வாலிப ராஜா - சினிமா விமர்சனம்

28-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் சந்தானத்துடன் ஒரு ஹீரோவாக நடித்த சேது சோலோ ஹீரோவாக களமிறங்கியிருக்கும் படம். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு தட்டுத் தடுமாறி வெளியாகியிருக்கிறது.

நாயகன் சேது, நாயகி நஷ்ரத்தை ஒரு நாள் காலை வேளையில் வாக்கிங் செல்லும் எக்குத்தப்பான தருணத்தில் சந்திக்கிறார். பார்த்தவுடனேயே காதல் கொள்கிறார். நஷ்ரத் அவருடன் பழகினாலும் அது நட்பாகவே இருக்கிறது. ஆனால் சேதுவுக்குள் காதல் கெமிஸ்ட்ரி ஊற்றாய் பொங்கி வழிகிறது.
இடையில் திடீரென்று சேதுவின் தந்தை ஜெயப்பிரகாஷ் சேதுவை பெண் பார்க்க வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். அங்கே தான் பார்க்க வந்த பெண்ணான விசாகாசி ங்கிடம் தன்னுடைய ஒன் சைட் காதலைச் சொல்லிவிடுகிறார் சேது.
அவரது காதலுக்கு தானே தூது சென்று முடித்து வைப்பதாக உறுதியளிக்கிறார் விசாகா சிங், இதற்காக “ச்சும்மா கொஞ்ச நாள் நாங்கள் இரண்டு பேரும் பழகிக் கொள்கிறோம்..” என்று சொல்லி இரு வீட்டாரிடம் டைம் வாங்கிக் கொள்கிறார்கள் இருவரும்.
அதன் பிறகு நஷ்ரத்திற்கு விசாகா சிங்கை அறிமுகம் செய்து வைக்கிறார் சேது. மூன்று பேரும் ஊர் சுற்றி வரும் நிலையில் தனது காதலுக்கு எப்படியாவது ஓகே வாங்கிவிடலாம் என்கிற நினைப்பில் இருக்கும் சேதுவுக்குள் திடீரென்று கெமிஸ்ட்ரி இடம் மாறி விசாகா சிங் மீது காதல் வருகிறது.
ஆனால் அடுத்தத் திருப்பமாக நஷ்ரத் திடீரென்று சேதுவை காதலிப்பதாக்க் கூறி கதையை மாற்ற விசாகாவும், சேதுவும் அதிர்ச்சியாகிறார்கள். இப்போது சேதுவுக்குள் ஒரே குழப்பம். இருவரில் யாரை காதலிப்பது என்று..?
அதற்குள்ளாக சேது நஷ்ரத்தைத்தான் காதலிப்பதாக நினைத்து விசாகா சிங்கின் நிச்சயத்தை முறித்துக் கொள்கிறார்கள் சேதுவின் வீட்டார். நஷ்ரத்துடனான திருமணத்திற்கு பேசி முடிவு செய்ய.. சேதுவுக்கு திக்கென்றாகிறது..! இரட்டை மன நிலையில் அல்லாடுகிறார்.
இந்தக் குழப்பத்திற்கு விடை காண மனநல மருத்துவரான சந்தானத்தை அணுகுகிறார் சேது. தான் அந்தக் குழப்பத்தை சரி செய்து சேதுவின் கல்யாணத்தை நடத்தி வைப்பதாக சொல்கிறார் டாக்டர் சந்தானம். சொன்னதை செய்தாரா என்பதுதான் திரைக்கதை.
சேது இந்தப் படத்தில் தனி ஹீரோவாக நடித்திருக்கிறார். இருந்தாலும் அழுத்தமான இயக்கம் இல்லாத்தால் நடிப்பில் தனித்துவம் காட்ட முடியவில்லை. காதல் காட்சிகளில் மட்டும் ஓரளவு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலின் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சந்தானத்துடன் குழப்படியாக பேசி நகைச்சுவையை வரவழைக்கும் காட்சிகளில் நிஜமாகவே சேதுவை பிடிக்கிறது.
கதாநாயகிகளில் விசாகா சிங் அழகு, அருமை.. பொறுமை.. பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறார். கூடவே சிறப்பாகவும் நடித்திருக்கிறார். இன்னொரு ஹீரோயின் பரவாயில்லை ரகம். ஆனாலும் நடிப்பில் குறை சொல்ல முடியாது.
மனோதத்துவ டாக்டரான சந்தானத்தின் காமெடி பல இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்வதை போல படம் முழுவதிலும் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை காமெடி வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்னமும் உடல் குறைபாட்டை நக்கலடித்து காமெடி செய்யும் தன் பாணியை சந்தானம் கைவிடவில்லை போலும்..
மேலும், அப்பாவான ஜெயப்பிரகாஷ், அம்மாவான ஸ்ரீரஞ்சனி, அக்காவான தேவதர்ஷினி, மாமாவான பஞ்சு சுப்பு ஆகியோரின் நடிப்பில் மேலும் காமெடி கூடியிருக்கிறது. அதிலும் தேவதர்ஷினி கோபம் வந்தால் எதையாவது துடைத்துக் கொண்டேயிருப்பார் என்ற கேரக்டர் ஸ்கெட்ச் பல இடங்களில் கலாட்டாவாகியிருக்கிறது. வெல்டன் இயக்குநர் ஸார்..
விசாகா சிங்கின் வீட்டிற்கு குடிபோதையுடன் சென்று சண்டையிட்டு பின்பு ஜெயப்பிரகாஷ் வந்து சேதுவை காரில் அழைத்துச் செல்லும் காட்சியும், அதற்கடுத்து பீச்சோரத்தில் காரை நிறுத்திவிட்டு சேதுவிடம் இனிமேல் நான் எதையும் உன்கிட்ட கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போகும் காட்சியிலும் நடிகர் ஜெயப்பிரகாஷ், ஒரு சராசரி அப்பாக்களின் நடிப்பை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். இந்தக் காட்சியில் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!
லோகநாதன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு, ரதன் இசை இரண்டுமே சுமார் ரகம். பாடல் காட்சிகளில் மட்டுமே அதுவும் லொகேஷன் பாண்டிச்சேரி என்பதால் கண்ணைக் கவர்கிறது. மற்றபடி கதையும், திரைக்கதையுமே பிரதானம் என்பதால் மற்றவற்றில் அதிக அக்கறை காட்டவில்லைபோலும்..!
காதல் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தாலும் இதே சாயலில் பல கதைகள் இதற்கு முன்பேயே வந்து போயிருப்பதால் அடுத்தடுத்த திரைக்கதைகளை நாமளே மிக எளிதாக ஊகிக்க முடிவதுதான் இந்தப் படத்தின் ஒரே பலவீனம். ஆனாலும் கிளைமாக்ஸில் வரும் அந்த டிவிஸ்ட் யாருமே எதிர்பாராததுதான்..  அந்தக் காட்சியை சரிவர இயக்காமல் விட்டதினால் ஒரு அழுத்தமான முடிவு கிடைக்காமல் சொதப்பலாகிவிட்டது.
மொத்தத்தில் இந்த ‘வாலிப ராஜா’ வயதுக்கு வராத வாலிபனாகிவிட்டான்.

0 comments: