ஆதிபகவன் - சினிமா விமர்சனம்

23-02-2013


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்துக்கு ‘ஏ’ சர்டிபிகேட் கொடுக்காமல் வேறு என்ன கொடுப்பார்களாம்..? பல்வேறு குழுக்களைத் திருப்திப்படுத்த ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருப்பதாக இயக்குநர் அமீர் சொல்லியிருப்பது மகா அபத்தம்..! ‘ஏ’-க்கு மேலேயே ‘டிரிபுள் ஏ’ கொடுத்திருக்க வேண்டும்.. இதுதான் நியாயம்..!

'பருத்தி வீரன்' என்ற நமது மண் சார்ந்த பண்பட்ட படைப்பைக் கொடுத்துவிட்டு, அடுத்தப் படத்திற்கு இத்தனை இடைவெளி எடுத்துக் கொண்டது இதனைக் கொடுப்பதற்காகவா என்ற ஆயாசமே ஏற்படுகிறது..!


தாய்லாந்தில் தாதாவாக இருக்கும் ஆதி என்ற ஜெயம்ரவியைக் காதலிப்பதுபோல் நடித்து அவரை மும்பைக்கு அழைத்து வருகிறார் நீத்து சந்திரா. இங்கே ஆள் மாறாட்டத்திள் தள்ளி ஆதியைக் கொலை செய்ய முயற்சி நடக்க.. அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை..!

முதல் பாதியில் பாதி நேரம் வேகமும், இரண்டாம் பாதியில் பாதி வேகமுமாக மொத்தமாகவே ஒன்றே கால் மணி நேரம்தான் படம் பறக்கிறது..! அமீர் ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்ததற்காக அவரை பாராட்ட வேண்டும்.. இது முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதில் மட்டும் அவர் திடமாக இருந்திருக்கிறார். ஆனால் இந்த அளவுக்கு ஆக்சனும், வன்முறையும் தேவைதானா என்று யோசித்திருக்கலாம்..!

இடைவேளைக்கு பின்பான திரைக்கதையில் அமீரின் பார்வை படு கொடூரம்.. அதிலும் அந்த பகவான் கேரக்டர்..! இப்போதைய நடிகர்களெல்லாம் தங்களது நடிப்புத் திறமையைக் காண்பிக்க வேண்டுமெனில் அவர்கள் அரவாணியாக நடித்தாக வேண்டும் போலிருக்கிறது.. பிரகாஷ்ராஜ், பிரசாத், அஜீத், விஷால் வரிசையில் அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார் ஜெயம்ரவி..!

ஆதியைவிடவும் பகவான்தான் உடல் மொழியிலும், மாடுலேஷனிலும் பிய்ச்சு வாங்கியிருக்கிறார்..! நிமிடத்திற்கு நிமிடம் தனது ஆக்சனைக் கூட்டியும், குறைத்தும் அவர் பேசுகின்ற லாவகம் அந்த கேரக்டருக்கு செமத்தியான ரெஸ்பான்ஸை கூட்டும் என்றே நம்புகிறேன்..! உயிருக்குயிரான காதலி நீத்துவை பக்கத்தில் வைத்துக் கொண்டே வேலைக்காரப் பெண்களை டாவடிக்கும் அந்த பகவானை இறுதிவரையிலும் விரும்பும் நீத்துவின் கேரக்டரைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை..! பகவானுக்காக அவர் இந்த அளவுக்கு இறங்குவார் என்று திரைக்கதை எழுதியிருப்பது நீத்துவுக்காகவே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது..!

லாஜிக்கா..? அப்படீன்னா என்ற கேள்விக்கு பல விடைகள் இந்தப் படத்திலும் உள்ளது.. கிரானைட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு டிவிக்களில் புகைப்படமே காட்டப்பட்டு வரும் நேரத்தில், அவர்களது வீட்டுக்கே சிபிஐ வேடத்தில் வந்து கொள்ளையடிப்பதெல்லாம் ஏற்புடையதுதானா..? ஆனால் அதையும் தனது மிகச் சிறப்பான இயக்கத்தினால் உண்மை என்றே நம்ப வைத்திருக்கிறார் அமீர்..!

பாங்காங்கில் நீத்து-ஆதி காதல் மலரும் காட்சிகளில் இருந்து அந்த முதல் டிவிஸ்ட் உடையும் இடம் வரையிலும் ஏதோ பரபரப்பாக இருக்கும்வகையில் காட்சியை நகர்த்தியிருக்கிறார்கள். அதிலும் மகா காமெடி, உடைந்த கப்பலில் நடைபெறும் துப்பாக்கி மோதல்கள்தான்.. இது மட்டுமில்லை.. படத்தில் இடைவேளைக்கு பின்பு நடைபெறும் அனைத்து துப்பாக்கிச் சண்டைகளுமே காமெடியாகத்தான் உள்ளன.. ஹீரோவை ஜெயிக்க வைப்பதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது..!

முதல் பாதியில் நீத்து சந்திராவின் கண்ணீர் அவர் சொல்லும் கதையை நம்பத்தான் வைக்கிறது.. பிற்பாதியில் அவர் காட்டும் கொடூரம்.. இப்படியும் ஒரு காதலி இருப்பாளா என்றும் சொல்ல வைக்கிறது.. அதிலும் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதித் தள்ளும் நீத்துவின் கேரக்டரில், இது ஒன்றுக்காகவே வேறு யாரும் செய்ய முன் வந்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..! 

தாதா வாழ்க்கையை வாழ்வதால் ஜெயம் ரவியை ஒதுக்கித் தள்ளும் அம்மா.. அவரை வெறுக்கும் தங்கை.. தங்கையை கைப்பிடிக்க நினைக்கும் ஒரு கெட்டவன்.. என்று குடும்ப சென்டிமெண்ட்டையும் ஒன்றாகத்தான் கொண்டு போயிருக்கிறார்.. அதிலும் தங்கையின் லவ்வரை சுட்டுக் கொல்லும் காட்சியில்தான் ஜெயம் ரவியின் நடிப்பு தெரிந்தது..  பிற்பாடு நீத்துவை புரட்டியெடுத்துவிட்டு, நீத்து போலீஸ் காவலில் இருக்கும்போது தன்னிடம் சொன்னதையே திருப்பிச் சொல்லி நாக் அவுட் செய்வதிலும் அண்ணன் தனியே தெரிகிறார்..! 

ஒரு பாடலுக்கு மட்டும் முன்னாள் ஹீரோயின் சாக்சி தனி ஆட்டம் ஆடியிருக்கிறார்..! சுதா சந்திரன் ஜெயம் ரவியின் அம்மாவாக வருகிறார்.. அவ்வளவுதான்..! பாடல் காட்சிகளும், பாடல்களும் வேஸ்ட் என்றாலும், பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் யுவன்சங்கர்ராஜா.. நீத்துவை முதன் முதலாக டெர்ரராக விமான நிலையத்தில் அடையாளம் காட்டும் காட்சியிலும், அவர் ஆதியைச் சந்திக்க செல்லுக்குள் வரும் காட்சியிலும் அசத்தல்..! 

இது போன்ற படங்களில் ஏதாவது ஒன்றில் மட்டும் தான் இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ.. பாடல் வரிகளைப் புரிந்து கொள்வதற்குள் தாவூ தீர்ந்துபோய்விட்டது.. அதிலும் கோவாவில் பாடும் பாடலை இனி தனியே கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்போல் உள்ளது..! 

தேவராஜ்-மகேஷ் என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்களின் கைவண்ணத்தில் பாங்காங் மிளிர்கிறது.. இரவு நேர காட்சிகளை நிறைய காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தால், அதற்குப் பதிலாக இங்கேயே செட் போட்டு எடுத்திருக்கிறார்கள் போலும்.. கோவாவையும், பாங்காங்கையும் அழகுர காண்பித்திருப்பதும், பகவான் ஜெயம் ரவியை மிளிர வைத்திருப்பதும் கேமிராவின் கைவண்ணமே..!

சென்ட்ரல் மினிஸ்டரியில் இடம் பெற வேண்டி தமிழகத்து எம்.பி. ஒருவரை கொலை செய்யும் பகவானை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லையாம்.. மும்பை அரசியல்வாதிகளே அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார்களாம்.. அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவரும் இதற்கு உடந்தையாம்.. அவரும் பல கான்ஸ்டபிள்கள் முன்னிலையிலேயே பெட்டி வாங்குகிறார். செல்லுக்குள் வைத்தே சூட்கேஸை வாங்குகிறார்.. அத்தனை அடி அடித்தும் ஜெயம்ரவி சூப்பர்மேனாக படமெடுத்து அனைவரையும் தாக்கிவிட்டு தப்பித்து ஓடுகிறார்..! போலீஸாலேயே கண்டுபிடிக்க முடியாத பகவானை கோவாவிற்கு வருவார் என்று மிகச் சரியாக யூகித்து அங்கேயே வருகிறார்கள்.. தாய்லாந்தில் பொசுக், பொசுக்கென்று கொசுவைச் சுடுவதுபோல் சுட்டுத் தள்ளிவிட்டு தூக்கியெறி என்று அலட்சியமாகக் கூறுகிறார்கள்.  எதையெல்லாம் உங்களால் நம்ப முடியாததோ அதையெல்லாம் ரொம்பவும் சாதூர்யமாக இதில் செய்து காண்பித்திருக்கிறார் இயக்குநர் அமீர்.

இறுதியில் இரண்டாம் பாகம் வந்தாலும் வரும் என்பதற்கு அச்சாரத்தையும் போட்டு வைத்து வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார்..! ஒரு பாகத்திற்கே இத்தனை கோடிகள் செலவு என்றால், அடுத்த பாகம் என்னாகுமோ..? இத்தனை கோடிகளைக் கொட்டி படமெடுத்து இது எந்த அளவுக்கு புகழ் பெறப் போகிறது..? யாருக்கு இதனால் புண்ணியம் கிடைக்கப் போகிறது..? போட்ட காசு திரும்ப வந்தாலே பெரிய விஷயம்.. 'பருத்தி வீரன்' என்னும் கதையில் கிடைத்த பெருமையை, இப்படம் நிச்சயம் அமீருக்குச் சம்பாதித்து கொடுக்காது என்றே நான் நினைக்கிறேன்..!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..!

13 comments:

வருண் said...

ஏன் இப்படி? ஒரே நெகட்டிவா இருக்கு விமர்சனம்??

மத்தவா எல்லாம் நன்ன்யிருக்குணுல சொல்றா!

வவ்வால் said...

அண்ணாச்சி,

என்ன ஒரு மார்க்கமா போட்டு தாளிச்சு இருக்கீங்க,வழக்கமா கதை சொல்லுவீங்க, இந்த படத்துக்கு கதையே சொல்லக்காணோம்,படத்திலேயே கதையே இல்லையா :-))

படம் தேறுமான்னு எனக்கு டவுட்டா இருக்கு, நிறைய தியேட்டரில் ரிலீஸ் செய்யணும்னு ஆசைப்பட்டு ,டூரிங்க் கொட்டாய் போல இருப்பவற்றிலும் போட்டு இருக்காங்க, கூடுவாஞ்சேரி"வெங்கடேஷ்வராவில் கூட ரிலீஸ் :-))

எனக்கு தெரிஞ்சு அங்கே ரிலீஸ் ஆன முதல் தமிழ்ப்படம் இதான், தியேட்டரில் பாதி சுவரு தான் இருக்கும், சைடில் எல்லாம் பாதி ஓபனாக இருக்கும், தார்ப்பாய், அப்புறம் பெரிய பலகை கதவு தூக்கிவிடுறாப்போல எல்லாம் வச்சு இருப்பாங்க, இப்போ தியேட்டரை இம்புருய் செய்துட்டாங்களோ ,என்னமோ, ரொம்ப நாளைக்கு முன்னர் அங்கே அமேசான் குயீனோ என்னமோ பார்த்தேன் ,அப்புறம் போகவேயில்லை, போய் பார்க்கணும்.

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

ஏன் இப்படி? ஒரே நெகட்டிவா இருக்கு விமர்சனம்?? மத்தவா எல்லாம் நன்ன்யிருக்குணுல சொல்றா!]]]

எனக்கு சுமாரா இருக்குற மாதிரி தோணுது.. அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, என்ன ஒரு மார்க்கமா போட்டு தாளிச்சு இருக்கீங்க,வழக்கமா கதை சொல்லுவீங்க, இந்த படத்துக்கு கதையே ொல்லக் ாணோம், படத்திலேயே கதையே இல்லையா:-))]]]

கதையும் இருக்கு.. சதையும் இருக்கு.. ஆனா மனசுலதான் ஒட்ட மாட்டேங்குது..!

[[[படம் தேறுமான்னு எனக்கு டவுட்டா இருக்கு, நிறைய தியேட்டரில் ரிலீஸ் செய்யணும்னு ஆசைப்பட்டு, டூரிங்க் கொட்டாய் போல இருப்பவற்றிலும் போட்டு இருக்காங்க, கூடுவாஞ்சேரி" வெங்கடேஷ்வராவில்கூட ரிலீஸ் :-))]]]

வேற வழி.. படம் புட்டுக்குச்சுன்னு தகவல் வந்தா கூட்டம் குறைஞ்சு வசூல் குறையுமே..? கொஞ்ச நஞ்சமா செலவு பண்ணியிருக்காங்க..!?

[[[எனக்கு தெரிஞ்சு அங்கே ரிலீஸ் ஆன முதல் தமிழ்ப் படம் இதான், தியேட்டரில் பாதி சுவருதான் இருக்கும், சைடில் எல்லாம் பாதி ஓபனாக இருக்கும், தார்ப்பாய், அப்புறம் பெரிய பலகை கதவு தூக்கிவிடுறாப்போல எல்லாம் வச்சு இருப்பாங்க, இப்போ தியேட்டரை இம்புருய் செய்துட்டாங்களோ, என்னமோ, ரொம்ப நாளைக்கு முன்னர் அங்கே அமேசான் குயீனோ என்னமோ பார்த்தேன், அப்புறம் போகவேயில்லை, போய் பார்க்கணும்.]]]

அவசியம் பாருங்க ஸார்..! பார்த்திட்டு வந்து சொல்லுங்க ஸார்..!

saravanan selvam said...

படம் ஒரு ஜவ்வு மிட்டாய்...ஜெயம் ரவி அமீரால் ஏமாற்றப்பட்டார்.படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் தான் விறுவிறுப்பு.நடிப்பு திறமையை காட்டுவதற்கு படம் ஒன்றும் பரீட்சை இல்லை.ஜெயம் ரவியின் நடிப்பு விழலுக்கு இரைத்த நீர் போல ஆயிற்று. ஜெயம் ரவி bankgok இல் பெரிய கிரிமினல் ஆம். படத்தில் அவரோட அம்மா கேரக்டர் சொல்றபதான் தெரியுது அது.

Chilled Beers said...

படம் சுமார் ரகம்தான்..என் விமர்சனத்திலேயும் அதைத்தான் எழுதியிருக்கேன்...ஆறு வருசம் கழிச்சு இப்டி ஒரு படம்? கண்டிப்பாக ஏ சர்ட்டிபிகேட்டுக்குத் தகுதியாக படமே இது.குழந்தைகளோடு பார்க்க இயலாது என்றே நினைக்கிறேன்.

நீங்க இந்தி படம் பார்த்து விமர்சனம் எழுதுவது கிடையாதா...அருமையான இந்திப் படம் பார்த்தேன். போரடிக்காமல் சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார்கள்....

Special 26 - இந்திப்பட விமர்சனம் - என் Week end சிபாரிசு!

உண்மைத்தமிழன் said...

[[[saravanan selvam said...

படம் ஒரு ஜவ்வு மிட்டாய். ஜெயம் ரவி அமீரால் ஏமாற்றப்பட்டார். படத்தில் வரும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும்தான் விறுவிறுப்பு. நடிப்பு திறமையை காட்டுவதற்கு படம் ஒன்றும் பரீட்சை இல்லை. ஜெயம் ரவியின் நடிப்பு விழலுக்கு இரைத்த நீர் போல ஆயிற்று. ஜெயம் ரவி bankgok இல் பெரிய கிரிமினல் ஆம். படத்தில் அவரோட அம்மா கேரக்டர் சொல்றபதான் தெரியுது அது.]]]

இன்னும் நிறைய குழப்படிகள் இருக்கு..! ஒட்டு மொத்தமா ஒரு கமர்ஷியல் சினிமாவா வர வேண்டியது.. பாதியிலேயே நின்னு போச்சு..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

படம் சுமார் ரகம்தான். என் விமர்சனத்திலேயும் அதைத்தான் எழுதியிருக்கேன். ஆறு வருசம் கழிச்சு இப்டி ஒரு படம்? கண்டிப்பாக ஏ சர்ட்டிபிகேட்டுக்குத் தகுதியாக படமே இது. குழந்தைகளோடு பார்க்க இயலாது என்றே நினைக்கிறேன்.]]]

இதைக்கூட அமீரால் தாங்க முடியவில்லைன்றதுதான் கொடுமை.. இதுக்கே கத்துறாரு மனுஷன்..!

[[[நீங்க இந்தி படம் பார்த்து விமர்சனம் எழுதுவது கிடையாதா. அருமையான இந்திப் படம் பார்த்தேன். போரடிக்காமல் சுவாரஸ்யமாக எடுத்திருக்கிறார்கள்.]]]

அதை இன்னும் பார்க்கலை.. இந்த வாரம் பார்த்தர்றேன்..!

Poornima said...

mokkai padam (bagavan character and neethu acts well) ...

உண்மைத்தமிழன் said...

[[[Poornima said...

mokkai padam (bagavan character and neethu acts well) ...]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் மேடம்..!

rahul p said...

i think its ok. not bad.

உண்மைத்தமிழன் said...

[[[rahul p said...

i think its ok. not bad.]]]

ம்ஹூம்.. முடியல.. இதே டைப்புல எத்தனையோ படங்களை பார்த்தாச்சே..? நீங்க வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும்தான் படம் பார்க்குறீங்களோ..?

rahul p said...

athenno unmaithan sir.