இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - சினிமா விமர்சனம்

08-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொடர்ச்சியாக ஹிட்ட்டித்து வரும் நாயகர்களில் சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டு வருகிறார் விஜய் சேதுபதி.. இந்தப் படத்திற்குக் கிடைத்த கிராண்ட் ஓப்பனிங்.. இப்போது கூகிளில் விஜய் சேதுபதியின் அலுவலகத்தை சர்ச் செய்யும் அளவுக்கு கோடம்பாக்கத்தை உசுப்பிவிட்டிருக்கிறது..!

தலைவா படத்துக்கே 2-வது நாளே காத்தாடிய சாலிகிராமம் எஸ்எஸ்ஆர் பங்கஜம் தியேட்டரில் தொடர்ச்சியாக 3-வது நாளாக பகல் காட்சியே முக்கால்வாசி நிரம்பியது என்றால் எப்படியிருக்கிறது..? நம்பத்தான் முடியலை.. ஆனால் படம் எதிர்பார்த்த திருப்தியைத் தரவில்லை என்றாலும், இந்த மவுத்டாக்கை புறக்கணித்துவிட்டு ரசிகர்கள் கூட்டம் பறக்கிறது தியேட்டருக்கு..! எல்லாம் விஜய் சேதுபதிக்காக..!  

ஒரே கதையை நகர்த்துவதற்கு நமது இளையதலைமுறை இயக்குநர்களுக்கு என்ன கஷ்டமோ தெரியலை.. இது போன்ற 4 கதைகளை வைத்து அதனை ஒன்றிணைத்து ஒரே கதையாக்கும்வித்த்தை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறார்கள். இதுவும் அது போன்றதுதான்..!


இரண்டு காதல் கதைகள்.. இவர்களுக்கு நடுவில் இரண்டு சம்பவங்கள்.. இந்தச் சம்பவத்தில் இந்தக் காதலர்களும் சம்பந்தப்பட்டுவிட.. முடிச்சை எப்படி அவிழ்க்கிறார்கள் என்பதைத்தான் இப்படி நீட்டி, முழக்கி கொண்டு போய் முடித்திருக்கிறார்கள்.

முதல் 1 மணி நேரம் எனக்கு சிரிப்பே வரவில்லை. ஏதோ டயலாக் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.. நடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.. எப்போதுதான் இவர்கள் சப்ஜெக்ட்டுக்குள் நுழைவார்கள் என்று கொஞ்சம் கோபத்தையும் உண்டு பண்ணிவிட்டது முதல் பாதி..!

பசுபதியின் பஞ்சாயத்தின் இடையிலேயே திடீர், திடீரென்று அவர்களது காதல் கதையைச் சொல்லிக் கொண்டே போவதால் அது முடிந்து இது வந்து.. இது முடிந்து அது வந்து.. என்று இரண்டையுமே பெருமளவுக்கு ரசிக்க முடியாமல் போய்விட்டது..! 

இப்போதைய ஹீரோவுக்கான அடையாளமான ரவுடி கெட்டப்பில் சுமார் மூஞ்சி குமாரு அசத்தலாகத்தான் இருக்காரு.. அந்த மெட்ராஸ் பாஷையை எத்தனை படத்துல பார்த்தாலும், கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது.. ஒவ்வொருத்தரின் மாடுலேஷனிலும் அந்த பாஷை படுற பாட்டை கேட்டா.. இந்த தூயத் தமிழுக்கு முதல் எதிரி நமது மெட்ராஸ் பாஷைதான்னு உறுதியா சொல்லிரலாம்.. 

விஜய் சேதுபதி பின்றாரு.. இன்றைக்கு தேதில வயது முதிர்ந்த பல்லு போன பாட்டிகள்ல இருந்து குமரிகள்வரையிலும் எல்லாருக்கும் இவரை பிடிச்சுப் போச்சு.. இவரது நடிப்பே இயல்பானதாகவே இருப்பதால் இந்த ஈர்ப்பு இவருக்குக் கிடைத்திருப்பது இவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்..! 

அண்ணாச்சியை பார்த்து பயப்படாமல் அவரது அடிப்பொடிகளை டபாய்த்து.. அண்ணாச்சியையும் கலாய்த்து.. தனது வருங்கால மாமனரை நைஸ் பண்ணி.. தனது காதலியைப் பற்றியும், காதலைப் பற்றியும் முதல் ஒரு மணி நேரத்துக்கு அவர் காட்டுகின்ற நடிப்பு ஓகேதான் என்றாலும், நகைச்சுவை சுத்தமாக இல்லையே என்பதுதான் பெரும் குறை.. சீரியஸ் டைப்பு என்பதையும் ஏற்க முடியவில்லை. ரெண்டுங்கெட்டாத்தனமாக போய்விட்டது.. பிட்டு படம் என்று சொல்லி செல்போனில் தனது காதலியின் புகைப்படத்தைக் காட்டும் அலப்பறையில்தான் கொஞ்சம் புன்னகைக்க முடிந்தது..!

கிளைமாக்ஸின் அந்த 20 நிமிட காட்சிகள்தான் படத்தை மொக்கை என்று சொல்லவிடாமல் தடுத்துவிட்டது..!  திரும்பத் திரும்ப நந்திதாவிடம் ஐ லவ் யூ சொல்லிருவியான்னு கேட்டு கேட்டு டார்ச்சர் செய்யும் காட்சிகளில் மட்டுமேதான்யா காமெடி ரகளையே நடக்குது.. சிடுமூஞ்சிகளையும் நிச்சயம் சிரிக்க வைத்துவிடும் காட்சி அது..!

அட்டக்கத்தி நந்திதா.. பார்த்தாலே பக்கத்து வீட்டுக்கார பொண்ணு மாதிரியான பீலிங்தான் வரும்..! ஆனாலும் இது போன்ற அழகு ஹீரோயின்கள்.. ரவுடிகளைத்தான் காதலிக்கணும்ன்றது சினிமா விதின்றதால பொருத்தம் பார்க்காம ஓகே சொல்லித் தொலைய வேண்டியிருக்கு..! அவனை பிடிச்ச மாதிரியும் இருக்கு.. பிடிக்காத மாதிரியும் இருக்குன்னு சொல்லும்போதே கிளைமாக்ஸ் பிடிபட்டுவிடுகிறது.. ஆனாலும் இவரது காதலுக்கான அழுத்தமான காரணம் எதுவும் இல்லாமல் போக.. காதலுக்கு இங்கே வேலையே இல்லை.. ஆனால் காதலை ஏற்றுக் கொள்ளச் சொல்லி சேதுபதி செய்யும் டார்ச்சருக்கான சூழலும், காட்சியமைப்பும் ரகளையானது..!

சுமார் மூஞ்சி குமாருக்கு அடுத்து இன்னொரு ஹீரோ அஸ்வின்.. மார்க்கெட்டிங்கில் வேலை செய்யும் இளைஞர்கள் படும் அவஸ்தையை படம் முழுக்க காட்டியிருக்கிறார்..! மேனேஜர் பாஸ்கரிடமிருந்து தப்பிக்க இவர்கள் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு செய்யும் அந்த டிராமா படு சுவாரஸ்யமானது..! குடிப்பழக்கத்தினால் காதலை இழந்து.. வேலையை இழந்து.. கடைசியாக இன்னொரு உயிரும் பலியாகப் போகின்ற நேரத்தில் அதனைத் தவிர்க்க வேண்டி நடுராத்திரியில் சேதுபதியைத் தேடும் படலத்தைத் துவங்குகின்றனபோதுதான் ஒரு சீரியஸ் கதையை ஜாலியா சொல்லியிருக்காங்கன்றதே புரிய வருது..!

ஸ்வாதி.. தெத்துப் பல் அழகு என்றாலும் இதில் காட்டியவிதம் கோரமா இருக்கு.. "உன்னை போய் எப்படிடா லவ் பண்ணேன்..?" என்று புலம்பிக் கொண்டே "ஏன் நீ போன் செய்ய மாட்டியா..? பின்னால பாலோ பண்ண மாட்டியா..?" என்று திரும்பத் திரும்ப லவ்வுக்குள் விழுகும் குழப்பமான பெண்..! ஆனால் கடைசியில் இது எல்லாத்துக்கும் சேர்த்துதான் மருத்துவமனையில் அஸ்வினையும் சமாளித்து, போலீஸையும் சமாளித்து அனுப்பி வைக்கிறார்.. நல்ல கதைக்காக காத்திருந்தேன்னு சொல்லிட்டு இப்படி ஒரு கேரக்டர்ல நடிக்கிறது எந்த வகைல நியாயம்ன்னு தெரியலை.. இன்னொரு ஹீரோயின்.. பெரிய அளவுக்கான வேஷமில்லை.. பின்ன எதுக்கு இப்படியொரு டிராமா..?

சுமார் மூஞ்சி குமாருடன் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரையும் சேர்த்தே பாராட்டணும்.. "பிரண்டு.. லவ் மேட்டரு.. பீல் ஆகிட்டாப்புல.. ஆஃப் அடிச்சா கூல் ஆயிருவாரு.." என்ற டயலாக்கைச் சொல்லிக் கொண்டே சரக்கு தேடியலையும் அந்த போர்ஷனில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.. இந்த ரொம்ப சுமார் மூஞ்சி குமாருக்கும் டயலாக் மாடுலேஷன் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.. சென்னையிலேயே பிறந்த வளர்ந்தவங்களுக்குத்தான் இது அத்துப்படியாய் வரும்போலிருக்கு..! அண்ணாத்த என்று சொல்லிக் கொண்டே சேதுபதியே சமாளிக்கும்விதத்தில் இந்தப் பையனுக்கு இன்னமும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் ஒரு ரவுண்டு வருவாருன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துறேன்..!

அந்தக் கள்ளக்காதல்.. சூரி வரும் போர்ஷனில்.. அவர் கத்தியை வைத்துக் கொண்டு காற்றில் விசுக் விசுக்கென்று சுற்றுவது.. அது லின்க்காகி தப்பியோடுவது.. பேருந்தில் எதிர்பாராமல் சிக்குவது.. எல்லாமே வித்தியாசம்தான்.. ஒரு கேவலமான கள்ளக்காதல் கதையை காமெடிக்குள் திணித்து அதனை சாதாரண விஷயமாக்கி வைத்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது..! 

டாஸ்மாக்கில் நடக்கும் கொலை.. அதற்குப் பின் போலீஸ் உள்ளே வர.. அங்கேயிருந்த அனைவருமே போலீஸ் ஸ்டேஷனுக்குள் போக.. அங்கே நடக்கும் சில காட்சிகள் மிக இயல்பானவை.. அதில் ஒரு உருக்கத்தை காட்ட.. ஆக்ஸிடெண்ட் ஆன பெண்ணின் கணவர் அங்கே சிக்கியிருப்பதையும் காட்டி.. இந்தக் கதையினால்தான் கிளைமாக்ஸ்வரையிலும் இருக்க வைக்கப்பட்டோம் என்பதையும் சொல்லியாக வேண்டும்..! 

"காதலிச்சுட்டுப் போன பொண்ணுகளுக்காக பிரே பண்ணுங்கப்பா.." என்று தாத்தா வி.எஸ்.ராகவன் எடுத்துக் கொடுக்க அந்த ஒரு பாடல் மட்டுமே கவனத்தை ஈர்க்கிறது.. மற்றபடி வேற பாடல்களை யார் கேட்டா..? ஒரே நாளில்.. ஒரே இரவில் நடக்கின்ற கதையாகவே சென்றாலும்.. இடையிடையே வரும் பிளாஷ்பேக்குகள் படத்தை இது பற்றிய சிந்தனையே இல்லாமல் கொண்டு போய்விட்டன...

சென்னை பாஷைக்காகவும், லோக்கல் ஏரியாவில் படமாக்கவும் இயக்குநர் கோகுல் நிரம்பவே உழைத்திருக்கிறார் என்பது படத்தைப் பார்த்ததும் புரிகிறது..! 'ரவுத்திரம்' என்ற படத்தை எடுத்தவர் இந்த அளவுக்கு மாறுபட்ட ஒரு கோணத்தில் படம் எடுத்திருப்பதும் வரவேற்கத்தக்கதுதான்..! பாராட்டுக்குரியதுதான்..!

அதே சமயம் திரைக்கதையை இன்னமும் சுவாரஸ்யப்படுத்தி.. இன்னமும் நகைச்சுவையை அள்ளித் தெளித்திருந்தால் இந்த ஆண்டின் அடுத்த காமெடி ஹிட் என்று இதனைச் சொல்லியிருக்கலாம்..! ஜஸ்ட் மிஸ்ஸிங்.. பட் நல்ல மெஸேஜை காமெடியோடு சொல்ல முற்பட்டதினால்.. அந்த மெஸேஜே இதில் காணாமல் போய்விட்டதையும் அவர் உணர்வார் என்றே நினைக்கிறேன்..!

"குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்.. உங்களுடைய அந்த தவறினால் வேறு யாரோ ஒருவருடைய வாழ்க்கை பாழாகும்.." என்கிறார் இயக்குநர்.. புரிந்து கொள்ளுங்கள் வலைத்தமிழ் மக்களே..!

ஒரு முறை பார்க்கலாம்..! 


16 comments:

ராஜ் said...

அண்ணே, எனக்கும் சேம் பீலிங் தான்.
விஜய் சேதுபதிக்கு மட்டுமே பார்க்கலாம்.
இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா-ரொம்ப சுமாரான படம் தான்

Nondavan said...

//இந்த மவுத்டாக்கை புறக்கணித்துவிட்டு ரசிகர்கள் கூட்டம் பறக்கிறது தியேட்டருக்கு..! எல்லாம் விஜய் சேதுபதிக்காக..! // முற்றிலும் உண்மை அண்ணே... நானும் போன வெள்ளிக்கிழமையே குடும்பத்தோட தியேட்டர் வாசலில் போய் நின்றேன், எப்படியும் ப்டம் ரிலீசாகிருக்கும் என்று...!! ஆனால் இங்கு திரையிடப்படவே இல்ல... So sad... :( விஜய் சேதுபதி மேல் அவ்வளவு நம்பிக்கை...

Nondavan said...

நல்லா வரனும் அண்ணே, இவரு... நம்மாளு என்ற ஃபீலிங்

Nondavan said...

நல்லா வரனும் அண்ணே, சிவகார்த்திகேயனும் இவரும்... இவரு... நம்மாளு என்ற ஃபீலிங் சிறந்து பிரகாசிக்கட்டும்...

Ak Ananth said...

கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். அதை சொல்லவே இல்லையே. இந்த பாலகுமார் யார்?

திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

My dear Saravanan.I hope you would remember me.
I am DINDIGUL SARDAR.Please call me to my cell 9840456066.Matter personal and urgent.
S.K.Subramanian

வவ்வால் said...

அண்ணாச்சி,

//விஜய் சேதுபதி பின்றாரு.. இன்றைக்கு தேதில வயது முதிர்ந்த பல்லு போன பாட்டிகள்ல இருந்து குமரிகள்வரையிலும் எல்லாருக்கும் இவரை பிடிச்சுப் போச்சு.. இவரது நடிப்பே இயல்பானதாகவே இருப்பதால் இந்த ஈர்ப்பு இவருக்குக் கிடைத்திருப்பது இவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்..! //

இணையத்தில நாலுப்பேரு சேர்ந்துக்கிட்டு இப்படி உசுப்பிவிட்டு எழுதிட்டா ஆச்சா :-))

டிவிடி கடைக்காரனுக்கே இன்னும் பேரு சொன்னா யாருனு கேட்கிறான்,பீட்சா படத்த சொல்லி அடையாளங்காட்ட வேண்டியிருக்கு.

இப்பொ அப் கமிங் ஹீரோக்களில்ல நல்லா வந்திட்டு இருக்காப்டி,உங்களப்போல நாலுப்பேரு உசுப்பிவிட்டு ,நாமத்தான் அடுத்த விசய்,அசித்துனு மனப்பிராந்தில மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்துறாப்போறார்,இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்,அதுக்குள்ள மஞ்சத்தண்ணி தெளிச்சு கெடா வெட்டு போடத்துடிக்கிறீங்களே அவ்வ்!

Jamal Mohd said...

உத அண்ணனுக்கு,

இஆபா, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். நீங்கள் ரொம்ப எதிர்பார்த்து சென்றுயிருப்பீர்கள் என நினைக்கிறேன். விஜய் செதுபதியின் உழைப்பிற்கு உடல் மொழியே சான்று.

ஜமால் முஹம்மது

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

அண்ணே, எனக்கும் சேம் பீலிங்தான்.
விஜய் சேதுபதிக்கு மட்டுமே பார்க்கலாம்.]]]

வருகைக்கு நன்றிகள் ராஜ்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//இந்த மவுத்டாக்கை புறக்கணித்துவிட்டு ரசிகர்கள் கூட்டம் பறக்கிறது தியேட்டருக்கு..! எல்லாம் விஜய் சேதுபதிக்காக..! //

முற்றிலும் உண்மை அண்ணே... நானும் போன வெள்ளிக்கிழமையே குடும்பத்தோட தியேட்டர் வாசலில் போய் நின்றேன், எப்படியும் ப்டம் ரிலீசாகிருக்கும் என்று...!! ஆனால் இங்கு திரையிடப்படவே இல்ல... So sad... :( விஜய் சேதுபதி மேல் அவ்வளவு நம்பிக்கை...]]]

சீக்கிரம் வரும். அவசியம் பாருங்கண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நல்லா வரனும் அண்ணே, இவரு... நம்மாளு என்ற ஃபீலிங்..]]]

யெஸ்.. அந்தப் பக்கத்து வீட்டுக்காரன் மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச் இவருக்கு மட்டும் நல்லாவே ஒர்க் ஆவுது..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நல்லா வரனும் அண்ணே, சிவகார்த்திகேயனும் இவரும்... இவரு... நம்மாளு என்ற ஃபீலிங் சிறந்து பிரகாசிக்கட்டும்.]]]

சிவகார்த்திகேயனும் இன்னொரு பக்கம் கிட்டத்தட்ட விஜய் சேதுபதியை நெருங்கிட்டாரு.. ரெண்டு பேருமே அடுத்தடுத்து சிக்ஸர் அடிச்சிக்கிட்டிருக்காங்க..! ஜெயிக்கட்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ak Ananth said...

கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம். அதை சொல்லவே இல்லையே. இந்த பாலகுமார் யார்?]]]

விஜய் சேதுபதிதான் பாலகுமாரன்.. கடைசீல அவர் நினைச்ச மாதிரியே ஹீரோயின் கிடைச்சிட்டாங்க. அதான் அந்தத் தலைப்பு..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//விஜய் சேதுபதி பின்றாரு.. இன்றைக்கு தேதில வயது முதிர்ந்த பல்லு போன பாட்டிகள்ல இருந்து குமரிகள்வரையிலும் எல்லாருக்கும் இவரை பிடிச்சுப் போச்சு.. இவரது நடிப்பே இயல்பானதாகவே இருப்பதால் இந்த ஈர்ப்பு இவருக்குக் கிடைத்திருப்பது இவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்..! //

இணையத்தில நாலு பேரு சேர்ந்துக்கிட்டு இப்படி உசுப்பிவிட்டு எழுதிட்டா ஆச்சா :-)) டிவிடி கடைக்காரனுக்கே இன்னும் பேரு சொன்னா யாருனு கேட்கிறான், பீட்சா படத்த சொல்லி அடையாளங்காட்ட வேண்டியிருக்கு.

இப்பொ அப் கமிங் ஹீரோக்களில்ல நல்லா வந்திட்டு இருக்காப்டி, உங்களப் போல நாலு பேரு உசுப்பிவிட்டு, நாமதான் அடுத்த விசய், அசித்துனு மனப்பிராந்தில மாஸ் ஹீரோ அவதாரம் எடுத்துறாப் போறார், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அதுக்குள்ள மஞ்சத் தண்ணி தெளிச்சு கெடா வெட்டு போடத் துடிக்கிறீங்களே அவ்வ்!]]]

இதெல்லாம் உங்களை மாதிரி டிவிடில படம் பார்க்குறவங்களுக்குத்தான். தியேட்டர்லதான் பார்க்கணும்.. அதுலேயும் முதல் ஷோவே பார்க்கணும்னு துடிக்கிற ரசிகர்கள் ஓடி வரத்தான் செய்றாங்க. இந்தப் படத்துக்கு வந்த ஓப்பனிங் பத்தி விசாரிச்சுப் பாருண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Jamal Mohd said...

உத அண்ணனுக்கு,

இஆபா, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆரம்பம் முதல் கடைசிவரை ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். நீங்கள் ரொம்ப எதிர்பார்த்து சென்றுயிருப்பீர்கள் என நினைக்கிறேன். விஜய் செதுபதியின் உழைப்பிற்கு உடல் மொழியே சான்று.

ஜமால் முஹம்மது]]]

நன்றி ஜமால் ஸார்..! அவருடைய ஸ்லாங்குதான் படத்துல ஒரு பிரச்சினையாயிருச்சு.. ஏன்னா அது சென்னையைத் தாண்டி மத்தவங்களுக்கு கொஞ்சம் புரியாத மாதிரி போயிருச்சு..! அவ்ளோதான்..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

இப்போ விஜய் சேதுபதி படம் ஓடலைனா சொன்னேன்,ஆரம்பத்துல நல்லா ஓடறப்போ ஏத்திவிட்டு கவுத்திடுவாங்க,ஒருக்காலத்தில ராமராசனுக்கு செம ஓப்பனிங் உருவாச்சு,அடுத்த எம்சிஆரு நு சொல்லி உசுப்பிவிட்டே ஒழிச்சாங்க :-))