தேர்தல் ஸ்பெஷல்-இன்றைய அரசியல் நிலவரம் - 04-03-2009

04-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் அரசியல் கட்சி அலுவலகங்கள் சுறுசுறுப்பாகிவிட்டன. அக்கட்சிகளின் அலுவலகங்களைவிடவும் அந்த அலுவலகங்களுக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்களும், தேநீர் கடைகளும்தான் மிக, மிக பிஸியாகிவிட்டன.

பத்திரிகைகள் இனி வரும் வாரங்களில் தேர்தல் ஸ்பெஷலாக தனிப் பக்கங்கள் ஒதுக்கவுள்ளன. டிவி சேனல்களில் தனி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும், அரசியல் கருத்து சொல்லும் கோட்டு, சூட்டு ஆசாமிகளை வலைவீசி தேடும் வேட்டையும் நடந்து கொண்டிருக்கிறது.

நாமும் அவர்களுடனேயே பயணிப்போம். நானும் தேர்தல் ஸ்பெஷல் பதிவுகளை எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்..

பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகள், வராத செய்திகள், கழுகாரின் செய்திகள், மியாவ்.. மியாவ்.. செய்திகள், காதில் விழும் செய்திகள் என்று அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி சுண்டக் கஞ்சியாக்கி உங்களுக்குக் கொடுக்கலாம் என்று நினைத்துள்ளேன்..

அந்த வகையில் முதல் பதிவு இது..

தேர்தல் ஸ்பெஷல்-1


தமிழகத்தில் மறு சீரமைப்புக்குப் பின் மாயமான தொகுதிகள்..!

செங்கல்பட்டு
திருப்பத்தூர்
வந்தவாசி
திண்டிவனம்
ராசிபுரம்
திருச்செங்கோடு
கோபிச்செட்டிப்பாளையம்
பழனி
பெரியகுளம்
புதுக்கோட்டை
சிவகாசி
திருச்செந்தூர்
நாகர்கோவில்

தமிழகத்தில் மறு சீரமைப்புக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகள்

திருவள்ளூர்
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
ஆரணி
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
நாமக்கல்
ஈரோடு
திருப்பூர்
தேனி
விருதுநகர்
தூத்துக்குடி
கன்னியாகுமரி

தமிழகத்தில் மறு சீரமைப்புக்குப் பின் மொத்தத் தொகுதிகள்(39)

திருவள்ளூர் (தனி)
வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
பெரும்புதூர்
காஞ்சிபுரம் (தனி)
அரக்கோணம்
வேலூர்
கிருஷ்ணகிரி
தர்மபுரி
திருவண்ணாமலை
ஆரணி
விழுப்புரம் (தனி)
கள்ளக்குறிச்சி
சேலம்
நாமக்கல்
ஈரோடு
திருப்பூர்
நீலகிரி (தனி)
கோவை
பொள்ளாச்சி
திண்டுக்கல்
கரூர்
திருச்சி
பெரம்பலூர்
கடலூர்
சிதம்பரம் (தனி)
மயிலாடுதுறை
நாகப்பட்டினம் (தனி)
தஞ்சை
சிவகங்கை
மதுரை
தேனி
விருதுநகர்
ராமநாதபுரம்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
திருநெல்வேலி
கன்னியாகுமரி

இன்றைய அரசியல் நிலவரம் - 04-03-2009

தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியை முறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பெருவாரியான பிரமுகர்கள் மேலிடப் பார்வையாளரான குலாம்நபிஆசாத்திடம் வற்புறுத்தியுள்ளனர். இன்னொரு பிரிவு தலைவர்கள் தி.மு.க.வுடன் பேசி தொகுதிகளை அதிகமாக பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களோ எக்காரணம் கொண்டும் தி.மு.க.வை விட்டு வெளியேறக்கூடாது என்று ஆசாத்திடம் பொங்கியுள்ளனர். அறையைவிட்டு வெளியில் வந்தவுடன் ஆற்காடு வீராசாமிக்கு யார் முதலில் போன் செய்து சொல்வது என்று இந்த எம்.எல்.ஏ.க்களுக்கிடையில் போட்டா போட்டியும் நடந்ததாம்.

அன்னை சோனியா தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பதில் திட்டவட்டமாக உறுதியாக இருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லையாம்.. விடுதலைச் சிறுத்தைகளை தி.மு.க. கூட்டணியில் வைக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதை திருமாவும் அறிந்தே வைத்திருக்கிறார். கலைஞர் காங்கிரஸை சமாதானப்படுத்திவிட்டுத் தன்னை அழைத்தாலும் தான் செல்வதாக இல்லை என்ற நினைப்பில்தான் திருமாவளவன் உள்ளார். ஆனால் அவரது தம்பிமார்களோ கூட்டணியில் இணைந்து ஒரு சீட்டாவது பெற்றாக வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம்.

இதில் குலாம்நபி ஆசாத் இன்னொரு திருப்பமாக விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைத்துள்ளார். விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்தேறியதாக டெல்லி வட்டாரத் தகவல்.. 7 தொகுதி கேட்டு 5 உறுதியாகியுள்ளதாம். கூடவே ஒரு தொகுதிக்கு '2 சி' என்று தேர்தல் நிதியும் தரப்படுமாம்.. திருமதி விஜயகாந்தின் ராஜதந்திரத்தை மெச்சுகிறார்கள் சாலிகிராமத்தில்..! எங்கண்ணி மாதிரி வருமான்றாங்க..! வராதுதான்..!

20 தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அதில் 5 விஜயகாந்த் கட்சிக்குப் போகும். மீதியில் காங்கிரஸ் போட்டியிடுமாம். இந்த 5 தொகுதி குறைவு நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்குள் புயலைக் கிளப்பப் போகிறது.. தொகுதியும், சீட்டும் கிடைக்காதவர்கள் யார், யார் வேட்டியை உருவப் போகிறார்கள் என்பதை நினைத்தாலே நமக்கு பகீரென்கிறது..

தி.மு.க. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் மார்ச் 25-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. பொதுத் தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமும், தனித் தொகுதிக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டுமாம்.. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால், விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பா.ம.க.வின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்தான்.. இந்த முறை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என்று தனித்து நிற்க வேண்டி வரலாம் என்கிறார்கள். டெல்லி அன்னையிடம் “நான் என்னைக்கும் உங்க பக்கம்தான்” என்று சொல்லிவிட்டு வந்தாலும் தி.மு.க. எத்தனை தொகுதிகளை கொடுக்கும் என்பதில் உறுதியில்லை. தலைவரைச் சுற்றியிருப்பவர்கள் அனைவருமே டாக்டருக்கு பரம விரோதிகளாகிவிட்டனர். நிச்சயம் வர விடமாட்டார்கள் என்றே சொல்லலாம்.

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இல்லாது போனால் 19 தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிடலாம். தேவையெனில் முஸ்லீம்கள் சார்பான ஏதாவது ஒரு கட்சிக்கு சீட்டு கொடுத்து அரவணைக்கலாம்.. 19 தொகுதி என்றால் தி.மு.க.வின் கல்லாப்பெட்டி சீக்கிரமே நிரம்பிவிடும்.. ஆனாலும் லெட்டர்பேடு கட்சிகள், பேனர் கட்சிகளாக டாக்டர் பட்டத்தை இலவசமாக வழங்கிவிட்டு எம்.பி.சீட்டுக்காகக் காத்திருக்கும் ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம் இவர்கள் இருவரையும் சமாளிக்க வேண்டும். கூடவே ராமதாஸை தூங்கவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பு.தா.இளங்கோவை தட்டியெழுப்பி அழைத்து வந்துள்ளார்கள். அவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும்.. என்ன செய்வார் கலைஞர்..? என்னமோ செய்வாருய்யா.. அவருக்கா தெரியாது..!

அ.தி.மு.க.-ம.தி.மு.க. இடையே தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. தரப்பில் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார், தம்பிதுரை அடங்கிய குழுவுடன் திருப்பூர் துரைசாமி, மலர்வண்ணன், புலவர் செவந்தியப்பன், பாலவாக்கம் சோமு, வக்கீல் தேவதாஸ் ஆகியோரைக் கொண்ட ம.தி.மு.க. குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்ற தேர்தலில் ம.தி.மு.க. 4 தொகுதிகளில் வெற்றி கண்டிருந்தது. இந்த முறை அக்கட்சி 7 தொகுதிகளைக் கேட்கிறதாம்..

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசிய லீக், இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும் இருப்பதால் இவர்களும் தொகுதிகளைக் கேட்க பிய்த்து, பிய்த்து கொடுக்க வேண்டியதுதான்..

ஆளாளுக்கு ஒன்றை பேசிக் கொண்டிருக்க.. போயஸ் அம்மா எத்தனை தொகுதி கொடுத்தாலும் மறுபேச்சில்லாமல் வாங்கிக் கொண்டு கப்சிப்பென்று திரும்பிப் போவதைத்தான் அனைத்துத் தலைவர்களும் செய்யப் போகிறார்கள்.

இருப்பது 39. அதில் இரண்டு கம்யூனிஸ்ட்களும் தலா 6 தொகுதிகள் கேட்கின்றன. ம.தி.மு.க. 7, பா.ம.க. வந்தால் அதற்கு ஒரு 10. ஆக இதுவே 23 ஆகிவிடும். பா.ம.க. வரவில்லையெனில் மிச்சமிருக்கும் 26 தொகுதிகளில் 1-ஐ ஏதேனும் ஒரு முஸ்லீம் கட்சிக்கு கொடுத்துவிட்டு, இன்னும் ஒன்றை சுப்பிரமணியம் சுவாமிக்கு வாரி வழங்கிவிட்டு 24-ல் அ.தி.மு.க. போட்டியிடலாம்.. ஆனால் அம்மா என்ன நினைக்கிறாரோ.. அது அந்த அகிலாண்டேஸ்வரிக்கே தெரியாது என்பதால் காத்திருப்போம்..!

(தேர்தல் ஸ்பெஷல் தொடரும்)

20 comments:

ஹாலிவுட் பாலா said...

ஹய்யா.. எங்க ஊரு நாமக்கல்.. இப்ப தொகுதியாயிடுச்சா...! குட்.. குட்..!

தகவலுக்கு நன்றி... தமிழரே..!!!

தமிழ் பிரியன் said...

ரொம்ப நன்றி! தகவல்களுக்கு ! தேர்தல் ஸ்பெஷல்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

Raveendran Chinnasamy said...

Kovilpatti MLA area is now under TUTICORIN MP area which is not going tobe good for either people nor Vaiko .

ஒரு காசு said...

தகவலுக்கு நன்றி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஹாலிவுட் பாலா said...
ஹய்யா.. எங்க ஊரு நாமக்கல்.. இப்ப தொகுதியாயிடுச்சா...! குட்.. குட்..! தகவலுக்கு நன்றி... தமிழரே..!!!//

பாலா ஸார்..

சொந்த ஊர் நாமக்கல்லா..?!

ஏற்கெனவே உங்க ஊர் பேரைக் கெடுக்குறதுக்குன்னே ஒரு அவதாரம் இங்க இருக்கு..!

யாருன்னு தெரியுமில்ல..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தமிழ் பிரியன் said...
ரொம்ப நன்றி! தகவல்களுக்கு ! தேர்தல் ஸ்பெஷல்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.//

அதற்காகத்தான் எழுத நினைத்திருக்கிறேன் தமிழ் ஸார்..

வருகைக்கு நன்றி..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Raveendran Chinnasamy said...
Kovilpatti MLA area is now under TUTICORIN MP area which is not going to be good for either people nor Vaiko.//

புத்தம் புதிய பதிவரே.. வருக.. வருக என இரு கரம் விரித்து வரவேற்கிறேன்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஒரு காசு said...
தகவலுக்கு நன்றி.//

இங்க பார்யா.. புதுசு, புதுசா பதிவர்கள் வர்றாங்க..

காசு ஸார்.. கடையைத் தொறந்தா மட்டும் போதாது.. கொஞ்சம் கல்லாவையும் காட்டணும்.. எழுதுங்க ஸார்.. உங்க திறமை எங்களுக்கும் தெரியணும்ல.. வெறும் பின்னூட்டம் போடுறதுல என்ன தெரியுமாக்கும்..!?

நித்யகுமாரன் said...

அண்ணா,

சரவெடிக்கட்டுரைகளைப் படிக்க ஆர்வமுடன் உள்ளோம். ஆரம்பமே அசத்தல்தான் போங்கோ...

அன்பு நித்யன்

ஆசிப் மீரான் said...

//இங்க பார்யா.. புதுசு, புதுசா பதிவர்கள் வர்றாங்க.//

எத்தனை பேரு வந்தா என்னாங்கண்ணா? நீங்கதான் ஜூப்பர் இஸ்டாரு பதிவர் :-)

Boston Bala said...

தூள்! தொடரவும்.

மடல்காரன்_MadalKaran said...

ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். கலக்குங்க.
அன்புடன், கி.பாலு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//நித்யகுமாரன் said...
அண்ணா, சரவெடிக் கட்டுரைகளைப் படிக்க ஆர்வமுடன் உள்ளோம். ஆரம்பமே அசத்தல்தான் போங்கோ...
அன்பு நித்யன்//

அன்பு நித்யன்.. நான் எழுதுவது இருக்கட்டும்.. நீ என்ன பண்ணப் போற..? வெறும் படிப்பு மட்டும்தானா..?

வாரத்துக்கு ஒண்ணாச்சும் எழுதேன்.. ஏதோ இமயமலைல ஏறுற வேலையிருக்குற மாதிரிதான் ஷோ காட்டுறீங்கப்பா..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ஆசிப் மீரான் said...
//இங்க பார்யா.. புதுசு, புதுசா பதிவர்கள் வர்றாங்க.//

எத்தனை பேரு வந்தா என்னாங்கண்ணா?///

என்னது அண்ணனா.. அண்ணாச்சி.. இப்படில்லாம் காலை வாரக்கூடாது.. சொல்லிப்புட்டேன்..

//நீங்கதான் ஜூப்பர் இஸ்டாரு
பதிவர்:-)//

அப்ப நீங்க ஆரு அண்ணாச்சி..! நாங்க உங்களைத்தான நெனைச்சுக்கிட்டிருக்கோம்..

ஆமா.. அதென்ன வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் வூட்டுக்கு வருவீகளா..? ஏதும் வேண்டுதலாக்கும் இப்படின்னு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Boston Bala said...
தூள்! தொடரவும்.//

நன்றி பாபா..

ஜோ / Joe said...

அண்ணா,
பா.ஜ.க ...பா.ஜ.க -ன்னு ஒரு கட்சி உண்டுல்லா ..என்னாச்சு .

மத்த ஊர்கள்ள எப்படியோ ,எங்க ஊருல அது பெரிய கட்சிங்க ..அதையும் விசாரிச்சு எழுதுங்க

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//மடல்காரன்_MadalKaran said...
ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். கலக்குங்க.
அன்புடன், கி.பாலு//

ஓ.. மடல்காரன் ஸார்.. உங்க பேரு பாலுவா..?

வருகைக்கு நன்றிங்கோ..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//ஜோ / Joe said...
அண்ணா, பா.ஜ.க... பா.ஜ.க-ன்னு ஒரு கட்சி உண்டுல்லா ..என்னாச்சு .
மத்த ஊர்கள்ள எப்படியோ, எங்க ஊருல அது பெரிய கட்சிங்க. அதையும் விசாரிச்சு எழுதுங்க.//

கண்டிப்பா.. எழுதிட்டா போச்சு..

அப்ப உங்க ஊரு தென்காசியா..? கன்னியாகுமரியா..?

ஜோ / Joe said...

//அப்ப உங்க ஊரு தென்காசியா..? கன்னியாகுமரியா..?//

தப்பித்தவறி கூட என் வலைப்பதிவு பக்கம் வந்ததில்லைண்ணு தெரியுது :)

முன்பு நாகர்கோவில் ,இப்போ கன்னியாகுமரி.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///ஜோ / Joe said...
//அப்ப உங்க ஊரு தென்காசியா..? கன்னியாகுமரியா..?//
தப்பித்தவறி கூட என் வலைப்பதிவு பக்கம் வந்ததில்லைண்ணு தெரியுது :)
முன்பு நாகர்கோவில், இப்போ கன்னியாகுமரி.///

ஆஹா.. நானே மாட்டிக்கிட்டேனா..

அது வந்து ஜோ.. நீங்க அதிகமா பதிவு எழுதினதில்லையா..? அதான்.. கோச்சுக்காதீங்க..