வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்..!

07-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தொடர்ச்சியாக ஹிட்டடிக்கும் ஹீரோக்கள் வரிசையில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்துவிட்டார்..! தமிழ்ச் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும் என்கிற பேராசையெல்லாம் கிடையாது.. தயாரிப்பாளர்கள் போட்ட காசை திருப்பிக் கொடுத்தாக வேண்டும் என்கிற வெறியோடு இயக்கத்தில் துணிகிற இயக்குநர்களுக்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்..! இயக்குநர் பொன்ராம் தயாரிப்பாளருக்கு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிவிட்டார். பிரதிபலன் உடனேயே அவருக்குக் கிடைத்துவிட்டது. அடுத்த படத்தை உடனேயே துவக்குகிறார்..! வாழ்த்துகள்..!

கதை என்னவோ நாம் பார்த்து பார்த்து, கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன கதைதான்.. ஆனால் திரைக்கதை..? இங்கேதான் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்கள், கதாசிரியர்களின் திறமை பளிச்சிடுகிறது..! சுத்தமா டிடெர்ஜென்ட் சோப் போட்டு கழுவி வைச்ச பீங்கான் தட்டு மாதிரி புதிதாக தெரிகின்றன அனைத்துக் காட்சிகளும்..! 


ஊரின் பெரும் புள்ளி சிவனாண்டி. இவரது மூன்றாவது மகளை காதலிக்கும் அந்த ஊரின் வேலைவெட்டியில்லாத பிரதமர் சிவகார்த்திகேயன்.. பொண்ணு ஊரைவிட்டு ஓடிப் போனா காதை அறுத்துக்கணுமே என்கிற தவிப்பில் சீக்கிரமே பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி வைச்சு தப்பிக்க நினைக்கும் சிவனாண்டியை சமாளித்து இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் சிவகார்த்திகேயன் எப்படி தன் காதலியை கரம் பிடிக்கிறார் என்பதுதான் கதை..!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள சிலுக்குவார்பட்டிதான் கதைக்களம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை ஓப்பன் செய்துவிட்டு ஊருக்குள்ளேயே அலப்பரை கொடுத்து வரும் சிவாவும், சூரியும் செய்யும் அதகளங்கள் அத்தனையும் தொடர்ச்சியான நகைச்சுவை பட்டாசுகள்..!

இதில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு கிளைக் கதை உண்டு.. அத்தனையும் சுவாரஸ்யம்..! சிவகார்த்திகேயனின் அப்பா இயக்குநர் யார் கண்ணனுக்கு ஒரு கதை.. சிவனாண்டியான சத்யராஜுக்கு ஒரு கதை.. சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதை.. உடன் இருக்கும் செயலாளர் சூரிக்கு ஒரு கதை.. என்று அனைத்தையும் மிக்ஸிங் செய்த்தை பார்த்தால் கட்டிங்கில் கூட இவ்வளவு அளவாக ஊற்றியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது..! 

முதல் காட்சியிலேயே அந்த ஊரை பற்றியும், சிவனாண்டியை பற்றியும் ஏ டூ இசட்வரையிலும் கதையின் அடித்தளத்தை வெளிப்படுத்தியிருக்கும்விதமே இயக்குநரின் திறமைக்குச் சான்று.. அந்த லாரி டிரைவர்கள் சண்டையிலேயே கதை தெரிந்துவிட்டது..!  இப்படித்தான் திரைக்கதையை ஓப்பன் செய்ய வேண்டும் என்ற இயக்குநரின் இந்த டெக்னிக்கும் வரும்கால இயக்குநர்களுக்கு ஒரு பாடம்..!

சிவகார்த்திகேயனுக்கு சீரியஸ் வேடம் வராது என்றே முடிவுகட்டிவிட்டார்கள். அதுவும் ஓகேதான்.. இந்தத் தம்பிக்கு இதுவும் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகிறது.. தன் வீட்டிலேயே தன் அப்பாவை சமையல்காரனை போல பேசுவது.. வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக அவ்வப்போது காட்டிக் கொள்வது.. சூரியை சிற்சில இடங்களில் வாரிவிடுவது.. போலீஸ் ஸ்டேஷனில் போய் அலப்பறையைக் கொடுப்பது.. காதலிக்காக கல்யாணத் தோழர் காட்சியை மாற்றுவது.. திருவிழாவில் திண்டுக்கல் ரீட்டா கச்சேரியை ஏற்பாடு செய்யச் சொல்லி கலாட்டா செய்வது.. கல்யாண விழாவில் காதலியுடனான அந்த நெருக்கத்தை ஏற்பட்டுவது.. என்று இவரது அலப்பறைக்கு தியேட்டருக்கு வந்திருந்த பெண்கள் கூட்டமே வெகுவாக ரசித்தது..

நண்பனின் கல்யாண காட்சியில்  சூரியை மாற்றிவிடும் காட்சியின்போதும், சூரியின் அட்வைஸ்படி தண்ணி குழாயில் கை கழுவ வரும் ஹீரோயினை பிடிக்க வேண்டிய காட்சியிலும் என் பக்கத்தில் வரிசையாக அமர்ந்திருந்த பெண்கள் கூட்டம் சீட்டில் இருந்து துள்ளிக் குதித்து கை தட்டி ரசித்தது. இடம் சாந்தம் தியேட்டர்.. ஆச்சரியம்தான்..! பெண்களுக்கு எதுதான் பிடிக்கிறது என்று இங்கே எவனுக்குமே தெரியலை..!!!

சூரி படத்துக்கு படம் பில்டப்பாகிக் கொண்டே வருகிறார்.. சம்பளத்தை மட்டும் கொஞ்சம் கூட்டாமல் இப்படியே மெயின்டெயின் செய்தால் இவருடைய நடிப்பார்வத்தை நாமளும் நிறையவே கண்டு களிக்கலாம்.. துப்பாக்கி தொலைந்து போன விஷயத்தில் இவரை கட்டி வைத்து உதைக்கும் காட்சியின் இறுதியில் கட்டவே இல்லையா என்பதற்கு இவர் காட்டும் ரியாக்ஷன்தான் பெரும் காமெடி..! 

சத்யராஜ் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைக் கேட்டுவிட்டுத்தான் நடிக்க ஒத்துக் கொண்டதாக இயக்குநர் கூறினார். அதிலும் கடைசி கிளைமாக்ஸை கேட்டபின்புதான் ஒத்துக் கொண்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன்.. தனது மருமகன்களின் உண்மை நிலையை அர்த்த ராத்திரியில் சிவாவிடம் சொல்லும் சத்யராஜும் சேர்ந்தே சிரிக்க வைத்திருக்கிறார் ..! பழைய சத்யராஜாக ஒரு இடத்தில்கூட தென்படாமல் புதிய ஆளாக இவர் இருந்ததே இயக்குநரின் திறமைக்குச் சான்று..! ஊருக்கு ஒரு பெரிசு.. அவருக்கு ஒரு அல்லக்கை கூட்டம்ன்னு நிறையவே இருக்கும். அதில் ஒரு கோஷ்டியை இதில் காட்டியிருக்கிறார் பொன்ராம்.. பொருத்தமான கோஷ்டி.. 


நாயகியைவிடவும் ஒரு சில காட்சிகளே வரும் பிந்துமாதவி..!!!!!!!!! ஆஹா.. ஓஹோ..! பேசாம இவுகளையே ஹீரோயினாக்கியிருக்கலாமேன்னு படத்தோட இடைவேளைல இயக்குநர்கிட்ட கேட்டேன்.. பிந்துமாதவியை ஸ்கூல் யூனிபார்ம்ல பார்த்தா நல்லவா இருக்கும் என்றார்..? ரசிகர்களாகிய எங்களுக்கு அதுவும் நல்லாத்தான் ஸார் இருக்கும் என்றேன்..! கையில் குடையுடன் பேருந்தில் இருந்து இறங்கி செல்லும் அந்த காட்சி அவ்வளவு க்யூட்..! நச்சென்று இருந்தது இவருடைய போர்ஷன்..! 


ஹீரோயின் பொருத்தம்தான்..! சிவாவே ரசித்ததுபோல ஸ்கூல் யூனிபார்ம் இல்லாத காட்சிகளில் இவரை வெகுவாக ரசிக்க முடிகிறது..!  சின்னச் சின்ன ஆக்சன்களில் இவருடைய முகபாவனை அசத்தல்.. நேரம் படத்தின் நஸ்ரியா போல்..! என்னை மாதிரியான இளசுகளுக்கு இதுதானே வேணும்..! இயக்குநர்களுக்கும் இதுதானே தேவை.. வெல்டன் திவ்யா மேடம்..!

இப்படத்தின் வசனங்களை எழுதியிருக்கும் இயக்குநர் ராஜேஷுக்கு ஒரு சபாஷ் போடணும்.. வசனத்துக்கு வசனம் கை தட்டல்கள் பறக்கின்றன..! காதலில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியடைந்தவர்களுக்கும் ஒருசேர வாழ்த்துகளையும், ஆறுதல்களையும் வாரி வழங்கிய வசனங்களும் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்..! சிவாவும், சூரியும் ஒருவரையொருவர் கலாய்ப்பதாக நினைத்து இக்கால இளைஞர்களுக்கு கொடுக்கும் டானிக்கும், பேதி மருந்தும் இரண்டுமே ஒன்றாகவே இருக்கிறது..!  காதல் தண்டபாணிக்கு சிவா கொடுக்கும் கடைசி பன்ச் டயலாக்ஸ் சூப்பர்ப்..! காதல் படத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்த வசனத்துக்காகவும் ஒரு பாராட்டு..!

பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்திருக்கிறது..! அதிலும் 'ஊதா கலரு ரிப்பனு' பாடலும், 'இந்தப் பொண்ணுகளே இப்படித்தான்' பாடலும் தியேட்டரில் அதகளப்படுகிறது..! இரண்டுமே முன்பே கேட்ட ராகம்தான் என்றாலும் பரவாயில்லை.. குரலிசை.. பாடல் வரிகளால் திரும்ப கேக்கணும்போல தோணுது..!

பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவிற்கு முதல் பாடல் காட்சியில் சூரியும், சிவாவும் கூட்டத்திற்கு பின்னால் இருந்து எழும்பி முகம் காட்டும் அந்த ஒரு காட்சியே போதும்.. அவ்வளவு ப்ரெஷ்னெஸ்.. சூப்பர் ஸார்..! பாடல் காட்சிகளில் அத்தனை பெரிய கூட்டத்தையும் கவர் செய்து, கலர் கரெக்ஷனை கண்ணுக்கு உறுத்தாததுபோல் செய்திருப்பது மிகப் பெரிய விஷயம்.. திறமைக்கார மனுஷன்..!

சீரியஸ் படங்களைவிடவும், காமெடி படங்களுக்கு திரைக்கதை எழுதுவதுதான் மிகவும் கஷ்டம். இப்போது வருகின்ற காமெடி படங்களில் திரைக்கதை அமைக்கும்விதத்தை பார்த்தால் எத்தனை திறமையான கதாசிரியர்கள், திரைக்கதை ஆசிரியர்கள் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.. புரிகிறது..! 

தமிழ்ச் சினிமாவுக்கு 'ஆதலால் காதல் செய்வீர்' படமும் தேவை.. இந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கமும்' தேவைதான்.. முன்னது சீரியஸான கதையை காமெடியோடு கொண்டு சென்று முடித்தது..! இது காமெடியான கதையை காமெடியாகவே கடைசிவரையிலும் காட்டியிருக்கிறது..! வசூலில் பட்டையைக் கிளப்பக் காத்திருக்கிறது இப்படம்..! வாழ்த்துகள் பொன்ராம் ஸார்..!

அவசியம் பாருங்க மக்களே..!

26 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

தாவணி படத்தை பெரிசா போட்டு இருக்கீங்களே? அப்பன் முருகன் கோவிச்சுக்க மாட்டாரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice movie

கலியபெருமாள் புதுச்சேரி said...

பாத்துட்டா போச்சு.

Nondavan said...
This comment has been removed by the author.
Nondavan said...
This comment has been removed by the author.
Nondavan said...

அண்ணாச்சி, நேத்து துபாயில் 4.30 மணி காட்சிக்கு குடும்பத்தோடு படம் பார்க்க போனோம்...

முதலில் துபாயில் ரிலீஸ் ஆவதே ஆச்சர்யம்...!!!

செம்ம கூட்டம்... ஹவுஸ்ஃபுல் எல்லாம் எதிர்பார்க்க முடியாது... ஆனாலும் சிங்கம் 2 படத்திற்கு வந்த கூட்டத்தை விட அரங்கம் நிறைந்து இருந்தது. ஆச்சர்யமான விஷயம்...!!!

Nondavan said...

உங்க விமர்சனத்திற்கு தான் காத்திருந்தேன். படம் பார்த்து விட்டாலும், நீங்க சொல்லும் எழுத்துக்களில் படிக்க அம்புட்டு ஆர்வம், ஆசை...

Babu Palamalai said...

அண்ணே ...படம் பார்த்த கையோட ..சுட ...சுட ...விமர்சனம் எழுதிட்டீங்க போலருக்கு ....!

வவ்வால் said...

அண்ணாச்சி,

//என்னை மாதிரியான இளசுகளுக்கு இதுதானே வேணும்..! இயக்குநர்களுக்கும் இதுதானே தேவை.. வெல்டன் திவ்யா மேடம்..//

அடிச்ச மப்பெல்லாம் இறங்கி போச்சு இந்த வசனத்த கேட்டு அவ்வ்வ்!

மொக்க படத்த கூட என் மனசு தாங்கிடும், ஆனால் இதை...அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா, இடி போல உண்மைத்தமிழன் விமர்சனம் வந்தால் யார் தாங்குவார்...சோதனை மேல் சோதனை... அவ்வ்!

ஹி...ஹி அந்த திவ்யா மேடம் வெலாசம் கெடைக்குமா...ச்சும்மா நானும் பாரட்டத்தேன் :-))

கோவை ஆவி said...

நேரம் படத்தின் நஸ்ரியா போல்..!//

இந்த ஒரு லைனுக்காகவே இந்த விமர்சனத்தை லைக் பண்றோம்.. ஹிஹி..

-அகில உலக நஸ்ரியா ரசிகர் மன்றம்..

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

தாவணி படத்தை பெரிசா போட்டு இருக்கீங்களே? அப்பன் முருகன் கோவிச்சுக்க மாட்டாரா?]]]

அவனுக்கும் தாவணி மேல ஒரு கிரேஸ் இருக்காதா என்ன..?

உண்மைத்தமிழன் said...


[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice movie]]]

நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[[கலியபெருமாள் புதுச்சேரி said...

பாத்துட்டா போச்சு.]]]

அவசியம் பாருங்க ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, நேத்து துபாயில் 4.30 மணி காட்சிக்கு குடும்பத்தோடு படம் பார்க்க போனோம்... முதலில் துபாயில் ரிலீஸ் ஆவதே ஆச்சர்யம்...!!! செம்ம கூட்டம்... ஹவுஸ்ஃபுல் எல்லாம் எதிர்பார்க்க முடியாது... ஆனாலும் சிங்கம் 2 படத்திற்கு வந்த கூட்டத்தைவிட அரங்கம் நிறைந்து இருந்தது. ஆச்சர்யமான விஷயம்...!!!]]]

நல்ல படம் என்று எதிர்பார்த்துதான் வந்திருக்கிறார்கள். நிச்சயம் படம் உங்களை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

உங்க விமர்சனத்திற்கு தான் காத்திருந்தேன். படம் பார்த்து விட்டாலும், நீங்க சொல்லும் எழுத்துக்களில் படிக்க அம்புட்டு ஆர்வம், ஆசை.]]]

உங்களை மாதிரியான நண்பர்களால்தான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.. கோடானு கோடி நன்றி நொந்தவன் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Babu Palamalai said...

அண்ணே ...படம் பார்த்த கையோட ..சுட ...சுட ...விமர்சனம் எழுதிட்டீங்க போலருக்கு ....!]]]

இதுதான் ஒரு இயக்குநருக்குக் கிடைத்த வெற்றி.. படம் பார்த்த பின்பு உடனேயே எழுத வேண்டும் என்று தோன்றுகிறது பாருங்க. அதுதான் படத்தின் வெற்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

//என்னை மாதிரியான இளசுகளுக்கு இதுதானே வேணும்..! இயக்குநர்களுக்கும் இதுதானே தேவை.. வெல்டன் திவ்யா மேடம்..//

அடிச்ச மப்பெல்லாம் இறங்கி போச்சு இந்த வசனத்த கேட்டு அவ்வ்வ்!]]]

உண்மையைத்தான்யா சொல்லுதேம்..!

[[[மொக்க படத்த கூட என் மனசு தாங்கிடும், ஆனால் இதை... அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா, இடி போல உண்மைத்தமிழன் விமர்சனம் வந்தால் யார் தாங்குவார்... சோதனை மேல் சோதனை... அவ்வ்!]]]

இதுக்கு மேலேயும் உங்களுக்கு எவனும் படம் எடுத்துக் காட்ட முடியாது..! போங்கய்யா.. போங்க..!

[[[ஹி...ஹி அந்த திவ்யா மேடம் வெலாசம் கெடைக்குமா...ச்சும்மா நானும் பாரட்டத்தேன் :-))]]]

பாராட்டையெல்லாம் எழுத்தோட நிறுத்திக்கும். நேர்ல நாங்க பார்த்துக்குறோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை ஆவி said...

நேரம் படத்தின் நஸ்ரியா போல்..!//

இந்த ஒரு லைனுக்காகவே இந்த விமர்சனத்தை லைக் பண்றோம்.. ஹிஹி..

-அகில உலக நஸ்ரியா ரசிகர் மன்றம்..]]]

அதுக்குள்ளயே ரசிகர் மன்றமா..? ஆவி, நீர் நிசமாவே ஆவிதான்யா..1

Nondavan said...

நல்ல படம் என்று எதிர்பார்த்துதான் வந்திருக்கிறார்கள். நிச்சயம் படம் உங்களை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்..! // நிச்சயம் ஏமாற்றவில்லை.. நெம்ப திருப்தி கொடுத்த காசுக்கு... நல்லா சிரிச்சுட்டு வந்தோம்.. எங்கூட்டு அம்மணி இன்னொருமுறை படத்திற்கு கூட்டிட்டு போக சொல்றாங்க என்றால் பார்த்துக்கோங்க... :) :) :)

Nondavan said...

சூரியின் காமேடி, நீங்க சொன்னது போல படத்திற்கு படம் மெருகேறிட்டே வரார்... அந்த தண்ணீர் குழாய் காமெடியில் மொத்த தியேட்டரும் அதிர்ந்தது... இன்னும் நிறைய இடங்களிலும் மனுஷன் கலக்கிட்டார்...

Nondavan said...

//உங்களை மாதிரியான நண்பர்களால்தான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.. கோடானு கோடி நன்றி நொந்தவன் ஸார்..!// ஒரு கனம் நெகிழ வைத்துவிட்டீர்கள் அண்ணே.... விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நல்ல படம் என்று எதிர்பார்த்துதான் வந்திருக்கிறார்கள். நிச்சயம் படம் உங்களை ஏமாற்றவில்லை என்றே நினைக்கிறேன்..! //

நிச்சயம் ஏமாற்றவில்லை.. நெம்ப திருப்தி கொடுத்த காசுக்கு... நல்லா சிரிச்சுட்டு வந்தோம்.. எங்கூட்டு அம்மணி இன்னொருமுறை படத்திற்கு கூட்டிட்டு போக சொல்றாங்க என்றால் பார்த்துக்கோங்க... :) :) :)]]]

இன்னொரு தடவையும் பாருங்க..! நேரமிருந்தால்.. வாய்ப்பிருந்தால்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

சூரியின் காமேடி, நீங்க சொன்னது போல படத்திற்கு படம் மெருகேறிட்டே வரார். அந்த தண்ணீர் குழாய் காமெடியில் மொத்த தியேட்டரும் அதிர்ந்தது. இன்னும் நிறைய இடங்களிலும் மனுஷன் கலக்கிட்டார்.]]]

இவரை மாதிரியான நம்மைப் போல் ஒருவன் தோற்றத்தில் இருப்பவர்களின் காமெடிதான் மக்கள் மனதில் ஒட்டும்..! இவர் நினைத்தால் ராஜபாட்டையில் நடக்கலாம்..! எல்லாமே இவர் கையில்தான் இருக்கிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

//உங்களை மாதிரியான நண்பர்களால்தான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.. கோடானு கோடி நன்றி நொந்தவன் ஸார்..!//

ஒரு கனம் நெகிழ வைத்துவிட்டீர்கள் அண்ணே. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.]]]

உங்களுக்கும் எனது வாழ்த்துகள் நொந்தவன் ஸார்..!

ganesh kumar said...

''திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள சிலுக்குவார்பட்டிதான்'' ---உதா அண்ணே..உங்களமாதிரி நம்ம சைடுல இருந்து போயி இணையத்தில கலக்குற ஆளுங்க கம்மி...
சின்னாளபட்டில இருந்து சிலுக்குவார்பட்டி தூரமுன்ணே...
அம்மையநாயகனுர்ல இருந்து பக்கம்...இல்ல நிலக்கோட்டை +சிலுக்குவார் பட்டி + பள்ளப்பட்டி + வாடிப்பட்டி .....

உங்க விமர்சனத்த படிச்சிட்டு படம் பாக்கிரவிங்க நாங்க...
கணேஷ் குமார் ராஜாராம்...

உண்மைத்தமிழன் said...

[[[ganesh kumar said...

''திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள சிலுக்குவார்பட்டிதான்'' ---

உதா அண்ணே.. உங்கள மாதிரி நம்ம சைடுல இருந்து போயி இணையத்தில கலக்குற ஆளுங்க கம்மி. சின்னாளபட்டில இருந்து சிலுக்குவார்பட்டி தூரமுன்ணே.
அம்மையநாயகனுர்ல இருந்து பக்கம். இல்ல நிலக்கோட்டை + சிலுக்குவார்பட்டி + பள்ளப்பட்டி + வாடிப்பட்டி.

உங்க விமர்சனத்த படிச்சிட்டு படம் பாக்கிரவிங்க நாங்க. கணேஷ் குமார் ராஜாராம்.]]]

மன்னிக்கணும் அண்ணன்களா..! ஏதோ தெரியாம எழுதிட்டேன்.. விட்ருங்க.. அவசியம் படம் பாருங்க..! நமக்கும் நாலு பேரு இருக்காங்கப்பா..!!!