1988 ஜனவரி 28-ல் தமிழக சட்டப் பேரவையில் நடந்தது என்ன..?

15-05-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்பு முதலமைச்சரான ஜானகி எம்.ஜி.ஆரை ஏற்காமல் ஜெயலலிதாவின் பின்னால் அ.தி.மு.க.வின் 31 எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்து நின்றதால் கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தது..!

சட்டப் பேரவையில் ஜானகியம்மாள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நடந்த நிகழ்வுகளையும், சட்டப் பேரவையில் நடந்த கலாட்டாக்களையும் அன்றைய ஜூனியர்விகடனின் ஆசிரியராக இருந்த எனதருமை மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.சுதாங்கன் விவரமான கட்டுரையாக எழுதியிருந்தார்.

அதனை இந்த வார ஜூனியர்விகடன் பழசு என்றும் புதுசு என்ற பகுதியில் வெளியிட்டிருக்கிறார்கள். அன்றைய நிகழ்வுகளை அறிந்திருக்காதவர்கள் இதனைப் படித்துத் தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..!

நேற்றும் நமதே - 9: 03.02.1988

தங்கள் பிடியில் சிக்கிய ஆட்சியை நிலைநிறுத்த, ஜானகி கோஷ்டியினர் ஆடிய ஆட்டத்தைப்போல், தமிழகம் இதுவரை கண்டது இல்லை.

புதுப் புது சாகசங்கள், உத்திகளைக் கையாண்டு பார்த்​தார்கள். யாருக்கும் எதையும் தரத் தயாராக இருந்தார்கள். யார் காலிலும் விழ ரெடி. வாரி வழங்கப் பண மூட்டைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, கடைசி நிமிடம் வரைப் பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்தார்கள்!

சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதே இவர்களுக்கு முதல் வேலையாக இருந்தது. ஜெயலலிதா அணியில் இருந்தவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க எல்லாவித ஆசைகளையும் காட்டிப் பார்த்தார்கள். பி.ஹெச்.பாண்டியனைக் கைக்குள் போட்டுக் கொண்டு, 'கட்சி மாறிகளாக அறிவித்துப் பதவி பறிக்கப்படும்’ என்று தினமும் ஒரு பக்கம் எச்சரிக்கை வேறு!

போலீஸ் பட்டாளம் ஒன்று ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ-க்களின் வீடுகளைத் தேடிப் போய்ப் பயமுறுத்திப் பார்த்தது. பல எம்.எல்.ஏ-க்களின் மனைவியரிடம் லட்சங்கள் தருவதாகப் பேசிப் பார்க்கப்பட்டது. ஆனால், கே.கே.எஸ்.எஸ்.ஆர். திரட்டிவைத்து இருந்த எம்.எல்.ஏ-க்களை மட்டும் திசை மாற்ற முடியவில்லை!


நாள் நெருங்க நெருங்க, ஜானகி கோஷ்டியினருக்குப் பதற்றம் அதிகமா​யிற்று. 'சமரசத் திட்டம்’ என்ற ஒன்றை உலவவிட்டார்கள். அதன்படி, நெடுஞ்செழியனுக்கு உதவி முதல்வர் பதவி தரப்படும். மற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் அமைச்சரவையில் இடம் உண்டு. ஜெயலலிதாவை மட்டும் ஒதுக்கினால் போதும்!

ஜெயலலிதா அணியினரிடம் இந்த சமரசத் திட்டத்துடன் போனது யார் தெரியுமா? ஜானகியின் சகோதரர் நாராயணன் என்ற மணி. ஜெய​லலிதா கோஷ்டியைச் சேர்ந்த ஒவ்வோர் அமைச்சர் வீட்டையும் தேடிப் போய்ப் பேசினார். ''ஜானகி அம்மாவே உங்கள் வீட்டுக்கு வந்து கூப்பிடத் தயார்...'' என்று சொன்னார் மணி. முதலில் போயஸ் கார்டனுக்குச் சென்று ஜெயலலிதாவிடம் பேசச் சொல்லுங்கள்!'' என்றார்கள் மாஜி மந்திரிகள்!

இந்தப் பேச்சுவார்த்தையால், சலசலப்புக்கு ஆளானார் க.ராஜாராம். ''ஜானகி அரசை நிலைநிறுத்த நான் உதவப் போகிறேன். அது கவிழாது... அதில் போய்ச் சேருங்கள்!'' என்று ராஜாராமுக்குப் புத்திமதி கூறினாராம் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன். தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்த ராஜாராமை மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளுமாறு எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு செய்தவர் ஆர்.வி. ஆகவே, ஜனாதிபதி பேச்சைத் தட்ட முடியாத நிலை!

குழம்பிய மனத்துடன் ராஜாராம் சென்னை திரும்பியபோது, ஜானகி ஆதரவாளரான நடிகை லதா அவரை சந்தித்தார். ஜானகிக்கு உதவுமாறு 'மனமுருக’ லதா கேட்டுக்கொள்ள, ராஜாராம் மனம் மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது! உடனே பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன் ஆகியோரைச் சந்தித்து 'ஜானகி கரத்தைப் பலப்படுத்த’ வேண்டினார் ராஜாராம். முகத்​தைத் திருப்பிக்கொண்டு வாசல் கதவைக் காட்டினார்கள் அவர்கள்.

இந்திரா காங்கிரஸ் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஜானகி கோஷ்டியினருக்குக் குறைய ஆரம்பித்தது. அவர்களுக்கு எதிரியாக, மூப்பனார் கோஷ்டியினர் செயல்பட்டனர். சிவாஜி கோஷ்டியினர், தங்கபாலு கோஷ்டியினர் இரண்டையும் 'விலை பேசி’ வலை வீசிப் பிடித்தாகிவிட்டது! இந்த அசிங்கம் எல்லாம் டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தது. நடுநிலை வகிக்கலாம் என்று நினைத்த பிரதம மந்திரி மனம் மாறினார்.

கிட்டத்தட்ட 12 இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இவர்கள் வலையில் பிடிபட்டதை அறிந்த பூட்டாசிங், முதல்வர் ஜானகியை டெலி​போனிலேயே அழைத்து நேரடியாகவே எச்சரிக்கை செய்தார். ''ஐயோ... இதெல்லாம் எனக்குத் தெரியாது!'' என்று புலம்பினார் ஜானகி.

எப்படியோ சிவாஜியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட ஆர்.எம்.வீ., அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை அனுப்பி 'ஜானகியை ஆதரிக்க வேண்டும்’ என்று இ.காங்கிரஸில் பிரசாரம் செய்யவிட்டார். ஒரு கட்டத்தில் இவர்கள் பிரதமருக்கே தந்தியடிக்கத் திட்டம் போட்டு இருந்தனர். இதை அறிந்த மூப்பனார் கோஷ்டியினர், உடனே இயங்கி ஜானகியை ஆதரிக்கக் கூடாது என்று ராஜீவ் காந்திக்குத் தந்தி அனுப்பினார்கள்.

வி.வி.சாமிநாதன் ஒவ்வொரு எதிர்க் கட்சியினரிடமும் ஓடினார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கெஞ்சிப் பார்த்தார். அப்துல் சமதிடம் மன்றாடினார்.

ஜனாதிபதி ஆர்.வி., கவர்னர் குரானா, சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் ஆகிய மும்மூர்த்தி​களிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்டார்கள் ஜானகி கோஷ்டியினர்!

கட்சி மாறியவர்களை நீக்கும் சட்டத்தின் கீழ், ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ-க்களை நீக்கும் அறிகுறிகளைத் தோற்றுவித்தனர். இதைப்பற்றி ஜெயலலிதா அணி எம்.எல்.ஏ-க்களும் மாஜி மந்திரிகளும் குரானாவிடம் 'இது நியாயமா?’ என்று புகார் செய்தபோது, ''எம்.எல்.ஏ-க்களை அந்த சட்டத்தின் கீழ் நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே! அதில் நான் தலையிட வழி இல்லை...'' என்று நழுவினார் குரானா!

சட்டசபையில் நடக்கும் ஓட்டெடுப்பில், தனது கட்சி முடிவுக்கு எதிராக வாக்களித்தால்தான் ஒரு எம்.எல்.ஏ. பதவி இழப்பார் என்பது சட்டம். ஆனால், அப்படி எதுவுமே நடக்காததற்கு முன்பே 'பதவி நீக்குவேன்’ என்று எச்சரிக்க ஆரம்பித்துவிட்டார் சபாநாயகர். நடுநிலை வகிக்க வேண்டிய சபாநாயகர் ஜானகி கோஷ்டியின் எடுபிடி ஆனார்!

இந்த நிலையில் டெல்லி சென்றார் ஜெயலலிதா. பிரதமருடன் ஒரு மணி நேரம் பேசினார். இந்தச் செய்தி ஜானகி கோஷ்டியினர் வயிற்றில் புளியைக் கரைத்தது. டெல்லியில் இருந்து திரும்பிய ஜெய​லலிதா, பிரதமர் சந்திப்புபற்றி ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் மௌனம் காத்தார்!

உடனே ஜானகி கோஷ்டியினர், ஜனாதிபதியைத் தண்டனிட்டார்கள். ஜானகி ஆதரவு எம்.பி-க்கள் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு, ''ஒன்றும் நடக்காது... தைரியமாக இருங்கள்!'' என்று உற்சாகம் ஊட்டினார்கள்!

ஜனவரி 27-ம் தேதி மாலையில் இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம். பூட்டாசிங் டெல்லியில் இருந்து ஜானகி கோஷ்டியினருக்கு 'ஓலை’ எடுத்து வர இருந்தார். டெல்லியில், விமானத்தில் ஏறப்போனார் பூட்டாசிங். ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வந்து, திரும்பிப் போனார். அவரது சென்னை விஜயம் ரத்து ஆயிற்று. ஜானகி அரசுக்கு, 'இன்னும் ஒரே ஒரு சான்ஸ்’ கொடுக்குமாறு பிரதமரிடம், ஜனாதிபதி வேண்டிக்கொண்டதாக டெல்லியில் இருந்து செய்தி!

அன்று பிரதமரின் அறிக்கை வெளியானது. 'ஒன்றுபட்ட அ.தி.மு.க-வையே இ.காங்கிரஸ் ஆதரிக்கும்’ என்றது அந்த அறிக்கை. இதுபற்றி ஒவ்வொரு முகாமும் ஒவ்வொரு மாதிரி விளக்கம் கூறின. ஆர்.வி-யின் முயற்சியால் - ஜானகி அமைச்சரவையை எதிர்ப்பது இல்லை என்றே டெல்லி சொல்கிற சூழ்நிலை உருவானது. ஜானகி கோஷ்டி திடீர் குஷி அடைந்தது. ஆனால், இது நீடிக்கவில்லை. விடியற்காலை 3 மணிக்கு, ஜானகி அமைச்சரவையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனப் புது  உத்தரவு வந்தது.

28-ம் தேதி காலை 8 மணிக்கு இ.காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ-க்களின் கூட்டம். மேலிடப் பார்வையாளராக வந்த பாண்டிச்சேரி முதல்வர் பரூக், 'சாம... பேத... தான... தண்ட’ங்களைப் பிரயோ​கித்துப் பேசினார். தங்கபாலு கோஷ்டியினருக்கும் சிவாஜி கோஷ்டியினருக்கும் அதில் எச்சரிக்கைகள் இருந்தன. தங்கபாலு கோஷ்டியினர் 'கப்சிப்’ ஆயினர்! சிவாஜி கோஷ்டியைச் சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ-க்கள் மட்டும் ஜானகி கோஷ்டியிடம் 'விசுவாசத்தைக் காட்ட’ முடிவு செய்தனர். ஆனால், சட்டசபையில் 13 ஓட்டு வித்தியாசத்தில் ஜானகி அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம் தோற்று ஜானகி மந்திரிசபை கவிழும் நிலை.

ஜானகி கோஷ்டி சதி வேலைகளில் இறங்கினர். குரானா ரகசியமாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டார். ஜெயலலிதா அணியின் மாஜி மந்திரிகளின் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பதவிகளைப் பறிக்க பி.ஹெச்.பாண்டியன் முடிவு செய்தார். அப்படிச் செய்தால், மீதி எம்.எல்.ஏ-க்களில் பலர் தங்கள் பக்கம் வரலாம் என்பது திட்டம்.

28-ம் தேதி சட்டசபை கூடியவுடன் முதலில் ஜானகி அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பி.ஹெச்.பாண்டியன் இந்த நியாயத்தை மீறினார். ஐந்து இ.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக டெலிபோனில் எனக்குச் சொன்னார்கள் என்று 10 மணிக்குக் கூடிய சட்ட​மன்றத்தை, 12 மணிக்குத் தள்ளிவைத்தார்.


12 மணிக்கு மீண்டும் கூடியபோது, 'கட்சி மாறுவதைத் தடை செய்யும் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அணி​யின் ஆறு மாஜி அமைச்சர்களுடைய எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டதாக’ அறிவித்து மன்றத்தை மீண்டும் 3 மணிக்கு ஒத்திவைத்தார்!

''இப்படி அடிக்கடி அன்று சபையை ஒத்திவைத்ததே ஒரு திட்டமிட்ட சதி! தங்களுக்குத் தேவையான எம்.எல்.ஏ-க்களைத் திரட்ட ஜானகி கோஷ்டியினர் முயல்வதற்கு வேண்டிய நேரம் கொடுத்தார் பாண்டியன்...'' என்று குமுறினார் பண்ருட்டி ராமச்​சந்திரன்.

இடையில், தி.மு.க-வின் 12 எம்.எல்.ஏ-க்கள் உதவியைப் பெற நாஞ்சிலார் காலில் விழுந்தனர் - ஆர்.எம்.வீ., வி.வி.சாமிநாதன், முத்துசாமி ஆகிய அமைச்சர்கள், ''நாங்கள் இன்னும் முன்பே உங்களைத் தேடி வந்திருப்போம். ப.உ.சண்முகம்தான் தி.மு.க. உறவு வேண்டாம்... இ.காங்கிரஸ் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று தடுத்தார்...'' என்று அவர்கள் அழுதனர்.

நாஞ்சிலார் சற்று மனம் உருகிவிட்ட​தாகக் கேள்வி. பல முறை கலைஞருடன் அவர் டெலிபோனில் தொடர்பு கொண்டார். உருப்​படியான பதில் கலைஞரிடம் இருந்து வரவில்லை.

உண்மையில் அன்று காலை முதல் ஜானகி கோஷ்டியினர் ஒரு வதந்தியை சிவாஜி கோஷ்டி மூலம் காங்கிரஸில் பரப்பினர். 'தி.மு.க., ஜானகிக்கு ஆதரவு தருகிறது’ என்பது அது. இப்படி வதந்தி பரப்பினால் இ.காங்கிரஸ் நிலை மாறும் என்று கனவு கண்டார்கள், பாவம்!

''கலைஞரை நேரடியாகப் பாருங்கள்... முதல்வர் ஜானகியையே பார்க்கச் சொல்லுங்கள்!'' என்றாராம் நாஞ்சிலார்.

'இ.காங்கிரஸ் ஆதரவு தர மறுக்கிறார்கள். இந்த நிலையில் நீங்கள்தான் உதவ வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஜானகி, கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதித் தர, அதை எடுத்துக்​கொண்டு மூன்று மந்திரிகள் கலைஞரைப் பார்க்க ஓடினார்கள். கலைஞர் அந்தக் கடிதத்தைப் படித்தார். எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார். ஆனால், ஜானகியை எதிர்த்து ஓட்டு அளிப்பது என்ற முடிவில் மாறுதல் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி, திருப்பி அனுப்பிவிட்டார்.

சில தி.மு.க. தலைவர்களுக்குப் பல விதமான ஆசைகள் காண்பிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி. ''ஜானகியின் கடிதத்தைப் பார்த்ததும் முதலில் கலைஞர் சற்று யோசித்தார். சிலர், 'நடுநிலை வகிக்கலாம்’ என்றார்கள். ஆனால், அன்பழகன், ஆற்காடு வீராசாமி போன்றோர் இதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். 'ஜானகியை எதிர்ப்பது என்று முன்பு செய்த முடிவை மாற்றினால், கட்சித் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ் நாட்டில் நமக்கு இருக்கும் மதிப்பும் போய்விடும்.’ என்று அவர்கள் வாதாடினர்.

கலைஞர், 'ஆதரவு கிடையாது’ என்ற முடிவையே உறுதி செய்தார். இதை ஒரு காகிதத்தில் எழுதி, தன் கையெழுத்திட்டு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் காட்டுமாறு ஆற்காடு வீராசாமியை உடனே அனுப்பினார்.

கடைசி வரை ஜானகி அரசை எதிர்க்கப்​போவதாக சொல்லி வந்த முஸ்லிம் லீக், திடீர் என்று பல்டி அடித்தது. 'நடுநிலைமை’ என்று அறிவித்தது. ஜானகி கோஷ்டியைச் சேர்ந்த ஆலடி அருணா, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் சமதைக் கையைப் பிடித்து, எங்கோ அழைத்துப் போனதை நிருபர்கள் பார்த்தனர்!

தி.மு.க. ஆதரவும் இல்லை என்பது வெட்டவெளிச்சமானவுடன், இனி பி.ஹெச்.பாண்டியனே கதி என்று சரண் அடைந்தனர்.வானளாவிய அதிகாரங்​களைப் பிரயோகிக்கத் தொடங்கினார் பி.ஹெச்.பாண்டியன்!

3 மணிக்கு, அவை கூடியபோது சபாநாயகரின் உத்தரவின்பேரில் சாரிசாரியாக போலீஸ் நுழைந்தது. கூடவே குண்டர்களும் நுழைந்தார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அடித்து விரட்டப்பட்டனர். ஜெய​லலிதா அணி எம்.எல்.ஏ-க்கள் 27 பேர் பதவிகள் பறிக்கப்பட்டன.

உள்ளே தப்பித் தவறி இருந்துவிட்ட எட்டு தி.மு.க-வினர் எதிர்த்து ஓட்டளிக்க - ஜானகி கோஷ்டி எம்.எல்.ஏ-க்கள் 99 பேர் ஆதரித்து ஓட்டுப் போட - ஜானகி அரசின் மீது நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது!

''இப்படி மோசடியான ஒரு முறையில், உலகில் எந்த சட்டசபையிலும் அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது இல்லை. ஒரே ஓர் உதாரணம் இருக்கலாம். இதே முறையில்தான் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தார்!'' என்றார் வியந்துபோய் நின்ற டெல்லி பிரமுகர்!

ஆபத்தான முன்னுதாரணமாகத் திகழக்கூடிய இந்த நாடகங்களை மத்திய அரசு இத்தனை நாட்கள் நடக்க அனுமதித்ததே, மிகவும் கண்டிக்கத்தக்கது! இந்த மாதிரி ஆபாசக் காட்சிகள் அரங்கேறாமல், மெஜாரிட்டி ஆதரவு இல்லை என்றவுடனேயே, மத்திய அரசு... சட்டசபையைக் கலைத்திருக்க வேண்டும் என்பதே மக்கள் கருத்து!

நன்றி-ஜூனியர்விகடன்-18-05-2011

6 comments:

ஜமீல் said...

புதியவர்கட்கு வரலாறு சொல்லப்படுகிறபோது நடுநிலைமை தவறாமல் சொல்லப் பட வேண்டும்.. "உங்களதருமை மரியாதைக்குரிய ஆசிரியர்" அப்போதிருந்தே ஒரு சார்பு தன்மையோடு, அவர் மனதுக்கு தோன்றியதை அன்றைய நிகழ்வாக சொல்லியிருக்கிறார்....!!!! அவர் அப்போதிருந்தே இப்படித் தான் என்பது புலனாகிறது...!!

Charles said...

seems like one sided view... any have interesting...

உண்மைத்தமிழன் said...

[[[ஜமீல் said...
புதியவர்கட்கு வரலாறு சொல்லப்படுகிறபோது நடுநிலைமை தவறாமல் சொல்லப்பட வேண்டும். "உங்களதருமை மரியாதைக்குரிய ஆசிரியர்" அப்போதிருந்தே ஒரு சார்பு தன்மையோடு, அவர் மனதுக்கு தோன்றியதை அன்றைய நிகழ்வாக சொல்லியிருக்கிறார்.! அவர் அப்போதிருந்தே இப்படித்தான் என்பது புலனாகிறது.!!]]]

ஜமீல் ஸார்..

ஒருதலைப்பட்சமான தகவல்கள் எவை என்பதையும் சொல்லியிருந்தீர்களேயானால் சந்தோஷப்பட்டிருப்பேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Charles said...

seems like one sided view. any have interesting.]]]

அ.தி.மு.க.வின் ஜானகி அணியினர் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடித்து, செய்த சேட்டைகளைத்தான் ஆசிரியர் தொகுத்திருக்கிறார். அன்றைக்கு நடந்தது இதுதான் என்பது அனைத்து பத்திரிகைகளுக்கும் தெரியும்..!

Rafeek said...

அந்த காலகட்டத்தில் தமிழக அரசியல் நாறிய ஒரு நிகழ்வுதான் இது!! இதிலென்னா ஒன் சைடு?

உண்மைத்தமிழன் said...

[[[Rafeek said...

அந்த காலகட்டத்தில் தமிழக அரசியல் நாறிய ஒரு நிகழ்வுதான் இது!! இதிலென்னா ஒன் சைடு?]]]

குட் கொஸ்டீன் ரபீக்.. தேங்க்ஸ்..