நினைத்தேன் எழுதுகிறேன்..!

05-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தயாரிப்பாளரின் தலைமறைவு..!

‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ‘டைம் பிரேம்’ ராம்ஜி திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவு என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு பெரிதும் வருத்தமாகிவிட்டது.

நேரில் சந்திக்கும்போதெல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாதவராகத் தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் அவரது பிஸினஸ் செம அடி என்றும், சம்பளம் கொடுக்கக்கூட முடியாமல் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் காதுக்கு வந்தபோதிலும் அப்படி எதுவுமி்ல்லை என்பதைப் போலவே நடந்து கொண்டார்.

ஆனால் இப்போது தலைக்கு மேல் வெள்ளம் போனவுடன் தத்தளிக்கிறார். இவ்வளவு நஷ்டத்துடன் எதற்காக தொழிலை நடத்த வேண்டும்..? சிறிய நஷ்டம் கிடைக்கின்றபோதே கவுரவமாக அதனைவிட்டு விலகி விடுவதுதான் புத்திசாலித்தனம். ஆனானப்பட்ட சினிமாவிலேயே போட்டதை அள்ள முடியாமல் தவிக்கின்றபோது, டிவியில் மட்டும் முடியுமா என்ன..?

இது முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..!
நித்யானந்தம் ஜெயிலில் - வீடியோ லீக்..!

‘கதவைத் திற காற்று வரும்’ என்று சொல்லி தன் வீட்டு பெட்ரூமை சரியாக செக் செய்யாமல் விட்டதன் காரணமாக ஒரே நாளில் தன் சாம்ராஜ்யத்தை இழந்திருக்கும் நித்யானந்தாவின் வழக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு தினுசாகவே போய்க் கொண்டிருக்கிறது..!

நம்ம கையில் எடுக்காமல் இருந்தாலே போதும் என்ற நினைப்பில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு வழக்குகளைத் தள்ளிவிட.. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்பதைப் போல கர்நாடக அரசும் தாமதப்படுத்த கிடைத்த இடைவெளியில் எதிர்ப்புகளைக் குறைக்கின்றவகையில் தான் பொறுப்பு வகித்து வந்த பீடத்தின் தலைமைப் பதவியில் இருந்து விலகிவிட்டதாகச் சொல்லிப் பார்த்தால் நித்தி. ஆனாலும் கர்நாடகாவின் தற்போதைய அரசியல் சூழல் அவருக்கு எதிராக இருப்பதினால் அவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயச் சூழல்.

போலீஸ் விசாரணையில் கேள்வி கேட்கும்போதெல்லாம் கஸாப் பாணியில் ஏதோவொன்றை சொல்லி தப்பித்து வந்திருக்கும் நித்திக்கு போலீஸ் விசாரணையின்போது கிடைத்திருக்கும் மரியாதையை பார்த்தால் ஏழைகளுக்கு ஒரு சட்டம்.. பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்பது போலத்தான் தெரிகிறது.

நித்தியானந்தாவை விசாரணை செய்தவிதத்தையும், அவரை ஜெயில் செல்லில் அடைக்கும் காட்சியையும் நேற்று டைம்ஸ் நெள சேனல் வெளிப்படுத்திக் காட்டியது. அக்காட்சிகளைப் பார்க்கின்றபோது நிஜமாகவே நித்தியானந்தம் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏதோ பிஸினஸ் பேச வந்திருப்பவரைப் போல ஒரு சேரில் அமர்த்தி, எதிரில் விசாரணை அதிகாரிகள் அமர்ந்து கொண்டு பேசியிருக்கும் விதத்தைப் பார்க்கின்றபோது மனதுக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், இதேபோல் மற்ற அனைத்துக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமும் இவர்கள் நடந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை..!

“அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே” என்கிற கேள்விக்கு ஆமாம் என்று ஒத்துக் கொண்டு உடன் இருந்தது ரஞ்சிதாதான் என்பதையும் சொல்லும் நித்தி, “அன்றைக்கு, அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை..” என்று ஆணித்தரமாக வாதிடுவதைப் பார்த்தால் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் கேணத்தனமான அதிகாரிகள் என்பதுதான் நித்தியின் முடிவு போலும்..! அவர்களும் அப்படித்தான் ரியாக்ட் செய்திருக்கிறார்கள்..

“எதற்காக ஒப்பந்தத்தில் செக்ஸ் நிபந்தனையைச் சேர்த்தீர்கள்?” என்ற கேள்விக்கு..? “அது எனது சீடர்களே செய்தது.. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.. அது அமெரிக்காவுக்கு மட்டும்தான். வேறு எந்த நாட்டிற்கும் அது மாதிரியான ஒப்பந்தப் படிவம் இல்லை” என்று முனங்கவும் செய்கிறார். தப்பித் தவறி அமெரிக்காவில் தன் திருவிளையாடலை காட்டியிருந்தால் ஆயுசுக்கும் வெளியே வர முடியாது என்பதால் முன்கூட்டியே தப்பிக்க இப்படி ஒரு ஐடியா..!

“எப்படி இவ்வளவு பணம் உங்களுக்கு வந்து குவிந்தது?” என்றால் “டொனேஷன்” என்று ஒரு வரியில் பதில்.. அதிலும் “ஒரு அக்கவுண்ட்டில் இருக்கும் 32 கோடி ரூபாய் முழுவதும் டொனேஷனாக வந்ததுதான்” என்கிறார்.

ஜெயில் செல்லுக்குள் அனுப்பி வைத்து கதவைச் சாத்துகின்றவரையிலும் படம் பிடித்த அதி பயங்கர கேமிராமேன்கள் யாரோ..? எப்படியிருந்தாலும் ஜெயிலுக்குள் நுழைந்து படம் பிடித்து வெளியிட்டது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். வாழ்க மீடியாக்கள்..!
பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் கோல்மால்..!

கிட்டத்தட்ட 15 மாதங்கள் இந்நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.. ஒரு நிறுவனம் எப்படியெல்லாம் நடத்தப்படக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த நிறுவனத்தைத்தான் சொல்ல வேண்டும்..!

கொஞ்சம், கொஞ்சமாக ஊழியர்களை வெளியேற்றியபோது பாக்கி சம்பளத்தை மூன்று மாதத்தில், நான்கு மாதத்தில் தருவதாக எழுதிக் கொடுத்த இந்நிறுவனம், இன்றுவரையிலும் தரவில்லை. அதோடு வருங்கால வைப்பு நிதியையும் கடந்த இரண்டாண்டுகளாக கட்டவேயில்லை.. அந்தத் தொகையும் ஊழியர்களுக்கு அப்படியே நிற்கிறது..!

எனக்கு மூன்று மாதச் சம்பளத்துடன் பி.எப். பணம் வர வேண்டியுள்ளது. மொத்தம் 50000 வரும்.. கேட்டுக் கேட்டு சலித்துப் போய் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிகூட பார்த்தேன். நேரில் போய் கம்பெனியின் தற்போதைய நிர்வாகியான நாராயணனிடம் சண்டையிட்டும் பயனில்லை. “உங்க காரை வித்தாவது எனக்கு செட்டில் பண்ணுங்க..” என்கிறவரையில் கத்திப் பார்த்தாச்சும்.. ம்ஹூம்.. அசரவில்லை ஐயாமார்கள்..!

நேற்றுதான் ஊழியர்களில் ஒரு சிலர் மிகுந்த பிரயத்தனப்பட்டு பலரையும் தொடர்பு கொண்டு ஒட்டு மொத்தமாகச் சென்று பி.எஃப். கமிஷனரை சந்தித்து புகார் மனுவைக் கொடுத்துள்ளார்கள்.

“ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டதால் நிறுவனத்தின் கையெழுத்து உங்களுக்குத் தேவையில்லை. நீங்களே அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொடுங்கள்” என்று பி.எஃப். அலுவலகத்தில் சொன்னதால் பலரும் பணம் கோரும் விண்ணப்பத்தினை கொடுத்துள்ளார்கள். நான் இன்றைக்குச் சென்று எழுதிக் கொடுத்தேன். இன்னும் பாக்கிச் சம்பளம் கேட்டு சண்டை பாக்கியிருக்கிறது..

இந்த நிறுவனம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி எழுத வேண்டுமானால் ஒரு இராமாயணமே பாட வேண்டியிருக்கும்..
ஜெட் வேகத்தில் வந்தது தமிழக மேல்சபை..!

அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு நன்மை பயக்கின்ற செயல்களை மட்டும்தான் மின்னல் வேகத்தில் முடிப்பார்கள். கலைஞரும் செய்து முடித்துவிட்டார்.

மேல்சபை அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கேட்பதுபோல் கேட்க வைத்து உடனேயே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி.. நடப்புக் கூட்டத் தொடரிலேயே அதனை பாஸ் செய்ய வைத்து இந்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையெழுத்து வாங்கி.. முதல் கட்டப் பணிகள் துவங்கிவிடும்..

ராஜ்யசபா தேர்தல்கள் முடிந்ததும் அடுத்தது மாநில மேல்சபைக்கான தேர்தல்தான்.. அதிருப்தியாளர்கள், மகனது எதிர்ப்பாளர்கள், மகளது ஆதரவாளர்கள், பேரன்களின் நண்பர்கள், தன்னைத் துதிபாடும் கவிஞர்கள், எப்போதும் ஆதரிக்கும் பத்திரிகை நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே உள்ளே நுழைய காத்திருக்கிறது.

இதுவரையிலும் மாதத்திற்கு ஒரு முறைதான் கலைஞரைப் பற்றிய பாராட்டுப் புராணங்களைக் கேட்டு நமது செவி கிழிந்தது.. இனிமேல் தினம்தோறும் அதுதான் கேட்கப் போகிறது.. காது போச்சு..

இவ்வளவு வேகத்தை பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் மத்திய அரசு காட்டவில்லை.. ஈழத்தில் போர் நிறுத்தத்திற்காக கலைஞரும் இதுபோல் முனைப்பு காட்டவில்லை.. ம்ஹும்.. அவங்கவங்களுக்கு அவங்கவங்க பொழைப்புதான் முக்கியம்..
சின்னத்திரையினரின் துணிச்சல்..!

தமிழ் மக்களை கொத்தாகக் கொன்று குவித்து ஈழத்தில் இருந்து அப்புறப்படுத்தியதை நினைவுகூர்ந்து இனி வருடந்தோறும் மே 18-ம் தேதியன்று தீபாவளி கொண்டாட்டம்போல் கொண்டாடப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருக்கும் சூழலில் அந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எப்படி சின்னத்திரையினர் சிலர் ஒத்துக் கொண்டார்கள் என்பது பரம ரகசியமாக உள்ளது.

“தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் இப்போது அமைதியாக, ஆனந்தமாக இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் கேட்கிறோம். நீங்கள் வந்து கலை நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று அங்கேயிருக்கும் சில அரசு ஆதரவு தமிழ் அமைப்புகள் மூலமாகத்தான் தமிழக சின்னத்திரையினரை அணுகினார்களாம். பலரும் முடியாது என்று ஒதுங்கிக் கொள்ள.. சிலர் மட்டுமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே ரிகர்சல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் நேற்றுதான் போஸ்டர்கள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் ஒட்டப்பட்டதாம். அதன் பின்பே விஷயம் வெளியே தெரிய வந்திருக்க.. இப்போது எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் என்கிற லெவலுக்கு திருமாவளவன் போயிருக்கிறார். கடைசியில் சின்னத்திரை கூட்டமைப்பு இதில் தலையிட்டு நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்திருக்கிறதாம்..

இருந்தாலும் எவ்வளவு துணிச்சல் என்று சின்னத்திரையினர் மீது கோபத்தில் இருக்கிறார்கள் ஈழத்து ஆதரவாளர்கள்..
பார்வதி அம்மாள் விவகாரம்

மிக விரைவில் பார்வதி அம்மாள் சென்னைக்குள் காலடி எடுத்து வைப்பார். கலைஞரின் குடும்பத்தினர் விமான நிலையத்தில் வரவேற்கப் போகிறார்கள். வீரமணியும், திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் ஷிப்ட் டைம் போட்டு அம்மாவை மருத்துவமனையில் கவனிக்கப் போகிறார்கள்.

வைகோவும், நெடுமாறனும் அம்மாவைச் சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கப் போகிறார்கள். கிடைக்காவிட்டால் தர்ணா போராட்டம் நடத்துவார்கள். மருத்துவமனைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறார்கள்.. முடியாது என்று மறுக்கப் போகிறது அரசு.

கோவை மாநாடு முடியும்வரையில் அவரை யாரும் சந்திக்க முடியாது. அதுதான் நிபந்தனை என்று கடைசியாக கோர்ட்டில் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டப் போகிறது.. தீர்ப்பும் அதையொட்டியே வரப் போகிறது..

என்ன எல்லாத்தையும் நானே சொல்றனேன்னு பார்க்குறீங்களா..? தமிழ்நாட்டுல கொஞ்சூண்டு அரசியல் தெரிஞ்ச யார்கிட்ட வேண்ணாலும் கேளுங்க.. இதைத்தான் சொல்லப் போறாங்க..

எப்படியோ அந்தம்மா குணமாகி வீட்டுக்குப் போனா சரிதான்..
நார்கோ அனாலிசஸ் முறை தவறு

ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக சுப்ரீம் கோர்ட்டை பாராட்ட வேண்டிய கட்டாயம்..

குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் நார்கோ அனாலிசஸ் முறையில் விசாரிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ரொம்பப் பெரிய குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைக்க போலீஸார் மிகச் சமீபத்தில் கண்டுபிடித்த ஒரு முறைதான் இந்த நார்கோ அனாலிசஸ்..

ஆழ்நிலை மயக்கத்திற்குக் கொண்டு போய் அந்த நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கேள்வி கேட்டு பதிலைப் பெற்று அதன் மூலம் விசாரணையை நடத்துவது. இது கொஞ்சமும் மனிதாபிமானற்ற செயல் என்று மனித உரிமை இயக்கங்கள் குரல் கொடுத்து வந்தன. அரசு அமைப்புகள் இதுவரையிலும் அசைந்து கொடுக்கவில்லை. இப்போது சுப்ரீம் கோர்ட் துடைத்தெறிந்துவிட்டது.

மோசடி மன்னன் தெல்கியிடம் இதேபோல்தான் விசாரணை செய்தார்கள். அவர் போதையில் இருக்கின்ற நேரத்தில் அவருடைய கன்னத்தில் மாறி, மாறி அறைந்து ஏதோ குற்றவாளியிடம் விசாரிப்பதைப் போல் மருத்துவமனைக்குள் மருத்துவ ரீதியாக படுத்திருப்பவரிடம் சிபிஐ செய்த கொடுமையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது.

ஏதோ எக்குத்தப்பாக அப்போதைய மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரின் பெயரை தெல்கி மீண்டும், மீண்டும் உச்சரிக்க அவர் பதவி கோவிந்தா.

அடுத்தது சத்யம் ராஜூவின் விசாரணை.. இதில் முடிவென்ன என்று தெரியவில்லை. ஆனால் அதனை வைத்துத்தான் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தயார் செய்திருக்கிறது சிபிஐ. விசாரணையே சட்ட விரோதமானது என்னும்போது அதை வைத்து கேஸை நடத்தினால் என்னாகுமோ..?

30 comments:

கிரி said...

//இது முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..//

உண்மைத்தமிழன் ஆனால் அந்த நிகழ்ச்சி நன்றாகத்தானே செல்கிறது!

இராகவன் நைஜிரியா said...

// இது முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..! //

நிச்சயமாக இருக்கும்.

// இந்த நிறுவனம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி எழுத வேண்டுமானால் ஒரு இராமாயணமே பாட வேண்டியிருக்கும்.. //

எதிர் பார்க்கலாமா?

// ம்ஹும்.. அவங்கவங்களுக்கு அவங்கவங்க பொழைப்புதான் முக்கியம்.. //

மக்கள் நலம்... தம் மக்கள் நலம்... வேறென்ன.

// அடுத்தது சத்யம் ராஜூவின் விசாரணை.. இதில் முடிவென்ன என்று தெரியவில்லை. ஆனால் அதனை வைத்துத்தான் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தயார் செய்திருக்கிறது சிபிஐ. விசாரணையே சட்ட விரோதமானது என்னும்போது அதை வைத்து கேஸை நடத்தினால் என்னாகுமோ..? //

ஒன்னும் ஆகாது... கேஸ் நடக்கும்... நடக்கும்... வினைத்தொகை தான்.

அ சொ said...

Vanakkam,

Please give ur email id..hav to send u an invite unable to find ur mail id in ur blog..its for this event...
http://save-tamils.blogspot.com/2010/05/protest-to-condemn-and-urge-bollywood_04.html

-Arun

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

யப்பா என்னா வேகம்..

ராஜ நடராஜன் said...

எல்லோரும் தூங்குற போது ரிலீசாகியிடுச்சோ?கடை தூங்கி வழியுது:)


மேல்சபை தவிர எல்லாமே புதுசு கண்ணா!புதுசு அண்ணா!

தி.மு.கல போய் சேர்ந்துக்கிறீங்களா?வர்றவங்களுக்கு பரிசோட வரவேற்க முதல்வர் சட்டசபை வாசல்படிகிட்டயே நிற்கிறாராம்.

கல்வெட்டு said...

உதா,

1. இலங்கையில் தமிழன் செத்தாலும் இலங்கைக்கு கிரிக்கெட் விளையாட போகும் இந்திய அணி. அந்த சொம்புகள் விளையாடும் கிரிக்கெட்டை காசு கொடுத்து சொரணை ஏதும் இல்லாமல் பார்க்கும் தமிழக மக்கள் (பதிவுலகத்தில் ஈழத்திற்கா கோசம் போடும் பலர் உட்பட) .

- இந்த இரசிகர்கள் என்றாவது இந்திய கிரிக்கெட் அணியை புறக்கணிப்பார்களா? இல்லை. கேட்டால் "விளையாட்டுக்கு நாடு மொழி இனம் இல்லை" என்று சொல்வார்கள்.

- டான்ஸ் ஆடுபவர்களைத் தடுக்கும் திருமா எதற்கு பொன்னாடை போர்த்தப் போனார் இலங்கைக்கு? (அவர் அன்று போகவில்லை என்றால் தலைவரின் இதயத்தில் இடம் கிடைத்திருக்காது.)
அரசியல் அவரது தொழில். அதைக் காக்க அவர் போகிறார்.

- டிவிஎஸ் கூட இலங்கையில் தொழில் செய்கிறது. எங்கே டிவிஎஸ் நிறுவனத்தை (தமிழ்நாட்டில் உள்ள )தடுக்க முடியுமா?

அதே போல் டான்ஸ் ஆடுபவர்களுக்கு அது ஒரு தொழில். தொழிலுக்கு அவர்கள் எங்கும் போவார்கள். டான்ஸ் ஆடுபவர்களைத் தடுப்பதால் இவர்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது. மற்றபடி எல்லா அரசியல்வாதிகளும் இந்தப் பிரச்சனையில் தங்கள் தொழிலைக் காப்பாற்ற பல வகையில் நாடகம் ஆடுகிறார்கள்.

***

தமிழக மேல்சபை...

இலங்கையை விடுங்கள்..அது ரொம்ப தூரம்.
இராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்சனை, கச்சத்தீவு, முல்லைப் பெரியார்,ஆந்திரா‍ , கர்நாடக நதி நீர் என்று எந்த பிரச்சனைகளும் இவர்களுக்கு முக்கியம் இல்லை.

இருக்கும் சபையே இது பற்றி திடமான திட்டங்களை விவாதிக்கவில்லை. இவர்கள் வந்து என்ன ?

:-(((

smart said...

தன் சுயநலன் இல்லாத விஷயங்களுக்கு கழகஅரசு காட்டாமளிருக்கும் ஆர்வம் சில சமயம் நன்மையாய் பல சமயம் தீமையாய் போகிறது.

நல்ல அலசல் அண்ணே

நசரேயன் said...

//முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..!

//

ம்ம்ம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present u.t.,

புலவன் புலிகேசி said...

சம்பளப் பணம் நிச்சயம் கிடைக்கும். உழைத்த காசு வீண் போகாது.

கே.ஆர்.பி.செந்தில் said...

சொல்லத்தான் நினைக்கிறேன் ....

பார்வையாளன் said...

" மோசடி மன்னன் தெல்கியிடம் இதேபோல்தான் விசாரணை செய்தார்கள். அவர் போதையில் இருக்கின்ற நேரத்தில் அவருடைய கன்னத்தில் மாறி, மாறி அறைந்து ஏதோ குற்றவாளியிடம் விசாரிப்பதைப் போல்... "

பாஸ், குழப்புறீங்க... மோசடி மன்னன் என்றால் அவர் குற்றவாளிதானே... ? குற்றவாளி போல் நடத்தாமல் , வேறு எப்படி நடத்துவார்கள்... ?

ஒரு வேளை, அவர் மோசடிதான் செய்தார்.. குற்றம் செய்யவில்லை என்கிறீர்களா...

butterfly Surya said...

அடிக்கடி நினைங்க.. எழுதுங்க... சாய்மீரா தொடர் எதிர்பார்க்லாமா..?

Vidhoosh(விதூஷ்) said...

//இந்த நிறுவனம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி எழுத வேண்டுமானால் ஒரு இராமாயணமே பாட வேண்டியிருக்கும்..
//

ஆனால் எனக்கு தெரிந்த வட்டாரத்தில் அந்த நிறுவனம் இருந்த பில்டிங்கின் வாஸ்து சரியில்லை என்றுதான் சொன்னாங்க.. அப்டீங்களா... :))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கிரி said...

//இது முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..//

உண்மைத்தமிழன் ஆனால் அந்த நிகழ்ச்சி நன்றாகத்தானே செல்கிறது!]]]

அது நன்றாகத்தான் போகிறது..! ஆனால் பணம் வர வேண்டுமே..?

விஜய் டிவியால் அழிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள்தான் நிறைய பேர் இருக்கிறார்கள்..!

அது ஒரு பெரிய கதை கிரி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[இராகவன் நைஜிரியா said...

//இது முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..! //

நிச்சயமாக இருக்கும்.

//இந்த நிறுவனம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி எழுத வேண்டுமானால் ஒரு இராமாயணமே பாட வேண்டியிருக்கும்.. //

எதிர்பார்க்கலாமா?]]]

விரைவில் எதிர்பார்க்கலாம்..!

[[[//ம்ஹும்.. அவங்கவங்களுக்கு அவங்கவங்க பொழைப்புதான் முக்கியம்.. //

மக்கள் நலம்... தம் மக்கள் நலம்... வேறென்ன.]]]

சரியாச் சொன்னீ்ங்க.. அவங்களோட சொந்தப் புள்ளைகளோட நலன்கள் மட்டுமே முக்கியம்..!

[[[//அடுத்தது சத்யம் ராஜூவின் விசாரணை.. இதில் முடிவென்ன என்று தெரியவில்லை. ஆனால் அதனை வைத்துத்தான் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தயார் செய்திருக்கிறது சிபிஐ. விசாரணையே சட்ட விரோதமானது என்னும்போது அதை வைத்து கேஸை நடத்தினால் என்னாகுமோ?//

ஒன்னும் ஆகாது... கேஸ் நடக்கும்... நடக்கும்... வினைத்தொகை தான்.]]]

ஏதோ கொஞ்சூண்டு சிறை தண்டனை பெற்று வெளில வருவார்ன்னு எதிர்பார்க்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அ சொ said...

Vanakkam,

Please give ur email id..hav to send u an invite unable to find ur mail id in ur blog..its for this event...

http://save-tamils.blogspot.com/2010/05/protest-to-condemn-and-urge-bollywood_04.html

-Arun]]]

tamilsaran2002@gmail.com

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Starjan ( ஸ்டார்ஜன் ) said...

யப்பா என்னா வேகம்..]]]

எதுலண்ணா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...

எல்லோரும் தூங்குற போது ரிலீசாகியிடுச்சோ? கடை தூங்கி வழியுது:)]]]

கொஞ்ச நாளா அப்படித்தாண்ணே இருக்குது..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கல்வெட்டு said...

உதா,

எல்லா அரசியல்வாதிகளும் இந்தப் பிரச்சனையில் தங்கள் தொழிலைக் காப்பாற்ற பல வகையில் நாடகம் ஆடுகிறார்கள்.]]]

வைகோவையும், நெடுமாறனையும் நான் அப்படி நினைக்கவில்லை..!

இத்தனை ஆண்டு காலமாக தமிழக மக்கள் மத்தியில் ஈழப் பிரச்சினை பற்றி தொண்டை கிழிய கத்திக் குவித்ததினால் இவர்கள் பெற்ற பயன் என்ன என்பதை நோக்கினால் இதன் அர்த்தம் புரியும்..!

[[[தமிழக மேல்சபை. இலங்கையை விடுங்கள். அது ரொம்ப தூரம்.
இராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்சனை, கச்சத்தீவு, முல்லைப் பெரியார், ஆந்திரா , கர்நாடக நதி நீர் என்று எந்த பிரச்சனைகளும் இவர்களுக்கு முக்கியம் இல்லை.
இருக்கும் சபையே இது பற்றி திடமான திட்டங்களை விவாதிக்கவில்லை. இவர்கள் வந்து என்ன?
:-(((]]]

தனயனை எதிர்ப்பவர்களை கூல் செய்து ஒரு பதவியைக் கொடுத்து உட்கார வைத்து தன்னை வாழ்த்திப் பேசுவதை தினம்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கலாமே..! அதனால்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[smart said...
தன் சுயநலன் இல்லாத விஷயங்களுக்கு கழக அரசு காட்டாமளிருக்கும் ஆர்வம் சில சமயம் நன்மையாய் பல சமயம் தீமையாய் போகிறது. நல்ல அலசல் அண்ணே]]]

இவர்களே கடைசியில் தீமையாய் அல்லவா இருக்கிறார்கள்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[நசரேயன் said...
//முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..!//

ம்ம்ம்]]]

ஏதாவது எழுதுறதுக்குக்கூட நேரமில்லாத அளவுக்கு ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[T.V.ராதாகிருஷ்ணன் said...

Present u.t.,]]]

எதுக்குங்க ஸார்..? நீங்களுமா..? தமிழ்மணம் கருவிப் பட்டைல பிளஸ்ல ஒரு குத்து குத்தினாலே போதும் ஸார்..!

இவ்ளோ கஷ்டப்பட்டு பின்னூட்டம் போடணுமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[புலவன் புலிகேசி said...
சம்பளப் பணம் நிச்சயம் கிடைக்கும். உழைத்த காசு வீண் போகாது.]]]

அந்த நம்பிக்கையில்தான் நானும் காத்திருக்கிறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
சொல்லத்தான் நினைக்கிறேன்.]]]

சொல்லிருக்கலாமே..!?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[பார்வையாளன் said...

"மோசடி மன்னன் தெல்கியிடம் இதே போல்தான் விசாரணை செய்தார்கள். அவர் போதையில் இருக்கின்ற நேரத்தில் அவருடைய கன்னத்தில் மாறி, மாறி அறைந்து ஏதோ குற்றவாளியிடம் விசாரிப்பதைப் போல்..."

பாஸ், குழப்புறீங்க. மோசடி மன்னன் என்றால் அவர் குற்றவாளிதானே? குற்றவாளி போல் நடத்தாமல், வேறு எப்படி நடத்துவார்கள்...?]]]

குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரையோ, குற்றவாளியையோ இப்படித்தான் நடத்த வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது ஸார்..?

[[[ஒரு வேளை, அவர் மோசடிதான் செய்தார். குற்றம் செய்யவில்லை என்கிறீர்களா...]]]

அவரே சில குற்றங்களை ஒப்புக் கொண்டுதானே தண்டனையை பெற்றிருக்கிறார்.. இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[butterfly Surya said...
அடிக்கடி நினைங்க.. எழுதுங்க... சாய்மீரா தொடர் எதிர்பார்க்லாமா..?]]]

எழுதணும்னுதான் பார்க்குறேன்.. பார்ப்போம்..!

முருகன் உத்தரவு கொடுத்தா எழுதிரலாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Vidhoosh(விதூஷ்) said...

//இந்த நிறுவனம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி எழுத வேண்டுமானால் ஒரு இராமாயணமே பாட வேண்டியிருக்கும்..//

ஆனால் எனக்கு தெரிந்த வட்டாரத்தில் அந்த நிறுவனம் இருந்த பில்டிங்கின் வாஸ்து சரியில்லை என்றுதான் சொன்னாங்க.. அப்டீங்களா... :))]]]

வர்றதே ஆடிக்கொரு தடவைதான்.. அப்படி வரும்போதும் இப்படியொரு நக்கலா..?

வாஸ்து பில்டிங்குக்கு நல்லாத்தான் இருந்துச்சு..

உள்ளே வேலை பார்த்த சில கருங்காலிகளுடன்தான் வாஸ்து ஒத்துப் போகவில்லை..!

Vidhoosh(விதூஷ்) said...

//வர்றதே ஆடிக்கொரு தடவைதான்.. அப்படி வரும்போதும் இப்படியொரு நக்கலா..?//

கோச்சுக்காதீங்க. நக்கல் இல்ல சார், அண்ணாநகர் ஈஸ்ட்-ல இருந்த போது அப்படி சொல்லித்தான் காலி பண்ணாங்கன்னு நம்பகமான செய்தி. அப்போ எனக்கு மானேஜ்மென்ட்டை நினைச்சா சிப்பு சிப்பா வந்துச்சு. அதான் இதை படிச்சதும் நினைவுக்கு வந்துது

ஆனா என்னவோ அவங்க எல்லாம் இன்னும் நல்லத்தான் இருக்காங்க. வேலை செஞ்ச ஊழியர்கள் நிலைதான்.. :( ???? ஒன்னா ரெண்டா இது மாதிரி கம்பெனிகள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Vidhoosh(விதூஷ்) said...

//வர்றதே ஆடிக்கொரு தடவைதான்.. அப்படி வரும்போதும் இப்படியொரு நக்கலா..?//

கோச்சுக்காதீங்க. நக்கல் இல்ல சார், அண்ணாநகர் ஈஸ்ட்-ல இருந்த போது அப்படி சொல்லித்தான் காலி பண்ணாங்கன்னு நம்பகமான செய்தி. அப்போ எனக்கு மானேஜ்மென்ட்டை நினைச்சா சிப்பு சிப்பா வந்துச்சு. அதான் இதை படிச்சதும் நினைவுக்கு வந்துது.]]]

இப்ப நினைச்சாலும் சீப்பு சீப்பாத்தான் வரும்..!

எங்க பில்டிங்கை காலி செய்யும்போதும் இப்படித்தான் சொன்னாய்ங்க..! ஆனா உண்மை என்னன்னு எங்களுக்குத்தான தெரியும்..!

[[[ஆனா என்னவோ அவங்க எல்லாம் இன்னும் நல்லத்தான் இருக்காங்க. வேலை செஞ்ச ஊழியர்கள் நிலைதான்.. :( ???? ஒன்னா ரெண்டா இது மாதிரி கம்பெனிகள்.]]]

பைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிருச்சு மேடம்..!