சில்லுன்னு ஒரு சந்திப்பு - சினிமா விமர்சனம்

16-02-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு படத்தில் வெற்றியைக் கொடுத்துவிட்டால் அடுத்த படத்தில் கதையைப் பற்றியே யோசிக்க வேண்டாம் என்று விதி இருக்கிறதா என்ன..? நடிகர் விமல் இஷ்டம் படத்தின் தோல்வியின்போதே யோசிக்க வேண்டிய விஷயம் இது..! மீண்டும் மீண்டும் கதைத் தேர்வில் கோட்டைவிடுகிறார்..! இதுவும் அப்படியே..!
ப்ளஸ்டூ படிக்கும்போது உடன் படிக்கும் ஓவியாவை லவ்வுகிறார் விமல். அது கல்யாணம்வரைக்கும் போகாமல், 18 வயது நிரம்பியவுடன் திருமணம் என்ற கண்டிஷனோடு பாதியிலேயே நின்றுவிடுகிறது.. 14 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு காதல்.. இந்தக் காதல் கைகூடி நிச்சயத்தார்த்தம்வரையிலும் செல்கிறது. அன்றைக்கு பார்த்து முதல் காதல் மேட்டர் இரண்டாவது காதலிக்குத் தெரிய வர, முதல் காதலி என்றைக்காவது திரும்பி வந்தால் என் கதி என்னாவது என்ற கேள்வியோடு நிச்சயத்தார்த்தை நிறுத்துகிறாள் 2-வது காதலி.. இறுதியில் விமல், யார் கையைப் பிடித்தார் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

விமலுக்கு சீரியஸ் கேரக்டர்கள் ஒத்தே வராது என்பதற்கு இந்தப் படமும் சாட்சியாகிவிட்டது. மனிதர் இனிமேல் காமெடியை மட்டுமே செய்துவிட்டுப் போவது அவருக்கும் நல்லது. தயாரிப்பாளர்களுக்கும் நல்லது..! படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரே முக பாவனையில் பேசிக் கொண்டேயிருந்தால் யாருக்குத்தான் அலுக்காது..? கொஞ்சமும் முகத்தில் நடிப்பைக் காட்டவே மறுக்கிறார்.. என்னதான் தனுஷுக்கு அடுத்து நல்ல தம்பி என்ற முகவாட்டம் இருந்தாலும், அதுவே சினிமாவுக்கு போதாதே.. நல்ல நடிகர் என பெயர் எடுக்க வேண்டாமா..? நடிப்பில் இன்னமும் பல விசித்திரங்கள் உண்டு என்பதை வரும் படங்களில் காட்டினால்தான் விமலுக்கு நல்லது...!

ஓவியாதான் அதிகமாக நடித்திருக்கிறார்போலும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க.. இடையில் சத்தமில்லாமல் ஸ்கோர் செய்திருக்கிறார் இன்னொரு ஹீரோயின் தீபாஷா.. அழுத்தந்திருத்தமான தமிழ் உச்சரிப்பு.. சரளமான, இயல்பான இடிப்பு.. வலுக்கட்டாயமில்லாத முக பாவனைகள்.. கொஞ்சம் முயன்றால் தேறும்..! தலையில் குட்டிக் கொள்ளும் மேனரிஸத்தால் எந்தப் புண்ணியமுமில்லை என்றாலும், சினிமாவில் இவரை அடையாளம் காட்டவே ஒரு அடையாளம் கிடைத்துவிட்டது..! 

சிரிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை ஓவியாவிடம்..! அந்த அழகை இன்னும் எத்தனை படங்களில் ச்சும்மா பார்த்துக் கொண்டேயிருப்பது என்றும் தெரியவில்லை.  மனோபாலாவின் காமெடியில் 2 இடங்களி்ல் மட்டுமே தியேட்டரே அதிர்ந்தது..! "நீ இவுங்க மகளோட குடும்பமே நடத்தினாலும், கண்டுக்காத குடும்பம் இது.." என்று தீபாஷாவின் குடும்பத்தைக் குத்திக் காட்டும் இடமும், அப்பன் மனோபாலா எந்திரன் ஸ்டைலில் நிற்பதுமான காட்சியும் மட்டுமே இப்படத்திற்குக் கிடைத்த இரண்டே இரண்டு கைதட்டல்கள்.. 

காபி குடிப்பதைபோய் ஒரு இரட்டை அர்த்தத்திற்கு உவமையாக்கி இருப்பது தேவைதானா..? இனிமேல் இதுக்கும் தனியா விளக்கம் சொல்லியே ஓய்ஞ்சு போகணும் போலிருக்கே..! வழக்கமான பாடல் காட்சிகள்.. பாடல்கள்.. 'பஸ்ஸே பஸ்ஸே' பாடலில் இரண்டு குத்தாட்ட அழகிகள்..! இடையிடையே மாறி மாறி காட்டியிருக்கும் வித்தை எதற்கு என்றுதான் தெரியவில்லை..!

ஒளிப்பதிவு ஒன்றுதான் படத்தில் சொல்லிக் கொள்ளும்படியிருக்கிறது..! ஊட்டி என்று சொல்லி கொடைக்கானலைக் காட்டியிருக்கிறார்கள்.. அதையும் இன்னமும் கொஞ்சம் அழகாக்கியிருக்கலாம்.. ஆனாலும் சென்னையில் எடுத்ததை கோடையில் எடுத்ததாகவும், பெங்களூரில் எடுத்ததை வெளிநாட்டில் எடுத்ததுபோலவுமாக காட்டி சிக்கனத்தைக் காட்டியிருக்க வேண்டாம்தான்..!

ஓவியா சென்னை சென்ற பிறகு, அவரை விமல் தொடர்பு கொள்ளவே இ்ல்லையா..? ஏன்..? செல்போனிலேயே குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் இதெல்லாம் முடியாத விஷயமா என்ன என்றெல்லாம் ரொம்பவே நம்மை யோசிக்க வைக்கிறார் இயக்குநர்.. ஓவியா மீதான காதல் உண்மையாக இருந்தால், அவர்களது கல்யாணம் எப்போதோ முடிந்திருக்குமே..?  ஓவியா மீதான காதலுக்கு மங்களம் பாடாமலேயே அடுத்தக் காதலுக்கு பூஜை போடுவது ஏன்..? இறுதியில் ஓவியாவை பார்த்தும் அது இன்பாச்சுவேஷன் என்பதாகச் சொல்லி அதைத் தவிர்க்கும் விமலின் கேரக்டரை பார்த்தால் அது சீரியஸாகவும் இல்லை.. காமெடியாகவும் இல்லை..! இதில் பரிதாபம் எங்கேயிருந்து வரும்..? இதில் 2 குடும்பத்தினரும் ரொம்பவே அன்னியோன்யம் போல பழகிவிட்டு, கல்யாணத்தைப் புறக்கணிக்கும் தீபாஷாவை மனம் மாற்ற முடியவில்லை என்கிறார்கள்..! இறுதிக் காட்சியில் சொல்லி வைத்தாற்போல் அனைவருமே ஏர்போர்ட்டில் வந்து காத்திருக்கிறார்கள்..! ம்.. இடையிடையே காட்சிகளை முன்ன பின்ன காட்டியதில் கொஞ்சம் கிர்ரென்றானது நமக்கு..! தீபாஷாவின் அறிமுகக் காட்சியையும், போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நடக்கும் ஓவியா, விமல் பிரிவுக் காட்சியையும் தனியே காட்டியது மட்டுமே இந்தப் படத்தில் சொல்லக் கூடிய விஷயங்கள். 

விமலின் பாட்டி என்று அம்மா வயதில் ஒருவரைக் காட்டுகிறார்கள்.. திடீரென்று டூயட் பாடலின் முடிவில் விமல்-ஓவியா கிஸ் அடிப்பது போலவும், அதனை ஓவியாவின் அம்மா பார்ப்பது போலவும், உடனேயே ஓவியாவின் அப்பா சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டதாகவும் சொல்லி சிங்கிள் ஷாட் மூலமாகவே கதையை டைவர்ட்க்காயிருக்கிறார்கள். அவ்ளோ கால்ஷீட் பஞ்சம் போலும்..! 

சென்சார் போர்டு சீர்த்திருத்தம் செய்யப்பட்டாக வேண்டும் என்ற கருத்துக்கு கொஞ்சம் உரம் போட்டு வளர்த்திருக்கிறது இந்தப் படத்தின் வகுப்பறைக் காட்சிகள்.. ஓவியா விமல் பற்றி வாத்தியாரிடம் புகார் சொல்வது.. இதற்கு விமல் தெனாவெட்டாக பதில் சொல்வது.. அப்போது வரும் டீச்சரை ஓவியா போலவே நடக்கச் சொல்லி வாத்தியாரை பார்க்கச் சொல்வது.. என்று இந்தக் கர்மத்தையெல்லாம் பள்ளி வகுப்பிலேயே நடப்பதாகக் காட்டினால் யார்தான் சினிமாக்காரர்களைத் திட்டாமல் விடுவார்கள்..? நம்மாளுகளே ரோடு போட்டுக் கொடுக்குறாங்கப்பா..! முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்க வேண்டிய காட்சி இது..! 

ஓவியாவின் தாத்தா சாருஹாசனின் டைவர்ஸ் விவகாரம் படத்தில் ஒரு சுவையான திருப்பமாக இருந்தது.. அதனை வைத்தே கதையை இன்னமும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். நிறைய ஸ்கோப் இருந்தும் இயக்குநர் வீணடித்துவிட்டார்..! கல்யாணத்துக்கு அழைப்பு விடுத்து சேர்ந்ததுபோலவே, டைவர்ஸுக்கும் அழைப்பு விடுத்து பிரிவதைச் சொல்வது என்ற அந்த நிகழ்ச்சியை பரவசப்படுத்தியிருக்கலாம்..! ப்ச்.. எல்லாம் வீணாப் போச்சு..!

விமல்-ஓவியா காதல்.. விமல்-தீபாஷா காதல்-மோதல், தாத்தா-பாட்டியின் டைவர்ஸ் என்ற மும்முனை கதைகளோடு கொண்டு போய் ஒரு நல்ல எண்ட்டர்டெயின்மெண்ட்டாகவே நிகழ்த்தியிருக்க வேண்டிய கதை.. கூட்ஸ் வண்டிபோல் தேய்ந்து போய் ஷெட்டில் ஓரம்கட்டி நின்றுவிட்டது சோகம்தான்..!

10 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

இந்தப்படத்தோட இயக்குனர் உண்மைக்கதைனா சொன்னார்,கற்பனைக்கதை தானே, கதாபாத்திரங்கள்,சம்பவங்கள் எல்லாமே டுபாக்கூர் கற்பனை,அதில எதுக்கு லாஜிக் இருக்கானு பார்க்கணும், ஒரு முக்கோண காதல், ஒன்னுக்கு ரெண்டா ஹீரோயின் சும்மா ஜாலியாப்பார்க்காம ,என்ன ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கு :-))

ஹி...ஹி நாங்களும் சொல்லுவோம்ல :-))

Balaji Ram said...

Your comment is true. Vimal endha expression illama kolran. Kevalamana padam. Second heroine character is Good. Vimal marupadiyum group dance aada pogalam. Nadipuna kilo enna vilainu ketpan pola

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி,

இந்தப் படத்தோட இயக்குனர் உண்மைக் கதைனா சொன்னார்,கற்பனைக் கதைதானே, கதாபாத்திரங்கள்,சம்பவங்கள் எல்லாமே டுபாக்கூர் கற்பனை, அதில எதுக்கு லாஜிக் இருக்கானு பார்க்கணும், ஒரு முக்கோண காதல், ஒன்னுக்கு ரெண்டா ஹீரோயின் சும்மா ஜாலியாப் பார்க்காம ,என்ன ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கு :-))

ஹி... ஹி நாங்களும் சொல்லுவோம்ல :-))]]]

உண்மைக் கதையோ.. பொய்க் கதையோ.. கொஞ்சமாச்சும் கதை வேணாமா..? நடிப்பும் வேணாமா..? டைரக்சன் வேணாமா..? எதுவுமே இல்லாம நாம என்னத்த பார்க்குறது..?

உண்மைத்தமிழன் said...

[[[Balaji Ram said...

Your comment is true. Vimal endha expression illama kolran. Kevalamana padam. Second heroine character is Good. Vimal marupadiyum group dance aada pogalam. Nadipuna kilo enna vilainu ketpan pola.]]]

பாலாஜி ஸார்..

விமர்சனம் பண்ணுங்க. அதுக்காக அவன், இவன் என்பதெல்லாம் வேண்டாமே..? விரைவில் அவரே திருத்திக் கொள்வார்ன்னு நம்பலாம்..!

venkat said...

Gud review,,, bt sensor yen sir
ipadi pandrangalo. 41 cuts
Billa2 ku A, same violence no cuts
VISHWAROOPAM got a a
U/A.?
Athukum mela thuppakki ku
U certification.

s suresh said...

களவாணி நினைப்பில் பார்க்க நினைத்தேன்! உங்கள் விமர்சனம் தடுக்கிறது! இல்லாவிட்டாலும் நான் சினிமா பார்ப்பது அபூர்வம்தான்! பகிர்வுக்கு நன்றி!

உண்மைத்தமிழன் said...

[[[venkat said...

Gud review,,,

bt sensor yen sir ipadi pandrangalo. 41 cuts Billa2ku A, same violence no cuts VISHWAROOPAM got a a U/A.? Athukum mela thuppakkiku
U certification.]]]

எல்லாம் அண்டர்கிரவுண்ட் வேலைதான்..! நாடு லஞ்சத்தாலதான் வாழுது..! வேற என்னத்த சொல்றது..?

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

களவாணி நினைப்பில் பார்க்க நினைத்தேன்! உங்கள் விமர்சனம் தடுக்கிறது! இல்லாவிட்டாலும் நான் சினிமா பார்ப்பது அபூர்வம்தான்! பகிர்வுக்கு நன்றி!]]]

போச்சுடா.. ஒரு டிக்கெட் காசை கெடுத்திட்டனா..?

வவ்வால் said...

அண்ணாச்சி,

//போச்சுடா.. ஒரு டிக்கெட் காசை கெடுத்திட்டனா..?//

இது என்ன புதுசா, இது போல எத்தனை டிக்கெட் காசை கெடுத்து இருப்பீங்க :-))

படம் தியேட்டருக்கு வந்தப்பிறகு எழுதும் விமர்சனத்துக்கே டிக்கெட் காசு போகுது, நினைச்சு பாருங்க டிடிஎச்சில் ஒரு நாள் முன்னர் படம் போட்டு,நெகட்டிவ் விமர்சனம் வந்தால் எத்தனை டிக்கெட் காசு போகும்னு :-))

டிடிஎச்சில் தியேட்டருக்கு முன்னர் வெளியிடுவது தியேட்டர்களுக்கு ஆப்பு என்பது புரியாமல் உங்களைப்போலவே லோகநாயகரும் பேசினார் :-))

Scorpian said...

Yov Vavvvaloooo....

Vekkame illama inga logic pakka koodathunu solra neenga,
unga kadai'la loganayagar mel yen kolaveri ???