பூங்காவில் பெண் பார்க்கும் படலம்..!

23-03-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்போதுதான் காமராஜர் பூங்காவில் நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வந்தேன். அங்கே இன்று நான் பார்த்த ஒரு நிகழ்வை சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுவதால் உடனேயே டைப்பிங்.!

உள்ளே நுழைந்தபோதே 4 மத்திய தர வயதுடைய பெண்களும் அவர்களுடன் மாடர்ன் டிரெஸ்ஸில் ஒரு ஓங்கி உயர்ந்த உடல் தோற்றத்துடன் மிக அழகான பெண்ணும் பேசிக் கொண்டிருந்தார்கள். முதல் ரவுண்டு சுற்றிவிட்டு அவர்கள் அருகில் வரும்போது அந்த இளம் பெண்ணின் கையைப் பிடித்தபடியே அவரது அம்மா போன்ற தோற்றத்தில் இருந்தவர் கெஞ்சிக் கொண்டிருந்தார்.“சொன்னா கேளுடி... ச்சும்மா பத்தே பத்து நிமிஷம்.. பேசிட்டு வந்திரு.. மத்ததை நாங்க பேசிக்கிறோம்..” என்றார். ஏதோ ஒன்று என்று நினைத்து வாக்கிங்கை தொடர்ந்தேன். மறுபடியும் அடுத்த ரவுண்ட்டில் அவர்கள் அருகில் வரும்போது பூங்காவிற்குள் விளையாடிக் கொண்டிருந்த சில சின்னப் பையன்களை பூங்காவின் காவலர் வெளியில் விரட்டிக் கொண்டிருந்தார். இந்தக் களேபரத்தில் நடைபாதை முழுவதும் சிறுவர்களாக வந்து குவிய.. கொஞ்சம் நடை தடைபட்டது.

இந்த நேரத்தில் அந்த பெண்கள் கூட்டத்தில் இருந்து சப்தமாக சில வார்த்தைகள் என் காதில் விழுந்தன.. “எங்கயாவது இது மாதிரி நடக்குமா.. ஏம்மா உயிரை வாங்குற.. வீட்டுக்கு வரச் சொல்லு.. பார்க்குறேன்..” என்றார் அந்த இளம் பெண். அதற்கு இன்னொரு பெண்மணி, “ஐஸு.. அம்மா சொன்னா கேளும்மா.. அம்மா பாவம்ல்ல.. எத்தனை இடம்தான் பார்க்குறது..? இது நல்ல இடமா தெரியுது. உனக்குப் பிடிச்சா சட்டுன்னு பேசி முடிக்கலாம்..” என்றார்.

ஆஹா.. மேட்டர் இதுவோ என்று என் பத்திரிகை புத்தி தன் வேலையைக் காட்ட பின்பு அவர்கள் பக்கத்திலேயே உட்புற சாலையில் நடப்பது போல நடந்தேன். 

"யாராச்சும் இங்க வந்து பார்ப்பாங்களா..? இவன் இல்லைன்னா இன்னொருத்தன்.." என்றார் இளம் பெண். அவருடைய அம்மா கையை ஓங்கியபடியே, "அப்படியே பிய்ச்சிருவேன். உன்னை யாருடி இவ்ளோ ஹைட்டா வெயிட்டா வளரச் சொன்னது.. நான் எங்க போய் ஆளைத் தேடுறது..? ஏதோ அவங்களா பார்க்கலாம்னு தேடி வர்றாங்க. இதையும் வேணாம்கிறியா..?" என்று வெடித்தார்.

அவரைச் சமாதானப்படுத்திய இன்னொரு பெண்மணி, "ஐஸு.. இத பாரு.. அவர் நம்ம பேமிலி மாதிரியே ஸ்டேட்டஸ் மத்த்து எல்லாம் குறையே இல்லை. இது நல்ல சம்பந்தம். உன் ஹைட்டுக்கும், வெயிட்டுக்கும் பொருத்தமா இருக்கார். நாங்க பார்த்துட்டோம்..  அவாளோட அம்மா அப்பாகூட யு.எஸ்.ல அவங்க பொண்ணு வீட்ல ஆறு மாசம், இங்க ஆறு மாசம்னுதான் இருப்பாங்களாம்.. அப்புறம் என்னடி உனக்கு பிரச்சினை..? ஒரு நல்ல வாய்ப்பு வந்தா விடக் கூடாதுடி.. அம்மா சொன்னா கேளு.." என்று அன்பாக தொட்டுத் தடவியெல்லாம் ஐஸ் வைத்தே பேசினார்..

அனைவரையும் ஒரு முறை முறைத்து.. சினிமா நடிகை மாதிரியே மறுதலித்தார் அந்த இளம் பெண். “ஐயோ கொடுமை.. இதுக்குன்னு சொல்லியிருந்தா வந்திருக்கவே மாட்டேன்..” என்றார். "ஆமடி.. இப்படியே சொல்லிட்டு வீட்ல இரு.. நான் பைத்தியக்காரி மாதிரி ஊர் முழுக்க மாப்ளை தேடிக்கிட்டிருக்கேன்.." என்று சொல்லி முடிப்பதற்குள் அவருடைய வாயைப் பொத்திய இன்னொரு பெண்மணி.. "ச்சும்மா இரு. அதெல்லாம் அவ பேசிருவா.." என்று சேம் சைட் கோல் அடித்தார்.

ஐவரணி அமைதி காத்தது.. வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளை நிற ஆடி கார் வந்து ஆடி அசைந்து நின்றது. மிக ஜென்ட்டிலாக மாப்பிள்ளை இறங்கி உள்ளே வந்தார். கேட்டுக்கு மிக அருகிலேயே எதிர்த்தாற்போல் இவர்கள் இருந்தால் உடனேயே அடையாளம் கண்டு "ஹாய் ஆண்ட்டி.." என்று சொல்லியபடியே அருகில் வர.. அவரைப் பார்த்த்தும் இளம் பெண்ணின் முகம் சட்டென பிரகாசமாய் மாறியது.. பட்டென்று ஏதோ வெட்கத்துடன் திரும்பி நால்வரணியைப் பார்த்தார். மாப்ளை வாட்டசாட்டமா பொருத்தமாத்தான் இருந்தார். பணக்கார அடையாளம் உடையிலும், தோற்றத்திலும் தெளிவாக தெரிந்தது.

அதில் ஒரு வயதான பெண்மணி பொண்ணைக் காட்டி, "இதுதான் எங்க ஐஸு.." என்றார். "ஹாய்.." என்றார் மாப்ளை.. "ஹலோ.." என்று சொல்லி கை கொடுத்தார் பெண். "ஒரு வாக் போலாமா..?" என்று மாப்ளை கேட்க.. பெண் பதில் சொல்லாமல் நால்வரையும் பார்க்க.. "போம்மா.. ச்சும்மா பேசிட்டு வாங்க.." என்று வயதான பெண்மணி சொல்ல.. தயக்கத்துடன் ரவுண்ட்ஸை தொடங்கினார் பொண்ணு. நானும்தான்..!

ஆனாலும் இவ்ளோ மெதுவா நடக்கக் கூடாது.. என்னாலயே முடியல.. அதுனால நான் வேக, வேகமாக முன்னாடி நடந்து அவர்களையே இரண்டு முறை ரவுண்ட்டிங்கில் கடந்துவிட்டேன். அழைத்து வந்த பெண்மணிகள் அங்கேயே ஒரு ஓரமாக திண்டில்  அமர்ந்து இவர்களை பார்த்தபடியே குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாவம் அந்தப் பெண்ணின் அம்மா.. இவர்கள் அருகில் வரும்போது தனது பெண்ணின் முகத்தையே ஒரு ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் கடந்து போகும்போதும் கையில் வைத்திருந்த சூப்பைக்கூட குடிக்காமல் அவர்களைப் பார்த்தபடியே இருந்தார்.

பொண்ணுதான் பாவம்.. வியர்க்க விறுவிறுக்க நடைப் பயிற்சியை செய்தபடியே இருக்க.. மாப்ளைக்கு நடைப் பயிற்சியில் நிறைய எக்ஸ்பிரீயன்ஸ் இருக்கு போலிருக்கு. ஹாயாக ஆங்கிலத்தில் கடலை போட்டுக் கொண்டே நடந்தார்.. பொண்ணு, வியர்த்து கொட்டிய வியர்வையை துடைத்தபடியே ஒன்றிரண்டு வார்த்தைகளில் ஆங்கிலத்தில் பதில் சொல்லியபடியே வந்தார்.

4 ரவுண்டு முடிந்தவுடன் மிக உரிமையோடு மாப்பிள்ளை அவர்கள் அருகில் போய் 3 பேர் உட்கார முடிந்த அந்த திண்டில் 4-வது ஆளாக அவர்களுடன் அமர்ந்து ஏதோ பேச.. பொண்ணு அந்த மாப்பிள்ளையையும், இவர்களையும் மாறி மாறி பார்த்து வெட்கத்துடன் கழுத்து செயினை அப்படியும், இப்படியுமாக கடித்தபடியே இருக்க.. 

பட்டென்று எழுந்த மாப்பிள்ளை பொண்ணை பார்த்து ஏதோ சொல்லிவிட்டு முன்னால் நடந்து  வாசலை நோக்கிப் போக.. பொண்ணும் மெதுவாக இவர்களைப் பார்த்தபடியே நடக்க.. பொண்ணின் அம்மா, “போடி.. போ.. போடி..” என்று பின்னாலிருந்து சைகை செய்து விரட்டினார்.

பூங்காவுக்கு நேரெதிராக இருந்த டீஸண்ட்டான காபி ஷாப்பில் அமர்ந்து இருவரும் காபி குடித்தார்கள். மாப்பிள்ளை அருகில் உட்காரச் சொல்லியும் பொண்ணு நின்று கொண்டே கொஞ்சம் அவரிடமும், நிறைய நேரம் இவர்களைப் பார்த்துமாக ஏதோ பேசி முடித்தார்.

இவர்கள் கடையில் இருந்து இறங்கி வந்தவுடன், நான்கு பெண்மணிகளும் மெதுவாக எழுந்து வாசலுக்கு வந்தார்கள். மாப்ளை மெதுவாக அந்தப் பெண்ணின் அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு ஐவரிடமும் கை குலுக்கி "பை.." என்று சொல்லிவிட்டு தன் காரை நோக்கி நடந்தார். காரில் ஏறப் போகும்போது மறுபடியும் ஒரு முறை அவர்களைத் திரும்பிப் பார்த்து புன்னகைத்துவிட்டு அமர்ந்தார்.

பொண்ணு அவர் போவதையே பார்த்திருந்துவிட்டு, அவர் காரில் ஏறுவதையும் பார்த்துவிட்டு திரும்ப.. அவருடைய அம்மா, பொண்ணிடம் ஏதோ சொல்லி சீறித் தள்ளினார். மற்ற மூவரும் அவரைக் கட்டிப் பிடித்து கூல் செய்ய.. அப்போது தூரத்தில் இருந்து அவர்களருகே வந்து நின்ற இரண்டு பி.எம்.டபிள்யூ. கார்களில் ஏறி பறந்தார்கள் ஐவரும்..!

ஒரு பர்ஸ்ட் கிளாஸ் சினிமாவை பார்த்தது போலிருந்தது. ஒவ்வொரு அம்மாக்களும் மகளின் வாழ்க்கைக்காக எத்தனைதான் பிரயத்தனப்படுகிறார்கள்..? சாதாரண வீடாக இருந்தாலும் சரி.. பணக்கார வீடாக இருந்தாலும் சரி அவரவர் மனவோட்டம் நல்ல மாப்ளை சீக்கிரமாக அமைய வேண்டும் என்பதுதானோ..!?

எப்படியோ இந்த வரன் அந்த ஐஸுக்கு நல்லபடியாக அமைந்துவிட்டால் இந்தப் பூங்காவை கட்டிக் கொடுத்த நம்ம தாத்தாவுக்கு நிச்சயம் புண்ணியம் கிடைக்கும்..!  

அந்த ஐஸின் அம்மாவுக்காகவாவது இந்த வரன் நல்லபடியாக முடிய வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

2 comments:

வருண் said...

***ஆஹா.. மேட்டர் இதுவோ என்று என் பத்திரிகை புத்தி தன் வேலையைக் காட்ட பின்பு அவர்கள் பக்கத்திலேயே உட்புற சாலையில் நடப்பது போல நடந்தேன். ***

ஆக, துரத்தி துரத்தி அடுத்தவர் சொந்தப் பிரச்சினையை ஒட்டுக்கேட்டீராக்கும்?! இதெல்லாம் நல்லாவாயிருக்கு?!!! உங்களை எல்லா என்ன செய்யலாம்?

dunga maari said...

டைட்டில பாத்த உடனே ஒரு வழியா உங்களுக்கு தான் ஏதோ செட் ஆகுதாக்கும்ன்னு சந்தோஷமா படிக்க ஆரம்பிச்சா..... ஏண்ணே இப்படி!!!!
எப்பதான் அந்த முருகன் உங்களைக் கண் திறந்து பாக்கப்போறானாம்????