நெல்லை சந்திப்பு - சினிமா விமர்சனம்

16-09-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தின் பெயரைப் போலவே கதையும் நெல்லை மண்ணில் நடப்பதுதான்..! தீவிரவாதி என நினைத்து ஒரு அப்பாவியைக் கொலை செய்யத் துணிகிறது காவல்துறை. உயிர் பிழைத்துக் கொண்ட அந்த அப்பாவியை மீண்டும் உண்மையாகவே கொலை செய்ய வெறியாய் அலைகிறது அராஜக காவல்துறை. இறுதியில் அந்த அப்பாவி ஜெயித்தானா? மாண்டானா? என்பதுதான் கதை..!


அறிமுக இயக்குநர்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையே பட்ஜெட்டுதான். சிறந்த கதையை கையில் வைத்திருந்தாலும் பெரிய நடிகர்களின் தயவு இல்லையெனில் அந்தச் சிறந்த கதை கொத்து புரோட்டோ போட்டது மாதிரி ஆகிவிடும்.. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டால், முகம் தெரியாத நடிகர்கள் என்றால் அவர்களுக்காக அதனைத் திருத்தி, திருத்தி திரைக்கதை எழுதுவதற்குள் அதுவரையில் தங்களுடன் இருக்கும் போராட்ட குணத்தில், பாதியை இழந்துவிடுவார்கள் புதிய இயக்குநர்கள்..!

ஆனாலும் மனதுக்குள் ஒரு ஆசை.. சில நேரங்களில் கிரகம் தப்பி ஜெயித்துவிட்டால் பிழைத்துவிடலாமே என்று நினைத்து சிறந்த கதை இருந்தும், பட்ஜெட்டுக்காக பல சமரசங்களுக்குட்பட்டு மாட்டிக் கொள்கிறார்கள். அப்படி சில, பல பிரச்சினைகளுக்கு பின்பு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது இயக்குநர் திருமலையின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த நெல்லை சந்திப்பு..!

குடும்பம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஒரு அன்பான கூடாரம்.. அதில், ஒரு ஹீரோவான ரோஷனும், மேகாநாயரும், அக்கா, தம்பிகள்.. இவர்கள் இருவருமே முறையே தேவிகாவையும், பூஷணையும் வீட்டுக்கு தெரிந்தே காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்..!
நெல்லையில் தீவிரவாதிகளை பார்த்தவுடன் சுட்டுத் தள்ள வேண்டும் என்ற வெறியில் இருக்கும் போலீஸ் டீமின் தலைவர் துணை கமிஷனர் தேனப்பன். அவருக்கு ஒரு செட்டப், யுவஸ்ரீ. இவர்களுடைய மகள்தான் ரோஷன் காதலிக்கும் இந்தத் தேவிகா..! 

தங்கள் வீட்டு மாடியில் குடி வரும் பிரார்த்தல் பார்ட்டியின் தொல்லை தாங்காமல், வேறு வீட்டிற்கு குடி போகிறது ரோஷனின் குடும்பம். அங்கே ஏற்கெனவே தீவிரவாதிகள் 2 பேர் குடியிருந்த்த தகவல் கேட்டு வரும் போலீஸ் டீம் ரோஷனை சுட்டுவிட.. பின்பு நடப்பதுதான் போலீஸ்-திருடன் சேஸிங்..!

இடைவேளைவரையிலும் மிக நேர்த்தியாக கொண்டு போயிருக்கும் திரைக்கதை, இடைவேளை பிளாக்கில் உச்சத்திற்குப் போயிருந்தது. ஆனால் மீண்டும் சட்டென எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல் சற்று நிலை தடுமாற.. மிகப் பரபரப்பாக ஓடத் துவங்கி பட்டென்று உட்கார்ந்துவிட்டது போன்ற நிலைமைதான் பார்ப்பவர்களுக்கு..!

இடையில் ரோஷன் சிறையில் சந்திக்கும் தேவராஜ் நல்லதொரு பாயிண்ட்..  அவரை வைத்தே கதையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருக்கலாம். நல்லதொரு வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தாதது இயக்குநரின் தவறுதான்..! 

நெல்லை சீமையில் தீவிரவாதம் என்றால் அவர்கள் யார்..? என்ன. மாதிரியானவர்கள் என்பதையெல்லாம் சுட்டாமல் பொத்தாம் பொதுவாக ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை..? கொலைகார அதிகாரிகளின் மீட்டிங் காட்சி காமெடியாக இருப்பதோடு, ஒருவரை துரத்திக் கொண்டு ஓடும் காட்சியும் இதையேதான் சொல்லாமல் சொல்கிறது.. பட்ஜெட்டில் சிக்கனம் தேவைதான் என்றாலும்.. இந்த அளவுக்கு சுருக்கணுமா என்பதையும் கேட்க வைக்கிறது..!

புது ஹீரோக்களில் ரோஷன் பரவாயில்லை.. ஆனால் இன்னொருவரான பூஷனுக்கு சரியான வாய்ப்பு தரப்படவில்லை. மலையாளத்து மேகா நாயர் கொஞ்சமே நடித்திருக்கிறார்...! கோர்ட்டில் இருந்து வெளியில் வரும்போது, பூஷனிடம், “பத்திரிகை பேரை வைச்சு இனிமே என்ன செய்வ..? உன்னால என்ன செய்ய முடியும்..?” என்று கேட்கும் அந்தக் கோப நடிப்பும் அவர் யார் என்று கேட்க வைக்கிறது..! 

இவரைவிட இன்னும் ஒரு படி மேலே அசத்தியிருப்பது இரண்டாவது ஹீரோயின் தேவிகாதான்.. தேனப்பனை வார்த்தைகளால் விளாசும் அந்த ஒவ்வொரு காட்சியும் ரசிக்கக் கூடியதாக இருந்தது..! தன்னுடைய செட்டப் கதாபாத்திரத்திற்காக யுவஸ்ரீ தன் மகளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் காட்சிகளெல்லாம் நேர்த்தியானவை. இது போன்ற குடும்பங்கள், இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் இது ஒரு மரண அவஸ்தைதான்..!

குடும்பமே கொண்டாடும் “இதுதானே எங்க வீடு” பாடல் காட்சிகள் நிரம்பவே கற்பனை வளம் சார்ந்தது..! இயக்குநர் மாண்டேஜ் ஷாட்ஸ்களுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் போலிருக்கிறது..! இசையமைத்திருப்பது மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன்..! பின்னணி இசையில் மட்டும் முழு கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது புரிகிறது..!

எழுதி இயக்கியிருப்பது கே.பி.பி.நவீன். பாலுமகேந்திரா மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.. முன்பே சொன்னதுபோல இரண்டாம் பகுதியில் கொஞ்சம் வேறு மாதிரியான திரைக்கதை அமைத்திருந்தால் லாஜிக் மீறல்கள் இல்லாமல் படத்தினை ரசிக்க முடிந்திருக்கும்.. பழி வாங்குதலுக்காக தப்பிப்பது.. நாயை கடிக்க வைத்து கொலை செய்வது.. இதனை தேனப்பன் சந்தேகப்படுவது... இறுதியில்  திருவிழாவில் தேனப்பனுக்கு ரத்த அபிஷேகம் நடப்பது என்றெல்லாம் அம்மாவின் சாவுக்கு பழி வாங்குவதாகப் போய் திரைக்கதையை முன்பேயே நமக்குத் தெரிவதுபோல் அமைத்துவிட்டதுதான் வருத்தத்திற்குரியது..! 

நவீனுக்கு இதுதான் இவரது முதல் படம்.. இதற்குப் பிறகு உச்சக்கட்டம், 72 மணி நேரம் என்று 2 படங்களையும் இயக்கிவிட்டார். இவைகளும் வெளிவராமல் சிக்கலில் இருப்பதை என்னவென்று சொல்வது..? அடுத்தடுத்து வரப் போவதாகச் சொன்னார் நவீன்.. எவ்வளவுதான் திறமையிருந்தாலும், சினிமாவில் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பார்கள்.. இந்த அதிர்ஷ்ட தேவதை, அடுத்து வரும் படங்களிலாவது நவீனுக்கு கிடைக்க வேண்டும்..!

நெல்லை சந்திப்பு - ஒரு முறை பார்க்கலாம்..! 

6 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

எவ்ளவு தான் திறமை இருந்தாலும்னு சொல்லும் அளவுக்கு என்ன திறமையைப்பார்த்தீங்க?

அப்பாவியை அரசு இயந்திரம் குற்றம் சுமத்தி வேட்டை ஆடுவதை... ராம்போ,ஃபுஜிடிவ், எனிமி ஆஃப் தி ஸ்டேட், மோஸ்ட் வாண்டட் எனப்பல படங்களில் அரைத்த கதை.

தமிழிலும் நிறைய வந்தாச்சு.வேட்டைக்காரன், மாதவனின் எதிரி, ஶ்ரீ காந்தின் வர்ண ஜாலம், விக்ரமின் தில்,எல்லாம் இதான்.

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, எவ்ளவுதான் திறமை இருந்தாலும்னு சொல்லும் அளவுக்கு என்ன திறமையைப் பார்த்தீங்க?]]]

திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருக்கலாம்..!

[[[அப்பாவியை அரசு இயந்திரம் குற்றம் சுமத்தி வேட்டை ஆடுவதை... ராம்போ,ஃபுஜிடிவ், எனிமி ஆஃப் தி ஸ்டேட், மோஸ்ட் வாண்டட் எனப் பல படங்களில் அரைத்த கதை. தமிழிலும் நிறைய வந்தாச்சு. வேட்டைக்காரன், மாதவனின் எதிரி, ஶ்ரீ காந்தின் வர்ண ஜாலம், விக்ரமின் தில்,எல்லாம் இதான்.]]]

திரைக்கதை புதுசா இருந்தா எந்தக் கதையும் ஓடும்ண்ணே..! நீங்க சொல்ற அனைத்து படங்களுமே அப்படி முயற்சி செய்யப்பட்டவைதான்..!

ஆகாயமனிதன்.. said...

//திரைக்கதை புதுசா இருந்தா எந்தக் கதையும் ஓடும்ண்ணே..! நீங்க சொல்ற அனைத்து படங்களுமே அப்படி முயற்சி செய்யப்பட்டவைதான்..!//

உண்மைத் தமிழனின் திரை விமர்சனம்
- போஸ்டின் நீள அளவை வைத்தே படத்தின் தரத்தை மதிப்பிடலாம்...

s suresh said...

இயக்குனரின் முயற்சி வெற்றிபெறட்டும்! பகிர்வுக்கு நன்றி!

உண்மைத்தமிழன் said...

[[[ஆகாயமனிதன்.. said...

//திரைக்கதை புதுசா இருந்தா எந்தக் கதையும் ஓடும்ண்ணே..! நீங்க சொல்ற அனைத்து படங்களுமே அப்படி முயற்சி செய்யப்பட்டவைதான்..!//

உண்மைத் தமிழனின் திரை விமர்சனம் - போஸ்டின் நீள அளவை வைத்தே படத்தின் தரத்தை மதிப்பிடலாம்.]]]

அப்படியில்லை ஸார்.. இப்போதெல்லாம் அதிகமாக விரிவுரை எழுதுவதை தவிர்த்துவிடுகிறேன்..! அதனால்தான் குறைவாக தெரிகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

இயக்குனரின் முயற்சி வெற்றி பெறட்டும்! பகிர்வுக்கு நன்றி!]]]

நன்றிகள் நண்பரே.. அவசியம் பாருங்கள்.. சிறிய, சிறிய தவறுகள் இருந்தாலும், தரமான படம்தான்..!