ஆரம்பம் - சினிமா விமர்சனம்

01-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதியை அவ்வளவு சுலபத்தில் நாம் மறந்துவிட முடியாது..! அஜ்மல் கசாப் என்ற இளைஞரை உள்ளடக்கிய 10 பாகிஸ்தானிய இளைஞர்கள் இரவு நேரத்தில் கடல் வழியாக மும்பைக்குள் கால் பதித்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளி ருத்ரதாண்டவம் ஆடிய நாள்..!

அன்றைய மகாராஷ்டிரா அரசில் தீவிரவாதத் தடுப்பு  பிரிவின் தலைவராக இருந்தவர் ஹேமந்த் கர்கரே.. மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் மகாராஷ்டிராவில் வெடிக்கப்பட்ட பல குண்டுவெடிப்புச் சம்பவங்களை  துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடித்த திறமை மிக்கவர். அதனாலேயே இந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டிருந்தார்..!


அன்றைய தினம் இரவு தனது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹேமந்திற்கு தீவிரவாதிகளின் தாக்குதல் செய்தி சொல்லப்பட.. உடனுக்குடன் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தார். அவர் வந்த நேரம் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில்வே ஸ்டேஷனை சல்லடையாகத் துளைத்துக் கொண்டிருந்தனர் தீவிரவாதிகள்.. அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் குண்டு துளைக்காத புல்லட் புரூப் ஆடையை அணிந்து கொண்டு கையில் ஒரு துப்பாக்கியுடன் வேட்டைக்குக் கிளம்பினார் ஹேமந்த்..இவர் உள்ளே நுழைந்தவுடன் தீவிரவாதிகள் எதிர்ப்புறமாக நகர்ந்து காமா மருத்துவமனை அருகே சென்றுவிட்ட தகவல் தெரிந்தது.. உடனேயே ஹேமந்தும் அவருடைய படையினரும் ஒரு ஜீப்பில் அவர்களைப் பிடிக்க பறந்தபோது எதிரிலேயே ரோட்டுக்கு அந்தப் பக்கமாக வேறொரு ஜீப்பில் பறந்து வந்த தீவிரவாதிகளை கண்டுவிட்டார்கள்.. உடனேயே இவர்கள் இந்தப் பக்கம் சுட.. தீவிரவாதிகளும் சுட்டுத் தள்ளினார்கள்.. கையில் பிஸ்டலுடன் இவர்கள்.. எதிர்த்தரப்பில் தீவிரவாதிகளின் கையில் ஏ.கே.47. ஒரேயொரு சப் இன்ஸ்பெக்டரை தவிர ஜீப்பில் இருந்த மற்ற அனைவருமே இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்..!கசாப் உயிருடன் பிடிபட்டு, மிச்சமிருந்த தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு... தாஜ் ஹோட்டலும் மீட்கப்பட்டு மும்பை பத்திரமாகியது என்ற செய்தி வந்த பின்பு ஹேமந்த் கர்கரேயின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்தன ஊடகங்கள்..! அவருடைய மனைவி கவிதாவும் தனது கணவரை பற்றி உருக்கமாக பத்திரிகைகளுக்கு பேட்டியெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார். 

திடீரென்று சிலர் சந்தேகத்தைக் கிளப்பினார்கள். ஹேமந்த் கர்கரே அணிந்திருந்தது புல்லட் புரூப் ஆடை. ஆனால் அதையும் மீறி துப்பாக்கிக் குண்டு எப்படி அவரது இதயத்தைத் துளைத்தது என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள்..  இந்த நேரத்தில் ஹேமந்த் கர்கரேவின் மனைவி கவிதாவும் "தனது கணவர் அணிந்திருந்த புல்லட் புரூப் ஆடையை போலீஸார் தன்னிடம் தரவில்லை.." என்று புகார் கூறினார்.. 

விஷயம் இதோடு முடிந்திருந்தால் இந்த 'ஆரம்பம்' படமே வந்திருக்காது..!  இதற்குமேல்தான் மகாராஷ்டிரா காவல்துறையிலும், ஆட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாத டிவிஸ்ட்டுகள் நடந்தன..!  போலீஸார் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட் "தங்களிடம் இல்லை.." என்றார்கள்.  மருத்துவமனையில் கவிதா கேட்டபோது "அங்கேயும் இல்லை.." என்றார்கள். குழப்பம் நீடித்தபோது சந்தோஷ் தண்டுகர் என்ற சமூக ஆர்வலர் சம்பவம் நடந்த பகுதியான ஜெ.ஜெ. மார்க் போலீஸ் ஸ்டேஷனில் இந்த ஆடை காணாமல் போனது பற்றி ஒரு எழுத்துப் பூர்வமாக புகாரை கொடுத்தார். பிரச்சினை மீடியாவில் பெரிதாவதை நினைத்த போலீஸார் வேறு வழியில்லாமல் எஃப்.ஐ.ஆரை பதிவு செய்தனர். 

சமூக ஆர்வலர் சந்தோஷ் தண்டுகர், புல்லட் புரூப் ஆடையின் தரம் பற்றி சந்தேகத்தை எழுப்பி பல கேள்விகளை கேட்டுக் கொண்டேயிருந்தார்..! "தரம் குறைந்த ஆடையை வழங்கியதால்தான் அதனை அரசு இப்போது காட்ட மறுப்பதாக"வும் குற்றம் சாட்டினார். இதையறிந்து கர்காரேவின் மனைவியும் இதனைப் பற்றி வெளிப்படையாக மீடியாவில் பேசத் துவங்க வேறு வழியில்லாமல் நாடகத்தை முடிக்க முன் வந்தது மாநில அரசு.

அந்த ஜெ.ஜெ. மருத்துவமனையின்  நான்காம் நிலை ஊழியரான லால்ஜித் கத்தார், "தான்தான் அந்த ஆடையை தவறுதலாக வேஸ்ட் பாக்ஸில் தூக்கி வைத்ததாகவும், பின்பு ஒரு நாள், அந்த வேஸ்ட் பாக்ஸில் இருந்தவைகள் அனைத்தும் மும்பையின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வீசப்பட்டுவிட்டதாக"வும் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார்..! அந்த மருத்துவமனையின் டீனோ "இந்த விஷயத்தில் எந்த ஆதாரமும் எங்களிடமும் இல்லை.." என்று கைவிரித்தார்..!

தண்டுகரின் வக்கீல் ஒய்.பி.சிங் போலீஸாரை விமர்சித்ததோடு "இது நம்ப முடியாத செயல்.. மிக முக்கியமான தடயத்தை இந்த வழக்கில் இருந்து போலீஸார் அலட்சியமாக தூக்கியெறிந்திருப்பதை சாதாரண செயலாக கருத முடியாது.. இதில் ஏதோ விஷயம் இருக்கிறது.. சில போலீஸ் அதிகாரிகள் டிபார்ட்மெண்ட்டுக்குள்ளேயே சொல்லி வருவதுபோல இது தரம் குறைந்த ஆடையாகத்தான் இருக்க வேண்டும். இதனை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணை தேவை..." என்றார்.. இந்த அளவுக்கு மீடியாக்களும் தங்களது குரலை உயர்த்திக் கொண்டேயிருந்தன..!

இந்த நேரத்தில் கர்காரேவின் மனைவி கவிதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனது கணவர் அணிந்திருந்த புல்லட் புரூப் ஆடைகள் பற்றி கேள்விகளை எழுப்பினார். இதுதான் இந்த 'ஆரம்பம்' படத்தின் கதைச்சுருக்கத்தை எழுத விஷ்ணுவர்த்தனுக்கு உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!

கவிதாவுக்கு மும்பை போலீஸ் நிர்வாகம் அளித்த பதில், "புல்லட் புரூப் ஆடைகள் வாங்கியது தொடர்பான கோப்புகள் இப்போது காணாமல் போய்விட்டதால், இதற்கு எங்களால் பதில் சொல்ல முடியாது.." என்பதுதான்..! 

அவ்வளவுதான்..! மீடியாக்கள் மும்பை போலீஸின் உள்ளே புகுந்து தங்களுக்குத் தெரிந்த அளவுக்கு தகவல்களை திரட்டியபோது கிடைத்தவைகள் அந்த புல்லட் புரூப் ஆடைகள் தரம் குறைந்தவையாகவே இருக்கலாம் என்ற சந்தேகத்தையே அதிகப்படுத்தின..!

2004-ம் ஆண்டு இதே மும்பை போலீஸின் நிர்வாகப் பிரிவில் ஜாயிண்ட் கமிஷனராக கர்காரே இருந்தபோது அவர்தான் இந்த ஆடைகளை தரம் பார்த்து சோதனை செய்தாராம்.. அப்போதே, "இது ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வரும் குண்டுகளை தடுக்காதே.. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பிஸ்டலில் சுடும் குண்டுகளை மட்டுமே இது தடுக்கும். இது மும்பை போலீஸாருக்கு உகந்ததாக இருக்காது.." என்றே கருத்து தெரிவித்திருந்தாராம் கர்காரே.. ஆனால் வெகு சீக்கிரமாகவே அவரை அந்தப் பதவியிலிருந்து தூக்கிவிட்டதால்... அதற்குப் பிறகு வந்தவர்கள் கையொப்பமிட்டு வேகமாக பட்டுவாடாக்கள் நடந்து இந்த கொள்முதல் அரங்கேறிவிட்டதாக மீடியாக்கள் எழுதித் தள்ளியிருந்தன..!

உண்மையில் ஹேமர்ந்த் கர்காரேவின் உடலை 8 குண்டுகள் துளைத்திருந்தன. அதில் தோள்பட்டை பகுதியில் மட்டும் 5 குண்டுகள். வலது நெஞ்சு பகுதியில் 3 குண்டுகள் பாய்ந்திருந்தன. இத்தனைக்கும் அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில்தான் அந்த ஆடையை அணிந்தார்.(பார்க்க வீடியோ) அப்போது அவர் அணிந்தவிதம் சற்றும் பொருத்தமாக இல்லை. முழுமையானதாக இல்லை என்று மும்பை போலீஸார் சிலரை வைத்து மீடியாவில் கதற வைத்தது மகாராஷ்டிரா அரசு.. 

ஆனால், அசோக சக்கர விருது கொடுத்து கவுரவித்த ஒரு வீரரின் மரணத்திற்கு நியாயம் கற்பிக்கவே மாநில அரசு முயல்வதாக எதிர்க்கட்சிகளும், போலீஸில் ஒரு பிரிவினரும், கர்காரேவின் குடும்பத்தினரும் இப்போதுவரையிலும் சொல்லி வருகின்றனர்..! 

மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் அசோக் சவான், இதனை முற்றிலும் மறுத்து.. "எந்த ஊழலும் நடக்கவே இல்லை.." என்றார். "அப்போ அந்த பைல்கள் என்னாச்சு..?" என்ற கேள்விக்கு "எனக்குத் தெரியாது. அப்போது நான் முதல்வராக இல்லை..." என்று ஒருவரியில் கூறி தப்பித்துக் கொண்டார். அரசியல்வியாதிகளுக்கு பேசுறதுக்கு சொல்லியா தரணும்?

இதிலும் ஒரு சுவாரஸ்யம்.. இந்தத் தாக்குதல் நடந்த சமயம் முதல்வராக இருந்தவர் விலாஸ்ராவ் தேஷ்முக். நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கின் தந்தை. நடிகை ஜெனிலியாவின் மாமனார். சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு பெரிதும் பாதிக்கப்பட்ட தாஜ் ஹோட்டலை சுற்றிப் பார்க்க சென்றார் முதல்வர் தேஷ்முக். அவர் மட்டும் சென்றிருந்தால் பிரச்சினையிருந்திருக்காது. உடன் தனது மகன் நடிகர் ரித்திஷ் தேஷ்முக்கையும், பாலிவுட் இயக்குநர் ராம்கோபால்வர்மாவையும் அழைத்துச் சென்றது பெரும் பிரச்சினையானது..! 

எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டு சவுண்டு கொடுத்தன. "நாங்களே எழவு வீட்டுல இருக்கிற மாதிரி இருக்கிறோம். ரத்தத்தைக்கூட துடைக்கலை.. அதுக்குள்ள அதை சினிமாவாக்குறாங்களா..? இதுக்கு மாநில அரசே உடந்தையாகுதா..?" என்று கோபக்கனைகள் நாலாபுறமும் இருந்து வர.. அப்போதைக்கு மும்பை இருந்த நிலைமைக்கு மக்களைச் சமாதானப்படுத்தவும், மாநில அரசியலை சரி செய்யவும் விலாஷ்ராவ் தேஷ்முக்கை டெல்லி அரசியலுக்கு வரச் சொல்லிவிட்டு அசோக் சவானை முதல்வராக்கினார்கள் காங்கிரஸ் தலைவர்கள்..!

இந்தத் தரம் குறைந்த புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் மேட்டரில் அரசியல்வியாதிகள் ஊழல் செய்யாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்பது இந்திய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் விமர்சகர்களின் கருத்து..! இந்த ஒரு பிரச்சினையை மையக் கருவாக வைத்துத்தான் இந்த 'ஆரம்ப'த்தை அடி பின்னியிருக்கிறார் விஷ்ணுவர்த்தன்..!


புல்லட் புரூப் ஜாக்கெட் தரமில்லாததால் தனது உயிர் நண்பரை இழக்கிறார் மும்பை போலீஸின் தீவிரவாத தடுப்பு பிரிவில் இருக்கும் அஜீத்.. நண்பனின் சாவுக்குக் காரணமான இந்த ஊழலை விசாரிக்கப் போக.. வேலையும் போய்.. இவரது குடும்பமும் செத்துவிட.. பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறார்.. இந்த ஊழலில் கை மாறிய ஊழல் பணம் மொத்தமும் சுவிஸ் வங்கியில் பத்திரமாக இருப்பதை அறிகிறார்..!

போலீஸ் டிஜிபி, உள்துறை மந்திரி, சில புரோக்கர்கள் இவர்களை குறி வைக்கிறார் அஜீத். அவர்களும் இவருக்குக் குறி வைத்து அஜீத் மீது பழி சுமத்தி, சஸ்பெண்ட் செய்து.. அவரை கைது செய்து குற்றுயிரும், குலையிருமாக ஆக்கிவிடுகிறார்கள். செத்துவிட்டார் என்று அவர்கள் நினைக்க.. அஜீத் என்றும் அழகனாக திரும்பி வருகிறார்..!

இணைய ஹேக்கிங்கில் திறமைசாலியான ஆர்யாவை போலீஸ் ஸ்டைலில் கடத்தி தன்னுடன் வைத்துக் கொண்டு தனது திட்டங்களை செயல்படுத்தப் பார்க்கிறார்.. இவரைப் புரிந்து கொள்ளாத ஆர்யா அஜீத்தை போலீஸில் மாட்டிவிட.. அஜீத் கூடவே இருக்கும் நயன்தாரா அஜீத்தின் பின்னணி கதையை 'நல்லதங்காள் கதை'போல் உருக்கமாக ஆர்யாவிடம் சொல்ல.. பிறகென்ன..? ஆர்யா மனம் மாறி 'தலை'யை காப்பாற்ற.. இருவரும் சேர்ந்த சுவிஸ் வங்கி பணத்தை இந்த ரிசர்வ் வங்கி அக்கவுண்ட்டுக்கே மாத்துறாங்க.. 

உள்துறை மந்திரி ஆர்யாவின் காதலியான டாப்ஸியை கடத்தி வைக்க.. எல்லை தாண்டிய தீவிரவாதியை அஜீத் கடத்தி வைக்க.. பதிலுக்கு உள்துறை மந்திரியின் மகளை தீவிரவாதியின் அப்பன் கடத்தி வைக்க..! செம டிவிஸ்ட்டாகிறது கிளைமாக்ஸ்..!


ரஜினிக்கு பின்பு ஸ்டைலுக்கு அஜீத்துதான்..! சந்தேகமேயில்லை.. ஸ்கிரினீல் அவர் மட்டுமே தெரிகிற காட்சியில் அழகு கொட்டுகிறது..! அந்தக் கம்பீரத்திற்கே தமிழகத்து ரசிகர்கள் சொக்கிப் போய் இருக்கிறார்கள் போல தெரிகிறது..! சக நடிகரின் படத்தை சக நடிகர்களே பார்க்கத் துடிக்கும் லிஸ்ட்டில் ரஜினி, கமலுக்கு பிறகு இப்போது அஜீத்துதான்.. 'தல..' 'தல..' என்று என்று அனைவரும் தவியாய் தவித்து இன்றைய இந்த 'ஆரம்ப'த்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்..! படத்தின் ஆதாரமே 'தல' அஜீத்துதான்..! 

ஆர்யா இந்தப் படத்தில் நடித்ததே பாராட்டுக்குரிய விஷயம்..! இவருக்கு மட்டுமே நடிப்புக்குரிய ஸ்கோப் கொஞ்சூண்டு இருக்கு..! அஜீத்திடம் மாட்டிக் கொண்டு புலம்புவதைவிடவும் சுவிஸ்  வங்கி அக்கவுண்ட்டை மாற்றும் காட்சியில் சாதாரணமாக இவர் பேசும் பேச்சே வெடியாய் இருக்கிறது..! காலேஜ் டேயில் இவரது கேரக்டர் ஸ்கெட்ச்.. அந்த குண்டு பையனாக மேக்கப்பெல்லாம் போட்டு நிசமாகவே நடித்திருக்கிறார் ஆர்யா..!  அஜீத்தின் கதையைக் கேட்டவுடனேயே மனம் மாறும் ஆர்யாவின் நடிப்பையெல்லாம் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.. இது மாதிரியான மொக்கை காட்சிகள் நிறையவே இருக்கின்றன படத்தில்..!

டாப்ஸியின் பளீர் சிரிப்பு கொஞ்சம் கவர்கிறது..! கல்லூரியில் ஆர்யா செடியை கொடுத்து 'ஐ லவ் யூ' சொல்வதை ஏற்க முடியாமல் கொஞ்சிவிட்டுப் போகும் அழகு.. கடைசிவரையிலும் அழகாய் நடித்திருக்கிறது.. இது போதும் ஆர்யாவுக்கு..!

நயன்தாராவின் அழகை சிந்தாமல் சிதறாமல் எடுத்துக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ். அதிலும் ஹோட்டலில் ஒருத்தனை மடக்க முக்காலே மூணு வீச சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அவர் காட்டும் அழகு..! சென்சார் போர்டில் எப்படி விட்டாங்கன்னு தெரியலையே..? இந்த ஸ்டில்லையே இப்பத்தான் 4 நாளைக்கு முன்னாடிதான் ரிலீஸ் செஞ்சாங்க..! 


இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக ஹோட்டல் அறையில் அவனது 'பாயிண்ட்'டுக்கு குறி வைத்து சுட தயாராகும் நயன்தாராவை நினைத்தால் இயக்குநருக்கு பிடித்தமானவர்கள் லிஸ்ட்டில் இவர் இருக்கும் மர்மம் புரிகிறது..! நல்லவேளை 'அந்த' இடத்துல சுடலை...! இத்தனையிருந்தும் 'தல'கூட நயன்ஸுக்கு ஒரு டூயட்கூட வைக்காதது வன்மையாக்க் கண்டிக்கத்தக்கது..!

அதுல் குல்கர்னி போலீஸ் டிஜிபியாக வருகிறார்.. டக்குபதி ராணா.. தெலுங்குக்கு உதவுமே என்ற ரீதியில் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறார். எப்படி இதுல நடிக்க ஒத்துக்கிட்டாருன்னு தெரியலை.. பட்.. ஓகே..  ஆக்சன் படத்துல எல்லாம் நடிப்பை எதிர்பார்க்கக் கூடாதுன்றதாலேயும்.. நம்மூரு மாப்ளையாகப் போறாருன்றதாலேயும் நாமளே குறை சொல்லக் கூடாது.. நல்லாயிருக்கட்டும்..! அந்த சிறப்பு போலீஸ் படையினருக்கான கெத்தும், வேகமும் அவர்கிட்ட நிறையவே இருக்கு..! 'புதுப்பாட்டு' ஹீரோயின் சுமா ரங்கநாத் இதுல ஒரு சின்ன வில்லி கேரக்டர்ல வந்து வீணா செத்துப் போறாரு..! 

யாருய்யா அந்த மகேஷ் மஞ்ச்ரேகர்.. உள்துறை மந்திரியா நடிச்சவரு.. கிளைமாக்ஸ்ல பின்னிட்டாரு..! அவருடைய டயலாக் மாடுலேஷனும், நடிப்பும் அசத்தல்..! படத்தின் வெற்றிக்கு படத்தின் கதையும் ஒரு காரணம்..! இந்தியாவையே இப்போது ஆட்டிப் படைக்கும் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதை எந்த இந்தியன்.. எந்த தமிழன்தான் எதிர்ப்பான்..? கொல்றதுல தப்பே இல்லைன்னு சொல்லும் பொதுசனம்.. ! அந்த சனம்தான் இப்போது இந்தப் படத்தை ஹிட்டாக்கிக் கொண்டிருக்கிறது.. "உங்க சிஸ்டமே ஊழல்தாண்டா.. சிஸ்டமே நீங்கதாண்டா.." என்று அஜீத் பொங்கும் கிளைமாக்ஸ் காட்சி மனதைத் தொடுவது உண்மைதான்..! இந்த அளவுக்கு தைரியமாக அனுமதித்த சென்சார் போர்டுக்கு ஒரு 'ஜே' போடலாம்..! 

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஏதோ 3 பாட்டு.. ஒப்பேத்தியிருக்காரு..! இங்க எவனுக்கு புரிஞ்சதுன்னு தெரியலை..! ஒளிப்பதிவையும், டான்ஸ் மாஸ்டர்களையும் பாராட்டியே ஆகணும்..! துவக்கக் காட்சில இருந்து கடைசிவரைக்கும் துல்லியமான ஒளிப்பதிவு..! ஹோலி பண்டிகை பாடல் காட்சியிலும், அறிமுகப் பாடல் காட்சியிலும் 'தல' அஜீத்திற்கு பொருத்தமான நடனத்தை அமைத்து கைதட்டல் வாங்க வைத்திருக்கிறார்.. புல்லரிக்குது..!

விஷ்ணுவர்த்தனின் மேக்கிங் ஸ்டைல் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.. ஸ்டைலிஷான இவரது வொர்க் பில்லா-2-லும் இருந்திருந்தால் அந்தப் படமும் ஹிட்டாகியிருக்கும்..! பல லாஜிக் மீறல்களுடனும் எல்லாத் தரப்பினரும் 'தல'யை ரசித்துப் பார்க்குற மாதிரி ஒரு படத்தைக் கொடுத்திருக்காரு.. இதுக்கு ரொம்ப உதவியாயிருப்பது இரட்டையர்கள் சுபா எழுதியிருக்கும் விறுவிறு திரைக்கதை..!

ஊழல்தான்னு நல்லா தெரிஞ்சிருச்சு.. தப்பிச்சு வந்த பின்னாடியும் மீடியாவை வைச்சே இதை பரப்பியிருக்கலாமே..? எதுக்காக புரோக்கரோட பில்டிங்கை குண்டு வைச்சு தகர்க்கணும்..? யாருக்கும் பாதிப்பில்லைன்னாலும், அதுவும் ஒருவகைல பயங்கரவாதம்தானே..? 

புரோக்கரை கொலை செய்துவிட்டுத் தப்பிக்கும்போது கார் சாவியை விட்டுவிட்டுப் போகிறார் ஆர்யா.. அப்போது அந்த சாவியை வைத்துதான் ஆளை கண்டுபிடிக்கிறார்கள். ஆர்யா இப்போது அஜீத்தின் கன்ட்ரோலில்.. அவரோட காரையா இப்பவும் பயன்படுத்தினார்கள்..? 

அதுல் குல்கர்னி அஜீத்தின் புகைப்படத்தைப் பார்த்த்தும் ஜெர்க் ஆகிறார். ஆள்தான் தெரிஞ்சிருச்சுல்ல.. அதான் ரகசியமா போய் மந்திரியை பார்த்து பேசி முடிக்கிறதைவிட்டுட்டு நல்லவரான கிஷோரையும் கூட்டிட்டுப் போய் அமைச்சரோட மோத வைக்கிறார்.. இது ஏன்னுதான் தெரியலை..!

பொடனில நாலு தட்டு தட்டினாலே காணாமப் போயிருப்பான் அந்தப் பையன். நயன்தாரா அவனை சமாளிக்க துப்பாக்கியை நீட்டிக்கிட்டே இருக்குறது அவ்வளவு நல்லவா இருக்கு..?

என்னதான் இணைய ஹேக்கர்ஸ்ன்னாலும் சுவிஸ் வங்கிவரைக்கும் நம்ம தமிழ்நாட்டோட திறமையைக் கொண்டு போயிருக்க வேண்டாம்..! அந்த அளவுக்கா அவங்க முட்டாளா இருப்பாங்க..? ஆனாலும் அந்தக் காட்சியை ருசியாகவே எடுத்திருக்கிறார்கள்..! 

அக்கவுண்ட்டை மாத்துறதுக்கு இந்திய ரிசர்வ் வங்கியோட அக்கவுண்ட்டையே சொல்றதெல்லாம் ரொம்ப டூ மச்சா இல்லை..? ரிசர்வ் வங்கியோட அக்கவுண்ட் நம்பரை யாராச்சும் வாங்கிக் குடுங்கப்பா..! நானும் தெரிஞ்சுக்குறேன்..!

நடுரோட்டுல போலீஸ்கிட்டேயிருந்து தப்பிச்சு துபாய்க்கு தப்பிப் போறாங்க..! அதுக்குள்ள இவங்க பாஸ்போர்ட்டை முடக்க மாட்டாங்களா என்ன..?  

துபாய் என்ன நம்மூரு மாதிரியா..? குருவியைச் சுடுறா மாதிரி சட்டுப்புட்டுன்னு சுட்டுப்புட்டு அடுத்த பிளைட்டை பிடிச்சு இந்தியாவுக்கு வந்தர்றாங்க.. !

நல்ல போலீஸ் கிஷோரை நயன்தாரா எப்படி புடிச்சாங்கன்னு தெரியலை.. அவர் வேற துப்பாக்கி ஆளுகளோட வந்து அஜீத் அண்ட் கோ-வை காப்பாத்திர்றாரு..!

கிஷோரை வைச்சு செய்யும் அந்த மந்திரியோட டிவிஸ்ட்டும் நல்லாத்தான் இருக்கு..!  

இப்படி கேட்டுக்கிட்டேயும் போகலாம்.. கேக்காமலேயும் போகலாம்.. ஆனா திரையிட்ட அனைத்து இடங்களிலும் தியேட்டருக்குள்ள கொண்டாட்டம்ன்ற பீலிங்கை தவிர வேற எதுவுமே இல்லைன்றாங்க.. எனக்கு என்னவோ மங்காத்தா மாதிரி எதிர்பார்ப்பையும் மீறிய உணர்வை இப்படம் தரலை..! ஏதோ டைம் பாஸை நிறைவு செஞ்சிருக்கு..! அவ்வளவுதான்..! ஆனால் படத்தின் வசூல் பட்டையைக் கிளப்பப் போகுது..! இது மட்டும் உறுதி..!

என்ன ஒரேயொரு வருத்தம்..! கடைசீல அந்த தியாகத் திருவுருவம் ஹேமந்த் கர்காரேவின் புகைப்படத்தையும் காண்பித்து அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்..! தெரியாதவர்களாவது தெரிந்து கொண்டிருப்பார்கள்..! 

38 comments:

ராஜ் said...

யப்பா...எவ்வளவு பெரிய பதிவு !!!!
கலக்கல் விமர்சனம் அண்ணே.

US ல நான் இருக்கிற ஊருல மொத்தம் 15 ஷோ, ஒரு வாரம் ஓட போகுது. விஸ்வரூபம் கூட முனு நாள் தான் ஒடிச்சு. வசூல்ல கண்டிப்பா பெரிய ரெகார்ட் பண்ண போகுது...

ஸ்ரீராம். said...

முன்னுரை கொஞ்சம் நீளம் என்றாலும் informative! //சக நடிகர்களே பார்க்கத் துடிக்கும்....// சிம்பு காசி தியேட்டர்ல காங்கார்த்தால படம் பார்த்தது நியூஸ் ஆயிடுச்சே! கடைசி வரிகள் உண்மை உண்மை செய்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

Manimaran said...


வழக்கம்போல வித்தியாசனாக கோணம்...கலக்கல்,. ஹேமந்த் கர்காரேவின் சாவுதான் படத்தில் ஆரம்ப புள்ளி என்று உங்கள் பதிவில் மூலம்தான் தெரிந்துகொண்டேன்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

ஜோதிஜி திருப்பூர் said...

தொடர்புடைய விசயங்களைச் சொல்லி விமர்சித்தது அருமையாக உள்ளது.

Jamal Mohd said...

அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் !

RAVI said...

OKAY.PAATHUTUREN :)

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

யப்பா...எவ்வளவு பெரிய பதிவு !!!!
கலக்கல் விமர்சனம் அண்ணே.]]]

இதுவா பெரிய பதிவு..? கொஞ்சம்தாம்பா எழுதியிருக்கேன். இதைப் போய் இப்படி சொல்றியே..?

[[[US-ல நான் இருக்கிற ஊருல மொத்தம் 15 ஷோ, ஒரு வாரம் ஓட போகுது. விஸ்வரூபம் கூட முனு நாள்தான் ஒடிச்சு. வசூல்ல கண்டிப்பா பெரிய ரெகார்ட் பண்ண போகுது..]]]

பண்ணட்டும்.. மனிதர்களின் சாதனைகள் அனைத்துமே முறியடிக்கப்படக் கூடியவைதான்..!

உண்மைத்தமிழன் said...

ஸ்ரீராம். said...
முன்னுரை கொஞ்சம் நீளம் என்றாலும் informative!]]]

புல்லட் புரூப் உடையில் ஊழல் என்றவுடனேயே எனக்கு சட்டென்று ஹேமந்த் கர்காரேவின் ஞாபகம் வந்துவிட்டது.. நேரமானாலும் பரவாயில்லை என்று தோண்டுத் துருவி படித்துப் பார்த்துவிட்டு எழுதினேன்..!

[[[//சக நடிகர்களே பார்க்கத் துடிக்கும்....//

சிம்பு காசி தியேட்டர்ல காங்கார்த்தால படம் பார்த்தது நியூஸ் ஆயிடுச்சே!]]]

உண்மைதான்.. நேற்றைக்கு பல சினிமா நட்சத்திரங்கள் தியேட்டர்களுக்கு சென்றே படத்தைப் பார்த்திருக்கிறார்கள்..!

[[[கடைசி வரிகள் உண்மை உண்மை செய்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.]]]

என்ன ஒரு போட்டோ போட்டு ஒரு பாரால அவரைப் பத்திச் சொல்றதுக்கென்ன குறைஞ்சா போச்சு..?

உண்மைத்தமிழன் said...

[[[Manimaran said...

வழக்கம்போல வித்தியாசனாக கோணம்...கலக்கல்,. ஹேமந்த் கர்காரேவின் சாவுதான் படத்தில் ஆரம்ப புள்ளி என்று உங்கள் பதிவில் மூலம்தான் தெரிந்து கொண்டேன்.]]]

வருகைக்கு நன்றிகள் மணிமாறன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... நன்றி...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...]]]

வருகைக்கு நன்றிகள் அண்ணா..! உங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

தொடர்புடைய விசயங்களைச் சொல்லி விமர்சித்தது அருமையாக உள்ளது.]]]

அந்தக் காட்சியை ஸ்கிரீனில் பார்த்ததுமே எனக்கு ஹேமர்ந்த் கர்காரேவின் நியாபகம்தான் வந்தது..! அதனால்தான் எழுதியே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன்..! எல்லாம் கற்பனையே என்று சொல்லி உண்மைக் கதைக் கருவைத்தான் எடுத்திருக்கிறார் இயக்குநர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jamal Mohd said...

அனைவருக்கும் இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் !]]]

மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

OKAY.PAATHUTUREN :)]]]

அவசியம் பாருங்க பிரதர்..!

பைத்தியக்காரன் said...

முதல் பகுதி நல்ல ஹோம் ஓர்க் அண்ணே.

வாழ்த்துகள்

- கே.என்.சிவராமன்

rajasundararajan said...

அப்படிப் போடு அறுவாளை!

இந்தப் படத்தைப் பார்க்கவேண்டிய தேவை இருக்காது என்று நினைத்தேன். அப்படித்தான் இன்றைக்குக் காலையில் தொலைபேசிய பெங்களூர் நண்பர் ஒருவருக்குக் கூடச் சொன்னேன். ஆனால்...

உங்கள் எழுத்து மிக மிக அருமை! இதில் நீங்கள் போட்டிருக்கிற உழைப்பும்!

காட்டயம் பார்த்துவிடுகிறேன், தம்பி. உங்களைப் போன்றவர்களுக்கு சினிமாத்திறை நன்றிக்கடன் படவேண்டும். ஆனால் படாது. விட்டுத் தள்ளுங்கள், தளராமல் நம் வேலையை நாம் பார்த்துகொண்ண்டே இருப்போம்.

Joseph said...

Billa -2 is it by Vishnu Vardan ?

This film was directed by Chackri Toleti. Vishnu vardhan not in this movie in any role.

Sketch Sahul said...

மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.

ravikumar said...

good review with facts of Maharashtra & Officer details. thanks for info

சக்கர கட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

s suresh said...

விமர்சனம் நிறைய படிச்சுட்டேன்! முன்னுரை நிறைய தகவல்கள் தந்தது!அருமையான பகிர்வு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Jamal Mohd said...

ரங் தே பசந்தி படம் கூட இதை ஒத்த கதை என நியாபகம். அதில் விசயம் தரமற்ற ராணுவ ஹெலிகாப்டர்.

உண்மைத்தமிழன் said...

[[[பைத்தியக்காரன் said...

முதல் பகுதி நல்ல ஹோம் ஓர்க் அண்ணே.

வாழ்த்துகள்

- கே.என்.சிவராமன்]]]

நன்றி சிவராமன்..! எல்லாம் உங்க ஆசீர்வாதம்..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

அப்படிப் போடு அறுவாளை!
இந்தப் படத்தைப் பார்க்கவேண்டிய தேவை இருக்காது என்று நினைத்தேன். அப்படித்தான் இன்றைக்குக் காலையில் தொலைபேசிய பெங்களூர் நண்பர் ஒருவருக்குக் கூடச் சொன்னேன். ஆனால்...]]]

ஏன் இந்த கொலை வெறி..? எனக்கு முன்பாக எழுதிய விமர்சனங்களும் படம் நல்லாயிருக்குன்னுதானே எழுதியிருந்தாங்க..?

[[[உங்கள் எழுத்து மிக மிக அருமை! இதில் நீங்கள் போட்டிருக்கிற உழைப்பும்! காட்டயம் பார்த்து விடுகிறேன், தம்பி. உங்களைப் போன்றவர்களுக்கு சினிமாத்திறை நன்றிக் கடன்படவேண்டும். ஆனால் படாது. விட்டுத் தள்ளுங்கள், தளராமல் நம் வேலையை நாம் பார்த்துகொண்ண்டே இருப்போம்.]]]

பார்த்துட்டு வந்து சொல்லுண்ணே..! காத்திருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Joseph said...

Billa -2 is it by Vishnu Vardan ?
This film was directed by Chackri Toleti. Vishnu vardhan not in this movie in any role.]]]

நானும் அதைத்தான் எழுதியிருக்கேன்.. பில்ல3-2-ஐ விஷ்ணுவர்த்தனே இயக்கியிருக்கலாமே என்றுதான் சொல்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sketch Sahul said...

மாலேகான் குண்டு வெடிப்பிலும் அதற்கு முன்னும் பின்னும் நடந்த குண்டு வெடிப்புகள் எல்லாவற்றிலும் சங்பரிவாரின் கை இருக்கிறது என்பதை உலகம் அறிய செய்தவர். தான் இந்துவாக இருந்தாலும் தன் நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து சாமியார்களையும், ஜெனரல் புரோகிதையும் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதனால் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி போன்றோரின் விமர்சனத்துக்கும் உள்ளானவர். சங் பரிவாரும் இவருக்கு குறி வைத்திருந்தது. தன் முடிவு இதனால் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானித்து பல கைதுகளை தீவிரமாக செய்த இவர் ஒரு வீரத் திருமகன்தான்.]]]

பாவம்.. இவரது ஆயுள் முடிவுக்கு இந்த நாடும், ஊழலும், அரசியல்வியாதிகளும் காரணமாக இருந்துவிட்டார்களஏ என்பதுதான் கொடுமை..! நாடு கொடுத்த பரிசு இதுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ravikumar said...

good review with facts of Maharashtra & Officer details. thanks for info.]]]

அவசியம் பாருங்கள் ரவிக்குமார்..!

Bharani Tharan said...

Boss billa2 directed by chakri toleti.
Not vishnuvarthan

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்*]]]

உங்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

விமர்சனம் நிறைய படிச்சுட்டேன்! முன்னுரை நிறைய தகவல்கள் தந்தது!அருமையான பகிர்வு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!]]]

வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Jamal Mohd said...

ரங் தே பசந்தி படம் கூட இதை ஒத்த கதை என நியாபகம். அதில் விசயம் தரமற்ற ராணுவ ஹெலிகாப்டர்.]]]

ஆமாம்.. ஒவ்வொரு இந்தியனையும் தற்போது கவலைக்குள்ளாக்கியிருக்கும் விஷயம் ஊழல்தான்..! அதனால்தான் இது போன்ற படங்கள் ஜெயிக்கின்றன..!

உண்மைத்தமிழன் said...

[[[Bharani Tharan said...

Boss billa2 directed by chakri toleti.
Not vishnuvarthan.]]]

நானும் அதைத்தானே சொல்லியிருக்கேன்..!?

Nondavan said...

அண்ணே... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

துபாய்க்கு திரும்பியவுடன் முதலில் படிக்க நினைக்கும் ஒரு ப்ளாக் உங்களுடையது தான்....

செம அருமையாக சொல்லிருக்கீங்க, ஹேமந்த் கர்கரே விஷயத்தை....

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணே... இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

துபாய்க்கு திரும்பியவுடன் முதலில் படிக்க நினைக்கும் ஒரு ப்ளாக் உங்களுடையதுதான்.

செம அருமையாக சொல்லிருக்கீங்க, ஹேமந்த் கர்கரே விஷயத்தை.]]]

அவசியம் படிங்க.. படத்தையும் பாருங்க நொந்தவன் ஸார்..!

கேரளாக்காரன் said...

//அப்போது அந்த சாவியை வைத்துதான் ஆளை கண்டுபிடிக்கிறார்கள். ஆர்யா இப்போது அஜீத்தின் கன்ட்ரோலில்.. அவரோட காரையா இப்பவும் பயன்படுத்தினார்கள்..?//

சென்னை ரிஜிஸ்ட்ரேஷன் செர்ரி கார்ன்னு தெளிவா சொல்லுவாங்க....

அது ஆர்யா சென்னைல உபயோகப்படுத்துன கார் சாவி.

சாவி இல்லாம ஸ்டார்ட் கார் ஸ்டார்ட் பண்ண முடியாது ஜி

உண்மைத்தமிழன் said...

[[[கேரளாக்காரன் said...

//அப்போது அந்த சாவியை வைத்துதான் ஆளை கண்டுபிடிக்கிறார்கள். ஆர்யா இப்போது அஜீத்தின் கன்ட்ரோலில்.. அவரோட காரையா இப்பவும் பயன்படுத்தினார்கள்..?//

சென்னை ரிஜிஸ்ட்ரேஷன் செர்ரி கார்ன்னு தெளிவா சொல்லுவாங்க.

அது ஆர்யா சென்னைல உபயோகப்படுத்துன கார் சாவி.

சாவி இல்லாம ஸ்டார்ட் கார் ஸ்டார்ட் பண்ண முடியாது ஜி..]]]

அதான் நானும் சந்தேகமா கேட்டேன்..! வசனம் சரியாகக் கேட்கவில்லை.. அதுதான் பிரச்சினை.. நன்றிகள் ஸார்..!

Sahasranaman Sankaran said...

Fast paced action thriller! மும்பை இல் 26/11 அன்று நடந்த படு கொலைகளுக்கு காரணமாய் இருந்த ஊழல் பெருச்சாளிகளை இதைவிட அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கமுடியாது. ஊழல் அரசியல்வாதிஇன்
உடலில் பொருத்திய பாம்ப் ஐ டிஃப்யூஸ்ஸ் செய்யாமல் தன் போலீஸ் நண்பர்களுடன் இறுமாப்புடன் கிஷோர் நடந்து செல்லும் காட்சி படத்தின் ஹைலைட். The end justifies the means. அருமையான விமர்சனம். SAHASRANAMAN.S

உண்மைத்தமிழன் said...

[[[Sahasranaman Sankaran said...

Fast paced action thriller! மும்பை இல் 26/11 அன்று நடந்த படு கொலைகளுக்கு காரணமாய் இருந்த ஊழல் பெருச்சாளிகளை இதைவிட அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கமுடியாது. ஊழல் அரசியல்வாதிஇன்
உடலில் பொருத்திய பாம்ப் ஐ டிஃப்யூஸ்ஸ் செய்யாமல் தன் போலீஸ் நண்பர்களுடன் இறுமாப்புடன் கிஷோர் நடந்து செல்லும் காட்சி படத்தின் ஹைலைட். The end justifies the means. அருமையான விமர்சனம். SAHASRANAMAN.S]]]

வருகைக்கும், விமர்சனத்திற்கும் மிக்க நன்றிகள் ஸார்..!