நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

11-12-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் ஒரு படம் ஜெயித்துவிட்டால், அதே இயக்குநரின் அடுத்த படமும் மிக ஆரவாரமாக எதிர்பார்க்கப்படும்..! அந்த வரிசையில் தென்மேற்குப் பருவக்காற்றின் வீச்சால் நீர்ப்பறவையும் உயரே பறக்குமா என்று அதன் இயக்குநரைவிடவம் பார்வையாளர்களே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்..! 

மீனவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படம் என்று பலர் கொண்டாடி, சிலர் விதந்தோதி வரும்வேளையில் எனக்கு மட்டும் ஒரு குடிகார இளைஞனின் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்பட்டு திசை திரும்பும்போது காலத்தின் பரிசு எப்படி, என்னவாக கிடைக்கிறது என்பதையே உணர்த்துவதாகத் தோன்றுகிறது..!25 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன தனது தந்தையின் எலும்புக்கூட்டை தனது வீட்டிலேயே கண்டெடுக்கும் மகனே தன் தாயின் மீது புகார் கொடுக்கிறான். போலீஸ் விசாரணையில் தாய் தனது கதையை விவரித்தலில்.. கதாநாயகனின் கொண்டாட்ட வாழ்க்கையும், அவள் அவனுக்கு எப்படி வாழ்க்கைப்பட்டாள் என்பதும்,  இறுதியில் அவன் இறந்தது எப்படி என்பதும்தான் கதை..! 

1960-களின் இறுதியில் கதை துவங்கி தற்காலத்தில் முடிவடைகிறது.. படகில் வரும்போது சுட்டுக் கொல்லப்படும் தாய், தந்தையருடன் உயிருடன் பிழைக்கும் நாயகன், லூர்துசாமியால் கண்டெடுக்கப்படுகிறான். பின்பு அவனது வளர்ப்பு மகனாகி அருளப்பசாமியாகிறான்.. கடலன்னை தாலாட்டி வளர்ந்தவன், பிற்காலத்தில் சாராயத்தால் சீராட்டி வளர்க்கப்படுகிறான்..! என்ன படித்தான்..? எதற்காக குடிக்க ஆரம்பித்தான்..? ஏன் இந்த புதைகுழியில் விழுந்தான் என்றெல்லாம் சொல்லப்படாமல் கதை துவக்கத்திலேயே ஒரு குடிகாரனின் கதையாகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது..!

விஷ்ணு நிரம்பவே உழைத்திருக்கிறார் என்றாலும், குடிகாரன் மற்றும் மீனவன் கல்ச்சரிலேயே மீண்டும் மீண்டும் புரண்டிருப்பதால் அவரது நடிப்புக்காக இன்னும் 2 படங்கள்வரையிலும் காத்திருக்க வேண்டும் போல தோன்றுகிறது..! அதென்னமோ தெரியவில்லை.. குடிகாரன் வேடத்தில் அத்தனை நடிகர்களுமே அசத்தலாகத்தான் நடிக்கிறார்கள். தெளிவாக இருக்கும்போதுதான் அனைவரின் அளவுகோலும் தெரிகிறது..!

சர்ச்சில் கன்னியாஸ்திரியாக இருப்பவரின் வளர்ப்பு மகளான எஸ்தர் என்னும் சுனைனாவை பார்த்துவிட்டு நாயகன் விஷ்ணுவுக்கு வழக்கமான தமிழ்ச் சினிமா பாணியில் காதல் பிறந்து கொஞ்சம் கதை காதலுக்குள் கரையும்போதுதான் லேசாக பிடிபடுகிறார் விஷ்ணு.
எஸ்தராக நடித்திருக்கும் சுனைனாவுக்கு இது மிக சிறப்பான படம்..! பிந்து மாதவி இருந்திருந்தால் அவர் கண்களை வைத்தே கவிதை வரைந்திருக்கலாம். சான்ஸ் போச்சு..!   முதல் முறையாக சுனைனாவின் நடிப்புக்கு கை தட்டல் கிடைத்திருக்கிறது என்றால் அது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன். “சைத்தானே விலகிச் செல்” என்று சர்ச் வாசலில் நின்று சுனைனா சொல்கின்ற அந்த ஷாட், சற்றும் எதிர்பாராதது.  அந்த இடத்தில் அந்த வசனம் பேசப்படும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. வெல்டன் டைரக்டர் ஸார்..! எனக்கு இந்தப் படத்திலேயே மிகவும் பிடித்த காட்சி இதுதான்..!

பின்பு அவளுக்காகவே தானும் மாறி எதிர்ப்புகளையும் மீறி கடலுக்குச் செல்லும் மீனவனாக உருமாறியவனுக்கு ஏன் அந்தச் சோகம் என்று இயக்குநர்தான் சொல்ல வேண்டும்..! இந்த இடத்தில்தான் இந்தப் படம் ஒரு அழகான சிறுகதையாக உருமாறியிருக்கிறது..! ஆனால் இதற்காக நந்திதா தாஸ் சொல்லும் காரணம் ஏற்க்க்கூடியதாக இல்லை.. “அவர் எங்கேயும் போக வேண்டாம்.. இங்கேயே இருக்கட்டும்..” என்பதெல்லாம் கிறித்துவத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்கள் செய்வதுதான் என்றாலும் புழக்கத்தில் அது பைத்தியக்காரத்தனமான செயல் என்று அவர்களாலேயே சொல்லப்படுகிறது..!

கோவையில், ஈரோட்டில் கடந்த ஆண்டுகளில் தங்களது கணவர்களின் உடலை தனது வீட்டிலேயே வைத்திருந்து மீண்டும் அவர் இந்த வீட்டிலேயே நிச்சயம் உயிர்த்தெழுவார் என்று பிரார்த்தனை செய்த கிறித்துவ பெண்கள் பற்றிய செய்திகளைப் படித்திருக்கிறேன். அப்படி அதை வெளிப்படையாக சொல்லியிருந்தால் அது கிறித்துவ மதத்தின் மீதான விமர்சனமாகிவிடும் என்பதால் இயக்குநர் நயமாக இதனைத் தவிர்த்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்..!

வழக்கம்போல சரண்யா நடிப்பைக் கொட்டியிருக்கிறார். மகனுக்கு கொஞ்சமா குடிடா என்று சொல்லி பணத்தைக் கொடுப்பதில் துவங்கி.. கிளினிக்கிற்கு கொண்டு வந்து சேர்ப்பித்துவிட்டு அங்கிருக்கும் ஊழியர்களிடம் தனியாக பணத்தைக் கொடுத்து சாராயம் வாங்கித் தரச் சொல்லும்வரையிலும் வழக்கமான அம்மாக்களின் பிரதிநிதியாக தன்னை மீண்டும் ஒரு முறை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார். இவருக்கு போட்டி இதே படத்தில் வடிவுக்கரசி.. ஊரையே அழைத்து சாராயத்தைப் புகட்டிக் கெடுத்துக் கொண்டிருப்பவர், தனது சொந்த மகனை அந்த இடத்தில் பார்த்தவுடன் பதட்டத்துடன் “இங்கேயெல்லாம் வரக் கூடாதுப்பா..” என்று சொல்லி விரட்டுவது ஒரு அழகான முரண்பாடு.. கடைசியில் வடிவுக்கரசி தொழிலை கைவிடுவது, சினிமா பாணி டிராமாதான் என்றாலும் அதுவும் நல்லதே..!

லூர்துசாமியாக நடித்திருப்பவர் ஒரு சிறந்த தேர்வு. முக ஜாடையும், உடல்வாகும்  உடல் உழைப்பிற்கு அஞ்சாத அந்த கருப்புத் தோல் கொண்டவருக்கு ஏசப்பன் கொடுத்த பரிசான குழந்தை இல்லாத குறையினால் இந்த நாயகனை வளர்ப்பாக எடுக்க வைத்திருப்பதை சொல்லிக் காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது..! போற இடமெல்லாம் காசு கேட்டு மானத்தை வாங்குறானே என்று விஷ்ணுவை வெளுப்பதும்.. அவ்வப்போது அவரை கண்டிப்பதும்.. விஷ்ணு கிளினிக்கில் இருந்து வீடு திரும்பியவுடன் ஒரு பெரிய திருக்கை மீனுடன் டாக்டரை சந்திக்கச் சென்று கும்பிடுவதுமான காட்சிகளில் ஒரு தகப்பனை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.

நந்திதா தாஸை இவ்வளவு சோகத்துடன் காட்டியிருக்க வேண்டாம். இந்தக் கேரக்டருக்கு இவரெதற்கு என்று கோபம்கூட வருகிறது..! போலீஸ் விசாரணையை அவ்வப்போது காண்பித்துவிட்டு மின்னல் வேகத்தில் கோர்ட் விசாரணையையும் முடித்துவிட்டு தீர்ப்பையும் பெண் இன்ஸ்பெக்டரே வந்து சொல்வது எந்தவிதத்திலும் ஈர்ப்பையும், பரிதாப உணர்வையும் ஏற்படுத்தாதது இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ்..!

சமுத்திரக்கனியின் முஸ்லீம் கதாபாத்திரம் படத்தின் மையமான கருத்தை சுமந்து கொண்டிருக்கிறது..! குடிக்க காசு கேட்டு வந்தவனிடம் முன்பு கொடுத்து பழக்கப்படவனைப் போல போயிரு என்று சொல்லி மிரட்டுவது.. லூர்துசாமியின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் இருப்பது.. “உடனே தெருவுக்கு வந்திருவீங்களே..?” என்ற மதம் சார்ந்த குற்றச்சாட்டை “நாங்க எங்க உரிமைக்காக போராடினா அது தீவிரவாதமா..?” என்று பதில் சொல்லி வாயடைப்பதும் ஒரு அரசியல்தான்..! லூர்துசாமியின் சரண்டரை மிக எளிதாக எடுத்துக் கொண்டு படகு செய்து தருவதாகச் சொல்வது.. அட்வான்ஸாக சில ஆயிரமாவது வேண்டும் என்று பிஸினஸ் மைண்ட்டை விடாமல் பேசுவது உண்மையான யதார்த்த நிலைமை..! புதிய படகின் வெள்ளோட்டத்தின் பூஜையை மும்மத கலப்போடு கனியே செய்வது  போன்று காட்சியமைத்து நாம் எந்த மார்க்கத்தில் சென்றாலும், அந்த மார்க்கத்தின் துணை உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு இதற்காக ஒரு ஷொட்டு..!

அல்லக்கை அட்டாக் பாண்டி, தம்பி இராமையா இருவரும் படத்தை தொய்வு விழாமல் கொண்டு செல்ல சில இடங்களில் உதவியிருக்கிறார்கள். பாதரிடம் விஷ்ணு தண்ணியடித்துவிட்டு வந்து பேசும் காட்சிகளில் உடன் இருந்து அல்லல்படும் தம்பி இராமையாவின் நடிப்பு கவர்கிறது.

வசனத்தை ஜெயமோகனும், இயக்குநர் சீனுராமசாமியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஜெயமோகன் எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. மனிதர் இப்போது நன்கு பிழைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். வெல்டன் அண்ணாச்சி.. கனி பேசும் மறைமுகமான இந்திய எதிர்ப்பு அரசியல் வசனங்கள்.. அக்காலத்திய கிறித்துவ கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், வசனங்கள்.. தம்பி இராமையா குடியின் மேன்மையைப் பற்றிச் சொல்லும் வசனங்கள்.. நந்திதா தாஸ் இறுதியில் கோர்ட் கூண்டில் நின்றபடி கேட்கும் கேள்வி.. என்று பல இடங்களிலும் ஷார்ப்பான குறியீடுகளாகவே தென்படுகின்றன வசனங்கள்..!

படத்தில் இயக்குநருக்கு அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது பாலசுப்ரமணியெத்தான் ஒளிப்பதிவை.. முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் அந்தக் கடற்பிரதேசம் முழுவதையும் தனது பிரேமுக்குள் கொண்டு வந்திருக்கிறார். விஷ்ணுவை கடலுக்குள் அனுமதிக்கலாமா வேண்டாமா என்று தீர்ப்பு சொல்லும் காட்சியில் கேமிராவின் கோணமும், அழகும் அற்புதம்..! பாடல் காட்சிகளிலும் அதிகப்படியான லைட்டுகளை பயன்படுத்தாமல் இயற்கை ஒளியிலேயே மிக குறைவான செயற்கை ஏற்பாடுகளுடன் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.. படத்தின் பிற்பாதியில் மிகப் பெரிய பலமே ஒளிப்பதிவுதான்..! வாழ்த்துகள் பாலா ஸார்..!

“பர பர” பாடல் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டது.. கிறித்துவ வார்த்தைகளை கோர்த்து வைரமுத்து போட்டிருக்கும் அந்த சந்தந்தங்களை சத்தங்களுக்குள் அனுமதிக்காமல் கொஞ்சமாக இழையவிட்டிருக்கும் ரகுநந்தனுக்கு ஒரு தேங்க்ஸ்..! பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் அடடே என்று சொல்லவும் வைத்திருக்கிறார்..! 

மீனவனாக இல்லாதவனை கடலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்ற மீனவ கலாச்சாரத்தை இந்தப் படம் அழுத்தமாக பதிவு செய்திருப்பது தமிழகத்துக்கே புதிய செய்தி. குப்பம், குப்பமாக ஒரு ஊர் போன்று கூட்டத்தை வைத்திருந்து அதன் மூலமே மீனவ சமுதாயம் வளர்ந்துவரும் நிலையில் அவர்களின் இந்த வாழ்க்கை முறை நிச்சயமாக பலருக்கும் அதிர்ச்சிதான்..! கடலுக்குள் செல்பவனின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று சொல்லப்பட்டிருக்கும் சூழலில், விஷ்ணுவை கடலுக்குள் இறங்க எதிர்ப்புத் தெரிவிக்கும் மீனவர்களையும் காட்டியிருப்பதில் படம் பக்கா சினிமாவாகிவிட்டது..! 

இந்த இடத்தில் இந்தப் படத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் தெரியப்படுத்தப்பட்டிருக்கும் அரசியலைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். அரசியல்வியாதிகளின் பெயர்களைக்கூட ஒரு கேரக்டர் பெயராக வைக்க முடியாத அளவுக்கு இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கும்போது இந்தப் படத்தின் பின்புலமாக இருக்கும் அரசியலை வெளிப்படையாக இதில் வசனமாக வைத்திருந்தால் இந்தப் படம் நிச்சயமாக வெளி வந்திருக்காது..!

ஈழப் பிரச்சினை, சிங்கள கடற்படையின் துப்பாக்கிச் சூடு, மீனவர்களின் மரணங்கள் என்று இந்த மூன்றையுமே நேரிடையாக குறிப்பிட முடியாமல் மறைமுகமாக சொல்ல வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியிருக்கும் இந்த நாட்டின் கேடுகெட்ட அரசியலமைப்பையும், போலி ஜனநாயகத்தையும் நாம்தான் குற்றம் சொல்ல வேண்டும்..!

மீனவர்களுக்கென்றே சில தொகுதிகளும், எம்பிக்களும், எம்எல்ஏக்களும் இருந்திருந்தால் இந்தக் கொடுமையெல்லாம் நடக்குமா என்று படகுக் கடை பாய் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி நியாயமானதே..! தமிழகத்தைத் தவிர இந்தியாவின் எந்தப் பகுதி மீனவர்களும் வேறு நாட்டு ராணுவத்தால் கொல்லப்படுவதில்லை. பாகிஸ்தான்கூட கைது செய்து சிறையில்தான் அடைக்கிறது..! இலங்கை ராணுவத்தின் இந்தப் படுகொலைகள் ஆயிரத்தைத் தாண்டியும் இந்த அரசுகளுக்கு சூடும், சொரணையும் இல்லாத நிலையில் இருப்பதுதான் கேவலமானது..!

இது போன்ற உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு உண்மையான ஊடகமாக சினிமா துறை இருக்க முடியவில்லை என்பதும் நமது துயரம்தான்...!  சிங்களம், இந்திய அரசு, தமிழக அரசு, கருணாநிதி, ஜெயலலிதா, பிரபாகரன், ஈழம், விடுதலைப்புலிகள், கடத்தல் என்று எந்த இடத்திலும் பெயர்களை உச்சரிக்க முடியாத அளவுக்கு இருக்கும் இந்த சென்சார் அமைப்பை நினைத்து நாம் வெட்கப்பட்டுத்தான் ஆக வேண்டும்..!

மத தீவிரவாதத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ஈரானில்கூட  மசூதி தொழுகைகளையே கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள். ஈரான், ஈராக் போர் பற்றியும் அப்போதைய ஆட்சியாளர்களின் பெயர்களைக்கூட வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்கு ஈரானில் அரசியல் சென்சார்ஷிப் சுதந்திரம் சிறிதளவாவது இருக்கிறது.. இங்கே..? 

திறனாய்வு மனப்பான்மையோடு ஒரு பகுதி மீனவர்களின் வாழ்க்கையை சினிமாத்தனத்தோடு சமரசம் செய்து கொண்டும், அதே சமயம் யாருக்கும் பாதிப்பில்லாமலும் இயன்றவரை தொகுத்தளித்திருக்கும் இயக்குநர் சீனு ராமசாமிக்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..!

9 comments:

ஸ்கூல் பையன் said...

விஷ்ணுவின் அப்பாவாக வருபவரின் பெயர் அந்தோணிசாமி இல்லை... லூர்துசாமி...

குரங்குபெடல் said...

"


தயவு செஞ்சு இனி நீ படம் பாக்க வேணாம் அண்ணே

அப்டியே பாத்்தாலும் விமர்சனம் வேண்டாம்னே . . .


இதெல்லாம் ஒரு படமா அண்ணே . .

கலைஞருக்கும் மீனவன் மேல அக்கறை இருக்குன்னு ஏமாத்துறதுக்ககாக


எடுக்கபட்ட கபட நாடகமே இந்த குடிகார பறவை

குரங்குபெடல் said...

"எப்போதும் முதல் படத்தில் ஜெயிக்கும் இயக்குநரின் அடுத்த படம் மிக ஆரவாரமாக எதிர்பார்க்கப்படும்..! அந்த வரிசையில் தென்மேற்குப் பருவக்காற்றின் வீச்சால் நீர்ப்பறவையும் உயரே பறக்குமா என்று அதன் இயக்குநரைவிடவம் பார்வையாளர்களே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்..! "

இந்த இயக்குனரின் முதல் படம் கூடல் நகர் . .

தென்மேற்கு பருவகாற்று வணிக ரீதியில் ஒரு தோல்வி படம்

நிலை இப்படியிருக்க

எதிர் பார்த்தவர்கள் யார் அண்ணே . . ?

rajasundararajan said...

//விஷ்ணு கிளினிக்கில் இருந்து வீடு திரும்பியவுடன் ஒரு பெரிய திருக்கை மீனுடன் டாக்டரை சந்திக்கச் சென்று...//

திருக்கை மீனை முன்னெப் பின்னெ பார்த்ததில்லை போலிருக்கே நீங்கள்?

//வசனத்தை ஜெயமோகனும், இயக்குநர் சீனுராமசாமியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஜெயமோகன் எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. மனிதர் இப்போது நன்கு பிழைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.//

இதில் பிழைக்கக் கற்றுக் கொண்டிருக்கிற மனிதர் என்று சீனு ராமசாமியைத்தானே சொல்கிறீர்கள்? சீனுவுக்கு எதிர்காலம் இருப்பதாகத் தெரியவில்லை. எதற்கும் இன்னொரு படம் வருமேல் கணிக்கலாம். ஜெயமோகனுக்கு இன்னும் இருக்கிறது காலம்.

ஒரு மொண்ணை மொக்கைப் படத்தை இம்புட்டுத் தூக்கிப் பேச என்ன காரணம், உ.த.? வேண்டியவர் குப்பை கொட்டினால் கண்டுகொள்ளாமல் இருப்பதே நலம். இல்லையென்றால், 'திருக்கைமீன் இன்னதென்று தெரியாதது போல உ.த.வுக்கு சினிமாவும்' என்று பேராகிவிடும்.

nellai அண்ணாச்சி said...

பாகிஸ்தான்கூட கைது செய்து சிறையில்தான் அடைக்கிறது..! இலங்கை ராணுவத்தின் இந்தப் படுகொலைகள் ஆயிரத்தைத் தாண்டியும் இந்த அரசுகளுக்கு சூடும், சொரணையும் இல்லாத நிலையில் இருப்பதுதான் கேவலமானது..!
Read more: http://truetamilans.blogspot.com/2012/12/blog-post_11.html#ixzz2ErvdqXh1

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்கூல் பையன் said...

விஷ்ணுவின் அப்பாவாக வருபவரின் பெயர் அந்தோணிசாமி இல்லை. லூர்துசாமி.]]]

தவறுக்கு மன்னிக்கவும். திருத்திவிட்டேன்..! நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...
"
தயவு செஞ்சு இனி நீ படம் பாக்க வேணாம் அண்ணே.. அப்டியே பாத்்தாலும் விமர்சனம் வேண்டாம்னே. இதெல்லாம் ஒரு படமா அண்ணே. கலைஞருக்கும் மீனவன் மேல அக்கறை இருக்குன்னு ஏமாத்துறதுக்ககாக எடுக்கபட்ட கபட நாடகமே இந்த குடிகார பறவை.]]]

ஏன் இதை அரசியலாகப் பார்க்கிறீர்கள்..? சீனு ராமசாமி அரசியலுக்கு அப்பாற்பட்ட மனுஷன்.. விடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

"எப்போதும் முதல் படத்தில் ஜெயிக்கும் இயக்குநரின் அடுத்த படம் மிக ஆரவாரமாக எதிர்பார்க்கப்படும்..! அந்த வரிசையில் தென்மேற்குப் பருவக்காற்றின் வீச்சால் நீர்ப்பறவையும் உயரே பறக்குமா என்று அதன் இயக்குநரைவிடவம் பார்வையாளர்களே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்..! "

இந்த இயக்குனரின் முதல் படம் கூடல் நகர்.]]]

யெஸ்.. நானும் மறந்து தொலைச்சிட்டேன்..!

[[[தென்மேற்கு பருவகாற்று வணிக ரீதியில் ஒரு தோல்வி படம்.]]]

போட்ட காசுக்கு மேலேயே வந்திருச்சு..!

[[[நிலை இப்படியிருக்க
எதிர் பார்த்தவர்கள் யார் அண்ணே?]]]

நான்தான்..!

உண்மைத்தமிழன் said...

rajasundararajan said...

//விஷ்ணு கிளினிக்கில் இருந்து வீடு திரும்பியவுடன் ஒரு பெரிய திருக்கை மீனுடன் டாக்டரை சந்திக்கச் சென்று...//

திருக்கை மீனை முன்னெப் பின்னெ பார்த்ததில்லை போலிருக்கே நீங்கள்?]]]

அப்போ இது திருக்கை இல்லையா..? மெரீனா கடலில் கிடைத்த திருக்கைன்னு சொல்லி அதே மாதிரி போட்டோவை போட்டு தினத்தந்தில செய்தி வந்திருந்தது.. அதுதான்னு நினைச்சேன். என்ன மீனுன்னு நீங்களாவது சொல்லலாம்ல..?

[[[//வசனத்தை ஜெயமோகனும், இயக்குநர் சீனுராமசாமியும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இதற்கு ஜெயமோகன் எப்படி ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. மனிதர் இப்போது நன்கு பிழைக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.//

இதில் பிழைக்கக் கற்றுக் கொண்டிருக்கிற மனிதர் என்று சீனு ராமசாமியைத்தானே சொல்கிறீர்கள்? சீனுவுக்கு எதிர்காலம் இருப்பதாகத் தெரியவில்லை. எதற்கும் இன்னொரு படம் வருமேல் கணிக்கலாம். ஜெயமோகனுக்கு இன்னும் இருக்கிறது காலம்.]]]

இல்லை.. நான் ஜெயமோகனைத்தான் சொன்னேன்..! சில பேர் ஒரு திருத்தம்கூட செய்யக் கூடாது.. டைட்டில்ல என் பேர் மட்டும்தான் வரணும்ன்னுவாங்க. அதுனாலதான் சொன்னேன்..!

[[[ஒரு மொண்ணை மொக்கைப் படத்தை இம்புட்டுத் தூக்கிப் பேச என்ன காரணம், உ.த.? வேண்டியவர் குப்பை கொட்டினால் கண்டுகொள்ளாமல் இருப்பதே நலம். இல்லையென்றால், திருக்கை மீன் இன்னதென்று தெரியாதது போல உ.த.வுக்கு சினிமாவும்' என்று பேராகிவிடும்.]]]

இது மொக்கை படம்ன்னா வேறு எதைத்தான் நல்ல படம்ன்னு சொல்றது. போங்கண்ணே.. நல்லாத்தான் இருக்கு..!