சதுரங்கம் - சினிமா விமர்சனம்

08-10-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

2005-ம் ஆண்டிலேயே இந்தப் படம் வெளிவந்திருந்தால் பத்திரிகையுலகிலும், அரசியல் உலகத்திலும் தனியிடம் பிடித்திருக்கும். காலதாமதத்தால் தமிழ்ச் சினிமாவிலும் தனக்கென இருந்திருக்க வேண்டிய ஒரு இடத்தை இழந்துவிட்டது என்றே எண்ணுகிறேன்..


திசைகள் என்னும் புலனாய்வு வார இதழில் ரிப்போர்ட்டராகப் பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த்.. வேலை செய்கிறார் என்றால் சாதாரணமாக இல்லை. உண்மையாகவே சிறைச்சாலைக்குள் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய, வேண்டுமென்றே பஸ்ஸில் டிக்கெட் எடுக்காத சின்ன வழக்கொன்றில் சிக்கி ஜெயிலுக்குள் செல்கிறார். தனது இன்வெஸ்டிகேட்டிவ் மூளையைப் பயன்படுத்தி ஜெயிலுக்குள் நடைபெறும் லஞ்ச, ஊழல், அநியாயங்களை தொடர் கட்டுரையாக எழுதி வைக்கிறார். இதில் பாதிக்கப்படுபவர்கள் பலர் இருந்தும், இவர்களில் ஒருவர் பதிலுக்கு ஸ்ரீகாந்தின் காதலி சோனியாவை கடத்திச் செல்ல.. அவரை மீட்க அல்லல்படுகிறார் ஸ்ரீகாந்த். தனது காதலியை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..!

பத்திரிகையாளர்களால் பாதிக்கப்படும் அரசியல்வியாதிகள் தங்களுடைய கோபத்தை பல்வேறு ரூபங்களில் காட்டத்தான் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இவைகள் அதிகப்பட்சமாக தெய்வத்தாய் ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்திருக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கொடுமை..!

தராசு, நெற்றிக்கண், நக்கீரன் பத்திரிகைகள் தாக்கப்பட்டது.. நக்கீரன் நிருபர் மதுரையில் கொலை செய்யப்பட்டது.. நக்கீரனின் பதிப்பாளர் கணேசன் கொலை செய்யப்பட்டது.. போலீஸ் செய்தி பத்திரிகையின் நிருபர் கொலையானது.. நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது.. அவருடைய பத்திரிகையின் நிருபர்கள் பலரும் கைதானது.. என்று பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை நம்மால் மறக்க முடியாதுதுதான்..!

இதையெல்லாம் வெளிப்டையாகக் காட்டினால் கரு.பழனியப்பனே வெளிப்படையாக நடமாட முடியாது என்பதினால் கதையில் கொஞ்சம் சமரசம் செய்திருக்கிறார். அதே பத்திரிகையாளனின் கை, கால்களை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைப்பதில் வரும் பீலிங்கைவிட, அவனது காதலியை கடத்துவது தியேட்டருக்கு வரும் இள வயது ரசிகர்களை அதிகம் கவலைக்குள்ளாக்கும் என்பது இயக்குநரின் கணிப்பு. நல்லதுதானே..! இனிப்பை எந்த வகையில் கொடுத்தாலென்ன? மைசூர் பாக்காக இருந்தாலும். அல்வாவாக இருந்தாலும் இனிப்பு, இனிப்புதானே.. அதைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ஜெயில் காட்சிகள் அனைத்துமே உண்மைதான். தமிழகத்தில் அத்தனை ஜெயில்களிலும் தினம்தோறுமான வசூலே பல லட்சங்கள். போர்த்திக் கொள்ள போர்வை கேட்டால்கூட காசு வைத்தால்தான் வரும் என்கிறார்கள். அதேபோல் முன்னாள் அமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கும்போது எலிகளை பிடித்து உள்ளே போட்டு அவரை வாட்டி எடுப்பதை டி.பி.கஜேந்திரனின் வாயாலேயே சொல்லியிருப்பதும் உண்மைதானே.. இந்தப் படம் அப்போதே வந்திருந்தால் இந்த விஷயத்தில் மிகப் பெரிய தாக்கமாகவும் இருந்திருக்கும்.

ஜெயலலிதாவின் முதல் கொடுங்கோல் ஆட்சிக் காலத்தில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனையும், அவரது கணவரையும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்ற மொக்கை குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது தினமும் இரவில் சுப்புலட்சுமி தூங்கப் போகும்போது, வேண்டுமென்றே அறை முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்களாம்.. இதேபோல் ஜெகதீசனின் அறையில் பெருச்சாளிகளை ஓடவிட்டு அவரை அலற வைத்திருக்கிறார்கள். இந்த ட்ரீட்மெண்ட்டை தாங்க முடியாமல்தான் முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன் அப்ரூவராக பல்டியடித்ததாக அப்போதே பத்திரிகைகள் குறிப்பிட்டிருந்தன. இது போன்ற உண்மைகளை அப்பட்டமாகச் சொல்லியிருக்கும் அண்ணன் பழனியப்பனுக்கு எனது நன்றி..!

ஸ்ரீகாந்த்தின் நடிப்பில் இந்தப் படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்க வேண்டியது. ஏன் அவருடைய கேரியரில் பெரும் மாற்றத்தைக்கூட தந்திருக்கும் முன்பே படம் வெளிவந்திருந்தால்..! இப்போது அவருடைய பெயரை மறக்காமல் இருக்க வைக்கவும் இந்தப் படம் உதவும் என்று நினைக்கிறேன்..!

திருப்பதிசாமி. விகடன் பத்திரிகையாளர்கள் வட்டத்தில் மறக்க முடியாத பெயர். சாலை விபத்தில் மரணமடைந்த இயக்குநரான தனது நண்பர் திருப்பதிசாமியின் பெயரையே ஸ்ரீகாந்துக்கு சூட்டி அழகு பார்த்திருக்கிறார் பழனியப்பன். ஸ்ரீகாந்த் சோனியா முதல் சந்திப்பு நடக்கின்ற காட்சியின் விஷூவல்ஸ் காதல் சிச்சுவேஷன்களை மிக எளிதாக உருவாக்கியது.. இதுக்கு மேலேயும் அபெக்ஷன் வராமல் இருந்துவிடுமா என்ன? 

ஸ்ரீகாந்த், சோனியா இருவரின் காதல் காட்சிகளும் படு ஜோர்.. சோனியா வீடு தேடி வந்து ஏதேதோ சொல்லி பேச்சை டயாப்ப்பதும், பிரா ஸ்டிரிப் நழுவியிருப்பதை காந்த் சொல்வதும், அதனையே கல்லூரியில் சோனியா திருப்பிச் சொல்வதும் அழகான, மெச்சூரிட்டியான லவ் சிச்சுவேஷன்ஸ்..!

சோனியா க்யூட்.. அம்புலிமாமா பாடல் காட்சியில்தான் செம கிளாமர்.. சிக்கென்ற உடையிலேயே இறுக்கமும், கிறுக்கமும் காட்டுகிறார்..! இடைவேளைக்கு பின்பு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்பில்லை என்றாலும்,  ரசகுல்லா ரசகுல்லாதான்..!

பழனியப்பனின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். இதிலும் அது அதகளம்.. ஜெயில் காட்சிகளில் துவங்கி இறுதிவரையில் வசனத்தில் பத்திரிகையாளனின் குரலாகவே ஒலிக்கிறது..!

“தரம் பார்த்துதான் நண்பனா வைச்சுக்குவேன்.. தகுதி பார்த்துதான் எதிரியா வைச்சுக்குவேன். உனக்கு அந்தத் தகுதி இல்ல தம்பி..” என்று பில்டிங் ஓனர் சொல்கின்ற காட்சியின் வசனமே அடுத்தடுத்த திரைக்கதைகளை எழுதிவிட்டது..

முதலில் ஒரு திரில்லிங்கை கூட்ட வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீகாந்தின் எழுத்தால் பாதிக்கப்பட்ட லஞ்சம் வாங்கிய அதிகாரி, முன்னாள் அமைச்சர், பில்டிங் ஓனர் என்று பலரையும் சுட்டிக் காட்டியிருப்பதுபோல் தோன்றுகிறது.

“டெபாஸிட் கிடைக்குற அளவுக்குக்கூட ஓட்டுப் போடாத உங்களுக்கு எதுக்கு நன்றி..” என்று மேடையில் பொளந்து கட்டும் இளவரசு, மனைவியையே காட்டாமல் அடிமை கணவனாக மாவாட்டும் மனோபாலா, கிழிந்த பேப்பரை எடைக்கு எடை போட்டு காசு பார்க்க நினைக்கும் சரண்யா, தனது தங்கை காதலனின் தோளில் கை போட்டு தெனாவெட்டாக பேசுவதை பார்த்தும் ரசிக்கும் அண்ணன் ஸ்ரீமன், கண்ணில் வலி என்று சொல்லி நடித்துவிட்டு  நமீதாவின் புகைப்படத்தைப் பார்த்து இரு விழிகளையும் விரித்துப் பார்க்கும் மயில்சாமி.. என்று இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ரசிக்க வைக்கின்றன..!

மணிவண்ணன் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிகையின் புகைப்படத்தையே பெரிசாக போடச் சொல்லிவிட்டு அதுவே ஒரு மேட்டர்தானே என்பதும், திருப்பதிசாமிக்காக நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை.. என்று சப்போர்ட் செய்வதுமாக ஒரு கச்சிதமான ஆசிரியர் வேடம் அவருக்கு. நிஜத்தில் திருப்பதிசாமி மாதிரியான பத்திரிகையாளர்களை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் மணிவண்ணன் மாதிரியான ஆசிரியர்களைப் பார்ப்பதுதான் கஷ்டம்..!

இடைவேளைக்கு பின்பான கதையில் காதலியைத் தேடிப் போகும் ஸ்ரீகாந்தை அலையவிடும் காட்சிகளும்.. செல்கின்ற இடங்களில் நடக்கும் சட்ட விரோதச் செயல்களெல்லாம் இப்போதைக்கு இரண்டாம்பட்சமாகி தனது காதலியே பிரதானமாக அந்தப் பத்திரிகையாளனுக்குத் தெரிவதாகச் சொல்வதெல்லாம் உண்மையான திரைக்கதை..!

இங்கே திரைப்படத்திற்கு சமரசம் செய்து கொள்ளாமல், இதைப் பற்றிக்கூட அதே பத்திரிகையாளனிடம் கேள்வியையும் எழுப்புகிறார் இயக்குநர். பாராட்டுக்குரிய விஷயம் இது..! கள்ளச்சாராயம் காய்ச்சும் இடம், விபச்சார மேன்ஷன், அரிசிகளை கடத்தி மறைத்து வைத்திருக்கும் குடோன், டூவீலர்களை திருடி விற்கும் இடம்(இது மட்டும் சரியாக எஸ்டாபிளீஸ் செய்யப்படவில்லை) என்று இதை வைத்தே நிறைய கதை எழுதிவிடலாம். அத்தனையையும் கடந்துதான் காதலியைத் தேடிச் செல்கிறார் திருப்பதிசாமி..!

வித்யாசாகரின் இசையில் எனக்குப் பிடித்தது அம்புலிமாமா பாடல்.. படமாக்கியவிதமும் ரசிக்கும்படியாகவே இருந்தது. வசனங்கள் போலவே பாடல் வரிகளும் இலக்கியத்தனமாகவே இருக்கின்றன. பழனியப்பன் என்ற ஆசிரியர், இதிலும் கொஞ்சம் வெளிப்பட்டிருக்கிறார்..  

ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் அழகாகவும், ரவுத்திரமாகவும் எடுக்கப்பட்டிருந்தாலும், அதுவே மனதில் ஒட்டவில்லை என்கிற ஒரேயொரு குறைதான் இப்படத்தில்.. இறுதிக் காட்சியில் மக்களே தீர்ப்பு வழங்குவது போல் செய்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

அப்போதைய ஸ்ரீகாந்தின் ஹீரோயிஸம், தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பு, விநியோகஸ்தர்களின் வற்புறுத்தல் இத்தனையையும் தாண்டி இந்த அளவுக்கு கொண்டு வந்திருப்பதே பெரிய விஷயம்தான்..!

வாழ்த்துகளும், நன்றிகளும் இயக்குநர் திரு.கரு.பழனியப்பனுக்கு..!  

9 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விமர்சனம்

kanagu said...

படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க அளித்த வாய்ப்புக்கு நன்றி அண்ணா.. :)

படம் இப்போதும் பார்க்க நன்றாகவே இருந்தது. காதல் காட்சிகள் கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தது போல் தோன்றியது. அதே போல் இறுதி காட்சியும்.

ஆனால் இரண்டாம் பாதி மிக வேகமாக ஒரு த்ரில்லராக இருந்தது. இளவரசு-வின் நடிப்பை வெகுவாக ரசித்தேன்.

2005 ஆண்டே வந்திருந்தால் நிச்சயம் பேசப்பட்டிருக்கும். ஏன் வெளிவரவில்லை என கொஞ்சம் எழுதுங்கள் அண்ணா..

அதே போல் பத்திரிக்கையாளர் திருப்பதிசாமி அவர்கள் பற்றியும்.

ஆரூர் முனா செந்திலு said...

அண்ணே வணக்கம், நானும் வர்ணம் படம் பார்க்க வரமுடியுமா, ஆனால் எனக்கு ஒரு இடைஞ்சல் இருக்கிறது, என் மனைவி வேலை முடிந்து வீட்டிற்கு வர 07.30 ஆகி விடும், நான் தான் ரயில்வே ஸ்டேசன் சென்று அழைத்து வர வேண்டும், மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தால் வருகிறேன் அண்ணே,

மற்றபடி பதிவை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று எண்ண வேண்டாம், அது என்றுமே அருமை தான். உங்களது பதிவைப் படித்து தான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தவன் நான், எனக்கு எழுதுவதை விட படிப்பதில் தான் சுகம் அதிகம், அதிலும் உங்களது பதிவு மிக நீளமாக இருக்கும், அதற்காகவே முதலில் படிக்க ஆரம்பித்தேன், அதன் பிறகு தினம் ஆன்லைன் வரும்போதெல்லாம் முதலில் உங்களது பிளாக்கை பார்த்து விட்டு தான் எனது பிளாக்கிற்குள் செல்வேன். ஏன் இப்போதெல்லாம் முன்பு போல் எழுதுவதில்லை, என்னைப் போன்ற உங்களது ரசிகர்களுக்காகவாவது எழுதுங்கண்ணே.

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விமர்சனம்]]]

உன் விமர்சனம் எங்கே தம்பி..?

உண்மைத்தமிழன் said...

[[[kanagu said...

படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க அளித்த வாய்ப்புக்கு நன்றி அண்ணா:)
படம் இப்போதும் பார்க்க நன்றாகவே இருந்தது. காதல் காட்சிகள் கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தது போல் தோன்றியது. அதே போல் இறுதி காட்சியும். ஆனால் இரண்டாம் பாதி மிக வேகமாக ஒரு த்ரில்லராக இருந்தது. இளவரசு-வின் நடிப்பை வெகுவாக ரசித்தேன். 2005 ஆண்டே வந்திருந்தால் நிச்சயம் பேசப்பட்டிருக்கும். ஏன் வெளிவரவில்லை என கொஞ்சம் எழுதுங்கள் அண்ணா..]]]

பைனான்ஸ் பிரச்சினைதான். வேறு எதுவுமில்லை..!

[[[அதே போல் பத்திரிக்கையாளர் திருப்பதிசாமி அவர்கள் பற்றியும்.]]]

எழுதிருவோம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஆரூர் முனா செந்திலு said...

அண்ணே வணக்கம், நானும் வர்ணம் படம் பார்க்க வர முடியுமா, ஆனால் எனக்கு ஒரு இடைஞ்சல் இருக்கிறது, என் மனைவி வேலை முடிந்து வீட்டிற்கு வர 07.30 ஆகி விடும், நான்தான் ரயில்வே ஸ்டேசன் சென்று அழைத்து வர வேண்டும், மாற்று ஏற்பாடு செய்ய முடிந்தால் வருகிறேன் அண்ணே.]]]

அவசியம் வாருங்கள் செந்தில்..!

[[[மற்றபடி பதிவை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று எண்ண வேண்டாம், அது என்றுமே அருமைதான். உங்களது பதிவைப் படித்துதான் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தவன் நான், எனக்கு எழுதுவதைவிட படிப்பதில்தான் சுகம் அதிகம், அதிலும் உங்களது பதிவு மிக நீளமாக இருக்கும், அதற்காகவே முதலில் படிக்க ஆரம்பித்தேன், அதன் பிறகு தினம் ஆன்லைன் வரும்போதெல்லாம் முதலில் உங்களது பிளாக்கை பார்த்து விட்டுதான் எனது பிளாக்கிற்குள் செல்வேன். ஏன் இப்போதெல்லாம் முன்பு போல் எழுதுவதில்லை, என்னைப் போன்ற உங்களது ரசிகர்களுக்காகவாவது எழுதுங்கண்ணே.]]]

நேரமில்லாததுதான் காரணம்..! இனிமேல் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல விமர்சனம்]]]

உன் விமர்சனம் எங்கே தம்பி..?

//

அண்ணே விமர்சனம் எழுத ட்ரை பண்ணினேன். எழுத வர மாடேங்குது :)

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே விமர்சனம் எழுத ட்ரை பண்ணினேன். எழுத வர மாடேங்குது :)]]]

கும்மியடிக்க மட்டும் வருமாக்கும்..? நாளைக்கு ஒழுங்கா வந்து சேரு..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே விமர்சனம் எழுத ட்ரை பண்ணினேன். எழுத வர மாடேங்குது :)]]]

கும்மியடிக்க மட்டும் வருமாக்கும்..? நாளைக்கு ஒழுங்கா வந்து சேரு..!

R//

:)