கடவுள் வந்திருந்தார் - நாடக விமர்சனம்

22-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாட்டையா பாரதிமணி ஐயாவை எனக்கு கடந்த 5 ஆண்டுகளாகவே தெரியும்.. பல முறை அவரது வீட்டிற்குச் சென்று இந்த இந்திய திருநாட்டுக்காக அவர் ஆற்றிய அரும் பெரும் தியாங்களையும், சேவைகளையும்.. எண்ணற்ற சூரங்களையும் அவருடைய இயல்பான பேச்சில் கேட்டு கேட்டு அவர் மீது எப்போதும் மாறானதொரு காதலில் இருக்கிறேன்..!  

இந்த நாடகத்தை முதன்முதலாய் அரங்கேற்றிய அன்று அலுவலகச் சூழல் காரணமாய் போக முடியாமல் போய்விட்டது. இதற்கே பாட்டையா ரொம்பவே கோபித்துக் கொண்டார்.. அன்றைக்குவரையிலும் என்னைப் பார்த்து சொல்லாத ஒரு கோப வார்த்தையை வீசி என்னை கொன்றுவிட்டார். அன்றைக்கே முடிவெடுத்துதான்.. அடுத்து கடவுள் வந்திருந்தார் நாடகம் எங்கே போட்டாலும் கடவுளுக்கு முன்பாக நாம் சென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேற்றைக்குத்தான் அந்த பாக்கியம் கிடைத்தது..!


முந்தைய தினம், நீண்ட கால அரசுப் பணியில் இருந்து ரிட்டையர்ட் ஆனதுகூட ஞாபகமில்லாமல் அலுவலகத்துக்குப் புறப்படும் சீனிவாசனின் வேட்கையில் இருந்துதான் நாடகம் துவங்குகிறது..! ரிட்டையர்ட் பெர்ஸன்களுக்கு இப்போதெல்லாம் வீடுகளில் என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை 1975-களிலேயே நமது வாத்தியார் சுஜாதா தெரிந்து வைத்திருந்தார் போலும்..! முதல் காட்சியே தற்காலத்திய உண்மையையும் எடுத்துரைக்கிறது..!

மேல் வீட்டில் குடியிருக்கும் சுந்தர்,  தனது காதல் நிறைவேறுவதற்காக லஞ்சமாக சீனிவாசனுக்கு கொடுக்கும், ‘எதிர்கால மனிதன்’ புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிறார்.. இங்கேதான் கதையும் துவங்குகிறது..! அந்தப் புத்தகத்தில் இருக்கும் எதிர்கால மனிதனே ‘ஜோ’ என்ற பெயரில் சீனிவாசனின் முன் நிற்கிறான்.. ஆனால் அவன் அவரது கண்களுக்கு மட்டுமே தெரிகிறான்..  மகளும், மனைவியும் வெளியில் போய்விட.. வீட்டுச் சுவற்றுடன்தான் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சீனிவாசனுக்கு ஜோ நண்பனாகிறான்.. அனைத்து விஷயங்களையும் பேசப் பேச.. ஜோவை தன்னுடைய நண்பனாகவே கருதுகிறார் சீனிவாசன்..! பேசும் விஷயங்கள் அத்தனை..! அப்படி இருக்கின்றன..!!! பிள்ளை பெற்றுக் கொள்வது பற்றி வேடிக்கையாக இவர் கேட்க ஜோவின் பதிலும், இதற்கு சீனி சொல்லும் பதிலும் செம காமெடி..!

ஜோவுடன் சீனிவாசன் பேசுவது வீட்டினருக்கு விபரீதமாகத் தெரிகிறது.. புத்தகம் கொடுத்த சுந்தருக்கும் பயத்தை அளிக்கிறது.. ஒருவேளை பைத்தியமோ என்று நினைக்கிறார்கள். “இங்கதான் நிக்குறான்.. தலைல லைட்டு எரியுது.. என்கிட்ட பேசுறான்..” என்றெல்லாம் சீனி சொல்வது சித்தப் பிரமையின் முதல் படியாகவே தெரிகிறது குடும்பத்தினருக்கு..! சீனி, ஜோவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்.. “ஒரு மணியடித்தால் வர வேண்டும். இரண்டு மணியடித்தால் போய்விட வேண்டும்...” என்று..! எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில் மனைவியும், மகளும் இருக்கும்போது மகளின் நிச்சயத்தார்த்த நாள் குறுக்கே வருகிறது.. 

தான் ஆசைப்பட்ட காதலி தனக்குக் கிடைக்காமல் போகலாமா என்ற ஆதங்கத்தில் சுந்தர் வீட்டிற்கு வரும் சிறுமியை உசுப்பிவிட.. அவளோ சொல்லித் தந்ததுபோல மணியை எடுத்து அடித்துவிட.. உள்ளே வருகிறான் ஜோ.. பிறகென்ன..? அதகளம்தான்.. இந்தக் காட்சியின் பரபரப்பு அரங்கத்தில் பல பக்கங்களிலும் தொற்றியிருந்ததை கண்கூடாகப் பார்க்க முடிந்தது..! சீனிவாசன் ஒரு பைத்தியம்தான் என்பதை பெண் பார்க்க வந்தவர்களும், பக்கத்து வீட்டுக்கார்ரும் சேர்ந்தே முடிவு செய்ய.. போலீஸும் உள்ளே வருகிறது.. பின்பு மருத்துவரும் வருகிறார்.. மந்திரவாதியும் வருகிறான்.. யாருமே அவரை நம்பாததால்  எப்படியாவது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வருகிறார் சீனி.

மேல் வீட்டு சுந்தருக்காக மட்டும் ஜோ, தனது வித்தையைக் காட்ட அவன் மட்டுமே நம்புகிறான்.. நம்பியவன் இதனை வைத்து வேறு விதமாக சீனிவாசனைத் திசை திருப்ப.. இப்போது சீனிவாசனந்தாவாக உருமாறுகிறார் சீனிவாசன்..! பக்திப் பரவசமாகி, தானே கடவுளாகிறார்.. அருள் பாலிக்கிறார்.. மந்திர வித்தைகள் செய்கிறார்.. காசும், பணமும் கொட்டுகிறது..! அப்போது நம்பாதவர்களெல்லாம் இப்போது அவரிடம் ஏதோ இருக்கிறது என்று நம்புகிறார்கள்..! எல்லா வேஷமும் ஒரு நாள் கலையத்தானே வேண்டும்.. அடுத்து வேறொரு உலகத்துக்கு சீன் போட போக வேண்டியிருப்பதால் ஜோ, சீனிவாசனிடம் விடைபெற்றுச் செல்கிறான்.. தனது வேடத்தைக் கலைத்துவிட்டு நிஜமாகவே ஓய்வெடுக்க விரும்பியிருக்கும் சீனி, சுந்தரிடம் மட்டும் இதைச் சொல்ல.. சுந்தர் அதையும் தடுத்து தற்காலிகமாக முன்பு பெற்றிருந்த நம்பிக்கையை இப்போதும் தொடரும்படியாகவே செய்கிறான்..! 

ஆனால், ஜோ போனவன் போனவன்தான்..! மீண்டும் ஒரு முறை அவரால் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்பது தெரிந்தாலும், அதைச் செய்யும் வேளை இனிமேல் சீனிவாசனுக்கு வரவே வராது என்பதால் அவர் எப்போதும் கடவுளாகவே கருதப்படுவார் என்பதோடு கதை முடிகிறது..!  ஜோ-வும், சீனிவாசனும் பேசும் சில வசனங்களும், இறுதியில் தனது வேஷத்தைக் கலைக்கத் துடித்து சீனிவாசன் சுந்தரிடம் பேசும் வசனங்களும்தான் மிகச் சிறப்பானவை. இந்தக் காலத்துக்கும் ஏற்றாற்போல கச்சிதமாக பொருந்துகிறது.. உண்மை என்னும் கடவுளை நாம் எப்போதும் உணர்வதில்லை என்பதை வாத்தியார் சுஜாதா கச்சிதமாக சொல்லியிருக்கிறார்..!  இதனை சினிமாவாகக்கூட எடுக்கலாம்..! 

நம்ம பாட்டையா பாரதிமணி 2 மணி நேரம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்..! பல நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டிருப்பதால் எந்த இடத்தில் நிறுத்தி, நிதானமாக பேசிவிட்டு பாய்ச்சல் காட்ட வேண்டுமோ அதையெல்லாம் கச்சிதமாகச் செய்திருக்கிறார். “லவ்வுன்னா என்ன..?” என்ற மனைவியின் கேள்விக்கு பட்டென்று திரும்பி “உனக்கும் எனக்கு இந்த 25 வருஷமா இல்லாதது..” என்று சொல்லிவிட்டு மகளிடம் திரும்பி, “நீ படிம்மா” என்று சொல்லும் வேகம்தான் நாடக அனுபவம்.. இது எல்லோருக்கும் வந்துவிடாது..!  நிச்சயத்தார்த்த தினத்தன்று உள்ளே வரும் ஜோவிடம் பேசியபடியே சம்பந்தியிடமும், பக்கத்து வீட்டுக்காரரிடமும் மாறி மாறி பேசும் அந்த லாவகம்.. ஏற்ற இறக்கம்.. மரியாதையான பேச்சு.. அடுத்த நொடி சலிப்பாக திட்டுவது என்று பாட்டையா ஒரு ஜலதரங்கமே வாசித்திருக்கிறார் அங்கே..! வெல்டன்.. வெல்டன்..! இந்த 77 வயதில் இப்படி 2 மணி நேரம் உட்கார்வதும், நிற்பதும்.. வசனங்களை மனப்பாடமாகச் சொல்வதும், நிறைவாக நடிப்பதும் ஒருவருக்கு முடிகிறதென்றால் அவர் ஏதோ பாக்கியம் செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.. அந்த அளவுக்கு பாரதிமணி ஐயாவுக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்திருக்கும் ஆண்டவனுக்கு நன்றி..! 

மனைவியாக கவிஞர் பத்மஜா.. “கத்திரிக்காயை நறுக்கிக் கொடுங்க..” என்று கேட்பதில் துவங்கி.. “ரிட்டயர்டாகிட்டீங்கள்லே.. இனிமே வீட்ல என்ன செய்யப் போறீங்க..?” என்று கேட்டு அனத்துவதில் ஆரம்பித்து.. சுந்தரை கரித்துக் கொட்டிவிட்டு பின்பு சமயத்துக்கேற்றாற்போல் வேலை வாங்கவும் செய்யும் ஒரு  அக்மார்க் நம்ம பக்கத்து வீட்டு மாமி..! சுந்தராக நடித்த ராம்குமாரின் பாடி லாங்குவேஜும், டயலாக் டெலிவரியும் அந்தக் கேரக்டரை ரசிக்க வைத்தது.. ஜோவாக நடித்த ஸ்ரீதர், மகளாக நடித்த வைஷாலி..  மாப்பிள்ளையாக நடித்த நம்ம தினேஷ் தம்பி.. தினேஷின் அப்பாவாக நடித்த நபர்.. போலீஸ் இன்ஸ்பெக்டர்.. என்று பலரும் தங்களது கேரக்டரை அப்படியேதான் பிரதிபலித்திருக்கிறார்கள்..! 

என்ன.. இதிலொரு சின்ன விஷயம்.. நாடகத்தில் ஆங்காங்கே.. அடுத்த வசனத்தை யார் துவக்குவது என்பதான சின்ன லேப்ஸ் சீஸன் இருந்தது.. இது அடுத்தடுத்த அரங்கேற்றங்களில் தீர்க்கப்பட்டு விடும் என்று நினைக்கிறேன். இவர்கள் இப்போதுதானே களத்தில் இறங்கியிருக்கிறார்கள்..? வாழ்த்துவோம்.. பாராட்டுவோம்..!

நாடகம் நடந்த இடம் ஒரு வெளிப்புற இடம் என்பதால் முதல் காட்சியில் பாட்டையா பேசத் துவங்கியவுடனேயே மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானம் நேராக பாட்டையாவின் தலைக்கு மேலாகச் சென்று டென்ஷாக்கிவிட்டது.. இதேபோல சாப்பிட்டுக் கொண்டே நாடகம் பார்க்கலாம் என்கிற முறை, இது போன்ற தொழில் முறை நாடகக்காரர்களுக்கு ஒத்து வராது என்றே நினைக்கிறேன்..!  நாடகம் நடந்து கொண்டிருக்க.. சர்வசாதாரணமாக மக்கள்ஸ் எழுந்து சென்று சுண்டல், வடை, பிரைட் ரைஸ் என்று ஆர்டர் செய்து பேசிக் கொண்டிருக்க.. நாடகத்தின் மீதான கவனம் என்று பொதுவாக யாருக்குமே இல்லாமல் போய்விட்டது.. அரங்கத்தின் இன்னொரு மூலையில் மதுபானங்களும் சப்ளை செய்யப்பட்டதால்... பல கிளப் உறுப்பினர்கள் கிளாஸும், சோடாவுமாக மிக்ஸிங்கில் மும்முரமாக இருந்தனர்.. சிலர் ஊற்றிய வேகத்தில் சவுண்டாக பேசியபடியே இருக்க..  நாடகம் பார்க்கும் மூடே இல்லாம போயிருச்சு..!

போதாக்குறைக்கு சவுண்ட் சிஸ்டம் முற்றிலுமாக சொதப்பிவிட.. நாடகம் நடந்த இரண்டே கால் மணி நேரமும் ஸ்பீக்கர் பக்கத்தில் நின்றபடியேதான் நாடகத்தை பார்த்தேன். தூரத்தில் போய் உட்கார்ந்தால் வசனங்கள் சுத்தமாகக் கேட்கவில்லை..! என்ன செய்றது..? ஆனால் என்னைப் பார்த்தவுடன் பாட்டையா.. “வாடா” என்று வாஞ்சையோடு அழைத்த பாசத்தில் அத்தனை கால் வலியும் காணாமலேயே போனது..! இன்னொரு முறையும் வேறு சிறந்த சபா அரங்கத்தில் இந்த நாடகத்தை பார்க்க வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளேன்..! வெகு சீக்கிரமாக அது நடக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..! நாடகம் முடிந்தவுடன் தனது குழுவினர் அனைவரையும் மேடையேற்றி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்த அந்த பாங்குதான், பாட்டையாவை தனித்தே அடையாளம் காட்டுகிறது..!

இந்த நாடகத்தை பூர்ணம் விஸ்வநாதன் குழுவினருக்கு பின்பு குருகுலம் ஸ்டேஜ்காரர்களும் நடத்தியதாக கேள்விப்பட்டேன். யார் நடத்தியிருந்தால் என்ன..? வாத்தியாரின் எழுத்தை எங்கே ரசித்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது..! அப்போதைய அவருடைய எழுத்துக் குறும்பை இதிலும் 2 காட்சிகளில் அப்படியே வைத்திருக்கிறார்கள்..!  நன்று..!  ஒரு மணியடித்தால் வரும் எதிர்கால மனிதன்.. எந்தக் காலத்திலும் திரும்பிப் போகாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் வாத்தியார் எழுதியிருக்கலாமே என்ற எண்ணம், இந்த நாடகத்தின் பாதியிலேயே எழுந்தது..! இதுதான் வாத்தியார் எழுத்து..! 

பாட்டையாவுக்கும் அவர் தம் குழுவினருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..!

2 comments:

Rupan com said...

வணக்கம்

அருமையாக எழுதியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

உண்மைத்தமிழன் said...

[[[Rupan com said...

வணக்கம். அருமையாக எழுதியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ஸார்..!