ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு - நீதிபதி அளித்துள்ள தீர்பபின் சில பகுதிகள்..!

02-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதா சட்ட விரோதமாக தனது முதல்வர் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை சேர்த்துள்ளார் என்பது சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி நீதிபதியால் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

நீதிபதியின் தீர்ப்பு 1136 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. அதில் ஜெயலலிதாவும் மற்றவர்களும் வழங்கப்பட்டுள்ள தண்டனை எதற்காக என்பதை நீதிபதி தனி கதைபோல தனது தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்.

அது இங்கே :
ஜெயலலிதா தனது முதல்-அமைச்சர் பதவி காலத்தை (1991-1996) தொடங்கும்போது, அவரது சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 965-ஆக இருந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில், அவர் பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் சொத்துகளும் அடங்கும்.

அவரது பதவி காலத்தில், அவரது சட்டப்பூர்வ வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ஆகும். ஆனால், பதவி காலத்தின் முடிவில், அவரது சொத்து மதிப்பு ரூ.53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மதிப்பு, தற்போதைய சந்தை மதிப்பு அல்ல. இந்த வழக்கில், சொத்துகளின் மதிப்புகள், 1991-1996-ம் ஆண்டு காலகட்டத்தில், குற்றவாளிகள் என்ன விலைக்கு வாங்கினார்களோ, அதே மதிப்புக்குத்தான் கணக்கிடப்பட்டுள்ளன.

அந்த சமயத்தில், 900 ஏக்கர் தேயிலை தோட்டத்தை ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு அவர்களால் வாங்க முடிந்தது. ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்க முடிந்தது. இந்த விலையில், ரூ.53 கோடிக்கு ஒட்டு மொத்த கிராமத்தையே வாங்கி விடலாம். இந்த பின்னணியில்தான், அவர்கள் வாங்கிய சொத்துகளின் வீரியத்தை பார்க்க வேண்டும்.

குற்றவாளிகளுக்கு தண்டனை அளவை தீர்மானிக்கும்போது, அவர்கள் எந்த முறையில் சொத்து வாங்கினார்கள் என்று பார்க்க வேண்டி உள்ளது.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தங்கள் பெயரிலும், தாங்கள் தொடங்கிய நிறுவனங்களின் பெயர்களிலும் சொத்துகளின் ஒரு பகுதியை வைத்துக்கொண்டு, ஊழல் புரிய தூண்டுகோலாக இருந்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா குவித்த சட்டவிரோத சொத்துகளில் முதலீடு செய்வற்காகவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என்ற முடிவுக்கு நான் வருகிறேன். 4 குற்றவாளிகளில் யாருமே இந்த நிறுவனங்களின் முதலீட்டுக்கு எந்த பங்கும் போடவில்லை. அந்நிறுவனங்களின் பெயரில் எந்த வர்த்தகமும் செய்யவில்லை.

அந்த நிறுவனங்கள் செய்த ஒரே பணி, வங்கி கணக்கு தொடங்குவதும், பிற வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றுவதும், ஜெயலலிதா சார்பில் சொத்துகளை வாங்க முதலீடு செய்வதுமே ஆகும்.

செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்களைக்கூட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வாங்கி, அவற்றின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, ஜெயலலிதா கொடுத்த பணத்தை வைத்து, அந்த நிறுவனங்களின் பெயரில் பெரிய சொத்துகளை வாங்கி உள்ளனர்.

இந்த சொத்துகளுக்கான நிதி ஆதாரம் முழுவதும் ஜெயலலிதாவால் தரப்பட்டது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெயலலிதாவால் கணக்கு காட்ட முடியவில்லை. எனவே, 4 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது.

ஊழல் செய்த அரசு ஊழியருக்கு ஓராண்டுக்கு குறையாமலும், 7 ஆண்டுகளுக்கு மிகாமலும் ஜெயில் தண்டனையும், அபராதமும் விதிக்க ஊழல் தடுப்பு சட்டத்தின் 13(2)-வது பிரிவு வகை செய்கிறது. அதை பயன்படுத்த வேண்டி உள்ளது.

தமிழக அரசின் மிக உயர்ந்த பதவியில் ஜெயலலிதா இருந்து கொண்டு இதில் ஈடுபட்டதுதான், குற்றத்தின் தன்மையை அதிகரிக்கிறது. ‘மன்னன் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழி’ என்று ஒரு பழமொழி உள்ளது.

‘உயர் பதவியில் இருப்போரின் தவறுகள் மீது கனிவோ, இரக்கமோ காட்டினால், அது ஒட்டுமொத்த சமூக வாழ்க்கைக்கும் கேடாக முடியும்’ என்று கர்நாடக ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் கனிவுக்கோ, அனுதாபத்துக்கோ இடம் இல்லை.

இந்த வழக்கு, தனது அரசியல் எதிரிகளால் புனையப்பட்டது என்றும், 18 ஆண்டுகள் கடந்து விட்டது என்றும், இந்த காலகட்டத்தில் பதற்றமும், மனவேதனையும் அடைந்திருப்பதாகவும் குற்றவாளிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடரப்பட்ட பிறகு, ஜெயலலிதா 11 ஆண்டுகளாக முதல்-அமைச்சராக இருந்து வருவதாகவும், இப்போது அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும், உடல்நலக்குறைவு அடிப்படையிலும் கருணை காட்டுமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் இந்த காரணங்கள் எல்லாம், கருணை காட்டுவதற்கு ஏற்றவை அல்ல என்பது எனது கருத்து. இந்த வழக்கு 18 ஆண்டுகள் நிலுவையில் இருந்ததில் சந்தேகமே இல்லை. இந்த தாமதத்துக்கு யார் காரணம் என்று இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், நீதியை குழி தோண்டி புதைக்கும் முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால்தான், இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு வழக்குக்கு தடை இருந்ததிலும் சந்தேகமே இல்லை. ஆனால், அதன் பிறகும் குற்றவாளிகள் சட்ட நடைமுறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கணிசமான நேரத்தை வீணடித்தனர்.

குற்றவாளிகள், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நேரத்தையும், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நேரத்தையும் தவிர, பிற நாட்களில் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே, வழக்கு நிலுவையில் இருந்ததால், தாங்கள் மனவேதனை அடைந்ததாக அவர்கள் கூறுவதை ஏற்க முடியாது. இந்த காரணங்கள், தண்டனையின் அளவை தீர்மானிப்பதற்கு ஏற்கத்தக்கவை அல்ல.

குற்றத்தின் தீவிரத்தன்மை, சொத்துகளின் அளவு, அவை குவிக்கப்பட்ட முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையின் அளவை தீர்மானிக்க முடியும். அப்படி பார்க்கும்போது, இது கடுமையான தண்டனை விதிக்கத்தக்கது. எனவே, இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையில்(7 ஆண்டு), பாதிக்கு மேல் விதித்தால்தான், நீதி நிலைநாட்டப்படும்.

ஜெயலலிதாவின் வருமானத்துக்கு பொருந்தாத வகையில், குற்றவாளிகள் 4 பேரும் சொத்துகளை குவிக்கும் நோக்கத்தில் குற்றச் சதியில் ஈடுபட்டு, ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு சொத்து சேர்த்திருப்பதையும் அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததன் மூலம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றம் புரிய தூண்டுகோலாக இருந்து இருப்பதையும் அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

எனவே, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றச் சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, ஜெயலலிதாவுக்கு 6 மாத கால சாதாரண ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். 

குற்றச் சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த சிறைவாச காலம், தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும்.

குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி மற்றும் ரொக்க கையிருப்பை அபராத தொகைக்காக பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

அதன் பிறகும் அபராத தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவோ விற்க வேண்டும். மீதி நகைகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும்.

ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். 

கோடநாட்டில் உள்ள 900 ஏக்கர் நிலம், ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதர விவசாய நிலங்கள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு அந்த நிலம் அமைந்துள்ள கிராமம் முழுவதையுமே ரூ.53½ கோடிக்கு வாங்கி விடலாம். 

இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பை நாமே கற்பனை செய்து கொள்ளலாம். 

வசூலிக்கப்படும் அபராத தொகையில், விசாரணை செலவுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும்.

குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது.

அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம்.

கடுமையான தண்டனையின் மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை.

உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும்.

இவ்வாறு நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறி உள்ளார். 

5 comments:

kari kalan said...

நீதியரசர் குன்ஹா, தன் தீர்ப்பிலேயே எதற்காக இத்தனை ஆண்டு தண்டனை மற்றும் அபராதம் பற்றி மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்.

வருண் said...

அரசியல்வாதிகள் பொதுவாக மாட்டிக்காமல் ஏமாற்றுவதில் கை தேர்ந்தவர்கள். ஜெயா-சசி கோஷ்டி இப்படி கவனக்குறைவாக இருந்து இருக்காங்க!

லஞ்சம், ஊழல், கல்யாணத்துக்கு முன்னாலே உடலுறவு வச்சுக்கிறது (அப்புறம் இன்னொருத்தனை கட்டிக்கிறது), மது உடல்நலத்துக்கு கேடு" போன்றவைகள் எல்லாம் தப்புனு பேசினால், நம்மள காமெடியன்கள் போல பார்க்கிறாணுக.
அப்படி ஒரு மனநிலையில்தான் இன்றைய மக்கள் இருக்காங்க.

சினிமாக்காரன் ஈனத்தமிழன் சத்யராஜ், பொரபூ அவங்க வகையறா, சிவகுமார் வகையறா, விக்ரம், எஸ் எ சந்திர சேகரா எல்லாம் படு கீழ்த்தரமானவர்கள்னு காட்டிட்டாணுக!

சோ ராமசாமியும் இதையெல்லாம் (அதான் இந்த ஜட்ஜ்மெண்ட்) வாசிப்பான் இல்லை? வாசிச்சுப்புட்டு என்ன சொல்லுவான்?
கீதையில் இதெல்லாம் சரினு சொல்லியிருக்குணு சொன்னாலும் சொல்லுவான்! அரசியல் வாதியைவிட 100 மடங்கு கேவலமான்வன் இந்த "லோ க்ளாஸ்" பார்ப்பான்! செருப்பால அடிக்க வேணாம் இவனையெல்லாம்? Cho is an honest journalist or "political PIMP"?

உடனே நீ யோக்கியமா?னு ஆரம்பிக்காதீங்கப்பா! I am not involved in any corruption as soon as I got out of your great India!

கும்மாச்சி said...

ஊழலுக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள் தம்மை அறிந்தோ அறியாமலோ அடுத்த தலைமுறையை தப்பு செய்யத்தூண்டுகிறார்கள்.
இதெல்லாம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.

Soundararajan G said...

please change the section header கடைசியான பதிவுகள். you can rephrase it as "Sameebatthiya பதிவுகள்".

குறும்பன் said...

மற்ற வழக்குகள் போல் அல்லாமல் இவ்வழக்கு வலுவாக உள்ளதால் ஆத்தாவுக்கு இவ்வழக்கில் தண்டனை கிடைக்கும் என்று ஆரம்பம் முதல் சொன்னவர் நீங்கள்.

ஆச்சாரியாவை என்ன பாடுபடுத்தி இவ்வழக்கிலிருந்து ஓட விட்டார்கள், அது போல் அல்லது வேறு பல முறைகளை பயன்படுத்தி எப்படியும் தப்பிவிடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் தண்டனை கிடைத்து விட்டது.