சட்டம் ஒரு இருட்டறை-சினிமா விமர்சனம்22-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பழைய திரைப்படங்களை ரீமேக் செய்வதை நிறுத்திக் கொள்ளும்படி கனம் தமிழ்த் திரைப்படத் துறையினரை நோக்கி ரசிகர்கள் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக் கொள்ள இப்படம் பெரிதும் உதவியிருக்கிறது என்றே நினைக்கிறேன்..!

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் நாள் வெளியான ஒரிஜினல் சட்டம் ஒரு இருட்டறை அப்போதைக்கு சூப்பர் டூப்பர் ஹிட்.. அது அந்தக் காலத்தில் மக்களின் ரசனைக்கு நிறையவே தீனி போட்டிருந்தது..! கூடவே பரமசிவனின் நெற்றிக்கண்ணைத் திறந்தாற்போல் காட்சிக்கு காட்சி தனது சிவப்பு விழிகளை உருட்டி, உருட்டி ரசிகர்களை பெருமளவுக்கு கவர்ந்திருந்த கேப்டனும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்..! 

எஸ்.ஏ.சி. தனது பேத்திக்கு ஒரு நல்ல துவக்கத்தைக் கொடுக்க நினைத்தது தவறில்லை. ஆனால் அதற்காக இப்படத்தையே தூக்கிக் கொடுத்து பழைய படத்தை நினைத்து பெருமூச்சுவிட வைத்ததுதான் தவறு..! புதுமுக நடிகரோ, பேர் இல்லாத நடிகைகளோ நடிக்கிறார்கள் என்றால் அதில் கதை அல்லது இயக்கம் இரண்டில் ஏதாவது ஒன்றாவது உருப்படியாய் இருந்தால்தான் மக்களிடம் அது பேசப்படும். இரண்டுமே அசத்தல் என்றால் வழக்கு எண் படம் போல சூப்பர்தான்..! இது இரண்டுமே இல்லாமல் வெறுமனே பழைய பெருமையை நினைத்து வேட்டியில் மஞ்சள் தடவிய கதையாகத்தான் இந்தப் படம் முடிந்திருக்கிறது..!

தமிழில் விஜயகாந்த்.. மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் சங்கர்நாக், ஹிந்தியில் அமிதாப்-ரஜினிகாந்த் என்று ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்த இந்தப் படத்தின் கதி என்ன என்பது அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்..!தனது காதலியை கொன்றவர்கள் சட்டத்தின் ஓட்டைகளால் தப்பித்துவிட்ட கோபத்தில் ஹீரோ தானே அவதாரமெடுத்து அவர்களை அழிக்கிறார். ஹீரோவின் அக்கா போலீஸ் துணை கமிஷனராக இருந்தும், தனது தம்பிதான் இந்தக் கொலைகளை செய்திருக்கிறார் என்று தெரிந்தும் ஆதாரங்கள் இல்லாததால் தம்பியை கைது செய்ய முடியாமல் தவிக்கிறார். 2 கொலைகளைச் செய்துவிட்டு, அதை ஒப்புக் கொண்டுவிட்டு.. பின்பு கடைசி ஆளையும் தான் கொலை செய்வேன் என்று அக்காவிடம் சபதமிடுகிறார் ஹீரோவான தம்பி. அக்காவும் அந்த சவாலை ஏற்றுக் கொள்ள.. என்னாச்சு என்பதை பழைய சட்டம் ஒரு இருட்டறை படத்தைப் பார்த்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..!

விஜயகாந்த் வேடத்தில் புதுமுகம் தமன். பழைய படத்தைப் பார்க்காதவர்களுக்கு புதுமுக ஹீரோவாகத் தெரியும். இவர் ஏற்கெனவே ஆச்சரியங்கள் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் 4, 5 படங்களில் நடித்த  பின்பு இவரது நடிப்பு பற்றி நாம் பேசுவோம்..! ஹாங்காங்கில் பியாவுடனான காதல் காட்சிகளில் மட்டும் திரைக்கதையினால் கொஞ்சம் சுவாரசியப்படுத்துகிறார். அவ்வளவே..!
ஹீரோயின்கள் பியா அண்ட் பிந்து மாதவி.. இருவருக்குமே ஸ்பெஷலாட்டி கண்கள்தான்.  முடிந்தவரையிலும் அதனையே எக்ஸ்போஸ் செய்து பாடல் காட்சிகளையும், காதல் காட்சிகளையும் நகர்த்தியிருக்கிறார்கள். பியாவுக்கு இருந்த நடிப்பு ஸ்கோப்கூட பிந்துவுக்கு இல்லாததால், கொஞ்ச நேரமே வந்தாலும் பியாவே மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறார்..!

இறுதிக் காட்சியில் தலை காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் எஸ்.ஏ.சி. இதிலும் அப்படியே..! ஹீரோவுக்கு உதவும் ஜெயிலராக வந்து சட்டத்தை கிழி கிழியென்று கிழித்து எறிகிறார். ஆனால் தியேட்டரில் கைதட்டல் கிடைக்குமா என்றுதான் தெரியவில்லை. சட்டத்திற்கும் சாமான்யனுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளிதான் இந்தப் படத்தின் கரு. அதனை மையப்படுத்தி வசனத்தை வைக்காமல், சென்சார் போர்டை கூல் செய்ய வேண்டி வசனத்திலும் சமரசம் செய்திருக்க முயன்றிருப்பதால் அதுவும் மனதில் நிற்கவில்லை..!

துணை கமிஷனர் கெளசல்யாவாக ரீமாசென். காக்கி சட்டையை போட்டாலே வந்துவிடும் ஒரு மிடுக்கும், தோரணையும் இங்கே மிஸ்ஸிங்.. பாடல் காட்சிகளில் அணிவதுபோலவே காக்கி பேண்ட்கூட சற்று இறக்கமாகத்தான் இருந்தது..! விஜயசாந்தி, ராதிகாவைத் தவிர வேறு யாருக்கும் போலீஸ் பாடி லாங்குவேஜ் வரவே வராது..!  படத்துக்குப் படம் வித்தியாசமாக எதையாவது செய்து தனித்திறமையை காட்டினால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும்.. அம்மணி இப்போது “உண்டாகி”யிருப்பதால் இதுதான் இப்போதைக்கு கடைசி படமென்றும் சொல்லலாம்.. ஆகவே ஓகே மேடம் என்று விட்டுவிடுவோம்..!

1981-ல் இருந்த ரசிகர்களின் மனநிலையும், அறிவும் அன்று போலவே இப்போதும் இருக்கும் என்று நினைத்திருக்கும் எஸ்.ஏ.சி மற்றும் இயக்குநருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..! சுரேஷ் நடுரோட்டில் ஆக்ஸிடெண்ட்டில் இறக்கும்போது, ஓடி வரும் இன்ஸ்பெக்டர் முன்பு ஜெயிலராகவும் இருந்தவராம்..! இது எந்த நாட்டு சட்டம் என்று தெரியவில்லை.. சர்வசாதாரணமாக ஒரு துணை கமிஷனர் ஜெயிலுக்குள் நுழைந்து “செல்”வரைக்கும் போய் பார்த்து வருவதெல்லாம் முடிகிற காரியமா..? அத்தோடு அவர் ஜெயிலரா..? இன்ஸ்பெக்டரா..? எப்படி வந்தார் என்பதையெல்லாம் கொஞ்சமாவது யோசித்து வைத்திருக்க வேண்டாமா..? அதோடு 2 நாளுக்காக ஹீரோவை ஜெயிலில் வைக்கிறார் துணை கமிஷனர்.. இதையும் புதிய ஜெயிலர் ஏற்றுக் கொள்கிறார். பின்பு ஜெயிலரே போலீஸ் கமிஷனரிடம் விளக்கமளிக்க நேரில் வருகிறாராம்..!  ஒரு அமைப்பின் செயல்பாடுகளைச் சொல்லும்போது அதில் கொஞ்சமாவது உண்மைத்தன்மை வேண்டாமா..? லாஜிக் பார்க்காமல் செல்வதற்கு இதுவொன்றும் நகைச்சுவை, கமர்ஷியல் படமில்லையே..? இறுதியில் பழைய ஜெயிலரையே செல்போன் மூலமா கமிஷனர் முன்பாக அவரது அறையிலேயே கொலை செய்கிறார் ஹீரோ.. நம்பத்தான் முடியலை..!  

ஒளிப்பதிவாளர் தனது பணியைக் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடல் காட்சிகளிலும், ஹாங்காங் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அழகுடன் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இது ஒன்று மட்டும் போதாதே.. படத்தின் வெற்றிக்கு..! அது போலவே இசையும்.. விஜய் ஆண்ட்டனியின் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படி உள்ளது. 'கும்கி'யில் உள்ளது போலவே இதிலிருக்கும் 'சொய் சொய்' பாடல் முணுமுணுக்கவும் வைக்கிறது..!

இந்திய அளவில் பார்த்தால் இந்தப் படத்தின் பெண் இயக்குநரான சினேகா பிரிட்டோதான் 34-வது இயக்குநர்.  புதுமுக இயக்குநர் என்பதால் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் வராமைக்கு அவரை மட்டுமே குற்றம் சொல்ல முடியவில்லை. இயன்றவரைக்கும் எடுத்திருக்கிறார். தமன்-பியா காதல் காட்சிகள்.. “நத்திங்” என்று இருவரும் ஒருவரையொருவர் காலை வாரும் காட்சிகள் மட்டுமே ரசிக்க வைக்கிறது.. தமனின் நண்பர்கள் கமிஷனர் அறையில் பேசும் பேச்சுக்களெல்லாம் ஓவர்.. இனி அடுத்தடுத்த வாய்ப்புகளில் இவரது இயக்கத் திறமை நம்மைக் கவர்வது போல இருக்கட்டும்..!

விஜயகாந்தின் அந்த அனல் தெறித்த நடிப்பும், வெறியூட்டிய சண்டைக் காட்சிகளும், மனதைக் குடைந்த அரசியல் வசனங்களும் இல்லாமல்.. ஏதோ காதலுக்காக நடந்த ஒரு சின்ன சண்டையை போல இந்தப் படம் முடிவடைந்திருப்பதுதான் ஏமாற்றத்திற்குக் காரணம்..! இப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் ‘கும்கி’ படத்திற்குக் கூடுதலாக தியேட்டர்களும், ரசிகர்களும், வசூலும் கிடைக்கப் போகிறது.. கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான்..! 

8 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பழைய படம் இன்னும் பார்க்கலை. சட்டம் ஒரு விளையாட்டிலும் இதே கதைதான இதில் அக்கா அதில் அப்பா கிட்ட சவால் விட்டு கொலை செய்வார்

சிவானந்தம் said...

உண்மை தமிழன்,

//இது எந்த நாட்டு சட்டம் என்று தெரியவில்லை//

உங்களுக்கே இப்படின்னா, ஜெயில பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்?

சினிமாவை விட டிவி சீரியல் இந்த விஷயத்துல ரொம்ப மோசம். கோர்ட், ஜெயில் சீன் அநியாயத்துக்கு காமெடியா இருக்கும். இந்த மக்கள் எதை சொன்னாலும் நம்புவாங்க அப்படிங்கிற நம்பிக்கை இவங்களுக்கு வந்துட்டுது.

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பழைய படம் இன்னும் பார்க்கலை. சட்டம் ஒரு விளையாட்டிலும் இதே கதைதான். இதில் அக்கா அதில் அப்பாகிட்ட சவால் விட்டு கொலை செய்வார்.]]]

இந்தக் கதை பல ரூபத்தில் பல டைட்டில்களில் வெளியாகிவிட்டது ரமேஷ்..! எடுத்ததையாச்சும் ஒழுங்கா எடுத்திருக்கக் கூடாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[சிவானந்தம் said...

உண்மை தமிழன்,

//இது எந்த நாட்டு சட்டம் என்று தெரியவில்லை//

உங்களுக்கே இப்படின்னா, ஜெயில பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்?
சினிமாவைவிட டிவி சீரியல் இந்த விஷயத்துல ரொம்ப மோசம். கோர்ட், ஜெயில் சீன் அநியாயத்துக்கு காமெடியா இருக்கும். இந்த மக்கள் எதை சொன்னாலும் நம்புவாங்க அப்படிங்கிற நம்பிக்கை இவங்களுக்கு வந்துட்டுது.]]]

அதிகமானோர் ஜெயிலை தரிசித்தது இல்லை என்பதும் ஒரு காரணம்..!

Santhose said...

நீதானே என் பொன் வசந்தம்’ உங்களுக்கு பிடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட சில தகுதிகளில் ஏதேனும் ஒன்றேனும் இருக்க வேண்டும்.

• நீங்கள் ஆணாக இருக்க வேண்டும். அல்லது பெண்ணாக இருக்க வேண்டும்.

• உங்களுக்கு பார்ப்பதிலோ, கேட்பதிலோ பிரச்சினை இருக்கக்கூடாது.

• குறைந்தபட்சம் ஒரே ஒரு முறையாவது ஒருதலையாகவாவது காதலித்திருக்க வேண்டும்.
FYI - Your are not in this list !!!!
• காதலி/காதலன் திருமண ரிசப்ஷனுக்கு தெரியாத்தனமாகப் போய், மனம் நொந்து விடிய விடிய சரக்கடித்து மட்டையாகி இருக்க வேண்டும்.

இதெல்லாம் இல்லாமலேயே கூட பிடிக்கலாம். காதலைப் பிடிக்குமென்றால்...


HaHa ...............

உண்மைத்தமிழன் said...

சந்தோஷ் ஸார்..!

நீதானே என் பொன்வசந்தம் படத்துக்கும் தனியா விமர்சனம் எழுதியிருக்கனே..? அங்க வந்து இதைப் போடக் கூடாதா..?

Blogging said...

விமர்சனம் நல்லாயிருக்கு...


நன்றி

www.padugai.com

Thanks

உண்மைத்தமிழன் said...

[[[Blogging said...

விமர்சனம் நல்லாயிருக்கு...

நன்றி

www.padugai.com]]]]

மிக்க நன்றிகள் நண்பரே..!