சொந்தமும், பந்தமும்

வரதன் படு டென்ஷனில் இருக்கிறான். காரணம், ஊரில் இருந்து அவனது தம்பி தண்டபாணி வந்திருக்கிறான். வந்தவன் சும்மா வரவில்லை. தனது லைன்மேன் லைசென்ஸ் எடுப்பதற்காக பணம் கேட்டு வந்திருக்கிறான். மனைவி புவனாவுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருக்க.. பணத்தைக் கொடுத்து அனுப்பும்படி சொல்கிறாள். வரதனுக்கோ “இன்னும் எவ்ளோதான் இவனுகளுக்கெல்லாம் அழுகுறது?” என்று கத்துகிறான்.

பிள்ளைகள் ராஜாவும், சித்ராவும் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். புது வருடம்.. இருவரும் 4, 6 வகுப்புகளுக்குத் தாவியிருக்கிறார்கள். நேற்று இரவே நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக் கொடுத்தான் வரதன். அதில் பாதிதான் போட முடிந்தது. அதற்குள் தம்பியைப் பார்த்த டென்ஷனில் எழுந்து வெளியே போய்விட்டான் வரதன்.

ராஜா இன்னும் போடாமல் இருக்கும் புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று கத்துகிறான். சித்ராவும் “எனக்கும் அதே மாதிரி போட்டுக்கொடுங்க.. இல்லேன்னா மிஸ் அடிப்பாங்க..” என்று கண்ணைக் கசக்குகிறாள். வரதன் இருக்கின்ற நிலைமைக்கு அவனால் முடியவில்லை. “முடிஞ்சா நீயே போட்டுக் கொடுடி” என்று மனைவியையே திட்டுகிறான். “நான் அடுப்பு வேலைய பார்ப்பேனா.. இதை பார்ப்பேனா?” என்று திட்ட வரதன் கோபித்துக் கொண்டு வெளியே செல்கிறான்.

“கோபத்தைப் பாரு.. வெட்டி வீறாப்பு..” என்று புவனா சொல்லும்போது குளித்து முடித்த நிலையில் சித்தப்பா தண்டபாணி வருகிறான். “சித்தப்பா.. சித்தப்பா உங்களுக்கு நோட்டுக்கு அட்டை போடத் தெரியுமா? போட்டுக் கொடுங்க சித்தப்பா..” என்கிறார்கள் பிள்ளைகள். “அவ்ளோதான.. பத்தே நிமிஷத்துல போட்டுடலாம்..” என்ற தண்டபாணி அப்படியே தலையைக்கூடத் துவட்டாமல் அட்டைப் போடத் துவங்குகிறான்.

இருவருக்கும் டிபன் பாக்ஸில் லன்ச்சைத் திணித்த புவனா பையன் ராஜாவை மட்டும் தனியே அழைத்து.. “உனக்கு மட்டும் கூட நாலு பிஸ்கெட் வைச்சிருக்கேன். அக்காகிட்ட காட்டாம அப்புறமா சாப்பிட்டிரு..” என்கிறாள். “போம்மா.. எதுக்கும்மா அக்காவுக்குத் தெரியாம வைச்ச.. அக்காவுக்கும் அதே மாதிரி வைம்மா..” என்கிறான் ராஜா. “இல்லடா. நீ சின்னப் பையன்.. நிறைய பசிக்கும்ல.. அதுக்குத்தான்..” என்கிறாள் புவனா. “போம்மா.. சின்னப் பையனோ, பெரிய பையனோ.. நாங்க ரெண்டு பேருமே உங்க பிள்ளைகதான.. நேத்து பாருங்க.. என் வாட்டர் கேன்ல தண்ணி தீர்ந்து போச்சா? கிளாஸ்ல யாருமே எனக்குத் தண்ணி தர மாட்டேங்கா.. கடைசியா அக்காதான் வந்து அது வைச்சிருந்தத எடுத்துக் கொடுத்துச்சு.. எனக்கு ஒண்ணுன்னா அக்காதான முன்னாடி ஓடிவரும். அதான் சொல்றேன்.. எனக்கு ரெண்டு, அக்காவுக்கு ரெண்டு வை..” என்கிறான். புவனா நெகிழ்ந்து போகிறாள்.

அலுவலகத்திற்கு புறப்பட வேண்டுமே என்ற அவசரத்தில் வீட்டுக்குள் நுழைய முயன்ற வரதன் இதைக் கேட்க அவனுக்குள் ஏதோ ஒன்று உறைப்பதைப் போல் தெரிகிறது. புவனாவிடம் தனியாகச் சென்று “தம்பிக்கு டிபன் போட்டு உக்கார வை.. ATM-ல போய் பணத்தை எடுத்திட்டு வந்திடறேன்.. அவனை வெறும் கையோட அனுப்ப வேண்டாம்..” என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறக்க காரணம் புரியாமல் அவனைப் பார்க்கிறாள் புவனா.