இலங்கை பாராளுமன்றத் தேர்தல் - ஒரு அலசல்..!

12-04-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அடி மேல் அடியாக இலங்கை தமிழர்களுக்கு விழுந்து கொண்டேயிருக்கிறது.


கடந்த ஓராண்டுக்கு முன்புவரையிலும் தனி ஈழம் என்கிற கோரிக்கைக்கும், உலகம் முழுவதிலும் இருக்கின்ற அகதிகளுக்குத் தாய் நாடு வேண்டும் என்கிற முழக்கங்களுக்கும் காரணகர்த்தாவாக இருந்த விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டது முதல் அடி..!

மகிந்த ராஜபக்சே எத்தனையோ கொடூரங்களை நிகழ்த்தியிருந்ததால் இந்த முறை ஜனாதிபதி பதவிக்கு அவரை வரவிடவே கூடாது என்ற நினைப்பில் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் கட்சிகளும், தமிழரல்லாத கட்சிகளும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பைக் காட்டியும், ராஜபக்சேவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.. இது இரண்டாவது..

இப்போது பாராளுமன்றத் தேர்தலின் மூலம் கிடைத்திருப்பது மூன்றாவது அடி..

இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத் தேர்தல் கடந்த எட்டாம் தேதியன்று நடைபெற்றது. 196 நேரடி பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில் மொத்தம் 7620 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பாகவும், சுயேச்சைக் குழுக்களாகவும் போட்டியிட்டனர்.


சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் முதன் முறையாக இலங்கையின் 22 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல் இதுதானாம்.

தேர்தலில் 36 அரசியல் கட்சிகளும் 301 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டுள்ளன. மிகக் கூடுதலாக திகாமடுல்ல மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகளும், 48 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட்டுள்ளன. ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.


பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் தீர்த்துக் கட்டிய ஒன்றையே தனது பிரதான சாதனையாக அதுவரையிலும் மக்கள் முன் வைத்து வந்திருக்கும் மகிந்தாவுக்கு இந்தத் தேர்தலிலும் அதேதான் பிரதான கோஷம். “நாட்டில் அமைதியை நிலை நாட்டியிருக்கிறேன். வேறென்ன வேண்டும் நமது நாட்டுக்கு?” என்ற ரீதியில் அவருடைய பிரச்சாரம் அவர் சார்ந்த சிங்கள இனத்து மக்கள் ரீதியில் வெகுவாக எடுபட்டிருந்தது.

இதனால்தான் ஜனவரி 26-ம் தேதியன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டிருந்த 74 சதவிகித வாக்குகளில் அதிகப்படியானதை வென்று சரத்பொன்சேகாவை தோற்கடித்திருந்தார்.

அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் தனது பிரபாகரன் சாதனையை மட்டுமே முன் வைத்து களத்தில் குதிக்க நினைத்தாலும், ஒருவேளை தனது கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் ஒவ்வொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சிகளை கெஞ்ச வேண்டியிருக்குமே என்ற நினைப்பில் தமிழக, இந்திய பாணியில் கட்சிகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டார் மகிந்தா.

கடந்த ஆட்சிக் காலத்தில் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களை கட்சி தாவ வைத்து, அவர்களுக்கு இலாகா இல்லாத அமைச்சர்கள் என்கிற அந்தஸ்தை கொடுத்து, 100-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பட்டியலோடு ஆட்சி செய்து, இலங்கையின் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றி, தனது ஆட்சியையும் காப்பாற்றிக் கொண்டு 35 வருட ஈழ யுத்தத்தை தற்காலிகமான ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்றால் மகிந்தாவை சாதாரணமாகவா எடை போட முடியும்..?


விடுதலைப்புலிகள் இருக்கின்றவரையில் அவர்களுக்காகத்தான் சிலருக்கு எம்.பி. தேர்தலில் சீட் கொடுத்து வைத்திருந்ததாகவும், வரும் தேர்தலில் அவர்களுக்கு சீட் இல்லை என்று சிலரைக் குறிப்பிட்டு பிரதான தமிழர் கட்சியான தமிழரசுக் கட்சி அறிவிக்க.. சீட் இல்லாமல் வெளியில் வந்தவர்களை அன்போடு தன்னிடம் அழைத்து அரவணைத்துக் கொண்டார் மகிந்தா..

அதுவரையிலும் தமிழ் மக்களின் துரோகியாக சித்தரிக்கப்பட்ட மகிந்தா அந்த நிமிடத்தில் இருந்து, தமிழரசுக் கட்சியில் சீட் இல்லாமல் வெளியே வந்த தமிழர்களுக்கு தேவதூதன் போலாகிவிட்டார். வெளியேற்றப்பட்ட தமிழ் எம்.பி.க்கள் ஒரு கட்சியை உருவாக்க அவர்களுடன் ஒரு கூட்டணியை வைத்துக் கொண்டார் மகிந்தா..!

இலங்கையின் வீரமிக்க சிங்களக் கட்சியும், மூன்றாவது பெரிய கட்சியுமான ஜே.வி.பி.யில் இருந்து விமல் வீரவன்ச தலைமையில் ஒரு டீமை மகிந்தா தன் கட்சிக்குக் கடத்திக் கொண்டுபோய் அவர்களுடனும் ஒரு கூட்டணி வைத்துக் கொண்டார்..!


மிச்சம், மீதியிருந்த ஜே.வி.பி. வேறு வழியில்லாமல் கடைசிக் கட்டத்தில் சரத் பொன்சேகாவுடன் கூட்டணி அமைத்து ஜனநாயக தேசிய முன்னணியாக தேர்தல் களத்தில் குதித்தது.

தேர்தல் நாளன்று நடந்த வன்முறைகளைவிடவும் அதிர்ச்சியை அளித்த விஷயம் வாக்குப் பதிவு சதவிகிதம்தான். இதனை இலங்கையின் அனைத்துக் கட்சிகளுமே எதிர்பார்த்திருக்கவில்லை. நாடு முழுவதிலுமே மொத்தமே 55 சதவிகித மக்களே வாக்களித்திருத்திருக்கிறார்கள்.


அதிலும் தங்களது தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தல் என்று தெரி்ந்திருந்தும் யாழ் பகுதியில் வெறும் 18 சதவிகிதம் பேரே வாக்களித்திருந்தது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இந்த சதவிகிதக் கணக்கே தமிழர் கட்சிகளின் வயிற்றில் கிலியை கிளப்பியிருந்தது. அது போலவேதான் நடந்தும்விட்டது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் ஆளும் கட்சியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 117 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி 46 இடங்களையும் பழம் பெரும் தமிழர் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி 12 இடங்களையும் பெற்றிருக்கிறது.

இத்தேர்தலின்போது இந்தியத் திருநாட்டின் தேர்தல் விளையாட்டுக்களும், திருவிழாக்களும் இங்கேயும் அரங்கேறியிருக்கின்றன.

கண்டி மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் வாக்குச் சாவடியின் மீது தாக்குதல்.. சாவடிகளுக்குள் நுழைந்து போலி வாக்குளைப் பெட்டியில் திணித்தது.. வாக்குப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடியது என்று சகலத்தையும் செய்து முடித்திருக்கிறார்கள்.


செய்திகளும், குற்றச்சாட்டுக்களும் உண்மை என்பதையறிந்து இந்த இரண்டு மாவட்டங்களின் தேர்தல் முடிவுகளை மட்டும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள் தேர்தல் திணைக்கள அதிகாரிகள். என்னே ஒரு நல்ல அதிகாரிகள்..!

அதிலும் கண்டி மாவட்டத்தில் ஓட்டுப் போட வந்த நகர்ப்புற மக்களை ஒரு அரசியல் ரவுடிக் கும்பல் வழி மறித்து மிரட்டல் வேலைகளைத் தொடுத்துக் கொண்டேயிருந்ததாம். இதனால் வாக்குப் பதிவு மிக, மிக குறைந்துபோய்விட்டதாகப் புகார் சொல்கிறார் அம்மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்.


மேலும் “தமிழர்களுக்கு ஓட்டளித்தால் எப்படியும் நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம்.. தேர்தல் முடிந்த பின்பு உங்களுக்கு ஆப்புதான்.. என்று குண்டர்கள் சிலர் மிரட்டியதால்தான் பொதுமக்கள் ஓட்டளிக்க முன்வரவில்லை” என்றும் சொல்கிறார் மனோ கணேசன்.

கண்டி மாவட்டத்தில் நாவிலப்பட்டிய என்கிற ஊரில் இருக்கும் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டுப் போட்டது.. பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடியது.. சூறையாடியது என்று அத்தனையும் நடந்திருப்பதால் மீண்டும் அந்தத் தொகுதியில் மறுவாக்குப் பதிவுக்கு தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளதாம். இத்தொகுதியில் நடைபெறும் வாக்குப் பதிவில்தான் மனோ கணேசனின் எம்.பி. பதவி கனவு அடங்கியிருக்கிறது.

திருகோணமலைக்கு வடக்கே உள்ள தமிழ்க் கிராமமான கும்புறுபிட்டியில் இருந்த பூத்தில் உள்ளே நுழைந்த ஒரு கும்பல் வாக்குச் சீட்டுக்களை அள்ளிக் கொண்டு போனதையடுத்து அந்தத் தொகுதியில் மறு வாக்குப் பதிவுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனால் திருகோணமலைத் தேர்தல் தொகுதியின் முடிவை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதே மாவட்டத்தில் உள்ள மற்ற இரண்டு தேர்தல் தொகுதிகளான மூதூர் மற்றும் சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகளும் இதற்காக வெயிட்டிங்..

தமிழர்களின் பிரதானக் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் 5 இடங்களையும், வன்னிப் பிரதேசத்தில் 3 இடங்களையும், மட்டக்களப்பில் 3 இடங்களையும், பெற்றுள்ளது. திருகோணமலையில் இக்கட்சிக்கு 1 இடமே கிடைக்கும் என்கிறார்கள்.

திருகோணலை, கண்டி மாவட்ட முடிவுகள் வெளிவந்த பின்பு தேசியப் பட்டியல் இடங்களுக்கான எம்.பி.க்களில் யார், யாருக்கு எத்தனை என்பதும் தெரிய வந்துவிடும் என்கிறார்கள்.

இலங்கையின் அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் தவிர, அக்கட்சி பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில் கூடுதலாக தேசியப் பட்டியல் எம்.பி.க்களாக சிலர் பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்வார்கள். இந்தப் பட்டியலை அந்தந்த கட்சிகளே முடிவு செய்து கொள்ளலாம்.

அதன்படி பார்த்தால் இறுதி நிலவரப்படி மகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 145 இடங்களையும், ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி 55 இடங்களையும், தமிழரசுக் கட்சி 14 இடங்களையும், ஜனநாயக தேசிய முன்னணி 7 இடங்களையும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2004-ஆம் ஆண்டு 20-க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஜே.வி.பி. இம்முறை வெறும் 7 உறுப்பினர்களோடு திருப்திப்பட்டுக் கொள்ளப் போகிறது. சரத் பொன்சேகாவுடன் கூட்டணி வைத்து தென்னிலங்கையில் தங்களுக்கான ஆதரவுத் தளத்தை பெருக்கிக் கொள்ள நினைத்த அக்கட்சியின் அரசியல் வியூகம் படுதோல்வி அடைந்திருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தளவில் அக்கட்சி கடந்த தேர்தல்களில் பெற்றிருந்த வாக்குகளில் சுமார் 10 லட்சம் வாக்குகளை இத்தேர்தலில் இழந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் தலைநகரான கொழும்பு மாவட்டத்தில் மட்டும் கொழும்பு மத்தியத் தொகுதி, கொழும்பு வடக்குத் தொகுதி, கொழும்பு கிழக்குத் தொகுதி, கொழும்பு மேற்குத் தொகுதி. டெகிவளை தொகுதி, பொரளை தொகுதி என 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொழும்புவில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்கின்ற இத்தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் இலங்கை வாழ் தமிழர்களிடையே இருக்கின்ற பிரிவினையைத் தெளிவாகக் காட்டுகிறது.

மூத்தத் தமிழ்க் கட்சிகள் என்றும், ஆயுதம் தாங்காத அரசியல் கட்சி என்றும் பெருமை கூறி வந்த ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலை கூட்டணியும், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியதாக கூறும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற கட்சிகள் இத்தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

இத்தேர்தல் முடிவுகளால் இக்கட்சிகள் தங்களுடைய அரசியல் எதிர்காலத்தையும், வழிகளையும், கூட்டணிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன..

கட்சிகளே படுதோல்வியடையும்போது தனி மனிதர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன..? இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள், இலாகா இல்லாத அமைச்சர்கள் என்று மொத்தம் 57 எம்.பி.க்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இவர்களில் நான்கு கேபினட் அமைச்சர்கள், ஐந்து துணை அமைச்சர்கள் மற்றும் ஐந்து, இலாகா இல்லாத அமைச்சர்கள் தங்களது பதவியை பறி கொடுத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய வெளி விவகாரத் துறை அமைச்சராக இருக்கும் ரோஹித்த போகொல்லாகம. விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொக்குகே, சட்ட அமைச்சர் மிலிந்த மொறகொட, வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், பெட்ரோலியம் மற்றும் வள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ.மஜீத், நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி என்ற பிரபலங்கள் பலரும் இத்தேர்தலில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., இடதுசாரி முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பலரும் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று மகிந்தாவின் திடீர் ஆதரவோடு போட்டியிட்ட முன்னாள் தமிழ் எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.

இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.க்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா அங்கே சீட் கிடைக்காத கோபத்தில் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களாக இருந்த சிவநாதன் கிஷோரும், கனகரட்ணமும் மகிந்தாவின் ஆதரவோடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளனர்.

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான தங்கேஸ்வரி, மகிந்தாவின் ஆதரவோடு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு தோற்றுப் போயிருக்கிறார்.

யாழ்ப்பாணம் .மாவட்டத்தில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோர் இவர்களில் சரவணபவன், சிறீதரன் ஆகியோர் புதுமுகங்களாம். இதேபோல் மட்டக்களப்பில் போட்டியிட்டு ஜெயித்திருக்கும் பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் என்ற இருவருமே புதுமுகங்கள்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்னும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி.க்களான மொஹமட் மஹ்ரூப், சபீக் ரஜாப்டீன், சாஹல ரத்னாயக்க, ஜோன் அமரதுங்க உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர்.
அத்துடன், ஜே.வி.பி கட்சியைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளனர்.
ஜே.வி.பி.யில் இருந்து விலகி தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டு, பின்னர் ஆளும் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.பி. நந்தன குணதிலக்க தோல்வியடைந்துள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணியின் சார்பில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள் எம்.பி.க்கள் பலரும் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.


வெற்றி பெற்றவர்களில் முதன்மையானவர் ஜெனரல் சரத் பொன்சேகா. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பொன்சேகா 98,612 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். “பிரபாகரனின் மரணச் செய்தி கிடைத்தபோதும், புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்ற செய்தி கிடைத்தபோதும் பொன்சேகா எப்படி புன்முறுவல் பூத்தாரோ அதேபோல்தான் இப்போதும் இந்த வெற்றிச் செய்தி கிடைத்ததும் புன்சிரிப்பை உதிர்த்தார்..” என்று அவருடைய மனைவி பத்திரிகையாளர்களிடம் திருவாய் மலர்ந்திருக்கிறார்.. நாமும் வாழ்த்துவோம்..!


22 வயதேயான நாமல் ராஜபக்சே.. மகிந்தாவின் மூத்த புதல்வர்.. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதே தொகுதியில் போட்டியிட்ட மகிந்தாவின் அண்ணன் சமல் ராஜபக்சே, தம்பி மகன் நாமல் பெற்ற வாக்குகளில் பாதியளவே பெற்றாலும் அவரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

இலங்கையின் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டரான சனத் ஜெயசூரியா ஆளும் மகிந்தாவின் கட்சி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 74352 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மகிந்தாவின் தம்பியான பசில் ராஜபக்சே கம்பஹா மாவட்டத்தில் 4,25,861 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் பொதுத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரும் இவர்தானாம்..

இலங்கையின் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் 64 புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த தலா இருபது பேர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் வெற்றி பெற்றவர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்.


“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்குக் கிடைத்துள்ள வெற்றி போதுமானதாக இல்லாவிட்டாலும்கூட, மக்களின் அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவாகவே இதனைக் கருதுவதாக” ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பி.பி.ஸி. தமிழோசைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“அரச ஆதரவும், பின்புலமும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களுக்கு இருந்த நிலையில், யாழப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான இடங்களைப் பெற்றுள்ளதே?” என்று டக்ளஸிடம் கேட்கப்பட்டதற்கு “மக்கள் சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய தருணத்தில் தற்போது உள்ள போதிலும், தமக்கெதிராக ஊடகங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களே தமது கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதை தடுத்துள்ளதாக” கூறியிருக்கிறார் டக்ளஸ்.

“மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்துக்கு ஏற்ப ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மக்களுக்கான அரசியல் உரிமையை மிக விரைவில் பெற்றுக் கொடுக்கமுடியும்” என்று நம்மூர் அரசியல்வியாதிகளையே தோற்கடிக்கும்விதமாக நம்பிக்கைகளை அள்ளி வீசுகிறார் டக்ளஸ்.

அதே நேரத்தில், “தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைந்தமையே தமிழ் தேசியக் கட்சியின் பின்னடைவுக்குக் காரணம்” என்கிறார் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். தன்னுடைய தோல்விக்கான காரணத்தை தெரிவிக்காத சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கட்சியின் தோல்வியை மட்டும் குறிப்பறிந்து சொல்வது ஏன் என்றுதான் தெரியவில்லை.


"பெருவாரியான தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காத காரணத்தால்தான் பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் அமோக வெற்றி பெற்றிருப்பதற்குக் காரணமாகும். இனிவரும் தேர்தல்களின்போதாவது தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்று அட்வைஸும் செய்திருக்கிறார் சிவாஜிலிங்கம்.

பாவம் முள்ளிவாய்க்கால் போரின்போது தமிழகத்திலேயே கிட்டத்தட்ட ஒரு வருட காலம் இருந்து ஈழ ஆதரவு தலைவர்களிடையே நடந்து, நடந்து ஈழப் பிரச்சினையை மங்கிவிடாமல் பார்த்துக் கொண்ட இவருக்கு கிடைத்திருப்பது இந்தத் தோல்விப் பரிசுதான்..!

என்னதான் மகிந்தாவின் ஆளும் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட்டாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறார் மகிந்த ராஜபக்சே.

காரணம்.. வெரி சிம்பிள்.. அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமெனில் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும்.. எதற்காக அரசியலமைப்புச் சட்ட மாற்றம் என்றால், அது முழுக்க முழுக்க மகிந்தாவின் பொற்காலத்தை உருவாக்கத்தான்..!

தற்போதைய அரசியலமைப்புச் சட்டப்படி ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒருவர் இரண்டு முறைகளுக்கு மேல் அப்பதவியை வகிக்க முடியாது. இதனால்தான் சந்திரிகாவே வீட்டுக்குப் போனார். தானும் அதேபோல் வீட்டுக்குப் போனால் பாதுகாப்பில்லாமல் அடுத்த ஆறு மாதம் கூட தங்க முடியாது என்பதை மகிந்தா தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறார். எனவேதான் அந்த விதிமுறையை உடைத்தெறிய நினைக்கிறார். எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் ஜனாதிபதி பதவியில் அமர முடியும் என்று அரசியலமைப்பை மாற்றுவதுதான் மகிந்தாவின் தற்போதைய லட்சியம்..!

தற்போதைய நிலையில் 2017 வரையிலும் மகிந்தா இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும். ஆனாலும் அதற்குப் பின்னும் தானே தலைவராக இருக்க விரும்புகிறார்போலும்.. இதனை நோக்கித்தான் அவரது அடுத்த அரசியல் ஸ்டெப் இருக்கும் என்கிறார்கள் இலங்கை அரசியல் பார்வையாளர்கள்.

கண்டி, திருகோணமலை ரிஸல்ட்டுக்குப் பிறகும், தேசியப் பட்டியல் எம்.பி.க்களை நியமித்த பிறகும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டிக்கு மேலும் சில எம்.பி.க்கள் மகிந்தாவுக்குத் தேவைப்படலாம்.

அப்போது சென்ற காலக்கட்டத்தில் செய்ததைப் போல அமைச்சர் பதவியைக் காட்டி கட்சிகளை உடைத்து உறுப்பினர்களை இழுக்கின்ற வேலையைக் கச்சிதமாகச் செய்யத்தான் போகிறார் மகிந்தா.

இடையில் இப்போது புதிய திருப்பமாக இலங்கையின் புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்களிடையே கருத்து மோதல் இருப்பதுபோல் செய்திகள் வெளியாகியுள்ளன.


நாட்டிலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் பசில் ராஜபக்சேதான் அடுத்த பிரதமர் என்று கட்சியில் ஒரு கோஷ்டி குரல் எழுப்பி வருகிறதாம். இதனால் பசிலைவிட மூத்தவர்களான டி.எம்.ஜயரட்ன, மைத்திரிபால சிறிசேன ஆகியோர்கள் மனக்கிலேசத்தில் இருப்பதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கி்ன்றன.

ஆனாலும் இளம் துருக்கியர் டீமைப் போல கட்சியில் பசிலுக்கு ஆதரவுக்களம் பெரிதும் இருப்பதால் அடுத்த பிரதமர் பசில்தான் என்று அடித்துச் சொல்கிறார்கள் தலைநகர பத்திரிகையாளர்கள். ஒருவேளை அது இல்லையெனில் நிச்சயம் வெளிவிவகாரத் துறை பசிலுக்குத்தான். அதில் சந்தேகமில்லை என்கிறார்கள்.

இனவாத அரசு, இனப் பிரச்சினையுள்ள நாடு என்றெல்லாம் சொல்லப்படும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் முற்றாக முடிவடைந்து அடுத்து ஆட்சியாளர்கள் பதவியேற்கும் சூழலில் அனைவராலும் மறக்கப்பட்டுவிட்ட ஒன்று தனி தமிழீழம் என்கிற கோரிக்கைதான்.

முள்ளிவாய்க்காலோடு அது புதைக்கப்பட்டுவிட்டது என்றுதான் தோன்றுகிறது. இப்போதைய தமிழர்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் நுழையவிருக்கும் தமிழரசுக் கட்சி தனித் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக அறிவித்தேவிட்டது. “தேசியத்தோடு இணைந்து கூட்டாட்சியாக இருக்கவே தாங்கள் பிரியப்படுகிறோம்” என்று சொல்கிறது அக்கட்சி.


ஆனாலும் அவர்களுக்குள் இருக்கின்ற ஒரே கவலை.. “தமிழர்களின் ஒரே பிரதிநிதி நாங்கள்தான்.. ஜனாதிபதி எங்களைத்தான் தமிழர்களின் பிரச்சினைகள் சார்பாக பேசுவதற்கு அழைக்க வேண்டும். அவர் அழைப்புக்காக காத்திருக்கிறோம்..” என்று இந்த இரு நாட்களில் ஈழத்தின் பல இடங்களில் பேசி முடித்து ஓய்ந்துவிட்டார் சம்பந்தன்..!

அழைப்பு விடுப்பதோ, அழைக்காமல் விடுப்பதோ, தனி ஈழம் கொடுப்பதோ, கொடுக்காமல் விடுவதோ.. இனி எல்லாமே ராஜபக்சேக்களின் கைகளில்தான்..!

26 comments:

வானம்பாடிகள் said...

/அழைப்பு விடுப்பதோ, அழைக்காமல் விடுப்பதோ, தனி ஈழம் கொடுப்பதோ, கொடுக்காமல் விடுவதோ.. இனி எல்லாமே ராஜபக்சேக்களின் கைகளில்தான்..!/

வாழ விடுவதோ வலயத்துள் அடைப்பதோ கூட:(

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[வானம்பாடிகள் said...

/அழைப்பு விடுப்பதோ, அழைக்காமல் விடுப்பதோ, தனி ஈழம் கொடுப்பதோ, கொடுக்காமல் விடுவதோ.. இனி எல்லாமே ராஜபக்சேக்களின் கைகளில்தான்..!/

வாழ விடுவதோ வலயத்துள் அடைப்பதோகூட:(]]]

கவிஞர் என்றால் சும்மாவா..?

நன்றிகள் ஐயா..!

கே.ஆர்.பி.செந்தில் said...

நிலைமை ரொம்ப மோசம் அண்ணே!
அங்குள்ள தமிழ் மக்களை நினைக்கும்போது மிகவும் கவலையாக உள்ளது .

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கே.ஆர்.பி.செந்தில் said...
நிலைமை ரொம்ப மோசம் அண்ணே! அங்குள்ள தமிழ் மக்களை நினைக்கும்போது மிகவும் கவலையாக உள்ளது.]]]

எப்போதும் ஒருவித பயத்துடனும், விரக்தியுடனும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கிறார்கள் தமிழ் ஈழத்து மக்கள்..!

இந்த ஆட்சிக்கு வெண் சாமரம் வீசுவதே தமிழர் தலைவர்கள்தான்..!

இந்த முரண்பாட்டை என்னவென்று சொல்வது..?

Ram said...

ராஜபக்ஷ சிங்களர் அதனால் அவர் எந்த பக்கம் சாய்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்த "so called" தமிழ் தலைவர்கள் தாங்கள் தான் தமிழின பிரதிநிதி என்ற அங்கீகாரத்துக்கு அலைகிறார்களே தவிர உண்மையாக தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை!
எது எப்படியோ, கடைசியில் அவதிப்படுவது என்னவோ தமிழர்கள் தான்.
அது செரி அவர்கள் என்ன இந்தியாவிலா இருக்கிறார்கள் பெருபன்மையினரை மட்டம் தட்டி சிறுபான்மையினரை தூக்கிப்பிடிக்க?

Ram

என்.ஆர்.சிபி said...

இதையும் படிச்சி பின்னூட்டமிட்ட புண்ணியவான்களை வணங்குகிறேன்!

Jeeves said...

ஹ்ம்ம்ம்... நம்ம விஜய் படம் ரெண்டையும், உளியின் ஓசையும் அங்க போட்டு வோட்டு கேக்கல போல


விடுங்கண்ணே... கோவம் வருது. ஆனா என்ன பிரயோசனம் ?

ராஜ நடராஜன் said...

//மகிந்த ராஜபக்சே எத்தனையோ கொடூரங்களை நிகழ்த்தியிருந்ததால் இந்த முறை ஜனாதிபதி பதவிக்கு அவரை வரவிடவே கூடாது என்ற நினைப்பில் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் கட்சிகளும்//

இது எப்ப தல?

ராஜ நடராஜன் said...

100 பேர் இடத்துல 50 பேர்தான் வாக்களிக்க வந்தாங்களாமே!

ராஜ நடராஜன் said...

இன்னுமொரு பெருமூச்சு விட மட்டுமே முடிகிறது:(

ananth said...

இங்கே தனித்தமிழ் நாடு என்று கேட்டால் என்ன கதி எற்படுமோ அதே கதிதான் இலங்கையில் இனி தனி தமிழ் ஈழம் என்று கேட்டால். நல்ல மனநிலையில் உள்ள யாரும் அதைக் கேட்க மாட்டார்கள். கேட்டால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன.

ஜோதிஜி said...

கூட்டம் ரொம்ப குறைவாயிருக்கு?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Ram said...

ஆனால் இந்த "so called" தமிழ் தலைவர்கள் தாங்கள்தான் தமிழின பிரதிநிதி என்ற அங்கீகாரத்துக்கு அலைகிறார்களே தவிர உண்மையாக தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை!]]]

Ram]]]

ராம்.. தேர்தலுக்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்பது அந்த மக்களுக்கே தெரிந்துவிட்டது போலும்.

அதனால்தான் இந்த முறை வாக்களிக்கவே முன் வரவில்லை..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[என்.ஆர்.சிபி said...
இதையும் படிச்சி பின்னூட்டமிட்ட புண்ணியவான்களை வணங்குகிறேன்!]]]

ஹி.. ஹி..!

கும்பிட்டதுக்கு நன்றிங்கோ சிபியண்ணே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Jeeves said...
ஹ்ம்ம்ம்... நம்ம விஜய் படம் ரெண்டையும், உளியின் ஓசையும் அங்க போட்டு வோட்டு கேக்கல போல
விடுங்கண்ணே... கோவம் வருது. ஆனா என்ன பிரயோசனம் ?]]]

விஜய் படம் அங்க வருது ஜீவ்ஸ்.. உளியின் ஓசையைத்தான் வாங்க ஆளில்லையாம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...

//மகிந்த ராஜபக்சே எத்தனையோ கொடூரங்களை நிகழ்த்தியிருந்ததால் இந்த முறை ஜனாதிபதி பதவிக்கு அவரை வரவிடவே கூடாது என்ற நினைப்பில் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் கட்சிகளும்//

இது எப்ப தல?]]]

ஜனவரி மாசம் இருந்த ஞானதோயம்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...
100 பேர் இடத்துல 50 பேர்தான் வாக்களிக்க வந்தாங்களாமே!]]]

வெறும் 18 சதவிகிதம்தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஓட்டளிப்பு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ராஜ நடராஜன் said...
இன்னுமொரு பெருமூச்சு விட மட்டுமே முடிகிறது:(]]]

கோபப் பெருமூச்சுதான் இந்தப் பதிவு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ananth said...
இங்கே தனித் தமிழ்நாடு என்று கேட்டால் என்ன கதி எற்படுமோ அதே கதிதான் இலங்கையில் இனி தனி தமிழ் ஈழம் என்று கேட்டால். நல்ல மனநிலையில் உள்ள யாரும் அதைக் கேட்க மாட்டார்கள். கேட்டால் என்ன ஆகும் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன.?]]]

தெரியும் ஆனந்த்..! ஆனால் போராடாமல் கிடைக்குமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஜோதிஜி said...
கூட்டம் ரொம்ப குறைவாயிருக்கு?]]]

அதான் எனக்கும் புரியலை ஜோதிஜி..!

மொக்கை குரூப்தான் கடைசி நேரத்துல கை கொடுத்தாங்க..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in]]]

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..!

Joseph said...

அண்ணாச்சி,
தமிழ் கட்சிகள் செய்வது குறித்து வியப்பதற்கு ஒன்னுமில்ல.
அவங்களுக்குள்ள ஒற்றுமை இருந்துருந்தா எப்பவோ தமீழம் கிடைச்சுருக்கும். ஆனா ஒற்றுமையின்மை என்பது தமிழர்களின் தேசிய குணம். இதை மாத்த முடியாது.
இப்ப அங்க இருக்க தமிழர் கட்சிகள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதவர்களாதான் இருக்காங்க.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[Joseph said...
அண்ணாச்சி, தமிழ் கட்சிகள் செய்வது குறித்து வியப்பதற்கு ஒன்னுமில்ல. அவங்களுக்குள்ள ஒற்றுமை இருந்துருந்தா எப்பவோ தமீழம் கிடைச்சுருக்கும். ஆனா ஒற்றுமையின்மை என்பது தமிழர்களின் தேசிய குணம். இதை மாத்த முடியாது. இப்ப அங்க இருக்க தமிழர் கட்சிகள் தாங்கள் செய்வது என்னவென்று அறியாதவர்களாதான் இருக்காங்க.]]]

இல்லை ஜோஸப்பு.. தமிழர் கட்சிகளெல்லாம் நல்லா தெரிஞ்சுதான் செய்றாங்க.. அவர்களுடைய இப்போதைய நோக்கம் எம்.பி. பதவி.. அதற்காகத்தான் கூட்டணி மாற்றம்.. புதிய கட்சிகள் உதயம்..!

அனைவரும் தோற்றுப் போனதுதான் அவர்களே எதிர்பாராதது..!

abeer ahmed said...

See who owns organize-email.com or any other website:
http://whois.domaintasks.com/organize-email.com

abeer ahmed said...

See who owns sh-rashid.net or any other website.