோ மட்டும் தைரியமாக உள்ளே சென்று ஹீரோயினை தூக்கி வந்து காப்பாற்றுகிறார். இதனைப் பார்த்து ஹீரோயினுக்கு இவர் மேல் பரிவு வருகிறது.
இந்த நேரத்தில் உடன் இருக்கும் அல்லக்கைகள் தூண்டிவிட தனது காதலை ஷெரினாவிடம் சொல்கிறார் ஹீரோ. ஷெரினா மிகக் கோபப்பட்டு ஹீரோவின் தன்மானத்தை சீண்டிப் பார்க்கும்வகையில் வார்த்தைகளைக் கொட்டி திட்டி விடுகிறார்.
ஹீரோ, ஹீரோயினின் பிரிவு ஒரு பக்கம் இருந்தாலும், குப்பைகளில் மட்கிப் போய்க் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எத்தனாலை கண்டுபிடிக்கும் புதிய விஷயத்தை ஷெரினா தனது வளர்ப்பு தந்தையான பாண்டியராஜனிடம் இதைப் பற்றிச் சொல்கிறார்.
அவரும் ஆரம்பத்தில் இதைக் கேட்டு உற்சாகப்படுத்துபவர், கடைசியாக இந்த பார்முலாவை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கிறார்.
ஷெரினா இந்த முடிவை எதிர்க்க.. பாண்டியராஜன் ஷெரினாவை சிறை வைக்கிறார். ஷெரினா தப்பித்தாரா.. இல்லையா.. ஹீரோ உதவிக்கு வந்தாரா..? என்னவாயிற்று என்பதுதான் இடைவேளைக்கு பின்பான கதை..!
டாக்குமெண்ட்டரியாக எடுக்கத் துவங்கி ஹீரோ, ஹீரோயினை சேர்த்து காதலையும் கொஞ்சம் கொசுறாக வைத்து சினிமாவாக மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது.
புதிய ஹீரோ.. புதிய ஹீரோயின்.. சமாளிக்க பழைய முகங்கள் என்று ஒரு டெம்ப்ளேட்டாக படத்தை உருவாக்கி ‘பார்த்தால் பாருங்க.. இல்லாட்டி போங்க..’ என்று ஒருவித அலட்சிய மனப்பான்மையோடு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்கத் தவறியதால் என்னவோ.. ஏதோவென்றுதான் படத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
படத்திலேயே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரேயொரு விஷயம்.. முத்துக்காளை சம்பந்தப்பட்ட காட்சிகளும்.. அந்த அப்பா, மகன் பாசக் காட்சிகளும்தான். முத்துக்காளை இறப்புக் காட்சியை படமாக்கியவிதமும், அந்தப் பாடல் காட்சியும் அருமை. சட்டென ஒரு நொடியில் கண் கலங்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
ஹீரோ ஏன் இப்படி சின்னப் புள்ளையாகவே பேசுகிறார்.. நடந்து கொள்கிறார் என்பதற்கு இயக்குநர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. குப்பை அள்ளுபவராக இருந்தாலும்.. குப்பை மேட்டில் வாழ்பவராக இருந்தாலும்.. இப்படியா அப்பாவித்தனமாக இருப்பார்..? ஒரு காட்சியில்கூட நடிப்பு ஒரு வீசம்கூட ஹீரோவிடமிருந்து வெளியாகவில்லை என்பது நமக்குக் கிடைத்திருக்கும் சோகம்.
ஹீரோயின்களில் ஷெரினாவும், தீக்ஷனாவும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். குளோஸப்பான முகபாவனைகளில் ஷெரினா ஒரு படி மேலே போய் கவர்கிறார். தீக்ஷினாவை கொஞ்சம் கவர்ச்சிக்கு அலையவிட்டு ஹீரோவுக்காக ஏங்குவது போல காட்டியிருக்கிறார்கள். அதையும் நல்லபடியாக முடியும்போது மறுபடியும் ஒரு டிவிஸ்ட் வைத்து இவரை ஓரம்கட்டிவிட்டார்கள்.
பாண்டியராஜன், முத்துக்காளை, சிங்கம்புலி என்று பழுத்த நடிகர்கள் இருந்தும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. சிங்கம்புலியின் சில வசனங்கள் லேசாக புன்முறுவல் பூத்த வைத்திருக்கிறது..!
யுகபாரதியின் அப்பா சென்டிமெண்ட் பாடல் ஓகே.. மற்றபடி வழக்கமான இசையைத்தான் கொடுத்திருக்கிறார் எஸ்.சேதுராம். தினேஷ் சீனிவாஸின் ஒளிப்பதிவில் குப்பைக் கிடங்கின் பிரம்மாண்டம் பார்க்கும்போது கொடூரமாக இருக்கிறது.. ஜாடிக்கேத்த மூடி என்பதை போல பட்ஜெட்டுக்கேற்றாற்போல ஒளிப்பதிவும் இருக்கிறது. நன்று..!
சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததும்.. அந்த வேலையைச் செய்ய  ஆட்களே இல்லாமல் இருப்பதும்.. இருப்பவர்களுக்கே உரிய மரியாதை கிடைக்காமல் இருப்பதையும் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியதுதான்.. ஆனால் இந்தக் காட்சியை மக்கள் ரசிக்கும்படி இயக்கியிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்..
ஒரு ஆவணப் படத்திற்கு உரிய விஷயங்களை மேம்போக்காகத் தொட்டிருந்தாலும், திரைப்படமாக கொடுக்க இன்னும் நிறைய மெனக்கெட்டிருக்க வேண்டும். முக்கியமாக  இயக்குநரின் இயக்கத் திறமை போதவில்லை என்பதைத்தான் பல காட்சிகள் உணர்த்தியிருக்கின்றன..!
இருந்தாலும் மற்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு சவால்விடும் வகையில் கதை தேர்வில் பொதுவான மக்கள் சிந்தனையோடு குப்பைகளால் மக்களுக்கு ஏற்படும் நோய்கள்.. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சீரழிவுகள். அரசுகளின் பாராமுகம்.. மக்களின் கவனக் குறைவு.. சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் நிலைமை.. அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு.. பணக்கார அறக்கட்டளைகளின் உண்மை முகம்.. என்று சிலவற்றை தொட்டுப் பேசியிருப்பது பாராட்டுக்குரியது..!
இதுவே போதும் என்று இயக்குநரே நினைத்திருப்பதால், இதற்கு மேலும் நாம் என்ன சொல்வது..?

0 comments: