மெய்யழகி - சினிமா விமர்சனம்

23-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது போன்ற படங்களை எப்போதாவது ஒரு முறைதான் தமிழ்ச் சினிமாவில் பார்க்க முடியும்..! அக்கா-தம்பி பாசம் பற்றி பல படங்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் இந்தப் படம் ஒரு ஸ்பெஷல். 

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு உடல் ஊனத்துடன் இருக்கும் ஒரு தம்பி.. குடிகாரத் தந்தை.. வாழை இலைகளை ஹோட்டல்களுக்கு விற்று அதில் நேர்மையாக உழைத்து சம்பாதித்து தனது தம்பியை இன்னொரு அம்மாவாக காப்பாற்றிவரும் அக்கா.. இவர்களைச் சுற்றியதுதான் கதை..!


அந்த ஊரின் பணக்காரனான பணம் என்னும் பண்ணையார் மெய்யழகியான அக்கா மீது ஆசைப்பட்டு அவளை எப்படியாவது திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். இத்தனைக்கும் அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண்ணும் உண்டு.. தனது மனைவியின் ஜோதிட நம்பிக்கையை வைத்து மனைவியை ஏமாற்றி.. "தன் ஜாதகத்தில் தோஷம்.. இப்போ நேரம் சரியில்லை.. செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை கல்யாணம் செஞ்சா உயிர் பிழைப்பார்.." என்று அஞ்சுக்கும், பத்துக்கும் அலையும் ஜோதிடனை வைத்து பில்ட் அப் செய்கிறார் பண்ணையார். மனைவியும் தனது கணவனுக்காக மெய்யழகியிடம் பேச.. அவள் இதற்கு மறுக்கிறாள்.. 


பண்ணையாரிடமே கார் டிரைவராக இருக்கும் அர்ஜூனை மெய்யழகி விரும்ப.. இதை எதிர்பார்க்காத பண்ணையார் அதனை தடுக்க நினைக்க செய்யும் முயற்சிகள் கொலையில் போய் முடிகிறது.. முடிவில் அக்காவும், தம்பியும் என்னவானார்கள் என்பதைத்தான் இடைவேளைக்கு பின்பான மிக வேகமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்..!

இது போன்ற உடல் ஊனம் கொண்ட கேரக்டர்களாக நம் மனதில் இப்போதும் இருப்பது 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'அப்பு' கேரக்டரும், 'காசி' படத்தில் கண் பார்வையிழந்த விக்ரமின் கேரக்டரும், 'பேரழகன்' படத்தில் சூர்யாவின் கூன் விழுந்த அழகன் கேரக்டரும்தான்.. இப்போது நான்காவதாக இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.. ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனாக பாலாஜி அசத்தியிருக்கிறார்..!

'பட்டாளம்', 'காதல் சொல்ல வந்தேன்' போன்ற படங்களில் நடித்திருக்கும் பாலாஜிக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு விருதை பெற்றுக் கொடுக்கும் என்றே நம்புகிறேன்..! கடைசிவரையிலும் வாயில் எச்சில் ஒழுகியபடியே கைகளை மடக்கி வைத்துக் கொண்டு.. கால்களை தேய்த்தபடியே நடந்து வருவதெல்லாம் நடிப்பு வெறி இருந்தால்தான் முடியும்.. ஒரு பிரேமில்கூட மாறுதலை காட்டாமல் நடித்திருக்கிறார்..! வெல்டன் பாலாஜி..! 


'ஆரோகணம்' படத்தில் நடித்த ஜெய்குஹானிதான் இதில் மெய்யழகி.. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்தின் தூண்.. எந்த இடத்திலும், எந்த விதத்திலும் யாரிடமும் ஐயோ பாவம் என்று எதையும் வாங்கக் கூடாது என்கிற கொள்கையுடையவர்..  உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இவர் பண்ணையாரின் மனைவியிடம்(இவர் நடிகை மீரா ஜாஸ்மினின் அக்கா) "எச்சில் இலைல சாப்பிட கூப்பிடுறீங்களே.. இது உங்களுக்கே நியாயமாக்கா..?" என்ற அந்தக் கேள்வி அவருடைய கேரக்டருக்கே மிகப் பொருத்தமானது..!

எந்த மேக்கப்பும் இல்லாமல்.. கிராமத்து ஜாடையுடன்.. அதே அளவு கண்ணியமான உடையுடன் பாந்தமான நடிப்புடன் ஒரு நல்ல நடிகையை அடையாளம் காட்டுகிறது..! இருக்கும் ஒரேயொரு டூயட் பாடல் காட்சியிலும் கண்ணியமாகவே வந்து செல்கிறார்.. இதற்காக இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்..!

பண்ணையாராக அருண்மொழி வர்மன் அறிமுகமாகியிருக்கிறார். அந்தக் கால ராஜேஷை ஞாபகப்படுத்துகிறார்.. கிராமத்து முகம்.. அச்சு அசல் பண்ணையாரின் நடிப்பு..! ஜெய்குஹானியின் அப்பாவாக வரும் ராமராஜின் சின்னச் சின்ன ஆக்சன்களையும் ரசிக்க முடிகிறது..!

அபிஷேக்கின் இசையில் 3 பாடல்களுமே எளிமையாக, கேட்கும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் இதனையெல்லாம் பிரமோட் செய்ய எந்த பெரிய ஆடியோ நிறுவனமும் இல்லாததால்  ரேடியோக்களில் வெளிவர வாய்ப்பே இல்லை..! 


படத்தின் இடையிடையே இயக்குநர் ஜெயபாலே ஒரு காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். இது தேவையில்லாததுதான்..  ஆனால் எதற்கும் இருக்கட்டுமே என்று வைத்திருக்கிறார்கள் போலும்.. "இப்பல்லாம் கல்யாணமான ஆம்பளைங்களைத்தான் பொம்பளைங்க விரும்புறாங்க.." என்று இவர் சொல்லும்போதே பின் சுவற்றில் 'வில்லு' படத்தின் போஸ்டர் தொங்குவது ஏதோ ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது..! 

படத்தின் கிளைமாக்ஸில் "மாமா வந்து கொன்னுட்டு ஓடிப் போச்சு.." என்ற வசனத்திற்கு நிச்சயம் கைதட்டல்கள் கிடைக்கும்.. அது சுத்தமான லாஜிக் ஓட்டை என்றாலும் அதனையும் மீறி ஒரு கவன ஈர்ப்பு கிடைக்கிறதென்றால், அது எப்படிப்பட்ட இயக்கத் திறமை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்..!

இயக்குநர் ஆர்.டி.ஜெயவேலன்.. அகத்தியனிடம் பணியாற்றியவராம்.. மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிக நிறைவானதொரு ஒரு படத்தை வழங்கியிருக்கிறார்..! 'யு' சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டு.. வரிவிலக்கும் பெற்ற பின்பும் படத்தைத் திரையிட தியேட்டர்கள் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் இப்போது கிடைத்த தியேட்டர்களில் திரையிட்டிருக்கிறார்களாம்.. 

ஒண்ணுமே இல்லாத 'இரண்டாம் உலகம்' பெருவாரியான தியேட்டர்களை பிடித்திருக்க.. குறிப்பிடத்தக்க கதையம்சத்துடன் வந்திருக்கும் இப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காதது திரையுலகம் எப்படிப்பட்ட பண ஆசாமிகளிடம் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு ஒரு மிகப் பெரிய உதாரணமாகும்..!

ஒரு பக்கம் நல்ல படங்கள் வரலை.. வரலை என்று கூப்பாடு போடும் மக்கள்ஸ்.. இது போன்ற படங்களை வந்த பின்பு கண்டு கொள்ளாமல் போவதும் வாடிக்கையாகத்தான் இருக்கிறது....! நிச்சயம் இந்தப் படத்திற்கு திருட்டு விசிடி வரவே வராது..! ஆகவே ரசிகர்களே.. உங்களுக்கு அருகாமையில் இந்தப் படம் உங்களது கண்ணில் பட்டால் அவசியம் படத்தைப் பார்த்து ஆதரவு அளியுங்கள்..! 

படத்தில் பங்கு கொண்ட நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், மற்றும் படத்தின் இயக்குநருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..!

16 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

இந்த கதை ரொம்ப டெம்ப்ளேட்டான ஒன்று, உங்களுக்கு எதாவது "துன்பியல் நாடகம்" பார்த்தா நெஞ்சு கலங்கிடும் போல அவ்வ்!

இன்னும் கொடுமைக்கார பண்ணையார்கள் படங்களில் இருக்காங்களா? இப்பலாம் பண்ணையார் வில்லன் என்ற கதைகளே வரதேயில்லைனு நினைச்சேன் அவ்வ்.

தமிழில் ,கல்யாண் குமர், முத்துராமன் எல்லாம் நடிச்சு வந்த "மணி ஓசை" கதை இப்படித்தான் இருக்கும். அந்த படமே ஆங்கில படத்தின் தழுவல் தான்.

முதுகில் கூண் விழுந்த கதாபாத்திரத்துக்கும், அழகிய பெண்ணுக்கும் உள்ள உறவு,அதிலும் பணக்காரன் அப்பெண்னை அடைய முயற்சித்து, கடைசியில் இருவரும் இறப்பது ஆங்கிலப்படம், தமிழில் கல்யாண குமார் மட்டும் செத்துப்போயிடுவார்.

காலம் காலமா சொல்லப்பட்டக்கதைய இப்பவும் பார்த்து கண் கலங்க மக்கள் தயாரா இருந்தா ஓடக்கூடும்.

ஆட்டிசம் என்பது "கற்றல் குறைப்பாடு தான் ,கை கால் எல்லாம் மடக்கிட்டு ,வாய் எல்லாம் இழுத்துக்கிட்டா இருக்கும்?

அந்தக்காலத்துல "பாகப்பிரிவினை" எல்லாம் மறந்து போச்சு போல , வில்லன் படத்தில கூட அஜித் இப்படி ஒரு ரோல் செய்திருப்பார்.

Balasankar S said...

மக்காள்ஸ் சொல்லற மாதிரி, இ.உலகத்திற்கு ஹெவியா கவர் கொடுத்துருப்பாங்க போலயே அண்ணே.. எல்லாரும் ஆஹா, ஓஹோன்றாங்க.. இந்த மாதிரி படங்கள நீங்க சொல்ற மாதிரி கை தூகிவிடனும், பத்திரிகைகளும், இணைய வளைந்கர்களும்..

குரங்குபெடல் said...

"ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது.."யப்பா சாமி . .

நாட்டில இந்த " குறியீடு " தொல்லை தாங்க முடியல நாராயணா . .


நல்ல ஊக்கமூட்டும் விமர்சனம்

கிரி said...

உண்மைத்தமிழன், ஆட்டிசம் என்பது நோயல்ல அது குறைபாடு.

படம் இங்கே [சிங்கப்பூர்] வெளியாகவில்லை... இணையம் தான்.

தனிமரம் said...

நல்ல ஊக்கமூட்டும் விமர்சனம்

Manimaran said...

படம் மட்டும் நல்ல இல்லைனா என்னை செருப்பால அடிங்க என்று தியேட்டர் கிடைக்காத விரக்தியில் இதன் இயக்குனர் கொந்தளித்து போய் பேட்டி கொடுத்திருந்த பார்த்தேன் சார் . உண்மையிலேயே இது நல்ல படம் என்று உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது .கண்டிப்பாக பார்க்க போகிறேன்

Nondavan said...

நமக்கு பார்க்க சந்தர்ப்பம் நிச்சயமா இருக்காது....

ஒரு நல்ல படப்பை ஊக்குவிக்கும் உங்க விமர்சனம் அருமை...

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

இந்த கதை ரொம்ப டெம்ப்ளேட்டான ஒன்று, உங்களுக்கு எதாவது "துன்பியல் நாடகம்" பார்த்தா நெஞ்சு கலங்கிடும் போல அவ்வ்! இன்னும் கொடுமைக்கார பண்ணையார்கள் படங்களில் இருக்காங்களா? இப்பலாம் பண்ணையார் வில்லன் என்ற கதைகளே வரதேயில்லைனு நினைச்சேன் அவ்வ்.]]]

இரண்டாம் உலகம் பார்த்த பாதிப்புதான்..! அதுக்கு இது எவ்வளவோ பெட்டர் இல்லையா..?

[[[தமிழில், கல்யாண் குமர், முத்துராமன் எல்லாம் நடிச்சு வந்த "மணி ஓசை" கதை இப்படித்தான் இருக்கும். அந்த படமே ஆங்கில படத்தின் தழுவல்தான். முதுகில் கூண் விழுந்த கதாபாத்திரத்துக்கும், அழகிய பெண்ணுக்கும் உள்ள உறவு, அதிலும் பணக்காரன் அப்பெண்னை அடைய முயற்சித்து, கடைசியில் இருவரும் இறப்பது ஆங்கிலப் படம், தமிழில் கல்யாண குமார் மட்டும் செத்துப்போயிடுவார்.

காலம் காலமா சொல்லப்பட்டக் கதைய இப்பவும் பார்த்து கண் கலங்க மக்கள் தயாரா இருந்தா ஓடக்கூடும்.]]]

ஓடட்டுமே..! தப்பில்லையே..? முதல் தலைமுறை பார்த்தது.. இப்பவுமா ஞாபகம் வைச்சிருக்கப் போறாங்க..!

[[[ஆட்டிசம் என்பது "கற்றல் குறைப்பாடுதான், கை கால் எல்லாம் மடக்கிட்டு, வாய் எல்லாம் இழுத்துக்கிட்டா இருக்கும்?
அந்தக் காலத்துல "பாகப்பிரிவினை" எல்லாம் மறந்து போச்சு போல , வில்லன் படத்தில கூட அஜித் இப்படி ஒரு ரோல் செய்திருப்பார்.]]]

தகவலுக்கு மிக்க நன்றிகள் வவ்ஸ்..!

உண்மைத்தமிழன் said...

[[[Balasankar S said...

மக்காள்ஸ் சொல்லற மாதிரி, இ.உலகத்திற்கு ஹெவியா கவர் கொடுத்துருப்பாங்க போலயே அண்ணே.. எல்லாரும் ஆஹா, ஓஹோன்றாங்க.. இந்த மாதிரி படங்கள நீங்க சொல்ற மாதிரி கை தூகிவிடனும், பத்திரிகைகளும், இணைய வளைந்கர்களும்..]]]

நீங்களும் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

"ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது.."

யப்பா சாமி. நாட்டில இந்த குறியீடு தொல்லை, தாங்க முடியல நாராயணா. நல்ல ஊக்கமூட்டும் விமர்சனம்..]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..!


உண்மைத்தமிழன் said...

[[[கிரி said...

உண்மைத்தமிழன், ஆட்டிசம் என்பது நோயல்ல அது குறைபாடு. படம் இங்கே[சிங்கப்பூர்] வெளியாகவில்லை. இணையம்தான்.]]]

நன்றி நண்பரே..! இணையத்தில்கூட வருமான்னு தெரியலை.. காத்திருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[தனிமரம் said...

நல்ல ஊக்கமூட்டும் விமர்சனம்..]]]

இது போன்ற படங்களை ஊக்குவிக்காமல் வேறென்ன செய்ய முடியும்..? நல்ல சினிமாவை எதிர்பார்ப்பவர்கள் இதற்கு ஆதரவளிக்கத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Manimaran said...

படம் மட்டும் நல்ல இல்லைனா என்னை செருப்பால அடிங்க என்று தியேட்டர் கிடைக்காத விரக்தியில் இதன் இயக்குனர் கொந்தளித்து போய் பேட்டி கொடுத்திருந்த பார்த்தேன் சார். உண்மையிலேயே இது நல்ல படம் என்று உங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது. கண்டிப்பாக பார்க்க போகிறேன்.]]]

அவசியம் பாருங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நமக்கு பார்க்க சந்தர்ப்பம் நிச்சயமா இருக்காது. ஒரு நல்ல படப்பை ஊக்குவிக்கும் உங்க விமர்சனம் அருமை.]]]

அவசியம் பார்க்க வேண்டும் நொந்தவன் ஸார்..!

Nondavan said...

எனக்கு வாய்ப்பே இல்ல அண்ணே.. துபாய்ல எதாவது டவுன்லோட் லிங்க் வந்தா தான் உண்டு...

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

எனக்கு வாய்ப்பே இல்ல அண்ணே.. துபாய்ல எதாவது டவுன்லோட் லிங்க் வந்தாதான் உண்டு...]]]

ஓகே.. வேற வழியில்லை. அப்படி வந்தாலும் பார்த்திருங்க..!