கருணாநிதியின் வீராணம் ஊழல்-1 : சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

02-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 1972 அக்டோபர் 10-ம் நாள் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.  அப்போது தி.மு.க. ஆட்சி மீதும், கருணாநிதி மீதும் பல்வேறு ஊழல் புகார்களைக் கூறினார் எம்.ஜி.ஆர். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.எம்.கல்யாணசுந்தரத்துடன் தமிழக கவர்னர் கே.கே.ஷாவை நவம்பர் 4-ம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்து கருணாநிதி ஆட்சி பற்றிய புகார் கடிதத்தை நீட்டினார். இந்தப் புகாரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து தி.மு.க. ஆட்சி மீது விசாரணை நடத்தும்படி கோரினார்.

ஆனால் ஆளுநரோ இதனை அப்படியே கருணாநிதிக்கு திருப்பியனுப்பி அவருடைய கருத்தை கேட்டுவிட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். இதனால் உங்களிடம் கொடுத்துப் பயனில்லை. நாங்கள் நேரடியாக ஜனாதிபதியிடமே கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லிவிட்டு அந்த மனுவை கே.கே.ஷாவிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார்கள்.

நவம்பர் 6-ம் தேதி காலையில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த எம்.ஜி.ஆரும், கல்யாணசுந்தரமும் தி.மு.க. ஆட்சி பற்றிய புகார் பட்டியலை அவரிடம் கொடுத்தார்கள்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் கருணாநிதி மற்றும் தி.மு.க. அரசு மீதான அந்த புகார் பட்டியல் அடுத்த 5 ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருந்தது. 1976-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதியன்று அப்போதைய கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்த இந்திராகாந்தி, பிப்ரவரி மாதம் 3-ம் தேதி கருணாநிதி மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது.

இது பற்றி நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் ஓம் மேத்தா, “1972-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் தி.மு.க. அமைச்சரவை மீதான புகார்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் கொடுத்தார். அதில் மொத்தம்  54 புகார்கள் அடங்கியிருந்தன. அவற்றில் முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிரானவை 27. மற்ற அமைச்சர்கள் மீது கூறப்பட்டவை 13. மீதி 14 புகார்களும் அதிகாரத்தை தி.மு.க. கழகம் தவறாகப் பயன்படுத்தியதாக பொதுப்படையான புகார்கள்.. இந்தப் புகார்கள் மீது நீதிபதி சர்க்காரியா விசாரணை நடத்துவார்” என்று அறிவித்தார்.

இந்த புகழ் பெற்ற சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கதாநாயக ஊழல் என்று சொல்ல வேண்டுமானால் வீராணம் குடிநீர்த் திட்டத்தில் நடந்த ஊழலைத்தான் சொல்ல வேண்டும்..!

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தமிழ்நாட்டில் வீராணம் ஊழல்தான் அதிகமாக பேசப்பட்டு வந்தது..! தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலின் அலை குக்கிராமத்தையும் எட்டியதுபோல 1977-ம் தேர்தலில் எம்.ஜி.ஆரின் தி.மு.க.வுக்கு எதிரான புயல்வேகப் பிரச்சாரத்தில் முக்கியக் கருவியாகப் பயன்பட்டதும் இந்த வீராணம் ஊழல்தான்..! கருணாநிதி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களை அதிகமாக கார்னர் செய்திருப்பதும் இந்த வீராணம் ஊழல் வழக்கில்தான்.

துக்ளக் பத்திரிகையில் இந்த வீராணம் ஊழல் வழக்கு பற்றிய தொடர் கட்டுரை பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்தது. அப்போது கண் ஆபரேஷன் செய்து படிக்க முடியாமல் இருந்த எனது தந்தைக்கு அந்தக் கட்டுரையை முழுவதுமாக படித்துக் காண்பித்தது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது..! கருணாநிதியின் ஊழல்கள் பற்றி அப்பொழுதே எனது நெஞ்சில் பதிய வைத்த எனது தந்தைக்கு நன்றி..!

இந்த ஊழல் பற்றிய இன்னொரு சுவாரசியம்.. மணிரத்னத்தின் 'இதயக்கோவில்' திரைப்படத்தில் ஊரில் இருந்து பாடகனாக வேண்டும் என்பதற்காகவே சென்னை வரும் மோகன், தங்குவதற்கு இடமில்லாமல் ரோட்டோரமாக இருக்கும் பெரிய இரும்புக் குழாயில் தங்குவார்..!

இது போன்ற 'செட்டு'களை பல படங்களில் பார்த்திருந்தாலும், இது என்னய்யா 'செட்டு' என்று அந்த வயதில் யோசிக்க வைத்திருந்தது அந்தக் காட்சிகள். இதனை முன் வைத்தே அப்போது விகடனில் வீராணம் குழாய் பற்றிய கார்ட்டூன் ஒன்றை போட்டிருந்தார்கள்.

அந்தக் குழாய்களெல்லாம் வீராணம் ஊழலின்போது கொண்டு வரப்பட்டு இப்போதும் பயன்படுத்தப்படாமல் இருப்பவை என்று அந்த நேரத்தில் பத்திரிகைகள் மூலமாகத்தான் நான அறிந்து கொண்டேன்..!

எதில் தப்பித்தாலும் வீராணம் ஊழலில் தப்பிக்க முடியாது என்ற நிலை வந்ததினால்தான் தனது மகனை அடித்து, உதைத்து, சித்ரவதை செய்த நிலையிலும், நெருக்கடி நிலையை எதிர்த்து தான் பக்கம், பக்கமாக கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தபோதிலும், தனது அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி பல்டியடித்து 1977 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டார் கருணாநிதி.! இதனால் காங்கிரஸ் பயன் அடைந்ததோ இல்லையோ, கருணாநிதி அன்றைக்கே தப்பித்துவிட்டார்..!

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்திருக்கும் அந்த வீராணம் ஊழல் வழக்கு பற்றிய செய்திகளின் முதல் பாகம் இது :

சர்க்காரியா கமிஷன் விசாரித்த வழக்குகளில் வீராணம் ஊழல் மிக முக்கியமானது. ஊழல் செய்வதற்காகவே விதிமுறைகளை மாற்றியதாகவும், அதை எதிர்த்த அதிகாரிகள் மிரட்டப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னை நகரில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. சென்னை மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியில் இருந்து குழாய்கள் மூலம் சென்னைக்குத் தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. இதுதான் வீராணம் திட்டம்.

சென்னை நகரில் இருந்து 222 கி.மீ. தூரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது வீராணம் ஏரி. அங்கிருந்து சுத்திகரிக்கப்படாத நீரையெடுத்து வந்து, நெய்வேலிக்கு அருகிலுள்ள வடக்குத்து என்ற இடத்தில் அமைக்கப்பட இருந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து, 198 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்களை பதித்து அதன் மூலமாக குடிநீரை சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இந்த வீராணம் குடிநீர்த் திட்டம். இதற்காக பல நூறு கோடிகளில் தி்ட்டம் தீட்டப்பட்டது.

1950-களில், பொதுப்பணிக்கான ஒப்பந்தம் வழங்குவதை ஒரு சில பொறியாளர்கள் மட்டுமே முடிவெடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. 1954-ம் ஆண்டு சுந்தரம் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி இது போல தனி நபர் ஒருவருக்கு அதிகாரம் வழங்குவது மக்களாட்சி முறைக்கு உகந்ததல்ல என்றும், நான்கு துறைகளின் பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து முடிவெடுக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்.

காமராஜர் காலத்தில் கக்கன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பொறியாளர்கள் குழுவை அமைத்து, அதன மூலம் முடிவெடுக்கலாம் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தார். இதுபோல பொறியாளர்கள் குழுவை அமைத்ததினால்தான் காமராஜர் பெருந்தலைவர் ஆனார்.


காங்கிரஸ் ஆட்சி போனதும் தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சரானார். “எல்லா முடிவையும் பொறியாளர்கள் எடுத்தால், அரசியல்வியாதிகள் நாங்கள் எதுக்கு இருக்கோம்?” என்று அவருக்குத் தோன்றியதோ என்னவோ.. பொறியாளர்களிடம் கருத்தை மட்டும் கேட்டுக் கொண்டு முடிவை அரசு எடுக்கலாம் என்று புது நடைமுறையை உருவாக்க நினைக்கிறார். இது நடந்தது அண்ணாவின் ஆட்சிக் காலத்தில்..

இதன் பின்பு அண்ணாவின் மறைவுக்குப் பின்பு கருணாநிதி முதல்வரானார். இப்போது சாதிக்பாட்சா பொதுப்பணித் துறை அமைச்சராகிறார். இந்த நேரத்தில்தான் வீராணம் குடிநீர்த் திட்டம் பற்றிய வேலைகள் துவங்கின. வீராணம் தி்டடத்தில் பொறியாளர்களின் கருத்தைக் கேட்டு முடிவை நாம் எடுப்போம் என்று தி்ட்டமிட்டார் கருணாநிதி. இது தொடர்பான அரசாணையைத் திருத்தி புதிய அரசாணையும் வெளிவருகிறது.

குழாய் அமைக்க விரும்புவோர் வரலாம் என்று டெண்டர் வெளியிடப்படுகிறது. இந்த டெண்டரில் ஐந்து நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன. இறுதியில் சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

செல்போன் சேவை நடத்தும் நிறுவனங்களையெல்லாம் விட்டுவிட்டு கட்டுமானப் பணியில் உள்ள யூனிடெக், ஸ்வான் போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை கொடுத்தவர்களல்லவா? அதே டெக்னிக்குதான் இங்கும் கடைப்பிடிக்கப்பட்டது..

சத்தியநாராயணா நிறுவனத்தோடும் ஏறக்குறைய இதனோடு சம நிலையில் போட்டியிட்ட தாராப்பூர் நிறுவனம், மற்றும்  மற்றவைகளான இண்டியன் ஹ்யூம் பைப்ஸ், கேரளா ப்ரேமோ பைப் மற்றும் யூனிவர்ஸல் பைப்பிங் கன்ஸ்ட்ரக்ஷன் போன்ற நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி டெண்டரில் குறிப்பிட்டிருக்கும் விலையைக் குறைப்பதற்காக அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இதற்குப் பிறகு “சத்தியநாராயணா நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து, அந்த நிறுவனங்களிடம் இத்திட்டத்திற்குத் தேவையான குழாய்களைத் தயாரிக்கும் அளவுக்கு வசதியிருக்கிறதா என்பதை அறிய வேண்டும். அதன் பிறகு இந்நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கலாம்..” என்று பொதுப்பணித் துறையின் அப்போதைய தலைமைப் பொறியாளர் இது பற்றிய கோப்பில் குறிப்பு எழுதுகிறார்.

இந்தக் குறிப்பை அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சாதிக்பாட்சாவிடம் அளிக்கிறார். அவர் தலைமைப் பொறியாளரை அழைத்து “முதலில் சத்தியநாராயணா நிறுவனத்துக்கு வேலைக்கான ஆணையை வழங்கிவிட்டு அதன் பிறகு தகுதியிருக்கிறதா என்று பார்ப்போம். முதலமைச்சர் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்.. அவ்ளோதான்.. சொல்லிப்புட்டேன்..” என்று கூறுகிறார். இதன் பிறகு, இந்தக் கோப்பு அப்போதைய நிதித்துறைச் செயலாளரிடம் போகிறது.

இப்போது இருப்பதுபோலவே ஆட்சியாளர்களுக்கு காது கிழியும்வகையில் ஜால்ரா அடிக்கும் அதிகாரிகள் அப்போது இல்லை. அப்போதைய நிதித்துறைச்  செயலாளர் கோப்புகளை விரிவாக ஆராய்ந்து அவரும் ஒரு அறிக்கையை அளிக்கிறார்.

அதில், “முதலில் இந்நிறுவனங்களின் தொழிற்சாலைகளை நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் இவர்கள் கூறும் வசதிகள் இருக்காவிட்டால், டெண்டரை நிராகரிக்க முடியும். மேலும், வெளிநாட்டில் உள்ள தொழிற்சாலையை நேரில் ஆய்வு செய்தால், அந்த நிறுவனங்களோடு நேரடியாக ஒப்பந்தம் செய்து, அரசுக்கான செலவைக் குறைக்கவும் வழியிருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.


மேலும், “சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் அது நிறுவ இருக்கும் தொழிற்சாலைக்காக 75 சதவிகிதத் தொகையை வட்டியில்லாத முன் பணமாக வழங்க வேண்டும் என்று கேட்பது முறையற்ற செயல். ஆகவே அனைத்து நிறுவனங்களோடும், பேச்சுவார்த்தை நடத்தலாம்..” என்று எழுதியிருக்கிறார் நிதித் துறைச் செயலாளர்.

இவர் நிதித் துறைச் செயலாளராக இருப்பதால் இவர் சொன்னதையெல்லாம் கேட்க வேண்டுமா என்ன..? இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் அளித்த டெண்டர், தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் பிறகு பொதுப்பணித்துறை அமைச்சர் சாதிக்பாட்சா, கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வநாதன், தலைமைப் பொறியாளர் உசேன் ஆகியோர் ஈரான், மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஹாலந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்குச் சென்று தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதற்காகச் செல்கிறார்கள். அவர்களும் வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டாமா..?

நன்றாக ஊர் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த தலைமைப் பொறியாளர் உசேன், சுருக்கமான அறி்க்கை ஒன்று அரசிடம் சமர்ப்பிக்கிறார். “அந்த அறிக்கையும் தொழில் நுட்ப அறிக்கை போல இல்லாமல், சுற்றுப் பயண அறிக்கைபோல் இருந்தது..” என்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார். அவர்கள் பேக்டரியை பார்க்கவா சென்றார்கள்? வெளிநாட்டு்க்கு ‘இன்பச் சுற்றுலா’ அல்லவா சென்றார்கள்? அவர்கள் எப்படி தொழில் நுட்ப அறிக்கையை அவர்களால் சமர்ப்பிக்க முடியும்..?

அமைச்சர்களும், அதிகாரிகளும் சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியதும் சத்தியநாராயணா பிரதர்ஸுக்கு நிரந்தரமான ஆணையை வழங்கலாம் என்று அரசுத் தரப்பில் முடிவெடுக்கப்படுகிறது. தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட டெண்டர், இதன் பின்னர் நிரந்தரமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொழிற்சாலை அமைப்பதற்காக 75 சதவிகித முன் பணத்தை வட்டியில்லாமல் வழங்கவும் உத்தரவிடப்படுகிறது.

நிதித்துறைச் செயலாளர் இப்போதும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து “முன் பணம் வழங்கக் கூடாது” என்று கூறுகிறார். ஓரளவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு தனது பணி முடிந்ததாக அவர் நினைத்திருக்கக் கூடும்.

“இது தொடர்பாக நடந்த விசாரணைகளில், வீராணம் திட்டத்தில் கருணாநிதி எடுத்த நடவடிக்கை, அதன் நோக்கம் என்ன என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது?” என்று நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகிறார்.

மேலும், “வீராணம் திட்டத்திற்காக முடிந்துபோன ஒரு கோப்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டதும் விதிகளில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டதும் இத்திருத்தத்தில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது..” என்கிறார் சர்க்காரியா.


இந்த ஆணையத்தின் முன் சாட்சியமளித்த நிர்வாகப் பொறியாளர் சிவராமன் தனது சாட்சியத்தில், “முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பப்படி சத்தியநாராயணா பிரதர்ஸ் அனுப்பிய டெண்டரை பரிந்துரை செய்யவில்லை என்றால் எனக்குக் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கும். உலகில் உள்ள எல்லா நாடுகளில் இருந்தும் டெண்டர்கள் கேட்ட பிறகு, குறிப்பாக ஒரு டெண்டரை தற்காலிகமாக ஏற்றுக் கொள்வதை என்னுடைய 31 ஆண்டு காலப் பணி அனுபவத்தில் நான் பார்த்ததே இல்லை. வீராணம் தி்ட்டத்தில்தான் முதல் முறையாக இவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது..” என்று கூறியிருந்தார்.

இதிலிருந்தே இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒவ்வொருவரும் எப்படி மிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

சரி.. இவ்ளோ கஷ்டப்பட்டு சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கருணாநிதியும், பொதுப்பணித் துறை அமைச்சர் சாதிக்பாட்சாவும் எதற்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்தார்கள் என்று சந்தேகம் எழுதுகிறதல்லாவா..?

இதற்கான விடையை அந்நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியநாராயணாவின் மகன் புருஷோத்தம் தனது சாட்சியத்தில் விளக்கியுள்ளார். அதனை அடுத்த வாரம் காண்போம்..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் - 07-04-2011

16 comments:

விஜய்கோபால்சாமி said...

வீராணம் ஊழலில் கருணாநிதி வெர்ஷன் இருப்பது போல அம்மா வெர்ஷனும் இருக்கு. இப்பவும் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும் போது பில்லருக்கு மேல கொஞ்சம் பைப் போகும். அதெல்லாம் அம்மா போட்டது. அதைப் பத்தியும் எழுதுங்க.

Santhose said...

Do you know that most of the statement obtained from the witness are during the emergency period? The authenticity is questioned even by Cho at that time and he didn't published any of this in Thuklug during that period by saying that the enquiry is biased.

Santhose

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

வீராணம் ஊழலில் கருணாநிதி வெர்ஷன் இருப்பது போல அம்மா வெர்ஷனும் இருக்கு. இப்பவும் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்போது பில்லருக்கு மேல கொஞ்சம் பைப் போகும். அதெல்லாம் அம்மா போட்டது. அதைப் பத்தியும் எழுதுங்க.]]]

ச்சும்மா கிடந்த பைப்புகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு, புதிய பைப்புகளை வாங்கியதாகக் கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டினார் என்பதுதானே..? டீடெயில்டு என்கிட்ட இல்லீங்கண்ணா..! இதுகூட அப்போதைய காலக்கட்டத்தில் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுத்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[Santhose said...

Do you know that most of the statement obtained from the witness are during the emergency period? The authenticity is questioned even by Cho at that time and he didn't published any of this in Thuklug during that period by saying that the enquiry is biased.

Santhose]]]

எனக்கு இது பற்றித் தெரியவில்லை சந்தோஷ். ஆனால் நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற சிறைக் கொடூரங்கள் பற்றிய கட்டுரைகள் துக்ளக்கில் நிறையவே வந்துள்ளன..!

விஜய்கோபால்சாமி said...

///ச்சும்மா கிடந்த பைப்புகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு, புதிய பைப்புகளை வாங்கியதாகக் கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டினார் என்பதுதானே..? டீடெயில்டு என்கிட்ட இல்லீங்கண்ணா..! இதுகூட அப்போதைய காலக்கட்டத்தில் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுத்தான்..!///

அட நான் அதைச் சொல்லலைண்ணே. வேற வேற இடங்களில் இருந்து அநியாய செலவு பண்ணி தண்ணீர் கொண்டு வந்துட்டு இது தான் வீராணம் தண்ணின்னு சொன்னாங்களே. அந்த செய்திகள் குறித்த தொகுப்பைப் பத்தி கேட்டேன். எனக்கும் முழுசா தெரியாது. உங்கள மாதிரி மீடியாவுல இருக்கவுங்களக் கேட்டுத் தெரிஞ்சுப்போமேன்னு ஒரு அரிப்பு அவ்வளவு தான். என்னைப் போயி அண்ணான்னுகிட்டு... பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க...

Ponchandar said...

என் தந்தை எமர்ஜென்சி நடக்கும் தமிழக அரசு அலுவராக பணியாற்றியவர்.... இப்போதும் எமர்ஜின்சியை புகழ்ந்துதான் சொல்வார்.. எமர்ஜென்சி ஜனநாயகத்திற்கு எதிராக இருந்திருக்கலாம் ஆனால் மக்களுக்கு நல்லதுதான் நடந்திருக்க வேண்டும்

உண்மைத்தமிழன் said...

[[[விஜய்கோபால்சாமி said...

///ச்சும்மா கிடந்த பைப்புகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு, புதிய பைப்புகளை வாங்கியதாகக் கணக்குக் காட்டி பணத்தைச் சுருட்டினார் என்பதுதானே..? டீடெயில்டு என்கிட்ட இல்லீங்கண்ணா..! இதுகூட அப்போதைய காலக்கட்டத்தில் சட்டமன்றத்தில் பேசிய பேச்சுத்தான்..!///

அட நான் அதைச் சொல்லலைண்ணே. வேற வேற இடங்களில் இருந்து அநியாய செலவு பண்ணி தண்ணீர் கொண்டு வந்துட்டு இது தான் வீராணம் தண்ணின்னு சொன்னாங்களே. அந்த செய்திகள் குறித்த தொகுப்பைப் பத்தி கேட்டேன். எனக்கும் முழுசா தெரியாது. உங்கள மாதிரி மீடியாவுல இருக்கவுங்களக் கேட்டுத் தெரிஞ்சுப்போமேன்னு ஒரு அரிப்பு அவ்வளவு தான். என்னைப் போயி அண்ணான்னுகிட்டு... பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க...]]]

இப்படியொண்ணு நடந்ததா? எனக்குத் தெரியாதே தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...
என் தந்தை எமர்ஜென்சி நடக்கும் தமிழக அரசு அலுவராக பணியாற்றியவர். இப்போதும் எமர்ஜின்சியை புகழ்ந்துதான் சொல்வார். எமர்ஜென்சி ஜனநாயகத்திற்கு எதிராக இருந்திருக்கலாம். ஆனால் மக்களுக்கு நல்லதுதான் நடந்திருக்க வேண்டும்.]]]

அரசு ஊழியர்கள் பயந்து போயிருந்தார்கள்.. அதனால் ரயில்கள்கூட மிகச் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தன. அலுவலக வேலைகள் மிக நேர்மையாக நடந்து முடிந்தன. இதை வைத்து உங்களது தந்தை சொல்லியிருப்பார்..!

ஆனால் இன்னொரு பக்கம் நாடு முழுவதும் பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும், எழுத்துச் சுதந்திரமும், சிறைகளில் அத்துமீறல் சித்திரவதைகளும் தொடர்ந்தனவே.. அதற்கென்ன சொல்கிறீர்கள்..?

ராஜ நடராஜன் said...

இவ்வளவு நேரம் ட்ரெய்லர் காண்பிச்சு இப்பத்தான் படத்தோட டைட்டில் போடுறீங்க:)

படிச்சிட்டு சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

//கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 1972 அக்டோபர் 10-ம் நாள் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.//

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் குற்றமா?
கணக்கு கேட்டதுனால நீக்கப்பட்டாரா?

விளக்கமாச் சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

//எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தமிழ்நாட்டில் வீராணம் ஊழல்தான் அதிகமாக பேசப்பட்டு வந்தது..!//

வீராணம் ஊழலெல்லாம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது.ஆனால் வீராணம் திட்டத்துக்கு சாட்சியா பாலச்சந்தர் கறுப்பு வெள்ளை படத்துல ஏதோ ஒரு பாடல் காட்சிக்கு இதுதான் வீராணம் குழாய்கள்ன்னு வீராணம் திட்டத்துக்கு சாட்சியா வச்சுட்டார்.

ராஜ நடராஜன் said...

//மேலும், “சத்தியநாராயணா பிரதர்ஸ் நிறுவனம் அது நிறுவ இருக்கும் தொழிற்சாலைக்காக 75 சதவிகிதத் தொகையை வட்டியில்லாத முன் பணமாக வழங்க வேண்டும் என்று கேட்பது முறையற்ற செயல். ஆகவே அனைத்து நிறுவனங்களோடும், பேச்சுவார்த்தை நடத்தலாம்..” என்று எழுதியிருக்கிறார் நிதித் துறைச் செயலாளர்.//

நிதித் துறை செயலாளர் எழுதியது சரியெ.ஒரு பெரும் புராஜக்டில் டெண்டர் முறையில் கலந்து கொள்ள வேண்டுமானால் விண்ணப்பத்தோடு டெண்டரில் கலந்து கொள்வதற்கான முன்பணமாக வங்கியிருப்பு இன்சூரன்ஸ் செய்து கொள்வதே எங்குமுள்ள நடைமுறை.

உதாரணமாக 300 கோடிக்கு ஒரு திட்டம் இருந்தால் அதே அளவுக்கான பணத்தை வங்கி உத்தரவாதம் தரவேண்டும்.டெண்டரில் தோல்வியுற்றவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வென்றவர் 300 கோடிக்கான திட்டம் முடியும் வரை உத்தரவாதப் பணத்தை உபயோகிக்க இயலாது என்பதும் திட்டம் குறிப்பிட்ட நேர காலத்தில் முடிப்பதற்கும்,இடையில் வேலை முடங்கிப் போகாமல் இருப்பதற்கான உத்தரவாதம்.

இது என்ன புதுசா இருக்குது,வட்டி இல்லா காசும் கொடுத்தும்,பேக்டரி கட்டவும் அனுமதிக்க வேண்டுமென்று?

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

இவ்வளவு நேரம் ட்ரெய்லர் காண்பிச்சு இப்பத்தான் படத்தோட டைட்டில் போடுறீங்க:) படிச்சிட்டு சொல்றேன்.]]]

இது குமுதம் ரிப்போர்ட்டர் செய்தது. நானில்லை..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு 1972 அக்டோபர் 10-ம் நாள் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.//

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் குற்றமா? கணக்கு கேட்டதுனால நீக்கப்பட்டாரா? விளக்கமாச் சொல்லுங்க.]]]

கணக்குக் கேட்டதே கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று அவர்கள் நினைத்ததால் வெளில துரத்திட்டாங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

//எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே தமிழ்நாட்டில் வீராணம் ஊழல்தான் அதிகமாக பேசப்பட்டு வந்தது..!//

வீராணம் ஊழலெல்லாம் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஆனால் வீராணம் திட்டத்துக்கு சாட்சியா பாலச்சந்தர் கறுப்பு வெள்ளை படத்துல ஏதோ ஒரு பாடல் காட்சிக்கு இதுதான் வீராணம் குழாய்கள்ன்னு வீராணம் திட்டத்துக்கு சாட்சியா வச்சுட்டார்.]]]

அப்படியா? எந்தப் படம்னு தெரியலையே..? தேடிர்றேன்.. நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ நடராஜன் said...

நிதித் துறை செயலாளர் எழுதியது சரியெ. ஒரு பெரும் புராஜக்டில் டெண்டர் முறையில் கலந்து கொள்ள வேண்டுமானால் விண்ணப்பத்தோடு டெண்டரில் கலந்து கொள்வதற்கான முன் பணமாக வங்கியிருப்பு இன்சூரன்ஸ் செய்து கொள்வதே எங்குமுள்ள நடைமுறை.

உதாரணமாக 300 கோடிக்கு ஒரு திட்டம் இருந்தால் அதே அளவுக்கான பணத்தை வங்கி உத்தரவாதம் தர வேண்டும். டெண்டரில் தோல்வியுற்றவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளவும். வென்றவர் 300 கோடிக்கான திட்டம் முடியும்வரை உத்தரவாதப் பணத்தை உபயோகிக்க இயலாது என்பதும் திட்டம் குறிப்பிட்ட நேர காலத்தில் முடிப்பதற்கும், இடையில் வேலை முடங்கிப் போகாமல் இருப்பதற்கான உத்தரவாதம்.

இது என்ன புதுசா இருக்குது, வட்டி இல்லா காசும் கொடுத்தும், பேக்டரி கட்டவும் அனுமதிக்க வேண்டுமென்று?]]]

அண்ணே.. சுருட்டுறதுக்காகவே ஒரு திட்டத்தை உருவாக்கினவங்க இதையெல்லாமா செய்வாங்க.. அப்புறம் எப்படி அவங்க கொள்ளையடிக்கிறது..?