மொரீசியஸ்... சிசிலி... 'கரன்சி' தீவுகள்...!!!

12-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் ஊழலின் தொடர்ச்சியாக சென்ற வார ஜூனியர் விகடனில் வெளி வந்திருக்கும் செய்தி இது :

'சும்மா கண்துடைப்பு நாடகம்தான் ஆ.ராசாவின் கைது’ என்று சொல்லி  வந்தவர்களே இன்று பச்சை மிளகாயை கடித்ததைப் போல அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்கள். அந்தளவுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தற்போது பூதாகாரமாக மாறிக் கொண்டிருக்கிறது.

நித்தமும் இதை மையப்படுத்தி டெல்லியில் இருந்து கிளம்பும் செய்திகளைப் பார்த்​தால், 'அவ்வளவு சீக்கிரமாக இந்த விவகாரம் அமுங்கவும் செய்யாது, யாரா​லும் அமுக்கவும் முடியாது’ என்றே தெரிகிறது.

மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த, தமிழ்நாட்டு பிரமுகர் ஒருவர் திகார் சிறையில் இருப்பது முன்னு​தாரணம் இல்லாதது. இது ராசாவோடு நின்றுவிடாமல், இந்தியாவின் மிகப்​ பெரிய பிசினஸ் ஹவுஸ் என்று சொல்லப்படும் டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களையும் சேர்த்து அம்பலப்படுத்தி... அவமானப்படுத்தி உள்ளது. இந்த ஊழல் விவகாரங்களில் சிக்கியவர்கள், நாள்தோறும் ஒவ்வொ​ருவராக சி.பி.ஐ. அலுவலகம் நோக்கி வந்து போகிறார்கள்.

63 பேர்களை இதுவரை விசாரித்துள்ள​தாக சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளது. இதில் ஆ.ராசா, டிபி​ரியாலிட்டி (ஸ்வான் டெலிகாம்) நிறுவ​னத்தை சேர்ந்த ஷாகித் பால்வா மற்றும் இரண்டு அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

இது​வரை இந்த வழக்கில் என்னென்ன விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை சி.பி.ஐ-யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கடந்த 1-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்தார்.  அதில், ஆ.ராசா மட்டுமின்றி மற்ற நிறுவனங்களும், எந்தெந்த வகைகளில் இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டு உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆ.ராசாவை மையாகக்கொண்டுதான் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் நகர்கிறது என்றாலும், சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் என்னென்ன ஆதாயங்கள் பெற்றன? அதற்கு என்ன பரிசுகளை பதிலுக்குக் கொடுத்தன என்கிற 'ரகசியம்’தான் இதில் முக்கியம். இதை சி.பி.ஐ. ஆதார​பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கவேண்டும். இதற்கான ஆதாரங்களை சி.பி.ஐ. படிப்படியாகத் திரட்டிவருகிறது. இதில் சி.பி.ஐ-க்கு உச்ச நீதிமன்றம் கெடுவும் வைத்துள்ளது. வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யச் சொல்லி இருக்கிறது. அதனால், சி.பி.ஐ. இப்போது சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் அதைக் காட்டி ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதற்குப் பின்னர்தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். உச்ச நீதிமன்றமே இந்த விஷயத்தில் தீவிரமாக இருப்பதால், ஆ.ராசாவிடம் 'எப்படியாவது’ உண்மைகளைக் கறந்தாக வேண்டிய கலக்கத்தில் சி.பி.ஐ. உள்ளது.

இது குறித்து, சி.பி.ஐ. வட்டாரத்தில் இரண்டு விதமான தகவல்கள் வெளியாகிறது. ஒன்று கடந்த டிசம்பர் மாதம் ஆ.ராசாவின் வீடுகளில் ரெய்டுகள் நடந்தபோது கிடைத்த ஆவணங்களின் மூலமாக வெளிநாட்டு முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன என்பது. இந்த ஆவணங்களைப் பற்றி விசாரித்தபோது, கைதான நான்கு பேரும் பல பயனுள்ள தகவல்களைக் கொட்டி இருக்கிறார்களாம். 

ஆ.ராசாவின் டெல்லி வீட்டில்  தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கிடைத்துள்ளன.  அவருக்குத் தனிச் செயலாளராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவின் பாஸ்போர்ட் மூலம், பல வெளிநாட்டுத் தொடர்புகள் தெரிய வந்துள்ளனவாம். கூடவே ஆ.ராசாவின் மனைவி சம்பந்தப்பட்ட ஆவணங்களும் இருக்கின்றதாம்.

கோவை, திருச்சி, ராமநாதபுரம் போன்ற ஏரியாக்களில் செயல்படும் கட்டுமான நிறுவனங்கள், ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரிக்கு எழுதிய கடிதங்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரின் பாஸ்போர்ட்கள், பிரதமர் சம்பந்தப்பட்ட கடிதங்கள், 2ஜி விசாரணையில் சி.பி.ஐ-யும் சி.வி.சி-யும் பகிர்ந்து கொண்ட விவரங்கள் எல்லாம் ஆ.ராசாவின் படுக்கை அறையில் இருந்து சி.பி.ஐ. எடுத்துள்ளது.

இத்தோடு சுவீஸ், பிரான்ஸ், மாலத்தீவு, மலேசியா நாடுகளின் கரன்சிகளும் ராசாவின் வீட்டில் இருந்து கிடைத்ததாகத் தெரிகிறது. ஆனால் இவை, மிகப் பெரிய தொகை இல்லை. ஆனால் சில வெளிநாட்டு முதலீடு தொடர்பான ஆவணங்கள் முக்கியமானவை.  இதே மாதிரி ராசாவின் பெரம்பலூர் வீட்டிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் பல முதலீடுகள் பற்றித் தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் பல, வெளிநாட்டு முதலீடு சம்பந்தப்பட்ட தகவல்கள்.

இந்த விவகாரத்தில், ஆ.ராசா மட்டும் சுமார் 3 ஆயிரம்  கோடியைப் பெற்று இருக்கலாம் என்று கசிகிறது ஒரு தகவல். இந்த பணத்தை, ஆ.ராசா வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் பத்திரிகைகளில் ஒரு மாதத்துக்கு முன்பே வெளியானது என்றாலும் ஆ.ராசாவோ அவரது குடும்பத்தினரோ இதுவரை மறுக்க​வில்லை.

'ஸ்பெக்ட்ரம் உரிமங்களை முதலில் வருவோருக்கு முன்னுரிமை திட்டத்தின்படி, முறைகேடாக டெலிகாம் நிறுவனங்களுக்கு கொடுத்ததற்கு பரிசாக, டெலிகாம் அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு இந்த டெலிகாம் நிறுவனங்கள் கையூட்டாக கொடுத்துள்ள தொகை இது’ என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

இந்த கறுப்புப் பணத்தை, டெலிகாம் நிறுவனங்கள் வெளிநாடுகளில்தான் கொடுத்திருக்க வேண்டும், அவை எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்து வருகிறது.

தங்களுக்குக் கிடைத்த தகவல்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் வழியாக சட்டரீதியான முறையில் சி.பி.ஐ. தகவல் கேட்டுள்ளது. சுமார் பத்து நாடுகளில் இந்த முதலீடுகள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தில், இந்நாடுகளுக்கு அமலாக்கப் பிரிவு கடிதம் அனுப்பி இருக்கிறது.

தற்போது, இரண்டு நாடுகளில் உள்ள முதலீடுகள் குறித்து அமலாக்கப் பிரிவு மூலமாக சி.பி.ஐ-க்கு தகவல் வந்துள்ளது. இதில் ஒன்று  மொரீசியஸ் நாட்டில் போடப்பட்டுள்ள முதலீடுகள். அடுத்தது சிசிலி தீவு! இந்த இரு நாடுகளுக்கும் சர்வதேச ஹவாலாக்கள் மூலமாக பணம் போயுள்ளது.

மொரீசியஸ் நாடும், சிசிலியும் இந்து மகா சமுத்திரத்தின் நடுவில் உள்ள தீவு நாடுகள். இதில் சிசிலி, மிகவும் குட்டி நாடு. சோமாலியாவுக்கு அருகே நடுக்கடலில் இருக்கும் ஒரு கிறிஸ்துவ நாடு. இந்த நாடுகளில் ஸ்பெக்ட்ரம் ஆதாயம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கிடைத்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. நினைக்கிறது. குறிப்பாக, ஒரு பெண்ணின் பெயரில் இந்த நாடுகளில் உள்ள ரகசிய கணக்குகளில்  3 ஆயிரம்  கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாக  தகவல்கள் கூறுகின்றன.

அதாவது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் என்ன மாதிரியான விதிமுறைகள் மீறப்பட்டன, அதை எப்படி நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள், இதைச் செய்தது யார், எந்த நிறுவனங்கள் லாபம் அடைந்தன? அடைந்த லாபங்களுக்கு அவர்கள் என்ன கைம்மாறு செய்தார்கள்? கைம்மாறு பணமாகவா அல்லது இடங்களாக வழங்கப்பட்டனவா? பணம் மற்றும் கிடைத்த சொத்துகள்  யாருடைய பெயரில் இருக்​கின்றன?  அந்நிய நாடுகளில் வாங்கிப் போடப்பட்ட சொத்துகளின் மதிப்பு என்ன? என்பது போன்ற முக்கியமான கேள்விகள் முழுமைக்கும் அசைக்க முடியாத ஆதாரங்களை தனது குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. சொல்லியாக வேண்டும். அப்போதுதான் அந்தக் குற்றப்பத்திரிகையை உச்ச நீதிமன்றம் ஏற்கும். அப்படிப்பட்ட அறிக்கைதான் மார்ச் 31-ம் தேதி சி.பி.ஐ-யால் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இதுவரை ஸ்பெக்ட்ரம் குறித்து பரவிய அனைத்தும், அரசல் புரசலான செய்திகள் மட்டுமே. பத்திரிகைகள் மோப்பம் பிடித்து எழுதியவை மட்டுமே. ஆனால் மார்ச் 31 அன்று வெளியே வரப் போகும் ஆதாரம் அசைக்க முடியாததாக இருக்கும்.

'ஸ்பெக்ட்ரம் பூதத்தை மறைக்க நினைக்கும் மனிதர்​களுக்கு, மரணக் கிணறாக மார்ச் 31 மாறப் போகிறது’ என்று டெல்லி அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அதற்கு சரியாக 13 நாட்கள் கழித்து சட்டசபைத் தேர்தல் நடக்கப் போகிறது. எனவே இந்தத் தேர்தலைத் தீர்மானிக்கும் விஷயமாகவும் கிளம்பப் போகிறது ஸ்பெக்ட்ரம்!

தாவிய சிங்!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை விசாரித்துவந்த சி.பி.ஐ. இணை இயக்குநர் ஒய்.பி.சிங் கூடுவிட்டு கூடு தாண்டிய விவகாரம் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. 

உ.பி. மாநில கேடர் அதிகாரியான சிங், கடந்த வாரம் கட்டாய ஓய்வில் செல்ல மத்திய அரசுக்கு விண்ணப்பித்து இருந்தார். இவரது கோரிக்கையை மத்திய அரசும் சி.பி.ஐ-யும் ஏற்றுக் கொண்டது.  இதில் சிக்கல் என்ன என்றால், கட்டாய ஓய்வில் சென்ற அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு கவுன்சிலில்(ஐ.சி.சி.) பணியாற்றப் போகிறார் என்பதுதான்.

ஐ.சி.சி-யின் பாதுகாப்புப் பணிகள் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவில் சேர்ந்து துபாய் அலுவலகத்தில் பணியாற்ற இருக்கிறார். இந்த கவுன்சிலின் தலைவராக இருப்பவர் தேசியவாதக் கட்சியின் தலைவர் சரத்பவார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனங்களுக்கும் சரத் பவாருக்கும் உள்ள தொடர்பு குறித்து சந்தேகங்கள் இருக்கிறது என்றும், இந்த நிலையில் புதிய பொறுப்பை சிங் பெற்றிருப்பது குறித்தும் சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார் பிரசாந்த் பூஷண்.
 
ஒய்.பி.சிங்குக்கு கீழே மூன்று அதிகாரிகள் இந்த வழக்குகளை விசாரிக்கிறார்கள் என்றாலும், பல ரகசியங்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கின் விசாரணை அதிகாரி இப்படி திடீரெனத் தாவுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி : ஜூனியர் விகடன்

22 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padichittu varen

மரா said...

ungalukku auto confirm *:-)*

♔ம.தி.சுதா♔ said...

இப்படியெல்லாம் நடக்குதோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், மக்களை ஏமாற்றி கண்கட்டி வித்தை காட்டி, மக்கள் பணத்தில் குளிர் காய்வோர் பற்றிய பதிவு படித்தேன். ஆனாலும் எவ்வளவு அருமையாக பிளான் பண்ணி, ஆழ்ந்து சிந்தித்து பணத்தினை வெளிநாடுகளில் பதுக்கியிருக்கிறார்கள் பாருங்கள். இதில் நான் அவர்களின் இந்த திறமையை பாராட்டுகிறேன். உள்ளூரிலை முதலிட்டால் எல்லாத்தையும் உல்டா பண்ணிடுவாங்கள் எனும் எண்ணமோ!

தமிழ்வாசி - Prakash said...

என்ன செய்றது? எல்லாம் தலைவிதி...

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

padichittu varen]]]

எங்க..? ஓட்டுப் போடப் போறியா தம்பீ..?

உண்மைத்தமிழன் said...

[[[மரா said...

ungalukku auto confirm *:-)*]]]

ஆட்டோ வரும்போது உன் வீட்டுக்கு வந்தர்றேன்..! துணைக்கு வந்திரு..!

உண்மைத்தமிழன் said...

[[[♔ம.தி.சுதா♔ said...

இப்படியெல்லாம் நடக்குதோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..]]]

என்னென்னமோ நடக்குது சுதா..!

உண்மைத்தமிழன் said...

[[[நிரூபன் said...

வணக்கம் சகோதரம், மக்களை ஏமாற்றி கண் கட்டி வித்தை காட்டி, மக்கள் பணத்தில் குளிர் காய்வோர் பற்றிய பதிவு படித்தேன். ஆனாலும் எவ்வளவு அருமையாக பிளான் பண்ணி, ஆழ்ந்து சிந்தித்து பணத்தினை வெளிநாடுகளில் பதுக்கியிருக்கிறார்கள் பாருங்கள். இதில் நான் அவர்களின் இந்த திறமையை பாராட்டுகிறேன். உள்ளூரிலை முதலிட்டால் எல்லாத்தையும் உல்டா பண்ணிடுவாங்கள் எனும் எண்ணமோ!]]]

உள்ளூரில் கணக்குக் காட்டணுமே..? அதுனாலதான் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். தேவைப்படும்போது நாட்டுக்குள் நல்ல பணமாக இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழ்வாசி - Prakash said...

என்ன செய்றது? எல்லாம் தலைவிதி.

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!]]]

அந்தத் தலைவிதியை வரும் தேர்தலில் மாற்ற முடியும்.. மக்கள்தான் செய்ய வேண்டும்..!

Namy said...

In india even not a single example for conviction of corruption. What happened Lalu's fodder scam, Sukram's telecom scam, Rajiv Forbes scam andMayavathi's Thaj corridor scam, etc... Then why in our contry affected with Naxal problem.?

உண்மைத்தமிழன் said...

[[[Namy said...
In india even not a single example for conviction of corruption. What happened Lalu's fodder scam, Sukram's telecom scam, Rajiv Forbes scam andMayavathi's Thaj corridor scam, etc... Then why in our contry affected with Naxal problem.?]]]

நியாயமான கேள்விகள்தான்..! அரசியல் தலைவர்கள் நேர்மையாக இருந்திருந்தால் நக்சல் தலைவர்கள் ஏன் உருவாகியிருக்கப் போகிறார்கள்..?

ttpian said...

தகிடுதத்தம் திறந்தவெளி பல்கலைக் கழகம்!
டிப்ளமோ இன் நாமம் போடுதல்:சர்டிபிகேட் இன் பட்டைநாமம்
:ஒரு வருட கிடா வெட்டுதல் :டாக்டரேட் இன் ஜெபமாலை
: ஒரு வார பாத்தியா ஓதுதல்- அனைத்தும் இலவசக் கல்வி!
சத்துணவு: குச்சி மிட்டாய்: குருவி ரொட்டி:

உண்மைத்தமிழன் said...

[[[ttpian said...

தகிடுதத்தம் திறந்தவெளி பல்கலைக் கழகம்!
டிப்ளமோ இன் நாமம் போடுதல் : சர்டிபிகேட் இன் பட்டைநாமம்
: ஒரு வருட கிடா வெட்டுதல் : டாக்டரேட் இன் ஜெபமாலை
: ஒரு வார பாத்தியா ஓதுதல் - அனைத்தும் இலவசக் கல்வி!
சத்துணவு : குச்சி மிட்டாய்: குருவி ரொட்டி:]]]

கடைசியாகச் சொல்லியிருப்பது வெகுவிரைவில் நடந்தாலும் நடக்கலாம்..!

vanathy said...

அண்ணா
ஒரு சின்ன திருத்தம்.
சிசிலி தீவு இருப்பது இத்தாலிக்கு பக்கத்தில் , .இந்து சமுத்திரத்தில் அல்ல.
நீங்கள் ஒருவேளை Seychelles நாட்டை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

வானதி

பார்வையாளன் said...

இந்த சோகங்களை மறக்க வைக்க அடுத்த வாரம் வெளியாக இருக்கும் , துரோக காதல் என்ற உலக திரைப்படம் குறித்து எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[vanathy said...

அண்ணா ஒரு சின்ன திருத்தம். சிசிலி தீவு இருப்பது இத்தாலிக்கு பக்கத்தில். இந்து சமுத்திரத்தில் அல்ல.

நீங்கள் ஒருவேளை Seychelles நாட்டை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.]]]

நன்றி வானதி..

நானும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே பெனாத்தல் சுரேஷும் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளார்..!

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

இந்த சோகங்களை மறக்க வைக்க அடுத்த வாரம் வெளியாக இருக்கும், துரோக காதல் என்ற உலக திரைப்படம் குறித்து எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.]]]

பார்வை.. நீங்கள் நல்லவரா..? கெட்டவரா..? அல்லது எனக்கு நண்பரா..? அல்லது நண்பன் மாதிரி இருப்பவரா..? புரியலை..!

Arun Ambie said...

ஏன் ஜூவியை நகலெடுத்துப் போடுகிறீர்கள் சில நாட்களாக? வேலை அதிகமோ? உட்கார்ந்து யோசித்து எழுத நேரமில்லையா?

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...
ஏன் ஜூவியை நகலெடுத்துப் போடுகிறீர்கள் சில நாட்களாக? வேலை அதிகமோ? உட்கார்ந்து யோசித்து எழுத நேரமில்லையா?]]]

இந்த மாதிரி விஷயங்களெல்லாம் சீனியர் பத்திரிகையாளர்களுக்குத் தெரியும். எனக்கெப்படி தெரியும்..? நான் படித்ததை இன்னொரு 300 பேர் படிக்கக் காட்டுகிறேன். அவ்வளவுதான்..!

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி

உண்மைத்தமிழன் said...

[[[நிலவு said...
http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_14.html நடிகர்கள் - சாதி சங்கங்கள் வழியாக சட்டமன்ற புரட்சி]]]

வருகைக்கும், தகவலுக்கும் நன்றி..!