தரணி - சினிமா விமர்சனம்

02-02-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கனவுகளில் திளைத்து, அதனை நனைவாக்க முயன்று தோல்வி கண்டு நிஜ வாழ்க்கைக்கு திரும்பும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பதை மிக மிக யதார்த்தமாகவே சொல்லியிருக்கும் படம் இது.

ஆரி, குமரவேல், அஜய்கிருஷ்ணா மூவரும் நெருங்கிய நண்பர்கள். தினமும் இரவில் சந்தித்து தாக சாந்தியோடு நிறைவு செய்வது இவர்களது வழக்கம். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை.
குமரவேலுக்கு சினிமா ஆசை நிறைவேறாதது பிரச்சினை. ஆரிக்கு கந்து வட்டி பிரச்சினை. அஜய்கிருஷ்ணாவுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் வீட்டில் மரியாதை இல்லையே என்கிற நிலைமை..
ஒரு நாள்.. இவர்கள் அனைவரது பிரச்சினையும் தீவிரமாகி அவரவர் போக்கில் திசை திரும்புகிறார்கள். ஒருவன் என்னதான் உழைத்தாலும், படித்தாலும், சென்றாலும் தலையெழுத்து எதுவோ அதுவே நடக்கும் என்பார்கள். இவர்களுக்கும் அதுதான் நடக்கிறது.
ஆரியின் அப்பா கந்து வட்டிக்கு பணம் வாங்கி ஹோட்டல் பிஸினஸ் நடத்துகிறார். வட்டி கட்ட முடியாமல் தவிக்கிறது குடும்பம். ஒரு நாள் ஆரியின் அப்பாவை வந்து தூக்கிச் செல்கிறார்கள் வட்டிக்காரரான ‘மகாநதி’ சங்கரின் ஆட்கள்.
பதைபதைத்துப் போய் அங்கே ஓடும் ஆரி, உணர்ச்சிவசப்பட்டு அடியாட்களையும், மகாநதி சங்கரையும் நொங்கியெடுக்க.. சங்கர் உயிரிழக்கிறார். ஆனால் லோக்கல் எம்.எல்.ஏ.வின் தயவால் அந்த ஏரியாவில் அடுத்த தாதாவாகிறார் ஆரி.
குமரவேலுக்கு சினிமாவில் அடுத்த கமல்ஹாசனாக ஆக வேண்டும் என்கிற வெறி. ஆனால் நிஜத்தில் துண்டு துக்கடாவாக தலை காட்டுகின்ற சீனில்கூட நிற்க முடியாத நிலைமை.  பொறுத்து பொறுத்து பார்த்து சொந்த ஊருக்கே திரும்புகிறார்.
அவரது குடும்பமே கூத்து கட்டிய குடும்பம். அந்த வாரிசுரிமையில் கூத்துத் தொழில் செய்யும் தாய் மாமனிடம் சென்று நானும் நடிக்க வருகிறேன் என்று சொல்லி அந்த ஜோதியில் ஐக்கியமாகிறார்.
அஜய்கிருஷ்ணா ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து அங்கே நடக்கும் மூளைச் சலவையில் மனதை பறிகொடுத்து ரோடு, ரோடாக அலைந்து திரிந்து பார்க்கிறார். அந்த வேலை அவருக்கு செட்டாகவில்லை. அவரது நீண்ட நாள் காதலிகூட இவரது வேலை பிரச்சினையால் இவரைவிட்டு பிரிந்து போக மனம் நொந்து போகிறார்.
எல்லாம் இழந்த நிலையில் குடிகாரனாக திரியும் நிலையில் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழிலில் ஒரு ஏமாற்று நண்பனால் இழுத்துவிடப்பட.. அந்த ஏமாற்றுக்கார நண்பனையே மிஞ்சும் அளவுக்கு கோடீஸ்வரனாக உருமாகிறான் அஜய்.
இப்படி அவரவர் வாழ்க்கையில் ஏதோ ஒரு இலக்கில்லாத பயணத்தை மேற்கொள்ளும் இவர்களது ஓட்டம் கடைசியில் என்னாகிறது என்பதுதான் படம்.
மூன்று பேருக்குமே சம அளவுக்கு காட்சிகளைக் கொடுத்து யாரையும் நிறை, குறை பார்க்கவிடாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் குகன் சம்பந்தம். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றதில்லையாம். ஆச்சரியமாக இருக்கிறது. சில காட்சிகளை படமாக்கியிருக்கும்விதத்தைப் பார்த்தால் இன்னும் ஆச்சரியம் கூடுகிறது.
ஆரி சண்டையிடும் காட்சியில் அது பைட் சீன் என்று சொல்ல முடியாத அளவுக்கு உணர்ச்சிகளின் பொங்கலாக இருக்கிறது.. அந்த அளவுக்கு தனது சிறப்பான இயக்கத்தின் மூலம் ஒரு சண்டை காட்சியின் கலரையே மாற்றியிருக்கிறார்.
எம்.எல்.ஏ.வின் மூலமாக அவரது வாழ்க்கை மாறுவதும்.. தாதா வாழ்க்கையினால் அவர் செய்யும் தவறுகள்.. கொலைகள் என்று தொடர்ந்து கடைசியாக தாசில்தாரை கொலை செய்யும் நேரத்தில் அவர் கண் முன்னே தெரியும் அவரது தந்தையின் முகமும், அதனால் அவர் எடுக்கும் முடிவும் எதிர்பாராத திருப்பம்.. பாராட்டுக்குரிய திரைக்கதை.
ஆரி மிக அழகாக நடித்திருக்கிறார். நெடுஞ்சாலையில் ஒரு அழுத்தமான கேரக்டர். இதில் அதைவிடவும் அழுத்தமான கேரக்டர். முதல் காட்சியில் போனில் பேசுவதில் துவங்கும் அந்த நீண்ட நெடிய காட்சியின் இறுதியில் அத்தனை நிமிட கோபத்தையும் வைத்து செல்போனை தூக்கி போட்டு உடைத்தெறிந்து கத்தும் காட்சியிலேயே இந்தப் படம் வித்தியாசமானதுதான் என்பதை உணர வைத்திருக்கிறார் ஆரி.
அப்பாவிடம் பொறுமை.. கந்துவட்டிக்காரனிடம் கெஞ்சல்.. நண்பர்களிடத்தில் கிண்டல்.. நம்பிக்கையுடன் காத்திருப்பது.. கடைசியாக அடித்து துவம்சம் செய்வது என்று இயல்பான இளைஞனின் கேரக்டரை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.. பாராட்டுக்கள்..
குமரவேல்.. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேரக்டருக்கு சாலப் பொருத்தம். “உனக்கு என்னடா தெரியும் கூத்தை பத்தி..?” என்று தாய் மாமன் கேட்டவுடன் பொங்கியெழுந்து ‘இராவண வதம்’ நாடகத்தின் இராவணேஷ்வரானாக அவதாரம் எடுத்து அவர் ஆடுகின்ற அந்த ஒற்றையாட்டம் அபாரம்.. இது மாதிரியான கூத்துக் கலை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்கூட தெரிந்து கொள்ளும்வகையில் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.. இந்தக் காட்சியில் பம்பரமாக சுழன்று பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் நமது பாராட்டுக்கள்.
படத்தின் மிகப் பெரிய இயல்பான நகைச்சுவை காட்சியே குமரவேல், பிரஜின், இவரது அப்பா சம்பந்தப்பட்ட காட்சிதான். “இந்த டயானா இளவரசியின் மனம் கவர்ந்த அந்த சார்லஸ் யாராம்?” என்று மாமன் கேட்க, “நான்தான்..” என்று குமரவேல் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லும் காட்சியை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. வெல்டன் டைரக்டர்..
புரசை கண்ணப்ப தம்பிரானின் மகனான சம்பந்தம் இதில் மாமனாக நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படம். பார்த்தால் தெரியாது. ஏனெனில் இவர் சினிமா நடிகர்களையும்விட மிகப் பெரிய நடிகர். தினமும் மக்கள் முன்னிலையில் கூத்து என்ற பெயரில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்தான்.. மிக இயல்பான நடிப்பு. மகளுக்கும், குமரவேலுக்கும் திருமணத்தை முடித்துவிட்டு கோவில் படிக்கட்டில் அமர்ந்து இயல்பாக தனது உறவினரிடம் பேசிவிட்டு பெருமூச்சுவிடும்போது ஒரு நல்ல நிம்மதியான தகப்பனை காண முடிகிறது. திரையுலகம் இவரை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டால் நல்லது.
நாயகி பிரஜினுக்கு பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் அப்பாவிடம் அடி வாங்கிய அடுத்த நிமிடத்தில் எதுவுமே தெரியாததுபோல  நெயில் பாலீஷ் போட்டபடியே குமரவேலிடம் பேசி தனது காதலை தெரிவிக்கும் காட்சியில் நல்ல நடிப்பு.
இன்னொரு பக்கம் அஜய் கிருஷ்ணா.. மேஜிக்கல் வார்த்தைகளை நம்பி மார்க்கெட்டிங் வேலையை ஏற்றுக் கொண்டு அல்லல்பட்டு.. அப்பாவிடம் வழக்கமான ‘தண்டச்சோறு’ பேச்சை வாங்கிக் கொண்டு விரக்தியில் திரிகிறார்.
காதலித்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்த நிலையிலும், தன்னை ஒப்பிட்டுப் பார்த்து கோபத்தில் கொப்பளிக்கும் காட்சியெல்லாம் செம சூடு.. அதிலும் அந்தக் காதலி ‘அண்ணன்’ என்று சொல்லி பலர் முன்பாக அழைத்துவிட்டு, நெருக்கத்தில் ‘நீ ஏன் சரியான வேலையைத் தேடிக்கலை’ என்று சொல்லி அழுவதெல்லாம் இயல்பு.
இவருடைய கதையில்தான் இன்றைய இந்தியாவின் நிலைமை தெளிவாக புரிகிறது. வசதி படைத்தவன்.. பணக்காரனால் சட்டத்தை வளைக்கவும் முடியும்.. உடைக்கவும் முடியும் என்பதை இந்த அஜய் கிருஷ்ணா பணக்காரனானதும் செய்து காட்டுகிறார். முந்தைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்காமல் வசதிகளில் மூழ்கித் திளைக்கும் இயல்பான சராசரியான ஒரு இந்தியனை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் அஜய் கிருஷ்ணா.
என்சோன் என்பவர் இசை. நாடகக் கலை பற்றிய பாடல்களில் மட்டுமே தெரிகிறார்.. மற்றவற்றில் வழக்கம்போலத்தான். ஒளிப்பதிவு திரைக்கதையின் மூடுக்கேற்றபடி தெரிகிறது. இறுதிக் காட்சியில் நீர்க்காணல் பின்னணியில், ஆற்று மணலுக்குள்.. தாசில்தாருடன் மோதும் ஆரி, கடைசி நொடியில் தெளிவடையும் காட்சியை படமாக்கியிருக்கும்விதத்தில் ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஷொட்டு.. இதுவெல்லாவற்றையும் கடந்து சிறப்பான இயக்கத்திற்காக இயக்குநருக்கு திருஷ்டி சுத்திப் போட வேண்டும்.
மிகக் குறைந்த பட்ஜெட்டில்.. சொல்ல வந்த விஷயத்தை.. சினிமாட்டிக்காக இல்லாமல் இயல்புத் தன்மை மாறாமல் சொல்லியிருக்கும் அழகுக்காக இந்தப் படத்தை அவசியம் தவறாமல் பார்க்கவும்..!

0 comments: