வெடிகுண்டு முருகேசன்..! - விமர்சனம்

24-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

"சரியும், தவறுமாக வாழ்பவனின் வாழ்க்கை சரிதம்" என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டதால் கதையை சந்தேகப்பட முடியவில்லை.

'நகைச்சுவை தர்பார்' என்று இதன் விளம்பரங்களிலும், பத்திரிகை செய்திகளிலும் அறிவிக்கப்பட்டுவிட்டதால் 'லாஜிக்' என்கிற வார்த்தையை புறம்தள்ள வேண்டியிருக்கிறது.

இது இரண்டையும் ஒதுக்கிவிட்டுவிட்டு பார்த்தால் இத்திரைப்படம் பார்க்கக் கூடிய திரைப்படமாகத்தான் எனக்குப் பட்டது.

பெட்டி கேஸ்களில் ஆள் கிடைக்காவிட்டால் அள்ளிப் போடுகிற பெர்மணன்ட் ஸ்டெப்னியாக ஊரில் வலம் வரும் அஞ்சாத சிங்கம் ‘வெடிகுண்டு' முருகேசன். அவ்வப்போது கோர்ட்டிற்கு வந்து பஞ்ச் டயலாக்குகளையும், கருத்துகளையும் தெளித்துவிட்டுப் போகும் இவன் ஒரு ‘கருத்து கந்தசாமி'.

படத்தின் துவக்கத்திலேயே இவனது அப்பா இவனைத் தலை முழுகிவிட்டதால் குடும்பம் பற்றிய பேச்சில்லை. நடுவில் இவனுடன் பள்ளியில் படித்து இப்போது மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகத் திரியும் பொன்னியையும் உடன் வைத்துக் காப்பாற்றி அவளுக்கும் கஞ்சி ஊற்றிக் கொண்டிருக்கிறான்.

அப்பாவின் தொந்தரவால் போலீஸ் கான்ஸ்டபிள் வேலைக்குப் போயிருக்கும் நாச்சியார்தான் ஹீரோயின். அவ்வப்போது ஸ்டேஷனின் குற்றப் பதிவேட்டில் கை நாட்டு வைக்க வரும் முருகேசனை பார்த்து அருவருப்படையும் நாச்சியாருக்கு பொன்னி விஷயம்தான் மனதைக் கரைக்கிறது.. முருகேசனின் மீது காதலும் பிறக்கிறது.
ஊருன்னு ஒண்ணு இருந்தா வில்லனுக யாராவது இருக்கத்தான செய்வாங்க.. அண்ணன், தம்பியான இரண்டு வில்லனுக.. அதுல தம்பி கொஞ்சம் காமெடியும் பண்ணுவான். அந்தக் காமெடி தம்பி பண்ணின வில்லத்தனத்தால் பொன்னி கற்பிழந்துபோக ஆத்திரப்படும் முருகேசன் அவனை ‘கைமா' வாங்கி விடுகிறான்.

தம்பியின் ‘கைமா'விற்கு பதிலடியாக முருகேசனை ‘காவு' வாங்கத் துடிக்கிறான் அண்ணன். அண்ணனுக்குப் பயந்து ஜெயிலுக்குப் போகிறான் முருகேசன். “அங்கேயே போய் அவன் கதையை முடிக்கிறேன்” என்று பிளான் போட்டு அண்ணன்காரன் ஜெயிலுக்கு வர..

இருவரையும் ரிமாண்டுக்கு அனுப்பின பெண் நீதிபதி அதே நாளில் தடாலடியாக முருகேசனுக்கு ஜாமீன் கொடுத்து அவனை வெளியே அனுப்புகிறார்.

வெளியே வந்த முருகேசனை வெட்டி வீழ்த்த அடியாட்களை அனுப்புகிறான் அண்ணன்காரன். வருகின்ற ரெளடியான காமெடியன்களை காமெடியாகவே அடித்துவிரட்டுகிறான் முருகேசன். “எத்தனை நாளைக்குத்தான் பயந்து பயந்து சாகிறது. அவன் வூட்ல புகுந்து நியாயம் கேட்போம்..” என்று நினைத்து அண்ணன்காரனின் வீட்டிற்குள்ளேயே நுழைந்து அவன் அப்பன்காரனை ஆஸ்பத்திரிக்கு இழுத்து வந்து நோயால் துடித்துக் கொண்டிருப்பவர்களைக் காட்டி ‘மனநல சிகிச்சை' செய்கிறான் முருகேசன்.

பொன்னிக்கு வயிற்று வலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு போய்ச் சேர.. அதே நேரம் அண்ணன்காரன் வெளியில் வந்து முருகேசனுக்கு ‘சுளுக்கெடுக்க' நினைக்கிறான். முருகேசனின் செண்ட்டிமெண்ட்டில் மனம் கரைந்த வில்லன் அண்ணனின் அப்பா, தனது மூத்த மகனையும் கரைக்கப் பார்க்கிறான். ஆனால் மருத்துவமனையில் முருகேசனை பார்த்த அண்ணன்காரன் அடியாட்களை ஏவ..

இங்கேதான் நிஜ சண்டை நடக்கிறது.. ஆனாலும் இறுதியில் செண்ட்டிமெண்ட் ஜெயிக்க.. பொன்னிக்கு குழந்தை பிறக்க.. நொடியில் அனைவரும் ஒன்று சேர்ந்து நம்மை சிரிப்பாய் சிரிக்க வைக்கிறார்கள்.
இவ்வளவுதான் கதை..!

முதலில் வித்தியாசமான ஸ்டில்களை வெளியில்விட்டு ஆழம் பார்த்தார்கள் தயாரிப்பாளர்கள். அதில் கவிழ்ந்தார்கள் சன் டிவியினர். தாங்களே படத்தினை வாங்கிக் கொள்வதாக உறுதியளிக்க இதையும் ஒரு பெரிய செய்தியாக்கி படத்தினை மேலும், மேலும் நகாசு செய்யத் துவங்கினார்கள்.

ஆனால் எடுத்தவரைக்கும் போட்டு பார்த்த பலரும் தங்களது உதட்டினைப் பிதுக்கி தலையை ஆட்ட சன் டிவி யோசித்தது. அதைச் சொல்லியே அங்கிட்டும், இங்கிட்டுமாக புரட்டி புரட்டி படத்தை எடுத்தவர்கள்.. படத்தில் இருந்த சில விஷயங்களாலேயே முற்றிலுமாக சன் டிவியின் வியாபாரத்தை இழந்தார்கள்.

'குவைத் ராஜா' என்கிற தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்தெட்டாவது வள்ளலின் பெருமையை அரை ரீலில் தேவையில்லாமல் சொல்லி வைக்க.. “ஆஹா.. இது நம்ம கவுரவத்துக்கு இழுக்காச்சே..” என்று கருதி சன் டிவி ஆப்பு வைத்துவிட்டது. 'குவைத் ராஜா' என்ற அந்த வள்ளல் பெருமளவு பண உதவி செய்திருப்பதனால்தான் படம் தயாரித்து முடிக்கப்பட்டது என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

எல்லாம் முடிந்த பின்பு “படம் ஒரே டிரையா இருக்கு..” என்ற பீலிங் அனைவருக்கும் வந்து சேர்ந்திருக்கிறது. பசுபதி வித்தியாசமான நடிகர்தான்.. நடிக்கத் தெரிந்த நடிகர்தான். ஆனால் மார்க்கெட்னு ஒண்ணு வேணுமே..? நம்ம சினிமாலதான் கருவாட்டு கடைக்கே விளம்பரம் வைச்சாக வேண்டியிருக்கே.. அதான் வடிவேலு கடைசியாக எண்ட்ரியானார். அவரை வைத்து தனி காமெடி டிராக்கை வைத்து எடுத்து முடித்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் நக்கல், நையாண்டியை அள்ள அள்ள குறையாத அளவுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குநர் மூர்த்தி. கொஞ்சம் விவரம் தெரிந்த இயக்குநராக இருக்கிறார் போலும்..

ஊரில் வீதி வீதியாக டிரெம்களில் தண்ணீர் எடுத்து விற்கும் முருகேசனின் கையில் தமிழகத்தில் வெளிவரும் இலக்கியப் பத்திரிகைகள் அனைத்துமே தவழ்கின்றன. ‘காலச்சுவடிற்கு' பல காட்சிகளில் இலவச விளம்பரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். இது மாதிரியான ஒரு காமெடி திரைப்படத்தில் குறியீடுகளை காண்பது ஆச்சரியம்தான். இதில் நான் பார்த்தவகையில் அதுதான் நடந்திருக்கிறது.

‘காலச்சுவடு' பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கும்போதுதான் முருகேசனுக்கு வலிப்பு வந்து துடிக்கிறான். “அப்போது ஏன் அந்தப் பத்திரிகை..?” என்றுதான் தெரியவில்லை. அதே போல் ஒரு பாடல் காட்சியில் பல இலக்கியப் பத்திரிகைகள் மாறி, மாறி அவன் கைகளில் தென்படுகிறது. தெருவில் கழைக்கூத்தாடும் சிறுமியைக் காட்டும்போது பின்புலத்தில் கம்யூனிஸத்தின் சின்னத்தை கொடிமரத்துடன் காட்டுவதுகூட குறியீடு என்றே நினைக்கிறேன்.

“தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடையை திறந்து வைச்சுட்டு ‘குடிக்காதடா..' ‘குடிச்சுட்டு ரோட்டுல நடக்காதடா'.. ‘ஏண்டா குடிக்கிறே'ன்னுல்லாம் கேட்டா எப்படி ஸார்..?” என்று போலீஸாரிடம் முருகன் கேட்டபோதே இயக்குநர் வித்தியாசமானவர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

கோர்ட்டில் பெட்டி கேஸிற்காக ஒவ்வொரு தடவையும் வந்து நிற்கும்போதும் கருத்து கந்தசாமியாக பொங்கி எழுவதைப் பார்த்தால் இயக்குநரை பாராட்டியே தீர வேண்டும் போல் உள்ளது.

கடைக்கு வந்த சிறுமியை சணல் வாங்க அனுப்பிய கடைக்காரரை சிறுமியின் அப்பா கடிந்து கொள்ளும்போது முருகேசன் சொல்லும் அறிவுரைக்கு அடடா.. என்ன கை தட்டல்ங்குறீங்க..? இயக்குநர் ஸார்.. வாழ்த்துக்கள்..

முருகேசனான பசுபதி காமெடிக்கு புதியவர் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். முடிந்த அளவுக்கு பேசியிருக்கிறார். நடிக்க வேண்டிய கட்டாயம் இதில் இல்லை என்பதால் இயல்பாக தோன்றி, கஷ்டமில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார். வேறென்ன சொல்ல..?

ஹீரோயின் நாச்சியாராக ஜோதிர்மயி.. இந்த நடிகையை இவ்வளவு அசிங்கமாக இதுவரையில் எந்தத் திரைப்படத்திலும் காண்பிக்கவில்லை. எந்தக் கோணத்திலெல்லாம் இவர் அசிங்கமாக தெரிவாரோ அந்தக் கோணத்திலேயே எடுத்துத் தொலைத்திருக்கிறார் இயக்குநர். கண்றாவி.. போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லை.

இயக்குநர்தான் என்ன செய்வார்..? ஹீரோ பசுபதி என்றவுடன் பல நடிகைகளும் ஜகா வாங்கி ஓடிவிட.. இவர் மட்டுமே ஓகே சொல்லியிருக்கிறார். அவர் கஷ்டத்தையும் நாம பார்க்கணுமில்லே.. நடிக்க வாய்ப்பு கொடுத்தமைக்காக பாடல் காட்சிகளில் கொஞ்சம் வஞ்சகமில்லாமல் காட்டியிருக்கிறார்.
கல்யாணமான நடிகை ஒருவர் இந்த அளவுக்கு ‘ஓப்பன் சோர்ஸாக' திரைப்படத்தில் நடிப்பது இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் இவருடைய கணவருக்கு, தமிழ்த் திரையுலக ரசிகர்கள் சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தப் பொன்னி என்ற கேரக்டர் எப்படி படம் முழுவதும் தனது பைத்தியக்காரனமான சேட்டைகளைத் தொடர்ந்திருக்கிறார் என்பது ஆச்சரியம்தான்.. நன்றாகத்தான் நடித்திருக்கிறார்.

வில்லன் அண்ணனாக நடித்திருக்கும் வீராவிற்கு ரசிகர் மன்றமே உள்ளதாம். நமக்குத் தெரியாம போச்சு பாருங்க.. தட்டியெல்லாம் வைச்சு தியேட்டரை அமர்க்களப்படுத்திருக்காங்கப்பா.. ஆனாலும் ஓவரா கத்தி, கத்தி நம்ம காதை இன்னும் கொஞ்சம் செவிடாக்கிட்டாரு..

அடுத்து நம்ம வைகைப் புயல் வடிவேலு.. தனிக்காட்டு ராஜா போல அடி வாங்கியே நம்மை சிரிக்க வைக்கிறார். அவரை அடித்தால் நமக்கு சிரிப்பு வருகிறதே.. ஏன் என்று எனக்குத் தெரியலை..? ஆனா அவர் அடி வாங்குறதை பார்த்தா பாவமாவே இருக்க மாட்டேங்குது.. அதுனால அண்ணன் இது போல நிறைய அடி வாங்கி நம்மை சிரிக்க வைக்கட்டும்.

ஹோட்டலில் சாப்பிடும்போது “ஈ செத்துக் கிடக்கு..” என்று சொல்லி ஒருவர் டான்ஸ் ஆட.. “மீன் செத்துக் கிடக்கு.. கோழி செத்துக் கிடக்கு.. இறால் செத்துக் கிடக்கு.. கோழிக் குஞ்சு செத்துக் கிடக்கு..” என்று ஒவ்வொன்றாகச் சொல்லி அவரை மடக்கும் இடத்தில் “ச்சே.. இத்தனை நாளா நாமளும் கதை யோசிக்கிறோம்.. இப்படி ஒரு வசனம் நமக்கு சிக்கலையே?”ன்னு வெட்கமாத்தான் இருக்கு.. நல்லதொரு காமெடி டிராக்..

தொலைக்காட்சி செய்தி வாசிப்புகளில் ஒரு தனி ஆவர்த்தனமே செய்து கொண்டிருந்த நிர்மலா பெரியசாமி, இதில் தனது நடிப்பு கேரியரைத் துவக்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். பெண் நீதிபதி வேடம். கண்ணாடி அணிந்திருந்ததால் முதலில் அடையாளமே தெரியவில்லை. அடுத்தடுத்த காட்சிகளில்தான் அம்மணி யாரென்று தெரிய வந்தது.. செய்தி வாசிப்பை போலவே பேசுவார் என்று எதிர்பார்த்தேன். அப்படியில்லாமல் சினிமா தமிழிலேயே பேசி என்னை ஏமாற்றிவிட்டார். ஆனாலும் என்ன..? அடுத்த அம்மா கேரக்டருக்கு ஆள் ரெடி..

படத்தின் பாடல் வரிகளில் இலக்கிய வாடை அதிகம் அடித்துள்ளது. அதிலும் சாரல் சாரல் பாடலை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் அந்தப் பாடல் காட்சியை எடுத்தவிதம் சராசரி திரைப்படத்தின் காட்சி போல் ஆகிவிட்டதால் பரபரப்பில்லாமல் போய்விட்டது.

இரண்டு பாடல்களுக்கு கேட்க விரும்புவதைப் போல இசை அமைந்துள்ளது. ஆனால் வெடிகுண்டு முருகேசன் பாடலில் இசைக் கருவிகளின் அதீத ஒலியில் வரிகள் தொலைந்து போய்விட்டது ஒரு குறை. ம்.. எந்தப் படத்துலதான் இந்தக் குறை இல்லை..

படத்தின் துவக்கத்தில் படம் பார்க்க வந்தவர்களை விசில் அடிக்கச் சொல்லியும், கை தட்டச் சொல்லியும் சிச்சுவேஷனை உருவாக்கியிருக்கும் இயக்குநர் படத்தின் இறுதியிலும் பெல் அடிக்கச் சொல்லி படத்தினை முடித்து நம்மை அனுப்பியிருக்கும் அந்த இணைப்புக் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. நகைச்சுவை தர்பார் எனில் இப்படித்தான் இருக்க வேண்டும்..

நீள, நீளமான அறிவுரைகள் சில சமயங்களில் அலுப்புத் தட்டினாலும் அதில் இருக்கும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் வசனகர்த்தாவான இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடச் சொல்கிறது.

இது போன்று நகைச்சுவையை மட்டுமே மையமாக வைத்து படங்கள் நிறைய வர வேண்டும். இப்போது தமிழ்ச் சினிமாவுலகில் நகைச்சுவை திரைப்படங்களுக்குத்தான் மெகா பஞ்சம். சீரியஸ் டைப் திரைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு வித்தியாசமாக அமைய, திரைப்படங்களுக்கு போக வேண்டிய ஆர்வம் அதன் ரசிகர்களுக்கு சற்று கூடும் என்று நினைக்கிறேன்.

கிளைமாக்ஸ் செண்ட்டிமெண்ட்டால் பெரும் ஏமாற்றம் கிட்டினாலும், எத்தனையோ குப்பை படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் எனக்கு ஓரளவுக்கு மன நிறைவையே தந்தது..

இயக்குநர் மூர்த்திக்கு எனது வாழ்த்துக்கள்.

டிஸ்கி : கிளைமாக்ஸ் காட்சியில் பொன்னிக்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் ‘நடிப்புத் தாரகையை' இதற்கு முன் திரைப்படங்களில் பார்த்திருப்பவர்கள் “எங்கே, எதில், எப்போது, எப்படி” என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பின்னூட்டத்தில் சொன்னால், அவர்களது அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி..!

வணக்கம்!

14 comments:

சரவணகுமரன் said...

//கிளைமாக்ஸ் செண்ட்டிமெண்ட்டால் பெரும் ஏமாற்றம் கிட்டினாலும், எத்தனையோ குப்பை படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் எனக்கு ஓரளவுக்கு மன நிறைவையே தந்தது.. //

அண்ணே! அவ்ளோ காய்ஞ்சு போயா இருக்கீங்க?

கார்த்தி said...

சும்மா நச்சுன்னு இருக்கு!!!

டக்ளஸ்... said...

\\அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் \\

என்னமோ..எல்லாரும் காசு வாங்கிட்டு பின்னூட்டம் போடுற மாதிரி பேசுறீங்க..!
அப்ப. அக்கவுண்ட நம்பர் அனுப்பவா தலைவா..!
:)

RAD MADHAV said...

நல்ல விமர்சனம்.
'விமர்சன சிகாமணி' எனும் விருது கொடுத்தால் வாங்கிக்கொல்வீர்களா :-)

எவனோ ஒருவன் said...

இவ்ளோ பெரிய விமர்சனமா?
நன்றி.
---
//“எங்கே, எதில், எப்போது, எப்படி” என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பின்னூட்டத்தில் சொன்னால், அவர்களது அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//
இதெல்லாம் கொஞ்சம் ஓவரு... இலவசமாங்கிறத எடுத்திருந்தாக்கூட நம்பிருப்பேன். இருந்தாலும் பாத்து சொல்ல ட்ரை பண்றேன்.

கீழை ராஸா said...

//டிஸ்கி : கிளைமாக்ஸ் காட்சியில் பொன்னிக்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் ‘நடிப்புத் தாரகையை' இதற்கு முன் திரைப்படங்களில் பார்த்திருப்பவர்கள் “எங்கே, எதில், எப்போது, எப்படி” என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பின்னூட்டத்தில் சொன்னால், அவர்களது அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

படத்தை பார்க்க விடாமல் விட மாட்டீங்க போல் இருக்கிறதே

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[சரவணகுமரன் said...

//கிளைமாக்ஸ் செண்ட்டிமெண்ட்டால் பெரும் ஏமாற்றம் கிட்டினாலும், எத்தனையோ குப்பை படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் எனக்கு ஓரளவுக்கு மன நிறைவையே தந்தது.. //

அண்ணே! அவ்ளோ காய்ஞ்சு போயா இருக்கீங்க?]]]

பின்ன..

ஒரு படமாவது கொடுத்த காசுக்கு செரிக்குதா..? அல்லாம் ரீல் ஓட்டுறாங்க சாமி..!!!

இதை பார்த்திருங்க.. நல்லாத்தான் இருக்கு. கொடுக்குற காசுக்கு செரிக்கும்தான்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கார்த்தி said...
சும்மா நச்சுன்னு இருக்கு!!!]]]

எது கார்த்தி..? படமா? விமர்சனமா..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[டக்ளஸ்... said...

\\அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் \\

என்னமோ.. எல்லாரும் காசு வாங்கிட்டு பின்னூட்டம் போடுற மாதிரி பேசுறீங்க..! அப்ப. அக்கவுண்ட நம்பர் அனுப்பவா தலைவா..!:)]]]

என்னாச்சு கண்டுபிடிச்சீங்களா இல்லையாப்பா.!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[RAD MADHAV said...

நல்ல விமர்சனம்.
'விமர்சன சிகாமணி' எனும் விருது கொடுத்தால் வாங்கிக்கொல்வீர்களா :-)]]]

மை காட்.. விருதா.. எனக்கா.. வேண்டாம் ஸார்..! இருக்குற விருதே போதும்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[எவனோ ஒருவன் said...

இவ்ளோ பெரிய விமர்சனமா?
நன்றி.
---
//“எங்கே, எதில், எப்போது, எப்படி” என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பின்னூட்டத்தில் சொன்னால், அவர்களது அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு... இலவசமாங்கிறத எடுத்திருந்தாக்கூட நம்பிருப்பேன். இருந்தாலும் பாத்து சொல்ல ட்ரை பண்றேன்.]]]

ட்ரை பண்ணுங்க ஸார்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[கீழை ராஸா said...

//டிஸ்கி : கிளைமாக்ஸ் காட்சியில் பொன்னிக்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் ‘நடிப்புத் தாரகையை' இதற்கு முன் திரைப்படங்களில் பார்த்திருப்பவர்கள் “எங்கே, எதில், எப்போது, எப்படி” என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பின்னூட்டத்தில் சொன்னால், அவர்களது அடுத்த பதிவிற்கு பத்து பின்னூட்டங்கள் இலவசமாகப் போடப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

படத்தை பார்க்க விடாமல் விடமாட்டீங்க போல் இருக்கிறதே]]]

பார்த்திட்டு மறந்திடாம வந்து சொல்லுங்க கீழைராசா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தாமதமான பின்னூட்ட பதில்களுக்கு அனைவரும் என்னை மன்னிக்கணும்..

ஏன் தாமதம்ன்னு பதிவு போடப் போறேன்.. அதுல காரணத்தை தெரிஞ்சுக்குங்க..!

அதுவரைக்கும் வெயிட் ப்ளீஸ்..!

abeer ahmed said...

See who owns filewatcher.com or any other website:
http://whois.domaintasks.com/filewatcher.com