நாகராஜன் சோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ. - அமைதிப்படை - 2-ம் பாகம் - சினிமா விமர்சனம்

11-05-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!

1994-ல் வெளியாகி தமிழக அரசியல் தொடர்பான படங்களில் முதலிடம் பிடித்து ஒரு டிரெண்ட் செட்டராக உருவான அமைதிப்படையின் இரண்டாம் பாகம், எதிர்பார்ப்புகளை சற்றே கூட்டியிருந்தாலும் முழு திருப்தியாக இல்லை என்பதுதான் உண்மை.

மணிவண்ணனின் இயக்கத்தில் இது 50-வது படம்.. சத்யராஜுக்கு நடிப்பில் இது 200-வது படமாம்.. இருவருக்கும் முதற்கண் எனது வாழ்த்துகள்..!


முதல் பாகத்தில் இறந்து போன நாகராஜசோழன் இந்த முறை எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறார். தனது அரசியலை ஒழிக்க நினைக்கும் தற்போதைய முதல்வரை, பிளாக்மெயில் செய்து துணை முதல்வர் பதவியில் அமர்கிறார். ஓமணாம்பாளையம் அருகேயிருக்கும் காட்டுப் பகுதியை அழித்து அங்கே ஒரு தொழிற்சாலையை கொண்டு வர விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தனது மகன் மூலமாக கூட்டணி வைக்கிறார். காட்டை அழித்து கமிஷன் சம்பாதிக்க நினைக்கும் அவரை மலைவாழ் மக்கள் கூட்டணி எதிர்க்கிறது. அதிகார, ஆள் பலத்தை வைத்து அவர்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் நாகராஜசோழனுக்கு எதிர்ப்புகள் கூடுகிறது. நாகராஜசோழனை எதிர்க்கும் வன இலாகா அதிகாரிகள் நடுரோட்டில் கொல்லப்படுகிறார்கள். சிபிஐ விசாரணையும் நடக்கிறது.. இறுதியில் மக்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் கதை.. முடிவில் இன்னொரு பாகமும் வரும் என்கிற பயமுறுத்தலையும் செய்திருக்கிறார் மணிவண்ணன்..!

இன்றைய தமிழக, இந்திய கேடு கெட்ட அரசியல்வியாதிகள் இருக்கின்றவரையில் மணிவண்ணன் மாதிரியான வசனகர்த்தாக்களுக்கு கொண்டாட்டம்தான்.. திரைக்கதைக்கும், நக்கலுக்கும் புதிய, புதிய செய்திகளை அவர்களே வாரி வழங்கியிருக்கிறார்கள்.  இலவசமாக அனைத்தையும் கொடுத்து ஏமாற்றும் அரசுகளில் ஆரம்பித்து “இலவசமாக கரெண்ட் கொடுக்க முடியாது.. அதுனால ஜெனரேட்டர் கொடுத்து நம்ம கமிஷனை ஆரம்பிப்போம்..” என்ற மணிவண்ணன் ஐடியாவில் துவங்கும் கிண்டல்கள் கடைசிவரையிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன..!

கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, விஜயகாந்த் என்று அனைத்து கட்சியினரையும் முடிந்த அளவுக்கு வாரியிருக்கும் மணிவண்ணன் அண்ட் கோ, கடைசி நேர மிரட்டலுக்கு பயந்து தி.மு.க. இளைஞரணி தொடர்பான வசனத்தை மட்டும் கட் செய்திருப்பது ஏனோ நெருடத்தான் செய்கிறது..!

புதுமுக ஹீரோயின்களில் கோமல்ஷர்மாதான் அசத்தியிருக்கிறார். சீமானின் முறைப்பெண்ணாக.. ஸ்கூல் டீச்சராக வரும் இவர் சத்யராஜின் கொலைப்படையினர் செய்யும் கொலையை நேரில் பார்க்கும் சாட்சியாக இருக்கிறார்.. அந்த நடிப்பை மட்டுமே சிறப்பாகச் செய்திருக்கிறார்..! மற்றபடி இவருடன் இணைந்து அறிமுகமாகியிருக்கும் மற்ற இருவரின் நடிப்பைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை..! 

சீமானுக்கு எதற்கு இத்தனை பில்டப் என்றும் தெரியவில்லை.. மலைவாழ் மக்கள் தாக்கப்படும்போதெல்லாம் முதலில் முன் வரிசைக்கு வராதவர், ஏதோ வெளியூரில் இருந்து வந்தவர் போல் செய்திகளக் கேள்விப்பட்டு பின்னர் அவர்களது போராட்டத்திற்குத் தலைமை தாங்குவதை போல ஜம்ப் செய்வது காட்சிகளில் அழுத்தம் கொடுக்காமல் போய்விட்டது..! போராட்டம் பிசுபிசுக்க போகிறது என்பது உணர்ந்து மேற்கொண்டு எந்த வழியில் செல்லும் என்பதைக்கூட சொல்லாமல் பிரபாகரன் பாணியில் ஆற்றில் குதித்து மறைவது எதைக் குறிக்கிறது என்பதை மணிவண்ணனும், சீமானும்தான் சொல்ல வேண்டும்..!

மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் முதல்முறையாக ஒரு ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.. அப்பாவை போலவே நக்கல் நடிப்புக்குத்தான் வருவார் என்று நினைக்கிறேன்.. ஹீரோயிஸம் எதுவும் இல்லை.. அப்பாவிடம் அடக்கமாகவும், மனைவியிடம் பாசமாகவும் ரெண்டு டிராக்குகளில் செல்லும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் குழப்புகிறது.. திடீரென்று சத்யராஜை எதிர்க்கும் அவரது மருமகள்.. ஒரே வீட்டிலேயே தனது மாமனாரின் செட்டப்புடன் வாழும் காட்சிகளெல்லாம் மனதில் ஒட்டவில்லை.. இந்த செட்டப்பே திடீரென்று நல்லவராக மாறுகிறாராம்..! 

வீட்டில் இருக்கும் பணம், நகைகளை பார்த்து வியப்பதும், பின்பு விசாரிப்பதும் மட்டுமே மருமகள் செய்கிறார். அடுத்த காட்சியிலேயே அவராகவே சத்யராஜிடம் விசாரணை கமிஷனே நடத்துகிறார்.. இந்தப் பணமெல்லாம் எங்கேயிருந்தது வந்தது என்று..! இது போன்று சீன்ஸ் ஜம்ப் ஆவதால் இந்தக் குழப்பத்துடனேயே கடைசிவரையிலும் பயணிக்க வேண்டியிருக்கிறது..


முதல் பாகத்தை போலவே இதிலும் ஒரு கொலை முயற்சி. முன்னதில் சுஜாதா. இதில் மருமகள்.. அதில் வரும் ஒரு வரி செண்டிமெண்ட் வசனம் இதிலும்.. “ரொம்ப வருஷமா என்கூட வாழ்ந்திட்டா.. ஒரே குத்துல.. போட்டிரு” என்ற வசனம்தான் இதில் கொஞ்சம் நீட்டமாகி மருமகள் மீது பாசத்தைக் கொட்டியிருக்கிறார்..!

எந்த சிபிஐ ஆபீஸர் போலீஸ் டிரெஸ்ஸில் விசாரிக்க வருகிறார் என்பதை சிபிஐ விசாரணை கமிஷன் வைத்துதான் கண்டு பிடிக்க வேண்டும்..! இத்தனை விஷயம் தெரிந்த மணிவண்ணனே இப்படிச் செய்யலாமா..? சத்யராஜ் துணை முதல்வர். இவருக்கே தெரியாமல் சிபிஐ விசாரணையாம்.. அதுவும் வேறொரு சத்யராஜ்.. டேபிள் டென்னிஸ் விளையாடும் துணை முதல்வரிடமே வந்து சவால் விட்டுவிட்டுப் போகிறார்.. நல்ல காமெடி இது..!

மூன்று கொலைகள் நடுரோட்டில் பட்டப் பகலில் நடக்கிறது.. அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்தே தூக்கிக் கொண்டு செல்கிறார்கள் சுடுகாட்டுக்கு.. இந்தக் காட்சிக்கு அடுத்து எத்தனையோ அரசியல் காட்சிகளை திரைக்கதையாக்கி அமைத்திருக்கலாம். மிஸ் செய்துவிட்டார் இயக்குநர்..! திரைக்கதை நொண்டியடிப்பது இங்கேயிருந்துதான்..!

இடையிடையே மணிவண்ணனின் இள வயது செட்டப், மற்றும் மகளிரணியினர் பற்றிய டபுள் மீனிங் டயலாக்குகள்.. மகளிரணிக்கு தலைவராக போக வேண்டுமென்ற சத்யராஜின் விருப்பம்.. சத்யராஜின் ஜட்டியை வைத்து ஒரு கண்றாவி டயலாக்.. இப்படி நக்கல் என்று சொல்லியே பிளாக் ஹியூமர் காமெடியை செய்திருக்கிறார்கள்..! 

ஆஸ்தான ஒளிப்பதிவாளர் டி.சங்கரின் கேமிரா சிற்சில காட்சிகளில் அசத்தல்.. அந்த ஓணாம்பாளையம் ஒத்தப் பாலம் காட்சியும், சத்யராஜின் வீடு தென்படும் காட்சிகளிலும் அழகாக படம் பிடித்திருக்கிறார். ஜேம்ஸ் வசந்தனின் இசை சத்யராஜ் அண்ட் மணிவண்ணன் லொள்ளுவில் கற்பூரமாக கரைந்துபோய்விட்டது.. இருக்கும் ஒரேயொரு குத்துப் பாடலும் கேட்க நன்றாக இருந்தும் டான்ஸ் பார்க்க நன்றாக இருந்ததால்  ரசிக்க முடியவில்லை.. இப்படி மொன்னையாக, மொக்கையாக பின்னணி இசை அமைக்க முடியுமென்றால், ஜேம்ஸ் வசந்தனுக்கு மட்டும் இது மிகப் பெரிய தோல்விப் படம்தான்..!

முதல் காட்சியில் முதலமைச்சர் மரங்களை வெட்ட அனுமதியில்லை என்கிறார். அடுத்தக் காட்சியில் துணை முதல்வர் வெட்டுவேன் என்கிறார்.. இதில் யாரிடம், யார் அனுமதி வாங்கியது என்றே தெரியவில்லை. முதல்வர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கத்திரிக்கோலை போட்டதில் சில காட்சிகள் அறவே நீக்கப்பட்டுவிட்டதால்தான் இந்தக் குழப்பம் என்று படம் முடிந்தவுடன் மணிவண்ணன் சொன்னார்..!

துணை முதல்வரை நீக்கும் முயற்சியில் முதல்வர் இறங்கும் காட்சி நீக்கப்பட்டதால் கொஞ்சம் குழப்பம் கூடிவிட்டது. இதனாலேயே சத்யராஜ் முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு 17 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கும் ஒரு கட்சியை தனது கட்சியுடன் இணைத்துவிட்டு அவர்களது ஆதரவில் முதல்வராகவே ஆகிவிடுகிறார். இதன் பின்பு துணிந்து காட்டுக்குள் படைகளை இறக்க.. மத்திய அரசு மேல் நடவடிக்கை எடுத்து முதல்வரை சி.பி.ஐ. மூலமாக கைது செய்கிறதாம்.. படத்தில் மிகப் பெரிய சறுக்கலே இதுதான்..! உண்மையாகவே மத்திய அரசுகள் இதை மட்டும் செய்ய முடிந்தால், நம்ம ஆத்தா இந்நேரம் கோட்டையிலா இருந்திருக்கும்..?

கிளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அப்பன்-மகன் வெட்டுக் குத்து அடுத்த பாகத்திலும் தொடரும்போல தெரிகிறது.  அதிலாவது நாகராஜசோழனுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கிறதா என்று பார்ப்போம்..! 

லாஜிக் பார்க்க மாட்டீங்கன்னா நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.. 

23 comments:

சரண் said...

அண்ணே, அமைதிப்படை 1994ல் வெளிவந்ததுண்ணே...1997 இல்லை. ஏன்னா நான் 7ஆம் வகுப்பு படிச்சப்போவே வந்ததா நினைவு. 1997ல் 10ஆம் வகுப்பு படித்தேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் முதல்முறையாக அறிமுகமாகியிருக்கிறார்..//

மாறன்,கோரிப்பாளையம் இதில் எல்லாம் யாரோ? எப்பவுமே தப்பு தப்பா தகவல் சொல்றதுக்கு அதுவும் சினிமால இருந்துக்கிட்டே சொல்றதுக்கு வேற வேலைய பாருங்கண்ணே

உண்மைத்தமிழன் said...

[[[சரண் said...

அண்ணே, அமைதிப்படை 1994ல் வெளிவந்ததுண்ணே... 1997 இல்லை. ஏன்னா நான் 7-ம் வகுப்பு படிச்சப்போவே வந்ததா நினைவு. 1997ல் 10ஆம் வகுப்பு படித்தேன்.]]]

சரிதான்.. போஸ்டரை பார்த்தவுடனேயே அப்படியே டைப் செய்துவிட்டேன். கிராஸ்செக் செய்ய மறந்துவிட்டேன்..! மன்னிக்கவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மணிவண்ணனின் மகன் ரகு மணிவண்ணன் முதல்முறையாக அறிமுகமாகியிருக்கிறார்..//

மாறன்,கோரிப்பாளையம் இதில் எல்லாம் யாரோ? எப்பவுமே தப்பு தப்பா தகவல் சொல்றதுக்கு அதுவும் சினிமால இருந்துக்கிட்டே சொல்றதுக்கு வேற வேலைய பாருங்கண்ணே..]]]

இதுக்கொண்ணும் குறைச்சலில்லை.. ஓட்டுப் போடுவோம்.. நாலு கமெண்ட் போடுவோம்னு அக்கறையில்லை.. குத்தம் மட்டும் கண்டுபிடிச்சு உடனே சொல்லிர்றது..!

கெட்ட உலகம்டா இது..!

vetri said...

நீங்க மட்டும் ஒரு படத்தைப் பார்த்து ஆயிரம் நொட்டை நொன்ன சொல்லலாம்...உங்க விமர்சனத்தைப் பார்த்து ஒருத்தரும் குறை சொல்லக் கூடாதா? எந்த ஊரு நியாயம் இது...படத்தை நீங்க தூங்கிட்டே பார்த்தீங்கன்னு நல்லா தெரியுதே...ஊர் பேரு ‘ஓணாம்பாளையம்’...நீங்க எழுதியிருக்கற மாதிரி ஓமணாம்பாளையம் இல்ல.....

Nondavan said...

லாஜிக் பார்க்க மாட்டீங்கன்னா நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.. // ஓகே... வழக்கம் போல பிச்சு உதறிட்டீங்க....:) :) :)

Nondavan said...

நீங்க எழுதியதை பார்த்தால், கோர்வை இல்லாமல் வெறும் காமெடிகளின் தோரணமா இருக்கும் போல... நமக்கு எப்படியும் இங்கு ரிலீஸ் ஆகாது... :) :)

உண்மைத்தமிழன் said...

[[[vetri said...

நீங்க மட்டும் ஒரு படத்தைப் பார்த்து ஆயிரம் நொட்டை நொன்ன சொல்லலாம். உங்க விமர்சனத்தைப் பார்த்து ஒருத்தரும் குறை சொல்லக் கூடாதா? எந்த ஊரு நியாயம் இது. படத்தை நீங்க தூங்கிட்டே பார்த்தீங்கன்னு நல்லா தெரியுதே. ஊர் பேரு ‘ஓணாம்பாளையம்’. நீங்க எழுதியிருக்கற மாதிரி ஓமணாம்பாளையம் இல்ல.]]]

இதெல்லாம் ஒரு குறையா..? திருத்திட்டா போச்சு.. ஏதோ நான் வேணும்ன்னே எழுதின மாதிரில்ல சொல்றீரு..? மாத்திர்றேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

லாஜிக் பார்க்க மாட்டீங்கன்னா நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்..//

ஓகே... வழக்கம் போல பிச்சு உதறிட்டீங்க....:) :) :)]]]

நொந்தவன் ஸார்.. தங்களின் தொடர்ச்சியான வருகைக்கும், பின்னூட்ட ஆதரவிற்கும் எனது நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நீங்க எழுதியதை பார்த்தால், கோர்வை இல்லாமல் வெறும் காமெடிகளின் தோரணமா இருக்கும் போல... நமக்கு எப்படியும் இங்கு ரிலீஸ் ஆகாது... :) :)]]]

அதேதான்.. காமெடி களஞ்சியம். சிரிச்சிட்டு எழுந்து வரலாம்.. அவ்வளவுதான்..! அமைதிப்படை முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் இதில் இல்லை..!

வவ்வால் said...

அண்ணாச்சி,

லொள்ளு,நக்கல் என விட்டாலும் காலம் போன நடிகர் கூட்டத்தை வைத்து எடுத்தா யாரு பார்ப்பா? அதுவும் வசனத்தை வச்சே ஒப்பேத்த நினைச்சா?

#சீமானுக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவமா? மணிவண்ணன் பையன் ஒரு பொண்ணோட காதல் மேட்டரில் சிக்கியப்போது கட்டப்பஞ்சாயத்து செய்து உதவினாருல்ல சீமான் அதான் நன்றிக்கடன் செலுத்தி இருக்கார்.

# மூனு ஹீரோயின் இருந்தும் ஒரு படமும் தூக்கலா போடாமல் இருட்டடிப்பு செய்தை வன்மையாக கண்டிக்கிறேன்!

Vinoth Kumar said...

ஒரு சிறிய உதவி..

மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/

நன்றி,
வினோத்.

karthikom said...

super

Nondavan said...

அண்ணாச்சி, நான் கடந்த ஓர் ஆண்டிற்கு மேல் தொடர்ந்து படித்து வருகிறேன்... ஆனால் இப்போ தான் பின்னூட்டம் இடுகிறேன்....

அப்புறம் உங்களுடன் ஒப்பிடுகையில் நான் பொடியன்...என் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள்...

joe said...

அண்ணே, நன்றி. மணி ரொம்ப பில்டப்பு கொடுத்த போதே படம் ஊத்திக்கும் என்று நினைத்தேன். காசு மிச்சம்.

ஜோதிஜி திருப்பூர் said...

#சீமானுக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவமா? மணிவண்ணன் பையன் ஒரு பொண்ணோட காதல் மேட்டரில் சிக்கியப்போது கட்டப்பஞ்சாயத்து செய்து உதவினாருல்ல சீமான் அதான் நன்றிக்கடன் செலுத்தி இருக்கார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை.............

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

லொள்ளு, நக்கல் என விட்டாலும் காலம் போன நடிகர் கூட்டத்தை வைத்து எடுத்தா யாரு பார்ப்பா? அதுவும் வசனத்தை வச்சே ஒப்பேத்த நினைச்சா?]]]

சில இடங்களில் வசனம் நன்றாகவே இருக்கிறது.. பல இடங்களில் டூமச்சாகவே போகிறது..!

[[[#சீமானுக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவமா? மணிவண்ணன் பையன் ஒரு பொண்ணோட காதல் மேட்டரில் சிக்கியப்போது கட்டப்பஞ்சாயத்து செய்து உதவினாருல்ல சீமான் அதான் நன்றிக் கடன் செலுத்தி இருக்கார்.]]]

அப்படியா..?

[[[# மூனு ஹீரோயின் இருந்தும் ஒரு படமும் தூக்கலா போடாமல் இருட்டடிப்பு செய்தை வன்மையாக கண்டிக்கிறேன்!]]]

வயசுக்குத் தகுந்தாப்புல பேசுங்க வவ்ஸ்.. தாத்தா வயசுல உமக்கெதுக்கு ஹீரோயின்ஸ் போட்டோஸ்..?

உண்மைத்தமிழன் said...

[[[Vinoth Kumar said...

ஒரு சிறிய உதவி.. மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன். படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்.]]]

அவசியம் படிக்கிறேன் வினோத்..!

உண்மைத்தமிழன் said...

[[[karthikom said...

super.]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, நான் கடந்த ஓர் ஆண்டிற்கு மேல் தொடர்ந்து படித்து வருகிறேன்... ஆனால் இப்போதான் பின்னூட்டம் இடுகிறேன். அப்புறம் உங்களுடன் ஒப்பிடுகையில் நான் பொடியன். என் பெயர் சொல்லியே கூப்பிடுங்கள்.]]]

ரொம்ப சந்தோஷம் தம்பீ.. அடிக்கடி வந்து போங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணே, நன்றி. மணி ரொம்ப பில்டப்பு கொடுத்தபோதே படம் ஊத்திக்கும் என்று நினைத்தேன். காசு மிச்சம்.]]]

அடப்பாவிகளா.. அப்போ பார்க்கவே மாட்டீங்களா..? ஒரு தடவை பார்க்கலாம்பா.. அப்படியொண்ணும் போரடிக்கலை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி திருப்பூர் said...

#சீமானுக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவமா? மணிவண்ணன் பையன் ஒரு பொண்ணோட காதல் மேட்டரில் சிக்கியப்போது கட்டப்பஞ்சாயத்து செய்து உதவினாருல்ல சீமான் அதான் நன்றிக் கடன் செலுத்தி இருக்கார்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை.]]]

இந்தக் கூற்றுப்படி பார்த்தால் மணிவண்ணன் நன்றிக் கடன் செலுத்த நினைத்தது தப்பில்லை.. ஆனா இப்படி படத்துல மொக்கை கேரக்டரை கொடுத்து வீணடித்திருக்க வேண்டாம்..!

உலக சினிமா ரசிகன் said...

நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.