மறுக்கப்பட்டது கல்வியா? இல்லை..எங்கள் உரிமையா..?? இந்திய அரசே பதில் சொல்..!

24-06-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஈரோடு ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த நந்தினி என்ற பெண் ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் தவிக்கிறார். இது குறித்து திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்க விரும்பி, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த இலங்கை அகதிகள் ஈரோடு முகாமைச் சேர்ந்த ஈழ மாணவி நந்தினிக்கு கல்வி நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய  குடியுரிமை இல்லாததால் கலாந்தாய்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.1990-ல் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த தம்பதியினர் அல்லிமலர்-ராஜா. அவர்களின் மகள் நந்தினி 1995-ல் தமிழகத்திலுள்ள முகாமில் பிறந்தவர். தனது பத்தாம் வகுப்பில் 489 மதிப்பெண் பெற்று தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவசமாக மேல்நிலைக் கல்வியை பெற்றுள்ளார். 

அரசு பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண்ணும் , மருத்துவ படிப்பிற்கான தகுதி மதிப்பெண் 197.33 பெற்றுள்ளார்.  மருத்துவம்தான் தனது கனவு என்று கூறி சென்னை இலங்கை மறுவாழ்வுத்துறை ஆணையரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். 

கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டுவரை இலங்கை அகதிகளுக்கு என்று இருபது இடங்கள் மருத்துவப் படிப்பிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில்தான் 1996-ம் ஆண்டு மதிப்புமிகு உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் மகள் ஸ்டேன்லி மருத்துவ கல்லூரியில் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 -ம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் முழுவதுமாக நீக்கியுள்ளது. இதனால் நந்தினி போன்ற பல மாணவ-மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும்போது இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. 

தமிழ் மண்ணில் பிறந்து இன்றுவரையிலும் அகதியாக வளரும் வாழும் எம்மாணவி நந்தினிக்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். இதற்கு மரியாதைக்குரிய தமிழக முதலைமைச்சர் விரைந்து தீர்வு காணவேண்டும். இலங்கையில் முள்வேலி முகாம்களை போன்று தமிழகத்திலும் முகாம்களில்வாடும் எம்தமிழ் உறவுகளுக்கு அடிப்படை உரிமைகளும் கல்வியும் கிடைக்க வேண்டும். இதற்கு இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் பதிலளிக்க வேண்டும். எங்கள் தமிழ் சொந்தங்களின் அடிப்படை உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்து தமிழின உணர்வாளர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் வேற்றுமை கலைந்து ஒன்றுபட்டு போராட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன். 

நந்தினியின் கல்விக்கும், தனி மனித உரிமைக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு, முதன்மையாக கவனத்தில் கொண்டு நந்தினி போன்ற மாணவர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வ. கவுதமன்
திரைப்பட இயக்குநர்  

பெற்றவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்குரிய முழு தகுதியும், உரிமையும் இல்லையா..? 

என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் ஒவ்வொரு ஆட்சியாளர்களும்..? 

நம்மை நம்பி வந்து நம்மை அண்டிப் பிழைத்த நமது சகோதரர்களுக்கு நாமே துரோகம் செய்யலாமா..?

திபெத்திய அகதிகளுக்கு ஒரு நீதி..? தமிழ் ஈழ மக்களுக்கு ஒரு நீதியா..? இது அநீதி இல்லையா..?

அனைத்துக் கட்சிகளும் ஒருமித்தக் குரலில் போராடி இந்த நந்தினிக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தர வேண்டும். இது அவர்களின் கடமை..!

2 comments:

ரூபன் said...

வணக்கம்

என்ன செய்வது காலத்தின் தேவை அனைவரும் போராட வேண்டி தர்னம் பதிலை படித்த போது மனதில் எழுந்தது ஆதங்கம் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

k.rahman said...

ஈழ தமிழர்கள் இருக்கிற வரைக்கும் இங்க பல பேருக்கு வியாபாரம் ஓடும்.