வழக்கு எண் 18/9 - சினிமா விமர்சனம்

06-05-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற மாதம் நடந்த வழக்கு எண் 18/9 படத்தின் நிகழ்ச்சியில், “கல்லூரி படத்திற்குப் பின் ஏன் இத்தனை ஆண்டு கால இடைவெளி..?” என்று இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் கேட்டதற்கு “எனக்குள்ள எப்போ கதை ஓடுதோ.. எப்போ எடு்க்கலாம்னு நினைக்கிறேனோ அப்பத்தான் என்னால படம் பண்ண முடியும்..! வருஷத்துக்கு ஒரு படம்ன்னு டைம் பிக்ஸ் பண்ணிட்டு என்னால படம் செய்ய முடியாது.. எனக்கு படத்தின் தரம்தான் முக்கியம்..” என்றார். இதனை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார்..!

படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு பிரமாதமாக இருக்கிறதே என்ற திகைப்பையும், ஆச்சரியத்தையும் கேட்டவர்களிடத்திலெல்லாம் பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் லிங்குசாமி, யு டிவி நிறுவனத்திடமிருந்து விநியோக உரிமையையும் ஒரு நம்பிக்கையில் தானே திரும்பவும் பெற்றுக் கொண்டார்..! இதற்கான விலை லிங்குசாமிக்குக் கண்டிப்பாகக் கிடைக்கப் பெற்றாக வேண்டும்..!

நாம் அன்றாட வாழ்வில் சந்தித்த ஒரு பிரச்சினையைத்தான் இங்கே புள்ளி வைத்து, கோலம் போட்டு அதில் கலர் பவுடர்களையும் தூவி, அழகுபடுத்திக் காண்பித்திருக்கிறார். நாம்தான் இன்னமும் இதனை கவனிக்காமல் இருந்திருக்கிறோம் என்பதை நமக்கே உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்..! விஞ்ஞான தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதி, குடும்ப உறவுகளையும் பாழாக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை இணையத்தை லேசாகப் புரட்டினாலே தெரிகிறது. அதில் இருந்து ஒரு பகுதியை நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர்..!


தீ விபத்துதான் என்பதுபோலவே நாம் எண்ணும் அளவுக்கு துவக்கக் காட்சியை நகர்த்தி, பிற்பாதியில் அது ஆசீட் வீச்சு என்பதை இயக்குநர் உடைக்கும்போது நம் மனசும் சேர்ந்தே உடைகிறது.. சினிமா பாணியில் அட என்னவொரு டிவிஸ்ட் என்று சொல்லவும் வைக்கிறது..!

இந்த விபத்தை விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேலுவின் பார்வையில் இதன் பின்பு விரியும் கதைக்குள் ரோட்டோரக் கடையில் வேலை செய்யும் அனாதை வேலு நுழைந்து, தனது எட்டு ஜென்ம சோகக் கதையைச் சொல்லிவிட்டு தனது முறைக்காகக் காத்திருக்கிறான். இவனைத் தொடர்ந்து வரும் ஆர்த்தி, தனது தரப்பான விஷயங்களைச் சொல்லும்போது முழுமையான கதையாக அது உருவெடுக்கிறது..!

வீட்டு வேலை செய்யும் ஜோதியை பல அசந்தர்ப்பமான சூழல்களில் சந்தித்து அவளது வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறான் வேலு. ஜோதி வேலை செய்யும் வீட்டுப் பெண்ணான பிளஸ் டூ படிக்கும் ஆர்த்தி, தன்னுடன் ஒரேயொரு எண்ணத்துடன் பழகும் தினேஷின் நடவடிக்கையால் தடம் புரளப் போகும் தனது வாழ்க்கையை ஒரு நாளில், ஒரு நிமிடத்தில் காப்பாற்றிக் கொள்கிறாள். ஆனால் அதன் விளைவை அனுபவிக்கிறாள் ஜோதி. இந்த ஜோதி மேல் வைத்திருக்கும் தனது உண்மைக் காதலுக்காக செய்யாத தப்புக்கு தண்டனையை ஏற்றுக் கொண்டு சிறை செல்கிறான் வேலு. உண்மையை ஜோதி உணர்ந்தாளா என்பதும், வேலு சிறையிலிருந்து மீண்டானா என்பதும், அரசியல் சட்டத்தின் தராசு என்ன ஆனது என்பதுதான் மிச்சக் கதை..! 

முற்றிலும் புதுமுகங்களை வைத்து, கேனன் 5-டி கேமிராவில், குறைந்தபட்ச செலவில், அதிகம் சென்னைக்குள்ளேயே ஷூட்டிங்கை வைத்துக் கொண்டு தயாரிப்பாளருக்கு எந்தவொரு சிரமத்தையும் தராமல் ஒரு உலக சினிமாவைப் படைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். கை வலிக்கும்வரையிலும் தட்டலாம்..!

என்னை ஆச்சரியப்படுத்துவது திரைக்கதைதான்.. வேலு இன்ஸ்பெக்டர் குமாரவேலுவிடம் சொல்லும் கதையை ஒட்டியே அடுத்து ஆர்த்தியும் வருகிறாள். வேலு-ஜோதியின் ஒவ்வொரு சந்திப்புகளிலும் ஆர்த்தி-தினேஷின் பழக்கமும் தொடர்கிறது..! எந்தவிதத்திலும் இரண்டுமே திரைக்கதையை விட்டுத் தாண்டவில்லை என்பது இப்படத்தில் மட்டுமே நான் பார்த்த ஒரு புதுமை..! 

இன்ஸ்பெக்டர் குமாரவேலாக நடித்த முத்துராமன் எந்த இடத்திலும் நடிக்கவில்லை. அப்படியே இயல்பு நிலைமையை, யதார்த்த வாழ்க்கையில் நடந்து காட்டியிருக்கிறார். பாலாஜி சக்திவேலின் மிக நெருங்கிய நண்பரான முத்துராமன் திண்டுக்கல்லை சேர்ந்தவர். சமூக, தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார்..! இயக்குநரின் நட்பால் இறுகிப் போய் இப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்..!

வேலுவிடம் அதட்டல் தொனியில் பேச ஆரம்பித்து “உன் கதையைக் கேட்டா எனக்கே ரொம்ப பாவமா இருக்குடா..” என்றெல்லாம் அதே உணர்ச்சியோடு பேசுவதும்.. ஆர்த்தியிடம் “விஷயம் இப்படிப் போகுதா..?” என்று போட்டு வாங்கி முழுதையும் வெளிக்கொணரும்வரையிலும், அவரது வில்லத்தனத்தை அறிய முடியவில்லை. இந்த இயக்கத்திற்கும், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள்..!

“மந்திரிகிட்ட சொல்லி எஃப்.ஐ.ஆரை உடைச்சிட்டு போயிட்டா அப்புறம் நாம எதுக்கு இருக்கோம்..? நமக்கு என்ன லாபம்..?” என்று ஆரம்பித்து, எந்தவிதப் பதட்டமும் இல்லாமல் பேப்பர் படித்துக் கொண்டிருப்பது.. வேலுவிடம் சாந்த சொரூபியாக பேசி ஒரே நிமிடத்தில் ஒரு நல்லவனை தியாகியாக்குவது.. குற்றவாளியாக்குவது என்று சகலத்திலும் இதன் பின்பு குமாரவேலுவின் ராஜ்ஜியம்தான்..

“தாயோளிகளா..!” என்ற அந்த வார்த்தையை சென்சார் போர்டிலேயே வெகுவாக ரசித்தார்களாம்.. இரண்டு முறை வரும் அந்த வார்த்தையைக்கூட கட் செ்யய மனசில்லாமல் விட்டிருக்கிறார் சென்சார் உறுப்பினர்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்..! பலத்த கை தட்டல் இந்த ஒரு காட்சிக்குக் கிடைத்ததை வைத்தே இப்படத்தின் முடிவை முதல் காட்சியிலேயே அறிந்து கொண்டனர் படக் குழுவினர்..! திரையிட்ட அத்தனை ஊர்களிலும் இந்த ஒரு காட்சிக்கு அவ்வளவு வரவேற்பாம்..! 


வேலுவாக நடித்த ஸ்ரீ, அக்மார்க் ஹை சொஸைட்டி கேரளத்து பையன்..! இது மாதிரியான ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சை தன் வாழ்க்கையில் இதுவரையில் பார்த்ததே இல்லை என்றார்..!  இன்ஸ்பெக்டரிடம் கை கட்டி நின்று கதையைத் துவக்குவதில் இருந்து ஜெயில் கம்பிக்குள் நின்றபடியே ஜோதியை பார்த்து உருகும், மருகும்வரையிலும் ஒரு காதலனாக தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்..!

இவருக்கு நேரெதிரான தினேஷ் கேரக்டரில் நடித்த மிதுனும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராகவே இருக்கிறார். எடுத்த வீடியோவை பள்ளியில் கொண்டு போய் காட்டும்போது அவருடைய வெற்றிப் புன்னகையை பார்க்க வேண்டுமே..! பீச்சில் ஆர்த்திக்குத் தெரியாமல் படம் பிடிக்கும் வில்லத்தனமும், அதில் அவர் காட்டும் நடிப்பும் அந்த வயதுக்கே உரித்தான சென்ஸ்.. இதனை பக்குவமாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். 

ஒரு நவநாகரிகப் பெண்ணை சேரிப் பெண்ணாக மாற்றியிருந்தும் எதுவும் தெரியவில்லை ஜோதியாக நடித்திருக்கும் ஊர்மிளாவிடம். ரோஸியிடம் வேலு பணம் கொடுப்பதை பார்ப்பது.. வேலு தன் மீது மோதுவதைப் போல் வருவதைப் பார்த்து தவறாகப் புரிந்து கொள்வது. வேலுவால் கடையில் கிண்டல் செய்யப்படுவது.. அம்மாவை அழைத்துப் போய் உடன் சண்டையிடுவது என்று துவங்கி ஒவ்வொரு காட்சியிலும் தனது அமைதியையே நடிப்பாகக் காட்டியிருக்கிறார். இறுதிக் காட்சியில் முகச் சீலை விளக்கி அந்தக் கொடூரத்தைக் காட்டும் காட்சியில் மட்டுமே அழகாக மிச்சமிருந்த அந்த ஒரு கண்ணும் நடிப்பைக் காட்டியிருக்கிறது..!

ஜோதியைவிடவும் ஸ்கோர் செய்திருப்பது ஆர்த்தியாக நடித்திருக்கும் மனிஷாதான்..! 18 வயதுக்கே உரித்தான அந்த தடுமாற்றத்தை தனது நடிப்பில் அவ்வப்போது காட்டும்போது நமக்கே பதறுகிறது..! காபி டேயில் மிதுனின் செல்போனில் இருக்கும் அடல்ட்ஸ் ஒன்லி ஜோக்கை பார்த்துவிட்டு அடக்க மாட்டாமல் சிரிப்பது.. அதற்கு வேறொரு விளக்கமளித்தாலும், பின்பு மீண்டும் சிரிப்பது.. “போன் செய்து ஸாரியாவது சொல்லு..” என்ற தோழிகளின் நச்சரிப்பை எதிர்கொள்ளும்விதம்.. ரிசார்ட்டில் மிதுனைப் பற்றி அறியாமல் அதே தோழியிடம் அவனைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது.. அடுத்த 3 நிமிடத்தில் உண்மை தெரிந்து வியர்த்துப் போவதாக.. நம்ம வீட்டுப் பொண்ணுக்கு இப்படியொரு நிலைமை நடந்திருந்தால் நாம் எப்படி நிலைகுலைவோமே அந்த நிலைமைக்கு நம்மை வியக்க வைத்திருக்கிறார் மனிஷா.. வாழ்த்துகள் அனைவருக்கும்..!


இவர்களையும் தாண்டி தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறான் சின்னச்சாமி. தொலைந்து போய்க் கொண்டிருக்கும் கூத்துக் கலையைப் பிரதிபலிக்கும்வகையில் அவனது வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். பெண் வேடமிட்டு ஆடவும், நடிக்கவும் செய்யும் சின்னச்சாமி, சினிமா ஆசையால் நடிக்க விரும்பி சென்னைக்கு வந்த கதையையும், அதன் தொடர்ச்சியும் இப்படத்திற்கு மிக முக்கிய உதவியாக இருந்திருக்கிறது..! வேலுவை விடவும் பேசத் தெரிந்து, கடைக்காரரிடம் முறைப்புக் காட்டிவிட்டு பின்பு வேலுவை தனியே சந்தித்து மன்னிப்பு கேட்கும் பக்குவமே நாடகக் கலையை காட்டிவிடுகிறது..! இந்தப் பையன் மூலமாகவே படம் முடியும் சூழல் உருவாவது எதிர்பாராதது..! 

வனயுத்தம் போன்ற பெரிய படங்களுக்கே தற்போது ஒளிப்பதிவு செய்து வரும் தோழர் விஜய் மில்டன் இந்த டிஜிட்டல் படத்திற்கும் சம்மதித்து படம் செய்தது ஏன் என்று கேட்டதற்கு, “எனக்கு படத்தின் கதையும், மேக்கிங்கும்தான் முக்கியம்.. நல்ல படத்துல நான் வொர்க் பண்ணியிருக்கணும். இதுதான் எனக்கு வேணும்..” என்றார். மயக்க நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கும் நிலைமையில் வேலு தள்ளாடி நடந்து வருவதை படமெடுத்திருக்கும்விதத்தைப் பார்க்கின்றபோது கை தட்டத் தோன்றுகிறது..! இவருக்கும் ஒரு சல்யூட்..!

படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார் கோபிகிருஷ்ணா. புதியவர். வித்தகர் கோலாபாஸ்கரின் சீடர். கச்சிதமான பாணியில் கொஞ்சமும் வித்தியாசம் தெரியாமல் கார்-சைக்கிள் மோதலைக்கூட மோதல் நடந்ததா என்றுகூட தெரியாத அளவுக்குக் காட்சியை நகர்த்தியிருக்கிறார். அடுத்து வரும் ராட்டினம் படத்திற்கும் இவர்தான் படத்தொகுப்பாளர்..! சிலரது வெற்றியை அவர்களது படைப்புகளே சொல்லும்..!

இறுதிக் காட்சியில் அந்த ஒற்றை பாடலே பாதி உணர்ச்சியைத் தூண்டி விடுகிறது..! நா.முத்துக்குமார் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு எழுதிய இந்தப் பாடல்தான் படத்தின் கிளாஸ்..! ஆம்புலன்ஸ் வேனுக்கு பின்பான காட்சிகளில் துவங்கி வேலு இன்ஸ்பெக்டரின் முன்னால் வந்து நிற்கும்வரையிலும் பிரசன்னாவின் பின்னணி இசைதான் பெரிய பலம்..!

பள்ளி நடத்தும் கோடீஸ்வர மிதுனின் அம்மா.. அவளுக்கும், மிதுனுக்கும் இடையில் இருக்கும் நட்பு, பூசல்.. வளர்ப்பு முறை.. முகம் மறைக்கப்பட்ட அமைச்சர், அவரது என்ஜாய்மெண்ட் என்று பல விஷயங்களையும் சட் சட்டென்று தொட்டுவிட்டுப் போகும் இயக்குநர் எதையும் மிதமிஞ்சிய கற்பனையாகக் காட்டிவிடவில்லை. நடப்பதுதான்.. நடந்ததுதான்..!

வேலுவின் சொந்தக் கதை சோகத்திலும் பல கிளைக் கதைகளாக விரிந்திருக்கும் பணம், கடன், கந்துவட்டி, பொருளாதார நசிவு, இடம் பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் என்று பல விஷயங்களையும் விவசாய வீழ்ச்சி என்ற ஒரு காரணியால் நிகழ்கிறது என்பதை தொடர்ச்சியாய் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு இன்னொரு ஷொட்டு..! இந்தக் காட்சிகள் தேவையா என்றெல்லாம் நாம் நினைக்கலாம். ஆனால் இப்படியொரு சோக வாழ்க்கையை அனுபவித்தவனுக்கு மேலும் ஒரு சோகத்தை அவன் ஏழை என்ற ஒரே காரணத்திற்காக வழங்கப்படுகிறது என்பதைத்தான் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார். இதனை நாம் இப்படி புரிந்து கொண்டால் போதும்..!

சில ஆண்டுகளுக்கு முன்பாக தென் சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தியேட்டர் உரிமையாளரின் பையன் பள்ளியில் தன்னுடன் படித்த மாணவிக்கு செய்த கொடூரத்திற்கு வேறொரு ஏழை பையன் பலிகடாவாகி பெரும் பொருட்செலவில் இந்தத் திரை நாடகம் தயாராகி முடிந்தது..! இதனைச் செய்து முடித்த உத்தம ஐ.பி.எஸ். ஒரு காலத்தில் காவல்துறையை ஆட்டிப் படைக்கும் நிலைமைக்குப் போய் இன்றைக்கு ஆட்சி மாறி, காட்சிகள் திரும்பியதும் அரசுப் பேருந்து நிலையப் பணிமனையில் தலைமை விஜிலென்ஸ் ஆபீஸராக குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார். விரைவில் மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அரசு பதக்கங்களுடனும், விருதுகளுடனும் ஓய்வு பெறுவார். வாழ்க இந்திய ஜனநாயகம்.

3 ஆண்டுகளுக்கு முன்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டிச் சென்ற கோடீஸ்வரப் புள்ளி ஒருவரின் பள்ளியில் படிக்கும் மகன், தனது கார் வேகத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேரின் மீது மோதி அவர்களை அந்த இடத்திலேயே பரலோகத்திற்கு அனுப்பி வைத்தான். கோர்ட், கேஸ், ஜாமீன் என்றெல்லாம் எதற்கும் போகாமல் அப்போதைய மின்துறையின் உதவியோடு கொல்கத்தாவுக்கு ஸ்கூல் படிப்பையே டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு தப்பிச் சென்றார். இந்தக் கொலைச் சம்பவத்திற்கு சில லட்சங்கள் சம்பளத்தில் கூலி ஆள் ஒருவர் சிக்கி, அவரும் சம்பிரதாயத்திற்கு ஒரு வாரம் ஜெயிலில் இருந்துவிட்டு வெளியில் வந்துவிட்டார். அந்தக் கேஸ் இப்போது என்ன ஆனது என்பது நீதி தேவதைக்கே வெளிச்சம்..!

இப்படி பல விஷயங்களையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்ற நமது நாட்டின் எழுதப்படாத விதியைத்தான் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறார். கத்தியைக் காட்டி மிரட்டி 300 ரூபாய் வழிப்பறி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவன் 3 ஆண்டுகளாகியும் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாட, 66 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பவர் இங்கே ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகத் திகழ்வது எங்கனம் சாத்தியம் என்று நாம் என்றைக்காவது யோசித்திருக்கோமா..? இதைத்தான் இயக்குநர் நமது மரமண்டைகளுக்கு உணர்த்தியிருக்கிறார்..!

செல்போன்களின் பயன்பாடு இன்றைய இளைய சமுதாயத்தினரை எந்தப் பக்கம் திசை திருப்புகிறது என்பதையும் மிக எச்சரிக்கை உணர்வோடு குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தை பெற்றோர்கள் அவசியம் பார்த்தாக வேண்டும்.. தங்களது பிள்ளைகள் படிக்கிறார்கள். படிக்கவில்லை என்பதை அறிய முயலும் அதே தருணத்தில், அவர்களது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பது நல்லது என்ற எச்சரிக்கையை அவர்களுக்கு உணர்த்துகிறது இப்படம்.

இப்போதே இணையத்தில் கணக்கற்ற அளவுக்கு மறைவு படங்கள் வெளியாகியுள்ளன. சத்தியமாக இப்படி நமது உடலும், முகமும் பல லட்சக்கணக்கான இணையவாசிகளின் கண் முன்னே விரிகிறது என்பது அந்த அப்பாவிகளுக்கு இப்போதுவரையிலும் தெரிந்திருக்காது. இணையத்தின் அகோர வளர்ச்சியில் இது போன்ற முறைகேடுகளும் தவிர்க்க முடியாதவை என்றாலும், அறவே ஒழிகக முடியாதவைதான் என்றாலும் நிச்சயம் பெருமளவுக்குத் தடுக்கலாம். அதன் முதல் படியை  துவக்கி வைத்த பெருமை இப்படத்திற்கு உண்டு..!

இந்தப் படத்தின் துவக்கக் காட்சிகளை.. எப்படி படத்தின் கதையைத் துவக்குவது என்பதை மட்டும் ரொம்பவே யோசித்து கடைசியாகத்தான் எடுத்தாராம் இயக்குநர்..! திரைக்கதைக்காக இத்தனை மெனக்கெட்டு ஒரு கதை சொல்லியைப் போல் தலைகீழாக மாற்றியமைத்தாலும், கதை நம் அனைவரின் மனதிலும் பதியும் அளவுக்கு செய்திருக்கும் அவரது இயக்கத்திற்கு எனது சல்யூட்..!

நல்ல படம் வரலை.. எல்லாமே மொக்கை என்றெல்லாம் மொக்கையாகவே பேசாமல், இது போன்று பார்க்க வேண்டிய உலகத் தரத்திலான படங்கள் வரும்போதெல்லாம் உடனுக்குடன் குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்து அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது நமது கடமை.. அவசியம் தியேட்டருக்கு குடும்பத்துடன் செல்லவும்..!

மீண்டும் அடுத்து 2 வாரங்கள் கழித்து இதேபோன்ற ஒரு மன நெகிழ்வுடன் நீங்கள் நிச்சயம் கண் கலங்கப் போகும் “ராட்டினம்” படத்தின் விமர்சனத்தில் அவசியம் சந்திப்போம்.. 

நன்றி..!

24 comments:

Vijayakumar Ramdoss said...

இப் படம் இன்னும் ஒரு அரண்யகண்டாமே/மகேந்திரனின் படமா இருப்பது மகழ்ச்சி.

கோவை நேரம் said...

இப்போதுதான் உங்களின் நீண்ட விமர்சனம் வந்து உள்ளது..அருமை..அப்படியே கிடைச்ச கேப்புல ஆத்தாவையும் உள்ளே இழுத்து விட்டுடீங்க.படம் அருமை.

வரலாற்று சுவடுகள் said...

நீண்ட விமர்சனம்., படத்தை நிச்சயம் பார்க்கணும் ..!

RAVI said...

ஷ்யூரா பாத்துடறேன். அருமையாக எழுதி உள்ளீர்கள் :)

scenecreator said...

விஞ்ஞான தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதி, குடும்ப உறவுகளையும் பாழாக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை இணையத்தை லேசாகப் புரட்டினாலே தெரிகிறது.மிக சிறப்பான விமர்சனம்.நேர்த்தியான வார்த்தை கையாடல்.

AC said...

Well written review:)

உண்மைத்தமிழன் said...

[[[Vijayakumar Ramdoss said...

இப்படம் இன்னும் ஒரு அரண்ய கண்டாமே / மகேந்திரனின் படமா இருப்பது மகழ்ச்சி.]]]

அப்படியும் சொல்லலாம்.. எனக்கும் மகிழ்ச்சிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

இப்போதுதான் உங்களின் நீண்ட விமர்சனம் வந்துள்ளது. அருமை. அப்படியே கிடைச்ச கேப்புல ஆத்தாவையும் உள்ளே இழுத்து விட்டுடீங்க. படம் அருமை.]]]

நன்றிகள் ஸார்.. பார்ப்போரிடமெல்லாம் சொல்லி வையுங்கள்..! நம்மாலான முடிந்த உதவி..!

உண்மைத்தமிழன் said...

[[[வரலாற்று சுவடுகள் said...

நீண்ட விமர்சனம்., படத்தை நிச்சயம் பார்க்கணும் ..!]]]

பார்த்துவிட்டு மீண்டும் வாருங்கள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

ஷ்யூரா பாத்துடறேன். அருமையாக எழுதி உள்ளீர்கள் :)]]]

பார்க்குறதோட நிறுத்திக்காதீங்க.. நாலு பேர்கிட்ட சொல்லி அவங்களையும் பார்க்கச் சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[[scenecreator said...

[[விஞ்ஞான தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதி, குடும்ப உறவுகளையும் பாழாக்க ஆரம்பித்திருக்கிறது என்பதை இணையத்தை லேசாகப் புரட்டினாலே தெரிகிறது.]]

மிக சிறப்பான விமர்சனம். நேர்த்தியான வார்த்தை கையாடல்.]]]

நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[AC said...

Well written review:)]]]

மிக்க நன்றிகள் நண்பரே..!

Ravindhar said...

தரமான விமர்சனம் ! விஜய் மில்டன் இந்த டிஜிட்டல் படத்திற்கு சம்மதித்து வேலை செய்தது பாராட்டுக்குரியது !

Subramanian said...

Another touching film from Balaji sakthivel.If this film atleast changes a few people it would be his real success.When people who do grave injustice go scot free it questions our basic belief that truth will triumph in the end.Justice at what cost, to whom.

nagoreismail said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...

Chilled Beers said...

//வேலுவாக நடித்த ஸ்ரீ, அக்மார்க் ஹை சொஸைட்டி கேரளத்து பையன்..!//

இல்லே இல்லே...அவரு கேரளப்பையன் இல்லே...அந்த பணக்காரப் பையன் கேரக்டரா நடிச்சவருதான் கேரளம் என்று நினைக்கிறேன். ஸ்ரீ தமிழன்தான்.(முழுப்பேரு ஸ்ரீராம். சினிமாவுக்காக ஸ்ரீ) என் சொந்தக்காரப் பையன்.நேத்துதான் அவங்க அப்பா அம்மாவிடம் வாழ்த்துக்களைச் சொன்னேன்...சுஜாதாவின் பாணியில் சொன்னால் 'யோக்கியமான படம்'

குரங்குபெடல் said...

ஓகே போன்ற உலக சினிமாக்களுக்கு

வரிவிலக்கு கோரி போராடும் உம்மை போன்ற ஆட்கள்

இப்படியும் எழுதுவது விசித்திரம் . .

உல்டா தமிழன்னு பேரை மாத்திக்குங்க அய்யா . .

பொருத்தமாய் இருக்கும் . .

நன்றி

உண்மைத்தமிழன் said...

[[[Ravindhar said...

தரமான விமர்சனம்! விஜய் மில்டன் இந்த டிஜிட்டல் படத்திற்கு சம்மதித்து வேலை செய்தது பாராட்டுக்குரியது!]]]

நன்றி ரவீந்தர் ஸார்..! விஜய் மில்டன் போன்ற கலைஞர்களின் இது போன்ற உத்வேகத்தினால்தான் திரையுலகம் அடுத்த கட்டத்தக்கு நகர முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Subramanian said...

Another touching film from Balaji sakthivel. If this film atleast changes a few people it would be his real success. When people who do grave injustice go scot free it questions our basic belief that truth will triumph in the end. Justice at what cost, to whom.]]]

பெற்றோர்களின் விழிப்புணர்வு ஒரு பக்கம் இருந்தாலும், காவல்துறையின் அராஜகமும், ஏழைகளுக்கு மட்டுமே கிடைக்கும் அநீதியையும் யார் புரிந்து கொண்டு எதிர் கேள்வியை எழுப்புவது..?

உண்மைத்தமிழன் said...

[[[nagoreismail said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...]]]

நன்றிகள்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[Chilled Beers said...

//வேலுவாக நடித்த ஸ்ரீ, அக்மார்க் ஹை சொஸைட்டி கேரளத்து பையன்..!//

இல்லே இல்லே...அவரு கேரளப் பையன் இல்லே...அந்த பணக்காரப் பையன் கேரக்டரா நடிச்சவருதான் கேரளம் என்று நினைக்கிறேன். ஸ்ரீ தமிழன்தான்.(முழுப் பேரு ஸ்ரீராம். சினிமாவுக்காக ஸ்ரீ) என் சொந்தக்காரப் பையன். நேத்துதான் அவங்க அப்பா அம்மாவிடம் வாழ்த்துக்களைச் சொன்னேன். சுஜாதாவின் பாணியில் சொன்னால் 'யோக்கியமான படம்']]]

தகவலுக்கு நன்றிகள் ஸார்..! திருத்தி விடுகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

ஓகே போன்ற உலக சினிமாக்களுக்கு
வரி விலக்கு கோரி போராடும் உம்மை போன்ற ஆட்கள் இப்படியும் எழுதுவது விசித்திரம். உல்டா தமிழன்னு பேரை மாத்திக்குங்க அய்யா. பொருத்தமாய் இருக்கும்.

நன்றி]]]

தங்களுடைய புரிதலுக்கு மிக்க நன்றிகள் ஸார்..!

மௌனகுரு said...

Kadavul kangalaippadaiththathin kaaranaththai inthappadam paarththu arinthen:)

உண்மைத்தமிழன் said...

[[[மௌனகுருTuesday, May 22, 2012 7:56:00 PM

Kadavul kangalaippadaiththathin kaaranaththai inthappadam paarththu arinthen:)]]]

மிக, மிக அருமையான ஒரு வரி விமர்சனம்..! நன்று.. நன்றி மெளனகுரு ஸார்..!