வேஷ்டியில் இருக்கிறதா கவுரவம்?

May 30, 2007


என் இனிய வலைத்தமிழ் மக்களே...!


'தமிழர் என்றோர் இனமுண்டு; அவருக்கோர் தனியே குணமுண்டு!' என்று தமிழர் பெருமையைப் பெருமையாகச் சொல்லியே, இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிப் போய்விட்டது.


ஆதி காலத்துத் தமிழன் எப்படியிருந்திருப்பான் என்றெல்லாம் நாம் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை. அந்தந்தக் காலக்கட்டத்திற்கேற்ப பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து தன் காலத்தை முடித்துக் கொண்டிருப்பான்.


இந்தத் தமிழன் எப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்திருப்பான் என்பதெல்லாம் இப்போது கேள்வியல்ல. கலாச்சாரம் என்பதெல்லாம் அந்தந்தக் காலக்கட்டத்தில் மக்களுடைய பயன்பாட்டுப் பொருட்களாக எது இருக்கிறதோ, எது கிடைக்கிறதோ அதை வைத்து அவர்கள் வாழும் வாழ்க்கை, அல்லது வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு தொகுப்புதான் என்று நான் அறிகிறேன்.


இந்தக் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக உடனடியாக பிடிபடுவது உடைகள்தான். "அந்தக் காலத்துல.." என்று 90 வயது முதியவர் ஆரம்பித்தாலும் உடையில்தான் தன் சோகக் கதையை ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து நான் முதலில் பார்த்த உடை வேஷ்டியும், சட்டையும் ஆண்களுக்கு. சேலை, ஜாக்கெட் பெண்களுக்கு. பின்பு சினிமாவில் மட்டும்தான் ஜிகினா உடைகள், பேண்ட் என்றழைக்கப்பட்ட ஆதி காலத்து குழாய் டைப் சராய்கள்..


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனது தந்தை அலுவலகம் புறப்படும்போது மட்டும்தான் பேண்ட் அணிவார். மீதி நேரமெல்லாம் வேஷ்டிதான்.. இந்த வேஷ்டியை எதற்காக அணிகிறார்கள் என்ற ஆராய்ச்சியிலெல்லாம் நான் இறங்கவில்லை. அது பெரியவர்கள் அணியும் ஒரு உடுப்பு என்பதாகத்தான் எனக்குப்பட்டது.


ஆனால் வேஷ்டி தங்களுக்கு வசதியானதுதானா என்று என் தந்தையும், என் அண்ணணும் ஒரு போதும் தங்களுக்குள் பேசியிருந்து நான் பார்த்ததில்லை. அயர்ன் செய்து வைத்திருப்பதை எடுக்கிறார்கள். பிரிக்கிறார்கள். ஒரு தக்கையின் மீது அடிபடுவதுபோல் சப்தம் வரும் அளவுக்கு அதை உதறுவார்கள். இந்த சப்தம் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு மட்டுமல்ல.. என் வீட்டில் அதற்குப் பிறகு வளர்ந்த சிறு குழந்தைகளுக்குக்கூட பிடிக்கும்.


என் அக்காவின் மகன் தவழும் குழந்தையாக இருந்தபோதெல்லாம் என் அண்ணன் வேண்டுமென்றே வேஷ்டியை இரண்டு, மூன்று முறை உதறுவார். பால் குடித்துக் கொண்டிருந்தால்கூட அந்த சப்தம் கேட்டு ஓரக்கண்ணால் திரும்பி என் அண்ணனைப் பார்த்துச் சிரிப்பான். என் அண்ணனுக்கு அப்படியரு பூரிப்பு.. ஒரு குழந்தையை பைசா செலவில்லாமல் சிரிக்க வைத்தோமே என்று..


இந்த வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரமான உடை என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். மெட்ரோபாலிட்டன் சிட்டியைத் தவிர தமிழ்நாட்டின் மற்ற ஊரகப் பகுதிகள், கிராமங்களில் அதிகமானோர் இன்னமும் வேஷ்டியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.


இந்த அரசியல் கட்சிகளால் தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்த ஒரே ஒரு பயன் கட்சிக்காரர்கள் வேஷ்டியை தேசிய உடையைப் போல் அணிய.. இன்றைய தலைமுறையினருக்கு இது எனது அப்பாவின் உடை. தாத்தாவின் உடை என்று நாங்கள் அறிமுகப்படுத்தி வைக்க ஏதுவாக உள்ளது.


இந்தக் கலாச்சார உடைக்கு மாற்றாக நாம் வெளிநாட்டிலிருந்து தருவித்த பேண்ட் என்னும் உடை, தமிழர்களை ராஜாக்கள் போல் காட்டியதோ இல்லையோ.. அந்த மாதிரியான உடை தயாரிப்பவர்களை நிஜமான ராஜாக்களாக மாற்றிவிட்டது.


பேண்ட் ஒரு நவீன மனிதனின் சிம்பல்.. அடையாளம்.. அதை அணிவதுதான் அழகு.. என்றெல்லாம் எழுத்தும், பேச்சும் வர.. இன்னும் தமிழ்நாட்டு மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் மட்டும்தான் அந்த உடையை அணியவில்லை. மற்றபடி சகலமும் இங்கே அதுதான்..


இதை அணிந்தால்தான் மனிதர்.. இல்லையேல் மனிதர் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு ஒரு தரம் தாழ்ந்த நம்பிக்கை, மனித நம்பிக்கையின் ஊற்றாக கருதப்படும் தமிழ்நாட்டிலேயே உருவாகியிருப்பது வருத்தத்திற்குரியது.


சென்னை கிரிக்கெட் கிளப்பில் ஒரு மீட்டிங்கில் பேச சென்ற ஒருவரை, அவர் வேஷ்டி அணிந்து வந்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் கிளப் நிர்வாகிகள். வந்தவரோ கிரிக்கெட் கிளப்பில் வேலை கேட்டு வரவில்லை. அங்கே நடந்த ஒரு கருத்தரங்கில் பேசுவதற்காக வந்த ஒரு பேச்சாளர்தான்.


மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையில் கெளரவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார் நாராயணன் என்பவர். இவர்தான் அந்தப் பிரமுகர். பெயருக்கு முன்னால் சும்மா 'அமெரிக்கா' என்று சேர்த்து 'அமெரிக்கா நாராயணன்' என்று சொன்னால் தமிழக அரசியல் கட்சிக்காரர்கள், அரசியல் நோக்கர்கள் அனைவருக்குமே தெரியும். அந்தளவுக்கு முக்கியமானவர்தான்.


அமெரிக்காவில் படித்து, வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று தாய் நாடு திரும்பி சமுதாயப் பணி செய்யப் போகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாளில் சென்னையில் கால் வைத்தவரை, கட்சிப் பணிக்கு இழுத்து இந்தியப் பிரதமரிடமே நேரிடையாகப் பேசுகின்ற அளவுக்கு இந்த நாராயணனை செல்வாக்கு பெற வைத்தவர் அன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் திரு.கருப்பையா மூப்பனார்தான்.


அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைத்ததில் தற்போதைய மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர் இவர்.


கிராமங்கள்தோறும் கிராமத் தொழில் மையத்தைத் துவக்க தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நாராயணன், அது தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளத்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் இருக்கும் உள்ளரங்கிற்கு வந்துள்ளார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது சென்னை ரோட்டரி கிளப்.


கருத்தரங்கு நாட்டு நலன் சம்பந்தப்பட்டது. பேச வேண்டியவரோ இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க மனிதர். அவர் பேசப் போவதும் நாட்டு நலனின் முன்னேற்றத்திற்காக ஒரு துறையில் வளர்ச்சியை எப்படிப் பெருக்குவது என்பதைப் பற்றியதுதான்.. இதில் வேஷ்டி என்ன பாவம் செய்தது? அதைக் கட்டிக் கொண்டு ஒரு அரங்கத்திற்குள் நுழைவது என்ன பாவப்பட்டச் செயலா?


தில்லி, ராஷ்டிரபதி பவன், அசோகா ஹாலில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய பல தலைவர்களும் இதே வேஷ்டி சட்டையில்தான் அதற்கான பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதில் என்ன அழுக்கு இருக்கிறது? இதில் என்ன கவுரவக் குறைச்சல் இருக்கிறது?


'கிங் மேக்கர்' என்று பெயரெடுத்த கர்மவீரர் காமராஜர் தன் கடைசிக் காலம்வரையிலும் இதே வேஷ்டியில்தான் உலா வந்தார். பீஜிங் விமான நிலையத்தில் அந்த மாமனிதருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தபோது அந்தக் கடும் குளிரிலும் வேஷ்டி அணிந்த அந்த கம்பீர உருவம், நாற்பது தப்படிகள் நடந்து மரியாதையை ஏற்றுக் கொண்டபோது கிடைத்த பெருமை தமிழ்நாட்டுக்குத்தானே..


லால்பகதூர்சாஸ்திரி என்ற பரம பரதேசியான இந்தியப் பிரதமர் ஒருவர் 'பிரதமர்' என்ற பதவிக்கே பெருமை சேர்த்தவர். தாஷ்கண்ட்டில் இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காகச் சென்றவரிடம் இரண்டே இரண்டு வேஷ்டிகள்தான் இருந்தது. ஹோட்டல் அறையில் தினமும் இரவு தன்னுடைய வேஷ்டியை தானே துவைத்து காய வைத்து மறுநாள் அதையே அணிந்து கொண்ட வரலாற்றையும் இந்தியா பார்த்திருக்கிறது..


அன்றைய தினம் நாராயணனால் அந்த நிலைமையில் யாரிடமும் பேச முடியவில்லை. "Naaraaayaaanaan..." என்று ஸ்டைலாக பத்திரிகையாளர்கள் முன்பாகவே அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் செல்லமாக அழைக்கும் அளவுக்குச் செல்வாக்கில் இருந்த இந்த நாராயணன், இன்றைக்கு அந்தக் கருத்தரங்கில் பேசியே தீர வேண்டுமே என்பதற்காக அருகில் இருக்கும் ஒரு கடைக்கு ஓடிப் போய் புதிதாக ரெடிமேட் பேண்ட் ஒன்றை அணிந்து வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிவிட்டு வந்திருக்கிறார்.


பாவம் அவர் என்ன செய்வார்? நாடு முழுவதும் நடக்கும் இந்தக் கருத்தரங்குகள் பற்றிய செய்திகளை வாரந்தோறும் பிரதமருக்கு அனுப்பி வைக்கும் பணி அவருக்குக் காத்திருக்கிறது. கருத்தரங்கில் பேசி முடித்துவிட்டு மறுநாள்தான் இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.


அந்த கிளப் நிர்வாகியோ இதற்கு சமயோசிதமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். "எங்களுக்கு முன்னால் இருந்த நிர்வாகிகள் இந்த விதிமுறையை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் அதனை நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம்.." என்று.. ஏன் அந்த நிர்வாகியின் பெயரைக் கொண்டவர்கள் யாரும் அங்கே பணியாற்றக் கூடாது என்று ஒரு நிபந்தனையை விதித்திருந்தால், இந்த நபர் சும்மா விட்டிருப்பாரா?


அப்படியென்ன அந்த வேஷ்டியில் ஒரு கறையைக் கண்டார்கள் இந்தக் கயவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை. கருத்தரங்கம் ஏற்பாடு செய்வதே பேசுவதற்காகத்தான்.. யார், யார் எந்த மாதிரி உடையில் வருகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக யாரும் அங்கே வரப் போவதுமில்லை. பிறகென்ன?


இந்த கிளப் நிர்வாகிகள் பலரும் வெளிநாடுகளில் சென்று படித்து முடித்துவிட்டு இந்தியாவிற்கு ஓய்வெடுப்பதற்காக வந்தவர்கள். வீட்டில் ஓய்வெடுப்பது போதாது என்று இது மாதிரியான கிளப்பிற்கும் வந்து ஓய்வெடுக்கிறார்கள். இவர்களது பார்வையில் வேஷ்டி கட்டிய ஒருவன் கிராமத்தான், பட்டியான், முட்டாள், அருவெருக்கத்தக்கவன் என்பதுதான்..


இப்படியரு முட்டாள்தனமான விதிமுறை இன்றோ, நேற்றோ இவர்கள் வைத்திருக்கவில்லை. ஏற்கெனவே இதேபோல் இதே கிளப்பிற்கு ஒரு மீட்டிங்கிற்கு வந்த இந்தியத் திருநாட்டின் ஒரு முக்கியப் பிரமுகரை அனுமதிக்க மறுத்து சர்ச்சையைக் கிளப்பினார்கள். அவர் யார் தெரியுமா?


இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி, மூதறிஞர் ராஜாஜியின் சீடர், கர்ம வீரர் காமராஜரின் அமைச்சரவையில் விவசாயத் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மத்தியில் பண்டித நேரு அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவர், இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய புண்ணியவான், ஹிந்தி மொழி பிரச்சினைக்காக தன் மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்த தூயவர், மகாராஷ்டிர மாநில கவர்னராக பதவி வகித்தவர், எல்லாவற்றிற்கும் மேலாக 'பாரதரத்னா' விருதையும் பெற்றவர். அவர் அமரர் திரு.சி.சுப்ரமணியம்.அப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் சொன்ன பதில், "இது எங்களது கிளப்பின் விதிமுறைகளுக்கு முரணானது.." அவ்வளவுதான் சிம்பிளான பதில். அப்போது ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு சி.எஸ். என்றழைக்கப்படும் இந்தப் பெரியவர் மீது கிண்டல் எழுப்ப ஒரு சமயமும், காரணமும் கிடைத்ததால் அதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அலட்சியப்படுத்தினார்கள்.


இந்த கிளப் இப்போதும் சொசைட்டிஸ் ஆக்ட்டின்கீழ் செயல்படும் ஒரு அமைப்புதான். சொஸைட்டிஸ் ஆக்ட்டின் கீழ் செயல்படும் அமைப்புகளின் விதிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கும், மக்கள் பொது நலனுக்கும் விரோதமாக இருந்தால் அந்த அமைப்பைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்போதே அந்த வேலையைச் செய்திருந்தால் இந்த உயர்குடி கனவான்கள் இப்படி ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்திருக்க மாட்டார்கள்.


ஆனால் யார் கேட்பது? அங்கே உறுப்பினர்களாக இருப்பவர்களெல்லாம் ஆட்சியாளர்களின் 'கற்பகத்தரு'க்கள்.. பெரும் செல்வந்தர்கள். தமிழ்நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியப் புள்ளிகள். எப்போது வேண்டுமானாலும் எந்தக் கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாரி, வாரி நன்கொடை வழங்கும் பழக்கமுள்ள எட்டப்பர்கள். எந்தக் கட்சிக்காரர்கள் அவர்களைப் பகைத்துக் கொள்வார்கள்? சொல்லுங்கள்..


அவர்களும் சாமான்யப்பட்டவர்களல்ல.. அரசியல்வாதிகளை அழைப்பதாக இருந்தால் வேஷ்டியுடன்தான் வருவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு விழா வைத்து நடத்தி முடித்தி அனுப்பிவிடுவார்கள். அல்லது அலுவலக வாசலில் ஒரு மேடை போட்டு நடத்தி முடித்து வணக்கம் போட்டுவிடுவார்கள். தப்பித்தவறிக்கூட உள்ளேயிருக்கும் உள்ளரங்கில் மட்டும் மீட்டிங் வைக்கவிட மாட்டார்கள். அந்தளவிற்கு தங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இன்றுவரை நீடித்து வருகிறார்கள்.


அந்த வேஷ்டி உடை என்ன அவ்வளவு மோசமானதா? எதற்காக அவர்கள் வேஷ்டி அணிந்து உள்ளே வரக்கூடாது என்கிறார்கள் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே தெரியவில்லை. இன்றுவரை அந்த ரகசியத்தை அவர்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்கள். யார் கேட்பது..?


வேஷ்டி என்பது தமிழர்களின் கலாச்சார உடை. அதை அணிவதுதான் தமிழர்களின் கடமை என்று நான் சொல்லவில்லை. விருப்பம் இருப்பவர்கள் அணியலாம். அசெளகரியமாக இருப்பவர்கள் அணியாமலும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம்.


ஆனால் பொது விழாக்களுக்கு வரும்போது வேஷ்டி அணிந்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் ஒரு இடத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று சொல்வது தென்னாப்பிரிக்காவில் 'இங்கே இந்தியர்கள், கருப்பர்களைத் தவிர மற்றவர்கள் நுழையலாம்' என்று போர்டு எழுதி மாட்டி இனவெறியைக் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டார்களே, அந்தக் கொடுமைக்குச் சமமானது.


இப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் வெளியில் சொல்கிறார்கள். "எங்களிடம் மட்டும் இந்த அரசியல்வாதிகள் விளையாட முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே எங்களது பாக்கெட்டில்தான் இருக்கிறார்கள்.." என்று..


மதுரை அருகே புகைவண்டியில் சென்று கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர், இந்த வேஷ்டிகூட இல்லாமல் கோவணத்தைக் கட்டிக் கொண்டு வயலில் உழுது கொண்டிருந்த ஒரு தமிழனைப் பார்த்துத்தான் தன் கோலத்தையும் மாற்றிக் கொண்டு 'மகாத்மா' என்று பெயரெடுத்தது இந்த உயர்குடி கனவான்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.


வேறென்ன சொல்வது...?

29 comments:

மருதநாயகம் said...

எனக்கு வேட்டி அணிவதற்கு எப்போதுமே விருப்பம் தான். ஆனால் வேலை சூழ்நிலை அதற்கு அனுமதிப்பது இல்லை. அலுவலகங்களில் பெண்கள் எல்லாம் சுரிதாரும் சேலையும் அணிந்து வரும்போது ஆண்கள் வேட்டி கட்டினால் என்ன தவறு என்று எண்ணுவேன். ஒரு வேளை வேட்டியிலும் பெல்ட் கட்டுவதற்கு லூப் மற்றும் பேண்ட் போல் ஜிப் என்று மாற்றம் அடைந்தால் நாகரீக மனிதர்களும் அணிவார்களோ என்ற அல்ப ஆசை எனக்கு உண்டு

துளசி கோபால் said...

என்ன ஒரு அகங்காரம்? தேசிய உடைன்னு சொன்னாலும் உள்ளே போகமுடியாதாமா?

இங்கே ட்ரெஸ் கோட் இருக்குதான். ஆனால் நம்ம பாரம்பரிய உடைன்னு சொன்னால் வாயை மூடிக்கிட்டு வழி விடுவாங்க. ஒருத்தரோட கலாச்சாரத்தை மதிக்காத பரதேசிப்பசங்க போல இருக்கு அந்தக் கிளப் ஆளுங்க(-:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

குஸ்பூ கொழுத்திபோட்ட "கற்பு" வெடிக்கு காவடி ஆடிய அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் காலம் காலமாய் நடந்துவரும் இந்த கொடுமைக்கு ஒன்றும் செய்வதில்லை.

ஆம் இது காலம் காலமாய்தான் நடந்து வருகிறது.ஜிம்கானா கிளப்பிலும் இப்படித்தான்.
**
முட்டாள்கள். ஒரு காலத்தில் வெள்ளையனைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட இவர்கள் இன்னும் அப்படியே அலைவதுதான் நாகரிகம் என்று நினைக்கின்றனர்.
**
வேட்டி அணிவது அவரவர் விருப்பம். ஆனால் ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் அணிந்ததை கேவலப் படுத்துவது கொடுமை.
**
மேல்மட்ட பகட்டு வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. அது தமிழகத்தில் இருக்கும் ஒரு தனி நாடு. எந்த கட்சிகளாலும் இந்த தனி இனத்தை தமிழகத்தோடு சேர்க்க முடியாது.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//ஒருத்தரோட கலாச்சாரத்தை மதிக்காத பரதேசிப்பசங்க போல இருக்கு அந்தக் கிளப் ஆளுங்க(-:
//

துளசி அக்காவுக்கே கோபம் வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் :-))

துளசிக்கா,
இப்படி பரதேசிக் கூட்டம் தமிழ்நாடுபூரா இருக்கு.பல வெட்டி கிளப்புகளில் கோட்டு போட்டாத்தான் மரியாதை.

வேட்டி said...

நீயெல்லாம் எங்கள பத்தி எழுதி எங்க மானத்த வாங்காதயா ..

புடவை said...

வேட்டி இந்த வெட்டி ஏதோ எழுதுறான்னு கோச்சுக்காத..இது லூசு..

மாசிலா said...

மருதநாயகம் //ஒரு வேளை வேட்டியிலும் பெல்ட் கட்டுவதற்கு லூப் மற்றும் பேண்ட் போல் ஜிப் என்று மாற்றம் அடைந்தால் நாகரீக மனிதர்களும் அணிவார்களோ என்ற அல்ப ஆசை எனக்கு உண்டு// அதுக்கு பதில் வெள்ளை பாவாடைய
கட்டிக்கீங்களேன். அதில் ஏற்கனவே நாடா இருக்குல்ல?
:-)

வேஷ்டியும் கவுரவமும் said...

நீயெல்லாம் தமிழனா ..தமிழ்ல எழுதுய்ய்யா மொதல்ல..வேஷ்டிக்கு தமிழ் ல இன்னான்னு யார்கிட்டயாவது கேட்டுட்டு பதிவு போடு

Hariharan # 03985177737685368452 said...

2007ல் இன்றளவுக்கும் தினசரியாக பெரும்பான்மையாக வீட்டில் இருக்கும் போது மட்டும் வேஷ்டியை உடையாக அணிபவன் அடியேன்.

இங்கே வேட்டி கட்டியதால் உள்ளே விடமுடியாது என்பது அருவருப்பான அடிமைத்தன சிந்தையால் விளைந்த ஒரு விதி முறையைக் கொண்ட ஒரு அமைப்பின் அரங்கில் "கிராமப்புற அபிவிருத்திக்காகத்" தொழில்தொடங்க தொழிலதிபர்களிடம் கலந்துரையாடும் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது கிராமப்புற அபிவிருத்தி எவ்வளவுக்கு உண்மையில் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

முதலில் இந்த முட்டாள்தனமான அபத்தமான அடிமைத்தன விதிகளை நிர்வாகிகளான ஆங்கிலேய அடிமைகள் நீக்கும்படி செய்ய ஆவன வேண்டும்.

மற்ற படி வேட்டி என்பது இன்றைக்கு 90% அரசியல்வா(ந்)திகளின் உடை என்பது நிதர்சனம். இந்த மாதிரி கிளப்புகள் என்பவை சராசரித் தமிழன் போகும் இடங்கள் இல்லை.
இங்கே நடந்த வேட்டி உடை அவமானப்படுத்தப்பட்டது என்பதை ஒரு அரசியல்வா(ந்)தியின் உடை நிராகரிக்கப்பட்டதாகவே காண்கிறேன்!

சாமனியத் தமிழன் உள்ளாடையாக தன் இடுப்பு அரைஞாண் கொடியில் கோவணத்தை இறுக்கிக் கட்டிப் பின் மேலே வேஷ்டி அணிந்த காலம் இன்றைக்கு டான் டெக்ஸ்/வைகிங் என்று பரிணாம வளர்ச்சி அடைந்ததை தமிழனின் கோவணப்பாரம்பரியத்துக்கு அவமானம் என்று கூச்சல் போடுவது காலவிரயம்.

நமது பாரம்பரியம் இல்லாத சட்டை எனும் உடையை வேட்டியோடு உடுத்தும் "பேஷன் ப்யூஷன்" என்பதை ஏற்றுக்கொண்டது தமிழ்ப் பாரம்பரியத்துக்கு நேர்ந்த 50% அவமானமா?

எழுதுவதற்கு தமிழனின் பாரம்பரியமான தென்னை /பனை ஓலைச்சுவடிய்க்கு பதிலாகக் கையேட்டுப்புத்தகமும், மைக்கூடு, மயிலிறகு எழுதுகோலுக்குப் பதிலாக ரேனால்டு /பார்க்கர்/ஹீரோ/பைலட் பேனா பயன்படுத்தும் தமிழன் தன் முன்னோர் வாழ்ந்து காட்டிய தமிழ்ப் பாரம்பரியத்தின் எதிரியா?

வடுவூர் குமார் said...

இங்கு (சிங்கையில்) கோவிலுக்கு வேஷ்டி கட்டிக்கொண்டு போனால்..நம் மக்களே ஒரு மாதிரித்தான் பார்க்கிறார்கள்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//மருதநாயகம் said...
எனக்கு வேட்டி அணிவதற்கு எப்போதுமே விருப்பம் தான். ஆனால் வேலை சூழ்நிலை அதற்கு அனுமதிப்பது இல்லை. அலுவலகங்களில் பெண்கள் எல்லாம் சுரிதாரும் சேலையும் அணிந்து வரும்போது ஆண்கள் வேட்டி கட்டினால் என்ன தவறு என்று எண்ணுவேன். ஒரு வேளை வேட்டியிலும் பெல்ட் கட்டுவதற்கு லூப் மற்றும் பேண்ட் போல் ஜிப் என்று மாற்றம் அடைந்தால் நாகரீக மனிதர்களும் அணிவார்களோ என்ற அல்ப ஆசை எனக்கு உண்டு//

உண்மைதான் மருதா ஸார்..

வேட்டியை பலரும் அணியாமல் தவிர்ப்பதற்குக் காரணம் இந்தக் காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் நடந்து கொள்வதற்கு அசெளகரியமாக இருப்பதுதான். வேறு ஒன்றுமில்லை.

ஆனால் அதை அணிவதால் ஏற்படும் தோரணை மிடுக்கு வேறு எதிலும் வராது என்பது எனது கருத்து.. தங்களது வருகைக்கு மிக்க நன்றி மருதா ஸார்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//துளசி கோபால் said...
என்ன ஒரு அகங்காரம்? தேசிய உடைன்னு சொன்னாலும் உள்ளே போகமுடியாதாமா?
இங்கே ட்ரெஸ் கோட் இருக்குதான். ஆனால் நம்ம பாரம்பரிய உடைன்னு சொன்னால் வாயை மூடிக்கிட்டு வழி விடுவாங்க. ஒருத்தரோட கலாச்சாரத்தை மதிக்காத பரதேசிப்பசங்க போல இருக்கு அந்தக் கிளப் ஆளுங்க(-://

அப்பா.. டீச்சருக்கு எம்புட்டு கோவம்? பாருங்க டீச்சர்.. இந்த கிளப் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப். அதில் அங்கத்தினர்களாக இருப்பவர்கள் அனைவருமே இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். உதாரணம் ஏ.சி.முத்தையா, இந்தியா சிமெண்ட் அதிபர் சீனிவாசன்..

இப்படி.. இவர்கள் பெயரைச் சொன்னாலே வேறு யாரும் இதைப் பற்றி பேசவே மறுக்கிறார்கள். இதுதான் உண்மை.

என்ன செய்வது? அந்தப் பெரியவருக்கு அப்போது நடந்த கொடுமையின்போதே பொங்கி எழுந்திருக்கலாம். ஆனால் மாட்டார்கள். எல்லாம் துட்டு செய்ற வேலை..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
குஸ்பூ கொழுத்திபோட்ட "கற்பு" வெடிக்கு காவடி ஆடிய அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் காலம் காலமாய் நடந்துவரும் இந்த கொடுமைக்கு ஒன்றும் செய்வதில்லை.
ஆம் இது காலம் காலமாய்தான் நடந்து வருகிறது.ஜிம்கானா கிளப்பிலும் இப்படித்தான்.
முட்டாள்கள். ஒரு காலத்தில் வெள்ளையனைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட இவர்கள் இன்னும் அப்படியே அலைவதுதான் நாகரிகம் என்று நினைக்கின்றனர்.
வேட்டி அணிவது அவரவர் விருப்பம். ஆனால் ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் அணிந்ததை கேவலப் படுத்துவது கொடுமை.
மேல்மட்ட பகட்டு வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. அது தமிழகத்தில் இருக்கும் ஒரு தனி நாடு. எந்த கட்சிகளாலும் இந்த தனி இனத்தை தமிழகத்தோடு சேர்க்க முடியாது.//

பலூன் மாமா.. கரெக்ட்டா சொன்னீங்க..

ஜிம்கானா கிளப்புலேயும் இதே கதைதான். அங்கே மெம்பரா ஆகும்போதே ஒரு பேப்பர்ல கையெழுத்து வாங்கிடறாங்க.. வேஷ்டி அணிந்து வர மாட்டேன்னு.. அதுக்கும் சேர்த்து கையெழுத்துப் போடுறாங்கன்னா அவுங்க எப்படிப்பட்ட அறிவுஜீவிகள்ன்னு பாருங்க..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
துளசிக்கா, இப்படி பரதேசிக் கூட்டம் தமிழ்நாடு பூரா இருக்கு.பல வெட்டி கிளப்புகளில் கோட்டு போட்டாத்தான் மரியாதை.///

இதுதான் தமிழ்நாடு..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

///மாசிலா said...
மருதநாயகம் //ஒரு வேளை வேட்டியிலும் பெல்ட் கட்டுவதற்கு லூப் மற்றும் பேண்ட் போல் ஜிப் என்று மாற்றம் அடைந்தால் நாகரீக மனிதர்களும் அணிவார்களோ என்ற அல்ப ஆசை எனக்கு உண்டு//
அதுக்கு பதில் வெள்ளை பாவாடைய கட்டிக்கீங்களேன். அதில் ஏற்கனவே நாடா இருக்குல்ல?///

மாசிலா என்ன பதில் இது? போன பதிவு ஒன்றிலும் நீங்கள் இப்படித்தான் மோசமாக கமெண்ட் செய்தீர்கள். என்னுடைய பதிவில் நீங்கள் இப்படி கமெண்ட் செய்தால் அடுத்த முறை அவர் வருவரா? யாருக்கு போடுகிறோம்.. என்ன போடுகிறோம் என்பதை ஒரு முறைக்கு, இரு முறை படித்துப் பார்த்துவிட்டு பிறகு பைனல் செய்யுங்கள்.. இதை நான் வெளியிடாமல் தடுத்திருக்கலாம். ஆனால் உங்களைக் கண்டிக்க முடியாதே. அதனால்தான் வெளியிட்டேன்..

மருதா ஸார்.. எனக்காக மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//Hariharan # 03985177737685368452 said...
இங்கே வேட்டி கட்டியதால் உள்ளே விடமுடியாது என்பது அருவருப்பான அடிமைத்தன சிந்தையால் விளைந்த ஒரு விதி முறையைக் கொண்ட ஒரு அமைப்பின் அரங்கில் "கிராமப்புற அபிவிருத்திக்காகத்" தொழில்தொடங்க தொழிலதிபர்களிடம் கலந்துரையாடும் கருத்தரங்கை ஏற்பாடு செய்தது கிராமப்புற அபிவிருத்தி எவ்வளவுக்கு உண்மையில் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.//

ஹரிஹரன் ஸார்.. நிகழ்ச்சியை நடத்தியது சென்னை ரோட்டரி சங்கம். அந்தச் சங்கத்தினருக்கே அப்போதுதான்இ இந்த விஷயமே தெரியும் என்கிறார்கள். அவர்களின் செயலாளரும் வந்து வாயில்காப்போரிடம் இவர் யார் என்று விளக்கியுள்ளார். அவருக்கும் இதே பதில்தான் சொல்லப்பட்டதாம். தொழிலதிபர்கள் பலரையும் அழைத்திருந்ததால் அவர்களெல்லாம் கண்டிப்பாக கனவான்கள் போல் இருப்பார்கள் என்பதால்தான் அங்கு கூட்டம் நடத்த அனுமதி தரப்பட்டதாம்.

//நமது பாரம்பரியம் இல்லாத சட்டை எனும் உடையை வேட்டியோடு உடுத்தும் "பேஷன் ப்யூஷன்" என்பதை ஏற்றுக்கொண்டது தமிழ்ப் பாரம்பரியத்துக்கு நேர்ந்த 50% அவமானமா?
எழுதுவதற்கு தமிழனின் பாரம்பரியமான தென்னை /பனை ஓலைச்சுவடிய்க்கு பதிலாகக் கையேட்டுப்புத்தகமும், மைக்கூடு, மயிலிறகு எழுதுகோலுக்குப் பதிலாக ரேனால்டு /பார்க்கர்/ஹீரோ/பைலட் பேனா பயன்படுத்தும் தமிழன் தன் முன்னோர் வாழ்ந்து காட்டிய தமிழ்ப் பாரம்பரியத்தின் எதிரியா?//

நான் அப்படி நினைக்கவில்லை. காலத்தோடு நாமளும் ஒத்துப் போய்தான் தீர வேண்டும். நமக்காக காலம் ஒரு போதும் காத்திருக்காதே.. வேறு வழியில்லையே ஸார்.. பாரம்பரியம் என்ற பெயரிலோ, கலாச்சாரம் என்ற பெயரிலோ இதை நாம் ஒதுக்கினால் நாம்தானே ஒதுக்கப்பட்டுவிடுவோம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//வடுவூர் குமார் said...
இங்கு (சிங்கையில்) கோவிலுக்கு வேஷ்டி கட்டிக்கொண்டு போனால்..நம் மக்களே ஒரு மாதிரித்தான் பார்க்கிறார்கள்.//

எளிதாக அனைத்தும் கிடைக்கப் பெற்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் குமார் ஸார்.. விடுங்கள்.. பாடையில் போகும்போதுதானே தெரியும் எந்த உடையில் படுக்க வைத்திருக்கிறார்கள் என்று.. தங்களது வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி குமார் ஸார்..

siva gnanamji(#18100882083107547329) said...

sசென்னை ஜிம்கானா கிளப்பிலும்
இவ்விதி பின்பற்றப்படுகின்றது...
ஒருமுறை வேட்டியில் இருந்த என்னை அனுமதிக்க மறுத்தார்கள்.
கிளப் பணியாளர், ஒரு ஸ்பேர் பேண்ட்டைக் கொண்டு வந்து "இதை அணிந்து வாருங்கள்"என்றார்.நான் நாகரீகமாக மறுத்துவிட்டு வெளியேறினேன்...
என்னவொரு அடிமைச் சிந்தனை!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//siva gnanamji(#18100882083107547329) said...
சென்னை ஜிம்கானா கிளப்பிலும் இவ்விதி பின்பற்றப்படுகின்றது... ஒருமுறை வேட்டியில் இருந்த என்னை அனுமதிக்க மறுத்தார்கள். கிளப் பணியாளர், ஒரு ஸ்பேர் பேண்ட்டைக் கொண்டு வந்து "இதை அணிந்து வாருங்கள்"என்றார்.நான் நாகரீகமாக மறுத்துவிட்டு வெளியேறினேன்... என்னவொரு அடிமைச் சிந்தனை!//

வாங்கி சிவஜானம்ஜி.. வணக்கம்.. நீங்கள் சொல்வது போல் இது ஒரு அடிமைச் சிந்தனைதான்.. சந்தேகமே இல்லை. இந்தச் சிந்தனையை உலாவ விடுவது யார் என்று பார்த்தீர்களானால் கண்டிப்பாக நமது அரசியல்வாதிகள்தான்.. அங்கே உறுப்பினர்களாக இருப்பவர்களில் முக்கால்வாசி பேர் அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள்தான்.. எங்கே யாரிடம் போய் இதை முறையிடுவது சொல்லுங்கள்..

செந்தழல் ரவி said...

உண்மைத்தமிழா நீர் பெரிய ஆளுதாம் வே...

எங்க துளசி டீச்சரே டெங்ஷன் ஆகுற மாதிரி ஒரு வேட்டிப்பதிவு ச்ச்ச் போட்டிப்பதிவு எழுதிட்டீரே...

எதை எழுதினாலும் எழு பக்கத்துக்கு குறையாமல் எழுதனும்னு "உள்ளேன் அய்யா" காலத்து வாத்தியார் சொல்லிக்குடுத்தாரா ?

கை நோவப்போவுது...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
உண்மைத்தமிழா நீர் பெரிய ஆளுதாம் வே... எங்க துளசி டீச்சரே டெங்ஷன் ஆகுற மாதிரி ஒரு வேட்டிப்பதிவு ச்ச்ச் போட்டிப்பதிவு எழுதிட்டீரே... எதை எழுதினாலும் எழு பக்கத்துக்கு குறையாமல் எழுதனும்னு "உள்ளேன் அய்யா" காலத்து வாத்தியார் சொல்லிக் குடுத்தாரா ? கை நோவப ்போவுது...//

செந்தழல் தம்பி.. செளக்கியமா? பெங்களூரு எப்படி இருக்கு..?

அதென்ன 'எங்க துளசி டீச்சர்'..? எங்களுக்கும் அவுகதான் டீச்சராக்கும்..

இது ஒண்ணால மட்டும் அவுக டென்ஷனாகலே.. இதுக்கு முந்தின பதிவாலதான்(என் சாவைத் தடுக்க இவர்கள் யார்?) என் மேல கோபமாயிட்டாங்க. அந்தக் கோபம்தானாக்கும் இது..

ஏழு பக்கமெல்லாம் இல்ல தம்பி.. சும்மா எட்டரை பக்கம்தான்.. font-ஐ குறைச்சா 5 பக்கம் வந்திருக்கும்.. அம்புட்டுத்தான்.

அக்கறையா கையைப் பத்தி விசாரிச்சதுக்கும், பதிவைப் பத்தி ஒண்ணுமே சொல்லாமப் போனதுக்கும் மிக்க நன்றி ரவி..
வாழ்க வளமுடன்

சிங்கம்லே ACE !! said...

இதுவாச்சம் பேண்ட் போட்டவன் பெரியவன்ற ஒரு தெனாவட்டு திமிர்ல பண்றது.. இதுல என்ன ஒரு அல்ப சந்தோஷமோ அவங்களுக்கு?? இத தப்பில்லையான்னு கேட்டா professionalismனு நீட்டி முழக்கி பேசுவாங்க..

ஒரு தடவை வேட்டி அணிந்து வந்தேன்னு என்னை கல்லூரியில இருந்து வெளியேற்றி விட்டாங்க.. கல்லூரிக்கு வேட்டியில் வந்தால் என்ன தப்பு??

இதுல கொடுமை கல்லூரியோட சேர்மேன், ஒரு அரசியல்வியாதி, அவர் மட்டும் வேட்டி அணிந்து வருவாராம்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//சிங்கம்லே ACE !! said...
இதுவாச்சம் பேண்ட் போட்டவன் பெரியவன்ற ஒரு தெனாவட்டு திமிர்ல பண்றது.. இதுல என்ன ஒரு அல்ப சந்தோஷமோ அவங்களுக்கு?? இத தப்பில்லையான்னு கேட்டா professionalismனு நீட்டி முழக்கி பேசுவாங்க..
ஒரு தடவை வேட்டி அணிந்து வந்தேன்னு என்னை கல்லூரியில இருந்து வெளியேற்றி விட்டாங்க.. கல்லூரிக்கு வேட்டியில் வந்தால் என்ன தப்பு??
இதுல கொடுமை கல்லூரியோட சேர்மேன், ஒரு அரசியல்வியாதி, அவர் மட்டும் வேட்டி அணிந்து வருவாராம்..//

சிங்கம்லே ஸார்..

உங்களுக்கும் இதே கொடுமையா?

இந்தத் தெனாவெட்டும், திமிரும் யார் என்னைய என்ன பண்ண முடியும்.. என்கிட்டதான் பணம் இருக்கேன்ற எண்ணத்துல உருவாகுவதுதான். இங்க பணம்தானே மனிதர்களின் தரத்தை நிர்ணயம் செய்கிறது..

அந்த அரசியல்வாதி நீங்களே எழுதியிருப்பதைப் போல 'அரசியல் வியாதி'தான்.. சந்தேகமேயில்லை.

தங்களுடைய வருகைக்கு நன்றிகள் சிங்கம் ஸார்..

செந்தழல் ரவி said...

என்னாது ஏழு பக்கமா ?.....சரி இப்போ ஒரு சோதனை வெக்குறேன் உமக்கு...

ஒரே ஒரு லைனில் பதிவு போடனும்....

அப்படி போட்டால் ஜூன் மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று என் சாண்ட்ரோவில் ஏற்றி உம்மை திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி காட்டுகிறேன்.....

சவாலை ஏற்றுக்கொள்கிறீறா ?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//செந்தழல் ரவி said...
என்னாது ஏழு பக்கமா ?.....சரி இப்போ ஒரு சோதனை வெக்குறேன் உமக்கு... ஒரே ஒரு லைனில் பதிவு போடனும்.... அப்படி போட்டால் ஜூன் மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று என் சாண்ட்ரோவில் ஏற்றி உம்மை திருவண்ணாமலை கிரிவலம் சுற்றி காட்டுகிறேன்..... சவாலை ஏற்றுக்கொள்கிறீறா..?//

அப்பா.. இந்தப் பயபுள்ளைகளுக்கு எதுக்குத்தான் கோவம் வருதுன்னு தெரியல. முருகா இநீதான் இந்தப் பச்சைப் புள்ளையைக் காப்பாத்தணும்..

ஒரேயரு லைன்ல பதிவு போடணுமாம்.. போட்டா யார் பேச்சு வாங்குறது? கும்மியடிச்சே தீர்த்திருவாக..

சரி. ஒரு லைன்ல என்ன மேட்டர் போடுறது? யோசிக்கிறேன் தம்பி.. யோசிக்கிறேன். ஆனா நீ இதைப் படிச்சிட்டு நானும் யோசிக்கிறேன்னு 'வெண்குழல்' பத்த வைக்கப் போயிராத செந்தழலு..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"வேட்டி கட்டினால் ஒதுக்கி வைத்தல்"
"பாடசாலையில் தமிழில் பேசினால் அபராதம்"
இதெல்லாம் தமிழகத்தில் மாத்திரமே ! நடக்கும்..
என்ன? கறுமமையா....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
"வேட்டி கட்டினால் ஒதுக்கி வைத்தல்"
"பாடசாலையில் தமிழில் பேசினால் அபராதம்"
இதெல்லாம் தமிழகத்தில் மாத்திரமே ! நடக்கும்..
என்ன? கறுமமையா....//

யோகன் ஸார்.. கருமம்தான்.. ஆனால் எங்களுக்குப் பழகிவிட்டது. இங்கே யாருமே கொள்கை ரீதியாக ஆட்சி நடத்தவில்லை. அரசியலும் நடத்தவில்லை. எல்லாமே தனிமனித விரோதங்களுக்காகவே.. ஆக இது போன்ற முரண்பாடுகளை மக்களிடையேயும் அரசியல்வாதிகள் புகுத்திவிட்டதால்தான் இந்த நிலைமை.

இந்த வேஷ்டி மேட்டரையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆட்சியாளர்கள் நினைத்தால் ஒரே நாளில் அதன் ஆக்ட்டிவிட்டீஸை நிறுத்தி சொஸைட்டி.யை கலைப்பதாகச் சொல்லி உத்தரவிடலாம். கிளப் நிர்வாகிகள் தானாகவே வழிக்கு வருவார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். தேர்தலுக்குத் தேர்தல் டொனேஷனை அள்ளிக் கொடுப்பது அவர்கள்தானே.. இப்போது அரசியல்வாதிகளுக்கு யார் முக்கியம்? நாடா? டொனேஷனா..? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

தென்றல் said...

நியாயமான கோபம்தான்ங்க, உண்மைத் தமிழன்! இந்த பதிவையும், மறுமொழிகளையும் அவுங்களுக்கு ஏன் அனுப்பி வைக்ககூடாது..;)?


/செந்தழல் ரவி said...
சவாலை ஏற்றுக்கொள்கிறீறா..?/

செந்தழல் ரவி, இந்த சவாலை உண்மைத் தமிழன் ஏத்துக்கிட்டா உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்....

abeer ahmed said...

See who owns cosmeticsdatabase.com or any other website:
http://whois.domaintasks.com/cosmeticsdatabase.com