புத்தகக் கண்காட்சி-1

11-01-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று இரண்டாவது முறையாக புத்தகக் கண்காட்சியில் சில மணி நேரங்கள் வாசம். அங்கே செல்வது நேற்றைய நோக்கமல்ல.. குறும்புக் கவிஞர், டாஸ்மாக் சித்தர், தண்டோரா மணிஜியின் குடிசையில் ஓரிரு மணி நேரங்கள் வாசம்.. மனிதர் நாஞ்சில் நாடனின் கான்சாகிப்புடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். படிக்கத் தோதாகத்தான் இருக்கிறது என்றார். அருகில் ஒரு ஒல்லிப்பிச்சான் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற கதையாக கணிணியை நோண்டிக் கொண்டிருந்தது. நான்தான் நல்ல பையன் ரமேஷ் வைத்யா என்றது ஒல்லி. திருந்திவிட்டாராம். இனிமேல் குடி கிடையாது என்று என் தலையில் கை வைக்காமல் சத்தியம் செய்து சொன்னார் தோழர்.. நம்புகிறேன் என்றேன். முருகன் அருளால் இனியாவது பாட்டிலைத் தொடாமல் பாட்டை மட்டும் தொடு என்றேன்..

தமிழ் எழுத்துலகில் பிரம்மராஜனின் வாரிசாக தன்னை அறிவிக்காமல் அறிவித்தபடி உள்நுழைந்திருக்கும் தம்பி நேசமித்ரனின் புத்தக வெளியீடு உயிர்மையில் ஆறு மணிக்கு நடக்கவிருப்பதாக தண்டோரா சொன்னார். அந்த புகழ் பெற்ற நிகழ்ச்சில் கலந்து கொள்ள வேண்டி ரமேஷ்வைத்யா புத்தகக் கண்காட்சிக்கு போக வேண்டுமென்றால் ஒற்றை ஆளை தனியே அனுப்ப எனக்கும் மனமில்லாததால் உடன் பயணம்.

இரண்டு பக்கமும் தட்டிகளில் அனைத்து வகை எழுத்தாளர்களும் நம்மை வரவேற்கிறார்கள். தலைவர் சுஜாதா அசத்தலாக இருக்கிறார். அவருக்கு இரண்டு சீட்டு தள்ளி நவயுக நாயகன் சுந்தரராமசாமி வீற்றிருந்தார். ஆனால் யாரோ செய்த சதி மரத்தின் செடி,கொடிகள் அவரைச் சுத்தமாக மறைத்துவிட்டன. காலச்சுவடுக்காரர்கள் கேஸ் போடலாம்.. அல்லது மரத்தை வெட்டி புண்ணிய புருஷனை வெளிக்காட்டியிருக்கலாம். விட்டுவிட்டார்கள்.

உயிர்மையில் மாபெரும் எழுத்தாளர் சாரு இருந்தார். யாராக இருந்தாலும் எழுந்து நின்று கை குலக்கி வரவேற்றும் இந்தப் பாங்கு எஸ்தோனியா நாட்டு எழுத்தாளரிடம்கூட இல்லாதது.. நீண்ட வருடங்கள் கழித்துதான் ஹமீதுக்கும், செல்விக்கும் என்னை அடையாளம் தெரிந்தது போலும்.  “ஹலோ..” என்றார்கள்.. அடுத்த முறை டை அடிக்காமல் போகவேண்டும்.

வயிற்றுத் தொந்தியைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்த சிற்றிலக்கியவாதி கே.ஆர்.பி.செந்தில் ஆழியில் அஜயன் பாலாவின் அல்ஜீயர்ஸ் புத்தக வெளியீடு இருப்பதாகச் சொன்னார். கிளம்பும்போது பேஸ்புக் தோழர்கள் கயல்விழி, அண்ணன் செல்வகுமார், தம்பி அன்பு என்று இணை பிரியாத டீமை சந்தித்து அவர்களையும் இழுத்துக் கொண்டே போனோம்.

தெருவில் பாதியை அடைத்துக் கொண்டு ஆழியில் மீட்டிங். எஸ்.ரா. வெளியிட மீனா கந்தசாமி பெற்றுக் கொண்டார். ஆழி ஓனரும், எஸ்.ரா.வும், மீனாவும், அஜயனும் ஏதோ பேசினார்கள். மைக் இருந்தாலே என் காதுக்குக் கேக்காது. இப்போ ச்சுத்தம்.. அங்கே அவர்கள் பேசும் இங்கே பேஸ்புக் நண்பர்களுடன் கச்சேரியும் நடந்தது.

மீண்டும் நேசமித்ரனைத் தேடிப் போனபோது அவரே அடையாளம் கண்டு கொண்டு ஓடோடி வந்தார். கெட்டப்பை மாத்த வேண்டியதுதான். கவிஞனுக்கே உரித்தான மிடுக்கு இல்லை.. தோழனுக்குரிய பண்புதான் இருந்தது. இது தேறாது என்றுதான் எனக்குப் படுகிறது. உயிர்மைக்கு நேரெதிராக இருந்த கடையின் கீழே ஒரு போஸ்டர்.. “தமிழின் நம்பர் 1 எழுத்தாளர் ம.வே.சிவக்குமாரின் நாவல்கள் இங்கே கிடைக்கும்” என்று போட்டிருந்தது. இதனை உத்தமத் தமிழ் எழுத்தாளரும், தேகம் எழுத்தாளரும் பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஆனாலும் ம.வே.சிவக்குமாரின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன். இவரைப் பற்றித் தனியே கட்டுரை எழுத வேண்டும். அத்தனை விஷயங்கள் அடியேனிடம் இருக்கிறது..

உயிர்மையில் புத்தக வெளியீட்டுக்கு முன்பாகவே ஹமீது கவிதை பற்றிச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். உடனேயே டீ குடித்துத்தான் இதனை ஆற்ற வேண்டும் போலிருந்ததால் ஷோபா சக்தி, சாரு, செந்திலுடன் பின்வாசல் வழியாக கேண்டீனுக்கு விஜயம்.. வெறும் காபியுடன் ச்சின்னதாக ஒரு லெக்சர்.. பி.வி.ஆரில் சினிமா பார்க்கப் போய் நொந்து போன கதையை ஷோபா சொன்னார்.. இதுக்கு சிங்களவனே பரவாயில்லை போலிருக்கிறது என்று நினைத்திருக்கிறார். நிறவெறி, இனவெறியெல்லாம் இப்போது தகுதி வெறியால் அடையாளப்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்திருப்பார்.

திரும்பி வரும்போது முத்தக் கவிஞர் செல்வகுமார் அண்ணாச்சியுடன் சிறிது அங்கலாய்ப்பு. எப்படி முத்தம் கொடுப்பதற்கான சிச்சுவேஷன் மட்டும் உங்களுக்கு விதம்விதமா சிக்குது என்றேன்.. அருகில் இருந்த நமது வலையுலக பிரபல பதிவர் கேபிளார், “அதுக்கெல்லாம் ரொமான்ஸான மூளை இருக்கணும்ன்னே..” என்று குத்திக் காட்டினார். எனக்குப் புரிந்ததுபோல் இருந்தது..

பிரபல பதிவர் கேபிள் தினம் தவறாமல் கண்காட்சிக்கு வந்து இரண்டு புத்தகங்களை வாங்கிச் செல்வதாக பரமார்த்த குரு பா.ரா. புகார் சொன்னார்.. மொத்தமாக வாங்கிச் சென்றால் வீட்டுக்காரம்மாவிடம் மொத்தமாக வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும் என்பது பிரபல பதிவரின் வாதம். ரொம்ப நாளா வாங்கத் துடித்த நிலமெல்லாம் ரத்தம் வாங்கினேன். புத்தக ஆசிரியரான குருஜி, “அப்பன் முருகன் எப்போதும் துணையிருப்பான்..” என்று சொல்லி கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

பார்ப்பவர்களிடத்திலெல்லாம் பேயோனின் திசை காட்டிப் பறவையை வாங்கச் சொன்னார் பா.ரா. “அது நீங்கள்தானே..” என்றேன். “அப்படியே சொல்லிக்குங்க..” என்றார். “பேயோன் என்றால் பேயாழ்வார். நீங்களோ தீவிரமான வைணவர். வேறு யாருக்கு இப்படி மண்டையடியான பேர் வைக்குற திறமையிருக்கு..?” என்றேன். "நா கமெண்ட்ஸ்..” என்றார் பா.ரா. ஆனால் அவர் வாங்கியிருந்த பேயோன் புத்தகத்தில், பேயோனின் கையெழுத்து இருந்தது. அது அவரில்லை என்று சாதித்தார் பா.ரா. நாமும் நம்புவோமாக. ஆனால் எனது யூகத்தில் ஆள் யாரென்று தெரிகிறது.. வாழ்க பேயோன்.

பா.ரா.வுடன் குரூப் போட்டோ எடுத்தார் கிழக்கின் குண்டப்பா விஸ்வநாதன். “இது இட்லிவடைல வரணும்” என்றேன். கடுப்போடு முறைத்தார். நிறைய பேர் அவர்தான் இட்லிவடை என்று கண்டுபிடித்துவிட்டதில் மனிதருக்கு ரொம்பவே கோபம். இதுக்கெல்லாம் கோபப்பட்டா எப்படிங்கண்ணா..?

உயிர்மையிலும், கிழக்கிலும் அதிகம் அள்ளிக் கொண்டு போகப்பட்டவர் தலைவர் சுஜாதாதான். தலைவன் இருக்கிறான் என்று இவனைத்தான் சொல்ல வேண்டும். இறந்தும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். எத்தனை, எத்தனை புத்தக எழுத்தாளர்கள் தவழ்ந்து வந்தாலும் தலைவரை அடித்துக் கொள்ள முடியாது என்பது உறுதியாகிறது.. இனி அடுத்தத் தலைவர் யார் என்பதற்கு அடித்துக் கொள்ளாமல்  அவரவர் வழியில் போவதே அடித்துக் கொள்ளும் தலைகளுக்கு நல்லது..

ஞாயிற்றுக்கிழமையன்று நிற்க முடியாத அளவுக்குக் கூட்டமாம். நேற்று படுத்துக் கொள்ளும் அளவுக்கு இடமிருந்தது. தூரம் என்பதோடு வெகு சீக்கிரமாக கிளம்ப வேண்டிய கட்டாயமும் இருப்பதால்தான் கூட்டமில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இதற்கு முந்தைய அரையாண்டு விடுமுறையில் அத்தனை பர்ஸுகளம் இளைத்துப் போய்விட்டதால் இங்கே வருவதற்கு தம்படி இல்லை என்றது ஒரு பெரிசு.

எஸ்.ரா. ஆங்கிலப் புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருந்தார். தேடித் தேடியெடுத்த புத்தகங்களை வாங்கிய கையோடு அவரைச் சந்தித்தவர்களிடத்திலும் அந்த பதிப்பகத்தைக் கை காட்டி போகச் சொன்னார். ஓசியில் விளம்பரம். வாழ்க எஸ்.ரா.

புத்தகத்தைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ளச் சொல்லும் பபாப்ஸி, கழிவறை விஷயத்தில் மட்டும் இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்ளச் சொல்கிறது.. பேருக்கு அலுமினிய ஷீட்டை வைத்துக் கட்டியிருந்தாலும் தமிழன் அவனது தனித்துவத்தைக் கைவிட மாட்டானே.. இருட்டில் ஆங்காங்கே நின்று கொண்டும், பாதி அமர்ந்து கொண்டும் தங்களது அவசரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆரூர்தாஸின் கலையுலக அனுபவங்கள் புத்தகத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. நாளை செல்லும்போது மீண்டும் தேட வேண்டும். பப்ளிஷர் யாரென்றே தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.. வாங்க வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன. ஏற்கெனவே வாங்கியவைகளே குவிந்துபோய் பிரிக்கக்கூட இல்லாமல் இருப்பதால் இந்தாண்டு பட்ஜெட் கம்மிதான்.

ச்சும்மா வாங்கி வைப்பது நல்லதா..? அல்லது படிக்க முடிந்த அளவுக்கு மட்டும் வாங்குவது நல்லதா..? அடுத்த முறை செல்லும்போது எழுத்தாளர்கள் யாரேனும் அங்கே சிக்கினால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன்.

39 comments:

Indian Share Market said...

சென்னையில் இருக்கும் நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் தலைவா! புத்தக கண்காட்சியை ரொம்பவே
மிஸ் பண்றேன் ! ஆனால் உங்கள் பதிவை பார்க்கும் போது அந்த குறை நீங்கி விட்டது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ennai koopidave illai?

குசும்பன் said...

//இருட்டில் ஆங்காங்கே நின்று கொண்டும், //

ஓக்கே!

//பாதி அமர்ந்து கொண்டும் தங்களது அவசரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.//

லேடிஸ் டாய்லெட் பக்கம் உங்களுக்கு என்ன வேலை... அடிவாங்காம வந்தீங்களே அதுவரை சந்தோசம்!

dr suneel krishnan said...

நேற்று நான் கூட புத்தக கண்காட்ட்சிக்கு வந்தேன் ..சாரு நரசிம் ,மனுஷ்ய புத்திரன் ,நிஜந்தான் ஆகியவர்களை உயிர்மையின் வாசலில் கண்டு கொண்டேன் ,நீங்கள் அங்கு இருந்தீர்களா? மாலை ஆறு மணி சுமார் இருக்கும் ..தெரியாம போச்சே

ராயன்-Rayan said...

நேற்று அங்கே தானே இருந்தேன்! பார்க்க தவறி விட்டேன் அண்ணே உங்களை...:(

பா.ராஜாராம் said...

superb! :-)

தமிழன்பன் said...

//வயிற்றுத் தொந்தியைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்த சிற்றிலக்கியவாதி கே.ஆர்.பி.செந்தில் ஆழியில் அஜயன் பாலாவின் அல்ஜீயர்ஸ் புத்தக வெளியீடு இருப்பதாகச் சொன்னார்.//

வயிறு வேறு தொந்தி வேறு என்பதைத் தங்கள் மூலம் அறிந்துகொண்டேன். நன்றி!!!!!

பார்வையாளன் said...

என்னை ஏன் அழைக்கவில்லை

அமர பாரதி said...

உண்மைத்த தமிழரே நலமா?

//தமிழன் அவனது தனித்துவத்தைக் கைவிட மாட்டானே// தமிழன் மட்டுமல்ல் உலகில் அனைவரும் ஒதைத்தான் செய்வார்கள். கழிவறை வசதி செய்யாமல் எந்த விஷாவும் நடத்தக் கூடாது என்று சட்டம் போட வேண்டும். தேவையான வசதிகள் செய்து கொடுக்காமல் தமிழனை எள்ளல் செய்வது தவறு. விழாக்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு கடையும் நிறுவனங்களும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கழிப்பறை வசதி சுத்தமானதாக செய்து கொடுக்க வேண்டிய கடமை அதை செய்பவர்களுக்குத்தான் உள்ளது. அதை அடக்க முடியாதா என்று கேட்பது தவறு.

ஜோதிஜி said...

என்ன முருகா ஒரு கழித்தல் கண்க்கு விடாது போலிருக்கே?

உண்மைத்தமிழன் said...

[[[Indian Share Market said...
சென்னையில் இருக்கும் நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் தலைவா! புத்தக கண்காட்சியை ரொம்பவே மிஸ் பண்றேன் ! ஆனால் உங்கள் பதிவை பார்க்கும் போது அந்த குறை நீங்கி விட்டது!]]]

எந்த ஊரில் இருக்கிறீர்கள் தலைவா..? வருகைக்கு நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ennai koopidave illai?]]]

நீதான் டெய்லி அங்க வர்றியே ராசா.. தனியா வேற கூப்பிடணுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[குசும்பன் said...

//இருட்டில் ஆங்காங்கே நின்று கொண்டும்//

ஓக்கே!

//பாதி அமர்ந்து கொண்டும் தங்களது அவசரத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.//

லேடிஸ் டாய்லெட் பக்கம் உங்களுக்கு என்ன வேலை. அடி வாங்காம வந்தீங்களே... அதுவரை சந்தோசம்!]]]

உன்னையெல்லாம் முஸ்லீம் சட்டப்படிதான் தண்டிக்கணும்..!

உண்மைத்தமிழன் said...

[[[dr suneel krishnan said...
நேற்று நான் கூட புத்தக கண்காட்சிக்கு வந்தேன். சாரு நரசிம், மனுஷ்யபுத்திரன், நிஜந்தான் ஆகியவர்களை உயிர்மையின் வாசலில் கண்டு கொண்டேன். நீங்கள் அங்கு இருந்தீர்களா? மாலை ஆறு மணி சுமார் இருக்கும். தெரியாம போச்சே]]]

அவர்களுடன்தான் நின்று கொண்டிருந்தேன். காதில் மிஷின் வைத்திருந்தேன். கவனிக்கவில்லையா நண்பரே..?

உண்மைத்தமிழன் said...

[[[ராயன்-Rayan said...
நேற்று அங்கேதானே இருந்தேன்! பார்க்க தவறி விட்டேன் அண்ணே உங்களை...:(]]]

நாளை வாருங்கள்.. சந்திப்போம் ராயன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பா.ராஜாராம் said...

superb! :-)]]]

அப்பாடா.. கவிஞரிடமிருந்து ஒரு வழியாகப் பாராட்டு கிடைத்துவிட்டது. நன்றி கவிஞரே..!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழன்பன் said...

//வயிற்றுத் தொந்தியைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்த சிற்றிலக்கியவாதி கே.ஆர்.பி.செந்தில் ஆழியில் அஜயன் பாலாவின் அல்ஜீயர்ஸ் புத்தக வெளியீடு இருப்பதாகச் சொன்னார்.//

வயிறு வேறு தொந்தி வேறு என்பதைத் தங்கள் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி!!!!!]]]

பீஸ் எப்போ தருவீங்க..?

K said...

புத்தக சந்தை கவியரங்கத்தில் கவிஞர் வாலியின் சுவையான பேச்சு நான் கேட்டது, நீங்களும் கேட்டு பார்த்து மகிழுங்கள், சக தமிழரே

http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html

உண்மைத்தமிழன் said...

[[[பார்வையாளன் said...

என்னை ஏன் அழைக்கவில்லை.]]]

இதென்னங்கய்யா வம்பா இருக்கு..? நான் என்ன கொடி ஏத்தவா போறேன். மத்தவங்க மாதிரி ச்சும்மா புத்தகம் வாங்கத்தாம்பா போனேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[அமர பாரதி said...

உண்மைத் தமிழரே நலமா?

//தமிழன் அவனது தனித்துவத்தைக் கைவிட மாட்டானே//

தமிழன் மட்டுமல்ல் உலகில் அனைவரும் ஒதைத்தான் செய்வார்கள். கழிவறை வசதி செய்யாமல் எந்த விஷாவும் நடத்தக் கூடாது என்று சட்டம் போட வேண்டும். தேவையான வசதிகள் செய்து கொடுக்காமல் தமிழனை எள்ளல் செய்வது தவறு. விழாக்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு கடையும் நிறுவனங்களும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் கழிப்பறை வசதி சுத்தமானதாக செய்து கொடுக்க வேண்டிய கடமை அதை செய்பவர்களுக்குத்தான் உள்ளது. அதை அடக்க முடியாதா என்று கேட்பது தவறு.]]]

நல்ல யோசனை.. நியாயமான கேள்விகள்தான்.. ஒத்துக் கொள்கிறேன்..!

இந்த விஷயத்தில் மட்டும் தமிழர்கள் அனைவரும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறார்கள்.. என்ன செய்வது இவர்களை..?

உண்மைத்தமிழன் said...

[[[ஜோதிஜி said...
என்ன முருகா ஒரு கழித்தல் கண்க்கு விடாது போலிருக்கே?]]]

அதாண்ணே எந்த தோழருன்னு தெரியலை.. என்ன கோபம்ன்னு தெரியலை.. போட்டுத் தாக்குறாரு..! சரி.. அவர் சந்தோஷத்தை ஏன் கெடுப்பானேன்.. போட்டுட்டுப் போறாரு..!

உண்மைத்தமிழன் said...

[[[K said...
புத்தக சந்தை கவியரங்கத்தில் கவிஞர் வாலியின் சுவையான பேச்சு நான் கேட்டது, நீங்களும் கேட்டு பார்த்து மகிழுங்கள், சக தமிழரே
http://ilakindriorpayanam.blogspot.com/2011/01/exclusive-2011.html]]]

தகவலுக்கு நன்றி நண்பரே..!

Arun Ambie said...

//தமிழன் அவனது தனித்துவத்தைக் கைவிட மாட்டானே//
இது போன்ற அடிப்படை விஷயத்தில் நாம் ஏன் இன்னும் பின்தங்கி இருக்கிறோம்? அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு 1 மாதம் முன்பே மின்னஞ்சல் முதல் பதிவுகள் வரை இது குறித்துப் பேசினால் சரியாகச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

//தூரம் என்பதோடு வெகு சீக்கிரமாக கிளம்ப வேண்டிய கட்டாயமும் இருப்பதால்தான் கூட்டமில்லை என்று நினைக்கிறேன்.//

தூரம் என்பது ஒரு குறைதான். தாம்பரத்தில் இருந்து போய்ச்சேரவே 2 மணி நேரம் ஆகும் போலிருக்கிறது. சீக்கிரம் கிளம்பாமல் என்ன செய்ய? பிழைப்பு இருக்கிறதே!!

//நிறவெறி, இனவெறியெல்லாம் இப்போது தகுதி வெறியால் அடையாளப்படுத்தப்படுகிறது என்பதை உணர்ந்திருப்பார்.//
PVRரிலா? நிஜமாகவா? அடக் கொடுமையே!!

//ஏற்கெனவே வாங்கியவைகளே குவிந்துபோய் பிரிக்கக்கூட இல்லாமல் இருப்பதால் இந்தாண்டு பட்ஜெட் கம்மிதான்.//
அப்பாடா! நம்ம கட்சிக்கு ஒரு ஆள் கிடைத்தார்பா!!!

செங்கோவி said...

//ஏற்கெனவே வாங்கியவைகளே குவிந்துபோய் பிரிக்கக்கூட இல்லாமல் இருப்பதால்...// நீங்களுமா..நல்லது.

ரிஷபன்Meena said...

கழிப்பறை- மிக அவசியமான அடிப்படைத் தேவை. மொத்த இந்தியாவௌமே இதில் மெத்தனமாகவே இருக்கிறது. அதை ஒரு பெரிய விஷயமாகவே நாம் பார்பதில்லை.

ஷாருக்கான் இன்கம்டாக்ஸ் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

admin said...

729 வார்த்தைகள் ;-)

உண்மைத்தமிழன் said...

[[[Arun Ambie said...

இது போன்ற அடிப்படை விஷயத்தில் நாம் ஏன் இன்னும் பின் தங்கி இருக்கிறோம்? அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு 1 மாதம் முன்பே மின்னஞ்சல் முதல் பதிவுகள்வரை இது குறித்துப் பேசினால் சரியாகச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.]]]

இல்லை.. அந்த இடத்தில் தற்காலிகமான கழிவறைகள் அமைக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை. அது ஒரு பள்ளி என்பதால்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

//ஏற்கெனவே வாங்கியவைகளே குவிந்துபோய் பிரிக்கக்கூட இல்லாமல் இருப்பதால்...//

நீங்களுமா. நல்லது.]]]

நீங்களுமா? நல்லது செங்கோவி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷபன்Meena said...

கழிப்பறை- மிக அவசியமான அடிப்படைத் தேவை. மொத்த இந்தியாவௌமே இதில் மெத்தனமாகவே இருக்கிறது. அதை ஒரு பெரிய விஷயமாகவே நாம் பார்பதில்லை.]]]

இதுவொரு தேசிய வியாதி..!

[[[ஷாருக்கான் இன்கம்டாக்ஸ் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.]]]

கண்டிப்பாக படிக்கிறேன் ரிஷபன்..

உண்மைத்தமிழன் said...

[[[admin said...
729 வார்த்தைகள் ;-)]]]

ஐயா யாருன்னு சந்தேகமா இருக்கே..? நாலு பேர் பேசினது அஞ்சாவது உமக்கு எப்படித் தெரிஞ்சது? சம்திங் ராங்..!

எம்.எம்.அப்துல்லா said...

அங்க வெள்ளைச் சட்டைபோட்டுகிட்டு, கண்ணாடியோட ஒருத்தன் இருந்தானே!! நீங்க பார்க்கவேயில்லையா???

உண்மைத்தமிழன் said...

[[[எம்.எம்.அப்துல்லா said...
அங்க வெள்ளைச் சட்டை போட்டுகிட்டு, கண்ணாடியோட ஒருத்தன் இருந்தானே!! நீங்க பார்க்கவேயில்லையா???]]]

பார்த்தேன் தம்பி.. ஆனா அந்தப் பயபுள்ள ஒரு சேட்டையும் அப்போ செய்யலை. அதுனால குறிப்பிடலை. அதே மாதிரி வெள்ளை வெளேர்ன்னு இருந்துக்கிட்டு கருப்புக் கலர் சட்டைப் போட்டு ஷோ காட்டுன ஒரு புள்ளையையும் பார்த்தேன். அதையும் நான் சொல்லலை.. ச்சும்மாதான்..

r.selvakkumar said...

என்னுடைய அலுவலகத்துக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள். பொங்கல் முடியும் முன் மீண்டும் ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன் என்று நினைக்கிறேன்.

r.selvakkumar said...

என்னுடைய அலுவலகத்துக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள். பொங்கல் முடியும் முன் மீண்டும் ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன் என்று நினைக்கிறேன்.

நேசமித்ரன் said...

எதிர்பார்க்காத அன்பும் வாழ்த்தும் உங்க வருகையும் ரொம்ப ரொம்ப நன்றிண்ணே

சந்தோஷமான நிமிஷங்கள் அவை

சிவகுமார் said...

ரஜினியின் பன்ச் தந்திரம், சிம்பு வாழ்க்கை வரலாறு, கலைஞரின் நெஞ்சுக்கு நீதி போன்ற அரிய புத்தகங்களை கண்டேன். அதை தாங்கள் அன்பளிப்பாக வாங்கி தருவதே உயரியதாக இருக்கும் என்பதால் இவ்வார இறுதியில் வந்து பெற்றுக்கொள்கிறேன்....

உண்மைத்தமிழன் said...

[[[r.selvakkumar said...
என்னுடைய அலுவலகத்துக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். மறந்துவிடாதீர்கள். பொங்கல் முடியும் முன் மீண்டும் ஒரு முறை புத்தகக் கண்காட்சிக்கு செல்வேன் என்று நினைக்கிறேன்.]]]

கண்டிப்பாக வருகிறேன் ஸார்.. பொங்கல் முடிந்து சந்திப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[நேசமித்ரன் said...
எதிர்பார்க்காத அன்பும் வாழ்த்தும் உங்க வருகையும் ரொம்ப ரொம்ப நன்றிண்ணே. சந்தோஷமான நிமிஷங்கள் அவை.]]]

எனக்கும் சந்தோஷம்ண்ணே.. ஒரு கவிஞனை சந்தித்த திருப்தி எனக்கு..!

உண்மைத்தமிழன் said...

[[[சிவகுமார் said...
ரஜினியின் பன்ச் தந்திரம், சிம்பு வாழ்க்கை வரலாறு, கலைஞரின் நெஞ்சுக்கு நீதி போன்ற அரிய புத்தகங்களை கண்டேன். அதை தாங்கள் அன்பளிப்பாக வாங்கி தருவதே உயரியதாக இருக்கும் என்பதால் இவ்வார இறுதியில் வந்து பெற்றுக் கொள்கிறேன்....]]]

எனக்கு யாராவது இதனை வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தால் நானும் இதனை உங்களுக்குத் தருகிறேன் சிவா..!