ஹரிதாஸ் - சினிமா விமர்சனம்

21-02-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரே படத்தில் இரு கதைகள்.. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனை வளர்த்தெடுப்பது.. இன்னொரு பக்கம் என்கவுண்ட்டரை வளர்ப்பது..! ஒரு பக்கம் அமிலத்தையும் இன்னொரு பக்கம் தேனையும் நனைத்துக் கொடுத்திருக்கிறார்கள். தேன் இனிக்கிறது.. இருந்தாலும் படத்தை முழுவதுமாகக் கொண்டாடவிடாமல் அமிலம் தடுக்கிறது..! 

கிஷோரின் மனைவி பிரவசத்திலேயே இறந்துபோய்விட மகன் மட்டும் உயிர் பிழைக்கிறான். ஆனால் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அரை மனிதனாக..! ஊரில் தனது அம்மாவிடமே அவனை வளர்க்க அனுமதித்துவிட்டு கிஷோர் சென்னையில் பொறுப்பான போலீஸ் அதிகாரியாக இருக்கிறார்.. அவ்வப்போது மேலிடத்து உத்தரவுக்கேற்ப என்கவுண்ட்டர்களையும் செய்கிறார்.. 

பிரதீப்ராவத்தை என்கவுண்ட்டர் செய்ய எத்தனித்த நேரத்தில் அவர் தப்பிவிட அடியாள் ஒருவனை மட்டுமே போட்டுத் தள்ளி தனது டிபார்ட்மெண்ட் பாசத்தைக் காட்டுகிறார். இந்த நேரத்தில் அவரது அம்மா இறந்துவிட மகனை தானே சென்னையில் வைத்துக் கவனித்துக் கொள்வதற்காக அழைத்து வருகிறார். 

மகனது நோயையும் மீறி அவனை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவனுக்குள் குதிரை பற்றியும், ஓடுதல் பற்றியும் ஒரு பார்வை இருப்பதையறிந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.. கோச் ராஜ்கபூர் பயிற்சியளிக்க மறுக்கிறார். பெரும் பிரயத்தனப்பட்டு பையனை பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்.. தொடர்ந்து மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் அவனை கலந்து கொள்ள வைக்க பெரும் முயற்சி எடுக்கும் அதே நாளில் பிரதீப் ராவத்தையும் சந்திக்க நேர்கிறது.. என்ன செய்கிறார்..? என்ன செய்தார் என்பதுதான் படம்..!

படம் முழுவதும் வியாபித்திருப்பது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுதான்..! முதல் காட்சியில் என்கவுண்ட்டர் பற்றிய பயத்தை உருவாக்கியதில் கிஷோரைவிடவும் இவருக்குத்தான் அதிக பங்களிப்பு..! சிறிய போலீஸ் குவார்ட்டர்ஸை கேமிராவுக்குள் உள்ளடக்கியவிதமும், அந்தக் குத்துப்பாட்டை கவரேஜ் செய்த விதத்திலும் நச் என்று இருக்கிறது..! 

பாடல் காட்சிகளில் கலர் கிரேடிங்கிற்கு அதிகம் வேலை வைக்காமல் இவர் செய்திருக்கும் வேலையினாலேயே அக்காட்சிகளில் அதிக ஈர்ப்பு ஏற்படுகிறது..! பெரிய ஒளிப்பதிவாளர்களை வைத்து படம் செய்வது ரிஸ்க்குதான்.. வேலைக்கேற்றாற்போல் பட்ஜெட்டும் விரியும்.. ஆனாலும் இது போன்ற அவுட்புட்டுகள் சிற்ப்பாக இருக்கும்பட்சத்தில் அது தேவையானதே..!

நடிப்பு என்னும் யுத்தத்தில் முதலிடம் அந்தச் சிறுவன்தான். ச்சும்மா பையனாகவே நடி என்றாலும் நடித்துவிடலாம். ஆனால் எதுவுமே தெரியாத்துபோல் கடைசிவரையிலும் தனது முகத்தைக் காட்டி, சைகைகள் செய்து.. அப்பாவியாய் இருந்து.. கடைசியில் ‘அப்பா’ என்று கூப்பிடும்வரையிலும் ஒரு நோயாளி சிறுவனை அப்படியே பிரதிபலித்திருக்கிறார் அந்தப் பையன்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

வனயுத்தத்தில் வீரப்பனாக அருள் பாலித்து அடுத்த வாரமே இப்படியொரு கேரக்டர் கிஷோருக்கு..! இருவித ரோல்கள்.. என்கவுண்ட்டருக்கு ஏற்ற முகம்தான் என்றாலும் பள்ளிக்கூடத்தில் பையனோடு பையனாக அமர்ந்திருக்கும் அந்த முகமும் அப்பாவியான, சங்கடமான தந்தையும்தான் எனக்குப் பிடித்திருக்கிறது..!

ஒரு பாடலைச் சொல்லிக் கொடுக்க முனையும் சிநேகாவும், அந்த ஒரு ஸ்டெப்பிலேயே கவனம் சிதறுவதை சிநேகாவும், கிஷோரும் புரிந்து கொள்வதும் அழகோ அழகு.. என்னவொரு நளினம் சிநேகாவிடம்..! அம்மணியின் நடிப்புத் திறமைக்கு இன்னமும் தீனி போடலாம்..! தனது அம்மாவின் எதிர்ப்பையும் மீறி பையனை தன்னுடன் வைத்துக் கொள்ள அவர் செய்யும் முனைப்பும், நான் காலம்பூரா அந்தப் பையனுக்கு அம்மாவா இருக்க விரும்புறேன் என்று சொல்கின்ற அழுத்தமான நடிப்பும்தான் சினேகாவை மீண்டும் நினைக்க வைக்கிறது..!  “கோச், டாக்டர் மாதிரி பேசுறாரு.. டாக்டர், கோச் மாதிரி பேசுறாரு..” என்று இறுக்கமான முகத்துடன் இவர் பேசும் டயலாக்கிற்கு தியேட்டர்களில் நிச்சயம் கைதட்டல் கிடைக்கும்..!  

நன்கு திட்டமிடப்பட்ட திரைக்கதையில் பரோட்டா சூரியின் கதைதான் கொஞ்சம் எரிச்சலைத் தருகிறது.. அவருடைய பால்ய வயது காதலியை ஒரேயொரு பெயரை வைத்தே கண்டுபிடிப்பது போலவும், அதுவும் அதே பள்ளியில் வேலை செய்வது போலவும் அவர் அறியும் காட்சியெல்லாம் இந்தப் படத்துக்கே ஒரு திருஷ்டிப் புள்ளி.. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்..!

கிஷோர் தனது பையனுக்காக இத்தனை கஷ்டங்களையும் இத்தனையாண்டுகள் கழித்து ஏன் படுகிறார்.. என்பதுதான் படத்தின் மிகப் பெரிய கேள்வி..! சிறு வயதில் இருந்தே அந்தப் பையனை இதுபோலவே வளர்த்திருந்தால் நிச்சயம் அந்த வயதில் அவர் என்கவுண்டர்களை மட்டுமே செய்து கொண்டிருக்கலாம்..! லேட்டாக வந்திருந்தாலும், பையனை வளர்த்தெடுத்துவிட்டதாக பையனே சொல்வது சினிமாட்டிக் டிராமா என்றே சொல்ல வேண்டும்..!

அதுவும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளெல்லாம் பழைய சினிமாக்களை அடையாளம் காட்டினாலும் ரத்னவேலுவும், இயக்குநர் குமாரவேலனும் சேர்ந்து வேறு நினைப்பிற்குள் நம்மை ஆழ்த்திவிடாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். யுவன் யுவதியில் செஷல்ஸ் தீவின் இயற்கை அழகை மட்டுமே காட்ட வேண்டும் என்று நினைத்து கதையில் கோட்டைவிட்டு நம்மை பொரும வைத்தார் குமாரவேலன். ஆனால், இதில் இரண்டையும் சரிசமமாக கலந்து கட்டிக் கொடுத்திருக்கிறார்..!

படத்தின் பிற்பாதியில் வரும் முதல் அரைமணி நேரம்தான் படத்தின் போக்கையே மாற்றுகிறது. இது போன்று குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் சத்தியமாக இந்தப் படத்தைப் பார்த்தால் அழுதே விடுவார்கள்.. அவர்களின் உணர்ச்சிகளை அப்படியே அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர்..!

ராஜ்கபூரின் அலட்சியம்.. கிஷோரின் லட்சியம்.. இந்த இருவரின் வைராக்கியம்.. பையன் முதலில் தயங்கினாலும், பின்பு ஏதோ தோன்ற ஓடத் துவங்கி.. இறுதியில் வெற்றி பெறும் வரையிலும் சினிமாவுக்காகவாச்சும் ஓடக் கூடாதா எனறெல்லாம் நினைக்க வைத்துவிட்டது இயக்கம்..! வெல்டன்..! இசை விஜய் ஆண்ட்டனி.. ‘அன்னையின் கருவில்’ பாடல் மனம் கலங்க வைத்தாலும், ‘போலீஸ்’ பாடல் துள்ளவும் வைத்திருக்கிறது..! 

ஆட்டிசம் நோய் பற்றிய புரிதலையும், நோய் தாக்கிய குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஒரு ஊக்கத்தையும், விழிப்புணர்வையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை..! அதே சமயம் சமூகக் கேடான, அரசு இயந்திரத்தின் அப்பட்டமான ஜனநாயக மீறல் என்று நினைக்க வைக்கும் என்கவுண்ட்டரையும் தொட்டுக் காண்பித்திருப்பது இந்தப் படத்திற்கு எதற்கு என்றுதான் எனக்குப் புரியவில்லை..

இரண்டையும் வேறு வேறாகவே எடுத்திருக்கலாம்.. முதல் என்கவுண்ட்டர் சீன்ஸ் எடுத்தவிதம் மிகப் பிரமாதம். அதை வைத்தே தனிக் கதை எடுத்தால்கூட அதுவும் நன்றாகத்தான் இருந்திருக்கும்..! இப்படியொரு இடியாப்பச் சிக்கல் வேலைல இருக்கிறவருக்கு இந்த அளவுக்கு கஷ்டமான குடும்பச் சூழல் என்று சொல்லி பரிதாபம் ஏற்படுத்த முனைந்திருக்கிறார் இயக்குநர்.. ஆனால் அதில் பாதியளவுதான் வெற்றி கிடைத்திருக்கிறது..! 

நிச்சயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்..!

3 comments:

amas said...

நல்ல விமர்சனம்.எல்லாவற்றையும் விவரமாக அலசியிருக்கிறீர்கள். பார்க்க வேண்டுமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்....

amas32

amas said...

நல்ல விமர்சனம்.எல்லாவற்றையும் விவரமாக அலசியிருக்கிறீர்கள். பார்க்க வேண்டுமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்....

amas32

உண்மைத்தமிழன் said...

[[[amas said...

நல்ல விமர்சனம். எல்லாவற்றையும் விவரமாக அலசியிருக்கிறீர்கள். பார்க்க வேண்டுமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.]]]

அவசியம் பார்க்க வேண்டிய படம்ன்னுதான நானும் சொல்லியிருக்கேன். அப்புறமும் என்ன யோசனை..?