விழா - சினிமா விமர்சனம்

29-1-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பள்ளியில் காதல்.. கல்லூரியில் காதல்.. பார்த்தும் காதல்.. பார்க்காமலேயே காதல்.. கடிதத்தின் மூலம் காதல்.. ஈ-மெயிலில் காதல்.. கிராமத்தில் காதல்.. நகரத்தில் காதல்.. என்று எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது.. இப்போது எழவு வீட்டில் காதல் உருவாவதை பார்க்கணும்ன்னா அவசியம் இந்தப் படத்தை வந்து பாருங்க..!


'பாண்டிய நாடு', 'மதயானை கூட்ட'த்தைத் தொடர்ந்து 3-வது படமாக இந்த விழாவிலும் எழவு வீட்டில்தான் படமே துவங்குகிறது.. அதே கரகாட்டம்.. வாழ்த்துப்பா.. செத்தவரின் குண நலன்களை ஊருக்கே சொல்லுதல்.. கரகாட்டக்காரியின் அம்சமான டான்ஸ்.. ராத்திரி டிவியில் டிவிடி மூலமாக திருவிளையாடல் படம்.. உறவுகளின் விசாரிப்பு.. கடமையே கண்ணாக அழுகை.. அவ்வப்போது விட்டுவிட்டு வரும் கண்ணீர்.. என்று எல்லாவற்றையும் முதல் 20 நிமிடங்களில் கலந்து கட்டி அடித்திருக்கிறார் இயக்குநர் பாரதி பாலகுமாரன்..!

தப்பு அடிக்கும் ஒரு பையனுக்கும், செத்த வீட்டில் ஒப்பாரி வைக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான காதல்.. காதலுக்கு ஜாதி தடையில்லை.. ஆனால் சொல்ல வேண்டியதை சரியான நேரத்தில், சொல்லாததுதான் தவறாகிவிடுகிறது..!

புதுமுகம் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்..! கூடவே 3 அல்லக்கைகள்.. அவ்வப்போது மொக்கை ஜோக்குகளை போட்டுத் தாளிக்கிறார்கள்..! மாஸ்டராக இருக்கும்போதே "எனக்கு எப்படி 2 அப்பா 2 அம்மா இருக்க முடியும்?"ன்னு கேட்டவரு.. இப்போ விவரம் தெரிஞ்ச வயசுல இருக்குறதால.. பார்த்தவுடனேயே ஏற்படும் காதல் உணர்வை வெளிக்காட்ட முடிகிறது..! ஒரு வேலையும் செய்ய முடியலையே என்று புலம்புகிறார்.. அது மட்டுமே பார்க்க பிடிக்கிறது..! நடிப்பு என்றால் அவனின் காதுகூட நடிக்க வேண்டும் என்பார்கள்.. இங்கே தப்பு அடிக்கிறார் ஹீரோ.. ஏதோ தகரக் குச்சியை வைச்சு அடிப்பது போன்ற ஒரு பாவ்லா.. ஆனால் அடியெல்லாம் இடி போல் காதில் விழுகிறது.. இதுக்கே சாதாரணமாக லேசாக தட்டிக் கொண்டிருந்தால் எப்படி..?  இன்னும் கொஞ்சம் வயது கூடினால் ஹீரோவுக்கேற்ற முகபாவனை கிடைக்கும் என்று நம்புகிறேன்..! இந்தத் தம்பி மேலும் உயர இன்னமும் காலமும், வயதும் அவருக்கு இருக்கிறது..!

ஹீரோயின் வழக்கம்போல கேரள வரவு.. மாளவிகா மேனன்.. பார்க்க லட்சணமாக.. கிராமத்துப் பெண் போலவே இருக்கிறார்.. கிளைமாக்ஸில் மட்டுமே நடிக்க வாய்ப்பு.. மற்றபடி நடனங்களில் கிளாமர் காட்டாமலேயே வந்து போவதிலேயே ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறார்..! கண்களாலேயே பல கதைகளை பேச வைத்திருக்கலாம்.. இயக்குநர் மிஸ் பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன்..! யுகேந்திரன் ரொம்ப வருஷம் கழிச்சு ரீ எண்ட்ரியாகியிருக்காரு.. ஒரு சின்ன வேஷம்தான்.. பட் ஓகே..! 

இவர்களைவிடவும் முக்கியமானவர்கள் 4 சாவு காட்சிகளில் செத்த பொணமாக நடித்தவர்கள்.. கிட்டத்தட்ட 2 அல்லது 3 நாட்கள் அதனை ஷூட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. மூக்கில் பஞ்சை வைத்துக் கொண்டு மூச்சுவிடாமல்.. வயிறு பகுதி அப்படியே இருப்பது போல் பார்த்துக் கொண்டு படுத்திருப்பது சாதாரண விஷயமல்ல.. இதில் உட்காரவும் வைத்திருக்கிறார்கள்.. பாவந்தான்.. ரொம்பக் கஷ்டப்பட்டுதான் நடிச்சிருக்காங்க.. பாராட்டணும்..!

இன்னொருவர் ஹீரோயினுக்கு சித்தப்பாவாகவும், ஹீரோவுக்கு மாமாவாகவும் நடித்திருக்கும் நண்பர்.. லைட்டா சரக்கை போட்டுட்டு போயி  செத்த வீட்டில் ஒத்தாசை செய்யும் காட்சிகளும்.. தள்ளாடியபடியே பிணத்தின் கழுத்தில் இருக்கும் மாலைகளை எடுத்து வேறு இடத்தில் வைத்து அதே தள்ளாட்ட ஸ்பீடுடன் திரும்பி வந்து நிற்கும் காட்சியிலும் மனிதர் சுவாரசியப்படுத்தியிருக்கிறார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஓகே..! ஹீரோவுக்கும், இவருக்குமான உறவு.. பாசம்.. அன்பு.. ஹீரோவுக்காக பெரிய வீட்டில் பேசப் போய் மரணத்தைத் தேடிக் கொள்ளும் அபாக்கியவாதியான கேரக்டர்.. நச் என்று மனதில் நிற்கிறார்..!

பாக்யமாக நடித்த அந்த பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமிக்கு ஒரு ஜே போடணும்..! இதுவரைக்கும் தமிழ்ச் சினிமாவில் நான் பார்த்திராத முகம்.. ஆனால் நடிப்பு..? என்னமா வருது கோபம்..!? இது மாதிரியான உண்மையான நடிகர்களைத்தான் தமிழ்ச் சினிமா கண்டு கொள்ளவே கொள்ளாது.. சிவப்பா இருக்குறவங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு சொல்ற மாதிரி.. கருமாத்தூர் பக்கத்து கிராமம்ன்னாலும் எலிஸபெத்  மாதிரியான நடிகைகளையே தேடிப் பிடிச்சு நடிக்க வைக்குறாங்க.. கொஞ்சமாச்சும் நேட்டிவிட்டி பார்க்க வேண்டாமா..?

பாண்டித்துரையாக நடித்த காளியின் காதலும், அதன் முடிவும்தான் மிக வேகமாக கதையை நகர்த்தியிருக்கிறது..! தண்டபாணியின் வில்லன் கேரக்டரில் ஒரேயொரு காட்சியில் மனிதர் அசர வைத்துவிட்டார்.. அவருடைய கையாள், மருமகனாக்க நினைக்கும் பாண்டித்துரையை கவிழ்க்க ஐடியா கொடுக்கும் காட்சியில் பேஸ்புக்கை மையமாக வைத்து 1 நிமிடத்திற்கு அளந்துவிடும் அந்த பொய்ச் சரக்கை ஏதோவென்று நினைத்து சர்வ அலட்சியமாக “விடு கவலையை… நாளைக்கே பத்திர ஆபீஸுக்கு போய் பதிஞ்சிருவோம்”ன்னு சொல்லிவிட்டு போகும் அந்த ஒரு காட்சிக்கு, எந்த ஊராக இருந்தாலும் கைதட்டல் நிச்சயம்..!

யாராவது செத்தால்தான் காதலி வெளியே வருவாள் என்பதால் ஊரில் வயதான பார்ட்டிகள் யார், யாரென்று தேடிப் பார்த்து அவர்களை சாகடிக்கலாம் என்று ஐடியாவோடு செயல்படுவது ரொம்பவே டூ மச்சாக இருக்கிறது..! மதன் கார்க்கியின் 'செத்துப் போ' பாடலும், காட்சிகளும்கூட அதிகப்பிரசங்கித்தனமாகவே எனக்குப் படுகிறது.. இதில் இன்னொரு சுவையான விஷயம்.. ஹீரோயின் வீட்டிற்கு பொண்ணு கேட்க சென்ற நேரத்தில் அங்கே இருக்கும் பாட்டிகளுக்கிடையே ஏற்படும் திடீர் சண்டையும், இதனைத் தொடர்ந்த காட்சிகளையும் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.. இந்த ஒரு காட்சிக்கே அவருக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம்..!

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் குரல்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வாத்தியங்களை பின்னால் வைத்து ஒப்பாரி பாடல்களை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்.. 'என்னாச்சோ ஏதாச்சோ' பாடலும், 'நெஞ்சடச்சி நின்னேனே' பாடலும் ஓகே ரகம்.. 

படத்தில் இடம் பெறும் இன்னொரு காதல் சாதிகள் தாண்டியது.. இது நிறைவேறும்போது சாதி மறுப்பு பிரச்சினை.. அழுத்தமாக பதிவு செய்ய அருமையான வாய்ப்பு.. தப்பு அடிக்கிறவனின் காதலுக்கு அதே சாதியில் பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பவன் மூலமாக எதிர்ப்பு.. இப்போது சாதிய உணர்வு எங்கே இருக்கிறது..? காதல் ஏன் புறக்கணிக்கப்படுகிறது..? இது பற்றியெல்லாம் திரைக்கதை வடிவில் பதில் சொல்லி சீரியஸான படமாகவே முடித்திருக்கலாம்.. பட்.. இயக்குநர் அந்த அளவுக்கெல்லாம் போகத் தேவையில்லை என்று சொல்லி ஒரு மகா மொக்கை ஐடியாவை வைத்து படத்தை மாபெரும் காமெடி படமாகவே முடித்துவிட்டார்..! 

படத்தை ஜாலியாக சென்று பார்த்து வாருங்கள் என்றும் சொல்ல முடியவில்லை.. சீரியஸான ஒரு விஷயத்தை அழகா சொல்லியிருக்காங்கன்னும் சொல்ல முடியவில்லை.. இயக்குநர் சர்ச்சைகளை விரும்பவில்லை என்றாலும் திரைக்கதையில் அதற்கான முன்னோட்டத்தைக் கொடுத்திருப்பதால் இப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது..!

இப்போதெல்லாம் படத்தை தயாரித்தால் மட்டும் போதாது.. அதனை போதுமான அளவுக்கு விளம்பரப்படுத்தவும் வேண்டும்.. பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகராக விளம்பரம் செய்தால் மட்டுமே, சின்ன பட்ஜெட் படங்கள் ஒரு வாரமாவது தியேட்டர்களில் ஓடும். இல்லையெனில் செவ்வாய்கிழமையே தூக்கிவிடுவார்கள்.. 

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் இராம.நாராயணன் தானும் தயாரிப்பாளர்களில் ஒருவராக உருமாறி, படத்தை ரிலீஸ் செய்திருக்கிறாராம்.. அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்..! என்னதான் நடித்தாலும்.. காமெடி செய்தாலும்.. இயக்கம் செய்தாலும்.. இதையெல்லாம் தாண்டி ஏதோவொன்று இருந்தால்தான் படம் பிய்ச்சுக்கும் என்பது இயக்குநர் இராம.நாராயணனுக்கே தெரியும்..!  

இயக்குநர் அடுத்தடுத்து படங்கள் செய்ய வாழ்த்துகிறேன்..!

0 comments: