ஜெயலலிதாவிற்கு தண்டனை போதாது - 7 வருடங்கள் கொடுத்திருக்க வேண்டும்..!

27-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதன்முதலாக ஒரு திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமரர் எம்.ஜி.ஆர்.தான் அந்தச் சாதனையைச் செய்தவர்.

இப்போது அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒரு நடிகைதான் முதல்வராகி, ஊழல் குற்றச்சாட்டினால் நீதிமன்றத்தினால் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஜெயிலுக்குள் போன அசிங்கமும் நடந்திருக்கிறது..! இதனால் கேவலப்பட்டு போயிருப்பது எம்.ஜி.ஆர். துவக்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்..!
அமரர் எம்.ஜி.ஆர். தன் அரசியல் வாழ்க்கையில் செய்த ஒரே தவறு ஜெயலலிதாவை கட்சியில் சேர்த்ததுதான். இந்த உண்மையை அவரும் தனது கடைசி காலத்தில் உணர்ந்துதான் இருந்தார். ஆனால் அதற்குள் நிலைமை அவருடைய கையை மீறியும் போய்விட்டது.  இதற்கு மேல் நடந்ததெல்லாம் காலத்தின் கொடூரம்..!

1991-1996-ம் ஆண்டுவரையிலும் ஒரு விபத்தின் காரணமாய் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. தனக்கு இரண்டாண்டுகளாக வருமானமே இல்லை என்று வருமானவரித் துறையினரிடம் மனு தாக்கல் செய்தார். அந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் முடிவில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றதாக சொன்னவர் இந்த வழக்கில் சிக்கி 66 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்களை வாரிக் குவித்திருந்ததை கேள்விப்பட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

ஏதோ சுப்பிரமணிய சாமியின் புண்ணியத்தால்.. ஜெயலலிதா-சுவாமி இருவரின் ஈகோத்தனத்தால் தமிழ்நாட்டுக்கு விளைந்த ஒரேயொரு நன்மை இந்த வழக்கு மட்டுமே.. 

2001-ம் ஆண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவின் முறைகேடான செயல்பாட்டினால் இந்த வழக்கு புதைகுழிக்கு போய்க் கொண்டிருப்பதை அறிந்த பின்புதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இந்த வழக்கை பெங்களூருக்கு மாற்றச் செய்தார். இந்த நேரத்தில் பேராசிரியருக்கு நமது நன்றிகள்..! 

இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யவும், வழக்கை நடத்தவிடாமலும்.. இழுத்தடித்துப் பார்த்த ஜெயலலிதாவால்தான், இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நீண்டு வந்தது.

இந்த்த் தீர்ப்பினால் அவரது அரசியல் எதிரிகள் என்று சொல்லப்படும் யாருமே மகிழப் போவதில்லை. "எப்படி இருந்த கட்சியை இப்படி பேசும்படி செய்துவிட்டார்களே..." என்று அவர்களுக்கே சற்று விசனம்தான்.. “முதன்முதலாக ஒரு முதலமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற மாநிலம் எது..?” என்று வரும் காலங்களில் இந்தியாவில் நடக்கப் போகும் அனைத்துவகை போட்டி தேர்வுகளில் கேள்வி கேட்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் பெயரும் நாறிவிட்டதில் வேறு சிலருக்கு வருத்தம்.. 

நிச்சயமாக இந்த வழக்கின் முடிவு குறித்து சந்தோஷப்படுபவர்கள் ஜெயல்லிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும்.. அவரால் பாதிக்கப்பட்டவர்களும்தான்.. 

இந்தத் தீர்ப்பே மென்மையானது.. எப்போதும் அரசியல்வியாதிகளாலேயே அரசியல் சட்டம் திருத்தப்படுவதால் அவர்களுக்கேற்றாற்போலவே இந்த ஊழல் தடுப்புச் சட்டத்தையும் திருத்தி வைத்திருக்கிறார்கள்.. 300 ரூபாய் பறித்த வழக்கிற்கே இப்போதெல்லாம் 4 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படுகிறது. காரணம் கேட்டால், “அப்போதுதான் அவன் பெரிய குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டான்...” என்பார்கள். ஆனால் இந்த 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பிற்கும் அதே நான்காண்டுகள்தானா..?

அதிலும் இவர்களுக்கு ஒரு விதிவிலக்காம்.. அரசியல்வியாதிகளுக்குக் கிடைக்கும் தண்டனைகள் இரண்டாண்டுகளுக்குள் இருந்தால் கோர்ட்டில் விலக்குப் பெற்று அரசியலில் நீடிக்கலாம்.. பதவியில் இருக்கலாம்.. தண்டனை காலம் முடிந்தவுடனேயே மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதெல்லாம் அரசியல்வியாதிகள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாங்களே போட்டுக் கொண்ட விதிமுறைகள்தான்..!

இந்த நாட்டை பிடித்த மிகப் பெரிய சனியனே இப்போதைக்கு ஊழல்தான்.. மதவாதமெல்லாம் இதற்கு பின்புதான்.. இந்த ஊழல் விவகாரத்தில்தான் மதம், ஜாதியையெல்லாம் கடந்து அனைத்து அயோக்கியர்களும் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

'ஒரு நாள் சிறை தண்டனை பெற்றால்கூட.. ஒரு ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சேர்த்திருந்தால்கூட அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடவே முடியாது' என்று நியாயமான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும்.. 

'ஒரு லட்சம் ரூபாய்க்குள் ஊழல் செய்தால் பத்தாண்டு கால தண்டனை'யும், 'அதற்கும் மேலே என்றால் ஆயுள் தண்டனை' என்று அமல்படுத்தினால்தான், இந்த நாட்டில் கொஞ்சமாவது அரசியல்வியாதிகளும், அதிகார வர்க்கமும் அடங்குவார்கள்.. இப்படி ஆள், ஆளுக்கு ஒரு கோஷ்டி அரசியல் நடத்திக் கொண்டு இவர்களுக்காகவே சட்டத்தை வளைத்துக் கொண்டு அவ்வப்போது தங்களுடைய சுய லாபத்திற்காக சட்டத் திருத்தங்களை செய்வதெல்லாம் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிதான்.

ஜெயலலிதாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தத் தண்டனை நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் தண்டனையை நான் கூடுதலாக எதிர்பார்த்தேன். குறைவு என்பதுதான் எனது கருத்து. இந்த ஊழல் குற்றச்சாட்டில் அதிகபட்ச தண்டனையான 7 வருடங்களையே கொடுத்திருக்கலாம். 100 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்காவிட்டால் 1 வருடம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் பேத்தலான தீர்ப்பு.. 100 கோடி பெரிசா.. ஒரு வருஷம் பெரிசான்னு கேட்டா.. “100 கோடிதான்” என்பார்கள் அரசியல்வியாதிகள். "இந்த ஒரு வருஷத்தையும் ஆஸ்பத்திரி பெட்லேயே ஏ.ஸி. ரூம்ல படுத்து கழிச்சிட்டா போவுது.. ஆனா அந்த 100 கோடியை எப்படி திரும்ப வந்து சம்பாதிக்க முடியும்..?" இப்படி இவர்கள் யோசிக்க மாட்டார்களா..? 1995-ல் சசிகலா அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டபோது, கோமாவில் இருப்பது போல டிராமா போட்டு நடிக்கலையா..? 

பரவாயில்லை.. இந்த அளவுக்கு இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, துணிச்சலுடன் தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அவர்களுக்கு எனது நன்றி. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.. 

ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சென்னைக்கு வந்தாலும் தினமும் தனது அடிமையான பினாமி முதலமைச்சருக்கு நேரடி உத்தரவு மட்டுமே இட முடியும்.. ஆட்சியை மறைமுகமாக நடத்தலாம். ஆனால் வெளிச்சத்திற்கு வர முடியாது. 

2016-க்குள்ளாக கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தனது வழக்கை முடித்து நிரபராதி என்று வந்தால்தான் அடுத்த்த் தேர்தல் பிரச்சாரத்திற்கே வர முடியும். இல்லையெனில் எப்போது உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி... அதன் பிறகு இவர் ஜெயிலுக்குள் போய் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வந்து வீட்டில் இருந்தபடியே கட்சியின் மறைமுகத் தலைவராகச் செயல்பட்டு அடுத்த ஆறு ஆண்டு கால 'வனவாச'த்தைக் கழித்துவிட்டு அவர் அரசியலுக்கு திரும்பி வருவதற்குள் இங்கே என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்..?

இந்த வழக்கில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்தமைக்கு  மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா தலைமையிலான கட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள். ஆனால் மைக்கேல் டி குன்ஹா அப்படிப்பட்டவரல்ல என்றுதான் கர்நாடக மாநில மீடியாக்களும் சொல்கின்றன. இந்த விஷயத்தில் பா.ஜ.க., ஜெயலலிதாவுக்கு உதவவில்லை என்றாலும், இனிமேல் நிச்சயம் உதவி செய்யத்தான் போகிறது.. 

தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய திராவிட கட்சிகளை ஒழித்துக் கட்டினால்தான் தேசிய கட்சிகள் தலையெடுக்க முடியும் என்று காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சியின் முக்கியத் தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது என்பது உண்மையாகவே இருக்கலாம். 

இதனால்தான் 2-ஜி வழக்கை அம்பலப்படுத்தி கூட்டணி கட்சி.. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் கட்சி என்றுகூட பாராமல் தன் தலையில் தானே மண்ணையள்ளி போட்டுக் கொண்டது காங்கிரஸ்.. அது நினைத்தது போலவே தமிழகத்தில் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து விலக்கியதில் பெரும் பங்கு 2-ஜிக்கே உண்டு. இப்போது பா.ஜ.க.வின் முறை..

முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ் என்று முந்தைய நண்பர்களுடன் இப்போது தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் போய்விட.. அவரால் தன்னுடைய ஈகோத்தனத்தைவிட்டுக் கொடுக்காமல் பேரம் பேச முடியவில்லை.. 

தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட அன்றைக்கு தன்னை சந்தித்த மத்திய சட்ட அமைச்சரிடம் என்ன பேசினாரோ தெரியாது.. ஆனால் அதற்கான சாதகமான விளைவுகள் 'நமோ நாராயணனிடம்' இருந்து வராததால் தூத்துக்குடி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவுடன் எடுத்த எடுப்பிலேயே பா.ஜ.க.வை விளாசித் தள்ளினார் ஜெயலலிதா.

இன்றைக்கு நமது 'நமோ நாராயணன்' அமெரிக்கா சென்றிருக்கும்வேளையில் ஜெயல்லிதா ஜெயிலுக்குள் குடி புகுந்திருக்கிறார். காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஜெயலலிதா எதிர்பார்த்ததெல்லாம் இனிமேல் கிடைக்குமா என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும்,  இனி வரும் காலங்களில் அவர் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. இந்த இரு கட்சிகளுடன் வேண்டாவெறுப்பாக கூட்டணி வைக்க வேண்டி வரும் என்றே நம்புகிறேன்..! இதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள்.. 

திராவிடக் கட்சிகளை விரட்டிவிட்டால் ஆட்சியைப் பிடித்தவிடலாம் என்று காவிகளும், காங்கிரஸும் திட்டம் போட்டாலும் ஜெயலலிதாவும், கருணாநிதியும், ஸ்டாலினும், வைகோவும் உள்ளவரையில் அது நடக்காது.. கூட்டணியில் இரண்டாமிடம் மட்டுமே கிடைக்க சாத்தியங்கள் உண்டு. 

எப்படியிருந்தாலும் எந்தக் காலத்திலும் எனக்கு யாருமே தேவையில்லை என்று சொன்ன, நினைத்த ஜெயலலிதா இப்போது இந்த இரு தேசியக் கட்சிகளில் ஏதாவது ஒன்றை காக்கா பிடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவருடைய வலையில் எந்தக் காக்கா விழும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

20 comments:

வருண் said...

தல, எட்டு வருடம் என்ன கணக்கு???
ரெண்டால பெருக்கிட்டீங்களாக்கும்! :)

viyasan said...

hmmm... அப்படியானால் ஐயாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எத்தனை வருடங்கள் கொடுக்க வேண்டும்? :-)

bandhu said...

எதற்கு அவசரம் அவசரமாக உங்கள் கருத்துக்களை கொட்டுகிறீர்கள்? யாராவது ஏதாவது சொன்னார்களா? ஒரு விதமான அமைதி இருப்பது போல இருக்கிறது. கொஞ்சம் அடக்கி வாசிங்களேன்.

துளசி கோபால் said...

இதுக்குப் பின்னால் பெரிய அரசியல் சூழ்ச்சி இருப்பது உண்மையாகவே உங்களுக்குப் புரியலையா சரவணன்?

தசரா விடுமுறை இருக்கும் காலமாப் பார்த்துத் தீர்ப்பு சொல்லவேண்டிய அவசியம் அண்ட் அவசரம் எதுக்கு?

18 வருசம் காத்திருந்தவங்க, இன்னுமொரு 18 நாள் காத்திருக்கமுடியலையாமா?

என்னவோ போங்க:(

அதுசரி. இன்னொரு கூட்டத்துக்கு எப்போ ஜெயில் வாசம் கிடைக்கும்?

அங்கே கோடிகளும் கேடிகளும் எண்ணிக்கையில் அதிகமாச்சேப்பா!

ஜோதிஜி திருப்பூர் said...

டீச்சர் உங்கள் விமர்சனம் அதிக ஆச்சரியத்தைத் தந்தது.

சரவணன் தினந்தந்தி போல எளிமையாக எழுதி புரிய வைப்பவர். நேற்று முழுக்க வீட்டில் ஓய்வில் இருந்த எனக்கு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் பரிட்சை விடுமுறையில் இருக்கும் மகள்கள் தாங்கள் பார்க்க விரும்பும் நிகழ்ச்சிகளை புறந்தள்ளி விட்டு செய்திகளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். முழுக்க தூக்கத்தில் இருந்த என்னிடம் இடையிடையே அப்டேட் வேறு. தீர்ப்பு தள்ளி வைத்த செய்தியைக் கேட்டதும் என்னப்பா இப்படி நீதிபதி சப்பென்று போயிடுச்சே என்றார்கள். மறுபடியும் நீதிபதி தீர்ப்பைச் சொன்னதும் தான் அடுத்த நிகழ்ச்சிக்கு தாவினார்கள். மகள் நீங்க சொன்ன மாதிரியே தொடர்ச்சியாக விடுமுறை வருகின்றதே என்றார். காரணம் வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் 7ந் தேதி என்ற கவலையில் யோசித்துக் கொண்டிருந்தேன். நீங்களும் அதையே தான் எழுதியிருக்கீங்க. ஆனால் பொதுவாக நேற்றும் இன்றும் நான் பார்த்த இணையம் மொத்தமும் சொல்லும் ஒரே வரி செய்தி என்னவென்றால் ஜெ பெற்ற சிறைத்தண்டனையை விட எவரும் கலைஞரை யோக்கியர் என்று வாய் தவறிக் கூட சொல்லத் தயாராக இல்லை. பந்து சொன்ன மாதிரி மொத்தமாக ஒருபேரமைதி நிலவுகின்றது.

பார்ப்போம். மனம் சொல்வதை புத்தி கேட்காத வாழ்க்கை வாழ்ந்தவருக்கு இனியாவது ஞானம் கிடைக்க அவர் வணங்கும் தெய்வங்களும் செய்த யாகங்களும் தரட்டும்.

டாட்.

Asokaraj Anandaraj said...

பல லக்ஷம் கோடிகளை அடித்தவனெல்லாம் வெளியில் இருக்கும் போது இது கொஞ்சம் மன உறுத்தலகத்தான் இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு கோடி மக்களின் நம்பிக்கையை தகர்த்த யாராயிருந்தாலும் தண்டனையை அனுபவிக்க வேண்டியது அவசியம்தான் என்பதுதான் உண்மை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//முதன்முதலாக ஒரு திரைப்பட நடிகர் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமர்ர் எம்.ஜி.ஆர்.தான் அந்தச் சாதனையைச் செய்தவர்.
//

அ.தி,மு.க வை ஆரம்பித்தவர் அப்போதைய தி.மு.க. பொருளாளர். தி.மு.கவில் பொருளாளர் பதிவியில் எப்போதும் பெரிய சக்திவாய்ந்த அரசியல் வாதிகளாகத்தான் இருப்பார்கள்.

உண்மைத்தமிழன் said...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆகஸ்ட் 29-ம் தேதி இரு தரப்பு வாதங்களின் கடைசி நாள் விசாரணையும் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 20-ம் தேதியன்று தீர்ப்பளிக்கப்படும் என்றார் நீதிபதி.

செப்டம்பர் 13-ம் தேதியன்று இந்த நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராவதில் சிரமங்கள் இருப்பதாக தமிழக அரசின் சார்பில் கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. கவனிக்க : நீதிபதியிடம் இதை நேரடியாக அவர்கள் சொல்லவில்லை.

கர்நாடக அரசிடம் தீர்ப்பு நாளன்று தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பெங்களூர் வர இருக்கிறார்கள்.. இப்போதைய நீதிமன்றத்தில் அந்த அளவுக்கு பாதுகாப்பை நீங்கள் செய்ய முடியுமா என்று தமிழக அரசுதான் கேட்டிருக்கிறது.

இதையடுத்துதான் கர்நாடக அரசின் உள்துறையின் ஆலோசனைப்படி பெங்களூர் சிட்டி போலீஸ் கமிஷனரின் சார்பில் நீதிபதியிடம் ஒரு மனு தரப்பட்டது.. இந்த இடம் தோதுபடவில்லை.. எனவே இடத்தை மாற்ற வேண்டும்.. ஜெயலலிதா முன்பு சாட்சியமளித்தபோது வந்த பரப்பன அஹ்ரஹார ஜெயில் வளாகத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கலாமே என்று அரசுத் தரப்பில் இருந்து கர்நாடக ஐகோர்ட் பதிவாளருக்கு தெரிவிக்கப்பட்டு இது நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு என்கிற ஒரு அம்சத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அங்கேயே மாற்றிக் கொள்ளலாம் என்று நீதிபதியும் சம்மதித்தார்.

ஆனால் இப்போது குட்டையைக் குழப்பியது பெங்களூர் போலீஸும், நீதித்துறையின் நிர்வாகமும்தான்..
"உடனேயே மாத்துறதுன்னா கஷ்டம் ஸார்.. எங்களுக்குக் கொஞ்சம் டைம் வேணும்.. அங்க சுத்தம் பண்ணமும்.. வெள்ளையடிக்கணும்.. சேர் டேபிளையெல்லாம் கொண்டு போய் சேர்க்கணும்..." என்று தலையைச் சொரிய.. "சரி.. ஒரு வாரம் தள்ளி வைக்கிறேன்.. அடுத்த சனிக்கிழமை..." என்று சட்டென்று சொல்லி அந்த பெட்டிஷனை முடித்துவைத்தார் நீதிபதி.

ஜெயலலிதாகூட தேதியை மாற்ற வேண்டாம். இடத்தை மட்டும் மாற்றுங்கள் என்றுதா்ன் சொல்லியனுப்பினாராம்.. இதில் நீதிபதியின் தவறு என்ன இருக்கிறது..?

அவர் சனிக்கிழமையென்று தேர்வு செய்ததே போலீஸின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத்தான்.. அரசு அலுவலகங்கள் விடுமுறையாக இருக்கும். எந்தப் பிரச்சினை வந்தாலும் யாருக்கும் அதிகம் பாதிப்பு இருக்காது என்பதால்தான்..!

நீதிமன்றங்களுக்கு தசரா விடுமுறை அடுத்த நாள் துவங்குகிறது.. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய கஷ்டப்படுவார்களே என்று கவலைப்பட அவரென்ன அதிமுக நீதிபதியா..?

அவருடைய கடமையை அவர் சரியாகவே செய்துவிட்டார்.

‘தளிர்’ சுரேஷ் said...

மிக அருமையான கட்டுரை! வாழ்த்துக்கள்!

kari kalan said...

ஒருவர், நாட்டின் அல்லது மா நிலத்தின் உயர்பதவியில் இருந்தாலும், தான் செய்த தவறுக்கு தண்டனை உண்டு என்று அனைவரையும் உணரச்செய்த இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே். மாறாக, கோடிக்கணக்கில் ஊழல் செய்த கருணா்நிதி வெளியே இருக்க, ஜெயலலிதா மட்டும் ஏன் தண்டிக்கப்பட்டிருகிறார் என்று கேள்வி எழுப்புவது வீண் வாதமாகும். ஒரு தவறை இன்னொமொரு தவறால் நியாயப்படுத்த முடியுமென்றால் அனைத்து தவறையும் நியாயப்படுத்தி விடலாம்.

அது சரி உ.த அண்ணன், அது என்ன 8 வருட தண்டனை க்ணக்கு ??? ஜெவை குற்றவாளி என்று நீதியரசர் சொன்னவுடன் ஊடகங்களில் இந்தப் பிரிவிற்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளும் அதிகப் பட்சம் 7 ஆண்டுகளும் என்று கூறினார்கள். எனக்கும் 7 ஆண்டுகள் தர வேண்டும் என்றே விருப்பம் இருந்தது. நீங்கள் எதை வைத்து 8 ஆண்டுகள் வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்பது தான் புரியவில்லை.

Meena Narayanan said...

vvsayan; chennai name mat-terya- podhu_ varruthappatta outlander; tamil nadu sad; irrukkupodhe u happy; u 'tamiliena dhroki"

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அம்மாவுக்கு தீர்ப்பு போதாது, சரி
சங்கராச்சாரிக்கு போதுமா?
தாத்தாவுக்கும் கூட்டத்துக்கும் எப்போ தீர்ப்பு!

நந்தவனத்தான் said...

முன்னாடி கருணாநிதி ஊழலை எதிர்த்து அண்ணாச்சி எழுதிய போது அவரை அதிமுக அடிவருடி என திட்டினார்கள். இப்போது ஆத்தாவுக்கு கொடுத்த தண்டனை போதாது என்றால் தாத்தாவை இழுக்கிறார்கள். என்னே உலகமடா இது!!!

கருணாநிதி ஊழல்பேர்வழிதான் என்ற போதும், ஆத்தாவைப் போல் காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் புகுந்த மாதிரி கொள்ளைடிக்க மாட்டார். விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவராக்கும். இதனால்தான் தன் மீது பல வழக்குகளை போட்ட கருணாநிதியை பழிவாங்கும் விதமாக ஒரு உருப்படியான வழக்கையும் பின்பு ஆட்சிக்கு வந்த ஆத்தாவால் போட முடியவில்லை. சும்மா ஒருநாள் கருணாநிதியை சிறையில் வைத்திருந்து தன் பழியை தீர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

@ டீச்சர்

ஜோதிஜி அவர்களை சொன்னது போலவே உங்கள் பின்னூட்டம் ஆச்சர்யத்தையே அளிக்கிறது. குன்ஹா மிகவும் நேர்மையான கண்டிப்பான நீதிபதி என்றே எல்லோரும் சொல்கிறார்கள். கேனத்தனமான காரணங்களை காட்டி ஜெவுக்கு எதிரான 11 வழக்குகள் அதிமுக சார்பான தமிழக நீதிபதிகளால் டிஸ்மிஸ் செய்யப்பட்டன.ஆக இதுக்கு பின்னாடி இருப்பது அரசியல் சூழ்ச்சியாக இருக்க மிடியாது. வேணும்னா ஆண்டவன் சூழ்ச்சியாக இருக்கலாம்... அல்லா மிகப்பெரிய சதிகாரன் என்கிறது குரான்!!!

தருமி said...

//ஜாமீன் பெற்று சென்னைக்கு வந்தாலும் தினமும் தனது அடிமையான பினாமி முதலமைச்சருக்கு நேரடி உத்தரவு மட்டுமே இட முடியும்.. ஆட்சியை மறைமுகமாக நடத்தலாம்.

'அடப் பாவி மக்கா, இப்படி பச்சைப் புள்ளைகளா இருக்கீங்களேன்னு' .... என்று http://dharumi.blogspot.in/2014/09/788.html -ல் எழுதியிருக்கிறேன். பாவங்க ... நீங்க ...இல்லீங்க ... நாம !!

ஜோதிஜி திருப்பூர் said...

நந்தவனம் நீண்ட நாளைக்குப் பிறகு.

டீச்சர் எழுதி வைத்த விமர்சனத்திற்குப் பிறகு இந்த நீதிபதி குறித்து விசாரிக்க விசாரிக்க நமக்கு மயக்கமே வந்து விடும் போல, எந்த நிலையிலும் விலைக்கு வாங்க முடியாத மகானாக இருந்துள்ளார்.

நீதிமன்றம் அவமதிப்பு என்பதால் இங்கே பலவற்றை எழுதி வைக்க முடியல.

ஒரு சிறிய குறிப்பு தருகின்றேன்.

இந்த நீதிபதி இந்த தீர்ப்பு எழுத தனது சொந்த வீட்டை காலி செய்து விடடு கடைசி சில மாதங்கள் எங்கே வசிக்கின்றார் என்பதையே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு திரில் கதையைப் போல வேறொரு இடத்தில் இருந்து செயல்பட்டு இந்த தீர்ப்பை எழுதியுள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றது.

முகநூல் பத்திரிக்கை பிரபலங்கள் அனைத்தையும் பார்வையிட்டு பாருங்க. ஒரு பெரிய பேரமைதி நிலவுகின்றது. எழவு விழுந்தது போல,

வருண் said...

**** ஜெயலலிதாகூட தேதியை மாற்ற வேண்டாம். இடத்தை மட்டும் மாற்றுங்கள் என்றுதா்ன் சொல்லியனுப்பினாராம்.. இதில் நீதிபதியின் தவறு என்ன இருக்கிறது..?***

தெளிவான விளக்கம், அண்ணாச்சி!

----------------
கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு, சு சாமி உருவ பொம்மை எரிப்பு, பஸ் எரிப்பு, ஊருக்கு ஊர் கடையை அடித்து நொறுக்குதல் எல்லாம் தமிழ்நாட்டில் அமர்க்களமாகவே நடக்குது.. டி வில போட்டுக் காட்டுறாங்க! ஆனால் ஜெயா டி வில மட்டும் மக்கள் அமைதியாக ஒப்பாரி மட்டும் வைப்பதாக பச்சைப் பொய் சொல்றாங்க!!!

-----------

சோ ராமசாமி இன்னும் ஸ்டாலின் பத்தி கார்ட்டூன் போட்டுக்கிட்டு இருக்காரு!!! :)))

நந்தவனத்தான் said...

@ஜோதிஜி

மேலதிக தகவல்களுக்கு நன்றி."ஆப்பு என்பது அடுத்தவன் நமக்கு வைப்பதல்ல, நேரம் சரியில்லாத சமயம் நாமே தேடிப் போய் உட்காருவது" என புர்ச்சி டமிலன் சொல்லியது போல வழக்கை 4 நீதிபதி தாண்டி இழுத்தடித்து ஸ்டிரிக்டான நீதிபதியிடம் போய் மாட்டிக்கொண்டார் மம்மி!!! நீதிமன்ற தீர்ப்பை அவமரியாதை செய்தால்தானே வழக்கு போடுவார்கள். நீதிபதியை புகழ்ந்தால் தவறில்லையே. ஆனால் அதிமுக அடியாள்களின் டென்சனை சம்பாதிக்க நேரிடும்.ஏற்கனவே ராம்ஜெத்மலானி நீதிபதியை கண்டித்துவிட்டார்- வழக்கில் ஆஜராகி சில கோடி தேத்தலாம் என்ற எண்ணமோ தெரியல.

viyasan said...

//vvsayan; chennai name mat-terya- podhu_ varruthappatta outlander; tamil nadu sad; irrukkupodhe u happy; u 'tamiliena dhroki"//

@Meena Narayanan,

Akka,

I think you're out of your mind. :-)

http://viyaasan.blogspot.ca/2014/09/blog-post_28.html

சீனு said...

வேடிக்கையான பதிவு.

சர்க்காரியவுக்கு பிறகு முக ஊழலே செய்யலையா? ஆனா, அவர் மீது ஏதாவது வழக்கு போடத்தான் முடியுமா? அதனால், அவர் ஊழலே செய்யாதவர் ஆவாரா?

சர்காரியாவில் இருந்து இந்திரா உதவியால் 'தப்பியவர்' முக. அதன் பிறகு மாட்டாமல் ஊழல் செய்கிறார். அந்த திறமை(!) ஜெ.விடம் அப்போது இல்லை. ஆனால், 1996-க்கு பிறகு ஜெ-மேல் ஏதாவது ஊழல் வழக்கு போட முடியுமா? போட முடியாவிட்டால் ஜெ ஊழலே செய்யவில்லை என்றாகிவிடுமா? :D

தண்டனையெல்லாம் சரி! ஆனால், காவிரித் தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டது, NGO-க்கள் போன்றவை மறைமுகமாக விளையாடியிருக்காது என்பதற்கு என்ன கேரண்டி?

வருண் said...


Mr. Seenu!!! இந்தப் பதிவில் என்ன வேடிக்கை இருக்கு?????

You are ABUSING the word "vedikkai" for your convenience! We all know, WHAT you are doing and WHY you are doing that!

***தண்டனையெல்லாம் சரி! ***

I really don't think YOU MEAN IT here! Because I know you are full of GARBAGE!

Go find another sensible post to share your TRASHY RESPONSES!

Do YOU UNDERSTAND?