நான்காம் பிறை - சினிமா விமர்சனம்

03-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

1897-ல் ஐரீஸ் எழுத்தாளர் Bram Stoker எழுதிய டிராகுலா கேரக்டரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் முதல் தமிழ்ப் படம் இதுதானாம்..!

உலகத்திலேயே அதிக முறை, அதிக மொழிகளில் அதிக முறை தயாரிக்கப்பட்டிருக்கும் கதை நிச்சயம் இந்த டிராகுலா கதையாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். சந்தேகமிருந்தால் இந்தப் பக்கத்தில் போய் பார்த்துக் கொள்ளலாம்..! 


ருமேனியாவில் டிராகுலா புதைந்து போன பங்களாவை தன் மனைவியுடன் ஹனிமூன் போன நேரத்தில் சுற்றிப் பார்க்கச் செல்கிறான் சுதிர்.  தான் ஏற்கெனவே கற்று வைத்திருந்த மந்திர வித்தையால் அங்கேயிருக்கும் டிராகுலாவை உசுப்பிவிட.. அது சுதிரை கொலை செய்து அவன் உடலில் தான் புகுந்து கொள்கிறது.. முதல் பலி சுதிரின் மனைவி. பின்பு அங்கேயிருந்து ஊர் திரும்பி ரத்தம் குடிக்கத் துவங்க.. ஹீரோ ஆர்யனும், அவனது காதலி மோனலும் சிக்குகிறார்கள். மோனலின் அக்கா ஷ்ரத்தா தாஸ் டிராகுலாவுக்கு பலியாக.. கடைசியாக எப்படி அதனை அழிக்கிறார்கள் என்பதுதான் கதை..!

இதுவரையிலும் நாம் பார்த்த டிராகுலா படங்களே இந்தப் படத்துடன் ஒன்றவிடாமல் செய்கிறது..! வினயன் சிறந்த இயக்குநர்தான்.. ஆனால் இது மாதிரியான படங்கள் தமிழ்ச் சினிமாவுக்கும், மலையாளத்திற்கும் பொருந்துமா என்று யோசித்திருக்க வேண்டும்.. அத்தோடு இதனை 3-டியில் வேறு எடுத்திருக்கிறார்கள். 3-டி படங்களின் பெரிய குறையே எமோஷன் காட்சிகளில் ஒன்ற முடியாததுதான்..! மாயாஜாலத்தையும், மர்மத்தையும் கொடுத்து சமாளிக்கலாம்.. நம்ம தமிழ்ச் சினிமாவுக்கு அது ஒத்து வராதே..!

சுதிர் என்ற புதுமுகம் டிராகுலாவாக பயமுறுத்தியிருக்கிறார்..! டிராகுலா என்றாலே கட்டுமஸ்தான உடலும், கடவாய்ப் பற்கள் இரண்டும்தான் என்ற பிம்பத்தை உடைத்து அதன் உண்மை முகமாக ஓநாய் முகத்துடன் கிராபிக்ஸ் கலந்து கொடுத்திருப்பது ஒன்றுதான் இந்தப் படத்தில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒன்று..! வேறொன்றுமில்லை..!

நாய்கள் துரத்தி வர ஹீரோ தப்பிக்கும் காட்சி.. மோனலுடன் டிராகுலா காதல் செய்ய வரும் காட்சிகள்.. ஷ்ரத்தா தாஸ் டிராகுலாவுக்கு பலியாகும் காட்சி.. இறுதியில் நடைபெறும் சண்டைகள் என்று சிற்சில இடங்களில் மட்டுமே ரசிக்க முடிகிறது.. 3-டி படம் என்பதால் அவ்வப்போது மரம், செடி, கொடி, தலை, இலைகள், ரத்தம் தெறிப்பது.. ஆப்பிளை வீசுவது.. கத்தியை தூக்கியெறிவது என்று சின்னப்புள்ளத்தனமாக நம்மை கொலை வெறியோடு பார்க்கிறது 3-டி கேமிரா..! 

அம்புலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அனுபவஸ்தரான சதீஷ்பாபுதான் இந்தப் படத்தையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  அநேகக் காட்சிகள் இருட்டில்தான் நடக்கிறது என்பதாலும், கேமிராவின் கிறுக்கல்களினாலும் 3-டி எபெக்ட் கொஞ்சம் அளவோடு ரசிக்கும்படியாகத்தான் இருக்கிறது..!

கதை மட்டும்தான் இங்கே ஜல்லியடிக்கிறது..! சிற்சில இடங்களில் பிரபுவும், நாசரும் பேசும் வசனங்களே காமெடியை தருகின்றன..! கடைசியில் ருமேனிய கடவுளுக்கும், இந்து கடவுளுக்குமான மோதலாக இந்தப் படத்தைக் கொண்டு போய் முடித்திருப்பது ஒன்றுதான், இதுவரையில் வெளிவந்த அனைத்து டிராகுலா படங்களில் இருந்து இந்தப் படம் பெற்றிருக்கும் வித்தியாசம்..! 

பிரபுவின் கேரக்டர் இடைச்செருகல்.. அவர் எதற்காக இத்தனை ஆர்வத்துடன் இதில் ஈடுபடுகிறார்..? ஷ்ரத்தா தாஸ் ஏன் தனியே போய் டிராகுலாவை சந்திக்க முடிவெடுக்கிறார்..? ஹீரோ ஆர்யன் சீரியஸ் உணர்வே இல்லாமல் டிராகுலாவின் போட்டோவை பார்த்துவிட்டு இவரை எனக்குத் தெரியுமே என்று சொல்வது..! அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் மிக எளிதாக பிணத்தைக் கடத்திச் செல்வது.. என்று திரைக்கதையில் பல சொதப்பல்கள்..! 

இரண்டு ஹீரோயின்கள்.. மோனல், ஷ்ரத்தாதாஸ் என்று.. இருவரையுமே 3-டி எபெக்ட்டில் ரசிக்க முடியவில்லை.. இனிமேலாச்சும் அழகு  ஹீரோயினைகளை வைச்சு இது மாதிரி படங்களை எடுக்காதீங்க சாமிகளா.. முடியலை..! எப்படியும் நாசர் இன்னும் ஒரு வருடம் கழித்து இந்தப் படம் பற்றி தன்னுடைய விமர்சனத்தை முன் வைப்பார் என்று நினைக்கிறேன்..! அவர் பேசும் பல வசனங்கள் அவருக்கே சிரிப்பாய்தான் இருந்திருக்கும்..!

ஒளிப்பதிவும், இசையும் மட்டுமே படத்துக்கு பிரதானம்.. திகிலைக் கூட்டும்விதத்தில் பின்னணி இசை கொஞ்சம் உதவியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவராம் மியூஸிக் டைரக்டர் பபித்ராஜ்.. வாழ்த்துகள்..!

கேரளாவில் தனியொரு மனிதனாக மிகப் பெரும் மாஸ் ஹீரோக்களை எதிர்த்து அரசியல் செய்த திலகன், தன்னுடைய கடைசி நடிப்பை இப்படத்தில் காட்டியிருக்கிறார்.. இவருடைய கடைசி தமிழ்ப் படம் இதுதான் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று..! இவருடைய கேரக்டரை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்..!

டிராகுலாவின் ரத்த வெறி.. காட்டின் பிரமாண்டம்.. திகிலூட்டும் பின்னணி இசை.. கச்சிதமான இயக்கம் என்று பலவும் இருந்தாலும், இது போன்று நூற்றுக்கும் மேல் படங்களை பார்த்து, இதைவிட அதிகமாக மிரட்டப்பட்ட அனுபவம் இருப்பதாலும், இப்படம் பார்வையாளர்களை அதிகம்  பயமுறுத்தவில்லை என்பது மட்டுமே உண்மை..!


4 comments:

Prem s said...

பாத்துட வேண்டியது தான்

உண்மைத்தமிழன் said...

[[[Prem s said...

பாத்துட வேண்டியதுதான்]]]

அவசியம் பாருங்க பிரதர்..! வருகைக்கு நன்றி..!

வவ்வால் said...

அண்னாசி,

//இரண்டு ஹீரோயின்கள்.. மோனல், ஷ்ரத்தாதாஸ் என்று.. இருவரையுமே 3-டி எபெக்ட்டில் ரசிக்க முடியவில்லை.. இனிமேலாச்சும் அழகு ஹீரோயினைகளை வைச்சு இது மாதிரி படங்களை எடுக்காதீங்க சாமிகளா..

//

வயசானாலே இப்படித்தான் ,ரசிக்க வேண்டியதெல்லாம் பயமுஉத்தலாக தெரியும் :-))

3டி யில் காட்ட வேண்டியது இன்னும் நிறைய இருக்கு ,சரியா காட்டலையேனு முன் வரிசையில் உட்கார்ந்து ஏங்குறாங்க மக்கள் ;-))

உண்மைத்தமிழன் said...

வவ்வால் said...

அண்னாசி,

//இரண்டு ஹீரோயின்கள்.. மோனல், ஷ்ரத்தாதாஸ் என்று.. இருவரையுமே 3-டி எபெக்ட்டில் ரசிக்க முடியவில்லை.. இனிமேலாச்சும் அழகு ஹீரோயினைகளை வைச்சு இது மாதிரி படங்களை எடுக்காதீங்க சாமிகளா..//

வயசானாலே இப்படித்தான், ரசிக்க வேண்டியதெல்லாம் பயமுஉத்தலாக தெரியும்:-))3-டி-யில் காட்ட வேண்டியது இன்னும் நிறைய இருக்கு, சரியா காட்டலையேனு முன் வரிசையில் உட்கார்ந்து ஏங்குறாங்க மக்கள் ;-))]]]

நம்மளால முடிஞ்சைத்தானே செய்ய முடியும்.. அதைத்தான் வினயன் செஞ்சிருக்காரு..! 4000 கோடி பட்ஜெட்டுன்னா அவதார் மாதிரி செய்யலாம்..!