கருணாநிதி கைது - எனது நேரடி ரிப்போர்ட்..!

25-08-2011


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


2001-ம் ஆண்டு நடந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா 2001 மே 14-ம் தேதியன்று அவசரம், அவசரமாக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ஜூன் 13-ம் தேதியன்று அவரது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஒரு விடியற்காலை பொழுதில் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஹெராயின் கிடைத்ததாகச் சொல்லி போதை மருந்து தடுப்புப் பிரிவின் கீழும் கூடுதலாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 

உண்மையான காரணம் என்னவெனில், 1996 தேர்தலில் ஜெயலலிதா தோற்றவுடன் போயஸ்கார்டனில் இருந்து பெட்டி, பெட்டியாக கரன்சிகளை அள்ளிக் கொண்டு தனது மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறினாராம் சுதாகரன். அதனைத் திரும்ப வாங்கவே இந்தக் கைது நாடகம். சுதாகரன் தான் களவாடிச் சென்றதை முழுமையாகத் திருப்பிக் கொடுத்த பின்புதான்  அவருக்கு ஜாமீனே கிடைத்ததாம்.

ஆஹா.. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே என்று பார்த்தால், அந்த மாதமே இந்தியாவையே அதிர வைத்த ஒரு கொடுமையைச் செய்து முடித்தார் ஜெயலலிதா.

தன்னை ஜெயிலில் வைத்து அழகு பார்த்த தாத்தாவை எப்படியும் உள்ளே தள்ளிவிட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே தீவிரமாகத்தான் இருந்திருக்கிறார் ஜெயலலிதா. எந்த வழக்கு வகையாகச் சிக்குகிறது தேடுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட.. அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா அதிகம் உச்சரித்த சென்னையில்  பல மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என்கிற விஷயமே பெரிதாகத் தெரிந்தது.

சதியாலோசனை துவங்கியது. அப்போது சென்னை மாநகர மேயர் ஸ்டாலின்தான்..! அவரையும் ஜெயிலில் தள்ள வேண்டும் என்று முடிவானது. ஜூன் மாதத்தின் மத்தியில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த ஆச்சார்யலு என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதுதான் இந்த கொடுமைக்கான பிள்ளையார் சுழி. 

ஜூன் மாத இறுதியில் விழுப்புரத்தில் உள்ள அரசு நெல்கொள்முதல் குடோனில் அரிசிகள் வீணாகிப் போய் உள்ளன. தானியங்கள் சரியான பராமரிப்பின்றி இருப்பதாக சன் தொலைக்காட்சி தனது செய்திகளில் தெரிவித்தது. அத்தோடு சன் தொலைக்காட்சியின் நிருபர், அரசு குடோனுக்குள் நுழைந்து வீடியோ எடுத்தும் வெளியிட்டிருந்தார். 

இதைக் கண்டு கோபமான தங்கத் தலைவி அந்த சன் டிவி நிருபரை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டார். நிருபரும் கைதானார். பத்திரிகையுலகமே கொதித்தெழுந்தது. எந்த இடத்தில் சட்ட மீறல்கள் இருந்தாலும் அதனை வெளிப்படுத்த வேண்டியது பத்திரிகை நிருபர்களின் கடமை.. அதற்காக அவர்களைக் கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று போராடத் துவங்கினார்கள்.

ஜூன் 29-ம் தேதி காலை சென்னை கோட்டைக்கு வந்து தனது அராஜக உத்தரவுப் பணிகளை மேற்பார்வையிட்டுவிட்டு அடுத்த அதிரடிக்கு அச்சாரம் போட்டுவிட்டுக் கிளம்பிய ஜெயலலிதாவை நடுரோட்டிலேயே மடக்கினார்கள் நிருபர்கள். நிருபர்கள் அனைவரும் ஜெயல்லிதாவின் காரை மறிக்கத் துவங்க.. போலீஸ் இந்த இடத்தில் வன்முறையுடன் நடந்து கொண்டது.. அவுட்லுக் நிருபர் ரேவதி உட்பட பலருக்கும் காயமேற்படும் அளவுக்கு காவல்துறையின் அராஜகம் இருந்த்து.

நிருபர்களும் விடாமல் நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு கோஷம் எழுப்பத் துவங்க.. மொத்த பேரையும் கைது செய்வதாக அறிவித்தது போலீஸ். வேனில் ஏற்றி அவர்களைக் கொண்டு சென்ற இடம் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷன்.. அங்கே பத்திரிகையாளர்களை அடைத்து வைத்திருந்து  இரவுதான் விடுவித்தார்கள்..

இதற்கிடையில்தான் கருணாநிதி கைதுக்கான அத்தனை அச்சாரங்களும் போயஸ் கார்டனிலும், சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும், அரசினர் தோட்டத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திலும் நடந்துள்ளது.

நிருபர்களைத் தூக்கி ஸ்டேஷனுக்கு கொண்டு போய் வைங்க என்று உத்தரவை போட்டுவிட்டு போயஸ் கார்டன் போன ஜெயலலிதா, அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. ரவீந்திரநாத், சென்னை போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன், சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. முகமது அலி ஆகியோருடன்  கூட்டு ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில்தான் கருணாநிதியை எப்படி கைது செய்வது என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

“இன்று இரவு கருணாநிதி கைது செய்யப்பட வேண்டும். உங்களால் முடியுமெனில் சொல்லுங்கள். இல்லையெனில் வேறு ஆளை வைத்து செய்து கொள்கிறேன்..” என்று ஜெயலலிதா கட் அண்ட் ரைட்டாகச் சொன்னதாக பின்னாளில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு முத்துக்கருப்பன் வெளிப்படையாகச் சொன்னார்..!

இந்தக் கூட்டம் முடிவடைந்த சில நிமிடங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆச்சார்யலுவை சந்தித்த சி.பி.சி.ஐ.டி. பிரிவின் உயரதிகாரிகள் அவரிடமிருந்து மேம்பால ஊழல் பற்றிய முதல் புகாரைப் பெற்றுள்ளார்கள். ரிப்பன் மாளிகைக்கே நேரில் வந்து புகாரைப் பெற்றுச் சென்றுள்ளார்கள் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள்.

சென்னையின் அத்தனை முக்கிய நிருபர்களும் வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில், போராட்ட உணர்வோடு சிக்கிக் கொள்ள, கருணாநிதி கைது விஷயத்தை ஸ்மெல் செய்ய முடியாமல்  கோட்டைவிட்டுவிட்டார்கள்..!

இரவு 8 மணியளவில் நிருபர்கள் விடுவிக்கப்பட்டாலும் நாளை தொடர் போராட்டத்தில் குதிப்போம் என்று நிருபர்கள் தங்களுக்குள் பேசி வைத்திருந்துதான் கலைந்து போனார்கள். விடியும்போது அதற்கான வாய்ப்பே இருக்காது என்பது தெரியாமலேயே போனது அவர்களுக்கு..!


ஜூன்-30. இரவு 2 மணிக்கு மயிலாப்பூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. எல்டாம்ஸ் சாலையில் இருந்து ஆலிவர் சாலைக்குத் திரும்பும் இடத்தில் தடுப்புக் கட்டைகள் போடப்பட்டு அது சீல் வைக்கப்பட்டது. அதேபோல் அந்தச் சந்திப்பின் அருகிலேயே இருந்த அனுமார் கோவிலில் இருந்து ஆலிவர் சாலைக்கு திரும்பும் சிறிய பாதையும் போலீஸ் வேனை வைத்து மூடப்பட்டிருந்தது.

அமிர்தாஞ்சன் அலுவலகத்தின் நேர் எதிரேயுள்ள ஆலிவர் சாலையும் நாகேஸ்வர்ராவ் பூங்கா சாலையும் சந்திக்கும் இடமும் சீல் வைக்கப்பட்டது. விவேகானந்தர் கல்லூரியில் இருந்து ஆலிவர் சாலைக்கு வரும் வழியும் மூடப்பட்டது. வேண்டிய அளவுக்கான காவலர்கள் சென்னை போலீஸில் இருந்தும், ஆவடி பட்டாலியனில் இருந்தும் தருவிக்கப்பட்டிருந்தார்கள்.

எல்லாம் ரெடிதான்.. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் கோட்டைவிட்டுவிட்டார்கள். மெளரியா, சாரங்கன், கிறிஸ்டோபர் நெல்சன், ஜார்ஜ், ஆபாஷ்குமார் என்று அப்போது அதிகம் பேசப்பட்ட போலீஸ் அதிகாரிகளை வைத்து நடவடிக்கையை தொடங்கியிருந்தாலும் அவர்களுக்கிடையில் தகவல் தொடர்பில் சின்ன சுணுக்கம் இருந்த்து. இதனை அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டு கொள்ளாமல் அதிகாரிகளுக்குள் வழக்கம்தானே என்பது போல் இருந்துவிட.. இந்த அதிகாரிகளின் ஈகோ யுத்தத்தினால்தான் கருணாநிதி கைது  உலகளாவிய செய்தியாக விடிந்தபோது பரவியிருந்த்து.

இசபெல் மருத்துவமனைக்கு மூன்று வீடுகள் முன்பாக வலது புறத்தில் ரோட்டில் இருந்து சற்று உள்ளே தள்ளியிருக்கும் ஆலிவர் ரோடு வீட்டிற்கு வந்த போலீஸ் படைகள் சாலையின் அருகே இருந்த இரும்புக் கதவு  பூட்டியிருந்ததால் ஏறிக் குதித்துதான் உள்ளே சென்றார்கள்..

கருணாநிதியின் ஆலிவர் சாலை வீட்டில் அப்போது அவரும், ராஜாத்தியம்மாளும், இவர்களுடன் ஒரு வேலைக்காரர், மற்றும் உறவுக்கார இளம் பெண் ஒருவரும்தான் இருந்திருக்கிறார்கள். மொத்தமே 4 பேர்தான்..!

காலிங்பெல்லை அடித்தவுடன் கதவைத் திறந்த வேலையாளிடம் “கருணாநிதியை பார்க்கணும்..” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்கள் போலீஸார். வேலையாளுக்கு எதுவும் புரியாமல் “மேலே மாடியில் இருக்கிறார்..” என்று மட்டுமே சொல்ல.. கிடைத்த விநாடியில் மொத்த போலீஸ் டீமும் மாடியேறிவிட்டது.

அந்த வேலையாளை வைத்தே கருணாநிதியின் பெட்ரூமின் கதவைத் தட்ட, நைட்டியில் இருந்த ராஜாத்தியம்மாள்தான் கதவைத் திறந்து பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார். நேராக பெட்ரூமுக்கே வந்து நின்றால் யாருக்குத்தான் அதிர்ச்சியாகாது..? “கருணாநிதியை பார்க்கணும்..” என்றே அவரிடமும் சொல்லியிருக்கிறார்கள். தூக்கத்திலிருந்து விழித்த கருணாநிதியிடம்தான் டி.ஐ.ஜி. முகமது அலி, “உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம் ஸார்..” என்று சொல்லியிருக்கிறார்.

“இந்த நேரத்திலயா..?” என்று புருஷனும், பொண்டாட்டியுமே ஆச்சரியப்பட்டு கேட்டிருக்கிறார்கள். ராஜாத்தியம்மாள் போலீஸை கண்டித்து ஏதேதோ சொல்ல.. கருணாநிதிதான் சமாதானப்படுத்தியிருக்கிறார். முரசொலி மாறனுக்கு போன் செய்யும்படி ராஜாத்தியிடம் சொல்ல அவரும் செல்போனில் நம்பரை போட்டுக் கொடுக்க மாறனிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. அவரும் பதட்டத்துடன் “உடனேயே வருகிறேன்..” என்று சொல்ல.. “மாறன் வந்திரட்டும்.. போலாம்..” என்று கருணாநிதி முகமது அலியிடம் சொல்ல, முகமது அலி எதுவும் சொல்லாமல் அறையில் இருந்து விலகிப் போய் தன் செல்போனில் இருந்து யாருடனோ பேசியிருக்கிறார்.

இடையில் கலைஞர் எழுந்து பாத்ரூமுக்குள் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு தனது சட்டையை அணிந்து தயாராகியிருக்க.. முகமது அலிக்கு வந்த செல்போன் தகவல் என்ன சொன்னதோ தெரியவில்லை. முரசொலி மாறனுக்காக காத்திருந்தார் அலி.

இங்கேதான் விதி விளையாடிவிட்டது. ஆலிவர் சாலை வீட்டு வாசலில் காவல் காத்தவர் ஆபாஷ்குமார் ஐ.பி.எஸ். முரசொலி மாறன் தான் வரும்போதே சன் டிவிக்கு தகவலைச் சொல்லி அவர்களையும் அழைத்துக் கொண்டே வந்துவிட்டார். முரசொலி மாறன் கேபினட் மினிஸ்டர் என்பதாலும், அவரை உள்ளே விடுவதா? வேண்டாமா? சன் டிவி யூனிட்டை விடலாமா? வேண்டாமா? என்ற தகவலை முகமது அலி, வாசலில் இருந்த ஆபாஷுக்கு பாஸ் செய்யாமல்விட்டுவிட்டார். இதுதான் இந்தச் சதியின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியது..! 

முரசொலி மாறன் எல்டாம்ஸ் சாலையில் இருந்து திரும்புகிற இடத்திலேயே தனது காரை நிறுத்திவிட்டு அங்கிருந்தே நடந்து வந்துவிட்டார். அவரைப் பார்த்த்தும் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் ஆபாஷ் குழப்பத்துடன் இருக்க.. முரசொலி மாறனும், சன் டிவி குரூப்பும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு அனைவரையும் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தது.

தனது வேட்டியின் இரு முனையையும் தூக்கிப் பிடித்தபடியே சாந்த சொரூபியாக படியேறி வந்த முரசொலி மாறனைப் பார்த்தும் பார்க்காத்துபோல அதே படிக்கட்டின் கடைசிப் படியில் நின்று கொண்டிருந்தார் டி.ஐ.ஜி. முகமது அலி. பொதுவாக கேபினட் மினிஸ்டர் என்றால் சல்யூட் மரியாதையாவது செய்ய வேண்டும். முகமது அலியின் அன்றைய அலட்சியத்தை பார்க்கணுமே..!!!

முரசொலி மாறன் படியேறி ஹாலுக்குள் நுழைய, அங்கே கருணாநிதி சோபாவில் தயாராக அமர்ந்திருந்தார். முகமது அலியும் அவரருகில் செல்ல.. முரசொலி மாறன் கருணாநிதியிடம் “என்ன தலைவரே..?” என்று கேட்க “ஏதோ அரெஸ்ட் பண்ண வந்திருக்காங்களாம்.. என்னன்னு கேளு..” என்று கருணாநிதி சொல்ல.. முரசொலி மாறனும், அலியிடம் இது குறித்துக் கேட்கிறார். அலி ஏதோ சொல்ல.. மாறன் ஏதோ சொல்ல.. பிரச்சினை துவங்கியது. 

“வாரண்ட் எங்கே..?” என்று மாறன் குரலை உயர்த்திக் கேட்டது வீடியோவில் தெளிவாகக் கேட்டது. “அதெல்லாம் அங்க போய் கொடுக்குறோம். இப்ப கிளம்புங்க..” என்றார் முகமது அலி. “இவரென்ன சாதாரண ஆளா..? வாரண்ட் எங்கய்யா..?” என்று ஏற்கெனவே கோபக்காரரான மாறன் இன்னும் கோபமாய் கேட்க.. கலைஞர் எதையோ பேசியபடியே எழுந்து நின்றார். 

இந்த நேரத்தில் இந்த அஸைன்மெண்ட்டுக்காகவே மயிலாப்பூர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக கொண்டு வரப்பட்டிருந்த சசிகலாவின் உறவினரான மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் அருகில் போன முகமது அலி ஏதோ ஒன்றைச் சொல்கிறார். இதற்குப் பின்புதான் முருகேசன் கருணாநிதியின் பின்னால் போய் நின்று கொண்டு அவரது நெஞ்சின் இருபுறம் தன் கைகளை வைத்து கலைஞரை பிடித்துக் கொண்டார்.

உடனேயே கூச்சல், குழப்பம்.. மாறன் “டேய்..” என்று கத்தியபடியே முருகேசனின் கைகளை அடிக்கத் துவங்க.. மாறனைச் சூழ்ந்த போலீஸார் அவரை மொத்தமாக கார்னர் செய்து மூலைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். இதில் ராஜாத்தியம்மாளை பெண் போலீஸ் இரண்டு பேர் கைகளைப் பிடித்துக் கொள்ள.. உடன் இருந்த இன்னொரு இளம் பெண்ணையும் பெண் போலீஸை வைத்து பிடித்து வைத்துக் கொண்டார்கள்.

முகமது அலி முன்னாலேயே படியிறங்க, முருகேசன் கருணாநிதியைத் தூக்க போலீஸார் அவரது இரண்டு கால்களையும் பிடித்துத் தூக்கிக் கொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டே படியிறங்கியுள்ளது போலீஸ் டீம். வெளிவாசலில் தயாராக இருந்த போலீஸின் அம்பாசிடர் காரில் ஏற்றும்வரையிலும் கருணாநிதியை தூக்கித்தான் வந்திருக்கிறார்கள். அங்கே தரையில் நிறுத்தியுடன் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து முருகேசனையும், தன்னைத் தொட்டுத் தூக்கிய போலீஸாரையும் கோபத்துடன் நாலு சாத்து சாத்தியிருக்கிறார் கருணாநிதி. 

விடவில்லை போலீஸ். மறுபடியும் கருணாநிதியை குண்டுகட்டாகத் தூக்கி அம்பாசிடர் காரில் திணித்தது. இரண்டு புறமும் மப்டி போலீஸார் உட்கார்ந்து கொள்ள.. கார் ஆழ்வார்பேட்டை சாலை வழியாக அண்ணா சாலை நோக்கி விரைந்தது. அதற்குள்ளாக விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த சில நிருபர்களும் சாலையின் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

என்.டி.டி.வி.யின் நிருபர் மட்டும் ஒரு காரில் வந்து காத்திருந்த நிலையில் கலைஞரின் மஞ்சள் துண்டு நிருபருக்கு அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. அவர் தரப்பு காரும் பின்னாலேயே சீறிப் பறக்க.. இரண்டு அம்பாசிடர் கார்களும் யாருமே இல்லாத அண்ணா சாலையில் அந்த இரவு நேரத்தில் போட்டி போட்டுக் கொண்டு பறந்து சென்றன. என்.டி.டி.வி. ரிப்போர்ட்டரை இந்த ஒரு காரணத்திற்காகவே எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். மனிதர்கள் உயிரை பயணம் வைத்து கருணாநிதியை அந்தக் கோலத்திலும் படம் பிடித்துக் காட்டினார்கள்.

அண்ணா சாலையில் இருந்து அரசினர் தோட்டம் செல்லும் பாதையில் ஏற்கெனவே போலீஸ் குவிக்கப்பட்டிருந்த்தால் போலீஸ் கார்கள் அனைத்தும் வரிசையாக உள்ளே செல்ல.. பின்னாலேயே விரட்டிக் கொண்டு வந்த பத்திரிகையாளர்கள் உள்ளே போக முடியாமல் தவியாய் தவித்தார்கள்.

இந்தச் சமயத்தில் நான் ஆழ்வார்பேட்டையில் பீமண்ண முதலி தெருவில் குடியிருந்தேன். கருணாநிதி கைது பற்றி பத்திரிகை நண்பர் நாராயணன் எனக்கு அந்த நள்ளிரவில் தகவல் கொடுக்க.. எனக்கும் பகீரென்றது.. “என்னய்யா இது கொடுமை..? என்ன செய்றாங்க..?” என்று கேட்டதற்கு “எங்கயோ அள்ளிப் போட்டுட்டுப் போறாங்க..” என்று வந்த பதில் என்னை என்னவோ செய்துவிட்டது.

அவசரம், அவசரமாக கிளம்பி அங்கிருந்து கமல்ஹாசன் வீடுவரையிலும் ஓடி வந்து ஒரு ஆட்டோ பிடித்து அரசினர் தோட்ட வாசலுக்கு நான் வந்து இறங்கியபோது அங்கே ஒரு பெரும் ரகளையே நடந்து கொண்டிருந்த்து..!

மு.க.தமிழரசு தன்னந்தனி மனிதராக நடுரோட்டில் உட்கார்ந்து போராடிக் கொண்டிருந்தார். பரிதி இளம்வழுதி, தமிழரசுவின் பக்கம் ஓடி வருவதும், கேட்டை திறக்கச் சொல்லி கெஞ்சுவதுமாக பதற்றத்துடன் இருந்தார்.

வால்டாக்ஸ் சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு லாரியின் முன்பாக சென்று தமிழரசு படுத்துக் கொள்ள போலீஸ் வந்து அவரது கையைப் பிடித்திழுத்தது.. இப்போது பரிதி ஓடி வந்து போலீஸாரிடம் கெஞ்சத் துவங்கினார். “என் அப்பாவை பார்க்கணும்.. உள்ள விடு.. முடியுமா? முடியாதா...?” என்று தமிழரசு தொண்டை கிழிய கத்த.. “ஓரமா வாங்க.. பேசுவோம்..” என்றே சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தது போலீஸ்.

அதிகமான பத்திரிகையாளர்களும் அப்போது அங்கே இல்லை. அதிகமான தொண்டர்களும் இல்லை.. அந்தப் பக்கமாக இரவு வேலைக்காகச் சென்றவர்களும் இந்தக் கூத்தைப் பார்த்துவிட்டு ஓடி வந்தவர்கள் பரிதி இளம்வழுதியைப் பார்த்துதான் “என்னண்ணே.. என்னாச்சு..?” என்றெல்லாம் கேட்டார்கள். மனிதர் பாவம்.. ஒரு வார்த்தை சொல்வதற்குள் அழுதேவிட்டார்..

கொஞ்ச நேரத்தில் டாடா சபாரி காரில் அங்கே வந்தார் முரசொலி மாறன். கருணாநிதியை தூக்கிக் கொண்ட போலீஸார், ஆலிவர் சாலை வீட்டிலிருந்து கிளம்பினாலும், முரசொலி மாறனை உடனேயே விடவில்லை. கீழே ஓடி வந்த ராஜாத்தியையும், மாறனையும் உள்ளேயே வைத்து கதவை மூடிவிட்டது.

கருணாநிதியை பத்திரமாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்குள் போய் உட்கார வைத்த பின்புதான், ஆலிவர் சாலை வீட்டில் முரசொலி மாறனை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். போலீஸும் ஆலிவர் சாலையில் இருந்த தனது பாதுகாப்பை உடனேயே  விலக்கிக் கொள்ள தனது காரில் ராஜாத்தியம்மாளையும் அழைத்துக் கொண்டு, கருணாநிதியை கமிஷனர் அலுவலகத்திற்குத்தான் கொண்டு போயிருப்பார்கள் என்று நினைத்து எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்துள்ளார் முரசொலி மாறன்.

அங்கே இவர்கள் போன நேரத்தில்தான், செய்தி கிடைத்து டி.ஆர்.பாலுவும், செல்வியும், தயாளு அம்மாளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஓடி வந்திருக்கிறார்கள். கமிஷனர் அலுவலகமே இருட்டாக இருந்தாலும் மெயின் பில்டிங்கில் போலீஸார் கூட்டமாக இருப்பதைப் பார்த்த்தும் அங்கேதான் கருணாநிதி இருக்கிறார் என்று நினைத்து உறவினர்கள் கூட்டமும் அங்கே ஓடியிருக்கிறது.

இவர்கள் வருவதை போர்டிகோவில் இருந்தபடியே பார்த்த முத்துக்கருப்பன் ஓடோடிச் சென்று தனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டுள்ளார். செல்வி அவருடைய அறைக் கதவை பல தடவைத் தட்டியவுடன்தான் திறந்துள்ளார் முத்துக்கருப்பன். “எங்க அப்பா எங்க..?” என்ற செல்வியின் கேள்விக்கு.. “ஐ டோண்ட் நோ.. அவர் இங்க இல்லை..” என்று சொல்லிவிட்டு மீண்டும் கதவைத் தாழ்ப்பாள் போட்டு பதுங்கிவிட்டார் முத்துக்கருப்பன். 

முரசொலி மாறனும், டி.ஆர்.பாலுவும் அந்த பில்டிங் முழுவதையும் சுற்றிப் பார்த்தபடியே ஓடியிருக்கிறார்கள். அந்த பில்டிங்கில் அவர் இல்லை என்பது தெரிந்த பின்புதான் மறுபடியும் போனில் யார், யாரையோ தொடர்பு கொண்டு விசாரித்து அரசினர் தோட்டத்திற்கு அனைவரும் ஒரே காரில் வந்திருக்கிறார்கள்.

காரில் அவருடன் செல்வி, ராஜாத்தி, தயாளு அம்மாள், டி.ஆர்.பாலு ஆகியோரும் இருந்தனர். காரில் இருந்து இறங்கிய டி.ஆர்.பாலு கதவைத் திறக்கும்படி சொல்ல போலீஸார் மறுத்தனர். தான் ஒரு மத்திய அமைச்சர் என்றெல்லாம்கூட சொல்லிப் பார்த்தார் பாலு. கத்திப் பார்த்தார். ம்ஹூம்.. பலனில்லை.  காரில் அமர்ந்திருந்த நிலையில் பொறுமையிழந்த முரசொலி மாறன், தனது டிரைவரிடம் காரின் மூலம் கதவை இடித்துத் தள்ளும்படி சொன்னார்.. 

கிடைத்த கேப்பில் நாமளும் உள்ளே நுழையலாம் என்று பத்திரிகையாளர்களும் துடியாய் துடித்து கேட் அருகே சென்று காத்திருக்க.. கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு அவர்களும் அந்தப் பக்கம் கேட்டை தள்ளிக் கொண்டு நின்றார்கள். ஆனால் காரின் சக்திக்கு முன்னால் போலீஸாரால் நிற்க முடியாமல் போக, கதவை விட்டுவிட்டார்கள். கார் உள்ளே பறக்கத் துவங்க.. சில பத்திரிகையாளர்கள் மட்டும் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள். பரிதியும், தமிழரசுவும்கூட பின்னால் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடியது பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.. மறுபடியும் கதவு இறுக மூடப்பட்டது.

சிறிது நேரத்தில் கனிமொழியும், அரவிந்தனும் தனி காரில் வந்து இறங்கினார்கள். கனிமொழி அப்போது ஆழ்வார்பேட்டையில் நான் குடியிருந்த தெருவிற்கு அருகில் இருக்கும் தெருவில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருந்தார். செய்தி லேட்டாக கிடைத்திருக்கும்போல.. வாசலில் நின்றிருந்த பொறுப்பு அதிகாரி(ரத்தினசாமி என்று ஞாபகம்) கனிமொழியையும், அரவிந்தனையும் உள்ளேவிட மறுத்தார். “ஸார்.. கலைஞரோட டாட்டர் ஸார்..” என்று பத்திரிகையாளர்களே சிபாரிசு செய்தும், “உங்க வேலையைப் பாருங்க” என்று வெடித்தார்..

கனிமொழிக்கும், அவருக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடந்தது. என்ன சொன்னாலும் “முடியாதுன்னா முடியாது..” என்று முறைப்புக் காட்டினார் அவர்..! இந்த நேரத்தில் சன் டிவி நிருபர் உள்ளே சென்றுவிட்டதால் இந்தக் கூத்தை படம் பிடிக்க முடியாத நிலைமை. 

5 நிமிடங்கள் கழித்து உள்ளே போக முடியாத மற்ற பத்திரிகையாளர்கள் கோரஸாக போலீஸை எதிர்த்துக் குரல் எழுப்ப.. உள்ளே விடலாமா வேண்டாமா என்றெல்லாம் சரியான உத்தரவுகள் கிடைக்காததால் போலீஸும் தயக்கத்துடன் சில பத்திரிகையாளர்களை மட்டும் உள்ளே அனுமதித்தார்கள். இந்த நேரத்தில் எங்கிருந்தோ ஓடி வந்த ஆயிரம்விளக்கு உசேன், கனிமொழியைப் பார்த்த மாத்திரத்தில் கதறிவிட்டார். கனிமொழியை உள்ளேவிட மறுத்தது பற்றி சில பத்திரிகையாளர்கள் உசேனிடம் சொல்ல, உசேன் அந்த அதிகாரியிடம் சென்று ஏதேதோ கோபத்தில் கொட்டித் தீர்த்தார்.

எந்தப் பக்கமோ பார்த்துக் கொண்டே “திறந்து விடுய்யா..” என்று எரிச்சலுடன் சொல்லி போலீஸுக்கு சிக்னல் கொடுத்தார் அந்த அதிகாரி. அரவிந்தனின் கையைப் பிடித்தபடியே கனிமொழி உள்ளே ஓடத் துவங்க.. கிடைத்த இடைவெளியில்  நிருபர்களும் உடன் ஓடினார்கள்..

இன்னும் ஒரு 5 நிமிடங்கள் கழித்து சில நிருபர்கள் மெயின் கேட்டின் மேலேயே ஏறி உள்ளே இறங்கத் துவங்க.. வேறு வழியில்லாமல் கதவைத் திறந்துவிட்டார்கள் போலீஸார்.. திமுதிமுவென்று ஓடினோம்.. 

உள்ளே சி.பி.சி.ஐ.டி. ஆபீஸைச் சுற்றிலும் கம்பி வலையுடன் காம்பவுண்டு இருந்த்து. அங்கேயும் மெயின் கேட்டில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்கள். நான் போய் நின்றபோது அந்த அலுவலகத்தின் மாடியில் இருந்த ஒவ்வொரு பகுதியாக செல்வியும், பரிதியும், தமிழரசுவும் சுற்றிக் கொண்டிருந்த்து தெரிந்த்து. தனது அவிழ்ந்து போயிருந்த கொண்டையை சரி செய்தபடியே “டேய்.. பாருங்க.. எல்லாத்துக்கும் நீங்க பதில் சொல்லணும். சொல்லியே தீரணும்..” என்று கத்திக் கொண்டே கருணாநிதியைத் தேடிக் கொண்டிருந்தார் செல்வி.

கனிமொழியும், அரவிந்தனும் இன்னொரு கேட்டின் அருகே நின்று உள்ளே செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது கருணாநிதி மாடியில் இல்லாமல் அந்த அலுவலகத்தின் உள்ளே நேர் கடைசியில் இடது கோடியில் இருந்த கள்ள நோட்டு தடுப்புப் பிரிவு அலுவலகத்தின் டி.எஸ்.பி. அறையில் ஒரு மூலையில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார்.

அந்த அலுவலகத்திற்கு 2 கேட்டுகள் உண்டு. மெயின் கேட்டுடன், கார்கள் வந்து போகும் மற்றொரு கேட்டும் உண்டு. அந்தப் பக்கமும் போலீஸ் நின்று கொண்டு பத்திரிகையாளர்களை உள்ளேவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த்து. செல்வி, அவ்வப்போது மாடியில் இருந்து பத்திரிகையாளர்களை பார்த்து "அப்பாவை காணோம்.." என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

திடீரெனறு 2 அம்பாசிடர் கார்கள் புறப்படும் நிலையில் தயாராக வைக்கப்பட பத்திரிகையாளர்கள் பதைபதைத்தார்கள். இந்த முறை எப்படியாவது புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்கள். இப்போது கலைஞரை மெதுவாக அழைத்து வருவது வெளியில் இருந்து பார்த்தபோது நன்கு தெரிந்தது. இந்த நேரத்தில்தான் மாடிப்படியில் இருந்து மாறனும், செல்வியும், பரிதியும் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

கருணாநிதியை காரில் ஏற்றும்போது செல்வி பார்த்துவிட்டு ஓடி வர.. அவரை போலீஸ் இழுத்துப் பிடித்துக் கொண்டது. பரிதி ஓடோடிப் போய் கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டார். மாறன் கத்த ஆரம்பித்தார். “எங்க கொண்டு போறீங்க..? இவரை எங்க கொண்டு போறீங்க..?” என்று உச்சஸ்தாயியில் கத்தினார் மாறன்..  

இன்ஸ்பெக்டர் முருகேசன் ஏதோ சொல்லி கருணாநிதியை காரில் ஏற்றப் போக முதலில் பரிதி உள்ளே ஏறி அமர்ந்து கொண்டார். அடுத்து கருணாநிதி அமர.. சட்டென்று தானும் காரில் ஏறி அமர்ந்து கொண்டார் முரசொலி மாறன். வேறு வழியில்லாமல் தாமதமிக்க விரும்பாத போலீஸ் வண்டியை எடுக்கச் செல்ல... எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்கு போனது அந்த அம்பாசிடர் கார்.

50-க்கும் மேற்பட்ட போலீஸார் திபுதிபுவென்று வந்து பத்திரிகையாளர்களைச் சூழ்ந்து கொண்டதால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் எங்க போனாலும் விரட்டுவோம் என்று சொல்லி காரை பின் தொடர்ந்து சிலர் ஓடினார்கள். நானும் வெளி கேட்வரையிலும் ஓடி வந்தாலும், அதற்கு மேல் முடியவில்லை.. பல நிருபர்கள் அவசரத்திற்கு டூவிலரில் வந்திருந்தாலும் அதை எடுக்கக் கூட நேரமில்லாமல் இருந்த ஆட்டோவில் ஏறி பறந்தார்கள்.. இப்படித்தான் பல ஆட்டோக்கள் அங்கேயிருந்து பறந்தன.

போயே தீருவது என்று முடிவெடுத்ததால், பின்தொடர்ந்த ஒருவரின் டூ வீலரில் லிப்ட் கேட்டு பின்னாலேயே சென்றேன்.. எனக்குப் பின்னால்கூட போலீஸ் வேன்களும், கார்களும் சாரை, சாரையாகச் சென்றதை பார்க்க முடிந்தது.

அப்போது விடுமுறை தினம் என்பதாலும் இந்த வழக்கு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டியது என்பதாலும் அந்த நீதிமன்றத்தின் நீதிபதி அசோக்குமாரிடம் அந்த நள்ளிரவிலேயே "ஒருவரை கைது செய்துள்ளோம். அவசரமாக ரிமாண்ட் செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்து அவரது தூக்கத்தையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள் போலீஸார்.

அவருடைய வீடு இருந்த கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் இருக்கும் டவர் பிளாக் குடியிருப்புக்குத்தான் கருணாநிதியை கொண்டு போகப் போகிறார்கள் என்பதை உணர்ந்து நிருபர்களும் அங்குதான் போனார்கள்.. எழும்பூர் வழியாக போலீஸார் சென்றிருந்தாலும் பின் தொடர்ந்து சென்ற நாங்கள், மோட்சம் தியேட்டர் வழியாக இடது புறம் திரும்பி அபிராமி தியேட்டர் ரோட்டில் சென்ற சில வினாடியிலேயே ரோட்டின் வலது புறம் கலைஞரை ஏற்றியிருந்த அதே அம்பாசிடர் திரும்பி வருவதைப் பார்த்து குழப்பமாகிவிட்டது.

“எதுக்கு இந்தப் பக்கம் கொண்டு வர்றானுக..?” என்று யோசிக்கக்கூட நேரமில்லாமல் வண்டியை திருப்பி ராங்சைடிலேயே ஓட்டிச் சென்றோம். எனக்குப் பின்னும் எத்தனையோ டூ வீலர்கள்.. ஆட்டோக்கள்.. சிலர் ஓடி வருவதைக்கூட பார்த்தோம்.. 

வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டுமெனில் அதன் பின்பக்க ரோட்டில் சென்று சுற்றி வந்துதான் செல்ல வேண்டும். ஆனால் இந்த ரூல்ஸெல்லாம் போலீஸுக்கு இல்லையே.. போலீஸார் ஒன்வேயில் பாலத்தின் மேலேயே செல்ல.. இடையில் டூவிலரில் வந்த சில நிருபர்கள் டூவிலர்களை அப்படியே நடுரோட்டில் போட்டுவிட்டு வேப்பேரி ஸ்டேஷனின் காம்பவுண்டு சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே இறங்கிவிட..

ரோட்டில் கிடந்த டூவிலர்களை அகற்ற சில நிமிடங்களானது போலீஸுக்கு. அந்த கேப்பில் பல நிருபர்கள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாலும், போலீஸாரை வைத்து அவர்கள் அனைவரையும் சுவர் ஓரமாக நெருக்கி வைத்து அடைத்தது ஜெயலலிதாவின் ஜனநாயகமான காவல்துறை. கருணாநிதியின் அம்பாசிடர் வந்து நின்றவுடன் பின்னாலேயே வந்த காரில் இருந்து இறங்கி வந்த ஜார்ஜ், மாறனை இறங்கச் சொன்னார்.. 

ஆனால் மாறன் மறுத்தார். “ஜட்ஜ் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு இங்க எதுக்குக் கொண்டாந்தீங்க..?” என்று அவர் மறுத்துப் பேச கொஞ்சமும் யோசிக்காமல்  போலீஸாரை அழைத்து முரசொலி மாறனை அலேக்காகத் தூக்க வைத்தார் ஜார்ஜ். பரிதி, மாறனின் பின்னாலேயே ஓடிப் போக.. மாறன் தன்னைத் தூக்கிச் சென்ற காவலர்களை தனது கையாலேயே அடித்தார். உடன் ஓடிய பரிதி இதனைத் தடுக்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவித்துப் போனார். அடுத்து கருணாநிதியை காரில் இருந்து கீழேயிறக்கி கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வேறொரு அறையில் இருக்க வைத்தார்கள்.

கனிமொழியும், அரவிந்தனும் இப்போதும் மிகவும் சிரமப்பட்டுத்தான் ஸ்டேஷன் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். ஸ்டேஷனுக்குள் நுழைய கனிமொழி முனைந்தபோது ஜார்ஜ் “உங்களை யார் உள்ள விட்டது..? இவங்களை யார் உள்ள விட்டது..?” என்று சீறித் தள்ளினார்..! 

உடனேயே பெண் போலீஸ் பட்டாளம் கனிமொழியையும், அரவிந்தனையும் சூழ்ந்து கொண்டது.. அரவிந்தனின் சட்டையைப் பிடித்து சிலர் இழுக்க.. கனிமொழியின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினார்கள் சில போலீஸார். இது அத்தனையையும் தூரத்தில் இருந்து பார்த்து பத்திரிகையாளர்கள் பதறித்தான் போனார்கள். அவர்கள் நிலைமை இதைவிட பரிதாபம்..! அதிலும் சில பெண் நிருபர்கள் பட்டபாடு இருக்கே.. சொல்ல முடியலை..!

கனிமொழி ஏதாவது ஒரு வழியில் உள்ளே நுழைய முயன்றபோது அவருக்கும் இன்னொரு அதிகாரிக்கும் இடையில் வாய்ச் சண்டை மூண்டது. அவர் பட்டென்று கனிமொழியின் கையைப் பிடித்திழுத்து உள்ளே செல்ல.. அரவிந்தன் அவர்களை பாலோ செய்ய முயல.. அரவிந்தனை இழுத்துப் பிடித்து நிறுத்தினார்கள் சில போலீஸார்.

உள்ளே பெஞ்சில் படுக்க வைக்கப்பட்டிருந்த முரசொலி மாறனை வெளியில் இருந்தே பார்க்க முடிந்த்து. அவருக்கு அருகில் நின்றபடியே பரிதி இளம்வழுதி அவரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். மாறன் தன் நெற்றியில் பல முறை அடித்தபடியே புலம்பிக் கொண்டிருந்தார். நேரம் விடியும்போல இருந்தபோது, மீண்டும் அதே அம்பாசிடர் கார் திரும்பி நிற்க.. திடீரென்று கருணாநிதியை திரும்பவும் அழைத்து வந்தார்கள்.

"கொண்டு போகப் போறாங்க.." என்ற சிக்னல் கிடைத்தவுடன் வாசலில் நின்றிருந்த நிருபர்கள் டூவீலரை எடுத்துப் பறக்கத் துவங்க.. நானும் வந்த அதே டூவீலரில் தொற்றிக் கொண்டு பறந்தேன். கிட்டத்தட்ட சேஸிங்தான்.. அவ்வளவு அசுர வேகத்தில் சென்றது அந்த அம்பாசிடர்..! ஏற்கெனவே அங்கேயும் பல பத்திரிகையாளர்கள் குவிந்திருந்ததால் ரோடே தெரியாத அளவுக்கு மனிதத் தலைக்ள் கூட்டம்தான் தென்பட்டது.

இப்போது கருணாநிதியின் கார் மட்டுமே டவர் பிளாக்கிற்குள் உள்ளே போக பின் தொடர்ந்து வந்த போலீஸ் கார்களின் வரிசையே 10-க்கும் மேலே இருந்ததால் பலரும் இறங்கி ஓட்டமும், நடையுமாக வந்தார்கள். முதலில் கனிமொழியும், அரவிந்தனும் கேட் அருகே போய் சண்டை போட அவர்களுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் குரல் கொடுக்க.. அந்தக் களைப்பிலும் காவலுக்கு இருந்த ஒரு இன்ஸ்பெக்டர் “கொஞ்சம் பொறுங்கம்மா..  கேட்டுச் சொல்றோம்..” என்றார்..

அதற்குள்ளாக வெளியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஒரு கிசுகிசு.. “சென்ட்ரல் ஜெயிலுக்குத்தானே அவரை கொண்டு போவாங்க.. அங்க முன்னாடி போயிரலாமா? இல்லாட்டி வேற ஊருக்குக் கொண்டு போவாங்களா..?” என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.  உள்ளேயிருந்த யாரோ ஒருவரிடம், சில பத்திரிகையாளர்கள்  செல்போனில் பேசி ஏதோ தகவலைக் கேட்டுவிட்டு பதற்றத்துடன் தங்களது வாகனங்களை எடுத்துப் பறக்க.. ஒரு கூட்டமே அவர்களைப் பின் தொடர்ந்தது.. அவர்கள் மத்திய சிறை நோக்கிச் சென்றார்கள் என்பது பின்புதான் தெரிந்த்து..

கலைஞரின் குடும்பத்தினர் ஆளுக்கொரு காரில் வந்து இறங்கி கேட்டில் வந்து நிற்க, உள்ளே ஆள் அனுப்பி அவர் வந்து ஏதோ சொன்னவுடன்தான் உள்ளே அனுமதித்தார்கள் போலீஸார்.. முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதியும் அந்த கம்பி கேட்டை பிடித்தபடி அனத்திக் கொண்டிருந்தார்கள். துரைமுருகன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு கூப்பிட்டு, “என்னய்யா புகழ்ந்து எழுதுனீங்க..? உங்களுக்கே இது அடுக்குமா..? நியாயமாய்யா..? என்னிக்காச்சும் ஒரு நாள் தலைவரு உங்களை நிக்க வைச்சு பேசியிருப்பாரா..? சாப்பிட்டீங்கன்னா ஒரு நாளாச்சும் கேக்காம இருந்திருக்காரா..?” என்றெல்லாம் தானாகவே புலம்பித் தள்ளிக் கொண்டிருந்தார்.

எப்போதும் கருணாநிதியுடன் கைத்தடியாகவே திரிந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி எங்கே என்று பலரும் தேடினார்கள். பின்னர்தான் விஷயம் தெரிந்தது. அதற்கு முந்தைய வாரம்தான் மும்பை நகர தி.மு.க. செயலாளரின் குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்திற்காக மும்பை சென்றிருந்த வீராசாமி, அங்கே ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து இடுப்பு முறிவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் படுத்துக் கிடக்கிறார் என்பதை கட்சிக்காரர்கள் பின்பு சொன்னார்கள்..!

கருணாநிதியின் குடும்பத்தினர் குடியிருப்புக்குள் சென்ற பின்பு கடைசியாக வந்த அம்பாசிடர் காரில் வந்து இறங்கினார் முரசொலி மாறன். அவரது வேட்டி கிழிந்து கிடந்தது. ஒரு பக்கம் மனைவியும், இன்னொரு பக்கம் மகள் அரசியும் அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள.. அவிழ்ந்து கிடந்த வேட்டியை கட்டக்கூட திராணியில்லாமல் படியேறினார் மாறன். அவரை அந்தக் கோலத்தில் பார்ப்பது அதுதான் முதல் முறை என்பதால் பத்திரிகையாளர்களின் முகத்தில் அப்படியொரு வருத்தம். வெளியில் நின்றிருந்த தி.மு.க. தொண்டர்கள் சிலர் இதைப் பார்த்து ஆவேசப்பட்டு ஜெயல்லிதாவை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்குத் திட்டித் தீர்த்தார்கள்.(கோபம் வரத்தானே செய்யும்?)

எப்படியும் சென்ட்ரல் ஜெயிலுக்குத்தானே கொண்டு செல்வார்கள். அனைவருக்கும் முன்பாக அங்கே போய்விடுவோம். அப்போதுதான் பார்க்க முடியும் என்று நினைத்து அப்போது அங்கே கிளம்பிய தோழர் ஒருவரின் டூவிலரில் தொற்றிக் கொண்டு பறந்தேன்..

அந்தக் காலை நேரத்தில் நடந்த கூத்துக்களை சன் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மக்கள் டிவியிலேயே மூழ்கிவிட்டார்கள் போலும்.. கீழ்ப்பாக்கத்திலேயே டவர் பிளாக் அருகில் இருப்பவர்களே அதிகம் அறியாமல் இருந்துவிட்டார்கள்..!

சென்ட்ரல் ஜெயிலுக்குப் போகும் மேம்பாலத்திலும் தடுப்பு வைத்து முன்னெச்சரிக்கையாக தடுத்திருந்தது போலீஸ். ஆனாலும் பத்திரிகையாளர்கள் அதையெல்லாம் சட்டை செய்யாமல் மேம்பாலத்தில் ஏறி ஓட்டமும், நடையுமாக சென்று கேட்டின் அருகில் நின்றிருந்தார்கள்.

காலை சூரியனின் வெளிச்சம் அத்தனை பேருக்கும் இதமான சூட்டைக் கொடுத்த நேரத்தில்.. காலை 7 மணி இருக்கும்.. வழக்கம்போல பலத்த பாதுகாப்புடன் கலைஞரை அழைத்து வந்தார்கள். அவர்களின் கார்கள் மட்டும் உள்ளே செல்ல தொடர்ந்து வந்த கருணாநிதி குடும்பத்தினரின் கார்களைத் தடுத்துவிட்டார்கள்.

முரசொலி மாறனின் உடல் நலத்திற்காக அவரை அப்படியே அப்போலா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அட்மிட் செய்துவிட்டார்கள். நள்ளிரவில் அரசினர் தோட்டத்தில் நடந்த வன்முறையின்போது கலாட்டா செய்த்தாகச் சொல்லி டி.ஆர்.பாலுவை கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி முன் ஆஜர்படுத்தி வேலூர் சிறைக்குக் கொண்டு போய் சேர்த்துவிட்டார்கள்.

மத்திய சிறையின் மெயின் கேட்டின் முன்பு வந்து நின்ற காரில் இருந்து கனிமொழி, கருணாநிதி, டாக்டர் கோபால் மூவரும் இறங்கினார்கள். கருணாநிதி அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார். கனிமொழி வேகவேகமாக மேம்பாலத்தின் அருகில் வந்து சத்தமாக நிருபர்களிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போனார். அவர் சொன்ன பின்புதான், நீதிபதி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துப் போகச் சொல்லியும் கொண்டு போகாமல் இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்தது.

உள்ளேயிருந்து போலீஸ் வருவதும், கருணாநிதி மற்றும் டாக்டரிடம் பேசுவதுமாக நேரம் போய்க் கொண்டிருந்த்து. இந்தப் பக்கம் முரசொலி மாறனின் மகள் அன்புக்கரசி, நிருபர்களிடம் ஆங்கிலத்தில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார். அப்போதுதான் ஸ்டாலின் மனைவி துர்கா இன்னும் சில பெண்களுடன் அங்கே ஓடி வந்தார். 

அவரது வீட்டில் நடந்த ரெய்டு பற்றி பல பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு துக்கம் விசாரிக்க.. தன் வாழ்நாளில் இதுவரையில் பார்த்திராத 'மரியாதை'யைக் கண்டுவிட்ட துர்கா அதை விவரிக்கும்போது அவரது கண்களும், உதடுகளும் பட்டபாடு.. பாவம்..! பெரும் பிரயத்தனப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டார் துர்கா. அப்போது துர்கா ஸ்டாலினின் அருகில் இருந்த ஒரு பெண், போலீஸை நோக்கி தன் செருப்பைத் தூக்கிக் காட்டினார். துர்கா ஸ்டாலினே அந்தப் பெண்ணை அடக்கினார்.

அப்போது டி.இராஜேந்தர் தி.மு.க.வில்தான் இருந்தார். அவருடன் காரில் சிலர் வந்திருந்தனர்.(யார் என்று நினைவில்லை) அவர்களைக் கை காட்டி “அமைச்சர்கள்யா..? சென்ட்ரல் மினிஸ்டர்யா..?” என்று சொல்லி தடுப்பை அகற்றும்படி கத்திப் பார்த்தார் டி.ஆர். போராடிப் பார்த்தார் டி.ஆர்.. ம்ஹூம் அசைந்து கொடுக்கவில்லை போலீஸ்.. தொண்டை கிழிய கத்திவிட்டு ஓய்ந்து போய் ஓரமாகப் போய் உட்கார்ந்து கொண்டார் டி.ஆர்.

இன்னொரு பக்கம் மேம்பாலத்தின் நடைமேடையிலேயே சோகத்துடன் வந்து உட்கார்ந்து கொண்டார் தயாளு அம்மாள். அங்கேயிருந்தபடியே பாலத்தின் கைப்பிடிகளின் இடைவெளியில் தூரத்தில் உட்கார்ந்திருந்த கலைஞரை பார்த்து அவர் முகம் சொன்ன கதைகள்.. ஏராளம்.. காரணம் எதுவாக இருந்தாலும், எந்த மனைவிக்கும் இந்தக் கொடூரம் நடக்கத்தான் கூடாது..! இது சிறுக சிறுக ஒருவரை மனரீதியாக துன்புறுத்தி சித்ரவதை செய்வதற்குச் சம்மானது..! 

நேரம் ஆக.. ஆக.. மேம்பாலத்தில்  உடன்பிறப்புகளின் கூட்டம் அதிகரித்து ஜெயல்லிதாவைக் கண்டித்து கூச்சலும், கோஷமும் எழுப்பிக் கொண்டிருக்க.. வீரபாண்டி ஆறுமுகமும், துரைமுருகனும் இந்தச் சோகத்தை பார்த்தபடியே அவரவர் வந்த கார்களில் சாய்ந்து நின்று கொண்டிருந்தனர்..

யாரோ ஒரு சிறை அதிகாரி வேகமாக கருணாநிதியிடம் வந்து ஏதோ கோபமாகச் சொல்ல.. கனிமொழி ஆவேசமாக அவரைப் பார்த்து கத்த.. இதைப் பார்த்து கீழேயிருந்து தொண்டர்கள் உச்சஸ்தாயியில் குரல் கொடுக்க.. சில தொண்டர்கள் கீழே குதிக்கவும் தயாரானார்கள்.. அருகில் இருந்தவர்கள்தான் ஓடோடிச் சென்று இழுத்துப் பிடித்தார்கள்.

கனிமொழியை கையமர்த்தி சமாதானப்படுத்திய கருணாநிதி தன்னைத் தூக்கிவிடும்படி சைகை செய்ய கனிமொழியும், போலீஸாரும் உதவி செய்ய மெல்ல எழுந்தார் கருணாநிதி. ஒரு முறை பின்புறம் திரும்பிப் பார்த்து பலகீனமாக நிலையில் தன் கைகளை அசைக்க.. கூட்டம் கதறி அழுதது.. செல்வி தன் அருகில் இருந்த ஒரு பெண்ணின் தோளில் முகம் புதைத்து அழுக..

கலைஞரை உள்ளே வாங்கிக் கொண்ட சிறைக் கதவுகள் பட்டென்று மூடிக் கொள்ள.. அதைக் கை காட்டியே அத்தனை உடன்பிறப்புகளும் கதறினார்கள்.. அந்த வழியாக பேருந்துகளும் தடை செய்யப்பட்டுவிட்டதால் மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்த பொதுமக்களும் இதைப் பார்த்து உச்சுக் கொட்டி, திகைத்துப் போய் நின்றிருந்தார்கள்.

இதுவரையில் மேம்பாலத்தின் இடது பக்கம் கீழ்ப்பாக்கம் செல்லும் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆயுதப் படை பேருந்தில் இருந்து இறங்கிய போலீஸ் கூட்டத்தைப் பார்த்த்தும் நிலைமை புரிந்தது.. இதற்கு மேலும் இங்கே இருந்தால் ஆபத்துதான் என்று உணர்ந்து அண்ணா சாலை நோக்கிய பாதையில் கீழே இறங்கி நின்றிருந்தேன்.. கலைஞரின் குடும்பத்தினர் சாபம் விடுவதைப் போல கைகளை நெருக்கி திட்டி விட்டுத்தான் காரில் ஏறினார்கள்..!

வீரபாண்டி ஆறுமுகம் தன் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுதபடியே காரில் ஏறிச் சென்றார்.. துரைமுருகனை இதற்கு மேல் நான் பார்க்கவில்லை. டி.ராஜேந்தர் மட்டுமே மேம்பாலத் தடுப்பு அருகே நின்று போலீஸாரிடம் ஏதோ வாதாடிக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் போலீஸாருக்கும், உடன்பிறப்புகளுக்கும் இடையே மோதல் வெடிக்க.. நான் நினைத்தது போலவே லத்தி சார்ஜ் உத்தரவானது.. ஓட.. ஓட விரட்டி விரட்டி அடித்தார்கள். உடன்பிறப்புகளும் கல்லை பொறுக்கி எறிய.. போலீஸும் கல்லைப் பொறுக்கி எறிய.. இதில் யார் கலகம் செய்கிறார்கள். யார் காப்பாளிகள் என்றே தெரியாமல் போனது..!

இதற்கிடையில் முந்தைய நாள் இரவில் பெங்களூரில் தனது மைத்துனர் வீட்டுக்குச் சென்றதால் கைதில் இருந்து தப்பிய ஸ்டாலின் செய்தி கிடைத்து உடனேயே சென்னை திரும்பினார். நேராக வேளச்சேரி வீட்டிற்குச் சென்று தனது குடும்பத்தாருக்குக் கிடைத்த 'மரியாதை'யைக் கண்டு மனம் கொதித்துப் போய் நேராக கோபாலபுரம் வந்தார். அங்கே இருந்த தனது தாயையும், சகோதரியையும், மனைவி, பிள்ளைகளையும் பார்த்துவிட்டு அங்கேயே பத்திரிகையாளர்களுக்கு பேட்டியும் அளித்தார்.

“இப்போ நேரா நானே போய் சரண்டராகப் போறேன்.. நிச்சயம் கால் வலி, கழுத்து வலின்னு சொல்லி ஆஸ்பத்திரில போய் படுத்துக்க மாட்டேன்..” என்று பேட்டியளித்துவிட்டு அதே நீதீபதி அசோக்குமாரிடம் சரண்டரானார். அவரை அழைத்துச் சென்ற போலீஸார் சென்னை மத்திய சிறையில் வைக்க இடமில்லை என்று சொல்லி மதுரைக்கு நாடு கடத்தினார்கள்..!

கருணாநிதி கைது நடந்த ஜூன்-30 காலையில் இருந்தே சன் டிவி ஒரு வீடியோவை திரும்பத் திரும்ப வெளியிட்டது. அதில் இன்ஸ்பெக்டர் முருகேசன் கலைஞரை இழுத்துச் செல்லும்போது “ஐயையோ.. கொல்றாங்களே.. கொல்றாங்களே..” என்று கருணாநிதி கதறுவதைப் போல பின்னணி வாய்ஸை கொடுத்து ஒளிபரப்பினார்கள். (இதனால்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாமல் நழுவினார் கருணாநிதி.)

அதே நேரம் அறிவாலயத்தின் எதிரே நடுரோட்டில் தி.மு.க. தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களைக் கலைக்க தடியடியை நடத்திய போலீஸார் உச்சக்கட்டமாக அறிவாலயத்தின் உள்ளேயே நுழைந்து சன் டிவி அலுவலகத்திலும் கொடூரத் தாக்குதலை நடத்தியது. 

அதே நேரத்தில் அன்று மதியமே ஜெயா டிவியில் தோன்றிய இன்ஸ்பெக்டர் முருகேசன், டி.ஐ.ஜி. முகமது அலி இருவரும் கலைஞரின் வீட்டில் தாங்கள் தாக்கப்பட்டதாக ஒப்பாரி வைத்தார்கள். இதற்கு உதாரணமாக அவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டார்கள். அதில் முரசொலி மாறன் முகமது அலியின் கண்ணில் குத்துவது போன்று கிராபிக்ஸ் வேலையைச் செய்து காண்பித்து தமிழகத்து மக்களை முட்டாளாக்கினார்கள்.

அந்த வீடியோவை உடனுக்குடன் அப்போதைய புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் சந்திரசேகரனுக்கு அனுப்பிவைத்து அதுவொரு போர்ஜரி.. கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சி என்று அவரிடமிருந்து சர்டிபிகேட்டை பெற்று மறுநாள் அதனை ஒளிபரப்பியது சன் டிவி.

பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமலும், வேறு வழியில்லாமலும் போலீஸாரே தங்களது ஆட்களை வைத்து எடுத்திருந்த வீடியோக்களை 2 நாட்கள் கழித்து பத்திரிகையாளர்களுக்கு போட்டுக் காண்பித்தது சென்னை போலீஸ். இதன் ஒரு காப்பியை பிரதமருக்கும் அனுப்பி வைத்தது தமிழக அரசு.

சன் டிவியில் காட்டியதுபோல ஆலிவர் ரோடு வீட்டின் வெளிக்கதவு உடைக்கப்படவில்லை என்பது உண்மை. அதேபோல் அவர்கள் வீட்டு போனும் உடைக்கப்படவில்லை. அது அவர்களே செய்த செட்டப் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அதேபோல் அந்த “கொல்றாங்களே..” என்ற வசனமும் இணைக்கப்பட்டதுதான். 

இந்த தில்லுமுல்லுகளை இரண்டு டிவிக்களும் மாறி, மாறி ஓட்டிக் கொண்டேயிருக்க அந்த 2 நாட்களும் தமிழகத்து மக்களுக்கு நல்ல சுவையான விருந்தாக இருந்தது.

சன் டிவியின் நேரடி ஒளிபரப்பினால் நாடே இதைப் பார்த்து பரபரப்பில் இருந்த்து. அப்போதே துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான அத்வானி அரபு நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்ததால் சற்று தாமதமாக கண்டன அறிக்கையை வெளியிட்டார்.

பிரதமர் வாஜ்பாயும், தேசிய ஜனநாயக முன்னணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸும் இந்தக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டிப்பதாக அறிக்கை கொடுத்தார்கள். தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்த சில கட்சிகள் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறின. தி.மு.க. எம்.பி.க்களும், அ.தி.மு.க. எம்.பி.க்களும் கூட்டம், கூட்டமாக பிரதமரைச் சந்தித்து நடந்தது என்ன என்பதைத் தெரிவித்தார்கள்.

ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படும் என்றுதான் நான்கூட நினைத்திருந்தேன். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் தடுத்தவர் ஒரே ஒருவர்தான். அவர் அத்வானி. அத்தோடு காங்கிரஸும் இதனை எதிர்த்த்து. அதே சமயம் கைதையும் கண்டித்தது. 

அன்று இரவே மத்திய அரசின் பார்வையாளர்களாக இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், அமைச்சர்களும் சென்னை வந்தார்கள்.  மறுநாள் காலை சென்னை மத்திய சிறைக்கு வந்து கலைஞரைச் சந்தித்தார்கள் அப்போதைய மத்திய அமைச்சர் வி.கே.மல்ஹோத்ராவும் ஜார்ஜ் பெர்னாண்டஸும். வேறொரு அமைச்சரும் வந்திருந்தார். பெயர் தெரியவில்லை. இவர்களுக்கு சிறைக்கு வெளியே போலீஸ் மரியாதை கொடுத்து கூல் செய்ய முயன்றார் ஆத்தா..! ம்ஹூம்.. இறுக்கமான முகத்துடன் வெளியேறினார்கள் அமைச்சர்கள்.

டி.ஆர்.பாலு கேபினட் மினிஸ்டர் என்பதால் அவரை சிறையில் இருந்து விடுவிக்கும்படி கேட்டு மத்திய உள்துறை செயலாளர் பேக்ஸ் அனுப்ப.. ஆத்தா வழக்கம்போல “தூக்கிக் குப்பைல போடு..” என்று சொல்லிவிட்டார். முரசொலி மாறன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக படுத்த பின்பும், அங்கே சென்ற போலீஸ் அவரை கைது செய்வதாக அறிவித்து அவரைச் சுற்றிலும் போலீஸை நிறுத்தியிருந்தது.

ஜூலை 3-ம் தேதியன்று மத்திய அரசு கடுமையான உத்தரவை பிறப்பித்த பின்பு(அவர்களை ரிலீஸ் செய்யவில்லையெனில் ஜனாதிபதியிடம் சிறப்பு உத்தரவு பெற்று அனுப்பப்படும் என்று பேக்ஸ் வந்த்தாம்) பின்பு  மதியம் 3 மணி அளவில் டி.ஆர்.பாலுவையும், முரசொலி மாறனையும் விடுவிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

வேலூர் சிறையில் இருந்து வெளியே வரும்போது காலை நொண்டி நொண்டி நடந்து வந்த டி.ஆர்.பாலு, சிறையில் இருந்து வெளியில் வந்தவுடனேயே படுவேகமாக காரை நோக்கி நடந்து சென்று காரில் ஏறியது கண் கொள்ளாக் காட்சி..!

இதற்கிடையில் முத்துக்கருப்பன், கிறிஸ்டோபர் நெல்சன், ஜார்ஜ் மூவரையும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதாக தடாலென்று அறிவித்தது மத்திய அரசு. ஜெயல்லிதா இதை வன்மையாகக் கண்டித்தார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு தன்னிச்சையாக ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைத்துக் கொள்ள முடியாது என்று கண்டன அறிக்கை வெளியிட்டார். இதில் ஜார்ஜுக்கு மத்திய அரசில் கிடைத்த பணி, மத்திய அமைச்சரவைக்கான செக்யூரிட்டி ஆபீஸர்.. எல்லாம் காரணமாத்தான்.. மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கும்போது வாசல்ல நின்னுக்கிட்டு, வர்ற போற மந்திரிகளுக்கு சல்யூட் அடிக்கிறதுதான் வேலையே..! டி.ஆர்.பாலுவுக்கும், முரசொலி மாறனுக்கும், ஜார்ஜை சல்யூட் அடிக்க வைப்பதுதான் மத்திய அரசின் திட்டம். 

மூன்று அதிகாரிகளும் நிர்வாக டிரிப்யூனலில் மனு செய்தார்கள். அவர்களது மனுவை ஏற்றுக் கொண்ட ஆணையம் அவர்களை மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. 

இது எல்லாவற்றையும்விட கிண்டி ராஜ்பவனில் கவர்னராக வீற்றிருந்த பாத்திமா பீவியின் கண்டு கொள்ளாமைதான் தி.மு.க.வினரை ரொம்பவே நோகடித்துவிட்டது..! கருணாநிதி கைதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்பு, கலவரங்களும் தொடர்ந்து நடந்தன. இந்தச் செயலைச் செய்யும்படி மறைமுகமாக தூண்டிவிடும் வேலையை சன் டிவியும், தி.மு.க. தலைமையும் கச்சிதமாகச் செய்து வந்தன. ஜூலை 2-ம் தேதியன்று கருணாநிதி கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்ன லட்சணத்தில் இருக்கிறது..? கருணாநிதி கைதின்போது நடந்த்து என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு பாத்திமா பீவிக்கு கடிதம் அனுப்ப.. "சட்டத்திற்கு விரோதமாக ஒண்ணுமே நடக்கலையே..?" என்று சர்டிபிகேட் கொடுத்தார் பாத்திமா. இன்னும் கொஞ்சம் டென்ஷனாகிப் போனார்கள் தி.மு.க.வினர்.

எப்பாடுபட்டாவது அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்த மத்திய அரசு, ஆகஸ்ட் 2-ம் தேதியன்று பாத்திமா பீவியிடம் இருந்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தைப் பெற்று அவரை கேரளாவுக்கே அனுப்பி வைத்துவிட்டு, அப்போது ஆந்திர மாநில கவர்னராக இருந்த சி.ரங்கராஜனை கூடுதல் பொறுப்பாக தமிழ்நாட்டையும் பார்த்துக் கொள்ளும்படி சொன்னது.

இவ்வளவு ரகளையும் நடந்து கொண்டிருந்தபோது ஆத்தா திடீரென்று குருவாயூர் கோவிலுக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று ஒரு யானையை அந்தக் கோவிலுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு வந்தது ஆச்சரியமானது.. செய்றதெல்லாம் சேட்டை.. செஞ்சுப்புட்டு எதுக்கு சாமி..?

ஜூலை-4-ம் தேதியன்று கருணாநிதியை வெளியே விட முடியுமா? முடியாதா? என்று மிரட்டல் பாணியில் டெல்லியில் இருந்து உத்தரவுகள் வர.. கொஞ்சம் இறங்கி வந்தார் ஜெயல்லிதா. அன்று மதியம் 3 மணியளவில் கருணாநிதியை விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் உள்துறைச் செயலாளர் மூலமாக கோர்ட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து உத்தரவு வாங்கப்பட்டு, சென்னை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது.

வீல்சேரில் உட்கார வைக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்தார் கருணாநிதி. நேராக தனது வீட்டிற்குச் சென்ற கருணாநிதி குளித்துவிட்டு ஒரு மணி நேரத்திலேயே அறிவாலயம் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொஞ்சம் சந்தோஷம், சோகம், பரிவு, இரக்கம், உருக்கம் என்று எல்லாமுமாக சேர்ந்து இருந்த்து அந்த நேரடி நிகழ்வு.

“அப்படியென்ன உங்களுக்கும், ஜெயல்லிதாவுக்கும் பகை?” என்று ஒரு நிருபர் கேட்டபோது.. “என்ன பகை..? நானென்ன அவருக்கு வளர்ப்பு மகனா..?” என்று அவருக்கே உரித்தான பாணியில் திருப்பியடித்தார் கருணாநிதி. அதேபோல் தன்னை இழுத்துச் சென்றதை சொன்னபோது மட்டும் ஒரு இடத்தில் தொண்டை இழுத்துக் கொண்டு அழுகையாக மாறும் சூழல் வந்தபோது, அருகில் இருந்த அன்பழகன் அவரது கையைப் பிடித்து ஆறுதல்படுத்த அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்களையே உணர்ச்சிவசப்பட வைத்தது அந்தக் காட்சி.

இந்த முறைகேடான, ஜனநாயகமற்ற, கேலிக்கூத்தான கைது நடவடிக்கையால் யாருக்கு நன்மையோ இல்லையோ, மறைமுகமாக கருணாநிதியின் குடும்பத்திற்கே ஒற்றுமையின் மகத்துவத்தை உணர்த்திவிட்டார் ஜெயல்லிதா.

ராஜாத்தியம்மாள் கருணாநிதியை திருமணம் செய்ததில் இருந்து அவருடன் இன்றுவரையிலும் ஒரு வார்த்தைகூட பேசாமல் வைராக்கியமாக இருந்து வருகிறார் தயாளு அம்மாள். 

எஸ்.எஸ்.ஆரின் நாடகக் குழுவில் நடித்துக் கொண்டே பல்வேறு வெளி நாடகங்களிலும் நடித்து வந்தார் இந்த தர்மாம்பாள் என்ற ராஜாத்தி. அப்போது 'வாலிபக் கவிஞன்' வாலி நடத்திய நாடகங்களில்கூட நடித்திருக்கிறார் ராஜாத்தி.

அப்போதுதான் கருணாநிதியுடன் 'மணிமகுடம்' நாடகத்தில் நடிக்கப் போய் அவரையே கவர்ந்துவிட்டார். இருவரும் திருமணம் செய்த பின்பு அதே நாடகக் குழுவில் நடித்து வந்த நடிகை மனோரமாவுக்கு இந்தத் திருமணத் தகவல் தெரிந்துவிட்டது. தனது வீட்டாருக்குத் தெரிந்துதான் கருணாநிதி இந்த வேலையைச் செய்திருப்பார் என்று மனோரமா வெள்ளந்தியாக நினைத்துவிட்டார்.

கருணாநிதி வெளியூரில் ஒரு வாகன விபத்தில் சிக்கி கண்ணில் அடிபட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு ஓடி வந்திருக்கிறார். அந்த நேரம் மனோரமாவும் அங்கே வந்து கருணாநிதியிடம் நலம் விசாரித்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் ராஜாத்தியம்மாளும் அறைக்குள் நுழைய.. “யார் இது..?” என்று கேட்டிருக்கிறார் தயாளு. கருணாநிதி பதில் சொல்லாமல் இருக்க.. (எப்படிச் சொல்லுவார்..? நம்ம இனம் ஒரே மாதிரிதான் இருக்கு..!) மனோரமாவே ஆச்சரியத்துடன், “தெரியாதா இவங்களை..?” என்று கேட்டுவிட்டு தயாளுவிடம் விஷயத்தை போட்டு உடைத்திருக்கிறார்.

அன்றிலிருந்து சினிமாவில் வரும் சக்களத்திகள் சண்டையைப் போல் ராஜாத்தியை இப்போதுவரையிலும் பாவித்து வரும் தயாளு அம்மாள், எங்காவது விழாக்களில்கூட ராஜாத்தியை பார்ப்பதையும், அருகில் நிற்பதையும் முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவார். அவுக அந்தப் பக்கம்.. இவுக இந்தப் பக்கம் என்று அமர்ந்திருந்ததை பலரும் பார்த்திருக்கலாம். இந்த அளவுக்கு கோபத்தில் இருந்த தயாளு அம்மாவை, ராஜாத்தியுடன் ஒரே காரில் வரவழைத்த பெருமை ஜெயலலிதாவையே சேரும். 

அதேபோல் மயிலாப்பூர் பக்கம் போனால்கூட ஆலிவர் ரோட்டுப் பக்கம் வராத தயாளு அம்மாள், கருணாநிதியின் கைதுக்கு அடுத்த நாள் ராஜாத்தியின் தாயார் இறந்ததற்கு வர வேண்டிய கட்டாயமாகிவிட்டது. அப்போதும் கனிமொழியிடம் மட்டுமே பேசிவிட்டு வெளியேறினார் தயாளு அம்மாள்.

இதே காலக்கட்டத்தில் ஸ்டாலினுக்கும், மதுரையின் பட்டத்து  இளவரசர் மு.க.அழகிரிக்கும் நடுவில் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. அப்போது தி.மு.க.வில் இருந்து அழகிரி நீக்கப்பட்டிருந்தார். கருணாநிதியிடம்கூட பேசாமல் இருந்தார் அழகிரி. அப்போதைய சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து தானும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி பல தொகுதிகளில் தி.மு.க.வின் தோல்விக்கும் காரணமாக இருந்தார்.

இந்த நேரத்தில் நடந்த இந்தக் கொடூரத்தைப் பார்த்து.. தான் ஆடாவிட்டாலும், தன் சதையாடும் என்பார்களே.. அது போல ஜூலை 2-ம் தேதியன்று நடந்த மறியல் போராட்டத்தில் மதுரையில் மட்டும் அழகிரி தலைமையில் 3000 பேர் கைதானார்கள்.

அனைவரையும் விட்டுவிடச் சொல்வார்கள் என்று எதிர்பார்த்து போலீஸார் காத்திருக்க.. மேலிடமோ “தூக்கி உள்ள போடு..” என்று அலட்சியமாகச் சொன்னது.. விளைவு 3000 பேரையும் சோதனையிட்டு உள்ளே வைக்க 20 சிறைக் காவலர்களால் முடியுமா..?  என்ன உடையோடு வந்தார்களோ.. அப்படியே அனைவரையும் சிறைக்குள் அனுமதித்தார்கள்.

சிறைக்குள் போன முக்கால்வாசி உடன்பிறப்புக்களிடம் செல்போன் இருக்க.. உள்ளேயிருந்தபடியே, வெளியில் சன் டிவிக்கு லைவ் டெலிகாஸ்ட் செய்த காட்சி சுவாரஸ்யமானது. அப்படியொரு செல்போனில் ஸ்டாலினுக்கு போன் போட்டுக் கொடுத்து அவரை அழகிரியுடன் பேச வைத்தார்கள் கழக உடன்பிறப்புகள். ஸ்டாலினும், அண்ணனுடன் 3 வருடங்கள் கழித்து வாஞ்சையுடன் பேச.. இருவரும் சிறையிலேயே ஓரிடத்தில் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

ஆகஸ்ட் 3-ம் தேதியன்று அழகிரி விடுதலையானாலும், ஆகஸ்ட் 7-ம் தேதியன்று ஜாமீனில் விடுதலையான தனது தம்பி ஸ்டாலினை திறந்த ஜீப்பில் மாலை போட்டு மரியாதை செய்து மதுரையே குலுங்கும் அளவுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார் அழகிரி. உறவுகளும், பெற்ற தாய், தந்தையால்கூட ஏற்படுத்த முடியாத நட்புணர்வை, ஆத்தாதான் இப்படி செய்து வைத்தார். வாழ்க ஜெயலலிதா..! சொந்த செலவில் சூனியம்..! 2006 தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கான முதல் படிக்கட்டு இதுதான்..!

பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள், மத்திய அரசின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி வழக்கம்போல ஒரு விசாரணை கமிஷன் வைப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா. நீதிபதி ராமன் அந்த கமிஷனுக்கு பொறுப்பு வகித்தார். ஆனால் இந்த விசாரணை கமிஷனை தான் நிராகரிப்பதாக கருணாநிதி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்.

தனது வீட்டில் நடந்த ரிமாண்ட் என்கொயரிலேயே கருணாநிதியுடன் கரிசனமாக நடந்து கொண்ட நீதிபதி அசோக்குமார், தனது சேம்பரில் ஜூலை 7-ம் தேதி நடந்த விசாரணையில் போலீஸை நார், நாராய் கிழித்துவிட்டார்  

"மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு ஒரு வாரத்திற்கு முன்புதான் இந்தப் பதவிக்கு வந்துள்ளார். இந்த ஒரு வாரத்திலேயே 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அத்தனை விஷயங்களையும் படித்துத் தெரிந்து கொண்டாரா..? பல உயர் மட்டக் கமிட்டிக் கூட்டங்களுக்கு பின்புதான் இந்த்த் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும். இதையெல்லாம் ஆச்சார்யலு எப்போது படித்து முடித்தார்..?"

"முறைப்படி இந்த புகாரை ஆச்சார்யலு போலீஸாரிடம் கொடுக்கவே முடியாது.. தலைமைச் செயலாளர் மூலமாகத்தான் புகார் செய்திருக்க வேண்டும். அதுதான் சட்டம்.. இது அவருக்குத் தெரியவில்லையென்றாலும், போலீஸார் ஏன் அதனை வாங்கினார்கள்..?

ஆச்சார்யலு இந்தப் புகாரை போலீஸாரிடம் கொடுக்கும் முன்பாக எந்தவொரு பொறியாளரிடமும், கவுன்சிலர்களிடமும் கலந்தாலோசிக்கவே இல்லையே.. ஏன்..?"

"அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் தவறான வழிகளை அரசுக்குக் காட்டிவிட்டார்" என்று குற்றம்சாட்டினார் நீதிபதி அசோக்குமார். பதிலுக்கு உடனேயே எழுந்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஏ.ரகுநாதன், "இப்போது நீதிபதிதான் எதிர்த் தரப்புக்கு ஆதரவாக பாயிண்ட்டுகளை எடுத்துக் கொடுப்பதாக" நேருக்கு நேராக குற்றம் சாட்டினார்.

"ஆச்சார்யலு சில பைல்களை மட்டுமே பார்த்து இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று கண்டறிந்திருக்கவே முடியாது" என்றார் அசோக்குமார்.

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததிலும், கைது விவகாரத்திலும் சாட்டையடியாக பறந்தது அசோக்குமாரின் கேள்விகள்..

"விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் பத்மநாபன் முதல் தகவல் அறிக்கையில் கருணாநிதியும் மற்றவர்களும் இதனால் பண ஆதாயம் அடைந்ததற்கான எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை.." என்றார் நீதிபதி.

"இந்த வழக்கில் கைதுகளுக்கு முன்பாக விசாரணை செய்ய வேண்டிய விஷயங்களே நிறைய இருக்கும்போது, அதையெல்லாம் செய்யாமல் அனைவரையும் கைது செய்வதிலேயே அரசு ஏன் குறியாக இருந்தது..?" என்று கேள்வியெழுப்பினார் நீதிபதி.

"முதல் தகவல் அறிக்கையிலும் சாட்சிகள் முன்னிலையில் கைதுகள் நடக்காமலும், அவர்களது குடும்பத்தினரிடம் சட்டப்படி தெரிவிக்காமலும் ஏதோ கைது செய்தாக வேண்டும் என்று தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து முனைந்து செய்திருப்பதாக" நீதிபதி அசோக்குமார் குற்றம்சாட்டினார்.

"பொதுவாக லஞ்ச ஊழல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பின்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு பெயில் தரலாமா? வேண்டாமா? என்பதை சம்பந்தப்பட்ட கோர்ட்டுகள்தான் முடிவெடுக்கும். ஆனால் இந்த ஒரு வழக்கில் மட்டும் எந்தவொரு விதிமுறைகளையும், சட்டத்தையும் பின்பற்றாமல் அரசு தன்னிச்சையாக கைது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டவிரோதமானது.." என்றார்..

கூடவே கருணாநிதியைப் பற்றித் தனிப்பட்ட முறையில் வருத்தம் தோய்ந்த குரலில் பேசினார் அசோக்குமார். “அந்த மனிதர் ஒரு பிச்சைக்காரரை போல சிறை வாசலில் தரையில் அமர்ந்திருந்ததை பார்த்தீர்களா..? நான் அவரை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்துவிட்டுத்தான் சிறைக்குக் கொண்டு போக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தேன். ஆனால் நீங்கள் என் உத்தரவை மீறிவிட்டீர்கள். உங்கள் மீது ஏன் நான் நடவடிக்கை எடுக்க்க் கூடாது..?” என்று போலீஸாரை பார்த்து கேள்வி எழுப்பினார்.

இவ்வளவு கடுமையான விமர்சனத்தையும், கேள்வியையும் எதிர்பார்த்திராத போலீஸ் திணறிப் போனது. ஆனாலும் உடனேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடுத்து, அசோக்குமார் காட்டமாக பயன்படுத்திய பல வார்த்தைகளை வழக்கு விசாரணைக் குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள்..!

இவ்வளவு அவசரம், அவசரமாக இந்த வழக்கில் கைது செய்தவர்கள், முதல் குற்றப்பத்திரிகையை மட்டும் சாவகாசமாக 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கோர்ட்டில் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்பார்த்ததுபோலவே ரத்து செய்யப்பட்டது.

இந்தக் கொடூரக் கைது சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் நான்கு பேர். 

முதலாவது ஆள் அப்போதைய டி.ஜி.பி. ரவீந்திரநாத். இவர் கருணாநிதியைப் பற்றிச் சொல்லும்போது "கலைஞர் எனக்கு அங்கிள் மாதிரி.." என்று சல்ஜாப்பு காட்டினார். ஜெயல்லிதா கண்ணால் உத்தரவிடுவதை காலால் செய்து வந்த இவர், ஆத்தா ஆட்சியிலேயே சஸ்பெண்ட் ஆனது மகா கொடுமை.. இத்தனைக்கும் பதவியில் இருக்கும்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட முதல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யும் இவர்தான்.

2 விஷயங்களினால் அன்னார் வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று சொல்லின அப்போதைய பத்திரிகைகள். 

ஒன்று.. அந்தச் சமயத்தில் தி.நகரில் இருக்கும் நடிகை விஜயசாந்தியின் வீட்டு மீது யாரோ இரவு நேரத்தில் கல்லெறிந்துவிட்டார்கள். அப்போது விஜயசாந்திக்கும், ஆத்தாவுக்கும் இடையில் நல்லதொரு பிரெண்ட்ஷிப் இருந்தது. "அரசியலில் எனது வழிகாட்டியே ஜெயலலிதாதான்.." என்று சொல்லியிருந்தார் விஜயசாந்தி.

இந்த வழக்கை விசாரிக்க ஒரு சப்-இன்ஸ்பெக்டரே போதும். ஆனால் டி.ஜி.பி. ரவீந்திரநாத்துக்கு கடமையுணர்வு கொப்பளித்துவிட்டது. அந்த இரவு நேரத்தில் தானே நேராக விஜயசாந்தியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரித்தார். மறுநாள் இரவிலும் அங்கே சென்று உட்கார்ந்து கொண்டு தி.நகர் போலீஸ் ஸ்டேஷனையே விஜயசாந்தியின் வீட்டிற்கு வரவழைத்து "கேஸ் என்னாச்சு..? எவனைப் பிடிச்சீங்க? யாரையெல்லாம் விசாரிச்சீங்க..? ஏன் இன்னும் அரெஸ்ட் பண்ணலை..?" என்றெல்லாம் விஜயசாந்தி முன்பாகவே ஷோ காட்டியிருக்கிறார். மூன்றாவது நாள் இரவிலும், “இந்தப் பக்கமா வந்தேன்..” என்று சொல்லி பல்லைக் காட்டியிருக்கிறார்.

விஜயசாந்திக்கா புரியாது..? தன் நீண்ட, நெடிய சினிமா, அரசியல் வாழ்க்கையில் இதுபோல் எத்தனை பேரை அவர் பார்த்திருப்பார்..? ஆத்தாவுக்கு இந்த விஷயத்தை பாஸ் செய்துவிட்டார். ஆத்தா, உடனேயே ரவீந்தரநாத்தை, கார்டனுக்கு வரவழைத்து வேப்பிலை அடித்து அனுப்பி வைத்தார்.

ரவீந்திரநாத் அடுத்து செய்தது இன்னொரு லொள்ளு வேலை. தான் டி.ஜி.பி.யாக பதவியேற்றவுடன் அனைத்து டி.ஐ.ஜி.க்களையும் அழைத்து அவரவர் மண்டலங்களில் இருக்கும் ஆயுதப் படை போலீஸார் மற்றும் தெரிந்த போலீஸாரை தனது மனைவி மற்றும் மைத்துனரிடம் எல்.ஐ.சி. பாலிஸி எடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்துள்ளார். அதிலும் மாதத்திற்கு இத்தனை கேஸ்களை பிடித்துக் கொடுத்தாக வேண்டும் என்று டார்கெட்டும் வைத்திருக்கிறார். இந்த விஷயமும் உளவுத் துறை மூலமாக ஆத்தாவின் காதுகளை எட்ட... "வீட்ல போய் எல்.ஐ.சி. பாலிஸிக்கு ஆள் புடிக்குற வேலையையே பாரு சாமி.." என்று சொல்லி சஸ்பென்ஷனில் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

ரவீந்திரநாத் ஓய்வு பெறுவதற்கு முந்தின நாள் காலை 8 மணிக்கெல்லாம் கார்டனின் வாசலில் வந்து தவம் கிடந்தார் ரவீந்திரநாத்தின் டாக்டர் மனைவி. மதியம் 1 மணிக்கு ஆத்தா மனமிரங்கி உள்ளே அழைத்து விசாரித்த பின்பு, போனால் போகிறது என்று சொல்லி கடைசி நாளில் சஸ்பெண்ட் விலக்கிக் கொள்ளப்பட்டு முறைப்படி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டார் ரவீந்திரநாத்.

அடுத்தது முத்துக்கருப்பன். கருணாநிதி கைது சர்ச்சைக்குப் பின்பு இந்தக் கைதைக் கண்டித்து சென்னை மெரீனா பீச்சில் தி.மு.க.வினர் நடத்திய கண்டன பேரணியில் நடந்த தடியடிதான் மிகப் பெரும் அளவுக்கு தமிழகத்தையே பதற வைத்தது..! 

“முத்துக்கருப்பன் பொண்டாட்டி என் வைப்பாட்டி..” என்று தி.மு.க. தொண்டர்கள் ஆத்திரத்துடன் கோஷத்தை எழுப்பி ஒரு மாலை வேளையில் மெரீனா கடற்கரையை ரத்தமயமாக்கிய சம்பவம் இது..!

அதிலும் அருகில் இருந்த மீனவர் குப்பத்தில் இருந்து சிலர் கூட்டத்துக்குள் புகுந்து அரிவாளால் சர்வசாதாரணமாக தி.மு.க. தொண்டர்களை வெட்டிச் சாய்க்கும் வீடியோக்கள் வெளியானபோது திகிலடைந்து போனது தமிழகம்.

இதிலேயே ஆத்தாவிடம் லேசாக வாங்கிக் கட்டிக் கொண்ட முத்துக்கருப்பன், அடுத்து சில நாட்களில் புரசைவாக்கம் சட்டக் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து போலீஸார் நடத்திய கோரத் தாக்குதலுக்குப் பின்பு "உன் சேவை போதுமடா சாமி.. போய்ச் சேரு" என்று சொல்லி வேறு பணியிடத்துக்கு மாற்றப்பட்டார். 

ஆனால் தொடர்ச்சியாக இவர் மீது வந்த புகார்களும், முத்துக்கருப்பன் நடத்தி வந்த பால்பண்ணையை வைத்து வந்த குற்றச்சாட்டுக்களுக்கும் சேர்த்து ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிற்காலத்தில் கருணாநிதியால்தான் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் கருணாநிதியாலேயே கூடுதல் டி.ஜி.பி. என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டு, இப்போது ஒரு டம்மி போஸ்ட்டிங்கில் இருக்கிறார்.

டி.ஐ.ஜி. முகமது அலியோ இந்தியாவையே உலுக்கிய போலி பத்திர ஊழல் வழக்கை விசாரித்தபோது அந்த வழக்கில் மாட்டிக் கொண்டவர்களிடம் லஞ்சம் வாங்கி அவர்களைத் தப்ப வைத்தக் குற்றச்சாட்டில் சிபிஐயினரால் கைது செய்யப்பட்டு தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளார்.(ரிட்டையர்டு ஆயிட்டாரா? இல்லையா? தெரியலை) 

கருணாநிதியை தரதரவென இழுத்துச் சென்ற இன்ஸ்பெக்டர் முருகேசன், இதற்குப் பின்பு ஜெயலலிதா ஆட்சியில் டி.எஸ்.பி. மற்றும் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றிருந்தார். 2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு ஏதோ ஒரு ஊரில் போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டார்.(வெளங்கிடும்..!)

இதுதான் ஜெயல்லிதா. தான் சொல்வதை மட்டுமே அடிமைகள்போல் செய்தால் போதும். கூடுதலாக தங்களுக்கும் பவர் உண்டு என்று காண்பித்தால் தூக்கிப் போட்டு மிதித்துவிடுவார். உதவி, நன்றி, பரஸ்பர சொரிதல் என்ற சென்டிமெண்ட்டெல்லாம் ஆத்தாவிடம் கிடையாது..! 

அடுத்து ஜூனியர்விகடன் மெரீனா பீச் கலவரத்தையும் பதிவாக்கினால் அப்போது இந்தப் பேரணிக்குச் சென்று அடிதடியில் காயம் பட்ட எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்..! 

பின்குறிப்புகள் : 

1. பத்திரிகையாளர்கள் பலரும் தடியடியில் காயம்பட்டது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திகளெல்லாம் நான் வீடு திரும்பிய பின்புதான் எனக்குக் கிடைத்தது.. அந்த இடத்தில் அப்போது இல்லாததால் என்னால் அறிய முடியவில்லை.

2.   இந்தச் சம்பவத்திற்குப் பின்புதான் சென்னையில் டூவீலர் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை பெரிதும் உணர்ந்தேன். அடுத்த மாதமே தவணை முறையில் டிவிஎஸ் எக்ஸ் எல் சூப்பர் வண்டியை எடுத்தேன். இன்றுவரையில் அதுதான் எனது வாகனம்.. இந்த உணர்வை உருவாக்கியளித்த ஆத்தா ஜெயல்லிதாவுக்கு எனது நன்றி. அதே நேரத்தில் கருணாநிதிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பத்திரிகையாளர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

இதுவரையிலும் பொறுமையாகப் படித்து முடித்த அத்தனை பேருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்..!

அன்புடன்

உங்கள் உண்மைத்தமிழன்

37 comments:

சந்தியா said...

சரி சரி இனி அடுத்த ஆட்சி மாறும் திருப்பியும் நடக்கும் தானே..

பேஸ்புக்கில் புதிதாய் வந்துள்ள முக்கிய மாற்றங்களை இங்கே காணலாம் Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்

விஜய்கோபால்சாமி said...

//அத்தோடு காங்கிரஸும் இதனை எதிர்த்த்து. அதே சமயம் கைதையும் கண்டித்தது.//

காங்கிரஸ்ல யாரு நைனா எதிர்த்தாங்க. மூப்பனார் ஒருத்தர் தான் கண்டிச்சார். அப்போ அவர் காங்கிரஸ்ல கூட இல்லை. ப. சிதம்பரம் தனி அணி கண்டு கலைஞர் பக்கத்திலேயே இருந்தார். ஒரு வேளை அகில இந்தியத் தலைமையில் யாராவது கண்டிச்சாங்களா? அந்த விபரம் எதுவும் இருந்தா எழுதுங்க நைனா!

விஜய்கோபால்சாமி said...

//இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பத்திரிகையாளர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!//

நீங்க எதுக்கு நைனா வருத்தம் தெரிவிக்கனும். கோபத்தைத் தான் பதிவு செய்யனும். செஞ்சிருக்கீங்க.

ibnu shakir said...

//டி.ஐ.ஜி. முகமது அலியோ இந்தியாவையே உலுக்கிய போலி பத்திர ஊழல் வழக்கை விசாரித்தபோது அந்த வழக்கில் மாட்டிக் கொண்டவர்களிடம் லஞ்சம் வாங்கி அவர்களைத் தப்ப வைத்தக் குற்றச்சாட்டில் சிபிஐயினரால் கைது செய்யப்பட்டு தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளார்.(ரிட்டையர்டு ஆயிட்டாரா? இல்லையா? தெரியலை) //

சவுதி அரேபியா சென்று அங்கு போலி பத்திரம் தயாரிக்கும் முறையை கற்றுகொண்டு இந்தியாவுக்கு வந்து 20000 கோடி ரூபாய் பெருமானமுள்ள போலி பத்திரங்களை தயாரித்து நாட்டை கொள்ளையடித்த அப்துல் கரீம் தெல்கி வழக்கிலா?

ஆமாம் எங்கே இருக்கிறார் இவர்?

http://pagadu.blogspot.com

ராஜ நடராஜன் said...

அண்ணே!நீங்களும்,ராம் கோபால் வர்மாவும் சேர்ந்து தயாரித்த ரக்த சரித்ரா கதையை விட த்ரில்லர்.மூணாவது பாகம் 2016 ல தயாரிப்பீங்களா இல்லை இத்தோடு வருத்தம் போட்டு முடிச்சிடுவீங்களா?

நிகழ்வுகளைப் பின்னோக்கி விட்டு நிகழ்காலத்தோடு அசை போடுவது வித்தியாசமான அனுபவம்தான்.எந்தப்பக்கமும் சாராத தியானத்துல இருக்க்ற ஞானி மாதிரியான மனநிலை மட்டுமே எழுகிறது.

பகிர்வுக்கு நன்றி.

thenali said...

அண்ணே, பத்திரிக்கைகளிலிருந்து எடுத்த போன பதிவைவிட உங்க இந்த ரிப்போர்டிங் அசத்தல்!

ஆத்தாவின் போலிஸூம் சரி, தாத்தாவின் ஆட்களும் சரி, சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதித்தாக தெரியவில்லை. மத்திய அமைச்சருன்னா என்ன பெரிய கொம்பா? மாறனின் ரவுஸை பார்த்து அப்போது பயங்கர கடுப்பானேன்.

Jayashree Govindarajan said...

////தான் சொல்வதை மட்டுமே அடிமைகள்போல் செய்தால் போதும். கூடுதலாக தங்களுக்கும் பவர் உண்டு என்று காண்பித்தால் தூக்கிப் போட்டு மிதித்துவிடுவார். உதவி, நன்றி, பரஸ்பர சொரிதல் என்ற சென்டிமெண்ட்டெல்லாம் ஆத்தாவிடம் கிடையாது..!///

:))) ஐ லைக் இட்! இவ்ளோ நீளம் கட்டுரை படிச்சும் அந்த வரி, "பின்ன, அம்மான்னா சும்மாவா" என்று சிரிப்பையே வரவழைச்சது.

காலங்காலைல இதைப்படிக்கப்போய் காணாமலே போயிட்டேன். ^|^

நான் யாரு? எங்க இருக்கேன்?

அகில் பூங்குன்றன் said...

Anne ithu pathivu.. Kalakkal pathivu

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

பல்சுவை வலைதளம் விருது

muthukumar said...

i have doubt. Media stood behind SUn Tv reporter arrest. Why the same Press not oppose anything happen to the other media reportes. wil they support only people who has large number of viewers.

one more thing i dont find any wrong in press reporter arrest. it is Law it will do its duty. Press reporters are nt above law.

இளங்கோ said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை... அருமையான, அசத்தலான பதிவு.. அடுத்த மெரீனா பீச் கலவர பதிவுக்காக காத்திருக்கிறேன்..

ஸ்ரீதர் said...

அருமை நண்பரே!வாழ்த்துக்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//விஜயசாந்திக்கா புரியாது..? தன் நீண்ட, நெடிய சினிமா, அரசியல் வாழ்க்கையில் இதுபோல் எத்தனை பேரை அவர் பார்த்திருப்பார்..? ஆத்தாவுக்கு இந்த விஷயத்தை பாஸ் செய்துவிட்டார். ஆத்தா, உடனேயே ரவீந்தரநாத்தை, கார்டனுக்கு வரவழைத்து வேப்பிலை அடித்து அனுப்பி வைத்தார்.//

ரசித்துச் சிரித்தேன்.
இன்னும் இவர்கள் மாறவில்லையே!

karlmarx said...

தி மு க தீவிரவாதியாகிய நீ மென்மேலும் இப்படி பல மாமாங்கத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை மறுபடியும் எழுதி அனுதாபம் வர வைக்க முயல்வது நன்றாகாவே தெரிகிறது. ஜெயலலிதா அராஜகம் செய்தது உண்மைதான். அதற்க்கும் மேல் இந்த ஐந்து வருடங்களில் உங்கள் உடன் பிறப்புகள் மக்களை கொடுமை படுத்தி விட்டனர். அதற்குத்தான் தற்போது கை மேல் பலன் கிடைத்து வருகிறது.தற்போது தேர்தல் தோல்வி என்ற மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் நீங்கள் இப்படி எதையாவது எழுதி திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் இது தேவை இல்லாத வேலை. எம் ஜி யார் காலத்துக்கு முன் இந்த தெலுங்கன் கரு நாய் நிதி செய்த அக்கிரமங்களையும் எழுதுங்களேன் பார்ப்போம்.மாறிவிட்ட மனநலத்தில் மக்கள் இருக்கையில் அதை புரிந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் குண்டு சட்டிக்குலேயே குதிரை ஓட்டுவீர்கள்? வெட்கமாக இல்லை?

ay said...
This comment has been removed by the author.
ay said...
This comment has been removed by the author.
காயத்ரிநாகா said...

கருணாநிதி என்னவோ சுதந்திரப் போராட்டத்திற்காக கைதானது போல் இவ்வளவு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்களே...அவர் தப்பே செய்யவில்லையா? கைது செய்கிறார்கள் என்றால் முறைப்படி அவர்களுடன் சென்று தன மீது தவறில்லை என்றால் சட்டப்படி நிருபிக்க வேண்டியது தானே? அதை விட்டு விட்டு சின்னப் பிள்ளைத் தனமாக வர மாட்டேன் என்று அடம் பிடித்தால் அப்புறம் இழுத்து வரத் தான் செய்வார்கள்...தயவு செய்து இந்த மாதிரி எழுதி கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டையே சூரையாண்ட ஒரு கொள்ளைக் கூட்டத்தின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தாதீர்கள்...நம் மக்கள் இளகிய மனமுள்ளவர்கள்...மீண்டும் அடுத்த ஒரு ஐந்து வருடங்கள் அவஸ்தைப் பட அச்சாரம் போடாதீர்கள்... நான் ஜெயலலிதா ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை.. மீண்டும் அவர்கள் எக்காலத்திலும் வேண்டாம் என்று தான் சொல்கிறேன்...

உண்மைத்தமிழன் said...

[[[சந்தியா said...

சரி சரி இனி அடுத்த ஆட்சி மாறும் திருப்பியும் நடக்கும்தானே..]]]

இது ஜெயலலிதாவின் கைகளில்தான் உள்ளது..!

உருப்படியாக இருந்தால் தொடரலாம். இல்லையெனில் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

//அத்தோடு காங்கிரஸும் இதனை எதிர்த்த்து. அதே சமயம் கைதையும் கண்டித்தது.//

காங்கிரஸ்ல யாரு நைனா எதிர்த்தாங்க. மூப்பனார் ஒருத்தர்தான் கண்டிச்சார். அப்போ அவர் காங்கிரஸ்லகூட இல்லை. ப.சிதம்பரம் தனி அணி கண்டு கலைஞர் பக்கத்திலேயே இருந்தார். ஒரு வேளை அகில இந்தியத் தலைமையில் யாராவது கண்டிச்சாங்களா? அந்த விபரம் எதுவும் இருந்தா எழுதுங்க நைனா!]]]

அகில இந்தியத் தலைமையில்தான் கண்டித்தார்கள். நாங்கள் எப்படி ராஜமரியாதையாக நடத்தினோம் தெரியுமா என்று நக்கல் குத்து குத்தினார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

//இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பத்திரிகையாளர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!//

நீங்க எதுக்கு நைனா வருத்தம் தெரிவிக்கனும். கோபத்தைத்தான் பதிவு செய்யனும். செஞ்சிருக்கீங்க.]]]

முதலில் வருத்தம். பின்புதான் கோபம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ibnu shakir said...

//டி.ஐ.ஜி. முகமது அலியோ இந்தியாவையே உலுக்கிய போலி பத்திர ஊழல் வழக்கை விசாரித்தபோது அந்த வழக்கில் மாட்டிக் கொண்டவர்களிடம் லஞ்சம் வாங்கி அவர்களைத் தப்ப வைத்தக் குற்றச்சாட்டில் சிபிஐயினரால் கைது செய்யப்பட்டு தற்போது சஸ்பெண்ட்டில் உள்ளார்.(ரிட்டையர்டு ஆயிட்டாரா? இல்லையா? தெரியலை) //

சவுதி அரேபியா சென்று அங்கு போலி பத்திரம் தயாரிக்கும் முறையை கற்றுகொண்டு இந்தியாவுக்கு வந்து 20000 கோடி ரூபாய் பெருமானமுள்ள போலி பத்திரங்களை தயாரித்து நாட்டை கொள்ளையடித்த அப்துல் கரீம் தெல்கி வழக்கிலா?]]]

ஆமாம்.. தெல்கியின் சென்னை ஏஜெண்ட்டுகளை கைது செய்து பின்பு உடனேயே ஜாமீனில் விடுவதற்காக லட்சகணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு கைப்பற்றிய போலி பத்திரங்களையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்திருக்கிறார் இந்த உத்தம மக்கள் பணியாளர்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

அண்ணே! நீங்களும், ராம்கோபால்வர்மாவும் சேர்ந்து தயாரித்த ரக்த சரித்ரா கதையைவிட த்ரில்லர். மூணாவது பாகம் 2016-ல தயாரிப்பீங்களா இல்லை இத்தோடு வருத்தம் போட்டு முடிச்சிடுவீங்களா?]]]

இது எங்க கைல இல்லை. அவுங்க கைலதான் இருக்கு..!

[[[நிகழ்வுகளைப் பின்னோக்கி விட்டு நிகழ்காலத்தோடு அசை போடுவது வித்தியாசமான அனுபவம்தான். எந்தப் பக்கமும் சாராத தியானத்துல இருக்க்ற ஞானி மாதிரியான மனநிலை மட்டுமே எழுகிறது. பகிர்வுக்கு நன்றி.]]]

தொடர்ச்சியான வருகைக்கும், பின்னூட்ட ஆதரவிற்கும் மிக்க நன்றிகள் அண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[thenali said...

அண்ணே, பத்திரிக்கைகளிலிருந்து எடுத்த போன பதிவைவிட உங்க இந்த ரிப்போர்டிங் அசத்தல்! ஆத்தாவின் போலிஸூம் சரி, தாத்தாவின் ஆட்களும் சரி, சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதித்தாக தெரியவில்லை. மத்திய அமைச்சருன்னா என்ன பெரிய கொம்பா? மாறனின் ரவுஸை பார்த்து அப்போது பயங்கர கடுப்பானேன்.]]]

இல்லை. மாறன் வாரண்ட் எங்கே என்று கேட்டதில் அந்த இடத்தில் தப்பில்லை..! அமைதியான முறையில் அழைத்துச் சென்றிருக்கலாம். காவல்துறையின் முரட்டுத்தனத்தால்தான் இத்தனை கலவரமும் நடந்தேறியது..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayashree Govindarajan said...

////தான் சொல்வதை மட்டுமே அடிமைகள்போல் செய்தால் போதும். கூடுதலாக தங்களுக்கும் பவர் உண்டு என்று காண்பித்தால் தூக்கிப் போட்டு மிதித்துவிடுவார். உதவி, நன்றி, பரஸ்பர சொரிதல் என்ற சென்டிமெண்ட்டெல்லாம் ஆத்தாவிடம் கிடையாது..!///

:))) ஐ லைக் இட்! இவ்ளோ நீளம் கட்டுரை படிச்சும் அந்த வரி, "பின்ன, அம்மான்னா சும்மாவா" என்று சிரிப்பையே வரவழைச்சது.
காலங்காலைல இதைப் படிக்கப் போய் காணாமலே போயிட்டேன்.]]]


பின்ன அம்மான்னா சும்மாவா..?

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள்..!

நான் யாரு? எங்க இருக்கேன்?

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

Anne ithu pathivu.. Kalakkal pathivu.]]]

நன்றி அகில்..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான பதிவு]]]

மிக்க நன்றி ராஜா..!

உண்மைத்தமிழன் said...

[[["என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..]]]

பார்த்தேன்.. படித்தேன்.. சுவைத்தேன்.. விருதுக்கு 95 சதவிகிதம் பொருத்தமானவர்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[muthukumar said...

i have doubt. Media stood behind SUn Tv reporter arrest. Why the same Press not oppose anything happen to the other media reportes. wil they support only people who has large number of viewers. one more thing i dont find any wrong in press reporter arrest. it is Law it will do its duty. Press reporters are nt above law.]]]

நிருபர்கள் குற்றவாளிகளாவும், குற்றம்சாட்டப்பட்டவர்களாகவும் இதுவரையில் பெரிய அளவில் சொல்லப்படவில்லை. அதனால் உங்களுக்கு இந்தச் சந்தேகம் வந்திருக்கலாம்..!

அப்போதையச் சூழலில் போலீஸின் அராஜகம்தான் பத்திரிகையாளர்களை ஆளும் கட்சியை எதிர்க்க வைத்தது.. சன் டிவிக்காக பொங்கிய இதே மீடியாக்காரர்கள், ஜெயா டிவி நிருபரும், கேமிராமேனும் ஆலிவர் ரோட்டு வீட்டில் தாக்கப்பட்டபோது அமைதியாகத்தான் இருந்தார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[இளங்கோ said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை... அருமையான, அசத்தலான பதிவு.. அடுத்த மெரீனா பீச் கலவர பதிவுக்காக காத்திருக்கிறேன்..]]]

எழுதிருவோம்.. வருகைக்கு நன்றி இளங்கோ..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீதர் said...

அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!]]]

நன்றிகள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//விஜயசாந்திக்கா புரியாது..? தன் நீண்ட, நெடிய சினிமா, அரசியல் வாழ்க்கையில் இதுபோல் எத்தனை பேரை அவர் பார்த்திருப்பார்..? ஆத்தாவுக்கு இந்த விஷயத்தை பாஸ் செய்துவிட்டார். ஆத்தா, உடனேயே ரவீந்தரநாத்தை, கார்டனுக்கு வரவழைத்து வேப்பிலை அடித்து அனுப்பி வைத்தார்.//

ரசித்துச் சிரித்தேன். இன்னும் இவர்கள் மாறவில்லையே!]]]

ஹி.. ஹி.. ஆம்பளை குணம்.. மாறவே மாறாது யோகன்..!

உண்மைத்தமிழன் said...

[[[karlmarx said...

தி.மு.க. தீவிரவாதியாகிய நீ மென்மேலும் இப்படி பல மாமாங்கத்துக்கு முன்பு நடந்த சம்பவங்களை மறுபடியும் எழுதி அனுதாபம் வர வைக்க முயல்வது நன்றாகாவே தெரிகிறது. ஜெயலலிதா அராஜகம் செய்தது உண்மைதான். அதற்க்கும் மேல் இந்த ஐந்து வருடங்களில் உங்கள் உடன் பிறப்புகள் மக்களை கொடுமை படுத்தி விட்டனர். அதற்குத்தான் தற்போது கை மேல் பலன் கிடைத்து வருகிறது.தற்போது தேர்தல் தோல்வி என்ற மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் நீங்கள் இப்படி எதையாவது எழுதி திருப்தி பட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஆனாலும் இது தேவை இல்லாத வேலை. எம் ஜி யார் காலத்துக்கு முன் இந்த தெலுங்கன் கரு நாய் நிதி செய்த அக்கிரமங்களையும் எழுதுங்களேன் பார்ப்போம்.மாறிவிட்ட மனநலத்தில் மக்கள் இருக்கையில் அதை புரிந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை காலத்துக்குதான் குண்டு சட்டிக்குலேயே குதிரை ஓட்டுவீர்கள்? வெட்கமாக இல்லை?]]]

நான் தி.மு.க. தீவிரவாதியா..? ம்ஹூம்.. நம்ம பிளாக்கை இன்னமும் நிறைய பிரபலப்படுத்தணும்போல..!

உண்மைத்தமிழன் said...

[[[காயத்ரிநாகா said...

கருணாநிதி என்னவோ சுதந்திரப் போராட்டத்திற்காக கைதானது போல் இவ்வளவு ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்களே. அவர் தப்பே செய்யவில்லையா? கைது செய்கிறார்கள் என்றால் முறைப்படி அவர்களுடன் சென்று தன மீது தவறில்லை என்றால் சட்டப்படி நிருபிக்க வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு சின்னப்பிள்ளைத்தனமாக வர மாட்டேன் என்று அடம் பிடித்தால் அப்புறம் இழுத்து வரத்தான் செய்வார்கள். தயவு செய்து இந்த மாதிரி எழுதி கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டையே சூரையாண்ட ஒரு கொள்ளைக் கூட்டத்தின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தாதீர்கள். நம் மக்கள் இளகிய மனமுள்ளவர்கள். மீண்டும் அடுத்த ஒரு ஐந்து வருடங்கள் அவஸ்தைப்பட அச்சாரம் போடாதீர்கள். நான் ஜெயலலிதா ஆட்சிக்கு வக்காலத்து வாங்கவில்லை. மீண்டும் அவர்கள் எக்காலத்திலும் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.]]]

போச்சுடா.. இப்போதுதான் முதல் முறையாக எனது வலைத்தளத்தைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

உள் நுழைந்து இன்னும் கொஞ்சம் நிறையவைகளைப் படித்துவிட்டு வாருங்கள் மேடம்..!

Admin said...

அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

Amudhavan said...

இது நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் ஏதோ நேற்றைக்கு நடந்ததை விவரிப்பதுபோல் அத்தனை விவரமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதியிருக்கும் தங்களின் நினைவுத்திறனுக்கும் எழுத்துத்திறனுக்கும் பாராட்டுக்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Amudhavan said...

இது நடந்து எத்தனையோ வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் ஏதோ நேற்றைக்கு நடந்ததை விவரிப்பதுபோல் அத்தனை விவரமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதியிருக்கும் தங்களின் நினைவுத் திறனுக்கும் எழுத்துத் திறனுக்கும் பாராட்டுக்கள்.]]]

மிக்க நன்றி அமுதவன்..!