வானம் - சினிமா விமர்சனம்

02-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஐந்து கதைகளை உள்ளடக்கி அவை அனைத்தையும் இறுதியில் ஒரே காட்சிக் கோர்வைக்குள் கொண்டு வந்து முடிக்கப்பட்டிருக்கும் தெலுங்கு ரீமேக் திரைப்படம்..!


கந்துவட்டியினால் பாதிக்கப்பட்டு உப்பளத்தில் வேலையில் இருக்கும் தனது 12 வயது மகன் பள்ளிக்குப் போயாக வேண்டும் என்கிற வெறியில் கடனுக்காக தனது கிட்னியை விற்பதற்காக ஒரு பெண்ணும், அவளது மாமனாரும் சென்னைக்கு வருகிறார்கள்..!

குடும்பமே ராணுவத்தில் சேவையாற்றினாலும் தனக்கு அது பிடிக்காமல் ராக் இசைப் பாடகனாக உருமாறும் வெறி கொண்டலையும் இளைஞன், தனது குழுவினருடன் சென்னைக்கு வருகிறான்.


ஹைதராபாத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சரோஜா, அந்த இடத்தில் இருந்து தப்பித்து தனது தொழிலை விஸ்தாரமாக நடத்த வேண்டி சென்னைக்கு வருகிறாள்..!

மாதந்தோறும் சோத்துக்குப் பிச்சையெடுக்கும் நிலையில் இருந்தாலும் கோடீஸ்வர பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்யும் ஆசையில் இருக்கும் ஒரு இளைஞன் அவளுக்காக திருட்டுத் தொழிலிலும் இறங்கும் நிலையில் சென்னையில் இருக்கிறான்..!

கோவையில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் இந்து தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதால் தனது மனைவியின் கர்ப்பம் கலைந்த நிலையிலும் காணாமல்போன தனது தம்பியைத் தேடி சென்னைக்கு வரும் ஒரு முஸ்லீம் நபர்..!


இந்த ஐந்து நபர்களும் இறுதியில் ஒரு மருத்துவனையில் சந்திக்கிறார்கள். அந்த மருத்துவமனையில் ஏற்கெனவே குடியிருந்துவரும் முஸ்லீம் தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் கண்ணில்பட்டவர்களெல்லாம் செத்துப் போக இந்த ஐந்து கதை மாந்தர்களில் யார் உயிருடன் இருக்கிறார்கள்? யார் செத்தார்கள் என்பதுதான் மிச்சச் சொச்சக் கதை..!

தெலுங்கில் வேதம் என்கிற பெயரில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம். ஆர்.பி.செளத்ரி தனது மகன் ஜீவாவுக்காக வாங்கிய கதை இது. ஆனாலும் அது முடியாமல்போய் பலத்த போட்டிக்கிடையில் சிம்பு இதனை அதிர்ஷ்டமாக பெற்று அதில் நடித்திருக்கிறார்.

படம் அரசியல் பேசுகிறது என்பதால் நாமும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய கட்டாயம் உண்டு..!

இரட்டை நகரங்களான ஹைதராபாத்-செகந்திராபாத் நகரங்களில் நடந்த தொடர்ச்சியான குண்டு வெடிப்பினால்  ஆந்திர மக்கள் சிலரை இழந்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் அவர்களுக்கெல்லாம் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது..!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லீம் மீது இந்துத் தீவிரவாதிகள் தாக்குதல்..! பதிலுக்கு இறுதியில் மருத்துவமனையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் போட்டுத் தாக்குகிறார்கள்..!

இறுதியில் இந்தத் தாக்குதலை முடித்துவைத்து தனது உயிரைத் தியாகம் செய்தவனை பாராட்டி நான்கு வார்த்தைகள் பேசிவிட்டு ஜெய்ஹிந்த் பாடிய அக்மார்க் இந்திய தேசிய ஒற்றுமைக்கான படம் இது..! நிச்சயம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் விருது இப்படத்திற்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்....!

தீவிரவாதம் இரு பக்கமும் இருக்கிறது என்பதை சொல்ல வந்தவர்கள், தங்களுக்கு வசதியான இடங்களில் மட்டும் அவற்றைச் சொல்லிவிட்டு மிச்சத்தை நம் கைகளில் விட்டுவிட்டார்கள்..!

இறுதியில் தேச பக்தனாக விதைக்கப்படும் ஒரு ஹீரோவின் புகழ் பாடும் அதே வேளையில் குரான் புத்தகத்தையும், அப்பாவிகள் நாங்கள் என்று துப்பாக்கி முனையைப் பார்த்து கதறிய கதறலையும் பார்க்கச் சகிக்காமல் செய்வதறியாமல் தன்னைத் தானே சுட்டுக் கொன்று இறக்கும் முஸ்லீம் தீவிரவாதி கவனத்துடன் மறைக்கப்படுகிறார்..!

முஸ்லீமாக பார்த்தவுடனேயே தீவிரவாதிதான் என்று நினைக்கும் ஒரு இந்து இன்ஸ்பெக்டரை இறுதியில் அந்த முஸ்லீமே காப்பாற்றுவதைப் போல் காட்டி இரண்டையும் கவனமாக பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர். 

தன்னைக் காப்பாற்றிய முஸ்லீமை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டதோடு இந்து இன்ஸ்பெக்டரின் சேப்டர் முடிந்தது. ஆனால் பிரச்சினையைத் துவக்கியதே அவரை போன்ற யூனிபார்ம் போட்ட தீவிரவாதிகளால்தான் என்பதை மட்டும் சொல்லாமல் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று நம்மிடமே தள்ளிவிட்டார்கள்..!

மும்பையில் நடந்ததைத்தான் அவர்கள் நிகழ்வாக எடுத்திருக்கிறார்கள் என்று நம்மை யூகிக்க வைக்கிறார்கள்..! எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கண்டிக்கின்ற அதே வேளையில் உள்ளூரிலேயே இருக்கும் பயங்கரவாதத்தையும், அதனைத் தூண்டிவிடும் சக்திகளையும் கண்டிக்கத்தான் இந்தப் படத்தில் கதை இல்லை..!

குஜராத் கலவரத்தை முன் வைத்து கதை செய்து, அதனைச் செய்தது இந்து தீவிரவாதிகள் என்று சொல்லி அந்த படுகொலைச் சம்பவத்தில் எத்தனை, எத்தனை சிறுபான்மையினர் கொல்லப்பட்டார்கள் என்பதை இயக்குநர் கிருஷ் தனது அடுத்தப் படத்தில் சொல்லுவாரென்று எதிர்பார்க்கிறேன்..!.

மற்றபடி ஒரு சினிமாவாக பார்க்கப் போனால், அதற்குத் தேவையான அத்தனையையும் ஸ்கிரீனில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அதிலும் சிலவற்றில் லாஜிக் மீறல்கள் உண்டு..!

சரண்யா மற்றும் அவரது மாமனாரின் நடிப்பு ஸ்கோர்.. அற்புதம்.. இந்த ஒரு கதையை வைத்தே தனி சினிமாவே எடுத்திருக்கலாம். இப்போதும் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதி மருத்துவமனைகளில் தினத்துக்கு 4 பேராவது தங்களது குடும்ப வறுமையினால் கிட்னியை விற்றுவிட்டுப் போகிறார்கள்..! அளவுக்கு மீறிய பிரச்சினைகள் அந்த அப்பாவிகளை அழுந்தும்போது எப்படியாவது தப்பிக்க நினைத்து இந்தச் சூழலில் சிக்கிக் கொள்கிறார்கள்..!

சிம்புவின் இந்த அடக்கமான நடிப்பை இனி வரும் படங்களிலும் காண்பித்தால் இன்னும் நிறைய ரசிகர்கள் அவரைத் தேடி வருவார்கள்..! சரண்யாவின் கொள்ளையடித்த பணத்தை ஹோட்டலில் கொடுக்க வந்து பின்பு பின் வாங்கி செல்வது எதிர்பார்த்ததுதான் என்றாலும்  எடுத்த விதம் அருமை..!


சின்ன தளபதி பரத்கூட ஊரோடு ஒத்துப் போக வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறார். தனி ஹீரோவாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முன் வராத நிலையில், கிடைக்கின்ற வேடத்தில் நடிப்பது நல்லது என்ற நிலைமைக்கு வந்திருக்கிறார். பாராட்டுக்கள்.. எடுத்து முடிக்கப்பட்டு தயாராக இருக்கும் திருத்தணி மற்றும் யுவன் யுவதி, 555 போன்ற படங்களின் கதி இத்திரைப்படத்தில்தான் இருக்கிறது என்பதால் இப்போது பரத் சந்தோஷமாக இருப்பார் என்று நினைக்கிறேன்..!


வேகாவுடனான அவரது காதலின் தூண்டு சக்திக்காக நடக்கும் அந்த நடுரோட்டுச் சண்டை திணிக்கப்பட்டதாக நன்றாகவே தெரிகிறது என்றாலும், இங்கேயும் ஒரு மனிதக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அனுபவமே இறைவன் என்பதை பரத்தின் மூலம் இந்த இடத்தில் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்..!


பிரகாஷ்ராஜின் நடிப்பு ஓவர் ஆக்ட்டிங் என்று சொல்லப்பட்டாலும், அவரது கேரக்டருக்கு அது சரிதான்.. தனது மனைவியின் கர்ப்பம் கலைந்து போன சூழலில் அவரது வெளிப்பாடு அகோரம்..! வேறென்ன செய்வது..? இன்ஸ்பெக்டரிடம் கன்னத்தில் அறை வாங்கிய அதிர்ச்சியில் தம்பியைத் தள்ளிவிட்டு அவமானத்தில் நிற்கும் காட்சியைப் போல இந்தியாவில் எத்தனையோ அப்பாவிகளும் சந்தித்திருக்கிறார்கள்..!

இன்னொரு குறிப்பிடத்தக்க நடிப்பு ராதாரவியுடையது.. லஞ்சத்திற்கு அஞ்சாத இன்ஸ்பெக்டர் வேடம்.. லோக்கல் போலீஸுடன் சகவாசம் வைத்துக் கொள்வது எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பதையும் இதில் சொல்லியிருக்கிறார்கள். அனுஷ்காவின் காட்டமான கேள்விக்கு ராதாரவி கொடுக்கும் அடிதான் இன்றைக்கும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் அப்பாவிகளுக்கு கிடைக்கும் மரியாதை..!


தற்போதைய நகைச்சுவை டிரெண்ட்டில் முன்னணியில் நிற்கும் சந்தானத்தின் அலட்டிக் கொள்ளாத வசனத்தில் தியேட்டர் பல முறை அதிர்கிறது..! ஆனாலும் இப்படியே எத்தனை நாளைக்கு அவர் வாழ்க்கையை ஓட்டி விட முடியும் என்றும் யோசிப்பு வருகிறது..!? சந்தானம் குணச்சித்திர நடிப்புக்கு மாறினால் தப்பித்தார். இல்லையேல் இதுவெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..!

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எவண்டி உன்னைப் பெத்தான் என்ற இலக்கியத் தரமான பாடலை தானே சொந்தக் குரலில் பாடியிருந்தும் பாடல் படமாக்கப்பட்ட விதம் மொக்கையாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. நல்லவேளை.. அதனை உருப்படியாக எடுத்துத் தொலைத்திருந்தால் அனைத்து சேனல்களிலும் வருடம் முழுக்க ஓட்டி உயிரை எடுத்திருப்பார்கள்.. போய்த் தொலையட்டும்..!


தெலுங்கு வெர்ஷனில் வந்த அனுஷ்காவின் பாடல் காட்சியை டப்பிங் மட்டும் செய்துவிட்டு அப்படியே தமிழுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அனுஷ்காவின் கால்ஷீட் கிடைக்கவில்லையோ..? ஆனாலும் “மணி நோ மணி” பாடலில் அம்மணி போடுகின்ற அந்த கெட்ட ஆட்டத்தில் தியேட்டரே அதிர்கிறது..! தெய்வத்தை சந்தித்த திருப்தியை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.. காசி தியேட்டரில் ஸ்கிரீன் அருகேயே போய் ஆடிக் களைத்துப் போனார்கள் ரசிகர் பெருமக்கள்.. நல்லவேளை இதையெல்லாம் பார்க்க பெரியார் உயிருடன் இல்லை. அவர் தப்பித்துக் கொண்டார்..!

அனுஷ்காவின் தோழியாக வரும் அந்தத் திருநங்கையை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். திருநங்கைகளை கேவலப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் கூக்குரல் எழுந்தாலும், இதிலும் அது போன்ற காட்சிகள் இருந்தாலும், இந்தக் கதாபாத்திரத்தின் நடிப்பு அருமை..! அதையும் செய்து, இதனையும் செய்து பேலன்ஸ் காட்டியிருக்கிறார். சினிமாவில் இதெல்லாம் சகஜம்ப்பா..! கேட்டால், இதைத்தான் சொல்லப் போகிறார்கள்..!

அனைவரும் இறுதியில் மருத்துவமனையில் சந்தித்தே தீர வேண்டும் என்பதுதான் கதை என்பதால் மருத்துவமனைக்கு வர வைப்பதற்காக திணிக்கப்பட்ட திரைக்கதையை நாம் மன்னிக்கத்தான் வேண்டும்..!

தற்சமயம் போட்டிக்கு இருப்பது 'கோ' படம் மட்டுமே என்பதால் இத்திரைப்படமும் தமிழ்நாட்டில் நன்கு கல்லா கட்டும் என்பதில் சந்தேகமில்லை.

27 comments:

கோவை நேரம் said...

விமர்சனம் அருமை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விமர்சனம் அருமை....

jaisankar jaganathan said...

விமர்சனம் சூப்பர் அண்ணா

அகில் பூங்குன்றன் said...

Labels: அனுபவம், அனுஷ்கா, அரசியல், சினிமா, சினிமா விமர்சனம்

?????

Director, Hero.... ivanga ellathiyum vittutut En uncle Anushka mattum

koodalnagar said...

ரொம்ப மட்டமான விமர்சனம்
உங்களுக்கு படம் எப்படி தான் எடுக்க வேண்டும்

Philosophy Prabhakaran said...

எனக்கென்னவோ சந்தானத்தின் நகைச்சுவை சலிக்கவே சலிக்காது என்று தோன்றுகிறது... அதெல்லாம் யூத்துகளுக்குத்தான் புரியும் அண்ணே...

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

விமர்சனம் அருமை.]]]

மிக்க நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விமர்சனம் அருமை....]]]

மிக்க நன்றி தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[jaisankar jaganathan said...

விமர்சனம் சூப்பர் அண்ணா.]]]

போச்சுடா.. நெசமாவே..? எனக்கே ஆச்சரியமா இருக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[அகில் பூங்குன்றன் said...

Labels: அனுபவம், அனுஷ்கா, அரசியல், சினிமா, சினிமா விமர்சனம்

?????

Director, Hero.... ivanga ellathiyum vittutut En uncle Anushka mattum.]]]

மக்கள்ஸ் யாரைத் தேடுவாங்கன்னு நமக்குத் தெரியாதா..?

உண்மைத்தமிழன் said...

[[[koodalnagar said...

ரொம்ப மட்டமான விமர்சனம்.
உங்களுக்கு படம் எப்படிதான் எடுக்க வேண்டும்?]]]

படத்தை இன்னொரு முறை பாருங்கள். நான் சொன்னது புரியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

எனக்கென்னவோ சந்தானத்தின் நகைச்சுவை சலிக்கவே சலிக்காது என்று தோன்றுகிறது. அதெல்லாம் யூத்துகளுக்குத்தான் புரியும் அண்ணே.]]]

அப்போ நான் யூத்து இல்லியா..? நான் சொன்னது ரசனை சம்பந்தப்பட்ட விஷயம்..! எல்லாத்துக்கும் ஒரு சீசன்தான்..!

மனோவி said...

படம் என்னவோ உங்களை விட எனக்கு அதிகமாக பிடித்து விட்டது..

http://www.tamiltel.in/2011/05/blog-post.html

ரிஷி said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் இது. மன்னிக்கவும்.
இது போன்ற ஆணித்தரமான புலனாய்வுகளைத்தான் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.

http://www.savukku.net/home/762-2011-05-02-10-39-22.html

ரிஷி said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் இது. மன்னிக்கவும்.
இது போன்ற ஆணித்தரமான புலனாய்வுகளைத்தான் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.

http://www.savukku.net/home/762-2011-05-02-10-39-22.html

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எவண்டி உன்னைப் பெத்தான் என்ற இலக்கியத் தரமான பாடலை
//
அடடே... என்ன ஒரு அவதானிப்பு....

ச.இமலாதித்தன் said...

//சிம்புவின் இந்த அடக்கமான நடிப்பை இனி வரும் படங்களிலும் காண்பித்தால் இன்னும் நிறைய ரசிகர்கள் அவரைத் தேடி வருவார்கள்..!//

இடைவேளை வரும் வரை சிம்புவின் அட்டாகாசம் சகிக்க முடியல.ஆனால் நீங்க அடக்கமான் நடிப்பு சொல்றது ஏற்க முடியல.

உண்மைத்தமிழன் said...

[[[மனோவி said...

படம் என்னவோ உங்களை விட எனக்கு அதிகமாக பிடித்து விட்டது..

http://www.tamiltel.in/2011/05/blog-post.html]]]

அதனாலென்ன? ரசனை என்பது மனிதர்களுக்கு மனிதர் மாறுபடுமே..?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் இது. மன்னிக்கவும். இது போன்ற ஆணித்தரமான புலனாய்வுகளைத்தான் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.

http://www.savukku.net/home/762-2011-05-02-10-39-22.html]]]

மன்னிக்கணும் ரிஷி. இது போன்ற தகவல்கள் கிடைப்பதற்கு சவுக்குக்கு இருப்பது போன்ற தகவல் தொடர்புகள் தேவை. நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லீங்கண்ணா..!

உண்மைத்தமிழன் said...

[[[வழிப்போக்கன் - யோகேஷ் said...

//யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எவண்டி உன்னைப் பெத்தான் என்ற இலக்கியத் தரமான பாடலை//

அடடே என்ன ஒரு அவதானிப்பு....]]]

அந்தக் கர்மத்தை வேற என்னன்னு சொல்றது..?

ரிஷி said...

//மன்னிக்கணும் ரிஷி. இது போன்ற தகவல்கள் கிடைப்பதற்கு சவுக்குக்கு இருப்பது போன்ற தகவல் தொடர்புகள் தேவை. நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லீங்கண்ணா..!//

உங்களைச் சொல்லவில்லை, சரவணன். ஜூ.வி. வகையறாக்களில் இது போல ஆதாரப்பூர்வமாய் இல்லை. அவர்களது புலனாய்வில் இட்டுக்கட்டியதும் இருக்கக்கூடும் எனத்தெரிகிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட பதிவில் இருப்பதுபோன்ற நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பின் வரவேற்கலாம்.

உண்மைத்தமிழன் said...

[[[ச.இமலாதித்தன் said...

//சிம்புவின் இந்த அடக்கமான நடிப்பை இனி வரும் படங்களிலும் காண்பித்தால் இன்னும் நிறைய ரசிகர்கள் அவரைத் தேடி வருவார்கள்..!//

இடைவேளை வரும்வரை சிம்புவின் அட்டாகாசம் சகிக்க முடியல. ஆனால் நீங்க அடக்கமான் நடிப்பு சொல்றது ஏற்க முடியல.]]]

நான் இதுவரை பார்த்த படங்களிலேயே சிம்பு கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது இதுதான் என்று நினைக்கிறேன். அதனால்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

//மன்னிக்கணும் ரிஷி. இது போன்ற தகவல்கள் கிடைப்பதற்கு சவுக்குக்கு இருப்பது போன்ற தகவல் தொடர்புகள் தேவை. நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லீங்கண்ணா..!//

உங்களைச் சொல்லவில்லை, சரவணன். ஜூ.வி. வகையறாக்களில் இது போல ஆதாரப்பூர்வமாய் இல்லை. அவர்களது புலனாய்வில் இட்டுக்கட்டியதும் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. ஆனால் நான் மேற்குறிப்பிட்ட பதிவில் இருப்பதுபோன்ற நம்பத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் வரவேற்கலாம்.]]]

ஆதாரங்களுடன்தான் சவுக்கு சொல்லியிருக்கிறார்..! அந்த ஆதாரங்கள் நம் கைக்கு கிடைப்பதற்கு மிகுந்த செல்வாக்கு வேண்டும் ரிஷி..!

மதுரை said...

தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html

Castro Karthi said...

rise of the apes review..
http://castrokarthi.blogspot.com/2011/08/blog-post_20.html

உண்மைத்தமிழன் said...

[[[மதுரை said...

தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும்

http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html]]]

அந்தக் கர்மத்தை வேற வரி, வரியா படிக்கணுமா..? என்ன கொடுமை சரவணன் இது..?

உண்மைத்தமிழன் said...

[[[Castro Karthi said...

rise of the apes review..

http://castrokarthi.blogspot.com/2011/08/blog-post_20.html]]]

நன்றி. அவசியம் பார்க்கிறேன் கார்த்தி..!