நேரம் - சினிமா விமர்சனம்

17-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

“ஆவீன மழைபொழிய இல்லம் வீழ 
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ 
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட 
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச் 
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத் 
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக் 
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக் 
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே..”

கி.பி. 1800-களில் இராமச்சந்திரக் கவிராயர் எழுதிய இந்த பாடலின் விளக்கம் இதுதான் :

“வீட்டில் பசு மாடு கன்று போட்டிருக்கிறது. கடும் மழையால் வீடு இடிந்து விழுந்திருக்கிறது.. வீட்டில் மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறாள். வேலைக்காரன் திடீரென்று இறந்துவிட்டான்.. வயலில் ஈரம் காய்ந்துவிடும் என்று பயந்து நெல் விதை போட வயலுக்கு ஓடுகிறான். வழியிலேயே அந்த விதை வாங்க கடன் கொடுத்தவன் கொடுத்த கடனுக்கு பதில் சொல்லு அவன் வேட்டியை பிடித்திழுக்கிறான். அவனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக சாவு செய்தி வருகிறது.. சம்பந்தி வீட்டில் இருந்து வீட்டுக்கு திடீரென்று ஆட்கள் வந்திருக்கிறார்கள். கடன்காரர்களை மல்லுக்கட்டி அகற்றிவிட்டு வயலுக்குள் ஓடியவனை பாம்பு கொத்துகிறது.. பாம்புக் கடிக்கு முதலுதவியைச் செய்துவிட்டு வயலுக்குள் ஓடியவனை அரசு அதிகாரிகள் வரி எங்கே என்று கேட்டு மடக்குகிறார்கள். அதே நேரம் ஊர்க் கோவிலின் அன்றைய கொடை அவனது குடும்பம் என்பதால் அதைக் கேட்டு குருக்கள் வீட்டுக்கு வந்து நிற்கிறார்..” 

- இத்தனை பிரச்சினைகளும் ஒருவனுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்தால் அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாகிவிட மாட்டானா.. என்கிறார் கவிராயர். 

இதற்கெல்லாம் அடிப்படையான விஷயம் நேரம்தான்.. நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடந்தால் அது நல்ல நேரம்.. கெட்ட விஷயங்களே தொடர்ந்து நடந்தால் அது கெட்ட நேரம்.. ஒவ்வொரு நல்ல நேரம் முடிந்து கெட்ட நேரமும், கெட்ட நேரம் முடிவுக்கு வந்து நல்ல நேரமும் தொடங்கும் என்பது நமது வாழ்க்கையின் நியதி.. இதைப் புரிந்து கொண்டால் நமக்கு எப்போதுமே நல்ல நேரம்தான் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர். கதையும் அதுதான்..!


மல்டி நேஷனல் கம்பெனியில் பணியாற்றும் ஹீரோ வெற்றிக்கு அமெரிக்காவில் நடக்கும் ஒரு அசம்பாவித பாதிப்பினால் தொடர் பாதிப்பாகி வேலை பறி போகிறது. இதனால் காதலியுடன் நடக்கவிருக்கும் திருமணம் நிற்கிறது.. தங்கையின் திருமணத்திற்கு பணமில்லாமல் வட்டிராஜா என்னும் கொடுமைக்கார வட்டிக்காரனிடம் கடன் வாங்க நேரிடுகிறது.. வட்டிப் பணத்தை குறித்த நேரத்தில் கட்டமுடியாமல் போகும் ஒரு நாளில் வெற்றிக்கு என்னென்ன தோல்விகள் பரிசாகக் கிடைக்கின்றன என்பதையும், அது எப்படி அதே நாளில் சால்வ் ஆகிறது என்பதையும் அருமையான திரைக்கதையால் அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். 

வட்டிராஜா.. அவனது கூட்டாளிகள்.. வெற்றி... ஹீரோயின் வேணி.. அவளது அப்பா, அம்மா, போலீஸ் இன்ஸ்பெக்டர், மாணிக்கம், அவரது அண்ணன்.. பிக்பாக்கெட் திருடர்கள்.. அவர்களது ஒற்றுமை.. அவர்கள் எடுக்கும் திடீர் முடிவு.. மாணிக்கம்-வேணி சந்திப்பு.. வெற்றி-மாணிக்கம் சந்திப்பு.. இடையில் குறுக்கிடும் வெற்றியின் மச்சான், வட்டிராஜா- ஆட்டோ டிரைவர் சந்திப்பு.. சார்லியின் அந்த வெறித்தனமான சிரிப்பு..! வாவ்.. வாவ்.. என்று சொல்ல வைக்கிறது திரைக்கதை..! நூல் பிடித்தாற்போல் அனைத்து கேரக்டர்களையும் அழகாகக் கொண்டு சென்று அனைவருக்கும் காட்சிகளை அடுத்தடுத்து வைத்து, வட்டிராஜாவின் திடீர் முடிவை சஸ்பென்ஸாக வைத்து அதன் பின் அதனை காண்பித்திருக்கும் அந்த உத்தி.. இயக்குநர் மூளையை கசக்கிப் பிழிந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

புதுமுகம் நிவின் ஹீரோவாக நடித்திருக்கிறார்.. புதுமுகம் என்றே சொல்ல முடியவில்லை.. அந்த வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் உணர்ந்து நடித்திருக்கிறார்..! இந்த கேரக்டரில் வேறு தமிழ் பிரபலங்கள் நடித்திருந்தால் படம் இந்நேரம் ஹிட் என்றே செய்திகள் வந்திருக்கும்..! முதல் டூயட் பாடலின் மாண்டேஜ் ஷாட்டுகளில் ஹீரோவும், ஹீரோயினும் பேசாமலேயே நடித்திருக்கிறார்கள்.. அசத்தல் இயக்கம்..!


ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம் தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில் இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட விழிகளும் சொக்க வைக்கின்றன..! சின்னச் சின்ன ரொமான்ஸ்களிலும், “முகத்தையா பார்த்த..?” என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திருக்கும் அந்தச் சின்ன க்யூட் ஷாட்டிலும் மின்னுகிறார்.. இந்தப் பொண்ணை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்..! நடனம் எப்படி என்றுதான் தெரியவில்லை.. அடுத்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம்..!

வட்டிராஜாதான் வாழ்ந்திருக்கிறார். என்ன மாடுலேஷன்..? பார்த்து பார்த்து சலித்துப் போன வில்லன் கேரக்டர்தான் என்றாலும் சின்னச் சின்ன ஆக்சன்களில் நம்மை கவர்கிறார். சாப்பிட்டுக் கொண்டே சார்லியை மிரட்டும் காட்சியில் அவரது அலட்சிய நடிப்பில் நம்மை உள்ளே இழுத்துவிட்டார்.. 'சூது கவ்வும்' படத்தில் அப்பாவியான கேரக்டரில் நடித்த சிம்ஹா, இந்த கேரக்டரில் கொடுத்திருக்கும் நடிப்பை நம்பவே முடியவில்லை..! இந்தப் பட வெற்றியின் முதல் ஓட்டு, இவருக்குத்தான்..! பீடியை குடித்துக் கொண்டே அன்னார் செய்து வரும் தொண்டினை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். இவர் சம்பந்தப்பட்ட எந்தக் காட்சியிலும் லாஜிக் மீறாமல் பார்த்துக் கொண்டதற்காகவும் இயக்குநரை பாராட்ட வேண்டும்..! இந்த மாதிரியான தாதாக்களிடம் முட்டாள் அடியாட்கள்தான் இருப்பார்கள் என்பதை இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் அந்த இருவரும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் அந்த வாக்குவாதமே ஒரு அபத்தக் காமெடி.. ஆனாலும் ரசிக்க முடிகிறது..!

பிக்பாக்கெட்காரர்களின் திடீர் முடிவும், அதைத் தொடர்ந்த வட்டிராஜாவின் விரட்டலும் படத்தின் பிற்பாதியில் திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது..! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டியாக பிக்பாக்கெட்டுகளில் ஒருவன் தேமே என்று போய்க் கொண்டிருக்கும் ஹீரோவை வழிச்சண்டைக்கு கூப்பிடும் அந்தக் காட்சி மகத்தான காமெடி.. ச்சும்மாவே முகத்தைக் காட்டியே காமெடியை வரவழைத்துவிட்டார் இயக்குநர்..! 'சூது கவ்வும்' படத்தில் தண்ணி பார்ட்டியாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கும் இதில் ஒரு பிக்பாக்கெட்..!  வளர்ந்து வரும் நடிகர்கள் தொடர்ச்சியாக படங்களில் வலம் வருகிறார்கள்.. வாழ்த்துகள்..!

இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்கள் மூவர். இன்ஸ்பெக்டரான ஜான் விஜய்.. ஹீரோயின் அப்பாவான தம்பி இராமையா.. மாணிக்கத்தான் அண்ணனான நாசர்.. சளைக்காமல் மூவரும் விளையாடியிருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் வெள்ளையடிக்கச் சொல்லிவிட்டு எப்போதுதான் முடியும் என்று அவ்வப்போது போலீஸ் அதட்டலோடு கேட்கும் ஜான் விஜய்யின்  நடிப்பை ரசிக்க முடிகிறது..! தொப்பியை மாட்டிக் கொண்டு ஸ்டைலாக கிளம்புங்க என்று சைகை காட்டியபடியே வரும் அந்த ஷாட்டை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்..!

தம்பியின் தூக்கத்துக்காக பாட முனைந்து பாடல் வராமல் தவிக்கும் நாசர்.. தண்டம் டெக்னாலஜிஸ் என்ற பெயருக்கு அவர் சொல்லும் விளக்கம்.. வட்டிராஜா விஷயத்தில் தன் பெயரை கோர்த்துவிடும் டெக்னிக்.. தன்னிடமே கதை அளக்கும் இன்ஸ்பெக்டர் ஜான்விஜயிடம் பஞ்ச் டயலாக் சொல்லும் அழகு.. எல்லாமே நாசரால் பின்னப்பட்டிருக்கிறது.. வெல்டன் ஸார்..! 

இப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.. மிக இளம் வயதில் சினிமாவுக்குள் நுழைந்து பார்க்காத வேலையே இல்லை என்கிற அளவுக்கு பலதரப்பட்ட வேலைகளையும் பார்த்துவிட்டு பின்பு கடைசியாகத்தான் இயக்கத்திற்கு வந்திருக்கிறார். திருப்பூரைச் சேர்ந்த கோரல் விஸ்வநாதன் என்ற இப்படத்தின் தயாரிப்பாளரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.. இயக்குநர் கேரளா என்பதால் மலையாளத்திலும் அப்படியே எடுத்துவிடலாம் என்ற கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டு படமெடுக்க அனுமதித்திருக்கிறார்.படம் ஒரு வாரத்திற்கு முன்பே கேரளாவில் ரிலீஸா சூப்பர்ஹிட்டாகிவிட்டது..! 

கடவுள், நேரம், ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால் என்று ஆரம்பித்து கடைசியில் தியேட்டர் ஆபரேட்டர் வரையிலும் அனைவருக்கும் நன்றி கார்டு போட்டு தனது நன்றியினைத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர். இதுக்கே நாம தனியா ஒரு வாழ்த்து சொல்லணும் இயக்குநருக்கு.. படத்தின் எடிட்டரும் இயக்குநர்தான் என்பதால் எந்த இடத்திலும் தொய்வு வராமல், படத்தின் டெம்போ குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார்..! சிறந்த எடிட்டராகவும் வருவார் போலும்..!

இந்தப் படத்தில் எனக்கு இருக்கும் ஒரு குறை.. பின்னணி இசைதான்.. கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு இதைத்தாண்டி ஐந்தாவதாக நடிப்பைக் காட்ட உதவியிருக்க வேண்டிய பின்னணி இசை, இதில் பல இடங்களில் அனைவருக்கும் முந்திக் கொண்டு முகத்தைக் காட்டியிருப்பது பெரும் இரைச்சலைத்தான் தந்திருக்கிறது..! முற்றிலும் தவிர்த்திருக்க வேண்டிய விஷயம் இது..! 

புதிய இயக்குநர்கள் புதுமையாக சிந்திக்கிறார்கள்.. பட்ஜெட்டுக்குள் படமெடுக்கிறார்கள். சொன்ன சொல் தவறாது இருக்கிறார்கள். நல்ல திறமையோடு இயக்குகிறார்கள் என்றெல்லாம் பல பெரியவர்கள் மேடைதோறும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள். அந்த இளைய, புதிய இயக்குநர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இப்படி கூடிக் கொண்டே போவது தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு பெருமையளிக்கக் கூடிய விஷயம்..! பாராட்டுக்கள் வாழ்த்துகள் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும்..!

நேரம் - அவசியம் பார்க்க வேண்டிய படம்..! மிஸ் பண்ணிராதீங்க..!

20 comments:

! சிவகுமார் ! said...

reserved saturday 4PM show. Thanks.

rajasundararajan said...

அப்பொ, இடைவேளைக்கு அப்புறம் படம் நல்லா இருக்குங்கிறீங்க?

Prem s said...

//ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம் தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில் இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட விழிகளும் சொக்க வைக்கின்றன..
///

அட என்ன ஒரு கவனிப்பு, போட்ட ஸ்டில் உண்மை தான் என்கிறது ..

சக்கர கட்டி said...

எனது தளத்தில் நேரம் விமர்சனம்

http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_7279.html

என் ராஜபாட்டை : ராஜா said...

ரொம்ப அருமையா விமர்சித்து உள்ளிர்கள் .

எனது விமர்சனம் படிக்க :

நேரம் : விமர்சனம்

Nondavan said...

இராமச்சந்திரக் கவிராயர் பாடலில் துவங்கியது அருமை.... எங்களுக்கு இப்படி ஒரு பாட்டு இருக்குன்னே இப்ப தான் தெரியும்...

விமர்சனம் அருமை.. பார்க்க தூண்டும் வண்ணம் இருக்கு..

படம் கண்டிப்பா பார்த்து சொல்கிறேன்.... நன்றிங்கோ

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

reserved saturday 4PM show. Thanks.]]]

என்னாச்சு..? படம் எப்படியிருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

அப்பொ, இடைவேளைக்கு அப்புறம் படம் நல்லா இருக்குங்கிறீங்க?]]]

இருக்கு.. நல்லாவே இருக்குண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Prem s said...

//ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம் தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில் இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட விழிகளும் சொக்க வைக்கின்றன..///

அட என்ன ஒரு கவனிப்பு, போட்ட ஸ்டில் உண்மைதான் என்கிறது.]]]

ஹி.. ஹி.. ஹி..!

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

எனது தளத்தில் நேரம் விமர்சனம்

http://chakkarakatti.blogspot.in/2013/05/blog-post_7279.html]]]

வாசித்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[என் ராஜபாட்டை : ராஜா said...

ரொம்ப அருமையா விமர்சித்து உள்ளிர்கள்.]]]

வருகைக்கு மிக்க நன்றி ராஜா..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

இராமச்சந்திரக் கவிராயர் பாடலில் துவங்கியது அருமை.... எங்களுக்கு இப்படி ஒரு பாட்டு இருக்குன்னே இப்பதான் தெரியும்.

விமர்சனம் அருமை. பார்க்க தூண்டும் வண்ணம் இருக்கு. படம் கண்டிப்பா பார்த்து சொல்கிறேன். நன்றிங்கோ]]]

அவசியம் பாருங்கோ..! பார்த்துட்டு நீங்களும் விமர்சனம் எழுதலாமே..?

kanavuthirutan said...

ராமச்சந்திர கவிராயரின் பாடலும் அதற்கு விளக்கமும் கொடுத்து படத்தின் விமர்சனத்தை ஆரம்பித்திருப்பது மிக அருமை... படம் பார்த்தேன்.. கண்டிப்பாக பாராட்ட வேண்டிய முயற்சி...

பினாத்தல் சுரேஷ் said...

யோவ்.. இனி உங்க விமர்சனமும் படிக்கமாட்டேன்.. நீங்க சொல்ற படத்தையும் பார்க்கமாட்டேன்..

நல்லா இருக்குன்ற வார்த்தைக்கு என்ன மீனிங் தெரியுமா?

ஜோதிஜி திருப்பூர் said...

ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம் தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில் இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட விழிகளும் சொக்க வைக்கின்றன..!

நீங்க ஏன் கதாசிரியர் ஆகக்கூடாது?

அமர பாரதி said...

//இந்தப் பொண்ணை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்// எப்படி நல்ல விதமா பயன்படுத்தறதுன்னு சொல்லுங்கண்ணே, அப்படியே செஞ்சுடலாம்.

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

ராமச்சந்திர கவிராயரின் பாடலும் அதற்கு விளக்கமும் கொடுத்து படத்தின் விமர்சனத்தை ஆரம்பித்திருப்பது மிக அருமை... படம் பார்த்தேன்.. கண்டிப்பாக பாராட்ட வேண்டிய முயற்சி...]]]

நல்லது கனவுத்திருடன் ஸார்.. உங்களை மாதிரியே நல்ல படங்களை புரிந்து கொண்டு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை கூட வேண்டும் என்றே விரும்புகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பினாத்தல் சுரேஷ் said...

யோவ்.. இனி உங்க விமர்சனமும் படிக்கமாட்டேன்.. நீங்க சொல்ற படத்தையும் பார்க்க மாட்டேன்.. நல்லா இருக்குன்ற வார்த்தைக்கு என்ன மீனிங் தெரியுமா?]]]

பெனாத்தலு.. ரசனைன்ற வார்த்தைக்கு என்ன மீனிங் தெரியுமா..? இதைக்கூட ரசிக்க முடியலைன்னா.. ஐயோ.. ஐயோ.. ஐயையோ..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

ஹீரோயின் நஸ்ரியா நஸீம். சிவப்பு குளோப்ஜாமூன்..! நல்லதொரு அறிமுகம் தமிழுக்கு. நாசியில் இருந்து உதட்டிற்கு கீழிறங்கும் அந்த பிரிவில் இருக்கும் இரட்டை வழிப் பாதையும், பொங்கி வரும் புனல் போன்ற அந்த அகண்ட விழிகளும் சொக்க வைக்கின்றன..!

நீங்க ஏன் கதாசிரியர் ஆகக் கூடாது?]]]

கதையெல்லாம் இருக்கு.. நானும் தயாராத்தான் இருக்கேன். தயாரிப்பாளரும், பரந்த மனப்பான்மை கொண்ட இயக்குநரும்தான் தேவை..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

//இந்தப் பொண்ணை நல்லவிதமாக பயன்படுத்திக் கொண்டால் ஒரு பெரிய ரவுண்டு வருவார்//

எப்படி நல்ல விதமா பயன்படுத்தறதுன்னு சொல்லுங்கண்ணே, அப்படியே செஞ்சுடலாம்.]]]

நடிக்க வைச்சுத்தான்..!