தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - அடுத்த சடுகுடு ஆரம்பம்..!

08-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இப்படியொரு படுதோல்வியை சந்திப்போம் என்று தயாரிப்பாளர் தாணு நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்..! அதே சமயம் இந்த அளவுக்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கேயார் நினைத்ததும் நடந்தேறியிருக்கிறது..!


தமிழ்ச் சினிமாவுலகின் தலையாய சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம். இவர்கள்தான் தலை.. இது இல்லாவிடில் ஏது தமிழ்ச் சினிமா..? ஆனால் சங்கத்தில் இருக்கின்ற குழப்பம் தாள முடியாதது..! சாதாரண ஆட்டோ ஸ்டேண்ட்டுகள் சங்கத்திலேயே ஆயிரம் உள்குத்துகள் இருக்கும்போது கோடிகள் புழங்கும் சங்கத்தில் இருப்பதில் தவறில்லையே..?

2010-2012-ம் ஆண்டிற்கான தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இராம.நாராயணன் தலைவராக வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகரும், அன்பாலயா பிரபாகரனும் துணைத் தலைவர்களாகவும், சிவசக்தி பாண்டியன் மற்றும் கே.முரளிதரன் இருவரும் செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.. இந்த அணிக்கு எதிரணியில் நின்றவர்கள் அப்போதைய முன்னாள் தலைவர்கள் கே.ஆர்.ஜி.யும், கேயாரும்.

2011 மே 15-ல் தமிழக சட்டமன்றத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆத்தா வரப் போவது அறிந்தவுடன் முதல் வேலையாக தனது தலைவர் பதவியை அன்றைய இரவிலேயே ராஜினாமா செய்தார் இராம.நாராயணன். தொடர்ந்து செயலாளர் சிவசக்தி பாண்டியனும்.. இதுவே அப்போது பெரும் சர்ச்சையானது..! 

“சங்கத்துக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்க வேண்டியதுதானே..? முறைப்படி செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி தான் தி.மு.க. என்பதால் இனி ஜெயலலிதாவை சந்தித்து பேசுவது என்பது நடவாத காரியம் என்பதால் நான் தலைவராக இருந்து இங்கே பிரயோசனம் இல்லை என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே..? ராத்திரியோட ராத்திரியா ஓடிப் போனா என்ன அர்த்தம்..? இதுக்கா அவங்களை தேர்ந்தெடுத்தோம்..” என்று கேட்டார்கள் பல தயாரிப்பாளர்கள்..! 

அதோடு இராம.நாராயணன் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக தலைவராக இருந்தும் 5 ஆண்டு காலமாக சின்ன பட்ஜெட் படங்களுக்காக கொடுக்கப்பட வேண்டிய மானியங்கள் வழங்கப்படவே இல்லை.. இதை எப்படியும் வாங்கித் தருகிறேன் என்று சொல்லித்தான் அப்போதும் பதவிக்கு வந்தார். ஆனால் இப்போது கோட்டையில் நிலைமை மாறிவிட்டதால் பருப்பு வேகாது என்று சொல்லி வெளியேறியது சங்கத்தில் இருந்து தலைவர் ஒருவர் பிரச்சினையைக் கண்டு பயந்தோடிவிட்டார் என்ற அர்த்தத்தையும் கொடுத்தது..!

இராம.நாராயணன் வெளியேறியவுடன் அதுவரையில் துணைத் தலைவராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரன் தான் பொறுப்பு தலைவராக நீடிக்க விரும்புவதாக கூறினார்.  இதை ஏற்காத கே.ஆர்.ஜி அண்ட் கேயார் கூட்டணி உடனேயே சங்கத்துக்கு மறு தேர்தல் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.. “கொஞ்ச நாள் நான் இருக்குறேன். விஜய் சீக்கிரம் கட்சி ஆரம்பிக்கப் போறாப்புல.. ஆரம்பிக்கிறவரைக்கும் நான் இருந்திடறனே...” என்று எஸ்.ஏ.சி. வற்புறுத்தி சீட்டில் கம் போட்டு உக்காந்து கொண்டார்..! இதனாலேயே அதிகமாக அசிங்கப்பட்டதும் அவர்தான்..!

பெப்சியுடனான சம்பளப் பேச்சுவார்த்தையின்போது பொறுப்பு தலைவருக்கு முடிவெடுக்க அதிகாரம் இல்லை.. ஆகவே இவர் பேச்சுவார்த்தைக்குக்கூட போகக் கூடாது என்றெல்லாம் கேயார் தரப்பு சொன்னது.. அப்போது நடந்த தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவில் ஆள், ஆளுக்கு மேடையேறி எஸ்.ஏ.சி.யை கார்னர் செய்து தீர்மானங்களை நிறைவேற்ற வைத்தார்கள்..! 

பெப்சியுடனான மோதலினால் ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்தபோது விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மட்டும் மும்பையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது.. இதையும் கேயார் தரப்பு கண்டறிந்து பேட்டியாகக் கொடுத்துவிட ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் டீம் அப்போதே எஸ்.ஏ.சி. மீது கடுப்பாகிவிட்டது..!

அடுத்து நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவையும் சொல்லாமல் வெளியேறப் பார்த்த எஸ்.ஏ.சி.யை அரங்கத்தைவிட்டு வெளியே விடாமல் தயாரிப்பாளர்கள் தடுத்த சம்பவமும் நடந்தது.. இந்த அளவுக்கு எதிர்ப்பலைகள் நடந்தும் எஸ்.ஏ.சி. பதவியைக் கைவிட மறுத்தது  அவருடைய பெயரை இன்னமும் கேலிக்குள்ளாக்கியது..!

கேயார் தரப்பு கோர்ட்வரைக்கும் சென்று பொதுக்குழுவைக் கூட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர முனைந்தது..! இதனைத் தடுக்க எத்தனை முயன்றும் முடியாமல் போனது எஸ்.ஏ.சி.யால்.. கேயாரின் போட்டி பொதுக்குழுவில் 99 சதவிகிதம் பேரும் எஸ்.ஏ.சி.க்கு எதிராக வாக்களிக்க இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரைக்கும் சென்று மேலும், மேலும் அசிங்கப்பட்டுக் கொண்டார் எஸ்.ஏ.சி. தற்போது நடந்திருக்கும் தேர்தலும் கோர்ட் உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதிகள் இருவர் பார்வையாளர்களாக இருக்க.. நடந்தேறியுள்ளது.. 

இந்தக் கடைசி நேரத்தில் ‘தலைவா’ பட விவகாரத்தில் ஆத்தாவுடன் முறுகல் ஏற்பட்டு இப்போது எல்லா வழியும் அடைபட்ட நிலையில் எஸ்.ஏ.சி. மீண்டும் போட்டியிட முடியாத நிலைமை வந்தது.. தாணுவுக்கு வழிவிட்டு தான் இந்த அணியை வழி நடத்துவதாகச் சொன்னார்..! தாணுவோ, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தன்னை அழைத்து இந்தப் பொறுப்புக்கு வரும்படி சொன்னதாகக் கூறினார்.. 


தாணு தரப்பில் தாணு தலைவர் பதவிக்கும், எஸ்.கதிரேசன் , ஏ.என்.பவித்ரன் இருவரும் துணைத் தலைவர்கள் பதவிக்கும் போட்டியிட்டார்கள். கெளரவச் செயலாளர்களாக சங்கிலிமுருகன், பி.எல்.தேனப்பன்... பொருளாளராக திருமதி புஷ்பா கந்தசாமி.. செயற்குழு உறுப்பினர்களாக அமுதா துரைராஜ், பாலாஜி, பாஸ்கர், சந்திரபிரகாஷ்ஜெயின், கபார், ஜெமினி ராகவா, கிரிதாரிலால் நாக்பால், கருணாஸ், கோவைத் தம்பி, மாதேஷ், மனோஜ்குமார், தாகா, முருகேஷ், பழனிவேல், ராதாரவி, ரிஷிராஜ், வி.சேகர், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், தங்கராஜ், வெங்கட்ரமணி என்று பலர் போட்டியிட்டனர்..!

கேயார் தரப்பில் முன்னாள் எதிரிகள்.. இந்நாள் நண்பர்கள்.. ஒரு காலத்தில் பழி வாங்கப்பட்டவர்கள்.. என்பவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து பொது எதிரியை நீக்கியாக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு செயல்பட்டார்கள்..


கேயார் தலைவராகவும், துணைத் தலைவர்களாக திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸும், டி.ஜி.தியாகராஜனும் போட்டியிட்டார்கள்.. கெளரவச் செயலாளர் பதவிக்கு டி.சிவாவும், ஞானவேல்ராஜாவும்.. பொருளாளர் பதவிக்கு ராதாகிருஷ்ணன்.. செயற்குழு உறுப்பினர்களாக, ஏ.எல்.அழகப்பன், சித்ரா லட்சுமணன், நடிகை தேவயானி, காஜாமைதீன், கமீலா நாசர், எடிட்டர் மோகன், ஹெச்.முரளி, பிரமிட் நடராஜன், கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், விஜயமுரளி, ஐங்கரன் விஜயகுமார், கே.பாலு  மற்றும் பலரும் போட்டியிட்டார்கள்..!


இந்த இரண்டு டீம் தவிர இன்னொரு பக்கம் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் தலைமையில் ஒரு டீமும் தேர்தலில் போட்டியிட்டது.. சிவசக்தி பாண்டியன் செயலாளர் பதவிக்கு மட்டுமே போட்டியிட்டார். துணைத் தலைவராக பட்டியல் சேகர் போட்டியிட்டார். இந்த அணியில் செயற்குழு உறுப்பினர்களாக அழகன் தமிழ்மணி, மன்ன்ன், மங்கை அரிராஜன், ஷக்தி சிதம்பரம், திருஞானம், இயக்குநர் திருமலை, கே.பி.குண்டச்சே, வி.செல்வராஜ் என்று மிகக் குறைந்த அளவுக்கே போட்டியிட்டனர்.. இது தவிர பல தயாரிப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டனர். நடிகர் மன்சூரலிகானும், தயாரிப்பாளர் ஏ.என்.ரத்னமும் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்..! 

ஆர்.கே.செல்வமணி தாணு அணியில் போட்டியிட்டதால் பெப்ஸி தலைவர் அமீரும், இயக்குநர்கள் சங்கத்தினரும் தாணு அணிக்கே பகிரங்கமாக வேலை செய்தார்கள்.. இவர்கள் இங்கேயிருப்பதால் கேயார் தரப்பை சரத்குமார் ஆதரித்தார்.. ஆனால் ராதாரவி தாணு அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நின்றார்..! சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் இராம.நாராயணன் சிவசக்தி பாண்டியனுக்கு ஆதரவளிக்க.. பெப்ஸி நிர்வாகம் தாணுவுக்கு சப்போர்ட் என்பதால் சிவசக்திபாண்டியன் அணிக்கு தனது சப்போர்ட்டை தெரிவித்தார் பெப்ஸியின் முன்னாள் தலைவர் வி.சி.குகநாதன்..! இப்படி தலை சுற்றும் அளவுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல்கள் இத்தேர்தலில் நடந்தேறியுள்ளது..!

அரசியல் கட்சிகளையும் மிஞ்சும்வகையில் ஸ்டார் ஹோட்டல்களில் அறிமுக விழா.. தண்ணி பார்ட்டி.. அலுவலகம் தேடி வந்து பார்ப்பது.. கையில் பணக்கட்டுக்களை திணித்தல்.. கால்ஷீட் வாக்குறுதிகள்.. என்று பலவித சாமர்த்தியங்களையும் செய்துதான் காண்பித்தன மூன்று அணியினரும்..!


உறுப்பினர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம்..  மருத்துவக் காப்பீடு 5 லட்சம்.. மரணமடைந்தால் 5 லட்சம்.. விபத்தில் மரணமடைந்தால் 20 லட்சம்.. சித்திரை திருநாள், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் நாட்களில் 5000 ரூபாய் பரிசு.. 10 டிஜிட்டல் கேமிராக்களை வாங்கி தயாரிப்பாளர்களுக்கு 30 நாட்கள் ஷூட்டிங்கிற்கு இலவசமாக தரப்படும்.. தயாரிப்பாளர் சங்கத்திற்கென்றே தனி தொலைக்காட்சி துவங்கப்படும்.. என்றெல்லாம் வாக்குறுதிகள் தந்தது தாணு அணி..!

கேயார் அணியோ ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொன்னது.. தற்போதைய நிர்வாகம் முற்றிலும் செயல்படாமல் முடங்கிப் போய்விட்டது. அதனை மீட்டெடுத்து நல்லபடியாக நடத்துவோம் என்பதுதான்..! கூடவே வரவு செலவு இதுவரையில் பொதுக்குழுவில் வைக்கப்படவில்லை.. எத்தனை புதிய தயாரிப்பாளர்கள் வந்திருக்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படவே இல்லை.. இதன் மூலம் சந்தா வசூல் பணம் முறையாக சங்கக் கணக்கில் கட்டப்பட்டுள்ளதா என்றே தெரியவில்லை என்றெல்லாம் ஊழல்களையும் சேர்த்தே கூறினார்கள்..!

கடைசி நேரத்தில் தாணு தரப்பு தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டது.. சுமார் 130-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஓட்டளிக்கத் தகுதியில்லாதவர்கள் என்று கூறி ஒதுக்கியது.. இதையும் கண்டறிந்து கேயார் தரப்பு நீதிபதிகளிடம் முறையிட அவர்கள் விசாரித்து அவர்களும் வாக்களிக்கலாம் என்று தீர்ப்பளித்துவிட்டார்கள். இதனால் இந்த சற்றேறக்குறைய 130 வாக்குகளும் அப்படியே லம்ப்பாக கேயார் தரப்புக்குக் கிடைத்துவிட்டது..! 


வாஷ் அவுட் என்று சொல்வதற்கு உதாரணமாக தாணு அணி இத்தேர்தலில் பெற்ற தோல்வியையே சொல்லலாம்..!  ஓட்டளிக்கத் தகுதியானவர்கள் 832 பேர்தான். இதில் வாக்களித்தவர்கள் 708 பேர். இதில் கேயாருக்குக் கிடைத்தது 449. தாணு பெற்றது 252. இந்த 197 ஓட்டு வித்தியாசமே கேயார் மீது சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் வைத்திருக்கும்  நம்பிக்கையைக் காட்டுகிறது..!

துணைத் தலைவர்களாக சுபாஷ்சந்திரபோஸ் 407 ஓட்டுக்களும், டி.ஜி.தியாகராஜன் 358 ஓட்டுக்களும் பெற்று வெற்றி பெற்றனர். ஞானவேல்ராஜா 414 ஓட்டுக்களும், டி.சிவா 284 ஓட்டுக்களும் பெற்று செயலாளர்களாக வெற்றி பெற்றனர்.. சிவசக்தி பாண்டியனுக்கு 209 ஓட்டுக்கள் கிடைத்ததுகூட குறிப்பிடத்தக்க வெற்றிதான்..! பொருளாளராக ராதாகிருஷ்ணன் 453 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து நின்ற புஷ்பா கந்தசாமிக்கு 207 ஓட்டுக்களே கிடைத்திருந்தன..!

மொத்தமுள்ள 21 செயற்குழு உறுப்பினர்களில் கேயார்அணியில் இருந்து  ஏ.எல்.அழகப்பன், சித்ரா லட்சுமணன், நடிகை தேவயானி, காஜாமைதீன், கமீலா நாசர், எடிட்டர் மோகன், ஹெச்.முரளி, பிரமிட் நடராஜன், கே.ராஜன், ஆர்.வி.உதயகுமார், விஜயமுரளி, எஸ்.எஸ்.துரைராஜ், ஜாக்குவார் தங்கம், கே.முருகன், சவுந்தர், கே.ராஜன், சோழா பொன்னுரங்கம், கே.பாலு ஆகிய 18 பேர் தேர்வானார்கள்.. இதில் கேயார் அணியில் இருந்த ஐங்கரன் விஜயகுமாரும், கோவைத்தம்பியும் ஒரே எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றிருந்த்தால் அவர்களுக்கு மட்டும் குலுக்கல் சீட்டு போடப்பட்டது. அதில் கோவைத்தம்பி வெற்றி பெற்றார். மேலும் 2 இடங்களுக்கு தாணு அணியில் இருந்த நடிகர் கருணாஸும், ராதாராவியும் வெற்றி பெற்றனர்..!

நிர்வாகப் பதவியில் ஒரு இடத்தைக்கூட பிடிக்க முடியாமல், செயற்குழு உறுப்பினர்களில் வெறுமனே 3 பேரை மட்டுமே வைத்துக் கொண்டு இனியும் தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சி.-தாணு அணி எதையும் பேசவே முடியாது.. நாளைய தினம் கவுன்சிலில் பதவியேற்கும் புதிய அணி அடுத்தடுத்த நாட்களில் பதிவேடுகளைப் புரட்டி தினத்துக்கு பல செய்திகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் என்றே நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்..!


வெற்றி பெற்ற அணியில் இருப்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் கேயாருடன் முறுக்கிக் கொண்டவர்கள்தான். தாணு-எஸ்.ஏ.சி. மீதான கோபத்தில்தான் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.. இனியும் இப்படியே இருப்பார்களாக என்பதை யாராலும் சொல்ல முடியாது. இங்கேயிருக்கும் அரசியலும் நாட்டு நடப்பு அரசியல் போலத்தான்..!

தாணு இந்தத் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் கணினி மூலம் ஓட்டளிப்பு நடத்தியதில் முறைகேடு என்று சப்பைக்கட்டு கட்டிவிட்டுப் போனார்.. கேயாரோ அனைவருடனும் இணைந்து சுமூகமாகப் பணியாற்றுவோம் என்றார் வழக்கம்போல.. இதே நேரம் கேயாரின் டீமின் பின்புலமாக சூரிய தொலைக்காட்சி இருப்பதாகவும் எதிர்த்தரப்பு அடித்துச் சொல்கிறது..! படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கவும், ராயல்டிகளை சங்கத்தில் தாங்கள் விரும்பியபடி வழங்கிடவும் தங்களுக்குப் பிடித்தமான ஆட்கள் தேவை என்ற நிலையில் அத்தொலைக்காட்சியின் பரிபூரண ஆசி இவர்களுக்குக் கிடைத்திருக்கிறதாம்.. அத்தோடு எஸ்.ஏ.சி. மற்றும் விஜய் மீதான கோபம் இன்னமும் அவர்களுக்கு தீரவில்லை என்றும் சொல்கிறார்கள்..!

தாணு தரப்போ இன்னொரு விஷயத்தையும் கொளுத்திப் போடுகிறார்கள்.. சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர்கள், கெளரவச் செயலாளர்கள் பதவிக்கு வர விரும்புவர்கள் தேர்தலுக்கு முன்பான 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதாவது ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்திருக்க வேண்டும் என்பது விதியாம்.. 

இந்த விதிப்படி கேயார் இத்தேர்தலில் போட்டியிட முடியவே முடியாது என்றே நம்பிக் கொண்டிருந்தது தாணு அணி.  ஆனால் கடைசியில் கேயார் போட்டியிடுவது தெரிந்தவுடன் அதற்கான காரணத்தைத் தேடினார்கள் தாணு அணியினர். ஏதோ ஒரு தெலுங்கு படத்தை தமிழுக்கு டப்பிங் செய்வதற்காக வாங்கி அதற்காக 2 நாட்கள் சென்னையில் ஷூட்டிங்கை நடத்தி அதனை முழுமையாக தமிழிலேயே தான் தயாரித்திருப்பதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறாராம் கேயார். “இதுவே மிகப் பெரிய மோசடி.. தலைமைப் பதவிக்கு வருபவரே இப்படி பிராடு செய்யலாமா?” என்கிறார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி..!  இந்த விவகாரமும் மிக விரைவில் கோர்ட்டுக்கு போகும் என்றே நினைக்கிறேன். எப்படி எஸ்.ஏ.சி.க்கு குடைச்சல் கொடுத்தார்களோ, அதேபோல் இதை வைத்தே கேயாருக்கும் பிரச்சினையை கொடுக்க இந்த டீமும் தயாராகி வருகிறதாம்..!  

5 ஆண்டுகளாக சிறு முதலீட்டுப் படங்களுக்கு மானியம் தரப்படவில்லை. இப்போதுதான் நீதிபதிகள் படம் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களாம்.. ஒரு நாளைக்கு 1 படம்தானே பார்க்க முடியும்.. 5 வருடமெனில் 500 படம் பார்க்க வேண்டும்.. என்ன செய்றது என்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.. இத்தோடு தமிழக அரசின் ஆட்சேபணைக்குரிய, ஒருதலைப்பட்சமான வரிவிலக்குக் கொள்கையை இவர்களாவது எதிர்த்துக் குரல் கொடுப்பார்களா என்று தெரியவில்லை..! ஆளும் கட்சிக்காரர்களுக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்காரர்களுக்கு ஒரு நீதி என்று ஆட்சி அதிகாரம் செய்யும் குளறுபடி வேலையை இவர்கள் எதிர்த்து பேசி, அதனை சரிப்படுத்தினாலே  உண்மையாகவே பெரிய, சிறிய தயாரிப்பாளர்களுக்கு இவர்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்..!

பார்க்கத்தானே போறோம்..!

டிஸ்கி :

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடந்த இந்த தேர்தல் நிகழ்ச்சியின் பாதுகாப்புக்கு பொறுப்பு அதிகாரி  அடையாறு அஸிஸ்டெண்ட் கமிஷனர் குணசீலன். காலையில் இருந்தே மனிதர் படு ஸ்டிரிக்ட்டாக இருந்தார்.. இரண்டு முன்னாள் நீதிபதிகள் பார்வையாளர்களாக இருப்பதால் அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டுமே செய்பவராக இருந்தார். கமல், ரஜினி வந்தபோது அவர்களது வருகையை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு லைனில் யாரையும் நிற்க விடாமல் அப்படியே அவர்களை உள்ளே தனியாளாக அனுப்பி வைத்தார்..! அப்படியொரு கண்டிப்பு..

பல தயாரிப்பாளர்களிடத்தில் கட் அண்ட் ரைட்டாக சண்டையிட்டு அப்புறப்படுத்தினார். மதிய நேரத்தில் தயாரிப்பாளர் அமுதா துரைராஜுக்கும் அவருக்குமான மோதல் பெரும் வாக்குவாதமாகவே நீடித்தது..! 

மனிதர் சளைக்காமல் சினிமா வில்லன் போலீஸ் மாதிரியே பேசுறாரு.. ஓட்டெடுப்பு முடிந்த பின்பு எஸ்.ஏ.சி. திடீரென்று கட்டிடத்திற்கு உள்ளே சென்றார்.. கேட் கதவைத் திறக்க யோசித்த காவலரிடம் “நான் பிரஸிடெண்ட்டுப்பா..” என்று சொல்லி உள்ளே போய்விட்டார். இதை பார்த்த ஞானவேல்ராஜாவும், டி.சிவாவும் டென்ஷனாகி “எல்லாரும் உள்ள போவோம்..” என்று ஆளாளுக்கு உள்ளே போக முயல.. குணசீலனே எஸ்.ஏ.சி.யை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்..!

நிகழ்ச்சி முடிந்த பின்பு அனைத்து காவலர்களையும் “வரிசைக்கு வாங்க.. வரிசைக்கு வாங்க..” என்றழைத்தார் ஏ.சி. அட்டென்ஷன் மற்றும் ஸ்டேட்டெண்டீஸில் நிற்க வைத்து பார்த்துவிட்டு அதையே செம காமெடியாக்கிவிட்டு.. “இப்போ.. இந்த நிமிஷத்துல இருந்து உங்களுக்கு ரெஸ்ட்டு.. வீட்டுக்கு போகலாம். நாளைக்குக் காலைல 7 மணிக்கு மெயின் கேட்டுல வந்து நீங்க ஆஜராகியிரணும்.. நாளைக்கு இங்கே நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானோட கல்யாணம் நடக்குது. அதுக்கு இன்னிக்கு மாதிரியே நாமதான் பாதுகாப்பு கொடுக்கணும்னு ஆர்டர் வந்திருக்கு.. அதுனால இப்போ நீங்க வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு வந்து சீமானோ கல்யாணத்துல கலந்துக்கிட்டு அவருக்கு ஆசி வழங்கணும்.. ஆமா.. நாம வந்து ஆசி வழங்கணும்னு சீமானே வேண்டிக் கேட்டுக்கிட்டாரு.. அதுனால எல்லாரும் மறக்காம அவசியமா வந்திருங்க..” என்று ஏதோ சினிமா டயலாக்கை போல பேச.. அட்டென்ஷனில் நின்று கொண்டிருந்த பல காவலர்களும் சிரித்தேவிட்டார்கள்.. 

ஓகே.. வெல்டன் ஸார். உங்களை மாதிரி இப்படி ரிலாக்ஸா பேசி வேலையை வாங்குறவங்க, நிறைய பேர் இருந்தா கீழ்நிலை காவலர்கள் கொஞ்சமாச்சும் நிம்மதியா இருப்பாங்க..!

ஸோ.. நம்மளோட அடுத்தப் பதிவும் அண்ணன் சீமானோட கல்யாணம்தான்..!


9 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஸோ.. நம்மளோட அடுத்தப் பதிவும் அண்ணன் சீமானோட கல்யாணம்தான்..!
//

பதிவுல சொன்னது விட செம மேட்டர்லாம் பத்திரிக்கையிலே சொல்லிட்டாங்க, நீங்க ரொம்ப மோசம் அவ்வ்!

ஆமாம் சீமானுக்கு இது எத்தினியாவது கண்ணாலாம் ஒன்னுமே சொல்லக்காணோம் அவ்வ்!

kanavuthirutan said...

மிக நீண்ட தெளிவான, முக்கியமான விவரங்கள் அடங்கிய பதிவு... தேங்க்ஸ் அண்ணா...

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஸோ.. நம்மளோட அடுத்தப் பதிவும் அண்ணன் சீமானோட கல்யாணம்தான்..!//

பதிவுல சொன்னது விட செம மேட்டர்லாம் பத்திரிக்கையிலே சொல்லிட்டாங்க, நீங்க ரொம்ப மோசம் அவ்வ்!]]]

அடப் போங்கப்பா.. இதுக்கு மேல என்னத்த எழுதறது..?

[[[ஆமாம்... சீமானுக்கு இது எத்தினியாவது கண்ணாலாம் ஒன்னுமே சொல்லக் காணோம் அவ்வ்!]]]

நீ சாத்து வாங்கப் போற..!

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

மிக நீண்ட தெளிவான, முக்கியமான விவரங்கள் அடங்கிய பதிவு... தேங்க்ஸ் அண்ணா..]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் பிரதர்..!

Nondavan said...

இம்புட்டு குளறுபடியா... படிக்கவே தலை சுத்துது.. :)

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இம்புட்டு குளறுபடியா... படிக்கவே தலை சுத்துது.. :)]]]

இன்னமும் நிறைய இருக்கு.. இனிமேல் வெளி வரும்..!

AAR said...

The day Tamilnadu people stop giving importance to Koothadis only that day Tamilnadu will prosper.

உண்மைத்தமிழன் said...

[[[AAR said...

The day Tamilnadu people stop giving importance to Koothadis only that day Tamilnadu will prosper.]]]

ஏங்க.. ஏன் இப்படி..? நாங்களும் தமிழகத்து மக்களில் ஒருவர்தாங்க..! இதுவும் ஒரு துறைதாங்க.. ஏன் இந்தக் காழ்ப்புணர்ச்சி..? தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் உங்களது எண்ணத்தை..!

AAR said...

Its because of cine people Tamilnadu politics and administration is in such a condition.