சென்னை உலகத் திரைப்பட விழாவும், நானும்..!

24-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பார்த்து வந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இந்தாண்டு முழுமையாக பார்க்க முடியாதது எனது துரதிருஷ்டம். ஜெயா டிவியில் வேலையில் இருந்தபோதுகூட முன் அனுமதி பெற்று தினமும் படங்களை பார்த்து வந்தேன். சென்ற ஆண்டு நான் இருந்த புதிய தலைமுறை டிவியில் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் வழங்கி கெளரவித்திருந்தார்கள். இந்தாண்டு வேலை பார்க்கும் நிறுவனத்தில் கேட்டால் “லெட்டரை கொடுத்துவிட்டு வீட்டுக்கே போயிரு”ன்னு பதில் வரும் என்பதை நானே ஊகித்துக் கொண்டு, எனது அறிவுத் திறமையாலும், புத்திக் கூர்மையாலும் வேலையைக் காப்பாற்றிக் கொண்டு உலக சினிமாவை கைவிட்டுவிட்டேன்..!

57 நாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட படங்கள் என்று அட்டவணையில் சொல்லப்பட்டாலும் சில திரைப்படங்கள் மூன்று முறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வராத திரைப்படங்களின் நேரத்தையும், எண்ணிக்கையையும் ஈடுகட்டின என்பதையும் சொல்ல வேண்டும்..! மாசிடோனியா, உருகுவே, தஜிகிஸ்தான், கஜகஸ்தான், சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளும் இந்தாண்டு சென்னை உலக சினிமா ரேஸில் கலந்து கொண்டிருக்கின்றன..! 

ஆனாலும் ஒரு பத்திரிகையாளனாக.. கடமையுணர்ச்சியுள்ள  பணியாளானாக துவக்க விழாவுக்கு சென்றிருந்தேன்.. எங்கோ தப்பித் தவறி வெளிநாட்டுக்கு வந்துவிட்டோமோ என்ற பீலிங்கிற்கு கொண்டு போய் விட்டன அரங்கேறிய நிகழ்ச்சிகள்..! நடப்பதோ சினிமா பற்றியது.. வாய்ப்பாட்டு, கஜல் பாட்டு, ஹிந்துஸ்தானி மியூஸிக், உலக இசையமைப்பாளர் ரஹ்மானின் புதல்வனின் பியானோ இசை என்று ஏதோ டிசம்பர் மாத இசைக் கச்சேரிக்கு வந்ததுபோல இருந்தது..! 


மாநில அரசிடமிருந்து 50 லட்சம் ரூபாயை சுளையாக வாங்கியிருந்த காரணத்தினால் அம்மா புகழ் பாட ஒரு அடிமையை வரவழைத்திருந்தார்கள். செய்தித் துறை அமைச்சர் என்று சொல்லிக் கொண்ட அவர், “இத்தனை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும்” என்று கட்சி மீட்டிங்கில் புழங்குவதுபோல முழங்கித் தள்ளி நீட்டி நெடித்து, முடிக்கும்போது யாருக்குமே கிடைக்காத கைதட்டலை அள்ளிக் கொண்டு போனார். தான் மட்டுமே சிறப்பாக பேசியதாக அவர் நினைத்திருப்பாரோ என்னவோ.. அப்படியொரு சந்தோஷம் மனுஷனுக்கு சீட்டுக்கு திரும்பும்போது..!

எப்போதும் மேடைப் பேச்சுதான் அவதிப்படும். அன்றைக்கு தமிழ்த்தாய் வாழ்த்தே பெரும் அவதிப்பட்டது..! அதிலும் சர்ச்சை நாயகன் அமீரினால்..! “தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் இந்த நிகழ்ச்சியைத் துவங்கியதே தப்பு.. தமிழிலும் சில நிகழ்ச்சிகளை வைத்திருக்கலாம்..” என்று ஆலோசனையை குற்றச்சாட்டாகவே வைத்துவிட்டுப் போனார்..!

பஞ்சாயத்துக்கே நாட்டாமையாகத் திகழும் சரத்குமார் தன் பேச்சின்போது இதற்கு தீர்ப்பு சொல்கிறேன் பேர்வழி என்று திடுதிப்பென்று தன் பேச்சின் ஊடேயே  “நான் இப்போ தமிழ்த் தாய் வாழ்த்து பாடுறேன்..” என்று சொல்லிவிட்டு பாடத் துவங்க.. அப்போதுவரையிலும் தூங்கிக் கொண்டிருந்த சிலரை எழுப்பி எழுந்திருக்க வைப்பதற்குள் பாடலே முடிந்தவிட்டது.. தமிழ்த்தாய் பாடிக் கொண்டிருந்தபோது அரங்கத்தின் பல மூலைகளில் இருந்தும் செல்போனில் ரிங்குகள் தொடர்ந்து கொண்டிருந்ததும், இந்த விழாவின் ஒரு சிறப்பம்சம்..! அரசியல்வியாதிகள் எங்கே, எதைத் தொட்டாலும் சர்வநாசம் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்..!


எங்கும், எல்லாமும் அம்மா மயத்துடன் துவக்கப்பட்ட இந்த விழாவின் துவக்க நாள் படத்தை பார்க்க முடியாத அளவுக்கு வீட்டு வேலைகள் இருந்ததால் அடியேன் பறந்துவிட்டேன்..! ஆனாலும் கிடைத்த கேப்பில் அடுத்த ஞாயிறன்று மட்டும் 4 படங்களை பார்க்க நேர்ந்தது..! மற்ற நாட்களில் கால்வாசி படம், முக்கால்வாசி படம், அரைவாசி படமாகவே சிலவற்றை பார்க்க முடிந்தது..! எனது கலையுலக வாழ்க்கையில் மிக மோசமான நாட்களாக இவற்றை நினைக்கிறேன்..!

KUMA (Austria), The Taste of Money (south Korea), Paradaise Love (Austria), Mystery (China) என்று பார்த்த படங்கள் நான்கும் நான்கு வகை.. இதில் பாரடைஸ் லவ் படத்தின் போது தமிழ் மக்களின் உலக சினிமா ஆர்வம் எதற்கு என்று புரிந்தது..! திரையில் ஓடிய கில்மா சீன்களுக்கெல்லாம் “ஓ” என்று கத்தி தங்களது புல்லரிப்பைக் காட்டியவர்கள், அவ்வப்போது அக்கம்பக்கம் அமர்ந்திருக்கும் பெண்களின் முகத்தையும் உற்று உற்றுப் பார்த்து மகிழ்ந்தார்கள்..! இதுகூட செய்யலைன்னா தமிழன்னு யாராவது ஒத்துக்குவாங்களா..? இந்த மாதிரி படத்தையெல்லாம் எவன் உலக சினிமால சேர்த்தான்..? சேர்க்கணும்..? பட்டவர்த்தனமான ஆபாசப் படம் இது..! அத்தோடு நிறவெறி, இனவெறியான வசனங்கள், காட்சியமைப்புகளோடு அதிர்ச்சியடையவே வைத்தது..!

உலக சினிமாக்களில் இரண்டே வகைதான்.. ஒன்று பாலியலுடன் சொல்லப்படும் உலக சினிமா. இன்னொன்று அது இல்லாமலேயே சொல்லப்படுவது.. இல்லாமலேயே சொல்லப்படுவதில் ஈரானிய திரைப்படங்கள்தான் சிறப்பானவை.. அவற்றுக்கு ஈடு அவைகள்தான்.. ஆனால் பாலியலையும் சேர்த்தே தூக்கிக் கொண்டு அலையும் திரைப்படங்களை பார்க்கத்தான் இங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது..! பாலியல் வறட்சி நாட்டில் எந்தத் திசை பார்த்தாலும் தென்படுகிறது என்பதை இது போன்ற படக் காட்சிகளிலும் காண முடிகிறது..! 

'கிளிப்' என்ற செர்பிய படத்தின் கில்மா காட்சிகளுக்காகவே “ஒன்ஸ்மோர்” என்று கத்திய ரசிகர்களெல்லாம் இங்கே வந்திருந்தார்கள் என்றால் என்னத்த சொல்ல..? இந்தப் படத்தை பொறுமையாகப் பார்த்துவிட்டு வெளியேறிய ஜென்டில்மேனான வில்லன் நடிகர் மன்சூரலிகான்.. “நடிகை சுஹாசினி பொறுப்பில் இருக்கும் இது போன்ற விழாக்களில்  புளூபிலிம்களையெல்லாம் ஓட்டலாமா..?” என்று கண்டன அறிக்கைவிட.. மறுநாள் போடுவதாக இருந்த அந்தப் படத்தின் இரண்டாவது ஒளிபரப்பு “தொழில் நுட்பக் காரணங்களினால்” திரையிடப்பட முடியாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மன்சூரலிகான் என்னை மாதிரி ஆர்வத்துடன் தியேட்டருக்கு ஓடி வந்த பயபுள்ளைகளுக்கு நிசமாவே வில்லனாயிட்டாரு..! இவருக்கெதுக்கு இந்த வேலை..?

நடிகர் சிவகுமார், கேமிராவுமன் விஜயலட்சுமி, இயக்குநர் சற்குணம் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் டீம், போட்டிக்கு வந்த தமிழ்ச் சினிமாக்களை பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்..! ராணி சீதை ஹாலில் அட்டகாசமான ஒரு வெள்ளை ஸ்கிரீனை விரித்து வைத்து அதில் படங்களை ஒளிபரப்பி படம் பார்க்க வந்தவர்களைவிடவும், ஜட்ஜ்களை நோகடித்துவிட்டார்கள் விழா அமைப்பாளர்கள். பிலிம்களை தியேட்டர்களுக்கு வழங்க முடியாத சூழல் என்பதால் பொறுத்துக்குங்க என்று சொல்லிவிட்டதால், ஒளிப்பதிவை வைத்து மார்க் போடாமல் கதையை மட்டும் பார்த்து தேர்வு செய்திருப்பதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்..!

திருட்டு டிவிடியில்கூட கிடைக்காத ‘ஆரண்யகாண்டம்’ திரைப்படத்தை காண ராணி சீதை ஹாலில் கட்டுக்கடங்காத கூட்டம். கூட்டத்தைப் பார்த்து பயந்துவிட்டார்கள் ஏற்பட்டாளர்கள். இதனால் அன்றைக்கு திரையிடப்படவில்லை..! மறுநாள் உட்லண்ட்ஸ் தியேட்டரில் திரையிட்டார்கள். கூட்டம் அள்ளியது..! எப்படிடா இதை இத்தனை நாளா மிஸ் செஞ்சோம் என்ற வருத்தம், படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களின் முகத்திலேயே தெரிந்தது..! இந்தப் படத்தை இப்போ ரெண்டாவது ரவுண்ட்டா வெளியிட்டாலும் கூட்டம் பிச்சிரும்.. தயாரிப்பாளர் தன் ஈகோவை கைவிட்டுட்டு படத்தை ரிலீஸ் செய்ய முன் வருவாருன்னு நம்புறேன்..!

உலக சினிமா விழாவின் முக்கிய தியேட்டரான உட்லண்ட்ஸின் பாத்ரூம், டாய்லெட்டை பார்த்துவிட்டு உலக சினிமா இயக்குநர்களெல்லாம் அடுத்த முறை சென்னைக்கு வரவே கூடாது என்றுதான் நினைத்திருப்பார்கள்..! அவ்வளவு அழகாக இருந்தது..! இத்தனை செலவு செய்து விழா நடத்துபவர்கள் இதற்கு ஒரு வழியைச் செய்திருக்க வேண்டாமா..? ஒவ்வொரு வருடமும் இப்படி புலம்புவதே என்னைப் போன்ற சாதாரண ரசிகனின் வழக்கமாகிவிட்டது..! ஒரு அப்பாடக்கரான வெளிநாட்டவர் உச்சா போய்விட்டு கையைக் கழுவ தண்ணீர் இல்லாமலும், டிஸ்யூ பேப்பர் இல்லாமல் தேடி அலைபாய்ந்து, வெளியேயும் வந்து அங்கே, இங்கே என்று பார்த்து, பரிதவித்து.. கை நீட்டியவர்களிடத்தில் கை கொடுக்க மறுத்து சங்கடத்துடன் நின்றதையெல்லாம் காபியை குடித்தபடியே நான் ரசித்துக் கொண்டிருந்தது இந்த விழாவின் ஹைலைட் என்றே சொல்லலாம்..!

சென்ற முறை படம் துவங்கிய 15 நிமிடங்களுக்கு பிறகு ரசிகர்கள் யாரும் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விதிமுறையைக் கொண்டு வந்து கொடுமைப்படுத்தினார்கள். கில்மா சீன் ஓடிட்டிருக்கும்போது ஒருத்தர் குறுக்கால புகுந்து அந்த வரிசைக்கு போறதா.. இந்த வரிசைக்கு போறதான்னு யோசிச்சுக்கிட்டு நிப்பார் பாருங்க.. அப்பத்தான் கடுப்பே வரும்..!  அந்தக் கடுப்புக்கு இது சந்தோஷமாத்தான் இருந்தது..! ஆனா ஒரு சிலருக்குக் கோபம். “அவனவன் அரக்கப் பறக்க ஆபீஸுக்கு டிமிக்கி கொடுத்திட்டு வர்றான்.. இங்க வந்தா, உள்ள வுட மாட்டீங்களா..? கூட்டுடா பஞ்சாயத்தை..” என்று சென்ற முறையே ரத்தம் வராத அளவுக்கு சண்டையெல்லாம் நடந்திருந்தது.. அதனால், இந்த முறை சத்தமில்லாமல் அதனை தூக்கிவிட்டு எப்படியோ போய்த் தொலைங்கன்னு விட்டுட்டாங்க.. 

இன்னமும் நம்ம மக்கள்ஸ் சில பேரு நாகரிகத்தைக் கத்துக்கிடலையே..? ஒரு குண்டூசி சப்தம்கூட இல்லாமல் அமைதியா போய்க்கிட்டிருக்கும்போது மனசு முழுக்க படத்துக்குள்ள இருக்கும்போது, பின்னாடியோ முன்னாடியோ எவனோ ஒருத்தன் செல்போன்ல குசுகுசுன்னு பேசிக்கிட்டேயிருக்கான்..! எல்லா படத்துலேயும் எனக்கு இந்த அனுபவம் கிட்டியது.. செல்போனை பொண்டாட்டி மாதிரி பாவிக்கணும்னு இந்தப் பயபுள்ளைகளுக்கு தெரியலை.. இந்தியன் பனோரமாவின் ஒரு படத்தை திரையிட்ட போது அதன் இயக்குநரும் வந்திருந்தார். நம்மாளுகளோட செல்போன் அலம்பலை பார்த்து ரொம்பவே டென்ஷனாயிட்டாரு மனுஷன். கூடவே கடைசி நிமிஷத்துல படம் முடியறதுக்குள்ள லைட்டையும் போட்டு மக்களை வெளிய போன்னு சொல்லிட்டாங்க.. அந்த இயக்குநர் தொண்டை கிழிய கத்தி குமிச்சிட்டாரு..! ஆனாலும் கொஞ்ச நேரம் கழிச்சு கூலாகி அந்தப் படத்தை எப்படியெல்லாம் எடுத்தேன்றதை அரைமணி நேரமா சோப்பு போட்டு விளக்கிட்டுத்தான் போனாரு..!

வாலண்டியரா வந்து மாட்டின அடிமைகளா இந்த வருஷம் சிக்கினவங்க நியூ காலேஜ் பசங்க..! போன தடவை மாணவிகளையும் சேர்த்திருந்தாங்க.. ஆனாலும் நம்மாளுக கில்மா படம் போடும்போதெல்லாம் அந்தப் புள்ளைகளையும் சேர்த்து ராகிங் செய்து வைக்க.. இந்தத் தடவை பசங்களே போதும்னு முடிவு பண்ணிட்டாங்களாம்..! பயலுக பாவம்.. வாங்கிக் கொடுத்த டிபனுக்கும், மதியச் சோத்துக்கும், ராத்திரி குருமாவுக்கும் மேலேயே வேலை பார்த்து ஓய்ஞ்சுட்டாங்க.. இந்தப் பசங்க எடுத்த சில குறும்படங்களை கடைசி நாள் அன்னிக்கு அமிதாப் முன்னாடி திரையிட்டாங்க.. இருந்தாலும் தமிழ்ச் சினிமா பத்தி இல்லாம, பர்மா பஜார் டிவிடி கடைகள், சென்னை நகரம் பற்றி எடுத்திருந்தது ஒரு குறைதான்..!

கடந்த 9 வருஷமா உலகத் திரைப்பட விழால முன்னாடி நின்னுக்கிட்டிருந்த நடிகர் எஸ்.வி.சேகரை இந்த வருஷம் சுத்தமா காணோம்.. இவர்தான் இந்த அமைப்பின் துணைத் தலைவரும்கூட.. இப்போ இருக்காரா..? இல்லை சத்தமில்லாம தூக்கிட்டாங்களான்னு தெரியலை.. ஆனா சுஹாசினி தலைமைல பூர்ணிமா பாக்யராஜ், லிஸி, ரோகிணி, பாத்திமா பாபு, மோகன், மனோபாலா, ஷைலஜா, டாக்டர் ஷர்மிளா, டிவி நடிகர் ராகவ், அவர் மனைவி, மற்றும் சில பிரபலங்களெல்லாம் சேர்ந்து வாலண்டியரா வொர்க் பண்ணியிருக்காங்க.. அத்தனை பேருமே திரைப்பட விழாவின் யூனிபார்மை போட்டுக்கிட்டு 7 நாளும் அரங்கத்தை வளைய வந்தது மிகப் பெரிய விஷயம்..! 

கடைசி நாள்ல அமிதாப்பச்சன் வர்றாருன்றதால ரொம்பவே டென்ஷனா இருந்தாங்க மக்கள்ஸ்.. லோக்கல் கேபிள் சேனலுக்குக்கூட அழைப்பு கொடுத்திருந்ததால 30 டிவி சேனல்ஸ் கேமிராவோட வந்து நின்னுட்டாங்க.. பார்வையாளர்களுக்கு நடுவுல அவங்க ஸ்டேண்ட் போட.. பின்னாடியிருந்த மக்கள்ஸ் எழுந்து வந்து கத்த.. செம கலாய்ச்சலாத்தான் இருந்தது..!


செம பந்தாவா பென்ஸ் கார்ல வந்திறங்கிய அமிதாப்ஜியை ஓயிலாட்டம், மயிலாட்டம் குழுவினர் ஆடி, ஆடி வரவேற்றனர்.. காரில் இருந்து இறங்கியதுமே அவர்களைப் பார்த்து திரும்பி கையசைத்துவிட்டுத்தான் படியேறினார் அமிதாப்.. என்ன வேகம்..? என்ன வேகம்..? நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பின்னாடி இம்புட்டு ஸ்பீடா நடக்குறது இந்த இளைஞர்தாங்க..! மகளிரணியினர் கையில் விளக்கேந்தி அமிதாப்பை வரவேற்றாலும், அதனை ரிசீவ் செய்யக்கூட முடியாத அளவுக்கு தள்ளுமுள்ளில் மாட்டிக் கொண்டார் அமிதாப்..!


இப்போதைய தொகுப்பாளர் உலகத்தின் சூப்பர் ஸ்டாரினி ரம்யாவும், பார்த்திபனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாங்க.. உலக சினிமான்னு சொல்லிட்டு சினிமா பத்தின நிகழ்ச்சியையோ, தமிழ்ச் சினிமா பற்றிய விஷயத்தையோ சொல்லவே கூடாதுன்னு முடிவே கட்டிட்டாங்க..  அமிதாப்பை ராஜகம்பீரமாக உட்கார வைத்து அவருடைய படத்தின் பாடலை பாடியபடியே அவரை ஓவியமா வரைஞ்சாரு ஒரு கில்லாடி ஓவியர்.. நச்சுன்னு இருந்துச்சு.. அமிதாப் பார்த்து அதிசயித்து அவரை இழுத்து அணைத்துக் கொண்டபோது எதிர்பார்க்காத அரங்கம் அதிர்ந்தது..!


பார்த்திபன் ‘ஆக்ரி ராஸ்தா’ ஷூட்டிங்கில் பாக்யராஜிடம் அஸோஸியட்டாக பணியாற்றியதை அமிதாப்பிடம் குறிப்பிட்டு, அதில் பாக்யராஜ் எப்படி அரைகுறை ஆங்கிலத்தில் அமிதாப்பிடம் காட்சிகளை விளக்குவார் என்பதை அவர் ஸ்டைலில் சொன்னது மட்டுமே மேடை தொகுப்பில் உருப்படியான விஷயம்.. 

12 தமிழ்ப் படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு விருது கொடுக்கும்போது யாருக்கு, யார் விருது கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் விட்டதால், ஒவ்வொரு முறையும் பக்கத்தில் இருந்து ஹிந்து ராமிடம், “நானா..? நீங்களா..?” என்று கேட்டுவிட்டு எழுந்து, எழுந்து நின்ற அமிதாப்பின் பக்குவமான குணம் வெரி நைஸ்..! இதுல வெற்றி பெற்ற படங்களை பற்றிய கதைச் சுருக்கத்தை ஆன் தி ஸ்பாட்டில் சுஹாசினி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமிதாப்புக்கு சொன்னதும், அடுத்த படங்களுக்கு அவர் அருகில் காதோரம் போய் மொழி பெயர்த்ததும் இது தமிழ்நாட்டில் நடக்கும் விழா என்பதை சொல்லாமல் சொல்லியது..!


“வணக்கம். என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நன்றிகள். எனக்கு இவ்வளவுதான் தமிழ்ல பேசத் தெரியும்..” என்று எழுதிக் கொடுத்ததை குனிந்த தலை நிமிராமல் சொன்னபோது  பச்சன்ஜியை ரொம்பவே புடிச்சுப் போச்சு.. மனுஷன் ரொம்ப அடக்கமாத்தான் இருக்காரு..! தர்மேந்திராவைவிடவும் அமிதாப் ஏன் இந்தியால அதிகமா தெரிஞ்சிருக்காருன்னா இதுதான் காரணம் போலிருக்கு..!


கூடவே தன் பேச்சில் நெகிழவும் வைத்தார் அமிதாப். அடுத்தடுத்த வருடங்களிலும் தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால், பேப்பர் பொறுக்கிப் போடுறது.. மேடைல சேர் எடுத்துப் போடுறதுன்னு நிறைய சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன்னு சொன்னப்போ சுஹாசினி மட்டுமே எழுந்து நின்று கை தட்டினார்..! வந்திட்டு சும்மா போனா நல்லாயிருக்காதுன்னு நினைச்சாரோ என்னவோ 11 லட்சம் ரூபாயை தானமாவும் கொடுத்திட்டுப் போனாரு அமிதாப்ஜி.. வாழ்க அமிதாப்ஜி.. இந்தக் காசை வைச்சு தாஜ் கோரமெண்ட்டல்ல அன்னிக்கு நைட்டே தண்ணி ஆறா ஓடுனதா கேள்விப்பட்டேன்..! சரி.. பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்.. நமக்கென்ன..? அடுத்த வருஷமாச்சும் இந்த 11 லட்சத்துல உட்லண்ட்ஸ் பாத்ரூமை கிளீன் பண்ணி வைச்சுத் தொலைஞ்சா நல்லாயிருக்கும்..!

அது மட்டுமில்லே.. இந்த நிகழ்ச்சிக்கு அமிதாப் தனது தனி பாதுகாப்பு படையோடதான் வந்தார். அந்த லிஸ்ட்ல இருந்த 11 பேருக்கான விமான டிக்கெட்டுகள்.. அவர்களுடன் தானும் சேர்ந்து தங்கியிருந்த தாஜ் கோரமண்டல் ஹோட்டல் பில்.. அனைத்தையும் அமிதாப்ஜி தானே ஏற்றுக் கொண்டாராம்..! விழா குழுவினரிடம் எதற்கும் பைசா காசு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டுத்தான் வந்தாராம்.. இவர் மானஸ்தன்யா..!!! சமீபத்துல அரசு கல்லூரிகள்ல பேசுறதுக்காக தமிழ் நட்சத்திர தம்பதிகளை மாணவர்கள் டீம் சந்தித்தது..! 3 லட்சம் கொடுத்தா வர்றோம்.. இல்லாட்டி நடையைக் கட்டுங்கன்னு பதில் வந்துச்சாம்..! நமக்குக் கொடுப்பினை அவ்ளோதான்..!

அன்னிக்குக் கடைசி படமும் பார்க்க முடியலை.. அவசரமா வீட்டுக்குக் கிளம்பினா வழக்கம்போல நம்ம அப்பன், கோவணான்டி அவன் வேலையைக் காட்டிட்டான்.. வண்டி மக்கர்.. ஸ்டார்ட்டிங் டிரபுள்.. உட்லண்ட்ஸ் பக்கத்து தெருவுல இருந்த கடைல காட்டி நாஸிலை கழட்டி சுத்தம் பண்ணி போட்டுட்டு கிளம்பினா மறுபடியும் நின்றுச்சு.. திரும்பவும் அதே கடைக்குத் தள்ளிட்டே வந்து பார்த்தா கடை மூடியாச்சு.. ராத்திரி 9 மணியாச்சு.. என்னடா இது சோதனைன்னு வழக்கம் போல புலம்பிக்கிட்டே ராயப்பேட்டைல இருந்து ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் வண்டியைத் தள்ளிக்கிட்டே போய் ஸ்டேஷன் வாசல்ல இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர்கிட்ட  மெக்கானிக் கடை பத்தி விசாரிச்சு, அடுத்த 2 வது தெருல கொண்டு போய் கொடுத்து அந்த சாமிகிட்ட கால்ல விழுகாத குறையாத கெஞ்சி கூத்தாடி, நாஸிலை மாத்தின பின்னாடிதான் வண்டி ஸ்டார்ட் ஆச்சு..!

ச்சை.. போதும்டா சாமி..! ச்சும்மா கையை வீசிக்கிட்டு நடக்கிறதே கஷ்டம்.. இதுல வண்டியை வேற தள்ளிக்கிட்டே போகணும்ன்னா..! மவனே.. அந்த கோவணான்டி மட்டும் என் கைல சிக்கினான்.. கைமாதான்.. சொல்லி வைச்சிருங்க..! 

14 comments:

சக்கர கட்டி said...

தல சூப்பர் தல ஆனா நீங்க தான் கொடுத்து வச்சவங்க கில்மா படத்த லாம் பார்த்துரிங்க ஆனா நாங்க பாவம் அந்த மாறி தியேட்டர் பக்கம் நின்னாலே ஒரு மாறி பாக்குறாங்க நெட் ல பாக்கலாம்னு பார்த்த லிங்க் கிடைக்க மாட்டேன்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வவ்வால் said...

அண்ணாச்சி,

முரண்பாடுகளின் மொத்த மூட்டையா இருக்கு, மேலும் ,நீங்க காம்ப்ளான் குடிக்கனும், சராசரி புரிதலுக்கும் கீழாக இருக்கு உங்க புரிதல் :-))

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

தல சூப்பர் தல ஆனா நீங்கதான் கொடுத்து வச்சவங்க.. கில்மா படத்தலாம் பார்த்துரிங்க.. ஆனா நாங்க பாவம் அந்த மாறி தியேட்டர் பக்கம் நின்னாலே ஒரு மாறி பாக்குறாங்க.. நெட்ல பாக்கலாம்னு பார்த்த லிங்க் கிடைக்க மாட்டேன்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..]]]

கூகிள் சர்ச் பண்ணிப் பாருங்க. தெரியும்.. படத்தோட பெயரைப் போட்டு டோரண்ட் லின்க் கேளுங்க.. தானா காட்டும்..!

உண்மைத்தமிழன் said...

உண்மைத்தமிழன் said...
[[[வவ்வால் said...

அண்ணாச்சி, முரண்பாடுகளின் மொத்த மூட்டையா இருக்கு.. மேலும், நீங்க காம்ப்ளான் குடிக்கனும். சராசரி புரிதலுக்கும் கீழாக இருக்கு உங்க புரிதல். :-))]]]

அப்படியா..? எந்தெந்த விஷயத்துலன்னு சொன்னீங்கன்னா பேசித் தீர்த்துக்கலாம்..!

வால்மார்ட் பாண்டியன் said...

எல்லாம் சரி இந்த சர்வதேச திரைப்பட விழா எதுக்கு நடக்குன்னு சொல்லவே இல்லை

ராஜ நடராஜன் said...

//அண்ணாச்சி, முரண்பாடுகளின் மொத்த மூட்டையா இருக்கு.. மேலும், நீங்க காம்ப்ளான் குடிக்கனும். சராசரி புரிதலுக்கும் கீழாக இருக்கு உங்க புரிதல். :-))]]]

அப்படியா..? எந்தெந்த விஷயத்துலன்னு சொன்னீங்கன்னா பேசித் தீர்த்துக்கலாம்..!//

1.வவ்வாலுக்கு சீன் பக்கோடா சாப்பிட முடியலையாம்.

2.சொன்னதுல புள்ளிவிபரம் இல்லையாம்.

3.அசின் படமில்லாத ஒரு திரைப்பட விழாவாம்.

4.கோவணான்டியை அவரும் தேடிகிட்டிருக்காராம்.

படத்துக்கு போனாமா வந்து மல்லாந்து படுத்தோமான்னு இல்லாம இப்படி வக்கனையா விபரமெல்லாம் சொன்னா யாருக்குத்தான் பூஸ்ட் குடிக்கனும்ன்னு சொல்லத் தோணாது:)

k.rahman said...

விளக்கு ஏத்துச்சே ஒரு பாப்பா யாரது?

உண்மைத்தமிழன் said...

[[[வால்மார்ட் பாண்டியன் said...

எல்லாம் சரி இந்த சர்வதேச திரைப்பட விழா எதுக்கு நடக்குன்னு சொல்லவே இல்லை..?]]]

உலக சினிமா பற்றி சென்னைவாழ் சினிமா ரசிகர்கள் தெரிந்து கொள்ள...!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

1.வவ்வாலுக்கு சீன் பக்கோடா சாப்பிட முடியலையாம்.

2.சொன்னதுல புள்ளிவிபரம் இல்லையாம்.

3.அசின் படமில்லாத ஒரு திரைப்பட விழாவாம்.

4.கோவணான்டியை அவரும் தேடிகிட்டிருக்காராம்.

படத்துக்கு போனாமா வந்து மல்லாந்து படுத்தோமான்னு இல்லாம இப்படி வக்கனையா விபரமெல்லாம் சொன்னா யாருக்குத்தான் பூஸ்ட் குடிக்கனும்ன்னு சொல்லத் தோணாது:)]]]

அப்படியா..? வவ்வால்ஜிக்கு இதுக்கெல்லாம் கோபம் வராதே..? சந்தேகமும் வராதே..? ஒருவேளை அமிதாப் மேல ஏதாவது கோபமோ என்னவோ..?

உண்மைத்தமிழன் said...

[[[k.rahman said...

விளக்கு ஏத்துச்சே ஒரு பாப்பா யாரது?]]]

வரலட்சுமி.. சரத்குமாரோட பொண்ணு..!

Blogging said...

நிகழ்ச்சியினை முழுமையாக கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்..

.....
சூப்பர் ப்ளாக்

நன்றி.

www.padugai.com

YESRAMESH said...

சிறப்பான தொகுப்பு. நன்றி வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Blogging said...

நிகழ்ச்சியினை முழுமையாக கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்..

.....
சூப்பர் ப்ளாக்

நன்றி.

www.padugai.com]]]

தங்களி்ன் முதல் வருகைக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[YESRAMESH said...

சிறப்பான தொகுப்பு. நன்றி வாழ்த்துக்கள்.]]]

வருகைக்கு மிக்க நன்றி நண்பரே..!