ஒரு நடிகையின் வாக்குமூலம்..! - சினிமா விமர்சனம்

11-02-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இவ்வளவு தைரியமாக இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பார்கள் என்று கோடம்பாக்கமே எதிர்பார்த்திருக்காது..! அந்தத் தைரியத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.


“சினிமாவுலகில் மின்மினிப் பூச்சிகளாய் மின்னி மறைந்த தேவதைகளுக்கு சமர்ப்பணம்..” என்ற வாசகங்களுடன் அகால மரணமடைந்த தமிழ்த் திரையுலகத் தாரகைகள் அனைவரின் புகைப்படங்களோடு காண்பித்து அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் படத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

புதிய தொலைக்காட்சி ஒன்றுக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்த வேண்டி ஏதாவது புதுமையான நிகழ்ச்சியொன்றை செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அதற்காக டிவி ஓனரின் குடும்பத்து அசிங்கக் கதைகளை படமாக்க விரும்பாமல்.. அப்படியெல்லாம் எதுவுமே தங்களுக்குள் இல்லை என்று நினைத்துக் கொண்டு, 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சூப்பர் ஹீரோயின் அஞ்சலி இப்போது எங்கேயிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்து அவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வர நினைக்கிறார்கள். 

இதற்காக டிவி ஓனரின் மகளும், சீனியர் தயாரிப்பாளருமான இப்படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் கீதா கிளம்புகிறார். கஷ்டப்பட்டு 4 சீன்களுக்குப் பிறகு பட்டென்று கண்டுபிடித்துவிடுகிறார். சோனியாவும் கஷ்டப்பட்டு காட்சிகளை வெளக்காமல், தன் கையில் வைத்திருக்கும் ஒரு டைரியை கொடுத்து இதுல என் சோகத்தையெல்லாம் கொட்டி வைச்சிருக்கேன். படிச்சுத் தெரிஞ்சுக்குங்க என்று சொல்லிவிட்டு கடைசி ரீலில் வருகிறேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறார்.

கீதா டைரியைப் படிக்க, படிக்க அஞ்சலியின் நிஜக் கதை பிளாஷ்பேக்கில் விரிகிறது. ஆந்திராவில் நாடக்க் கலைஞரான தனது தந்தை, தாய், அக்கா, மாமா, மற்றும் தங்கையுடன் வாழ்ந்துவரும் சோனியா அகர்வால் அந்த ஊர் நாடகத்தில் நடிக்க ஊர் மக்கள் அனுமதி மறுத்த கோபத்தில் அவரது தாயால் சினிமா நடிகையாக்கும் சபதத்திற்கு இரையாகிறார்.

சென்னைக்கு படையெடுக்கிறார்கள் அம்மாவும், மகளும். வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் அவர்கள் படக் கம்பெனிகளில் ஏறி, இறங்குகிறார்கள். வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கையில் பணம் இல்லாத சூழலுக்கு வந்தவுடன் மூத்த “அனுபவசாலியான” ஜோதிலட்சுமியின் அறிவுரையின்படி முதலில் அம்மா மட்டும் “தொழிலுக்கு” சென்று வருகிறார். கிடைத்த பணத்தில் கொஞ்சம் மூச்சு விடுகிறார்கள். 

அடுத்து சோனியாவுக்கு புதிய படம் கிடைக்கிறது. ஆனால் அப்படத்தின் இயக்குநரோ சோனியா தன்னுடன் ஒரு நாள் “தங்க” வேண்டும் என்கிறார். அம்மாவே மகளை அனுப்பி வைக்கிறார். சோனியா அறிமுகமாகிறார் அஞ்சலியாக..! 

ஹிட்.. ஒரே ஹிட்.. மளமளவென்று ஏணிகளில் ஏறுகிறார்.. இல்லை. ஏற்றப்படுகிறார்.. பணம் குவிய, குவிய அவருடைய குடும்பத்தினரின் நடை, உடை, பாவனைகளில் மாற்றம்.. இடையிடையே தங்களுடன் ஒரு நாள் “டிஸ்கஷனுக்கு” வரும்படி அழைக்கும் அரசியல்வியாதிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அஞ்சலிக்கு வாழ்க்கையில் வெறுப்பு வரும் அளவுக்கு அவருடைய குடும்பத்தில் பணம் விளையாடுகிறது..!

ஒரு பெரிய ஹீரோவுடன் “லின்க்” செய்து விடுகிறாள் அம்மா. அது கல்யாணம்வரையிலும் போய்ச் சேர்ந்தால் நல்லது என்கிறாள். அஞ்சலியும் சம்மதிக்க, அது படுக்கைவரையிலும் போய் வயிற்றிலும் வாரிசு வந்துவிடுகிறது. இப்போது ஹீரோ, “போடி” என்று சொல்லிவிட, அஞ்சலியும் “போடா” என்று சொல்லிவிட்டு அடுத்த காதலனைத் தேடுகிறாள். புத்தம் புதிய படம் செய்யும் ஒரு துணை இயக்குநர் கிடைக்கிறான். அஞ்சலி அவனை மனதிற்குள்ளேயே காதலித்து வரும்வேளையில் அப்படத்தின் தயாரிப்பாளர் மூலமாக மேற்கொண்டும் பிரச்சினைகள் வர.. அந்தக் காதலனும் தாவி விடுகிறான்..

எல்லா வழியிலும் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்த அஞ்சலி, தற்கொலை மட்டும் செய்து கொள்ளாமல், இவர்கள் கண்ணில் படாமல் போய்த் தொலைவோம் என்றுதான் அந்த மடத்தில் துறவியாகிவிட்டாராம். இந்தச் சோகத்தைப் படித்துப் பார்த்த கீதா, மீண்டும் இந்தப் புண்ணைக் கிளறி சேனல் காசு சம்பாதிக்க விரும்பவில்லை என்ற திடீர் பாசத்துடன் கதையை முடித்துக் கொள்கிறார். இம்புட்டுதான் கதை..!

நாடு இன்னிக்கு இருக்குற இருப்புல, ஒரு சினிமா பத்திரிகையாளனுக்கு ஆர்ட்டிஸ்டுகள் மத்தில என்ன மதிப்பும், மருவாதையும் இருக்குன்றது இயக்குனருக்கு தெரியலை போலிருக்கு. ஏதோ சி.பி.ஐ. ஆபீஸர் ரேஞ்சுக்கு கீதா கொடுக்கும் அலப்பறை ரொம்ப ஓவர்.. இயக்குநர், நடிகர், டச்சப் கேர்ள், அஞ்சலியின் அம்மா - இவர்களிடம் கீதாவுக்கு கிடைக்கும் மருவாதையை பார்த்து, பிரிவியூவில் அமர்ந்திருந்த நிஜ பத்திரிகையாளர்களே சிரித்துவிட்டார்கள்..!


இதுவரையில் நீங்கள் கேள்விப்பட்டிருந்த தமிழ்த் திரையுலக கதைகளைத்தான் ஆங்காங்கே கொத்து புரோட்டா போட்டிருக்கிறார்கள். குடும்பத்திற்காகவே ஓடாய். உழைத்து ஓய்ந்து போயிருக்கும் அத்தனை நடிகைகளும் தங்களின் துவக்கக் கால வாழ்க்கையில் சந்தித்திருக்கும் சில சின்னச் சின்ன சம்பவங்களின் தொகுப்பே இது..! நிச்சயம் சந்தித்திருக்க வாய்ப்புண்டு..

படம் பார்த்தபோதே எந்த நடிகையின் கதை என்றெல்லாம் யோசித்து, யோசித்து மண்டை காய்ந்து போய், பல நடிகைகளின் கதைகளை தொகுத்து போட்டிருப்பது கடைசியில்தான் புரிந்தது.. 2 அக்கா, தங்கை நடிகைகளின் துவக்கக் கால வாழ்க்கைக் கதை, நள்ளிரவில் சுவர் ஏறிக் குதித்து காதல் இயக்குநர்களுக்கு கழுத்தை நீட்டிய நடிகைகளின் கதை, நான் ஏற்கெனவே ஒரு இட்லிவடையில் சொன்னதுபோல, மகளுக்காக அவருடைய அம்மா தன் வாழ்க்கையை பயணம் வைத்து கடைசியில் நடுத்தெருவுக்கு வந்த கதை, மகள் செத்தாலும் பரவாயில்லை.. சொத்துக்களே போதும் என்று நினைத்த உற்றார், உறவினர்களை புரிந்து கொள்ளாமலேயே பரிதாபமாய் செத்துப் போன நடிகை என்று பலரையும் கொத்துக் கொத்தாக பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.


அஞ்சலியாக சோனியா. அதே சோக மயமான முகம். சிரிக்கும்போது மட்டும் பார்க்கப் பிடிக்கிறது. அம்மணிக்கு சுட்டுப் போட்டாலும் நடனம் வராது என்பதால் ஸ்டெப்ஸ்களை குறைவாக வைத்து இடுப்பு சுளுக்காமல் ஆடியிருக்கிறார். ஒரு பாடலுக்கு ஜித்தன் ரமேஷ் ஜோடி. போஸ்டரில் இதையே பெரிதாகப் போட்டு கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். ஆந்திராவில் பாவாடை, தாவணியில் பார்த்த முகத்தை, கோடம்பாக்க ஹீரோயினாக பார்க்க சகிக்கவில்லை..! எப்போதும் ஒரே மாதிரி பீலிங்ஸ் வராமலேயே வசனம் பேசும் பழக்கத்தை அம்மணி எப்போது கைவிடுவாரோ தெரியவில்லை. இயக்குநர்களாவது சொல்லிக் கொடுத்தால் தேவலை..! 


மலையாள அம்மே ஊர்மிளா உண்ணிதான் அஞ்சலியின் அம்மா.. முதற்பாதியைவிடவும் இரண்டாம் பாதியில் வரும் பணக்காரத் தோற்றத்திற்கு ஏற்ற உருவம்.. அதென்னமோ.. நடிகைகளை மட்டும் அசத்தலாகத் தேடிப் பிடிக்கும் இயக்குநர்கள், அவர்களது கணவர்களுக்கு மட்டும் கஷ்டப்படாமல் ஒருவரை பிடித்துவிடுகிறார்கள். ஒருவேளை நிஜ உலகத்தில் இப்படித்தான் என்கிறார்களோ..? பத்திரிகையாளர் தேவராஜ் அண்ணன், சோனியாவுக்கு அப்பாவாக இப்படித்தான் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்..! நிஜவுலக ஹீரோயின்களின் அப்பாக்கள் பலருக்கும், இந்த அண்ணன் பரவாயில்லைதான்.. வசனங்கள் மென்று விழுங்காமல், பளிச்சென்று தெறிக்கிறது. ஒவ்வொரு முறையும் தனது மனைவியையும், மச்சானையும் கடுப்படிக்கும் அந்த ச்சின்ன சின்ன ஷாட்டுகளுக்கு அவரது குரலே பக்க பலம்..!

கதையில் இன்னொரு உள்ளடி கதையாக படங்களுக்கு பைனான்ஸ் செய்யும் சவுத்ரிகளையும் வாரியிருக்கிறார்கள். ஒரு படவுலக பைனான்ஸ் சேட்டுக்கு செட்டப்பாக இருக்கும் கோவை சரளாவின் தங்கச்சி நிக்கோலை ஹீரோயினாக ஆக்க வேண்டும் என்பதற்காக அஞ்சலியின் படத்தில் தேவையில்லாமல் கதையை மாற்றி, நிக்கோலை புகுத்தி.. படம் கந்தரலோகமாகும் கதையை கொஞ்சம் நகைச்சுவையுடன் சொல்லி முடித்திருக்கிறார்கள்..!

மனோபாலா, கஞ்சா கருப்பு என்று இரண்டு பேர் இருந்தும் கஞ்சாவுக்கு பெரிய வேலையில்லை. மனோபாலா கோவை சரளாவுக்கு கொஞ்சம் ஈடு கொடுத்திருக்கிறார்..! “படுக்கைக்கு வா..” என்றழைக்கும் இயக்குநராக, இயக்குநர் ராஜ்கபூரே நடித்திருக்கிறார். ஆச்சரியமாக உள்ளது. “கோடம்பாக்கத்துல நடக்காத கதையவா சொல்லியிருக்கோம்..?” என்று தனிப்பட்ட முறையில் அவர் சொல்லி வருவதாகக் கேள்வி. பத்திரிகையாளர்கள் அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர் சிக்க மாட்டேன்றார்..!

ஆர்.பி.சவுத்ரியில் துவங்கி, இன்றைய டாப்மோஸ்ட் தயாரிப்பாளர்கள் அனைவரின் பெயரையும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் தைரியமாக..! தற்போதைய கோடம்பாக்கத்தைச் சுட்டிக் காட்டுவதால் படமும் உண்மைதானே என்று கேட்டால், “இல்லவே இல்லை..” என்கிறார் இயக்குநர். வெறும் 10 சதவிகிதம் மட்டுமே உண்மையாம். அவர் சில காலம் சினிமா பத்திரிகையாளராக இருந்தபோது பல நட்சத்திரங்களைச் சந்தித்தாராம். அப்போது அவரிடம் அவர்கள் சொன்ன கதையைத்தான் இப்போது படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார்.

சோனியாவும் இதனையேதான் சொல்கிறார். “என் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் ஒரு நாளும் நடக்கவில்லை. நான் படவுலகில் நுழைந்தபோது மரியாதையாகவே நடத்தப்பட்டேன்..” என்றார் பிரஸ் மீட்டில். “ஆனாலும் படிப்பறிவில்லாத லோ கிளாஸ் பெண்கள்தான் இப்படியொரு இக்கட்டில் மாட்டிக் கொள்கிறார்கள்..” என்று பட்டும் படாமலும் சொன்னார் சோனியா.


சினிமா கதை என்பதால் எந்தெந்த இடங்களில் பாடல் காட்சிகள் வரும் என்று உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவைப்படும் இடங்களிலெல்லாம் வைத்து ரீலை நிரப்பிவிட்டார்கள்..! உச்சத்திற்கு வருவதற்கு முந்தைய கதைகளை எடுத்த விதம்தான் சர்ச்சையாகியிருக்கிறதே தவிர.. நடிகையானதற்குப் பின்னால வாழ்க்கைக் கதைகள் நிச்சயமாக கோடம்பாக்கத்தில் வரவேற்கப்படும். உதாரணமாக ராஜ்கபூர் சோனியாவை மீண்டும் புக் செய்ய வரும்போது அவருக்குக் கிடைக்கும் மரியாதை..  புதுமுகம் ராஜ்கிருஷ்ணாவின் முதல் திரைப்படம் இது என்பதால் இடையிடையே வரும் நாடகத்தனமான காட்சிகளை மன்னித்துவிட்டுவிடலாம். வேறு வழியில்லை. ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் படம் ஒரு முறை பார்க்கும் அளவுக்குத்தான் இருக்கிறது..!

சினிமாவுலகத்தில் கிடைக்கும் பணம், புகழ், வெளிச்சம் இவைகளால் இரையாக்கப்படும் நடிகைகளின் வாழ்க்கையைப் பற்றி சினிமா ரசிகர்கள் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு நடிகைகளே புரிந்து கொண்டதில்லை.. அவர்கள் தங்களது வெளிச்சத்தை விட்டு சிறிது நேரம்கூட விலகி நிற்க விருப்பம் கொள்ளாததே இதற்குக் காரணம்..

மிகச் சிறந்த உதாரணம் சில்க் ஸ்மிதா. அவர் கடைசி காலத்தில் தெலுங்கில் சொந்தப் படம் எடுத்து நஷ்டமடைந்து பணக் கஷ்டத்திற்கு உள்ளானார் என்றார்கள். ஆனால் அந்தத் தொகை மிக்க் குறைவுதான். அப்போது ஐம்பதாயிரம் ரூபாய் கடனில்தான் இருந்தாராம். இதனை பத்து படங்களில் நடித்து சம்பாதித்திருக்கலாம். இல்லையெனில் நடித்து கடனை அடைக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம்..! 

இரண்டுமில்லாமல் இதுவரையில் யாரிடமும் பணத் தேவைக்காக நிற்காமல் நின்ற என்னை காலம் நிற்க வைத்துவிட்டதே என்ற மன அழுத்தம்தான் அவருக்குக் கடைசி நேரத்தில் இருந்தது என்கிறார்கள். சில்க் ஸ்மிதா என்ற பெயரை மறந்துவிட்டு கொஞ்சம் யோசித்திருந்தால் அத்தனை மனிதர்களின் வாழ்க்கையிலும் வந்து செல்லும் இந்தத் துன்பவியல் நாடகத்தை அவரும் உணர்ந்திருப்பார். சில்க் என்ற பெயரே அவரை கொலை செய்துவிட்டது என்றுதான் இப்போது நினைக்கத் தோன்றுகிறது..!

எல்லா துறைகளிலும் நல்லது உண்டு, கெட்டதும் உண்டு என்ற வரிசையில் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள். கோடம்பாக்கத்தின் ஒரு பக்க அவலத்தை உரித்துக் காட்டிய வகையில் இயக்குநர் ராஜ்கிருஷ்ணாவுக்கு எனது பாராட்டுக்களும், நன்றிகளும்..!

ஒரு முறை பார்க்கலாம்..!

15 comments:

Guru said...

parpomae....

! சிவகுமார் ! said...

//ஒரு முறை பார்க்கலாம்..!//

இதை சொல்றதுக்கு படம் பாக்குற நேரத்தை விட ரெண்டு மடங்கு நேரம் பதிவை படிக்க வச்சிட்டீங்க. உங்க குறும்புக்கு 'அளவே' இல்லையா சார்!! :)

Philosophy Prabhakaran said...

நீங்க ஃபேஸ்புக்குல கொடுத்த பில்டப்பை பார்த்துட்டு நான் கூட ஏதோ "சமாச்சாரம்" இருக்குது பார்க்கலாமோன்னு யோசிச்சேன்... நல்லவேளையா முழு"நீல" பதிவை போட்டு காப்பாத்திட்டீங்க...

ஹாலிவுட்ரசிகன் said...

அப்போ படத்துல பிட்டு இல்லையா? அவ்வவ்வ்

Kumaran said...

அருமையான விமர்சனம்..பார்த்தவற்றை ரசித்தவற்றை அப்படியே சிறப்பாக எழுதி உள்ளீர்கள்..என் நன்றிகள்.

உண்மைத்தமிழன் said...

[[[Guru said...

parpomae....]]]

பாருங்க குரு..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

//ஒரு முறை பார்க்கலாம்..!//

இதை சொல்றதுக்கு படம் பாக்குற நேரத்தைவிட ரெண்டு மடங்கு நேரம் பதிவை படிக்க வச்சிட்டீங்க. உங்க குறும்புக்கு 'அளவே' இல்லையா சார்!!:)]]]

அடப் போங்கப்பா.. பழைய பல்லவியையே பாடுறீங்க.. 5 பக்கம்தான் எழுதியிருக்கேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

நீங்க ஃபேஸ்புக்குல கொடுத்த பில்டப்பை பார்த்துட்டு நான்கூட ஏதோ "சமாச்சாரம்" இருக்குது பார்க்கலாமோன்னு யோசிச்சேன். நல்லவேளையா முழு "நீல" பதிவை போட்டு காப்பாத்திட்டீங்க.]]]

பில்லை கரீக்ட்டா செட்டில் பண்ணிருங்க தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட்ரசிகன் said...

அப்போ படத்துல பிட்டு இல்லையா? அவ்வவ்வ்]]]

இந்த மாதிரி பெரிய ஹீரோயினை நடிக்க வைச்சிட்டு, பிட்டும் வைக்க முடியுமா ஸார்..? அது இல்லாமலேயே படம் நல்லாத்தான் இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[Kumaran said...

அருமையான விமர்சனம். பார்த்தவற்றை ரசித்தவற்றை அப்படியே சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.. என் நன்றிகள்.]]]

மிக்க நன்றிகள் குமரன் ஸார்..!

aman said...

நடிகையின் வாக்குமூலம் படத்துக்கு அவரு மட்டும்தான் முதல்நாளே பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாருன்னு நினைச்சேன்.. அதே போல எழுதிட்டார்.. அவரே உண்மையான கலைதாகம் உள்ள பிளாக்கர்.
சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ஞாயிறு/12/01/2012

உண்மைத்தமிழன் said...

[[[aman said...

நடிகையின் வாக்குமூலம் படத்துக்கு அவரு மட்டும்தான் முதல்நாளே பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாருன்னு நினைச்சேன்.. அதே போல எழுதிட்டார்.. அவரே உண்மையான கலைதாகம் உள்ள பிளாக்கர்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ஞாயிறு/12/01/2012]]]

இவரு சொன்னாலும், சொல்லாட்டியும் நான் கலைத்தாகம் உள்ளவன்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[aman said...

நடிகையின் வாக்குமூலம் படத்துக்கு அவரு மட்டும்தான் முதல்நாளே பார்த்துட்டு விமர்சனம் எழுதுவாருன்னு நினைச்சேன்.. அதே போல எழுதிட்டார்.. அவரே உண்மையான கலைதாகம் உள்ள பிளாக்கர்.

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/ஞாயிறு/12/01/2012]]]

இவரு சொன்னாலும், சொல்லாட்டியும் நான் கலைத்தாகம் உள்ளவன்தான்..!

நம்பள்கி said...

ஒரு மூணு பக்கம் தமிழில் டைப் பண்றதுக்குலே மூச்சு முட்டி, முழி பிதுங்கிடரது. நீங்க எப்படி, டைப் இப்படியெல்லாம்?

கூகுள் transliteration-ஆ, இல்லை வேற எதாவது மென்பொருளா? கொஞ்சம் சொல்லமுடியுமா?

உண்மைத்தமிழன் said...

[[[நம்பள்கி said...

ஒரு மூணு பக்கம் தமிழில் டைப் பண்றதுக்குலே மூச்சு முட்டி, முழி பிதுங்கிடரது. நீங்க எப்படி, டைப் இப்படியெல்லாம்? கூகுள் transliteration-ஆ, இல்லை வேற எதாவது மென்பொருளா? கொஞ்சம் சொல்ல முடியுமா?]]]

nhm.in என்ற இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்கு softwares என்னும் தலைப்பின் கீழ் nhm writer என்னும் software இருக்கும். அதனை டவுன்லோடு செய்து உங்களது கணினியில் இன்ஸ்டால் செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதலின்படி செயல்படுத்துங்கள். தட்டச்சு செய்து பாருங்கள்.. மிக எளிது.. தினமும் அரை மணி நேரம் பழகினீர்கள் என்றால் ஒரு மாதத்தில் நல்ல ஸ்பீடு வந்துவிடும்..

ஆர்வத்திற்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் ஸார்..!