நான் சிவனாகிறேன் - சினிமா விமர்சனம்

12-11-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பழைய கள்ளுதான்.. புதிய மொந்தையில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் புதிய இயக்குநர் ஞானசேகர். 


தனது அம்மா, அப்பாவுக்கு செய்த துரோகத்தினால் அப்பா கொல்லப்பட.. அந்தக் கொலையை 10 வயது மகன்தான் செய்தான் என்று சொல்லி அம்மாவே அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறாள். சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் இருந்து ஜெயிலுக்கும்போய் ஹீரோவாக வெளியில் வரும் பிரபாகரன், தனது வாழ்க்கையைத் துடைத்துப் போட்ட தனது அம்மாவைப் போன்ற சில அம்மாக்களைத் தேடிப் பிடித்து கொலை செய்கிறான். 13 கொலைகள் நடந்த பின்பு, 14-வது கொலைக்கு முன்பாகவே அவனை பிடித்துவிடுவேன் என்கிறார் அஸிஸ்டெண்ட் கமிஷனர். பிடித்தாரா இல்லையா என்பதையும் இறுதியில் அவன் கதி என்ன என்பதுவும்தான் கதை..!

தினமும் பத்திரிகைகளில் வெளிவரும் கள்ளக் காதல் செய்தியின் தாக்கத்தில் உருவான கருவாக்கம்..! நானும்கூட சில சமயங்களில் நினைப்பதுண்டு.. கள்ளக் காதல் விவகாரத்தில் தம்பதிகள் பிரிந்துவிட்டாலோ, யாரேனும் ஒருவர் கொல்லப்பட்டுவிட்டாலோ அவர்களுடைய குழந்தைகளின் நிலைமை என்ன என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் பயமாகவே உள்ளது. அந்த ஒருவித பயத்தின் வெளிப்பாடுதான் இந்த பிரபாகரன் என்ற கேரக்டர்..!

ஜெயிலுக்கு போனதாலேயே அவன் மனநிலை தவறி தப்பு செய்தால் நானே தண்டிப்பேன்.. எங்கப்பா சொல்லியிருக்கார் என்று சொல்லிக் கொள்வது, சுவற்றைப் பார்த்து அப்பாவிடம் பேசுவதைப் போல பேசுவதும், நான் சிவனாகிறேன் என்று சிவ லிங்கத்தை வைத்து பூஜை செய்து அழகு பார்ப்பதுமாக ஒருவித சைக்கோத்தனத்தைக் காட்ட நினைத்திருக்கிறார். ஆனால் முழுமையாக இல்லை..!

திரைக்கதை பல இடங்களில் நொண்டியடிப்பதால் சீரியஸான காட்சிகள் காமெடியாகி, காமெடி காட்சிகளில் சிரிப்பும் வராமல் போய் ரெண்டுங்கெட்டான் நிலைமையாகிவிட்டது..!

ஹீரோயின் அனிதாவாக ஒரு பெண். குழந்தைத்தனம் மாறாமல் பேச்சிலும், நடிப்பிலும் அமுல் பேபி முகத்துடன் இருக்க.. பஸ் ஸ்டாப்பில் பார்க்கும் இவரை ஹீரோ எப்படி தேடிப் பிடித்து வேலை வாங்குகிறார் என்று தெரியவில்லை..! காதல் சுகுமாரின் அறையில் இருந்த டிவியை கொண்டுபோய் விற்றுவிடும் ஹீரோவை திரும்பவும் தங்களது அறையிலேயே எதுவும் சொல்லாமல் தங்க வைக்கிறார்கள்..!

ஹீரோவைப் பற்றி எதுவுமே தெரியாமலேயே அவனைப் பற்றி ஹீரோயினிடம் சப்போர்ட்டாக பேசுகிறார் சுகுமார்..! ஹீரோயினுக்கு ஹீரோ மேல் பரிவும், பாசமும், காதலும் வருவதற்கான சூழலே இல்லை.. அடுத்தடுத்த காட்சிகளை வேகவேகமாக இப்படி நகர்த்தியிருப்பதை பார்த்தால் திரைக்கதைக்கு ரூம் போட்டு யோசிக்கவில்லை என்பது தெரிகிறது..!

இன்னுமொரு காமெடிக்கு போலீஸ் பார்ட்டிகள்..! ஆதித்யா எதற்கு சிரிக்கிறார்.. எதற்காக வண்டி நம்பரை நோட் செய்கிறார் என்றே தெரியவில்லை. அதை வைத்து ஏதோ பெரிதாக பில்டப் செய்துவிட்டு கடைசியில் புஸ்வாணமாக்கிவிட்டார்கள்..! ஆதித்யாவின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சோகத்துக்குப் பின்னும் மனிதர், தன்னந்தனியே ஹீரோவை பிடிக்க பறக்கும் காட்சியில் சிரிப்புதான் வந்தது.

ஹீரோ செய்யும் கொலைகளை நியாயப்படுத்த அவர் கோர்ட்டில் அனைத்து மீடியாக்களையும் வரவழைக்க வேண்டும் என்றவுடன் உடனேயே அதனை செய்து முடிக்கும் நீதிபதியை பார்த்தவுடன் அசந்துவிட்டேன். இப்படியொரு நீதிபதியை இந்தியாவிலென்ன.. உலகத்திலேயே எந்த இடத்திலும் கண்டுபிடித்துவிட முடியாது.. 

ஒரேயொரு ஆறுதல்.. ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் நயனா தீட்சித். கிளாமருடன் அட்ராக்ஷனை கூட்டியிருக்கிறார். ஆனாலும் இவரை கிளைமாக்ஸில் அநியாயத்திற்கு சாகடிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை..!கணவன் தன்னைக் கவனிப்பதே இல்லை. எப்போது பார்த்தாலும் பிஸினஸ்.. பிஸினஸ் என்று அலைகிறார் என்பதே இது போன்ற எல்லை தாண்டும் பெண்களின் வாதமாக இருப்பதாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். பெற்ற பிள்ளை மீது கணவன் அன்பு காட்டுவதுகூட டூ மச் என்று நினைக்கும் மனைவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனையும் ஒரு காரணமாகத் திணித்திருக்கிறார் இயக்குநர்..!

மனைவி கணவனைப் பிடிக்காமல் பிரிந்து போனதற்காகவும, சந்தர்ப்ப சூழ்நிலையில் ஜெயிலுக்குப் போனதற்காகவும் இது போன்று படுகொலைகள் செய்வதுதான் நியாயம் என்பதை போல கோர்ட்டில் வாதாடுவது படத்தின் இயக்குநரே தீர்ப்பு எழுதியிருப்பது போல தெரிகிறது..! இது ஒரு கதை.. இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட ஒரு ஹீரோவின் கதை என்ற போக்கில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது திசை மாறி இயக்குநரின் அழுத்தமான தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது..!

இயக்குநர் ஞானசேகர் மிக இளையவர். நிறைய குறும்படங்களை இயக்கிய அனுபவசாலி. முயற்சி செய்து பார்க்கலாம் என்று முதல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நடிப்பு என்று பார்த்தால் அம்மா கேரக்டர் மட்டுமே ஓகே.. ஒவ்வொருவரையும் திரைக்கதையில் இணைக்க முடியாமல் திண்டாடி ஒரு லெவலுக்கு கொண்டு வந்திருப்பதால் நடிக்க வைக்கவும் முடியவில்லை போலும்..!

கதை அழுத்தமாக நம்மை அமிழச் செய்யும்வகையில் இல்லாததால் ஆங்காங்கே பொறுமையிழந்து நெளிய வேண்டியிருக்கிறது. அதிலும் பிற்பாதியில் வரும் கோர்ட் சீன்களில் ரொம்பவே இழுத்திருக்கிறார்கள்..!

சண்டைக் காட்சிகளில் லேப்ஸ் வாங்குவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. பாடல் காட்சிகளில் மட்டுமே சொல்லிக் கொள்வதுபோல ஒளிப்பதிவாளர் தெரிகிறார்..! டைட்டில் காட்சியில் இருக்கும் வித்தியாசமும், அந்த பிஜிஎம்மும் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் பாடல்களில் இரைச்சலைக் கட்டுப்படுத்தி கூச்சலைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஏன் அத்தனை பாடல்களையும் ஹை ஸ்பீச்சில் பாட வேண்டும்..? காதல் இல்லை; காமம் இல்லை என்ற பாடல் நா.முத்துக்குமாருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த பிரபாகரன் போன்று பல இளைஞர்கள் இன்றைக்கும் இது போன்ற கொலைகளைச் செய்யாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிறுவனின் வாழ்க்கை திசை மாறியது பற்றிச் சொல்வதற்கு எத்தனையோ கதைக் களன்கள் இருக்கின்றன.. வேறொரு சிறந்த இயக்குநர் அப்படியொன்றை எடுப்பார் என்று நம்புவோமாக..!

15 comments:

மு.சரவணக்குமார் said...

சமயத்துல உங்க கடமை உணர்ச்சியைப் பார்த்து.....முடியல :))

:)

சண்முகம் said...

படம் பாக்குறேன்,,,,

விஜி said...

இத்தனை சின்ன விமர்சனமா? பாதிப்படம் தான் பார்த்தீங்களா?

உண்மைத்தமிழன் said...

[[[மு.சரவணக்குமார் said...

சமயத்துல உங்க கடமை உணர்ச்சியைப் பார்த்து..... முடியல :))]]]

சில சமயம் இப்படி படங்களா வந்து மாட்டுது..? என்ன செய்றது..?

உண்மைத்தமிழன் said...

[[[சண்முகம் said...

படம் பாக்குறேன்,,,,]]]

நன்றி சண்முகம் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜி said...

இத்தனை சின்ன விமர்சனமா? பாதிப் படம்தான் பார்த்தீங்களா?]]]

ஐயோ.. முழுசும் பார்த்துட்டேன் தாயி..! போதும்னு நினைச்சுத்தான் கொஞ்சமா எழுதியிருக்கேன்..!

காவேரிகணேஷ் said...

அண்ணே,

அந்த நயனா தீட்சித் போட்டோ ஏதாவது போடுங்க..

உண்மைத்தமிழன் said...

[[[காவேரிகணேஷ் said...

அண்ணே, அந்த நயனா தீட்சித் போட்டோ ஏதாவது போடுங்க..]]]

போட்டாச்சு காவேரி..!

Ramesh said...

Anneee, herione aunty madiri irukanga..avangala pooi kulanthai mugam nu eluthiteengalee...

மாய உலகம் said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

நான் கூட அவர் குறும்படங்களில் பாடல் எழுதிருக்கிறேன்...நடித்திருக்கிறேன்.. ஞானசேகரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Ramesh said...

Anneee, herione aunty madiri irukanga.. avangala pooi kulanthai mugam nu eluthiteengalee...]]]

ரமேஷ்.. பெரிய போட்டோல தனியா இருக்கிறது ஹீரோவோட அம்மாவா நடிச்சவங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[மாய உலகம் said...

நான்கூட அவர் குறும் படங்களில் பாடல் எழுதிருக்கிறேன். நடித்திருக்கிறேன்.. ஞானசேகரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.]]]

அவருடைய குறும்படங்களை நான் பார்த்ததில்லை. ஆனாலும் உங்களுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் நண்பரே..!

சூனிய விகடன் said...

ஒன்றுமறியா அப்பாவித்தமிழன் கோவிந்தசாமிக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளது. முல்லைப்பெரியார் கோபத்தை நமது விருதாச்சலத்தமிழன் மீது காட்டி விட்டனர் மலையாளிகள். கற்பழித்தான் ரயிலில் இருந்து தள்ளி விட்டான் என்பதற்கு பொய் சாட்சிகளை தயார் செய்து ஒரு ஒன்றுமறியா அப்பாவித்தமிழன் கழுத்தில் சுருக்கை மாட்டி விட்டனர். கோவிந்தசாமி ஏற்கனவே ஒரு கையில்லாதவர்..ஆண்டவனே அவருக்கு ஒரு தண்டனையை அட்வான்சாக அளித்து விட்ட பின்பு, இரண்டாவது தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதைஎதிர்த்து தமிழகமெங்கும் முழக்கங்கள் எழ வேண்டும். அப்பாவித்தமிழன் கோவிந்தசாமி ஏற்கனவே ஒன்பது மாதங்கள் ஜெயிலில் கழித்து விட்டார்.என்பதை உணர வேண்டும். தமிழ் இயக்கங்கள், தமிழ் ஆர்வலர்கள், குறிப்பாக தமிழினத்தலைவர்கள் இதற்காக உரத்துக்குரல் கொடுக்க வேண்டும் என்பதே என் அவா..

உண்மைத்தமிழன் said...

சூனியவிகடன்..

இப்படியொரு சிந்தனையும், மாற்றுக் கருத்தும் அனைவருக்கும் எழத்தான் செய்யும்.. ஒரு கை இல்லாதவரால் இது போன்று பலாத்காரம் செய்ய முடியுமா என்பதை கோர்ட் ஏன் பரிசீலிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிச்சயம் அடிபடும் என்றே நான் நினைக்கிறேன்..

மேலும், தூக்குத் தண்டனைக்கு நான் எப்போதுமே எதிரிதான்..