தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் - தேர்தல் அறிக்கைகள்..!

26-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற 19-ம் தேதியன்று பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் முடிந்திருக்கிறது. ஆனாலும் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மட்டும் இன்னமும் பதவியேற்காமல் இருக்கின்ற நிலையில் அதைப் பற்றி எழுதலாம் என்றால் சிக்கலுக்குள் சிக்கலான விஷயமாக இருக்கிறது..!


நிர்வாகிகளின் பதவியேற்பு அடுத்த வாரம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்பு மொத்தமாக எழுதலாம் என்று காத்திருக்கிறேன். அதுவரையில் சற்று பொறுத்தருள்க. 

ஆனாலும் உங்களது ஆர்வத்திற்கு கொஞ்சம் தீனி போடும்வகையில் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட 'ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணி'யினரின்  தேர்தல் வாக்குறுதிகளையும், 'புதிய அலைகள்' என்ற பெயரில் போட்டியிட்ட இணை, துணை, உதவி இயக்குநர்கள் அணியின் தேர்தல் வாக்குறுதிகளையும் இங்கே பதிவிடுகிறேன்..!


படித்துவிட்டுக் காத்திருங்கள். ஒரு நல்ல கவர் ஸ்டோரியுடன் வருகிறேன்..!

முதலில் ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணியின் தேர்தல் அறிக்கை..!

அன்பான உறுப்பினர்களுக்கு..

வணக்கம்.

நம் சங்கத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருப்பது தாங்கள் அனைவரும் அறிந்ததே.

முன்னெப்போதும் இல்லாது, இந்தத் தேர்தலில், உங்கள் அனைவரின் மனதிலும் எழுந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் நாங்களும் அறிந்திருக்கிறோம்.

இயக்குநர்கள் இரு வேறு அணிகளாய்ப் பிரிந்தது ஏன்..?

பத்திரிகைகளில் பரபரப்பான செய்திகள் ஏன்..?

உடனடியான சமரச சமாதானம் ஏன்..?

என்பது போன்ற கேள்விகளும் அவற்றுள் அடங்கும்.

நிற்க..

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புவரை எங்களுடன் திரண்டிருக்கும் இந்த இயக்குநர்கள் எவருக்கும் தேர்தலில் நிற்கும் எண்ணமே இல்லை.

ஆனால் இந்தச் சங்கம் எப்படி நடக்க வேண்டும்? என்னவெல்லாம் உறுப்பினர்களுக்குச் செய்ய வேண்டும்? எல்லா இடத்திலும் இயக்குநர் சங்கம் தன்மானம் இழக்காமலிருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

இப்படி வேண்டும், வேண்டும் எனப் பல வேண்டுதல்களை மனதுக்குள் போட்டு வைத்திருந்த இளம் இயக்குநர்கள் கூடிப் பேசிய பொழுது நினைத்தவையெல்லாம் நிறைவேற வேண்டும் என்றால், பொறுப்புக்கு வர வேண்டும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

புரிந்தவர்கள் எல்லாம் ஓரணியாய் திரண்டோம்.

சிந்தனை தெளிவாய் இருந்ததால் செயல் வேகமாய் நடந்தேறியது.

இசைக் கலைஞர்கள் சங்கத்தின் மூத்தக் கலைஞர்கள் முன்னிலையில் முதல் கூட்டம் போட்டோம்.

வேட்பாளர்களை முதலில் அறிவித்தோம்.

வேட்பு மனுக்களை முதலில் தாக்கல் செய்தோம்.

என்று எல்லாவற்றிலும் முதல், முதல், முதலானோம்.

அதன் பிறகே நமது தோழமை இயக்குநர்களும் திரு.ஆர்.கே.செல்வமணி தலைமையில் மற்றொரு அணியாய் திரண்டனர்.

இந்த நேரத்தில்தான் இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிற்கு ஒரே குடும்பமாய் வாழ்ந்திருந்த இயக்குநர்கள் எதிரெதிர் அணியாய் நிற்க - சூழ்நிலை இறுக்கமானது. இதையறிந்து கொண்ட பத்திரிகைகள், இயக்குநர்கள் சங்கத்தில் விரிசல் விழுந்ததாக நாடெங்கும் செய்திகளைப் பரவச் செய்தன.

தேர்தல் களத்தில் நாங்கள் முன் வைத்த காலை பின்னெடுக்கத் தயங்கினோம்.

அனுபவமில்லாதவர்கள்..!

பதவி ஆசை கொண்டவர்கள்..!

யார் தாளத்திற்கோ ஆடுகிறார்கள்..!

என்று தொடர்ச்சியாய் குற்றச்சாட்டுக்கள்..

தயங்கினோம். யோசித்தோம்.

நமக்கு யார் மீதும் புகார்கள் இல்லை. நாம் யாரையும் குறை சொல்லப் போவதுமில்லை. நம் மீது இருப்பதைவிட எதிரணியினர் மீது நமக்கு அதிக மதிப்பிருக்கிறது. தேர்தலில் எதிர்த்து நிற்பதாலேயே ஒருவர், நமக்கு எதிரியாக முடியாது. வென்றாலும், தோற்றாலும் அண்ணன்-தம்பி உறவு மாறாது.

யார் முனைப்புடன் செயல்படுவார்கள் என்பதை ஓட்டுப் போடும் உறுப்பினர்கள் முடிவு செய்யட்டும் என்று தெளிந்த முடிவெடுத்தோம்.

தயக்கம் உடைத்தோம். முன்னைக் காட்டிலும் முழு வேகத்தோடு தேர்தல் பணியாற்றக் கிளம்பினோம்.

திரு.பாலசந்தர், திரு.பாலுமகேந்திரா, திரு.மணிரத்னம் ஆகியோரிடம் சங்கத்தின் செயல் திட்டங்கள் பற்றி நமக்கு இருந்த எண்ணங்களைச் சொன்னோம். மகிழ்ந்தார்கள். வாழ்த்தினார்கள்.

எங்களது வேகம் கண்ட திரு.கே.எஸ்.ரவிக்குமார், திரு.பி.வாசு இருவரும் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

எல்லோருமே சொன்ன ஒரு யோசனை..

“இத்தனை வேகமும், விவேகமும், தெளிவான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு முதிர்ந்த அனுபவம் கொண்ட ஒரு தலைமை இருந்தால் நன்றாக இருக்கும்தானே..”

எல்லோரும் ஒரு சேர யோசித்தோம்.

முடிவில்..

எதிரணியாய் நி்ன்றிருந்த சகோதர இயக்குநர்கள் அனைவரும் தேர்தல் களத்தில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற.. நம் அணியில் தலைமைப் பதவிக்கான வேட்பு மனுவை மட்டும் வாபஸ் பெற, “ஒருங்கிணைந்த இயக்குநர் அணி”யாய் இதோ இப்போது உங்கள் கண் முன்னே நிற்கிறோம்.

எங்களுக்கும் ஒரே நேரத்தில் இரண்டு நல்லவைகள் நடந்தேறின.

ஒன்று, மூத்த இயக்குநர்களை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்பது.

மற்றொன்று, எங்கள் அணியில் இருப்பவர்கள் தலைமைப் பதவிக்கு அலைகிறார்கள் என்ற குற்றச்சாட்டை பொய்யாக்கியது.

மகிழ்ச்சியாய் ஒப்புக் கொண்டோம்.

இதுவே நடந்தது..

இதோ, இப்போது உங்கள் முன் தேர்தல் களத்தில் நாங்கள்..

சங்கத் தேர்தலில் நின்று வெல்வது என்பது பதவிக்கு வருவதல்ல. பொறுப்புக்கு வருவது. சங்கத்தில் பொறுப்புக்கு வருவது சுகமல்ல - சுமை. ஆனால், நம் அண்ணன், தம்பிகளுக்காக சுமப்பதும் சுகம். நல்லது நடக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டுமென்று நினைப்பவர்கள் எல்லாம் வெளியில் நின்று, வெறும் வார்த்தைகளாய் மட்டும் பேசாமல் உள்ளே இறங்கி செயலாற்ற வேண்டும் என்று நினைத்து வந்திருக்கிறோம்.

அப்படியே நீங்களும் நினைத்து எங்களைத் தேர்ந்தெடுப்பீர்கள் என நம்புகிறோம்.

நமது சங்கத்தின் நலன் கருதி, ஓரிருவர் தவிர இயக்குநர்கள் அனைவரும் ஓரணியாய் நிற்கும்போது, இணை, துணை மற்றும் உதவி இயக்குநர்கள் மட்டும் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றனர்.

அவர்களை மேலும் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு எங்களது செயல் இருந்துவிடக்கூடாது என்பதாகவும் இணை, துணை மற்றும் உதவி இயக்குநர்களின் நிர்வாகப் பங்களிப்பும் நமது இயக்குநர் சங்கத்திற்கு மிக அவசியம் என்று கருதுவதாலும் 5 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு எங்கள் அணி போட்டியிடவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

முடிக்கும் முன் மேலும் சில வரிகள்..!

எங்கள் அணி சார்பாக நின்று இந்தத் தேர்தலில், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர்கள் திரு.சேரன் மற்றும் திரு.சமுத்திரக்கனியும், பொருளாளர் திரு.ஜனநாதன் அவர்களும் இப்போதே தமது சங்கப் பணிகளைத் துவக்கி விட்டனர்.

அதிலொன்று, சென்னையில் உள்ள மூன்று பல்கலைக் கழகங்களில் பாடப் பிரிவுகளாக உள்ள பல் ஊடகக் கல்வி மற்றும் நவீனத் திரைப்பட சிறப்பு பல்கலைக்கழகச் சான்றிதவ் படிப்பு ஆகிய படிப்புகளை நமது சங்க உறுப்பினர்கள் மிக, மிகக் குறைந்தக் கட்டணத்தில் 4 மாதங்களிலேயே படித்துப் பயன் பெற சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கடிதத்துடன் எங்களது தேர்தல் அறிக்கையையும் இணைத்திருக்கிறோம்.

செயலாக்கத் துடிக்கும், ஒருங்கிணைந்த இய்ககுநர்கள் அணியின் அறிக்கையில் உள்ள அத்தனை நலன்களையும் நீங்கள் பெற..

எங்களுக்கு வாக்களியுங்கள்..!

உங்களுக்கு உழைக்கிறோம்…!

நன்றி

அமீர் - சேரன் - ஜனநாதன்
மற்றும்
ஒருங்கிணைந்த இயக்குநர்கள் அணி

தேர்தல் அறிக்கை

1. உயர்ந்து வரும் விலைவாசி, வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவுகளைக் கவனத்தில் கொண்டு சம்மேளனத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம், நமது உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே நிர்ணயித்த இணை இயக்குநருக்கு ரூ.90,000-ஐ உயர்த்தி இனி ரூ.2,00,000 ஆகவும், துணை இயக்குநருக்கு ரூ.75,000-ஐ உயர்த்தி இனி ரூ.1,50,000 ஆகவும், முதல் நிலை உதவி இயக்குநருக்கு ரூ.50,000-ஐ உயர்த்தி, ரூ.1,00,000 ஆகவும் இரண்டாம் நிலை உதவி இயக்குநருக்கு ரூ.70,000 ஆகவும் உயர்த்தித் தர வலியுறுத்தப்படும்.

2. இணை, துணை, உதவி இயக்குநர்களின் சம்பளம் உயர்த்தப்படுவது போலவே Discussion, Pre-Production, Shooting, Post-Production போன்ற பணிகளுக்கேற்க தினசரி பேட்டாவையும் அதிகப்படுத்தி தொகை நிர்ணயம் செய்து முறையாக வழங்க வழிவகை செய்யப்படும்.

3. இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கான சம்பளத் தொகை முழுவதும் ரீ-ரெக்கார்டிங் முன்னதாகவே பாக்கியின்றி செட்டில் செய்ய தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தப்படும்.

4. நமது சங்கத்தில் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சங்கம் வழிச் சம்பள முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்து, இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அதற்காக சங்கம் இதுவரை பெற்று வந்த 2 சதவிகித கமிஷன் அறவே ரத்து செய்யப்படும்.

5. இவைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முதல் முறையாக ஒரு தயாரிப்பாளருக்கும் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கும் இடையே முறையான ஒப்பந்தம் போடப்பட்டு அதைக் கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்தப்படும்.

6. நமது சங்க உறுப்பினர்கள், தயாரிப்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படும்.

7. உறுப்பினர்கள், தயாரிப்பாளர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் இடம் பெற வேண்டிய விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளவும், சட்ட நுணுக்கங்கள் பற்றி விளக்கம் பெறவும், நமது உறுப்பினர்களிடம் அவர்களின் உரிமைகளை எடுத்துக் கூறி, அவற்றை ஒப்பந்தங்களில் இடம் பெறச் செய்யவும் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்.

8. தற்போது ஒரு படத்திற்கான டைட்டில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், GUILD-லும் பதிவு செய்யப்படுகிறது. அதுபோல இனிமேல், நமது இயக்குநர்கள் சங்கத்திலும் டைட்டில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். இத்திட்டம் தொடங்கியவுடன் இணை, துணை, உதவி இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் தாங்கள் யோசித்து வைத்திருக்கும் இரண்டு டைட்டில்களை நமது சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

9. எனவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், GUILD, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய மூன்று அமைப்புகளும் இனிமேல் ஒரு டைட்டிலை பதிவு செய்வதற்கு முன்பு நமது இயக்குநர்கள் சங்கத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வலியுறுத்தப்படும்.

10. நமது சங்கத்தில் உறுப்பினர் பதிவு செய்து வைத்திருக்கும் டைட்டிலை வேறு எவரேனும் பெற விரும்பினால் அதற்குச் சன்மானமாக குறைந்தபட்சம் 1 லட்சம் ரூபாய் பெற்றுத் தரப்படும்.

11. உறுப்பினர்களின் மருத்துவ உதவிக்கு மட்டும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அத்தொகையை விபத்து மற்றும் அவசர மருத்துவ உதவிக்கு பயன்பெறும் விதத்தில் உறுப்பினர் ஒருவருக்கு அதிகப்பட்சமாக 10000 ரூபாய் சுழற்சி முறையில் வழங்கப்படும்.

12. படம் சம்பந்தப்பட்டப் பணிகளில்(Pre-Production, Shooting, Post-Prodction and etc..) இருக்கும்போது உறுப்பினர் ஒருவர் விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டால் அவருக்கான இழப்பீட்டுத் தொகையாக நமது சங்கத்திலிருந்து 50,000 ரூபாயும், அப்படத் தயாரிப்பாளரிடமிருந்து 50,000 ரூபாயும் பெற்று மொத்தம் ஒரு லட்சம் ரூபாயாக அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும். இது தவிர, உறுப்பினர் யாரேனும் இயற்கையாக மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகை 25000 ரூபாயில் இருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

13. இது போன்ற சங்கடமான நிகழ்வுகளைத் தவிர்க்கும் பொருட்டு நமது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டமும், உறுப்பினர்களின் குடும்பத்திற்கு மெடி-க்ளைம் பாலிசியும் எடுத்துத் தர தீவிர முயற்சி செய்யப்படும்.

14. இது தவிர, படத் தயாரிப்புக் காலத்தில் இயக்குநர் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களுக்கு சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனம் “குறுகிய கால மருத்துவக் காப்பீடு” செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும்.

15. நமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், விளம்பரப் படங்களை இயக்கும்போது நமது சங்க உறுப்பினர்களில் இருந்து 2 உதவி இயக்குநர்களைப் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

16. நமது உறுப்பினர்கள் வேற்று மொழிப் படங்களிலும் வேலை செய்ய ஏதுவாக பிரதான மொழிகளான ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை எளிய முறையில் கற்றுத் தர வசதி செய்து தரப்படும்.

பல்கலைக் கழகங்களில் தற்போது மூன்றாண்டு படிப்பாக உள்ள பல் ஊடகக் கல்வி(Multimedia Course) மற்றும் நவீனத் திரைப்பட சிறப்புப் பல்கலைக்கழகச் சான்றிதழ் படிப்பு  (Film Making Advance Special University Certificate Course) ஆகியவற்றை நமது சங்க உறுப்பினர்கள் மிக, மிகக் குறைந்தக் கட்டணத்தில் 4 மாதங்களிலேயே பயிலும்வகையில் ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் பெறப்படும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகச் சான்றிதழ் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும் வகையில் மதிப்புடையதாக இருக்கும் என்பது உறுதி செய்யப்படும்.

17. இணை, துணை, உதவி இயக்குநர்கள் பயன் பெறும் வகையில் சினிமாவி்ன் நவீன தொழில் நுட்ப வளர்ச்சி பற்றி இந்திய மற்றும் உலகத் திரைப்பட வல்லுநர்களைக் கொண்டு நமது சங்கத்தி்ன் மூலமாக பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.

18. ஒவ்வொரு வருடமும் நமது இணை, துணை, உதவி இயக்குநர்கள் மட்டுமே உருவாக்கக் கூடிய “குறும்பட மற்றும் ஆவணப் போட்டி” நடத்தப்படும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும்.

19. மேலும், நமது உறுப்பினர்கள் தானே தயாரித்து, இயக்கும் சிறந்த குறும் படங்களைத் தேர்வு செய்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பச் செய்து, அந்தத் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து ஊக்கத் தொகையும் பெற்றுத் தரப்படும்.

20. இயக்குநர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குநர்களில் கடந்த 30 ஆண்டு காலமாக உறுப்பினராக இருந்து, 65 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருப்பின், அவர்கள் செய்த பணியினைக் கவுரவிக்கும் வகையில், நமது சங்கத்தின் மூலம் ஒரு தொகை நிர்ணயம் செய்து, மாதந்தோறும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்படும்.

21. அறிமுக இயக்குநர்களின் குறைந்தபட்ச சம்பளம் 10 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்து அதைத் தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

22. நமது இயக்குநர்கள் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும், சங்க வளர்ச்சி நிதியாக குறைந்தபட்சம் 10,000 கட்டாயமாக வசூலிக்கப்படும்.

23. நமது சங்க உறுப்பினர்கள் எடுக்கக் கூடிய விளம்பரப் படம் ஒவ்வொன்றிற்கும் சங்க வளர்ச்சிக்காக ரூ.5,000 கட்டாயமாக வசூலிக்கப்படும்.

24. ஒரு தயாரிப்பாளருக்கும், ஒரு இயக்குநருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தயாரிப்பில் இருக்கும் படத்தில் இருந்து இயக்குநரை விலக்கி, வேறொரு இயக்குநரை வைத்துப் படத்தைத் தொடர்வதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்யும்பட்சத்தில் ஏற்கெனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தாலும் நமது சங்கத்திடமும், விடுபட்ட இயக்குநரிடமும் முறையான அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

25. ஒரு படத்தின் இயக்குநர் அந்தப் படத்தை விருதுகளுக்கு அனுப்ப விரும்பும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் படத்தின் ஒரு பிரதியை சப்-டைட்டிலுடன் இயக்குநருக்கு வழங்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

26. சர்வதேச விருது, தேசிய விருது மற்றும் மாநில அரசு விருது பெறும் இயக்குநர்கள் தற்போது கெளரவிக்கப்பட்டு வருவதைப் போல், இனி விருது பெறும் இயக்குநர்களின் இணை, துணை, உதவி இயக்குநர்களையும் கெளரவிக்கும்வகையில் சங்கத்திற்கு அவர்கள் செலுத்த வேண்டிய சந்தா தொகையை சங்கமே ஏற்றுக் கொள்ளும்.

27. உலகத் திரைப்பட விழாக்கள், சர்வதேச விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் பற்றிய தகவல்களை உறுப்பினர்கள் அறிந்து கொள்ளவும், தங்களது திரைப்படங்களை இது போன்ற விழாக்களில் பங்கு பெறச் செய்ய விரும்புபவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழி காட்டவும் குழு ஒன்று அமைக்கப்படும்.

28. மேலும், நமது சங்கத்தை அமெரிக்கா-ஐரோப்பா மற்றும் உலக நாடுகளில் இருக்கும் திரைப்பட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

29. உலகின் தலை சிறந்த சினிமா நூல்கள் உறுப்பினர்களுக்குப் பயன் பெறும்வகையில் தமிழில் மொழியாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

30. நமது சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக ஏற்கெனவே திரட்டப்பட்ட நிதியுடன், மேலும் நிதி திரட்டி நிரந்தர சங்கக் கட்டிடம் அமைக்க வழிவகை செய்யப்படும்.

31. சங்கக் கட்டிடப் பணிக்காக அமைக்கப்படும் ஆலோசனைக் குழுவில் கடந்த முறை பொறுப்பில் இருந்த நிர்வாகக் குழுவினரும் இடம் பெற வழிவகை செய்யப்படும்.

32. நமது நிரந்தர சங்கக் கட்டிடத்தில், 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தியேட்டரும், டிவிடி மற்றும் திரைப்படம் சார்ந்த புத்தகங்கள் அடங்கிய நூலகமும் அமைக்கப்படும்.

33. தமிழ்ச் சினிமாவின் முதல் பேசும்படம் தொடங்கி, இன்றைய சினிமாவரை அனைத்துத் தமிழ்ப் படங்களையும் சேகரித்து பாதுகாக்கும் ஆவணக் காப்பகம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

34. ஒரு சங்கத்தில் 2000 உறுப்பினர்கள் இருந்தால் கூட்டுறவுப் பண்டக சாலை அமைக்க அரசு அனுமதி தந்துள்ளது. அதன் அடிப்படையில் நமது சங்கம் 2000 உறுப்பினர்களை எட்டிவிட்டபடியால், சங்கத்தின் சொந்தக் கட்டிடத்தில் கூட்டுறவுப் பண்டகசாலை அமைத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்படும்.

35. சங்கத்திற்கென புதிய இணையத்தளம் சீரிய முறையில் உருவாக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எந்நேரமும் அதில் தெரிவிக்கலாம்.

36. உறுப்பினர்கள் தங்களது குறைகளை அலுவலக நேரத்தில் சங்கத்திற்கு வந்து தெரிவிக்கலாம். அதற்காக சங்கத்தில் புகார்ப் பெட்டி ஒன்று வைக்கப்படும். நேரில் வர இயலாதவர்கள், தங்களது புகார்களை சங்கத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்தால் பரிசீலனை செய்து தக்க பதில் அளிக்கப்படும்.

37. அதே இணையத்தளத்தில் தமிழ்ச் சினிமாவின் முதல் தலைமுறை இயக்குநர்கள் தொடங்கி, இன்றைய இயக்குநர்கள்வரையிலான தகவல் களஞ்சியம் ஒன்று ஏற்படுத்தப்படும்.

38. இனி வரும் காலங்களில், நமது சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்களிப்பவர்களின் தகுதிகள் பற்றிய தேர்தல் விதிமுறைகள் சரி செய்யப்படும்.

39. மேலும், நமது சங்கத்தின் நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள், இரண்டு முறைக்கு மேல் மீண்டும் அதே பதவிக்குப் போட்டியிடக் கூடாது என்பது சட்டமாக்கப்படும்.

நன்றி..!

இனி, புதிய அலைகள் என்ற பெயரில் போட்டியிட்ட இணை, துணை, உதவி இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் அறிக்கை..!இவர்களின் அறிக்கையை இமேஜ் பைலாக மாற்றி இங்கே பதிவிட்டுள்ளேன்.  (தட்டச்சு செய்ய கொஞ்சம் சோம்பேறித்தனம். பொறுத்தருள்க)

அதனை கிளிக் செய்து பெரிதாக்கிப் படித்துக் கொள்ளுங்கள்..!
4 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு நல்ல கவர் ஸ்டோரியுடன் வருகிறேன்..!/// காத்திருக்கிறோம்...

பார்வையாளன் said...

இதில் இவ்வளவு மேட்டர் இருக்கா ? நன்றாக இருந்தது. இதெல்லாம் இருக்கட்டும்ணே . அநாகரிகம் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் எங்கே ? ஆவலுடன் காத்திருக்கிறோம்க்கட்டும்ணே . அநாகரிகம் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் எங்கே ? ஆவலுடன் காத்திருக்கிறோம்

உண்மைத்தமிழன் said...

[[[!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஒரு நல்ல கவர் ஸ்டோரியுடன் வருகிறேன்!///

காத்திருக்கிறோம்...]]]

நன்றி கருன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

இதில் இவ்வளவு மேட்டர் இருக்கா? நன்றாக இருந்தது.]]]

வருகைக்கு மிக்க நன்றி பார்வை..!

[[[இதெல்லாம் இருக்கட்டும்ணே . அநாகரிகம் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் எங்கே ? ஆவலுடன் காத்திருக்கிறோம்க்கட்டும்ணே . அநாகரிகம் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் எங்கே ? ஆவலுடன் காத்திருக்கிறோம்.]]]

ஸாரி.. ராங் நம்பர்..!