கரிமேடு - சினிமா விமர்சனம்

03-06-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உண்மைச் சம்பவங்களை படமாக்கினால் அதன் தாக்கமறிந்த ரசிகர்களின் கூட்டம் இன்னமும் கொஞ்சம் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு ஓடி வரும் என்பது சினிமா இயக்குநர்களின் எண்ணம். இதற்கேற்றவாறு பல உண்மைச் சம்பவங்கள் இதற்கு முன்னர் பலவாறு எடுத்துக் கொத்து புரோட்டோ போடப்பட்டு சிதைக்கப்பட்டது சினிமா வரலாறு. அப்படியொரு கதையை இப்படத்தின் அடித்தளமாக எடுத்துக் கொண்ட இயக்குநர் முடிந்த அளவுக்கு இதனை நேர்மையாகச் செய்திருப்பதாகச் சொல்கிறார்.. 

சென்ற ஆண்டு ‘தண்டுபால்யா’ என்ற பெயரில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் இது. படத்தின் தயாரிப்புப் பணிகள் கமுக்கமாக நடைபெற்று வந்த நிலையில் இதன் ஹீரோயின் பூஜா காந்தி அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்ற ஒற்றைச் செய்தியே இந்தப் படத்தை திராவிட நாடுகளுக்கு அடையாளப்படுத்தியது.. கன்னடத்தில் இருந்து தாவி, தெலுங்கில் ஓடோடி முடிந்து இப்போது தமிழுக்கு இயக்குநர் இராம.நாராயணனால் கொண்டு வரப்பட்டுள்ளது..!மனிதக் கறியைத் தவிர மீதமுள்ளவற்றை ரசித்து உண்பவர்கள். குழுவில் இருக்கும் பெண்கள் யாருக்கு யார் கணவன் என்பதே தெரியாத அளவுக்கு அனைவரும் ஒரே குடும்பமாக இருப்பவர்கள்.. நாகரிகத்தை கண்ணால்கூட காட்டாதவர்கள்.. பணம்.. இதற்காக எத்தகைய செயலையும் செய்யத் தயங்காதவர்கள் என்று அந்த தண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த சில மக்களை அடையாளம் காட்டியது கர்நாடக போலீஸ்..!

அந்த டீமை வளைத்துப் பிடித்து சிதைத்த கதையைத்தான் இந்த 2 மணி 10 நிமிட கதையில் சொல்லியிருக்கிறார்கள். கன்னடத்துலேயே பலரும் “இன்னும் நிறைய வெட்டியிருக்கலாம்.. பார்க்க சகிக்கலை..” என்று சொல்லி தியேட்டரைவிட்டு வெளியே ஓடிய சம்பவங்களெல்லாம் நடந்திருக்கிறது. தமிழிலும் அப்படியே..! 

பார்க்கவே விசித்திரமான முகங்கள்.. கொடூரமான மனதை வெளிக்காட்டாத செய்கைகள்.. கொலை செய்ய அவர்கள் செய்யும் முன்னேற்பாடு ஸ்கெட்ச்சுகள், கொலை செய்யும்போது அவர்கள் அதனை ரசித்துச் செய்யும் காட்சிகள்.. “எதையும் அனுபவிச்சு செய்யணும்டா..” என்பதற்கு இந்தக் கொலைகாரர்களும் உதாரணமாகத்தான் இருந்திருக்கிறார்கள்..!

இவர்களைப் பிடித்தே தீருவது என்று வைராக்கியத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டர்.. அவரிடமே “பார்த்து போங்க” என்று எச்சரிக்கையை வாங்கிவிட்டு அவர் சென்றவுடன் இவர்கள் சிரிக்கும் சிரிப்பு.. கழுத்தை கத்தியினால் அறுக்கும்போது வரும் அந்த கடைசி நிமிடத் துடிப்புதான் ரொம்ப ரசனையா இருக்கும் என்று அந்தக் கும்பலின் தலைவனே சொல்லுவது நமக்குள் பக்கென்றாகிறது.. படத்திலும் பல கொலைகளை அப்படித்தான் ரசனையாக எடுத்திருக்கிறார்கள்..!

எந்த ஹீரோயினும் சத்தியமா முன் வந்திருக்க மாட்டார்கள்..! எப்போதும் அயிட்டம் கேர்ள் போல முந்தானையை நடுவில் விட்டுக் கொண்டு காட்சியளிப்பது.. பீடியை வலித்து ரசித்து குடிப்பது.. தண்ணியடித்துவிட்டு ஆடுகிற ஆட்டம்.. “நோட்டம் பார்க்க போகலியா..” என்று புருஷனிடம் அடி வாங்குவது..! “குடிக்கக் கொஞ்சம் தண்ணி கிடைக்குமா...?” என்று அப்பாவியாய் கேட்கும் அந்தத் தோரணை..! பூஜாகாந்திக்கு சிறந்த நடிகை விருது கொடுத்தது ஓகேதான்..!

5000 ரூபாய்க்குக் கொலை செய்வது.. போலீஸ் இன்ஸ்பெக்டரையே நடுரோட்டில் போட்டுத் தள்ளுவது.. ஜாமீன் எடுக்க வக்கீலிடம் தன்னையே அடகு வைப்பது போல் பூஜா காந்தி பேசுவது.. வக்கீல் வேடத்தில் இவர்களைவிட பெரிய அயோக்கியனை காட்டியிருப்பது. இவர்கள் சாப்பிடும் கழுதை கறியை பார்த்து அந்தக் கழுதை முகத்தைச் சுளிக்கிறத பாருங்க.. இங்கதான் நமக்கும், அவங்களுக்கும் வித்தியாசமே தெரியுது.. நாம முகமூடி போட்டுக்கிட்டு செய்றோம்.. அவங்க போடாம செய்றாங்க. அவ்ளோதான் வித்தியாசம்..!

மனிதர்களிடத்தில்தான் மனித உரிமைகளை பத்தி பேச முடியும். இவர்கள் மிருகங்கள் என்று இயக்குநரே தீர்ப்பு சொல்லிவிட்டதால், உண்மையாக போலீஸ் விசாரணையில் என்ன நடக்கும் என்பதை அப்படித்தான்.. நல்லா வேணும் என்பதை போல காட்சிகளில் திணித்திருக்கிறார்..!

பிடிபட்ட இந்தக் கும்பலை இன்ஸ்பெக்டர் அடித்துத் துவைத்து எடுப்பது.. சித்ரவதை செய்வது.. கால் நகங்களை குறடு வைத்து பிடுங்குவது.. மலத் துவாரத்தில் மிளகாய்ப் பொடி தடவிய குண்டாந்தடியை நுழைப்பது.. ஆண் குறியில் கரண்ட் ஷாக் கொடுப்பது.. பூஜாவை அரை நிர்வாணமாக்கி முதுகுத் தோலை உரிப்பது.. என்று போலீஸ் செய்திருக்கும் தேர்ட் டிகிரி விசாரணைகளை அப்பட்டமாக அப்படியே எடுத்துக் காண்பித்திருக்கிறார். கர்நாடகாவில் இதெல்லாம் வீரப்பன் வேட்டையிலேயே நாங்க பார்த்துட்டோமாக்கும் என்று பம்மாத்தாக அலட்சியமாக விட்டிருக்கிறார்கள். நமக்குத்தான் மனசு ‘கெதக்’ என்கிறது..! 

கீதாஞ்சலியில் நளினியுடன் இன்னொரு ஹீரோயினாக நடித்த யமுனாவை ரொம்ப வருஷம் கழிச்சு இதுல அம்மா கேரக்டர்ல பார்த்தாச்சு.. ராம்கோபால்வர்மாவின் பிரியங்கா திரிவேதி, மார்க்கெட் இல்லாததால் இது போன்ற சின்ன கேரக்டரில் நடிச்சிருக்காங்க போலிருக்கு..! 

டப்பிங் படம்ன்னாலும் வசனங்களை நச்சென்றுதான் எழுதியிருக்கிறார்கள். திராவிட மொழிகளில் தமிழில் இருந்து பிரிந்தவைதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பதால் சினிமாத்துறையினருக்கு இது பெரிய உதவியாக இருக்கிறது..! அப்படியே அட்சரம் பிசகாமல் தமிழிலேயே பேசி நடித்ததுபோல் வசனங்களை பேச வைத்திருக்கிறார்கள்..! ஆங்கிலத்திலேயே பிய்க்கும்போது இதென்ன ஜூஜூபி..?!

இவ்வளவு காதலுடன் இருக்கும் தம்பதியினரை போய் கொலை செய்றானுக பாருங்க என்று நம்ம பரிதாபத்தைக் கூட்டுவதற்காக ஒரு டூயட்டு..! பின்னணி இசை இந்தக் கொலைகார பாவிகள், கொலை செய்யப் போகும்போது கொஞ்சம் பில்டப்பை கூட்டிக் கொடுத்து அவங்களுக்குத்தான் உதவியிருக்கு..! 

உண்மைக் கதையை படமாக்கி மக்களிடம் பெயர் எடுக்க விரும்புபவர்கள், வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் எப்படியெல்லாம் சித்ரவதை செய்தார்கள் என்பதையும் படமாக்கிக் காண்பித்தால் இன்னும் சிறப்பான பெயர்களே அவர்களுக்குக் கிடைக்கும்..! 

இளகிய மனதுடையவர்கள் தயவு செய்து இந்தப் படத்தைத் தவிர்க்கவும்..!

16 comments:

கோவை நேரம் said...

அம்புட்டு கொடூரமா இருக்கா. .

raan kanna said...

சித்தப்பு குட்டிபுலி விமர்சனத்தை எதிர் பார்க்கிறோம்

சக்கர கட்டி said...

படத்துல கிளுகிளுப்பு இருக்கோ

rajasundararajan said...

'நச்'ன்னு எழுதி இருக்கீங்க, தம்பி. படம் பார்க்காம விட்டுட்டோமே ன்னு தோணுது. 'ஃபேம்'ல ஓடுனா நளைக்கே பார்த்திடுறேன்.

joe said...

அண்ணே, இந்தப்படம் பெயரைக் கேட்டு பீதி ஆயிட்டேன். சீக்கிரம், குட்டிப்புலி விமர்சனம் போடுண்ணே. ரூம்மேட்டுல, தங்கர் பச்சன் தகர பச்சன் ஆயிட்டாரு. பாலாவும் சைக்கோ படமா எடுத்து பேரை கெடுத்தாச்சு. மிஞ்சி இருக்கிறது அண்ணன் சசி மாத்திரம் தான். குட்டிப்புலியா அல்லது செத்த எலியான்னு தெரிய ஆவலா இருக்குது.

Doha Talkies said...

விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா,
அண்ணேன் ஏன் இப்போ எல்லாம் அரசியல் பதிவுகள் எழுதுவதில்லை?
பயமா அண்ணே?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கரிமேடு தமிழில் பல விஷயங்கள் இருப்பது போல தெரிகிறதே பிரதர்?

Mp Raj said...

ரண கொடுரமான படம்...

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

அம்புட்டு கொடூரமா இருக்கா.]]]

ஏதோ கொஞ்சம் கொடூரம் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[raan kanna said...

சித்தப்பு குட்டி புலி விமர்சனத்தை எதிர் பார்க்கிறோம்.]]]

அது கழுதைப் புலியாயிருச்சே..?!

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

படத்துல கிளுகிளுப்பு இருக்கோ..?]]]

சக்கரகட்டி.. ஏன் இந்த வேண்டாத வேலை..? கழுத்தை அறுத்திருவானுக..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

'நச்'ன்னு எழுதி இருக்கீங்க, தம்பி. படம் பார்க்காம விட்டுட்டோமே ன்னு தோணுது. 'ஃபேம்'ல ஓடுனா நளைக்கே பார்த்திடுறேன்.]]]

நோ பேம்.. கருமாரி காம்ப்ளக்ஸ்ன்னு நினைக்கிறேன். அவசியம் பாருண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணே, இந்தப் படம் பெயரைக் கேட்டு பீதி ஆயிட்டேன். சீக்கிரம், குட்டிப்புலி விமர்சனம் போடுண்ணே. ரூம்மேட்டுல, தங்கர்பச்சன் தகரபச்சன் ஆயிட்டாரு. பாலாவும் சைக்கோ படமா எடுத்து பேரை கெடுத்தாச்சு. மிஞ்சி இருக்கிறது அண்ணன் சசி மாத்திரம்தான். குட்டிப் புலியா அல்லது செத்த எலியான்னு தெரிய ஆவலா இருக்குது.]]]

அது கெடக்குது கழுதைப் புலி.. ஆளை விடுங்கப்பா சாமிகளா..?!

உண்மைத்தமிழன் said...

[[[Doha Talkies said...

விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. அண்ணேன் ஏன் இப்போ எல்லாம் அரசியல் பதிவுகள் எழுதுவதில்லை? பயமா அண்ணே?]]]

பயமா..? எனக்கா..? நல்லா கேட்டீக தம்பீ..?!

எழுதி, எழுதி அலுத்துப் போச்சு.. கூடவே ரொம்ப சோம்பேறித்தனம் வேற..! எவ்வளவு எழுதினாலும் நம்ம ஆளுகளுக்கு புத்தில ஏற மாட்டாங்குதே.. அப்புறம் என்னதான் செய்யறது..?

உண்மைத்தமிழன் said...

[[[SUREஷ்(பழனியிலிருந்து) said...

கரிமேடு தமிழில் பல விஷயங்கள் இருப்பது போல தெரிகிறதே பிரதர்?]]]

உண்மைச் சம்பவம் என்பதால் அப்படித் தெரிகிறது பிரதர்..!!!

உண்மைத்தமிழன் said...

[[[Mp Raj said...

ரண கொடுரமான படம்...]]]

படம் ஓடிக்கிட்டுத்தானே இருக்கு..! என்ன பெரிய ரணம்.. கொடூரம்ன்னு சொல்லிட்டு..???????