ரகளபுரம் - சினிமா விமர்சனம்

19-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்வது துறையின் வளர்ச்சிக்கு உதவும்தான்.. அதே சமயம் தங்களுடைய குடும்பத்திற்கென்று கொஞ்சம் சேமித்து வைத்தவிட்டு, சேமிப்புக்கும் மேலாக தங்களது சம்பாத்தியம் இருந்தால்.. அதனை தொழில் ரீதியாக இதில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம்.. அண்ணன் கருணாஸ் முன்னதை மட்டுமே இதில் பாலோ செய்திருக்கிறார்.. கடன் வாங்கி.. இருக்கிற பணத்தையெல்லாம் தொழிலில் இறக்கி.. குடும்பத்திற்கு பாதுகாப்பில்லாத சூழலில் ஏன் படத் தயாரிப்புத் தொழிலில் இறங்க வேண்டும்..? கொஞ்சம் யோசித்தால் அவருக்கும் நல்லதுதான்..!

அவரை ஹீரோவாக வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் குறைந்து கொண்டே போனதால், சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்ட தகுதியிருப்பதினால்.. அடுத்தடுத்து காமெடி வேடங்களில் மற்ற ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு கொஞ்சம் கூச்சப்படுகிறார் போலும்..! தானே தயாரித்து தானே ஹீரோவாக நடிக்கவும் செய்கிறார். தான் ஹீரோ இல்லை.. 'கதையின் நாயகன்' மட்டுமே என்று திருப்பித் திருப்பித் தனது இந்த ஹீரோ வேஷத்துக்கு ஒரு நியாயத்தையும் கற்பித்துக் கொள்கிறார்..! 


பணியில் இருக்கும்போதே இறந்து போன தந்தையினால், கருணை அடிப்படையில் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது கருணாஸுக்கு. இயல்பிலேயே பரம சாதுவான கருணாஸுக்கு இந்த வேலை பிடிக்கவில்லையென்றாலும், வீட்டில் இரண்டு தங்கைகள், அம்மா.. வாங்கியிருக்கும் கடன்கள்.. இதற்காக வேண்டாவெறுப்பாக இதனை ஏற்றுக் கொள்கிறார்..! கூடவே காதலும் பிறக்கிறது..! 

இடைவேளையின்போது ஏட்டு டெல்லி கணேஷ் செய்யும் ஒரு சதி வேலையால் 'பிளட் கேன்சர்' என்ற பொய்யான செய்தி கருணாஸுக்கு சொல்லப்படுகிறது.. இதை நம்பி இன்ஸூரன்ஸுக்கு ஏற்பாடு செய்துவிட்டு.. ஒரு தீவிரவாதியை பிடிக்கும் முயற்சியில் தனியே ஈடுபட்டு அதில் இறந்து போனால்.. கிடைக்கின்ற பணம் வீட்டுக்குக் கிடைக்குமே என்ற அற்ப ஆசையில் அதிலும் தீவிரமாக ஈடுபடுகிறார்.. 
கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படம்..!

நிச்சயம் இது கருணாஸுக்கு ஏற்ற கதைதான்..! ஆனால் காமெடி பஞ்சமாக இருப்பதால்.. இங்கிட்டும், அங்கிட்டுமாக ஆங்காங்கே சிரித்துவிட்டு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது..!

"எங்கடி நான் பெத்தெடுத்த என் கருத்த கருவாயன் பிள்ளை..?" என்று அம்மா உமாபத்மநாபன் கேட்கும்போது, நாய் துரத்தியபடியே அறிமுகமாகும் கருணாஸ் படத்தின் கடைசிவரையிலும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஓடிக் கொண்டேதான் இருக்கிறார்..! குணச்சித்திர நடிகர்களுக்கும், காமெடி நடிகர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.. சிரிப்பே வராத அளவுக்கு நடிப்பைக் காட்டினால் அது குணசித்திரம்.. கொஞ்சம் சிரித்தபடியே நடிப்பைக் கொட்டினால் அதே வேலையைச் செய்தால் அவர் காமெடி நடிகர்.. இதில் கருணாஸும் அப்படியே..!

முதல் நாள் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே போய் பாத்ரூமை கழுவு என்று சப்-இன்ஸ்பெக்டர் சொல்வதற்கும் தலையாட்டிவிட்டுப் போகும் அப்பாவி கான்ஸ்டபிள்.. அடுத்தடுத்து சாகச செயல்களில் ஈடுபட்டு உடனடியாக இன்ஸ்பெக்டர் பிரமோஷன் வாங்கிவிடுவதெல்லாம் இது போன்ற படங்களில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும் திரைக்கதை.. கொஞ்சம் நம்புங்களேன் என்று அவர்களே சொல்லி நம்மை நம்ப வைக்கிறார்கள்..! கருணை அடிப்படையிலான வேலை என்றாலும் போலீஸுக்கு தேர்வாகி டிரெயினிங்கெல்லாம் போயிட்டு வந்த பின்புதான் இந்த அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் கருணாஸ்.. அப்புறம் எதுக்கு இந்த பயந்த சுபாவ ஆக்ட்டிவிட்டீஸ்..?

இன்னொரு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனில் நடத்தும் பூசையை பார்த்தே உச்சா போகிறார் கருணாஸ்.. வாங்கிய கடனுக்காக கடன்காரன் தனது தங்கைகளை கடத்திப் போய்விடுவானோ என்று பயப்படுகிறார்.. ஸ்டேஷனில் மற்ற ஏட்டுக்கள். காவலர்களின் காமெடிக்கு பலியாகிறார்.. வில்லன் தனது குடும்பத்தை கொலை செய்துவிடுவான் என்று பயந்து போய் அவன் தப்பிச் செல்லவும் உதவி செய்கிறார்.. கமிஷனரின் மீட்டிங்கிலேயே குறட்டைவிட்டு தூங்குகிறார்.. இது போன்ற போலீஸ் ஸ்டேஷனை எங்கே பார்க்க முடியும் என்பதை போல... இவர் போன்ற கான்ஸ்டபிளையும் எங்கே  என்று தேடித்தான் பார்க்க முடியும்..!

புதுமுக ஹீரோயின் அங்கனாராய் சுமார் மூஞ்சி.. பெங்களூராம்.. அங்கேயே இருக்க வேண்டியதுதான்.. வழக்கம்போல 2 பாடல்களில் ஆடியிருக்கிறார். கொஞ்சம் டயலாக்குகளை பேசியிருக்கிறார்... அவ்வளவுதான்.. கொடுத்த காசுக்கு நடிக்க வைச்சாச்சு..! கருணாஸின் அம்மாவாக உமா பத்மநாபன்.. நம்பத்தான் முடியலை.. ஆனாலும் ஹீரோயினை தன் வீட்டு மருமகளாக்க மெனக்கெட்டு இவர் உழைக்கும் காட்சிகளில் சிங்கிள் வுமனாக இவரே தாங்கி நிற்கிறார்.. அந்த வித்தியாசமான ஸ்பீடு மாடுலேஷனால் சில காட்சிகளை ரசிக்கத்தான் முடிகிறது..! 

இது போன்ற மீடியம் பட்ஜெட் படங்களுக்கென்றே எழுதப்படாமல் இருக்கும் திரைக்கதை யுக்தியின்படி 3 குத்துப் பாடல்கள்.. இதில் இரண்டு குத்துப் பாடல்களில் அயிட்டம் டான்ஸ் கொடி கட்டிப் பறக்கிறது.. முதல் பாடலைவிட.. இரண்டாம் பாடலில் தங்கத் தலைவி ஷகீலாவின் நடனத்தோடு இருப்பது கொஞ்சம் ஓவர்தான்..! "இதுதான் ஸார் டிரெண்டு.. காசு பார்க்க வேணாமா..? தியேட்டருக்கு வர்ற ரசிகனை கொஞ்சமாச்சும் திருப்திப்படுத்த வேணாமா..?" என்பார்கள்..! எது எப்படியிருந்தாலும் இதனை டிவியில்கூட பார்க்க சகிக்காது என்பது மட்டும் உண்மை..!

3-வது குத்துப்பாடல் 'ஒபாமாவும் இங்கேதான்.. ஒசாமாவும் இங்கேதான்..' என்பது தத்துவப் பாடலாயிருச்சு..! சுடுகாட்டு சிச்சுவேஷனோட அமர்க்களமா பொருத்தமா இருக்குது.. தமிழ்நாட்டில் ஒபாமாவுக்கு ரசிகர் மன்றமும், ஒசாமாவுக்கு தொண்டர்களும் இல்லாத காரணத்தினால் கருணாஸ் தப்பித்தார்.. இதே வார்த்தையை மாற்றிப் போட்டு தமிழகத்தின் இறந்து போன பிரபலங்களை பற்றி வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? படம் ரிலீஸாகியிருக்குமா..? இதுதான் சென்சார் போர்டின் லட்சணம்..! 

ஸ்ரீகாந்த் தேவாவின் மெலடி இசையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.. 'ரகளபுரம்', 'அடி தேவலோக ரதியே..' 'சூடாமணி' என்று பாடல்களில் மெலடியையும், குத்தையும் போட்டு கச்சிதமாக வார்த்தைகளை முன்னிறுத்தி.. இசையை பின்னிறுத்தி கேட்க வைத்திருக்கிறார்.. 'அடி தேவலோக ரதியே' பாடல் இனி அதிகமாக டிவிக்களில் ஒலிக்கும் என்று நினைக்கிறேன்..!

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் மனோகர்..! ஹீரோயினிடம் நல்ல பெயர் எடுக்க விரும்பி திருடனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு கருணாஸ் செய்யும் குட்டி கலாட்டா.. டாஸ்மாக் சரக்கடிக்க வீட்டில் இருந்து குத்துவிளக்கை தூக்கிக் கொண்டு ஓடி வருபவனை கருணாஸ்தான் தனது வேலைக்காக துரத்துகிறார் என்று நினைத்து அவனை வீட்டிற்கு இழுத்து வரும் ஹீரோயின்.. ஜெயிலுக்கு போய் வில்லனை சந்திக்க விரும்பாமல் ஜெயிலில் இருந்து வெளியே வரும் லாரியில் வில்லன் தப்பிச் செல்வதாக டூப்விட. நிசமாகவே அவர்கள் அதில் தப்பிச் செல்லும் காட்சியை இணைத்தவிதம்.. இப்படி சிற்சில இடங்களில் திரைக்கதை சுவாரசியமாகவே இருக்கிறது..!

நான் முன்பே சொன்னதுபோல.. மிகப் பிரயத்தனப்பட்டு கருணாஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.. படத்தை வெளியிட வேண்டிய கடைசிக்கட்ட பணத் தேவைகளுக்காக காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற அன்றுகூட யாரிடமோ 10 லட்சம் கடன் வாங்கி.. அந்தக் கடன் பத்திரத்தில் காமராஜர் அரங்கத்தின் வாசலில் வைத்துதான் கையெழுத்து போட்டு வாங்கினார்.. என் கண்ணால் பார்த்த கொடுமை இது..! தயாரிப்பாளர்களின் இந்தக் கஷ்டத்தையெல்லாம் பார்த்தால் ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்கணும்ன்னு கேக்கத்தான் தோணுது..!

எங்களுக்குத் தெரிஞ்சது இந்த ஒரேயொரு தொழில்தான் என்பார்கள் நலிந்தாலும் சினிமாவைவிடாத தயாரிப்பாளர்கள்...! இவர்களை பார்த்துதான் புதிய புதிய தயாரிப்பாளர்கள் எப்படியாவது பெயர் சொல்லும் அளவுக்குத் தலையெடுத்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கோடம்பாக்கத்தில் கால் வைக்கிறார்கள்..! அண்ணன் கருணாஸின் இந்த முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும்..!

கடைசியாக இன்னொன்று..! கருணாஸை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலா, அவர் தேவர் என்றோ.. சாதி பார்த்தோ அறிமுகப்படுத்தவில்லை.. ஏதோ ஒரு நடிப்புத் திறமை இவரிடம் இருக்கிறது என்று நினைத்துதான் உள்ளே இழுத்துவிட்டார். அதைத் தனது திறமையினால் இந்த அளவுக்கு வளர்த்து வந்திருப்பது கருணாஸ்தான்.. பாராட்டத்தான் வேண்டும்.. ஆனால் அதற்காக வளர்ந்து வந்த பின்பு தான் தேவர் இனத்தைச் சேர்ந்தவன் என்றெல்லாம் பேசி ஜாதி முலாம் பூசி.. வெளிச்ச அரசியலுக்கு வர விரும்புவது அவருடைய சினிமா கேரியருக்கு நல்லதல்ல..! 

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கென் மீடியாவின் லோகாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார்.. இத்தோடு நிறுத்தியிருக்கலாம்..! படத்தில் இடையில் பெண் வேடமிட்டு கருணாஸ் வில்லனை பிடிக்க அலையும் காட்சியில்.. கருணாலை பெண் என்று நினைத்து பாலியல் நோக்கோடு கடத்திச் செல்லும்போது "நான் தேவன்டா.." என்று கருணாஸ் சொல்ல.. இவரைக் கடத்திச் செல்லும் இரண்டு பேர் "நான் மறவன்.." "நான் கள்ளன்..." என்று சொல்வதெல்லாம்  என்ன மாதிரியான கதையாடல் என்று எனக்குப் புரியவில்லை. சென்சார் போர்டு ஆள் பார்த்து.. ஆடை பார்த்துதான் சென்சார்ஷிப் செய்கிறது என்பதற்கு இதைவிடவும் மிகச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது..! 

"எல்லாம் காமெடிதான் ஸார்..!" என்று சொல்வதற்கு போயும்.. போயும்.. அந்த ஜாதிதான் உங்களுக்குக் கிடைத்ததா கருணாஸ் பிரதர்..? 12 comments:

RAVI said...

இது கருணாஸ்க்கு அட்வைஸ் மாதிரி தெரியுது......

ப்ரியன் said...

//ஆடை பார்த்துதான் சென்சார்ஷிப் செய்கிறது //

ஆளை?!

Nondavan said...

உங்க அக்கறை புரியுது அண்ணே...

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

இது கருணாஸ்க்கு அட்வைஸ் மாதிரி தெரியுது......]]]

அட்வைஸேதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ப்ரியன் said...

//ஆடை பார்த்துதான் சென்சார்ஷிப் செய்கிறது //

ஆளை?!]]]

இப்படியும் சொல்லலாம் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

உங்க அக்கறை புரியுது அண்ணே...]]]

கருணாஸ் அண்ணனுக்கு புரியணுமே..?

k.rahman said...

//எங்களுக்குத் தெரிஞ்சது இந்த ஒரேயொரு தொழில்தான் என்பார்கள் நலிந்தாலும் சினிமாவைவிடாத தயாரிப்பாளர்கள்...//

சாளிக்ராமத்தில் கருணாஸ் ன்னு ஒரு ஹோட்டல் பார்த்த மாதிரி ஞாபகம். இவர்தா?

k.rahman said...

//கருணாலை பெண் என்று நினைத்து பாலியல் நோக்கோடு கடத்திச் செல்லும்போது "நான் தேவன்டா.." என்று கருணாஸ் சொல்ல.. இவரைக் கடத்திச் செல்லும் இரண்டு பேர் "நான் மறவன்.." "நான் கள்ளன்..." என்று சொல்வதெல்லாம் என்ன மாதிரியான கதையாடல் என்று எனக்குப் புரியவில்லை//

unmai thaan. kevalamaa irukku.

AAR said...

1.First the movie is remake of old hollywood film "short time". I enjoyed it when it was shown in DD in 90s. Now even hollywood doesnt make such movies. Its mostly computer graphics movies nowadays.
2. Karunas thinks his caste will help him when he gets old like it did for Karthik. Moreover, after Andhra guys,
Madurai and Theni folks are the biggest movie crazy people. So he wants to sell it among his caste dominating areas.

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

//எங்களுக்குத் தெரிஞ்சது இந்த ஒரேயொரு தொழில்தான் என்பார்கள் நலிந்தாலும் சினிமாவைவிடாத தயாரிப்பாளர்கள்...//

சாளிக்ராமத்தில் கருணாஸ்ன்னு ஒரு ஹோட்டல் பார்த்த மாதிரி ஞாபகம். இவர்தா?]]]

விசாரித்தேன். கருணாஸாயுடையதுதான் அந்த ஹோட்டல்..!

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

//கருணாலை பெண் என்று நினைத்து பாலியல் நோக்கோடு கடத்திச் செல்லும்போது "நான் தேவன்டா.." என்று கருணாஸ் சொல்ல.. இவரைக் கடத்திச் செல்லும் இரண்டு பேர் "நான் மறவன்.." "நான் கள்ளன்..." என்று சொல்வதெல்லாம் என்ன மாதிரியான கதையாடல் என்று எனக்குப் புரியவில்லை//

unmai thaan. kevalamaa irukku.]]]

அவருக்கே புரிஞ்சா சரி..!

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

1.First the movie is remake of old hollywood film "short time". I enjoyed it when it was shown in DD in 90s. Now even hollywood doesnt make such movies. Its mostly computer graphics movies nowadays.]]]

அப்படியா..? ஆனைவால் முடி என்ற மலையாளப் படத்தின் காப்பி என்றார்கள்..! அந்தப் படத்தையும் பார்த்தேன். எதுவும் சொல்ல முடியவில்லை..! இப்போது நீங்கள் ஹாலிவுட் படம் என்கிறீர்கள். பார்த்துவிட்டுச் சொல்கிறேன்..!

[[[2. Karunas thinks his caste will help him when he gets old like it did for Karthik. Moreover, after Andhra guys, Madurai and Theni folks are the biggest movie crazy people. So he wants to sell it among his caste dominating areas.]]]

இந்த ஜாதி பாசமெல்லாம் சினிமாவில் தளையெடுக்கவோ, நீடிக்க வைக்கவோ எப்போதும் உதவாது.. மாறாக அஸ்தமனத்திற்குத்தான் உதவும்..!